Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாத்தானுடைய உலகத்தின் சார்பாகவா, அல்லது கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாகவா?

சாத்தானுடைய உலகத்தின் சார்பாகவா, அல்லது கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாகவா?

அதிகாரம் 25

சாத்தானுடைய உலகத்தின் சார்பாகவா, அல்லது கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாகவா?

நீங்கள் கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருக்கிறீர்களா, அது வரும்படி விரும்புகிறீர்களா? நீங்கள் சாத்தானுக்கு எதிராக இருக்கிறீர்களா, அவனுடைய உலகம் முடிவடையும்படி விரும்புகிறீர்களா? இந்த இரண்டு கேள்விகளுக்கும், ஆம், என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அது போதுமா? செயல்கள் சொற்களைப் பார்க்கிலும் சத்தமாய்ப் பேசுகின்றனவென்பது ஒரு பழமொழி. நீங்கள் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்களென்றால், அதை உண்மையில் நிரூபிப்பது உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழும் முறையேயாகும்.—மத்தேயு 7:21-23; 15:7, 8.

2 உண்மை என்னவென்றால், நீங்கள் வாழும் முறையானது, இரண்டு எஜமான்களில் ஒருவருக்கே பிரியமாயிருக்கக்கூடும். ஒன்று நீங்கள் யெகோவா தேவனைச் சேவித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது பிசாசாகிய சாத்தானைச் சேவித்துக் கொண்டிருக்கிறீர்கள். பைபிளில் காணப்படுகிற ஒரு நியமம் இதைச் சரியாக உணர்ந்துகொள்ள நமக்கு உதவி செய்கிறது. அது சொல்வதாவது: “எதற்குக் கீழ்ப்படிவதற்கென்று உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, கீழ்ப்படிகிற அதற்கே அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” (ரோமர் 6:16, தி.மொ.) யாருக்குக் கீழ்ப்படிகிறீர்கள்? யாருடைய சித்தத்தைச் செய்கிறீர்கள்? உங்கள் பதில் என்னவாயிருந்தாலும், இந்த உலகத்தின் அநீதியான வழிகளை நீங்கள் பின்பற்றுகிறீர்களென்றால், உண்மையான கடவுளாகிய யெகோவாவை நீங்கள் சேவித்துக் கொண்டிருக்க முடியாது.

சாத்தானின் உலகம்—அது என்ன?

3 இயேசு சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று அழைத்தார். அப்போஸ்தலனாகிய யோவான், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,” என்று சொன்னான். (யோவான் 12:31; 1 யோவான் 5:19) இயேசு கடவுளிடம் ஜெபிக்கையில் தம்முடைய சீஷரைச் சாத்தானுடைய உலகத்தின் பாகமாகச் சேர்க்கவில்லை என்பதைக் கவனியுங்கள். அவர் சொன்னதாவது: “நான் அவர்களுக்காக [தம்முடைய சீஷர்களுக்காக] வேண்டிக் கொள்ளுகிறேன். நான் வேண்டிக் கொள்வது உலகத்துக்காகவல்ல, . . . நான் உலகத்துக்குரியவனல்லாதது போல அவர்களும் உலகத்துக்குரியவர்களல்ல.” (யோவான் 17:9, 16, தி.மொ.; 15:18, 19) உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தை விட்டு விலகியவர்களாய்த் தங்களை வைத்துக் கொள்ள வேண்டுமென்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

4 “இந்த உலகம்” என்று இயேசு சொன்னபோது அவர் எதைக் குறிப்பிட்டார்? பைபிளில் “இந்த உலகம்” என்ற பதமானது சில சமயங்களில் பொதுவான மனிதவர்க்கத்தை வெறுமென குறிப்பிடுகிறது. இந்த மனிதவர்க்க உலகத்துக்காகத் தம்முடைய உயிரை ஒரு மீட்கும் பொருளாகக் கொடுக்கும்படி, கடவுள், தம்முடைய குமாரனை அனுப்பினார். (யோவான் 3:16) என்றபோதிலும் சாத்தான், மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையரைக் கடவுளுக்கு எதிர்ப்பில் ஒழுங்குபடுத்தி அமைத்திருக்கிறான். ஆகவே சாத்தானின் உலகமானது, கடவுளுடைய காணக்கூடிய அமைப்பைச் சேராத அல்லது அதற்குப் புறம்பாக இருக்கிற இந்த ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட மனித சமுதாயமேயாகும். இந்த உலகத்துக்கே உண்மையாக கிறிஸ்தவர்கள் விலகியிருக்க வேண்டும்.—யாக்கோபு 1:27.

5 சாத்தானின் உலகம்—அவனுடைய ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட மனித சமுதாயம்—நெருங்க இணைக்கப்பட்ட பற்பல பாகங்களாலாகியது. ஒரு முக்கிய பாகமானது பொய் மதமாகும். பைபிளில் பொய் மதமானது, “மகா பாபிலோன்” என்ற பெயரைக் கொண்ட ஒரு “மகா வேசி”யாக, அல்லது விலைமகளாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. அவள் “பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபார”த்தை உடையவளாக இருக்கும் இந்த உண்மையால் காட்டப்பட்டிருக்கிறபடி, ஓர் உலகப் பேரரசு. (வெளிப்படுத்துதல் 17:1, 5, 18) ஆனால் மகா பாபிலோன் ஒரு மத உலகப் பேரரசு என்று எது நிரூபிக்கிறது?

