கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்?
அதிகாரம் 11
கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்?
இவ்வுலகத்தில் எங்கே பார்த்தாலும், குற்றச்செயல்கள், பகை, தொல்லைகள் ஆகியவற்றை நீங்கள் காண்கிறீர்கள். அநேகமாய்க் குற்றமற்றவர்களே துன்பமனுபவிக்கிறார்கள். சிலர் கடவுளைக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ‘கடவுள் ஒருவர் இருக்கிறாரென்றால், இந்த எல்லா பயங்கர காரியங்களும் நடைபெறும்படி அவர் ஏன் அனுமதிக்கிறார்?’ என்று அவர்கள் சொல்லக்கூடும்.
2 என்றபோதிலும் யார் இந்தப் பொல்லாதக் காரியங்களை மற்றவர்களுக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள்? கடவுளல்ல, மக்களே. கடவுள் பொல்லாதச் செயல்களைக் கண்டனம் செய்கிறார். உண்மையில், மக்கள் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவார்களேயானால், பூமியிலுள்ள துன்பங்களில் மிகுதியானவைத் தவிர்க்கப்படும். நேசிக்கும்படி அவர் நமக்குக் கட்டளையிடுகிறார். மனிதரைத் துன்பப்படச் செய்யும் கொலை, களவு, வேசித்தனம், பேராசை, குடிவெறி, மற்றும் பல்வேறு தவறான செயல்களைச் செய்யக்கூடாதென்று அவர் கட்டளையிடுகிறார். (ரோமர் 13:9; எபேசியர் 5:3, 18) ஆதாமையும் ஏவாளையும் அதிசயமான மூளையுடனும் உடலுடனும் வாழ்க்கையை முழு நிறைவாய் அனுபவித்து மகிழ்வதற்கேதுவான திறமையுடனும் கடவுள் உண்டாக்கினார். அவர்களோ அல்லது அவர்கள் பிள்ளைகளோ துன்பமனுபவிக்கும்படி அல்லது தொல்லைகளை உடையவர்களாய் இருக்கும்படி அவர் ஒருபோதும் விரும்பவில்லை.
3 பூமியில் அக்கிரமத்தைத் தொடங்கியவன் பிசாசாகிய சாத்தானே. ஆனால் ஆதாமும் ஏவாளுங்கூட குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பிசாசு அவர்களைச் சோதித்தபோது அவர்கள் எதிர்த்து நிற்கக்கூடாத அளவுக்குப் பலவீனராக இருக்கவில்லை. பரிபூரண மனிதனாகிய இயேசு பின்னால் செய்ததுபோன்று, “அப்பாலே போ,” என்று அவர்கள் சாத்தானுக்குச் சொல்லியிருக்கலாம். (மத்தேயு 4:10) ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இதன் விளைவாக, அவர்கள் அபூரணரானார்கள். நாம் உட்பட, அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் அந்த அபூரணத்தைச் சுதந்தரித்திருக்கிறோம், இது நோயையும் துயரத்தையும் மரணத்தையும் தன்னோடு கொண்டுவந்தது. (ரோமர் 5:12) ஆனால் துன்பம் தொடர்ந்து கொண்டிருக்கக் கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார்?
