திரித்துவத்தை “நிரூபிக்கும் வசனங்களைப்” பற்றியதென்ன?
திரித்துவத்தை “நிரூபிக்கும் வசனங்களைப்” பற்றியதென்ன?
பைபிள் வசனங்கள் சில திரித்துவத்துக்கு ஆதரவாக நிரூபணம் அளிக்கின்றனவென சொல்லப்படுகிறது. எனினும், அத்தகைய வசனங்களை வாசிக்கையில், பைபிள் மற்றும் சரித்திர அத்தாட்சிகள் திரித்துவத்தை ஆதரிக்கிறதில்லை என்பதை நாம் மனதில் வைக்கவேண்டும்.
நிரூபணமாக அளிக்கப்படுகிற பைபிள் குறிப்பு எதையும் முழு பைபிளின் நிலையான போதகத்தின் சூழமைவில் விளங்கிக்கொள்ள வேண்டும். இத்தகைய வசனத்தின் உண்மையான பொருள் அதைச் சூழ்ந்துள்ள வசனங்களின் அமைப்பில் பெரும்பாலும் தெளிவாகிறது.
மூவரொருவர்
புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா இத்தகைய “நிரூபிக்கும் வசனங்கள்” மூன்றைக் கொடுக்கிறது, ஆனால் பின்வருமாறு ஒப்புக்கொள்ளவும் செய்கிறது: “பரிசுத்தத் திரித்துவக் கோட்பாடு ப[ழைய] ஏ[ற்பாட்டில்] கற்பித்தில்லை. பு[திய] ஏ[ற்பாட்டில்] அதன் மிகப் பழைய அத்தாட்சி பவுலின் நிருபங்களில் இருக்கிறது, முக்கியமாய் 2 கொரி 13.13 [சில பைபிள்களில் 14-ம் வசனம்], மேலும் 1 கொரி 12.4-6. சுவிசேஷங்களில் திரித்துவத்தின் அத்தாட்சி மத் 28.19-ன் பாப்டிஸம் விதிமுறையில் மாத்திரமே தெளிவாய்க் காணப்படுகிறது.”
புதிய ஜெருசலெம் பைபிளில் (ஆங்கில பைபிள்) இந்த வசனங்களில் அந்த மூன்று “ஆட்கள்” பின்வருமாறு வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இரண்டு கொரிந்தியர் 13:13 (14) அந்த மூரையும் ஒன்றாக இவ்வாறு வைக்கிறது: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனின் அன்பும் பரிசுத்த ஆவியின் ஐக்கியமும் உங்களெல்லாரோடும் இருப்பதாக.” ஒன்று கொரிந்தியர் 12:4-6 சொல்வதாவது: “வெவ்வேறுபட்ட பல வரங்கள் உண்டு, ஆனால் எப்பொழுதும் அதே ஆவியே; வெவ்வேறுபட்ட பல சேவிக்கும் வழிகள் உண்டு, ஆனால் எப்பொழுதும் அதே கர்த்தரே. வெவ்வேறுபட்ட பல செயல் வகைகள் உண்டு, ஆனால் எல்லாரிலும் அதே தேவனே அவர்கள் எல்லாருக்குள்ளும் செயல் நடப்பிக்கிறவர்.” மத்தேயு 28:19 வாசிப்பதாவது: “ஆகையால், போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்; அவர்களைப் பிதாவின் குமாரனின் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் பாப்டிஸம் செய்யுங்கள்.”
கடவுளும் கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும் ஒரு திரித்துவக் கடவுளை உண்டுபண்ணுகின்றனர் எனவும், அந்த மூவரும் தன்மையிலும், வல்லமையிலும் நித்தியத்துவத்திலும் சரிசமமானவர்கள் எனவும் அந்த வசனங்கள் சொல்கின்றனவா? இல்லை, அவை சொல்வதில்லை, டாம், டிக், ஹாரி போன்ற, மூன்று ஆட்களை வரிசையாகக் குறிப்பது அவர்கள் மூவரொருவர் என எவ்வாறு குறிக்காதோ அவ்வாறே குறிப்பதில்லை.
இவ்வகையான குறிப்பு, “பெயர் குறிக்கப்பட்ட அந்த மூன்று ஆட்கள் இருக்கின்றனர் என்று மாத்திரம் நிரூபிக்கிறது, . . . ஆனால் அந்த மூவரும் கட்டாயமாகத் தெய்வீகத் தன்மைக்கு உரியவர்கள், சரிசமமான தெய்வீக மதிப்புடையவர்கள் என, அது மாத்திரமே நிரூபிக்கிறதில்லை,” என்று மெக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் என்பவர்கள் இயற்றிய பைபிள், இறையியல், மற்றும் சர்ச் இலக்கியம் சார்ந்த சைக்ளோபீடியா என்ற ஆங்கில புத்தகம் ஒப்புக்கொள்கிறது.
இந்தப் புத்தகம் திரித்துவத்தை ஆதரிக்கிறபோதிலும், 2 கொரிந்தியர் 13:13 (14)-ஐப் பற்றிப் பின்வருமாறு சொல்கிறது: இவர்கள் சரிசம அதிகாரத்தை, அல்லது ஒரே தன்மையை உடையோராயிருந்தனரென நாம் நியாயமாய் முடிவு செய்ய முடியாது.” மேலும் மத்தேயு 28:18-20-ஐப் பற்றி அது சொல்வதாவது: “எனினும், இந்த வசனத்தை, அது இருக்கிறபடியே எடுத்தால், குறிப்பிட்டுள்ள அந்த மூன்று ஆட்களின் பண்பியல்பையோ, அல்லது அவர்களுடைய சமநிலையையோ தெய்வத்துவத்தையோ தீர்வாய் நிரூபிக்காது.”
இயேசு முழுக்காட்டப்பட்டபோதும், கடவுளும், இயேசுவும், பரிசுத்த ஆவியும் அதே சூழமைவில் குறிப்பிடப்பட்டனர். இயேசு, “தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.” (மத்தேயு 3:16) எனினும், இது, அந்த மூவரும் ஒருவர் என சொல்கிறதில்லை. ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் மிகப் பல தடவைகள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றனர், ஆனால் அது அவர்களை ஒருவராக்குகிறதில்லை. பேதுருவும், யாக்கோபும், யோவானும் ஒன்றாய்ப் பெயர் குறிப்பிடப்படுகின்றனர், ஆனால் இதுவும் அவர்களை ஒருவராக்குகிறதில்லை. இன்னும், இயேசுவின் முழுக்காட்டுதலின்போது கடவுளுடைய ஆவி இயேசுவின்மேல் இறங்கினது, இது, இயேசு அந்தச் சமயம்வரை ஆவியால் அபிஷேகஞ் செய்யப்படவில்லையென காட்டுகிறது. இவ்வாறிருக்க, தாம் பரிசுத்த ஆவியோடு எப்பொழுதும் ஒன்றாயிருந்த திரித்துவத்தின் பாகமாக அவர் எவ்வாறிருக்க முடியும்?
