Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மையான மதத்தை அடையாளங் கண்டுகொள்ளுதல்

உண்மையான மதத்தை அடையாளங் கண்டுகொள்ளுதல்

அதிகாரம் 22

உண்மையான மதத்தை அடையாளங் கண்டுகொள்ளுதல்

முதல் நூற்றாண்டில் உண்மையான மதத்தை யார் கடைப்பிடித்து வந்தார்கள் என்பதைப் பற்றியதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களே அதைக் கடைப்பிடித்து வந்தார்கள். இவர்களெல்லாரும் அந்த ஒரே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இன்றைய காலத்தைப் பற்றியதென்ன? உண்மையான மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களை எப்படி அடையாளங் கண்டுகொள்ளக்கூடும்?

2 இதை நாம் எப்படிச் செய்யக்கூடுமென்பதை விவரிப்பவராய் இயேசு பின்வருமாறு கூறினார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; . . . நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும் . . . ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:16-20) கடவுளுடைய உண்மை வணக்கத்தார் எந்த நல்ல கனிகளைக் கொடுக்கும்படி நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? அவர்கள் இப்பொழுது என்ன சொல்லிக்கொண்டும் செய்து கொண்டும் இருக்க வேண்டும்?

கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துதல்

3 கடவுளுடைய உண்மை வணக்கத்தார், இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கொடுத்த அந்த மாதிரி-ஜெபத்துக்கு இசைவாக நடப்பார்கள். அங்கே இயேசு குறிப்பிட்ட அந்த முதல் காரியமானது: “பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய பெயர் பரிசுத்தப்படுவதாக,” என்பதே. மற்றொரு பைபிள் மொழிபெயர்ப்பு இந்த வார்த்தைகளைப் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கிறது: “உம்முடைய பெயர் பரிசுத்தமாய்க் கையாளப்படுவதாக.” (மத்தேயு 6:9, NW; Jerusalem Bible) கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது, அல்லது பரிசுத்தமாய்க் கையாளுவது என்பதன் கருத்தென்ன? இயேசு இதை எப்படிச் செய்தார்?

4 இயேசு தம்முடைய தகப்பனிடம் ஜெபத்தில் பின்வருமாறு சொன்னபோது இதை அவர் எப்படிச் செய்தார் என்பதைக் காட்டினார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.” (யோவான் 17:6) ஆம், இயேசு, யெகோவா என்ற கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார். அந்தப் பெயரைப் பயன்படுத்த அவர் தவறவில்லை. தம்முடைய பெயர் பூமி முழுவதிலும் மகிமைப்படுத்தப்பட வேண்டுமென்பது தம்முடைய தகப்பனின் நோக்கமென்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே அந்தப் பெயரை யாவருக்கும் அறிவிப்பதிலும் அதைப் பரிசுத்தமாய்க் கையாளுவதிலும் அவர் முன்மாதிரியை வைத்தார்.—யோவான் 12:28; ஏசாயா 12:4, 5.

5 உண்மையான கிறிஸ்தவ சபை இருப்பதுதானேயும் கடவுளுடைய பெயர் சம்பந்தப்பட்டதாயிருக்கிறதென்று பைபிள் காட்டுகிறது. “தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்து கொள்ளும்படி முதல் முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளினார்” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு விளக்கினான். (அப்போஸ்தலர் 15:14) ஆகவே, கடவுளுடைய உண்மையான ஜனங்கள் அவருடைய பெயரைப் பரிசுத்தமாய்க் கையாண்டு அதை பூமி முழுவதும் தெரியப்படுத்த வேண்டும். பைபிள் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம், அந்தப் பெயரை அறிவது, உண்மையில், இரட்சிப்புக்கு அவசியமானது: “ஏனெனில் ‘யெகோவாவின் பெயரின்பேரில் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.’”—ரோமர் 10:13, 14, NW.

