Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திரித்துவத்தை எவ்வாறு விளக்குகின்றனர்?

திரித்துவத்தை எவ்வாறு விளக்குகின்றனர்?

திரித்துவத்தை எவ்வாறு விளக்குகின்றனர்?

ரோமன் கத்தோலிக்க சர்ச் கூறுவதாவது: “திரித்துவம், கிறிஸ்தவ மதத்தின் மையக் கோட்பாட்டைத் தனிப்படக் குறித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தும் பதமாகும். . . . இவ்வாறு, அதனேசியன் விசுவாசப்பிரமாணத்தின் வார்த்தைகளில்: ‘பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள், எனினும் மூன்று கடவுட்களல்ல ஒரே கடவுளே இருக்கிறார்.’ இந்தத் திரித்துவத்தில் . . . இந்த ஆட்கள் சரிசம-நித்தியரும் சரிசமமானோருமாவர்: எல்லாரும் ஒன்றுபோல் சிருஷ்டிக்கப்படாதவர்கள் மேலும் சர்வவல்லமையுடையவர்கள்.”—கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா (The Catholic Encyclopedia).

கிறிஸ்தவமண்டலத்தின் ஏறக்குறைய மற்ற எல்லா சர்ச்சுகளும் இதை ஒப்புக்கொள்கின்றனர். உதாரணமாக, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சும் திரித்துவத்தை “கிறிஸ்தவத்தின் மூலாதாரக் கோட்பாடு” என்றழைக்கிறது,” மேலும்: “கிறிஸ்துவைக் கடவுளென ஏற்போரே கிறிஸ்தவர்கள்,” என்றுங்கூட சொல்லுகிறது. நம்முடைய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ விசுவாசம் (Our Orthodox Christian Faith) என்ற ஆங்கில புத்தகத்தில், இதே சர்ச் பின்வருமாறு அறிவிக்கிறது: “கடவுள் மூவரொருவரானவர். . . . பிதா முற்றிலும் கடவுள். குமாரன் முற்றிலும் கடவுள். பரிசுத்த ஆவி முற்றிலும் கடவுள்.”

இவ்வாறு, திரித்துவம் “ஒரே கடவுள் மூன்று ஆட்களில்” இருப்பதென கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் தொடக்கமற்றவரும், நித்தியகாலமாய் இருந்துவருபவருமென சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரும் சர்வவல்லமையுள்ளவர், ஒருவரும் மற்றவரைப் பார்க்கிலும் மேம்பட்டவரோ கீழ்ப்பட்டவரோ இல்லையென சொல்லப்படுகிறது.

இத்தகைய விவாதவிளக்கம் புரிந்துகொள்வதற்குக் கடினமாயிருக்கிறதா? உள்ளப்பூர்வமான விசுவாசிகள் பலர் இது குழப்பமாயும், இயல்பான பகுத்தறிவுக்கு முரணாயும், தங்கள் அனுபவத்தில் கண்ட எதற்கும் ஒத்திராமலும் இருப்பதைக் காண்கின்றனர். பிதாவும் கடவுள், இயேசுவும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள் என்றிருந்து, அதேசமயத்தில் மூன்று கடவுட்கள் இல்லாமல் ஒரே ஒரு கடவுளே எவ்வாறு இருக்க முடியும்? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

“மனிதப் பகுத்தறிவுக்கு எட்டாதது”

இந்தக் குழப்பம் விரிவாய்ப் பரவியிருக்கிறது. இந்தத் திரித்துவக் கோட்பாடு “மனிதப் பகுத்தறிவுக்கு எட்டாதது” என்பதாய்க் கருதப்படுகிறதென்று என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா (The Encyclopedia Americana) குறிப்பிடுகிறது.

திரித்துவத்தை ஏற்கும் பலர் இதே முறையில் அதைக் கருதுகின்றனர். பெருந்தகை யூஜீன் கிளார்க் பின்வருமாறு சொல்லுகிறார்: “கடவுள் ஒருவரே, மேலும் கடவுள் மூவரே. படைப்பில் இதைப்போன்று எதுவும் இராததனால், நாம் இதைப் புரிந்துகொள்ள முடியாது, வெறுமென ஏற்கவே முடியும்.” கார்டினல் ஜான் ஓ’கானர் பின்வருமாறு கூறுகிறார்: “இது மிக ஆழ்ந்த மர்மம் என அறிந்திருக்கிறோம், இதை நாங்கள் புரிந்துகொள்ளத் தொடங்குகிறதில்லை.” மேலும் போப் ஜான் பால் II “திரித்துவக் கடவுளைப் பற்றிய அறியமுடியாத மர்மத்தைக்” குறித்து பேசுகிறார்.