இந்த மூவரையும் ஒன்றாய்ப் பேசும் மற்றொரு வசனக் குறிப்பு சில பழைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் 1 யோவான் 5:7-ல் காணப்படுகிறது. எனினும், இவ்வார்த்தைகள் தொடக்கத்தில் பைபிளில் இல்லை ஆனால் மிகப் பிந்திய காலத்தில் கூட்டப்பட்டனவென அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். நவீன மொழிபெயர்ப்புகள் மிகப் பல இந்தப் போலி வசனத்தைச் சரியாகவே விட்டுவிடுகின்றன.
மற்ற “நிரூபிக்கும் வசனங்கள்”—பிதாவும் இயேசுவும்—ஆகிய இருவருக்குள்ள உறவைப்பற்றி மாத்திரமே பேசுகின்றன. இவற்றில் சிலவற்றை நாம் ஆலோசிக்கலாம்.
“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்”
யோவான் 10:30-ல் உள்ள இந்த வசனத்தில் மூன்றாவது ஆள் எவரும் குறிப்பிட்டிராவிடினும் திரித்துவத்தை ஆதரிப்பதற்குச் சான்றாக அடிக்கடி எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால் பிதாவுடன் “ஒன்றாயிருக்கிற”தாகத் தாம் சொன்னதன் பொருள் என்னவென்பதை இயேசுதாமே காட்டினார். யோவான் 17:21, 22-ல் தம்முடைய சீஷர்கள் “எல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, . . . நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். . . . நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி . . . .” தம்முடைய சீஷர்கள் எல்லாரும் ஒன்றிணைந்த ஒரு தனி ஆளாகும்படி இயேசு ஜெபித்தாரா? இல்லை, தாமும் கடவுளும் இருந்ததுபோல் அவர்களும் எண்ணத்திலும் நோக்கத்திலும் ஒன்றுபட்டிருக்கும்படியே இயேசு ஜெபித்தார்.—1 கொரிந்தியர் 1:10-ஐயும் பாருங்கள்.
1 கொரிந்தியர் 3:6, 8-ல் பவுல் சொல்வதாவது: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப் பாய்ச்சினான், . . . நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்.” தானும் அப்பொல்லோவும் இருவரொருவரென பவுல் பொருள் கொள்ளவில்லை; தாங்கள் நோக்கத்தில் ஒன்றுபட்டவர்கள் என்றே அவன் பொருள் கொண்டான். “ஒன்று” என்பதற்குப் பவுல் பயன்படுத்தின கிரேக்கப் பதம் (ஹென்) அஃறிணையில் இருக்கிறது, சொல்லர்த்தமாய் “ஒரே (காரியம்)” என்ற இது ஒத்துழைப்பில் ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது. யோவான் 10:30-ல் தம்முடைய பிதாவுடன் தமக்குள்ள உறவை விவரிக்க இயேசு பயன்படுத்தினது இதே வார்த்தையாகும். யோவான் 17:21, 22-ல் இயேசு பயன்படுத்தினதும் இதே வார்த்தையாகும். ஆகையால் இந்தச் சந்தர்ப்பங்களில் “ஒன்று” (ஹென்) என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினபோது எண்ணத்திலும் நோக்கத்திலும் ஒன்றுபட்டிருப்பதைப் பற்றியே அவர் பேசினார்.
யோவான் 10:30-ஐக் குறித்து (திரித்துவக் கோட்பாட்டாளரான) ஜான் கால்வின், யோவான் எழுதின சுவிசேஷத்தின்பேரில் விளக்கவுரை என்ற ஆங்கில புத்தகத்தில் பின்வருமாறு கூறினார்: “கிறிஸ்து . . . பிதாவுடன் அதே உள்ளியல்புடையவர் என்பதை நிரூபிக்க பண்டைக் காலத்தவர் இந்தப் பகுதியைத் தவறாய்ப் பயன்படுத்தினார்கள். ஏனெனில் உள்ளியல்பின் ஒருமைப்பாட்டைப் பற்றிக் கிறிஸ்து விவாதிக்கிறதில்லை, ஆனால் பிதாவுடன் தமக்கிருக்கும் கருத்து ஒற்றுமையைப் பற்றியே குறிப்பிடுகிறார்.”
யோவான் 10:30-க்குப் பின் இந்த வசனங்களின் சூழமைவில்தானே, இயேசு, தம்முடைய வார்த்தைகளில் தாம் கடவுள் என்று உரிமைபாராட்டவில்லையென சக்திவாய்ந்த வண்ணம் விவாதித்தார். தவறாக இந்த முடிவுக்கு வந்து அவரைக் கல்லெறிய விரும்பின யூதர்களை அவர் பின்வருமாறு கேட்டார்: “பிதாவினால் பிரதிஷ்டை செய்து உலகத்துக்குள் அனுப்பப்பட்ட, என்னை, ‘நான் கடவுளின் குமாரன்’ என்று சொன்னதனால் நீங்கள் ஏன் தேவதூஷணம் சொன்னதாக என்னைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” (யோவான் 10:31-36, NE) இல்லை, இயேசு தாம், குமாரனாகிய கடவுள் என்றல்ல, கடவுளின் குமாரன் என்றே உரிமை பாராட்டினார்.
“தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினாரா”?
திரித்துவத்துக்கு ஆதரவாக அளிக்கப்படும் மற்றொரு வேதவசனம் யோவான் 5:18 ஆகும். அதில், “அவர் தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே,” யூதர்கள் (யோவான் 10:31-36-ல் செய்ததைப்போல்) இயேசுவைக் கொலைசெய்ய வகைத்தேடினார்கள் என்று சொல்லியிருக்கிறது.
ஆனால் இயேசு தம்மைக் கடவுளுக்குச் சமமாக்கினாரென்று சொன்னவர்கள் யார்? இயேசு சொல்லவில்லை. அடுத்த வசனத்தில்தானே (19) அவர் தமக்கெதிரான இந்தப் பொய்க் குற்றச்சாட்டை எதிர்த்து வாதாடினார்: “இந்தக் குற்றச்சாட்டுக்கு இயேசு பதிலளித்ததாவது: . . . ‘குமாரன் தானாக எதையும் செய்யமுடியாது; பிதா செய்ய தான் காண்பதை மாத்திரமே அவர் செய்ய முடியும்.’”—JB.