6 அப்படியானால் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தமாய்க் கையாண்டு அதை பூமி முழுவதிலும் தெரியப்படுத்தி வருகிறவர்கள் யார்? பொதுவாய் சர்ச்சுகள் யெகோவா என்ற இந்தப் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர். சிலர் இதைத் தங்கள் பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து நீக்கிவிட்டும் இருக்கின்றனர். என்றபோதிலும், நீங்கள் உங்கள் அயலாருடன் பேசி, யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தி அவரை அடிக்கடி குறிப்பிடுகிறீர்களென்றால், அவர்கள் உங்களை எந்த அமைப்புடன் சம்பந்தப்படுத்துவார்களென்று எண்ணுகிறீர்கள்? இதைக் குறித்ததில் இயேசுவின் முன்மாதிரியை உண்மையில் பின்பற்றுகிற ஒரே ஒரு ஜனம் மாத்திரமே இருக்கின்றனர். வாழ்க்கையில் இவர்களுடைய மிக முக்கிய நோக்கமானது, இயேசு செய்ததுபோல், கடவுளைச் சேவித்து அவருடைய பெயருக்கு சாட்சி பகர வேண்டுமென்பதே. ஆகவே இவர்கள், “யெகோவாவின் சாட்சிகள்” என்ற இந்த வேதப்பூர்வ பெயரை ஏற்றிருக்கின்றனர்.—ஏசாயா 43:10-12.

கடவுளுடைய ராஜ்யத்தை வெளிப்படையாக அறிவித்தல்

7 இயேசு கொடுத்த மாதிரி ஜெபத்தில், கடவுளுடைய ராஜ்யம் எவ்வளவு முக்கியமென்பதையும் காட்டினார். “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்று ஜெபிக்கும்படி அவர் மக்களுக்குக் கற்பித்தார். (மத்தேயு 6:10) ராஜ்யமே மனிதவர்க்கத்தின் தொல்லைகளுக்கு ஒரே பரிகாரமென இயேசு மறுபடியும் மறுபடியுமாக அறிவுறுத்தினார். அவரும் அவருடைய அப்போஸ்தலரும் “கிராமங் கிராமமாயும்” “வீடு வீடாகவும்” இந்த ராஜ்யத்தைப் பற்றி மக்களுக்குப் பிரசங்கித்து வருவதன் மூலம் இதைச் செய்தார்கள். (லூக்கா 8:1, தி.மொ.; அப்போஸ்தலர் 5:42; 20:20, தி.மொ.) கடவுளுடைய ராஜ்யமே அவர்களுடைய பிரசங்கத்துக்கும் போதகத்துக்கும் பொருளாக இருந்தது.

8 நம்முடைய நாளைப் பற்றியதென்ன? கடவுளுடைய உண்மையான கிறிஸ்தவ அமைப்பின் முக்கிய போதகம் என்ன? இந்தக் “கடைசி நாட்களைப்” பற்றித் தீர்க்கதரிசனம் சொல்லுகையில் இயேசு பின்வருமாறு கூறினார்: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14, NW) ஆகவே இந்த ராஜ்யமே இன்று கடவுளுடைய ஜனங்களின் முக்கிய செய்தியாக இருக்க வேண்டும்.

9 உங்களைப் பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: ஓர் ஆள் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அதுவே மனிதவர்க்கத்துக்கு உண்மையான நம்பிக்கை என்பதாகச் சொல்லுகையில், அந்த ஆளை எந்த அமைப்புடன் நீங்கள் சம்பந்தப்படுத்துவீர்கள்? யெகோவாவின் சாட்சிகளல்லாமல் வேறு எந்த மதத்தின் மக்களாவது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி உங்களிடம் பேசியிருக்கிறார்களா? அது என்னவென்பதையுங்கூட அவர்களில் வெகு சிலரே தெரிந்திருக்கின்றனர்! கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர்கள் மெளனமாயிருக்கிறார்கள். என்றபோதிலும் அந்த அரசாங்கமே உலகத்தை நடுங்கவைக்கும் செய்தியாயிருக்கிறது. இந்த ராஜ்யம் ‘மற்ற எல்லா அரசாங்கங்களையும் நொறுக்கி அழித்துவிடும், அது மாத்திரமே பூமியை ஆளும்,’ என்று தீர்க்கதரிசியாகிய தானியேல் முன்னறிவித்தான்.—தானியேல் 2:44, தி.மொ.