4 நூற்றாண்டுகளினூடே அனுபவிக்கப்பட்டு வந்திருக்கிற மனிதரின் துன்பமெல்லாவற்றையும்
அனுமதிக்கக் கடவுளுக்குக் அவ்வளவு முக்கிய காரணம் இருக்க முடியாதென்று ஒருவர் முதலில் எண்ணக்கூடும். என்றபோதிலும், இந்த முடிவுக்கு வருவது சரிதானா? தங்கள் பிள்ளைகளை உண்மையில் நேசிக்கிற பெற்றோர் ஏதோ ஓர் உடல் கோளாறை சரிசெய்வதற்கு அவர்கள் வேதனையான இரண சிகிச்சைக்கு உட்படும்படி அனுமதித்திருக்கிறார்களல்லவா? ஆம், பிள்ளைகள் தற்காலிகமாக, வேதனை அனுபவிக்கும்படி அனுமதிப்பது, பின்னால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மேம்பட்ட சுகத்தை அனுபவித்து மகிழக்கூடியவர்களாகும்படி பெரும்பாலும் செய்திருக்கிறது. கடவுள் துன்மார்க்கத்தை அனுமதித்ததால் என்ன நன்மை செய்யப்பட்டிருக்கிறது?ஒரு முக்கிய விவாதம் தீர்க்கப்பட வேண்டும்
5 ஏதேன் தோட்டத்தில் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப்பட்ட கலகம் ஒரு முக்கிய விவாதத்தை அல்லது கேள்வியை எழுப்பினது. கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதித்திருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள நாம் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. யெகோவா ஆதாமிடம் அந்தத் தோட்டத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியைச் சாப்பிட வேண்டாமென்று கூறினார். ஆதாம் சாப்பிட்டானென்றால் என்ன நடக்கும்? “சாகவே சாவாய்” என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 2:17) என்றபோதிலும், “சாத்தான் இதற்கு முற்றிலும் எதிர்மாறாகச் சொன்னான். தயங்காமல் துணிந்து, விலக்கப்பட்ட அந்த மரத்தின் கனியைச் சாப்பிடும்படி அவன் ஆதாமின் மனைவியாகிய ஏவாளுக்குச் சொன்னான். “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சாத்தான் சொன்னான். உண்மையில், அவன் மேலும் தொடர்ந்து ஏவாளிடம், “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் [தேவனைப் போல், NW) இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்,” என்று சொன்னான்.—ஆதியாகமம் 3:1-.5.
6 ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அதைச் சாப்பிட்டாள். ஏன்? ஏவாள் சாத்தானை நம்பினாள். கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போவதன் மூலம் தான் நன்மையடையலாமென்று அவள் தன்னலத்துடன் எண்ணினாள். தானோ, ஆதாமோ இனிமேலும் கடவுளுக்குப் பதில் சொல்ல அவசியமிராதென்று அவள் எண்ணினாள். அவர்கள் இனிமேலும் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய அவசியமிராது. எது “நன்மை” எது “தீமை” என்பதைத் தாங்களே தங்களுக்குத் தீர்மானித்துக் கொள்ளக்கூடும் என்பதாக அவள் எண்ணினாள். ஆதாமும் ஏவாளோடு இணங்கிச் சென்று அதைச் சாப்பிட்டான். கடவுளுக்கு விரோமாகச் செய்த மனிதனின் முதல் பாவத்தை விவாதித்துப் பேசுவதாய் தி ஜெருசலேம் பைபிளில் உள்ள ஓர் அடிக்குறிப்பு பின்வருமாறு சொல்லுகிறது: “இது, நல்லது எது கெட்டது எது என்பதைத் தானே தனக்குத் தீர்மானித்து அதன்படி நடக்கும் அதிகாரமாயிருக்கிறது, முழுமையான ஒழுக்க சுயாதீனத்துக்கான உரிமையை வற்புறுத்துவதாக இருக்கிறது . . . இந்த முதல் பாவம் கடவுளுடைய ஆட்சி அதிகாரத்தின்பேரில் செய்யப்பட்ட ஒரு தாக்குதலாக இருந்தது.” அதாவது, மனிதன் மேல் தம் விருப்பப்படி ஆளும் அரசராக அல்லது உயர் அதிகாரியாக இருக்கும் கடவுளுடைய உரிமையின் பேரில் ஒரு தாக்குதலாக இது இருந்தது.