இவ்வாறு இயேசு, தாம் கடவுளுக்குச் சமமானவரல்ல ஆகையால் தம் சொந்த முயற்சியால் செயல்பட முடியாது என்று அந்த யூதருக்குக் காட்டினார். சர்வவல்லமையுள்ள கடவுளுக்குச் சமமான ஒருவர் “தானாக எதையும் செய்ய முடியாது” என்று சொல்வதை நாம் கற்பனைசெய்து பார்க்க முடியுமா? (தானியேல் 4:34, 35-ஐ ஒத்துப் பாருங்கள்.) கவனத்தைக் கவர்வதாய், யோவான் 5:18 மற்றும் 10:30 ஆகிய இவ்விரு வசனங்களின் சூழமைவுகளும், திரித்துவக் கோட்பாட்டாளர்களைப்போல் தவறான முடிவுகளுக்கு வந்த யூதர்கள் செய்த பொய்க் குற்றச்சாட்டுக்கு எதிராக இயேசு தம்சார்பில் விவாதித்தாரெனக் காட்டுகின்றன!
“தேவனுக்குச் சமமாயிரு”க்கிறாரா?
பிலிப்பியர் 2:6-ல், 1609-ன் கத்தோலிக்க டூவே மொழிபெயர்ப்பு (Dy) இயேசுவைப் பற்றிப் பின்வருமாறு சொல்லுகிறது: “அவர் கடவுளின் ரூபமாயிருந்தும், கடவுளுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாக எண்ணவில்லை.” தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பும் பெரும்பாலும் அவ்வாறே சொல்லுகிறது. இயேசு கடவுளுக்குச் சமமானவர் என்ற எண்ணத்தை ஆதரிக்க இத்தகைய பல மொழிபெயர்ப்புகளைச் சிலர் இன்னும் பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தை மொழிபெயர்த்திருக்கும் முறையைக் கவனியுங்கள்:
1869: “அவர், கடவுளின் ரூபமாயிருந்தும், கடவுளுடன் சமமாயிருப்பதைப் பற்றிக்கொள்ளும் ஒரு காரியமாகக் கருதவில்லை.” The New Testament, by G.R. Noyes.
1965: “அவர்—உண்மையில் தெய்வீக இயல்புடையவர்!—ஒருபோதும் தன்னம்பிக்கையுடன் தம்மைக் கடவுளுக்குச் சமமாக்கவில்லை.” Das Neue Testament, revised edition, by Friedrich Pfãfflin.
1968: “அவர், கடவுளின் ரூபத்தில் இருந்தும், கடவுளுக்குச் சமமாயிருப்பதைப் பேராசையுடன் தனக்குச் சொந்தமாக்கும் காரியமாகக் கருதவில்லை.” La Bibbia Concordata.
1976: “அவர் எப்பொழுதும் கடவுளுடைய இயல்பை உடையவராயிருந்தார், ஆனால் கடவுளுடன் சமமாகும்படி வலுக்கட்டாயமாகத் தான் முயற்சி செய்யவேண்டுமென அவர் எண்ணவில்லை.” Today’s English Version.
1984: “அவர், கடவுளுடைய ரூபத்தில் இருந்தபோதிலும், அதைப் பற்றிக்கொள்ள, அதாவது, தாம் கடவுளுக்குச் சமமாயிருக்கவேண்டுமென எண்ணம் செலுத்தவில்லை.” New World Translation of the Holy Scriptures.
1985: “அவர், கடவுளுடைய ரூபத்தில் இருந்தும், கடவுளுடன் சமமாயிருப்பதைப் பற்றிக்கொள்ளும் ஒன்றாகக் கருதவில்லை.” The Jerusalem Bible.
எனினும், சிலர், இந்த மேலும் திருத்தமான மொழிபெயர்ப்புகளும் (1) இயேசு ஏற்கெனவே சமநிலையைக் கொண்டிருந்தார் ஆனால் அதைத் தொடர்ந்து பற்றியிருக்க விரும்பவில்லை அல்லது (2) சமநிலை ஏற்கெனவே அவருக்கு இருந்ததனால் அதை அவர் பற்றிக்கொள்ள தேவைப்படவில்லை என்று பொருள்படுகின்றதென வாதாடுகின்றனர்.
இதன் சம்பந்தமாக, ரால்ஃப் மார்ட்டின், பிலிப்பியருக்கு எழுதின பவுலின் நிருபம்
என்ற ஆங்கில புத்தகத்தில் மூல கிரேக்கைக் குறித்துப் பின்வருமாறு சொல்கிறார்: “எனினும், இந்த வினைச்சொல்லின் கருத்து ‘அபகரிப்பது’ ‘வன்மையாய்ப் பறித்துக்கொள்வது’ என்ற அதன் உண்மையான பொருளிலிருந்து, ‘உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்பது’ என்பதற்கு நழுவிச் செல்ல முடியுமாவென்பது சந்தேகத்துக்குரியது,” என்று சொல்கிறார். விரிவுரையாளரின் கிரேக்க புதிய ஏற்பாடு என்பதிலும் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: αοπαζω [ஹர்பாஸோ] அல்லது அதன் அடிப்படையில் தோன்றிய சொற்களும் ‘தன்வசம் வைத்திருத்தல்,’ ‘விடாது வைத்திருத்தல்’ என்ற கருத்தைக் கொண்டுள்ள எந்தப் பகுதியையும் நாம் காண முடியாது. ‘அபகரி,’ ‘வன்முறையாய்ப் பறித்துக்கொள்’ என்றே மாறாமல் பொருள்கொள்வதாய்த் தோன்றுகிறது. இவ்வாறு அந்த உண்மையான உட்கருத்தான ‘அபகரிப்பது’ என்பதிலிருந்து அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒன்றான, ‘விடாது வைத்திரு’ என்பதற்கு நழுவிச் செல்வது அனுமதிக்கக்கூடியதல்ல.”டூவே மற்றும் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்புகளின் மொழிபெயர்ப்பாளர்கள் திரித்துவ எண்ணங்களை ஆதரிப்பதற்கேதுவாக விதிகளை வளைத்துக்கொள்கின்றனரென முன்குறிப்பிடப்பட்டவற்றிலிருந்து தெரிகிறது. கடவுளுக்குச் சமமாயிருப்பது தகுந்ததென இயேசு எண்ணினாரென்று சொல்வதற்கு மிக மாறாக, கிரேக்கில் பிலிப்பியர் 2:6-ஐ உண்மையைக் காணவேண்டுமென்ற முறையில் வாசிப்பது, அதற்கு நேர்மாறானதை, அதாவது, இயேசு அதைத் தகுந்ததென எண்ணவில்லை என்றே காட்டுகிறது.