இவ்வாறு, மத அறிவின் ஓர் அகராதி (A Dictionary of Religious Knowledge) (ஆங்கிலத்திலுள்ளது) பின்வருமாறு சொல்லுகிறது: “நுட்பத்திட்டமாய் அந்தக் கோட்பாடு என்ன, அல்லது அதைப் பார்க்கிலும் நுட்பத்திட்டமாய் அதை எவ்வாறு விளக்குவது என்பதைப்பற்றித் திரித்துவக் கோட்பாட்டாளர் தங்களுக்குள் ஒத்தில்லை.”

அப்படியானால், புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா (New Catholic Encyclopeida) பின்வருமாறு கூறுவதன் காரணத்தை நாம் விளங்கிக்கொள்ள முடிகிறது: “‘திரித்துவத்தை ஒருவர் எவ்வாறு பிரசங்கிப்பது?’ என்ற கேள்வியால் எப்போதாவது ஒரு சமயம் தொல்லைப்படுத்தப்பட்டிராதத் திரித்துவ இறையியல் போதகர்கள் ரோமன் கத்தோலிக்க மதபோதனைக்கூடத்தில் ஒரு சிலரே உள்ளனர். மாணாக்கரைப் பற்றியதில் இந்தக் கேள்வி குழப்பத்தின் அறிகுறியாக இருக்கிறதென்றால் அவர்களுடைய பேராசிரியர்களைக் குறித்ததிலும் இது அதைப்போன்ற குழப்பத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்தக் கூற்றின் உண்மையை, ஒரு நூல்நிலையத்துக்குச் சென்று திரித்துவத்தை ஆதரிக்கும் புத்தகங்களை ஆராய்ந்து பார்ப்பதனால் உறுதிப்படுத்த முடியும். அதற்கு விளக்கம் கூறும் முயற்சியில் எண்ணற்ற பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. எனினும், அந்தக் கடும் மர்மசிக்கலான குழப்பத்தையுண்டாக்கும் இறையியல்சார்ந்த சொற்கள் மற்றும் விளக்கங்களினூடே அரும்பாடுபட்டபின், துருவித்தேடுபவர்கள் இன்னும் திருப்தியில்லாமலே வெளிவருகின்றனர்.

இதன் சம்பந்தமாக, ஜெஸ்யுட் ஜோசஃப் பிரேகென், திரித்துவத்தைப் பற்றி அவர்கள் சொல்வதென்ன? (What are They saying About the Trinity?) என்ற தன் ஆங்கில புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “தங்கள் கத்தோலிக்க மதபோதனைசாலையின் ஆண்டுகளின்போது திரித்துவத்தைப்பற்றி. . . போதிய முயற்சியெடுத்துக் கற்ற மத குருக்கள், திரித்துவ ஞாயிறுவின்போதும், பிரசங்கப் பீடத்திலிருந்து தங்கள் ஜனங்களுக்கு அதை எடுத்துக்கூற இயல்பாய்த் தயங்கினர். . . . எப்படியும் முடிவில் ஜனங்கள் சரியாய்ப் புரிந்துகொள்ளப்போகாத ஒன்றைக்கொண்டு ஒருவர் ஏன் அவர்களைச் சலிப்புறசெய்யவேண்டும்?” அவர் மேலும் கூறுவதாவது: “திரித்துவம் விதிமுறை நம்பிக்கைக்குரிய ஒரு காரியம், அன்றாடகக் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் வணக்கத்திலும் அது சிறிதே [பாதிக்கிறது] அல்லது பாதிப்பதேயில்லை.” எனினும், அதுவே “சர்ச்சுகளின் “தலைமைக் கோட்பாடு.”