கடவுளுடைய வார்த்தைக்கு மரியாதை காட்டுதல்

10 உண்மையான மதத்தைக் கடைப்பிடித்து வருகிறவர்களை அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய மற்றொரு முறையானது, பைபிளினிடமாக அவர்கள் கொண்டிருக்கும் மனப்பான்மையைக் கவனிப்பதன் மூலமாகும். இயேசு எல்லா சமயங்களிலும் கடவுளுடைய வார்த்தைக்கு மரியாதை காட்டினார். காரியங்களின்பேரில் கடைசி அதிகாரத்துவமாக மறுபடியும் மறுபடியும் அவர் அதைக் குறிப்பிட்டு கவனிக்கும்படி செய்தார். (மத்தேயு 4:4, 7, 10; 19:4-6) மேலும் அதன் போதகங்களின்படி வாழ்க்கையில் நடந்துகொள்வதன் மூலமும் இயேசு பைபிளுக்கு மரியாதை காட்டினார். பைபிளை அவர் ஒருபோதும் மதிப்புக் குறைவாக்கவில்லை. அதற்கு மாறாக, பைபிளுக்கு ஒத்திசைவாகக் கற்பிக்கத் தவறி, தங்கள் சொந்த எண்ணங்களைச் சேர்த்து அதன் போதகங்களின் வலிமையைக் குறைக்க முயன்றவர்களை அவர் கண்டனம் செய்தார்.—மாற்கு 7:9-13.

11 இதைக் குறித்ததில் கிறிஸ்தவ மண்டலத்தின் சர்ச்சுகள் கிறிஸ்துவின் முன்மாதிரியை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறார்கள்? பைபிளுக்கு ஆழ்ந்த மரியாதை கொடுக்கிறவர்களாக அவர்கள் இருக்கிறார்களா? ஆதாம் பாவத்துக்கு உட்பட்டது, நோவாவின் நாளின் ஜலப்பிரளயம், யோனாவும் அந்தப் பெரிய மீனும் உட்பட இன்னும் பைபிளின் மற்ற விவரப் பதிவுகளை இன்றைய பாதிரிமார் பலர் நம்புகிறதில்லை. மனிதன், கடவுளால் நேர்முகமாகப் படைக்கப்பட்டதால் அல்ல, பரிணாமத்தின் மூலமே இங்கே வந்தான் என்றுங்கூட அவர்கள் சொல்லுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கடவுளுடைய வார்த்தைக்கு மரியாதையை அவர்கள் ஊக்குவிக்கிறார்களா? மேலும், திருமணத்துக்கு வெளியே பாலுறவுகள் வைத்துக் கொள்வது தவறல்ல, அல்லது ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி அல்லது பல மனைவியரைக் கொண்டிருத்தல் சரியாகவே இருக்கக்கூடும் என்று சில சர்ச் தலைவர்கள் விவாதித்திருக்கின்றனர். இவர்கள், பைபிளைத் தங்கள் வழிகாட்டியாகப் பயன்படுத்தும்படி மக்களை ஊக்குவிக்கிறார்களென்று நீங்கள் சொல்வீர்களா? இவர்கள் நிச்சயமாகவே, கடவுளுடைய குமாரனின் மற்றும் அவருடைய அப்போஸ்தலரின் முன்மாதிரியைப் பின்பற்றிக் கொண்டில்லை.—மத்தேயு 15:18, 19; ரோமர் 1:24-27.