அதைச் சுற்றியுள்ள வசனங்களின் (3-5, 7, 8, Dy) சூழமைவு, 6-ம் வசனத்தை விளங்கிக்கொள்ள வேண்டிய முறையைத் தெளிவாக்குகிறது. பிலிப்பியர் பின்வருமாறு ஊக்கப்படுத்தப்பட்டனர்: “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” பின்பு பவுல் கிறிஸ்துவை இந்த மனப்பான்மையின் முதன்மையான முன்மாதிரியாகப் பயன்படுத்துகிறான்: “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” என்ன “சிந்தை”? ‘கடவுளுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாக எண்ணாதிருப்பதா’? இல்லை, இது, செய்யப்படும் இந்தக் குறிப்புக்கு நேர்மாறாயிருக்கும். அதைப் பார்க்கிலும், ‘கடவுளைத் தன்னைவிட மேலானவராக உயர்வாய் மதித்த’ இயேசு ‘கடவுளுடன் சமமாயிருப்பதை அபகரிக்க’ ஒருபோதும் எண்ணமாட்டார், அதற்குப்பதில் அவர் “தம்மைத்தாமே தாழ்த்தி, மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவரானார்.”
நிச்சயமாகவே, இது சர்வவல்லமையுள்ள கடவுளின் எந்தப் பாகத்தைப் பற்றியோ பேசுவதாயிராது. இது இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறது. பவுல் இங்கே செய்யும் குறிப்பை—அதாவது, மனத்தாழ்மையின் மற்றும் தமக்கு மேலானவரும் சிருஷ்டிகருமான யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவத்தை—இயேசு பரிபூரணமாய் விளக்கிக் காட்டும் உதாரணமாயிருந்தார்.
“இருக்கிறேன்”
யோவான் 8:58-ல் பல மொழிபெயர்ப்புகள், உதாரணமாக, ஜெருசலெம் பைபிள், இயேசு பின்வருமாறு சொன்னதாகக் குறிப்பிடுகின்றன: “ஆபிரகாம் இருந்ததற்கு முன்னமே, நான் இருக்கிறேன்.” திரித்துவக் கோட்பாட்டாளர் வலியுறுத்துவதுபோல், அவர் “இருக்கிறேன்” என்ற இந்தப் சிறப்புப்பெயரால் தாம் அறியப்பட்டாரென இயேசு இங்கே கற்பித்தாரா? மேலும், அவர்கள் வாதிடுகிறபடி, யாத்திராகமம் 3:14-ல் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு: “தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே” சொன்னார் எனக் கூறுவதனால், இது அவர் எபிரெய வேத எழுத்துக்களின் யெகோவா என பொருள்கொள்ளுகிறதா?
யாத்திராகமம் 3:14-ல் (தமிழ் UV) “இருக்கிறேன்” என்ற இந்தப் பதம், கடவுள் உண்மையில் இருக்கிறார், தாம் வாக்குக் கொடுத்ததை அவர் நிறைவேற்றுவார் என்று குறிப்பிட்டுக் காட்டுவதற்குக் கடவுளுக்கு ஒரு சிறப்புப்பெயராகப் பயன்படுத்தப்பட்டது. டாக்டர் J.H. ஹெர்ட்ஸ் என்பவர் பதிப்பித்த பென்டட்யூக் அண்ட் ஹஃப்டோராஸ் என்ற ஆங்கில புத்தகத்தில் இந்தப் பதத்தைப் பற்றிப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலருக்கு, இதன் பொருள், ‘அவர் உங்கள் பொருட்டு தம்முடைய வல்லமையை இன்னும் காட்டிராவிடினும், அவர் அவ்வாறு செய்வார்; அவர் நித்தியர் உங்களை நிச்சயமாய் மீட்பார்,’ என்றிருக்கும். [யாத்திராகமம் 3:14-ஐ] ‘இருக்கப்போகிறவராக இருப்பேன்’ என மொழிபெயர்ப்பதில் நவீன காலத்தவர் பெரும்பான்மையர் [பிரெஞ்ச் பைபிள் மற்றும் டால்முட் விளக்கவுரையாளர்] ரஷி-ஐப் பின்பற்றுகின்றனர்.”
யோவான் 8:58-லுள்ள சொல் யாத்திராகமம் 3:14-ல் பயன்படுத்தியுள்ளதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இயேசு அதை ஒரு பெயராக அல்லது சிறப்புப்பெயராகப் பயன்படுத்தவில்லை, தாம் மனிதனானதற்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குவதற்கு ஓர் உதவியாகவே பயன்படுத்தினார். ஆகையால், மற்ற சில பைபிள் மொழிபெயர்ப்புகள் யோவான் 8:58-ஐ மொழிபெயர்க்கும் முறையைக் கவனியுங்கள்:
1869: “ஆபிரகாம் இருந்ததற்கு முன்னாலிருந்து, நான் இருக்கிறேன்.” The New Testament, by G. R. Noyes.
1935: “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்தேன்!” The Bible—An American Translation, by J. M. P. Smith and E. J. Goodspeed.
1965: “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே, நான் ஏற்கெனவே இருக்கிறவராக இருந்தேன்.” Das Neue Testament, by Jõrg Zink.
1981: “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் உயிரோடிருந்தேன்!” The Simple English Bible.
1984: “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருந்தேன்.” New World Translation of the Holy Scriptures.
இவ்வாறு, கடவுள் சிருஷ்டித்த “முதற்பேறானவரான,” இயேசு, ஆபிரகாம் பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே வாழ்ந்திருந்தார் என்பதே இங்கே பயன்படுத்தியுள்ள கிரேக்கின் உண்மையான எண்ணமாகும்.—கொலோசெயர் 1:15; நீதிமொழிகள் 8:22, 23, 30; வெளிப்படுத்துதல் 3:14.
மறுபடியும், இதுவே திருத்தமான கருத்து விளக்கமென சூழமைவு காட்டுகிறது. இச்சமயம், இயேசு, யூதர்கள் சொன்னபடி, இன்னும் 50 வயதாகவில்லையெனினும் “ஆபிரகாமைக் கண்டதாக” உரிமைபாராட்டினதற்காக யூதர் அவரைக் கல்லெறிய நாடினர். (வசனம் 57) இயேசுவின் இயல்பான மறுமொழி தம்முடைய வயதைப்பற்றிய உண்மையைச் சொல்வதாகும். ஆகையால் அவர் தாம் “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே உயிரோடிருந்”தார்! என அவர்களுக்குச் சொன்னார்.—எளிய ஆங்கில பைபிள்.Simple English Bible.
“அந்த வார்த்தை தேவனாயிருந்தது”
யோவான் 1:1-ல் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பில் பின்வருமாறு வாசிக்கிறோம்; “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” இயேசு கிறிஸ்துவாக பூமிக்கு வந்த “அந்த வார்த்தை” (கிரேக்கில், ஹோ லோகாஸ்) சர்வவல்லமையுள்ள தேவன்தாமே என்று இது பொருள்கொள்கிறதென திரித்துவக்கொள்கைக்காரர் வாதாடுகின்றனர்.