7 ஆகவே விலக்கப்பட்ட அந்தக் கனியைச் சாப்பிடுவதன்மூலம், ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய ஆட்சியின் கீழிருந்து தங்களை விலக்கிக்கொண்டார்கள். அவர்கள் எது “நன்மை” அல்லது “தீமை” என்பதைத் தாங்களே சொந்தமாய்த் தீர்மானித்து அதன்படி செய்பவர்களாய்த் தாங்களாகவே வெளியேறினார்கள். ஆகையால் எழுப்பப்பட்ட முக்கிய விவாதம் அல்லது கேள்வியானது: மனிதவர்க்கத்தைத் தம் விருப்பப்படி ஆளும் அரசராக இருப்பதற்கு கடவுளுக்கு உரிமை இருக்கிறதா? என்பதே. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், மனிதருக்கு எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிப்பவர்
யெகோவா தேவனா? எது சரியான நடத்தை, எது அல்ல என்பதைச் சொல்ல வேண்டியவர் அவரா? அல்லது தன்னைத்தானே ஆண்டு கொள்வதில் மனிதனே மேம்பட்டவனாகத் திகழக் கூடியவனாய் இருக்கிறானா? யாருடைய ஆட்சி முறை மிகச் சிறந்தது? மனிதர், யெகோவாவின் வழிநடத்துதல் இல்லாமல், சாத்தானின் காணக்கூடாத வழி நடத்துதலின்கீழ், வெற்றிகரமாய் ஆண்டுகொள்ளக்கூடுமா? அல்லது பூமிக்கு நிலையான சமாதானத்தைக் கொண்டுவரும் ஒரு நீதியுள்ள அரசாங்கத்தை ஏற்படுத்தி வைக்க கடவுளுடைய வழிநடத்துதல் தேவைப்படுகிறதா? கடவுளுடைய அரசாட்சியின்பேரில், மனிதவர்க்கத்தின்மேல் முழுமையாக ஆட்சி செய்கிற ஒரே அரசராக இருக்கும் அவருடைய உரிமையின்பேரில் செய்யப்பட்ட இந்தத் தாக்குதலில் இப்படிப்பட்ட கேள்விகளெல்லாம் எழுப்பப்பட்டன.8 நிச்சயமாகவே, இந்தக் கலகம் ஏற்பட்டபோது உடனடியாக யெகோவா அந்த மூன்று கலகக்காரரையும் அழித்துப்போட்டிருக்கலாம். சாத்தானையோ ஆதாம் ஏவாளையோ பார்க்கிலும் அவர் பலமுள்ளவராக இருந்தாரென்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அவர்களை அழிப்பது காரியங்களை மிகச் சிறந்த முறையில் தீர்த்திருக்காது. உதாரணமாக, கடவுளுடைய உதவியில்லாமல் மனிதர் தங்களைத் தாங்களே வெற்றிகரமாய் ஆண்டுகொள்ளக்கூடுமா? என்ற இந்தக் கேள்விக்கு அது பதிலளித்திருக்காது. ஆகவே எழுப்பப்பட்ட இந்த முக்கிய விவாதத்தைத் தீர்ப்பதற்கு யெகோவா காலத்தை அனுமதித்தார்.
இந்த விவாதத்தைத் தீர்த்தல்
9 அந்தக் காலம் இப்பொழுது கடந்துவிட்டிருக்கிறது. அதன் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? நீங்கள் என்ன சொல்வீர்கள்? கடவுளுடைய வழிநடத்துதல் இல்லாமல் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதில் மனிதர் வெற்றிகரமாய் இருந்திருக்கிறார்களென்று கடந்த 6,000 ஆண்டுகளின் சரித்திரம் காட்டியிருக்கிறதா? எல்லோருக்கும் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் தரும் நல்ல அரசாங்கத்தை மனிதர் அளித்திருக்கிறார்களா? அல்லது “தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லை,” என்று தீர்க்கதரிசியாகிய எரேமியா சொன்ன வார்த்தைகள் முற்றிலும் சரியானவை என்று சரித்திரத்தின் பதிவு காட்டியிருக்கிறதா?—எரேமியா 10:23, தி.மொ.