12 பைபிளை உடையவர்களாகவும் அதைப் படிக்கிறவர்களாகவுங்கூட இருக்கிற சர்ச் அங்கத்தினர்கள் உண்டு. என்றாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தும் முறையானது அதை அவர்கள் பின்பற்றுகிறதில்லை என்று காட்டுகிறது. இப்படிப்பட்ட ஆட்களைப்பற்றி, பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.” (தீத்து 1:16; 2 தீமோத்தேயு 3:5) சூதாடுகிற, குடி வெறிக்குள்ளாகிற அல்லது மற்றத் தவறுகளைச் செய்கிற சர்ச் அங்கத்தினர்கள் தங்கள் சர்ச்சுக்குள் மதிப்பான நிலையில் தொடர்ந்திருக்கும்படி அனுமதிக்கப்படுகிறார்களென்றால், இது எதைக் காட்டுகிறது? அவர்களுடைய மத அமைப்பு கடவுளால் அங்கீகரிக்கபடுகிறதில்லை என்பதற்கு அது அத்தாட்சியாயிருக்கிறது.—1 கொரிந்தியர் 5:11-13.

13 இந்தப் புத்தகத்தின் முந்தின அதிகாரங்களுக்கு நீங்கள் சிந்தனை செலுத்தி, அங்கே காணப்பட்ட பைபிள் வசனங்களை ஆழ்ந்து ஆலோசித்திருப்பீர்களென்றால், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படை போதகங்களை அறிந்து கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் சேர்ந்திருக்கிற அந்த மத அமைப்பின் போதகங்கள் கடவுளுடைய வார்த்தையின் போதகங்களுக்கு ஒத்திசைவாக இல்லையென்றால் என்ன செய்வது? அப்பொழுது உங்களுக்கு ஒரு வினைமையான பிரச்னை இருக்கிறது. பைபிளின் சத்தியத்தை ஏற்பதா அல்லது பைபிள் ஆதரிக்காத போதகங்களின் சார்பாக மனம் சாய்ந்து அதை வேண்டாமென்று தள்ளிவிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் பிரச்னையே அது. நீங்கள் செய்வது, நிச்சயமாகவே, உங்கள் சொந்தத் தீர்மானமாக இருக்க வேண்டும். என்றபோதிலும் நீங்கள் காரியங்களைக் கவனமாய்ச் சீர்தூக்கி மதிப்பிட வேண்டும். இது ஏனென்றால், நீங்கள் செய்யும் தீர்மானம் கடவுளோடு உங்களுக்கிருக்கும் நிலைநிற்கையையும் பூமியில் பரதீஸில் என்றும் வாழும் உங்கள் எதிர்பார்ப்புகளையும் பாதிக்கும்.

இந்த உலகத்திலிருந்து தனியே விலகியிருத்தல்

14 இயேசு சொன்ன பிரகாரம், உண்மையான மதத்தைக் கடைப்பிடித்து வருகிறவர்களின் இன்னுமொரு அடையாளக் குறியானது, “அவர்கள் இவ்வுலகத்தின் பாகமானவர்களல்லர்” என்பதே. (யோவான் 17:14, NW) இது, உண்மையான வணக்கத்தார், இந்தச் சீரழிந்த உலகத்திலிருந்தும் அதன் விவகாரங்களிலிருந்தும் தங்களைத் தனியே விலக்கிவைத்துக் கொள்கின்றனர் என்று அர்த்தமாகிறது. இயேசு கிறிஸ்து ஓர் அரசியல் அதிபதியாவதை மறுத்துவிட்டார். (யோவான் 6:15) பிசாசாகிய சாத்தானே இந்த உலகத்தின் அதிபதி என்று பைபிள் சொல்லுகிறதை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்வீர்களானால், இந்த உலகத்திலிருந்து நம்மைத் தனியே விலக்கி வைத்துக் கொள்வது ஏன் அவ்வளவு முக்கியமென்பதை நீங்கள் மதித்துணரக்கூடும். (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4) இந்தக் காரியத்தின் வினைமையான தன்மை பின்வரும் பைபிள் கூற்றிலிருந்து மேலுமாகக் காணப்படுகிறது; “ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.”—யாக்கோபு 4:4.