எனினும், மறுபடியுமாக இங்கேயும் திருத்தமாய் விளங்கிக்கொள்வதற்குச் சூழமைவு அடிப்படையை வைக்கிறது. “அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,” என்று தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலும் சொல்லியிருக்கிறது. (தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.) மற்றொரு ஆளி“டத்தில்” (“உடன்,” kJ) இருக்கிற ஒருவர் அதே மற்ற ஆளாக இருக்க முடியாது. இதற்கு ஒத்திசைவாய், ஜெஸ்யுட் மதகுரு ஜோசஃப் A. ஃபிட்ஸ்மையர் என்பவர் பதிப்பித்த பைபிள் இலக்கிய பத்திரிக்கை என்ற ஆங்கில புத்தகத்தில், யோவான் 1:1-ன் பிற்பகுதியை “அந்த” தேவன் என பொருள்கொள்ளும்படி விளக்கினால், இது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்ததென சொல்லும் அந்த “வாக்கியத்தின் முந்தின உட்பிரிவுக்கு முரண்படும்,” என குறிப்பிடுகிறது.
இந்த வசனத்தின் இந்தப் பாகத்தை மற்ற மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்க்கும் முறையையும் கவனியுங்கள்:
1808: “அந்த வார்த்தை ஒரு கடவுளாயிருந்தது.” The New Testament in an Improved Version, Upon the Basis of Archbishop Newcome’s New Translation: With a Correct Text.புதிய ஏற்பாடு திருத்தியமைத்த மொழிபெயர்ப்பில், ஆர்ச்பிஷப் நியுகம்-ன் புதிய மொழிபெயர்ப்பின்பேரில்: திருத்தப்பட்ட விளக்கமூலத்துடன் (ஆங்கில மொழிபெயர்ப்பு).
1864: “ஒரு கடவுளாக அந்த வார்த்தை இருந்தது.” The Emphatic Diaglott, interlinear reading, by Benjamin Wilsonதி எம்ஃபாட்டிக் டயக்ளாட், இடைவரி வாசிப்பு, பெஞ்சமின் உவில்சன் இயற்றியது.
1928: “அந்த வார்த்தை ஒரு தெய்வீக ஆளாயிருந்தது.” La Bible du Centenaire, L’Evangile selon Jean, by Maurice Goguel.
1935: “அந்த வார்த்தை தெய்வீகமாயிருந்தது.” தி பைபிள்—அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன், J. M. P. Smith and Goodspeed.ஸ்மித் மற்றும் E. J. குட்ஸ்பீட் இயற்றியது.
1946: “ஒரு தெய்வீக இயல்புக்குரியதாய் அந்த வார்த்தை இருந்தது.” Das Neue Testament, by Ludwig Thimme.
1950: “அந்த வார்த்தை ஒரு கடவுளாயிருந்தது.” கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்).
1958: “அந்த வார்த்தை ஒரு கடவுளாயிருந்தது.” The New Testament by James L. Tomanek.
1975: “ஒரு கடவுளாக (அல்லது, ஒரு தெய்வீக இயல்புக்குரியதாக) அந்த வார்த்தை இருந்தது.” Das Evangelium nach Johannes, by Seigfried schulz.
1978: “கடவுளைப்போன்ற இயல்பில் அந்த லோகாஸ் இருந்தது.” Das Evangelium nach Johannes, by Johannes Schneider.
யோவான் 1:1-ல் தியாஸ் (கடவுள்) என்ற கிரேக்கப் பெயர் இரு தடவைகள் வருகிறது. முதல் தடவை சர்வவல்லமையுள்ள கடவுளைக் குறிக்கிறது, அவரோடு அந்த வார்த்தை இருந்தது (“அந்த வார்த்தை [லோகாஸ்] கடவுளோடிருந்தது [ஒரு வகையான தியாஸ்]”). (தி.மொ.) இந்த முதல் தியாஸ்-க்கு முன்னால் டன் (அந்த) என்ற சொல் வருகிறது, இது தெளிவாய் அதுவேயென வேறுபடுத்தித் தெரிவிக்கிற திட்டமான கிரேக்கச் சுட்டிடைச் சொல் வகையாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வவல்லமையுள்ள கடவுளைச் சுட்டிக் காட்டுகிறது (“அந்த வார்த்தை [அந்தக்] கடவுளோடிருந்தது”).
மறுபட்சத்தில், யோவான் 1:1-ல் இரண்டாவது தியாஸ்-க்கு முன்னால் சுட்டிடைச் சொல் இல்லை. ஆகையால் சொல்லின் நேர்ப்பொருள் மொழிபெயர்ப்பு, “அந்த வார்த்தை கடவுளாயிருந்தது,” என்றிருக்கும். எனினும் பல மொழிபெயர்ப்புகள் இந்த இரண்டாவது தியாஸ்-ஐ (பயனிலைப் பெயர்ச்சொல்) “தெய்வீக,” “கடவுளைப்போன்ற,” அல்லது “ஒரு கடவுள்,” என மொழிபெயர்த்திருப்பதை நாம் கண்டோம். எந்த அதிகாரத்தின்பேரில் அவ்வாறு செய்கிறார்கள்?
கோய்னி கிரேக்க மொழி திட்டமான சுட்டிடைச்சொல்லைக் (“the,” [அந்த]) கொண்டிருக்கிறது, ஆனால் அது பொதுநிலைச் சுட்டிடைச் சொல்லைக் (“a” அல்லது “an” [ஒரு]) கொண்டில்லை. ஆகையால் ஒரு பயனிலை பெயர்ச்சொல்லுக்கு முன்னால் திட்டமான சுட்டிடைச்சொல் வராவிடில், சூழமைவைப் பொறுத்து, அது பொதுநிலையானதாயிருக்கலாம்.
“வினைச்சொல்லுக்கு முன்னால் வரும் சார்படையற்ற [சுட்டிடைச்சொல்லைக் கொண்டிராத] பயனிலையைக் [கொண்டுள்ள சொற்கள்] முதன்மையாய்ப் பொருளில் பண்பை எடுத்துக்காட்டுபவை,” என்று பைபிள் இலக்கிய பத்திரிகை என்ற ஆங்கில பிரசுரத்தில் சொல்லியிருக்கிறது. இந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறபிரகாரம், லோகாஸை ஒரு கடவுளுக்கு ஒப்பிடலாமென இது காட்டுகிறது. யோவான் 1:1-ஐப் பற்றி அது மேலும் சொல்வதாவது: இந்தப் பயனிலையின் பண்படிப்படை சக்தி அவ்வளவு மேம்பட்டு நிற்பதால் அந்தப் பெயர்ச்சொல்லைத் [தியாஸ்] என்பதைத் திட்டமானதென கருதமுடியாது.”