10 சரித்திரம் முழுவதிலும் மனிதர் எல்லா வகையான அரசாங்கங்களையும் முயன்று பார்த்திருக்கின்றனர், ஆனால் எதுவும் அவற்றின் ஆட்சியின்கீழ் வாழ்ந்து கொண்டிருந்த எல்லோருக்கும் பாதுகாப்பையும் உண்மையான சந்தோஷத்தையும் கொண்டு வந்திருக்கவில்லை. சில ஆட்கள், முன்னேற்றக் குறிகளைச் சுட்டிக் காட்டலாம். வில்லும் அம்பும் இருந்த இடத்தை அணுகுண்டு எடுத்திருக்கையில், மேலும் இப்பொழுது இருக்கிற உலகம் மற்றொரு உலகப் போர் உண்டாகும் பெரும் திகிலில் இருந்து கொண்டிருக்கையில் ஒருவர் மெய்யான முன்னேற்றத்தைக் குறித்துப் பேச முடியுமா? மனிதர் சந்திரனில் நடக்கக் கூடியவர்களாக இருந்து ஆனால் பூமியில் ஒன்றாகச் சமாதானமாய் வாழக் கூடாதவர்களாக இருப்பது என்ன வகையான முன்னேற்றம்? மனிதர் எல்லா வகைகளான நவீன வசதிகளும் அடங்கிய வீடுகளைக் கட்டியும் அவற்றில் வாழ்கிற குடும்பங்கள் மனக் கசப்புற்று தொல்லைகளினால் பிரிக்கப்பட்டவர்களாய் இருக்கையில் அவற்றால் என்ன பயன்? வீதிகளில் கலகங்கள், உடைமையையும் நீதிமொழிகள் 19:3.
உயிரையும் அழிப்பது, விரிவாய்ப் பரந்துள்ள கடும் சட்டமீறிய செயல்கள் ஆகியவை பெருமை பாராட்டுவதற்குரிய காரியங்களா? இல்லவே இல்லை! ஆனால் இவை, கடவுளை விட்டுப் பிரிந்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள மனிதர் முயன்றதன் விளைவுகளேயாகும்.—11 இந்த அத்தாட்சி எல்லோருக்கும் தெளிவாக இருக்க வேண்டும். கடவுள் பேரில் சார்ந்திராமல் சுயாதீனமாய்த் தன்னைத்தானே ஆண்டுகொள்வதற்கு மனிதன் எடுத்திருக்கும் முயற்சிகள் பயங்கர தோல்வியாக இருந்திருக்கின்றன. இவை மனிதருக்குப் பெரும் துன்பத்தைக் கொண்டு வருவதிலேயே விளைவடைந்திருக்கின்றன. “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்,” என்று பைபிள் விளக்குகிறது. (பிரசங்கி 8:9) தங்கள் விவகாரங்களை ஆண்டு நடத்துவதில் கடவுளுடைய வழிநடத்துதல் மனிதருக்குத் தேவை என்பது தெளிவாய் இருக்கிறது. உணவு உண்பதற்கும் தண்ணீர் குடிப்பதற்குமான தேவையுடன் கடவுள் மனிதனைப் படைத்திருக்கிறதைப் போலவே கடவுளுடைய சட்டங்களுக்கும் கீழ்ப்படிவதற்கான தேவையுடனும் மனிதன் உண்டாக்கப்பட்டான். மனிதன் தன் உடலுக்கு உணவும் தண்ணீரும் தேவைப்படுவதை அசட்டைப் பண்ணுவானாகில் அவன் எப்படி நிச்சயமாய்த் துன்பத்துக்கு ஆளாவானோ அப்படியே கடவுளுடைய சட்டங்களைப் புறக்கணிப்பானேயாகில் அவன் தொந்தரவுக்கு ஆளாவான்.—நீதிமொழிகள் 3:5, 6.
ஏன் இவ்வளவு நீடித்தக் காலம்?