15 உங்கள் சமுதாயத்திலுள்ள சர்ச்சுகள் இந்தக் காரியத்துக்குக் கவலையோடு கவனம் செலுத்துகிறார்களென்று உண்மை விஷயங்கள் காட்டுகின்றனவா? பாதிரிமாரும் அவர்களோடுகூட சபை அங்கத்தினரும் உண்மையில் ‘இவ்வுலத்தின் பாகமல்லாதவர்களாக’ இருக்கிறார்களா? அல்லது தேசீய காரியங்களிலும், அரசியல்களிலும், இந்த உலகத்தின் சமுதாயப் பிரிவு போராட்டங்களிலும் ஆழ்ந்து உட்பட்டிருக்கிறார்களா? சர்ச்சுகளில் செயல்கள் வெகு விரிவாய் அறியப்பட்டிருப்பதனால், இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது கடினமாயில்லை. மறுபட்சத்தில், யெகோவாவின் சாட்சிகளின் செயல்களை ஆராய்ந்து சரிபார்ப்பதும் எளிதாயிருக்கிறது. அப்படி ஆராய்ந்து பார்ப்பீர்களானால், அவர்கள் இவ்வுலகத்திலிருந்தும், அதன் அரசியல் விவகாரங்களிலிருந்தும், அதன் தன்னல, ஒழுக்கக்கேடான, வன்முறை வழிகளிலிருந்தும் தங்களைத் தனியே விலக்கிவைத்துக் கொள்வதன் மூலம், கிறிஸ்துவும் அவரை அக்காலத்தில் பின்பற்றினவர்களும் வைத்த முன்மாதிரியை மெய்யாகவே பின்பற்றுகிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.—1 யோவான் 2:15-17.

தங்களுக்குள்ளே அன்பு

16 கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் அடையாளங் கண்டுகொள்ளப்படக்கூடிய மிக முக்கியமான ஒரு வழியானது அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் அன்பின் மூலமேயாகும். இயேசு பின்வருமாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” (யோவான் 13:35) நீங்கள் பழக்கப்பட்டிருக்கிற மத அமைப்புகள் இந்த அன்பை உடையவர்களாக இருக்கிறார்களா? உதாரணமாக, தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற நாடுகள் ஒருவருக்கொருவர் எதிராகப் போரிட செல்கையில், அவர்கள் என்ன செய்கிறார்கள்?

17 வழக்கமாய் என்ன நடக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். உலகப் பிரகாரமான மனிதரின் கட்டளையின் பேரில் பற்பல மத அமைப்புகளின் அங்கத்தினர் போர்க்களத்துக்குச் சென்று மற்றொரு நாட்டைச் சேர்ந்த தங்கள் உடன் தோழரான விசுவாசிகளைக் கொல்லுகின்றனர். இவ்வாறாகக் கத்தோலிக்கன் கத்தோலிக்கனைக் கொல்லுகிறான், புராட்டஸ்டன்ட் மதத்தினன் புராட்டஸ்டன்ட் மதத்தினைக் கொல்லுகிறான், முஸ்லிம் முஸ்லிமைக் கொல்லுகிறான். இப்படிப்பட்ட போக்கு கடவுளுடைய வார்த்தையின்படி இருக்கிறதென்றும் உண்மையில் கடவுளுடைய ஆவியைக் காட்டுகிறதென்றும் நீங்கள் நினைக்கிறீர்களா?—1 யோவான் 3:10-12.