ஆகையால் யோவான் 1:1 அந்த வார்த்தையின் பண்பையே, அவர் “தெய்வீகமான”வர், “கடவுளைப்போன்ற”வர், “ஒரு கடவுள்,” ஆனால் சர்வவல்லமையுள்ள கடவுளல்ல என்பதையே முனைப்பாய்த் தெரியச் செய்கிறது. இது பைபிளின் மீதிபாகத்தோடு ஒத்திருக்கிறது, அது, கடவுளுடைய பிரதிநிதி பேச்சாளராக வகிக்கும் தம்முடைய பாகத்தில் இங்கே “அந்த வார்த்தை” என அழைக்கப்பட்ட இயேசு, தமக்கு மேலானவரான, சர்வவல்லமையுள்ள கடவுளால் அனுப்பப்பட்ட கீழ்ப்படிதலுள்ள கீழ்ப்பணியாளர் என காட்டுகிறது.
இதே வார்த்தை அமைப்புள்ள கிரேக்க வாக்கியத்தை வேறு மொழிகளில் மொழிபெயர்க்கையில், ஏறக்குறைய எல்லா மொழிபெயர்ப்பாளரும் நிலையாய் இந்தச் சுட்டிடைச்சொல் “ஒரு” (“a”) என்பதை இடையில் சேர்த்திருக்கும் பைபிள் வசனங்கள் மற்றவை பல உண்டு. உதாரணமாக, மாற்கு 6:49-ல், இயேசு தண்ணீரின்மேல் நடப்பதைச் சீஷர்கள் கண்டபோது, “அது ஒரு ஆவி உருவென அவர்கள் எண்ணினார்கள்,” என்று ஆங்கில பைபிள் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு சொல்கிறது. கோய்னி கிரேக்கில், “ஆவி” என்பதற்கு முன்னால் “ஒரு” (“a”) இல்லை. ஆனால் ஏறக்குறைய எல்லா மொழிபெயர்ப்புகளும் ஆங்கிலத்தில் “a” (ஒரு) என்பதைச் சேர்க்கின்றனர். ஏனெனில் ஆங்கிலத்தில் “அது ஆவி” என்ற சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பு சூழமைவுக்குப் பொருந்தாது. இதே முறையில், யோவான் 1:1 அந்த வார்த்தை கடவுளுடன் இருந்தது (KJ), என்று காட்டுவதனால், அவர் கடவுளாக இருக்க முடியாது ஆனால் “ஒரு கடவுள்,” அல்லது “தெய்வீக”மாக இருந்தார்.
ஆங்கில பைபிள் அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் மொழிபெயர்ப்பை இயற்றுவதில் உழைத்த இறையியல் வல்லுநரும் அறிஞருமான ஜோஸஃப் ஹென்ரி தாயர், தெளிவாய்ப் பின்வருமாறு கூறினார்: “அந்த லோகாஸ் தெய்வீகமாயிருந்தார், அந்தத் தேவன்தாமேயாக இல்லை.” மேலும் ஜெஸ்யுட் மதகுரு ஜான் L. மெக்கென்ஸி தன்னுடைய (ஆங்கில) பைபிள் அகராதியில் பின்வருமாறு எழுதினார்: “‘அந்த வார்த்தை ஒரு தேவனாக இருந்தார்,’ . . . என்று யோவான் 1:1 கண்டிப்பாய் மொழிபெயர்க்கப்படவேண்டும்.”
ஒரு விதியை மீறுதலாகுமா?
இத்தகைய மொழிபெயர்ப்புகள், 1933-ல் கிரேக்க அறிஞர் E. C. கால்வெல் பிரசுரித்த கோய்னி கிரேக்க இலக்கணத்தின் ஒரு விதியை மீறுகின்றன என்று சிலர் வாதாடுகின்றனர். கிரேக்கில் ஒரு பயனிலை பெயர்ச்சொல் “வினைச்சொல்லைப் பின்தொடர்ந்து வந்தால் (திட்டமான) சுட்டிடைச்சொல்லைக் கொண்டிருக்கிறது; அது வினைச்சொல்லுக்கு முன் வருகையில் (திட்டமான) சுட்டிடைச்சொல்லைக் கொண்டில்லை,” என்று அவர் உறுதியாகக் கூறினார். இதனால், அவர் பொருள்கொண்டது என்னவெனில், வினைச்சொல்லுக்கு முன் வரும் ஒரு பயனிலை பெயர்ச்சொல், அதற்கு முன்னால் திட்டமான சுட்டிடைச்சொல்லை (“the” [அந்த]) கொண்டிருந்ததுபோல் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதே. யோவான் 1:1-ல் இரண்டாவது பெயர்ச்சொல் (தியாஸ்), ஆகிய இந்தப் பயனிலை, வினைச்சொல்லுக்கு முன்னால் வருகிறது—“அந்த வார்த்தை [தியாஸ்] ஆக இருந்தது.” ஆகவே, யோவான் 1:1-ஐ “அந்த வார்த்தை [அந்த] கடவுளாயிருந்தது,” என்றே வாசிக்கவேண்டும் என்று கால்வெல் விவாதித்தார்.
யோவான் 8:44-ல் காணப்படுகிற இரண்டு உதாரணங்களை மாத்திரம் கவனியுங்கள். அங்கே இயேசு பிசாசைக் குறித்து: அவன் மனுஷகொலைபாதகனாக இருந்தான்” என்றும் “அவன் பொய்யனாக இருக்கிறான்” (NW) என்றும் சொல்லுகிறார். யோவான் 1:1-ல் இருப்பதுபோல், கிரேக்கில், (“மனுஷகொலைபாதகன்” மற்றும் “பொய்யன்”) என்ற இந்தப் பயனிலைப் பெயர்ச்சொற்கள் (“இருந்தான்” மற்றும் “இருக்கிறான்”) என்ற வினைச்சொற்களுக்கு முன்னால் வருகின்றன. இந்தப் பெயர்ச்சொற்கள் இரண்டுக்கும் முன்னால் பொதுநிலைச் சுட்டிடைச்சொல் இல்லை. ஏனெனில் கோய்னி கிரேக்கில் பொதுநிலைச் சுட்டிடைச்சொல் அங்கில்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளர் பெரும்பான்மையர் “ஒரு” [a] என்ற சொல்லை இடையில் சேர்க்கின்றனர், ஏனெனில் கிரேக்க இலக்கணமும் சூழமைவும் அதைத் தேவைப்படுத்துகிறது.—மாற்கு 11:32; யோவான் 4:19; 6:70; 9:17; 10:1; 12:6, ஆகியவற்றையும் பாருங்கள்.