12 என்றபோதிலும், ‘இந்த விவாதத்தைத் தீர்ப்பதற்காக, கடவுள் ஏன், இப்பொழுது ஏறக்குறைய 6,000 ஆண்டுகளான இவ்வளவு நீடித்தக் காலத்தை அனுமதித்திருக்கிறார்? என்று ஒருவர் கேட்கக்கூடும். இது வெகு காலத்திற்கு முன்பாகவே திருப்திகரமான ஒரு முறையில் தீர்க்கப்பட்டிருக்க முடியாதா?’ சரியானபடி முடியாது. வெகு காலத்திற்கு முன்பாகவே கடவுள் தலையிட்டிருப்பாரேயானால், தங்கள் முறையை முயற்சி செய்து பார்க்க மனிதருக்குப் போதியளவு காலம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்பேரில் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், அதன் குடிமக்கள் எல்லோருடைய தேவைகளையும் திருப்தி செய்யும் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தி வைக்கவும், அதோடுகூட எல்லோருடைய செழுமைக்காகவும் உதவி செய்யக்கூடிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளைச் செய்யவும் மனிதர் தற்போது இருக்கிறபடி ஏராளமான காலத்தை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். நூற்றாண்டுகளினூடே மனிதர் ஏறக்குறைய எல்லா வகையான அரசாங்கங்களையும் பார்த்து விட்டிருக்கின்றனர். விஞ்ஞான துறையில் அவர்களுடைய முன்னேற்றமும் குறிப்பிடத்தக்கதே. அவர்கள் அணுவின் சக்தியைப் பயன்படுத்தியிருக்கின்றனர், சந்திரனுக்கும் பயணஞ் செய்திருக்கின்றனர். ஆனால் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? மனிதவர்க்கத்தின் ஆசீர்வாதத்திற்காக ஒரு மேன்மையான புதிய ஒழுங்கு முறையை அது கொண்டு வந்திருக்கிறதா?
13 ஒருபோதுமில்லை! அதற்கு மாறாக, முன்னொருபோதும் இராத வண்ணமாய் சந்தோஷமில்லாமையும் இக்கட்டுமே பூமியில் மிகுதியாய்ப் பெருகியிருக்கிறது. உண்மையில், குற்றச் செயல்கள், தூய்மைக்கேடு, போர், குடும்ப சீர்க்குலைவு, இன்னும் மற்றப் பிரச்னைகள் அப்பேர்ப்பட்ட அபாயகரமான நிலையை எட்டியிருக்க, மனிதன் பூமியில் இருப்பதுதானேயும் அச்சுறுத்தப்படுகிறதென்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏறக்குறைய 6,000 ஆண்டுகள் தன்னை ஆளும் அனுபவத்திற்குப் பின்பும், விஞ்ஞானப் பூர்வ “முன்னேற்றத்தில்” ஒரு உச்ச நிலையை அடைந்த பின்பும், மனிதவர்க்கம் இப்பொழுது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலையை எதிர்ப்படுகிறது! மனிதர் கடவுளை விட்டுப் பிரிந்து தனியே தங்களைத் தாங்களே வெற்றிகரமாய் ஆண்டுகொள்ள முடியாதென்பது ஆ, எவ்வளவு தெளிவாயிருக்கிறது! மேலும் இந்த விவாதத்தைத் தீர்க்க கடவுள் போதுமான காலத்தை அனுமதிக்கவில்லை என்றும் இப்பொழுது எவரும் குறைகூற முடியாது.
14 சாத்தானின் ஆட்சியின் கீழுள்ள மனிதர், இவ்வளவு காலம் நீடித்திருக்கிற இந்த அக்கிரமத்தை வளர்த்திட கடவுள் அனுமதித்ததற்கு அவருக்கு நிச்சயமாகவே நல்ல காரணம் இருந்திருக்கிறது. சாத்தான் தன்னுடைய கலகத்தின் மூலமாக மற்றொரு விவாதத்தையும் எழுப்பினான். அதைத் தீர்ப்பதற்கும் காலம் வேண்டியதாக இருந்திருக்கிறது. இந்த விவாதத்தை ஆராய்ந்து பார்ப்பதானது, கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார் என்பதை நாம் விளங்கிக் கொள்வதில் மேலுமாக நமக்கு உதவி செய்யும். இந்த விவாதத்தில் நீங்கள் முக்கியமாய் அக்கறையுடையவர்களாக இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் இதில் தனிப்பட்ட வண்ணமாய் உட்பட்டிருக்கிறீர்கள்.