கிறிஸ்தவரல்லாத ஜனங்கள் மத்தியில் சர்ச்சுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் செய்ய முடியாதிருப்பதற்கு ஒரு காரணம் திரித்துவமென, கிறிஸ்தவமும் உலக மதங்களும் (Christianity and the World Religions) என்ற தன் ஆங்கில புத்தகத்தில் கத்தோலிக்க இறையியல் வல்லுநர் ஹான்ஸ் குங் குறிப்பிடுகிறார். அவர் சொல்வதாவது: “திரித்துவ அபிப்பிராயத்தை, யூதர்கள் இதுவரையிலும் விளங்கிக்கொள்ளத் தவறினதுபோல், நன்றாய் அறிவுபெற்ற முஸ்லீம்களுங்கூட அறவே புரிந்துகொள்ள முடிகிறதில்லை, . . . ஒரே கடவுளுக்கும் மூன்று தன்மையாளர்களுக்குமிடையே திரித்துவ கோட்பாடு செய்யும் வேறுபாடுகள் முஸ்லீம்களுக்குத் திருப்தியளிப்பதில்லை. சிரியாக், கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளிலிருந்து வருவித்து உருவாக்கப்பட்ட இறையியல் சார்ந்த சொற்பாங்குகளால் அவர்கள் தெளிவூட்டப்படுவதற்குப் பதிலாக குழப்பமே அடைகின்றனர். . . . கடவுளுடைய ஒருமைக்கும் ஈடிணைவற்றத் தனித்தன்மைக்குமுரிய கோட்பாட்டு விளக்கத்துடன் எவரும் எதையும் ஏன் கூட்ட விரும்பவேண்டும், அந்த ஒருமையையும் ஈடிணைவற்றத் தனித்தன்மையையும் முனைப்பு குறையச் செய்யும் எதையும் ஏன் கூட்டவேண்டும்?”

“குழப்பத்தின் கடவுளல்ல”

இத்தகைய குழப்பமான கோட்பாடு எவ்வாறு தொடங்கியிருக்கக்கூடும்? கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு உரிமைபாராட்டுகிறது: “இவ்வளவு மர்மமான ஓர் உறுதிக்கோட்பாடு தெய்வீக வெளிப்படுத்துதலை முன்னதாகக் கொண்டிருக்கவேண்டும்.” கத்தோலிக்க அறிஞர் கார்ட் ரஹனெரும் ஹெர்பெர்ட் வோர்கிரிம்லெரும் தங்கள் இறையியல் அகராதியில் (Theological Dictionary) பின்வருமாறு கூறுகிறார்கள்: “கண்டிப்பான கருத்தில் . . . திரித்துவம் ஒரு மர்மம், . . . இதை வெளிப்படுத்தல் இல்லாமல் அறிந்துகொள்ள முடியாது, வெளிப்படுத்தலுக்குப் பின்னும் முழுமையாய் அறிவுக்குப் புலனாக முடியாது.”

எனினும், திரித்துவம் இத்தகைய குழப்பமான மர்மமாயிருப்பதால், அது தெய்வீக வெளிப்படுத்துதலிலிருந்தே வந்திருக்கவேண்டும் என்று வாதிடுவது மற்றொரு பெரிய பிரச்னையை உண்டுபண்ணுகிறது. ஏன்? ஏனெனில் தெய்வீக வெளிப்படுத்துதல்தானே கடவுளைப்பற்றி அத்தகைய கருத்தை அனுமதிக்கிறதில்லை: “கடவுள் குழப்பத்தின் கடவுளல்ல.”—1 கொரிந்தியர் 14:33, ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்ஷன் (RS)

இந்தக் கூற்றைக் கவனிக்கையில், எபிரெய, கிரேக்க, மற்றும் லத்தீன் அறிஞருங்கூட உண்மையில் விளக்க முடியாதபடி அவ்வளவு குழப்பமான, தம்மைப்பற்றிய ஒரு கோட்பாட்டுக்குக் கடவுள் காரணராயிருப்பாரா?

மேலும், ‘ஒரே உண்மையான கடவுளையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிய’ மக்கள் இறையியல் வல்லுநராக இருக்கவேண்டுமா? (யோவான் 17:3, JB) அவ்வாறிருந்தால், கல்விமான்களாயிருந்த யூத மதத் தலைவர்களில் அவ்வளவு மிகச் சொற்பப்பேரே ஏன் இயேசுவை மேசியாவென அறிந்துகொண்டனர். அதற்கு மாறாக, அவருடைய உண்மையுள்ள சீஷர்கள், எளிமையான விவசாயிகளும், மீன்பிடிப்பவரும், வரி வசூலிப்பவரும், குடும்பத் தலைவிகளுமாக இருந்தனர். அந்தச் சாதாரண மக்கள் கடவுளைப்பற்றி இயேசு கற்பித்ததைக் குறித்து அவ்வளவு நிச்சயமாயிருந்ததால் அதை அவர்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்க முடிந்தது, மேலும் தங்கள் நம்பிக்கைக்காக மரிக்கவும் மனமுடையோராயிருந்தனர்.—மத்தேயு 15:1-9; 21:23-32, 43; 23:13-36; யோவான் 7:45-49; அப்போஸ்தலர் 4:13.

[பக்கம் 4-ன் படம்]

இயேசுவின் சீஷர்கள் எளிமையான சாதாரண மக்கள், மதத் தலைவர்கள் அல்ல