ஆனால்பயனிலைப் பெயர்ச்சொல்லைக் குறித்து கால்வெல் இதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது, ஏனெனில் அவர் பின்வருமாறு சொன்னார்: “சூழமைவு தேவைப்படுத்தினால் மாத்திரம் இந்நிலையில் அது பொதுநிலையாக [“a” அல்லது “an” (ஒரு)] இருக்கிறது.” ஆகையால் சூழமைவு தேவைப்படுத்துகையில், மொழிபெயர்ப்பாளர் இந்த வகையான வாக்கிய அமைப்பில் அந்தப் பெயர்ச்சொல்லின் முன் பொதுநிலைச் சுட்டிடைச்சொல்லை சேர்க்கலாமென அவருங்கூட ஒப்புக்கொள்கிறார்.
யோவான் 1:1-ல் இந்தச் சூழமைவு ஒரு பொதுநிலைச் சுட்டிடைச்சொல்லைத் தேவைப்படுத்துகிறதா? ஆம், ஏனெனில், இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளல்லவென முழு பைபிளும் சாட்சி பகருகிறது. இவ்வாறு, இத்தகைய சந்தர்ப்பங்களில் கால்வெல்லின் சந்தேகத்துக்குரிய இலக்கண விதியல்ல, சூழமைவே மொழிபெயர்ப்பாளரை வழிநடத்தவேண்டும். மேலும் யோவான் 1:1-லும் மற்ற இடங்களிலும் பொதுநிலைச் சுட்டிடைச்சொல் “ஒரு” [a] என்பதை இடையில் சேர்க்கும் பல மொழிபெயர்ப்புகளிலிருந்து, அறிஞர்கள் பலர் அத்தகைய செயற்கையான போலி விதியை ஒப்புக்கொள்கிறதில்லையெனத் தெரிகிறது, கடவுளுடைய வார்த்தையும் ஒப்புக்கொள்கிறதில்லை.
முரண்பாடு இல்லை
இயேசு கிறிஸ்து “ஒரு கடவுள்” (“a god”) என்று சொல்வது, ஒரே ஒரு கடவுளே இருக்கிறார் என்ற பைபிளின் போதகத்தோடு முரண்படுகிறதா? இல்லை, ஏனெனில் சில சமயங்களில் வல்லமைவாய்ந்த சிருஷ்டிகளைக் குறிப்பிட பைபிள் இந்தப் பதத்தைப் பயன்படுத்துகிறது. சங்கீதம் 8:5-ல் பின்வருமாறு வாசிக்கிறோம்: “நீர் அவனைத் [மனிதனை] தேவதூதரிலும் [தேவனைப் போன்றவர்களிலும், NW, எபிரெயுவில், எலோஹிம்] சற்று சிறியவனாக்கினீர்.” தாம் கடவுளென உரிமைபாராட்டினாரென்ற யூதரின் குற்றச்சாட்டுக்கு எதிரான இயேசுவின் வாதவிளக்கத்தில், அவர்: “உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் [அதாவது, நியாயாதிபதிகளை] தேவர்கள் என்று . . . சொல்லியிருக்”கிறது, என அவர் குறிப்பிட்டார். (யோவான் 10:34, 35; சங்கீதம் 82:1-6) 2 கொரிந்தியர் 4:4-ல் சாத்தானுங்கூட “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என அழைக்கப்படுகிறான்.
இயேசு தேவதூதர்களையோ, அபூரண மனிதரையோ, சாத்தானையோ பார்க்கிலும் மிக அதிக உயர்நிலையைக் கொண்டிருக்கிறார். இவர்களைத் “தேவர்கள்,” வல்லமையுள்ளவர்கள் என குறிப்பிட்டிருப்பதால், நிச்சயமாகவே இயேசுவை “ஒரு கடவுள்,” என குறிப்பிடலாம். அவ்வாறும் இருக்கிறார். யெகோவாவின் சம்பந்தமாக அவருக்குள்ள தனிப்பட்ட நிலையினிமித்தம், இயேசு ஒரு “வல்லமையுள்ள தேவன்.”—யோவான் 1:1; எசாயா 9:6.
ஆனால் “வல்லமையுள்ள தேவன்” (ஆங்கிலத்தில் இச்சொற்கள் பெரிய எழுத்தில் தொடங்கியிருப்பதும், “Mighty God”) இயேசு ஏதோவொரு முறையில் யெகோவா தேவனுக்குச் சமமானவரென குறிப்பிடுகிறதல்லவா? இல்லவே இல்லை. இயேசு அழைக்கப்படப்போகிற நான்கு பெயர்களில் இது ஒன்றெனவே ஏசாயா வெறுமென தீர்க்கதரிசனம் கூறினான், மேலும் ஆங்கில மொழியின் விதிப்படி இத்தகைய பெயர்கள் பெரிய எழுத்தில் தொடங்கியிருக்கின்றன. இருப்பினும், இயேசு “வல்லமையுள்ளவர்,” என அழைக்கப்பட்டபோதிலும், “சர்வவல்லமையுள்ளவர்” ஒருவரே இருக்க முடியும். தேவர்கள் என அழைக்கப்பட்டு கீழ்ப்பட்ட அல்லது தாழ்ந்த இடத்தை வகிக்கிற மற்றவர்கள் இருந்தால்தவிர யெகோவாவை “சர்வவல்லமையுள்ள தேவன்” என அழைப்பதில் உட்பொருள் அதிகம் எதுவும் இராது.
கத்தோலிக்க இறையியல் வல்லுநர் கார்ல் ரஹ்னர் சொல்வதன்படி யோவான் 1:1 போன்ற வேத வசனங்களில் கிறிஸ்துவைக் குறிப்பிட தியாஸ் பயன்படுத்தப்பட்டபோதிலும், “இந்தச் சந்தர்ப்பங்கள் எதிலும் இயேசுவை, புதிய ஏற்பாட்டில் மற்ற இடத்தில் ‘ஹோ தியாஸ்’ ஆக, அதாவது ஈடற்ற உன்னதக் கடவுளென குறிப்பிடப்படுகிறவரோடு அடையாளங்காட்டும் அத்தகைய முறையில் ‘தியாஸ்’ பயன்படுத்தப்பட்டில்லை,” என்று இங்கிலாந்திலுள்ள ஜான் ரைலண்ட்ஸ் நூல்நிலையத்தின் வெளியீடு குறிப்பிடுகிறது. இந்த வெளியீடு மேலும் சொல்வதாவது: “விசுவாசிகள் இயேசுவை ‘கடவுள்’ என்று அறிக்கையிடுவது இன்றியமையாததென புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் நம்பியிருந்தால், இந்த வகையான அறிக்கையே புதிய ஏற்பாட்டில் ஏறக்குறைய முற்றிலும் இல்லாததற்குக் காரணம் இருக்கிறதா?”