18 ஒருவருக்கொருவர் அன்புகாட்டும் இந்தக் காரியத்தில் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு இருக்கின்றனர்? உலகப் பிரகாரமான மதங்களின் இந்தப் போக்கை அவர்கள் பின்பற்றுகிறதில்லை. தங்கள் உடன் தோழரான விசுவாசிகளை அவர்கள் போர்க்களத்தில் கொல்லுகிறதில்லை. “கடவுளில் அன்பு கூருகிறேன்,” என்று சொல்லி அதே சமயத்தில் மற்றொரு தேசத்தை, கோத்திரத்தை அல்லது மரபினரைச் சேர்ந்த தங்கள் சகோதரனைப் பகைப்பதன் மூலம் பொய்யில் வாழும் குற்றத்தை உடையவர்களாக அவர்கள் இல்லை. (1 யோவான் 4:20, 21, தி.மொ.) மேலும் மற்ற வழிகளிலும் அவர்கள் அன்பைக் காட்டுகிறார்கள், எப்படி? தங்கள் அயலாரோடு அவர்கள் நடந்துகொள்ளும் முறையிலும், கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் எடுக்கும் அன்புள்ள முயற்சிகளாலும் தங்கள் அன்பைக் காட்டுகிறார்கள்.—கலாத்தியர் 6:10.

ஒரே உண்மையான மதம்

19 ஒரே உண்மையான மதமே இருக்குமென்பது நியாயத்துக்கு ஒத்ததாயிருக்கிறது. இது, உண்மையான கடவுள் “கலகத்திற்குத் [குழப்பத்திற்கு, NW] தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்,” என்ற இந்த உண்மையோடு ஒத்திசைவதாய் இருக்கிறது. (1 கொரிந்தியர் 14:33) உண்மையில் “ஒரே விசுவாசம்” மாத்திரமே இருக்கிறதென்று பைபிள் சொல்லுகிறது. (எபேசியர் 4:5) அப்படியானால், இன்று உண்மை வணக்கத்தாராலாகிய அந்தக் குழுவை உண்டுபண்ணுகிறவர்களாக இருக்கிறவர்கள் யாவர்?

20 அவர்கள் யெகோவாவின் சாட்சிகளே என்று சொல்வதற்கு நாங்கள் தயங்குகிறதில்லை. இதைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் அவர்களோடு மேலும் நன்றாய் அறிமுகமாகும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். இதைச் செய்வதற்கு மிகச் சிறந்த முறையானது யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் அவர்கள் கூட்டங்களுக்கு வருவதேயாகும். உண்மையான மதத்தைப் பழக்கமாய்க் கடைப்பிடித்து வருவது மிகுந்த மனத்திருப்தியை இப்பொழுது கொண்டுவந்து, பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ்வதற்கு வழியைத் திறந்து வைக்கிறதென்று பைபிள் காட்டுவதனால், இப்படிப்பட்ட ஓர் ஆராய்ச்சியைச் செய்வது உங்களுக்கு நிச்சயமாகவே பயனுள்ளதாயிருக்கும். (உபாகமம் 30:19, 20) அப்படிச் செய்யும்படி எங்கள் அனலான வரவேற்பை உங்களுக்குக் கொடுக்கிறோம். இப்பொழுதே இந்த ஆராய்ச்சியைச் செய்யலாமல்லவா?

[கேள்விகள்]

1. முதல் நூற்றாண்டில் உண்மையான மதத்தை யார் கடைப்பிடித்து வந்தார்கள்?

2. உண்மையான மதத்தைக் கடைப்பிடிப்பவர்களை அடையாளங்கண்டுகொள்வது எப்படி?

3, 4. (எ) இயேசுவின் மாதிரி ஜெபத்தில் செய்யப்பட்ட அந்த முதல் வேண்டுகோள் என்ன? (பி) இயேசு எப்படிக் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தினார்?

5. (எ) கிறிஸ்தவ சபை எப்படிக் கடவுளுடைய பெயரோடு இணைக்கப்பட்டதாயிருக்கிறது? (பி) நாம் இரட்சிப்படைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

6. (எ) பொதுவாய் சர்ச்சுகள் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தமாய்க் கையாண்டு வருகின்றனவா? (பி) கடவுளுடைய பெயருக்குச் சாட்சி பகருகிறவர்கள் எவராவது இருக்கின்றனரா?

7. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை இயேசு எப்படிக் காட்டினார்?