[கேள்விகள்]
1. (எ) இன்று பூமியில் நிலைமை எவ்வாறு இருக்கிறது? (பி) சிலர் எவ்வாறு குற்றஞ்சாட்டுகிறார்கள்?
2. (எ) பொல்லாதக் காரியங்களை யார் செய்து கொண்டிருக்கின்றனர்? (பி) பூமியிலுள்ள துன்பங்களில் மிகுதியானவை எப்படித் தவிர்க்கப்படக்கூடும்?
3. (எ) அக்கிரமத்துக்கு யார் உத்தரவாதமுள்ளவர்களாக இருக்கிறார்கள்? (பி) ஆதாமும் ஏவாளும் சாத்தானின் சோதனைகளை எதிர்த்து நின்றிருக்கலாமென்று எது காட்டுகிறது?
4. அன்புள்ள கடவுள் அக்கிரமத்தைத் தற்காலிகமாக அனுமதிப்பார் என்பதை விளங்கிக் கொள்ள எது நமக்கு உதவி செய்கிறது?
5. (எ) சாத்தான் எப்படிக் கடவுளுக்கு முற்றிலும் எதிர்மாறாகச் சொன்னான்? (பி) சாத்தான் ஏவாளுக்கு என்ன வாக்குக் கொடுத்தான்?
6. (எ) ஏவாள் ஏன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போனாள்? (பி) விலக்கப்பட்ட மரத்தின் கனியைச் சாப்பிட்டது எதைக் குறித்தது?
7. (எ) மனிதனின் கீழ்ப்படியாமையால் என்ன விவாதம் எழுப்பப்பட்டது? (பி) இந்த விவாதத்தின் சம்பந்தமாக என்ன கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன?
8. யெகோவா ஏன் இந்தக் கலகக்காரரை உடனடியாக அழிக்கவில்லை?
9, 10. மனிதர், கடவுளுடைய வழிநடத்துதலில்லாமல், தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள முயன்றதன் விளைவுகள் என்னவாக இருந்திருக்கின்றன?
11. ஆகையால் மனிதனுக்கு என்ன தேவையாயிருக்கிறதென்று தெரிகிறது?
12. இந்த விவாதத்தைத் தீர்க்க கடவுள் ஏன் இவ்வளவு நீண்ட காலத்தை அனுமதித்திருக்கிறார்?
13. (எ) மனிதனின் எல்லா விஞ்ஞான முன்னேற்றத்தின் மத்தியிலும், இன்று நிலைமை எவ்வாறு இருக்கிறது? (பி) இது தெளிவாக நிரூபிப்பது என்ன?
14. சாத்தானால் எழுப்பப்பட்ட அந்த முக்கியமான மற்ற விவாதத்தை ஆராய்ந்து பார்க்க நாம் ஏன் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்?
[பக்கம் 100-ன் படம்]
நல்ல காரணத்துடனேயே, பெற்றோர், மிகவும் நேசிக்கப்படுகிற பிள்ளை வேதனையான இரண சிகிச்சைக்கு உட்படும்படி அனுமதிப்பர். கடவுளுங்கூட, மனிதர் துன்பப்படும்படி தற்காலிகமாக அனுமதிப்பதற்கு நல்ல காரணங்களை உடையவராய் இருக்கிறார்
[பக்கம் 101-ன் படம்]
ஆதாம் ஏவாள், விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடுவதன்மூலம், கடவுளுடைய ஆட்சியை விட்டு விலகினார்கள். “நன்மை” எது “தீமை” எது என்பதன் பேரில் சொந்தத் தீர்மானங்களைச் செய்ய தொடங்கினார்கள்
[பக்கம் 103-ன் படங்கள்]
உணவு உண்பதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் வேண்டிய தேவையோடு மனிதன் படைக்கப்பட்டதைப்போலவே, கடவுளுடைய வழிநடத்துதலுக்கான தேவையுடனும் அவன் படைக்கப்பட்டான்