ஆனால் யோவான் 20:28-ல் அப்போஸ்தலன் தோமா “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று சொன்னதைப் பற்றியதென்ன? தோமாவுக்கு, இயேசு “ஒரு கடவுளைப்”போல் இருந்தார், முக்கியமாய் அவன் ஆச்சரிய உணர்ச்சிமேலிட்டு அவ்வாறு கூறும்படி தூண்டுவித்த அந்த அற்புத சூழ்நிலைமைகளில் அவ்வாறிருந்தார். அறிஞர்கள் சிலர் அவை, தோமா ஆச்சரியத்தால் உணர்ச்சிமீதூர கூறின சொற்களேயெனவும், இயேசுவை நோக்கிப் பேசப்பட்டபோதிலும் கடவுளிடமே சொல்லப்பட்டவையாயிருக்கலாமென கூறுகின்றனர். எவ்வாறாயினும், இயேசு சர்வவல்லமையுள்ள கடவுளென்று தோமா எண்ணவில்லை, ஏனெனில், இயேசு தாம் கடவுளென ஒருபோதும் உரிமைபாராட்டவில்லையெனவும், மாறாக யெகோவா ஒருவரே “ஒரே உண்மையான கடவுள்” என்று அவர் கற்பித்ததையும் அவனும் மற்ற எல்லா அப்போஸ்தலரும் அறிந்திருந்தனர்.—யோவான் 17:3, NW.
மறுபடியும், சூழமைவு இதை விளங்கிக்கொள்ள நமக்கு உதவிசெய்கிறது. ஒருசில நாட்களுக்கு முன்னால், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பின்வருமாறு சொல்லும்படி மகதலெனா மரியாளிடம் கூறினார்: “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்.” (யோவான் 20:17) இயேசு வல்லமையுள்ள ஆவியாக ஏற்கெனவே உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தபோதிலும், யெகோவா இன்னும் அவருடைய கடவுளே. அவர் மகிமைப்படுத்தப்பட்ட பின்னும், பைபிளின் கடைசி புத்தகத்திலும் அவர் தொடர்ந்து கடவுளை அவ்வாறு குறிப்பிட்டார்.—வெளிப்படுத்துதல் 1:5, 6; 3:2, 12.
தோமா ஆச்சரிய உணர்ச்சியால் கூறின அதற்கு மூன்று வசனங்களுக்கு அப்பால்தானே யோவான் 20:31-ல், பைபிள் பின்வருமாறு கூறுவதனால் இந்தக் காரியத்தை மேலும் தெளிவாக்குகிறது: “இயேசு [சர்வவல்லமையுள்ள கடவுள் என்றல்ல] தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படி . . . இவைகள் எழுதப்பட்டிருக்கி”ன்றன. மேலும் “குமாரன்” என்பதை, திரித்துவக் கடவுளின் ஏதோ புதிர்நிலையான பாகமாக அல்ல, இயல்பான தகப்பனையும் குமாரனையும்போல் சொல்லர்த்தமான முறையில் இருப்பதையே இது பொருள்கொண்டது.
பைபிளுடன் ஒத்திருக்கவேண்டும்
மற்றும் பல வசனங்கள் திரித்துவத்தை ஆதரிப்பதாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அவையும் மேலே கலந்தாராயப்பட்டவற்றைப்போல் இருக்கின்றன, எவ்வாறெனில், கவனமாய் ஆராய்கையில், அவை உண்மையில் அவ்வாறு ஆதரிப்பதில்லை. திரித்துவத்தை ஆதரிப்பதாகப் பாராட்டும் எந்த விவாதத்தையாவது ஆலோசிக்கையில் நாம் பின்வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டுமென்றே இத்தகைய வசனங்கள் தெளிவாக்குகின்றன: அந்தப் பொருள் விளக்கம்—யெகோவா தேவன் ஒருவரே ஈடற்ற உன்னதர்—என்ற முழு பைபிளின் நிலையான போதகத்தோடு ஒத்திருக்கிறதா? இல்லையெனில், அந்தப் பொருள்விளக்கம் தவறாகவே இருக்கவேண்டும்.
“நிரூபிக்கும் வசனம்” எனப்பட்ட ஒன்றுங்கூட, கடவுளும், இயேசுவும், பரிசுத்த ஆவியும் ஏதோ புதிரான கடவுளில் ஒன்றாயிருக்கிறார்கள் என்று சொல்வதில்லை என்ற இதையும் நாம் மனதில் வைக்கவேண்டும். அந்த மூவரும் தன்மையிலும்,, வல்லமையிலும், நித்தியத்துவத்திலும் ஒன்றானவர்கள் என்று பைபிளில் எங்கேயும் ஒரு வசனமும் சொல்கிறதில்லை. சர்வவல்லமையுள்ள யெகோவா ஒருவரே, ஈடற்ற உன்னதர் எனவும், இயேசு அவருடைய சிருஷ்டிக்கப்பட்ட குமாரன் எனவும், பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல்நடப்பிக்கும் சக்தி எனவும் வெளிப்படுத்துவதில் பைபிள் நிலையாயிருக்கிறது.
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
“கிறிஸ்து . . . பிதாவுடன் அதே உள்ளியல்புடையவர் என்பதை நிரூபிக்க பண்டைக் காலத்தவர் [யோவான் 10:30-ஐ] தவறாய்ப் பயன் படுத்தினார்கள்.”—யோவான் எழுதின சுவிசேஷத்தின்பேரில் விளக்கவுரை, ஜான் கால்வின் இயற்றியது
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
மற்றொருவ“ருடன்” இருக்கும் ஓர் ஆள் அந்த மற்றொருவராகவும் இருக்கமுடியாது
[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]
“அந்த லோகாஸ் தெய்வீகமாயிருந்தார், அந்தத் தேவன்தாமேயாக இல்லை.”—ஜோசஃப் ஹென்ரி தாயர், பைபிள் அறிஞர்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
இயேசு, தாமும் தம்முடைய பிதாவும் “ஒன்றாயிருக்கிறதுபோல” தம்முடைய சீஷர்க“ளெல்லாரும் ஒன்றாயிருக்கும்படி” கடவுளிடம் ஜெபித்தார்
[பக்கம் 26-ன் படம்]
இயேசு, ‘பிதா செய்வதைத் தாம் காண்பதை மாத்திரமேயன்றி தாமாக ஒன்றையும் செய்ய முடியாது’ என்று சொல்லி, தாம் கடவுளுக்குச் சமமாயில்லையென யூதருக்குக் காட்டினார்
[பக்கம் 29-ன் படங்கள்]
பைபிளில், மனிதரும், தூதர்களும், சாத்தானுங்கூட “தேவர்கள்” அல்லது வல்லமையுள்ளவர்கள் என்று அழைக்கப்பட்டிருப்பதால், பரலோகத்திலுள்ள மேம்பட்டவரான இயேசு சரியாகவே “ஒரு கடவுள்” என்றழைக்கப்படலாம்