8. இந்தக் “கடைசி நாட்களில்” தம்மை உண்மையாய்ப் பின்பற்றுபவர்களின் முக்கிய செய்தி என்னவாக இருக்குமென்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

9. இந்த ராஜ்ய செய்தியை இன்று எந்த ஜனங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள்?

10. இயேசு எப்படிக் கடவுளுடைய வார்த்தைக்கு மரியாதை காட்டினார்?

11. கடவுளுடைய வார்த்தையினிடமாக என்ன மனப்பான்மையைச் சர்ச்சுகள் அடிக்கடி காட்டுகின்றனர்?

12. (எ) பைபிளையுங்கூட வைத்திருக்கிற பலருடைய வணக்கம் ஏன் கடவுளுக்குப் பிரியமானதாயில்லை? (பி) அறிந்து வேண்டுமென்றே தவறு செய்கிறவர்கள் சர்ச்சுக்குள் மதிப்பான நிலையில் தொடர்ந்திருக்கும்படி அனுமதிக்கப்படுகிறார்களென்றால், நாம் என்ன முடிவுக்கு வரவேண்டும்?

13. தன்னுடைய சர்ச்சின் போதகங்கள் பைபிளுடன் முழுவதுமாய் ஒத்திசைந்தில்லை என்று ஒருவன் காண்கிறானென்றால் அவன் என்ன பாரமான தீர்மானத்தைச் செய்யவேண்டும்?

14. (எ) உண்மையான மதத்தை அடையாளங் காட்டும் மற்றொரு அடையாளக் குறி என்ன? (பி) உண்மை வணக்கத்தார் இந்தத் தேவையை நிறைவுசெய்ய வேண்டியது ஏன் அவ்வளவு முக்கியமானது?

15. (எ) நீங்கள் அறிமுகமாகியிருக்கிற சர்ச்சுகள் உண்மையில் “இந்த உலகத்தின் பாகமல்லாத”வையாக இருக்கின்றனவா? (பி) இந்தத் தேவையை நிறைவுசெய்கிற ஒரு மதம் உங்களுக்குத் தெரியுமா?

16. கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் அடையாளங் கண்டு கொள்ளப்படக்கூடிய ஒரு முக்கியமான வழி என்ன?

17. தங்களுக்குள் அன்பைக் காட்டவேண்டிய இந்தத் தேவையை நிறைவாக்குவதைக் குறித்ததில் மத அமைப்புகளும் அவற்றின் அங்கத்தினரும் எவ்வாறு இருக்கின்றனர்?

18. ஒருவருக்கொருவர் அன்பு காட்டும் இந்தக் காரியத்தில் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு இருக்கின்றனர்?

19. ஒரே ஒரு உண்மையான மதமே இருக்கிறதென்று சொல்வது ஏன் நியாயமாயும் வேதப்பூர்வமாயும் இருக்கிறது?

20. (எ) இந்த அத்தாட்சியைத் துணைகொண்டு பார்க்கையில் இன்று யார் உண்மை வணக்கத்தாராக இருப்பதாய் இந்தப் புத்தகம் குறித்துக் காட்டுகிறது? (பி) நீங்கள் நம்புவதும் அதுதானா? (சி) யெகோவாவின் சாட்சிகளோடு நன்றாய் அறிமுகமாவதற்கு மிகச் சிறந்த வழி என்ன?

[பக்கம் 185-ன் படம்]

யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி எவரிடமாவது பேசுகிறீர்களென்றால், எந்த மதத்துடன் மக்கள் உங்களை இணைப்பர்?

[பக்கம் 186-ன் படங்கள்]

ஒருவன் கடவுளுடைய வார்த்தையின்படி வாழத் தவறுகிறான் என்றால் அதை மதிக்கிறவனாக இருக்கிறானா?

[பக்கம் 188, 189-ன் படம்]

இயேசு ஓர் அரசியல் அதிபதியாவதற்கு மறுத்துவிட்டார்

[பக்கம் 190-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களுக்கு வரும்படி நீங்கள் அனலுடன் அழைக்கப்படுகிறீர்கள்