6 “பூமியின் ராஜாக்கள்” அவளோடு “வேசித்தனம் பண்ணுவதாக”ச் சொல்லப்பட்டிருப்பதனால், மகா பாபிலோன் ஓர் அரசியல் உலகப் பேரரசாக இருக்க முடியாது. மேலும் பூமியின் பெரும் “வர்த்தகர்கள்” தூரத்தில் நின்று அவளுடைய அழிவின்பேரில் அழுது துக்கிப்பதனால், அவள் வியாபார உலகப் பேரரசும் அல்ல. (வெளிப்படுத்துதல் 17:2; 18:15) என்றபோதிலும், அவள் உண்மையில் ஒரு மதப் பேரரசு என்பதானது, அவளுடைய “மாந்திரியத்தால் எல்லா ஜாதிகளும் வஞ்சிக்கப்பட்”டார்கள் என்ற பைபிளின் இந்தக் கூற்றால் காட்டப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 18:23, தி.மொ.

7 மகா பாபிலோன் ஒரு மதப் பேரரசு என்பதானது, ஒரு “மூர்க்க மிருகத்தோடு” அதற்குள்ள உறவினாலும் நிரூபிக்கப்படுகிறது. பைபிளில் இப்படிப்பட்ட மிருகங்கள் அரசியல் அரசாங்கங்களைக் குறிக்கின்றன. (தானியேல் 8:20, 21) மகா பாபிலோன், “ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடைய . . . சிவப்பு நிறமுள்ள [மூர்க்க, NW] மிருகத்தின் மேல் . . . ஏறியிருப்”பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக இந்த “மூர்க்க மிருகத்”தின்மேல், அல்லது உலக அரசாங்கத்தின்மேல் செல்வாக்கைச் செலுத்த அவள் முயன்று வந்திருக்கிறாள். (வெளிப்படுத்துதல் 17:3) சரித்திரம் முழுவதிலும் மதம் அரசியலோடு கலந்து வந்திருப்பதும், அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை அடிக்கடி சொல்லி வந்திருப்பதும் உண்மையான காரியமாயிருக்கிறது. அவள் நிச்சயமாகவே “பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணி” வந்திருக்கிறாள்.—வெளிப்படுத்துதல் 17:18.

8 இந்த அரசியல் அரசாங்கங்கள் சாத்தானுடைய உலகத்தின் மற்றொரு முக்கிய பாகத்தை உண்டுபண்ணுகின்றன. நாம் ஏற்கெனவே கவனித்தப் பிரகாரம், பைபிளில் இவை மிருகங்களாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. (தானியேல் 7:1-8, 17, 23) மிருகத்தைப் போன்ற இந்த அரசாங்கங்கள் தங்கள் வல்லமையைச் சாத்தானிடமிருந்து பெறுகின்றனவென்பது, அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு எழுதிவைத்த ஒரு தரிசனத்தில் காட்டப்பட்டிருக்கிறது: “சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளுமிருந்தன, . . . வலுசர்ப்பம் தன் வல்லமையை . . . அதற்குக் கொடுத்தது.” (வெளிப்படுத்துதல் 13:1, 2, தி.மொ.; 12:9) இந்த ராஜ்யங்கள் அல்லது அரசாங்கங்கள், சாத்தானுடைய உலகத்தின் பாகமாக இருக்கின்றன என்பதற்கு மேலுமான நிரூபணமானது, சாத்தான் இந்த ராஜ்யங்களை இயேசுவுக்குக் கொடுக்க முன்வருவதன் மூலம் அவரைச் சோதித்த அந்தக் காரியமாகும். சாத்தான் இவற்றின் அதிபதியாக இருந்திராவிட்டால் அவன் அப்படிச் செய்திருக்க முடியாதே.—மத்தேயு 4:8, 9.

9 சாத்தானுடைய உலகத்தின் இன்னுமொரு முனைப்பான பாகமானது பேராசைக் கொண்ட ஒடுக்கும் வியாபார ஒழுங்குமுறையாகும். இது வெளிப்படுத்துதல் 18:11-ல் பெரும் “வர்த்தகர்கள்” என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வியாபார ஒழுங்குமுறையானது, தான் உற்பத்தி செய்யும் பொருட்கள், மக்களுக்குத் தேவைப்படுகிறதில்லை என்றபோதிலும், அவை இல்லாதிருப்பதே அவர்களுக்கு மேம்பட்டதாக இருக்கலாமென்றாலும் அவற்றை அவர்கள் வாங்கும்படி அவர்களில் ஒரு தன்னல ஆசையை ஊக்குவித்து வளர்க்கிறது. அதே சமயத்தில் இந்தப் பேராசையுள்ள வியாபார ஒழுங்குமுறை உணவைக் களஞ்சியங்களில் சேகரித்துப் பதுக்கி வைத்துக்கொண்டு, லட்சக்கணக்கான மக்கள் அந்த உணவுக்குப் பணம் கொடுக்க முடியாதவர்களாக இருப்பதனால், பட்டினி கிடந்து சாகும்படி அனுமதிக்கிறது. மறுபட்சத்தில், மனித குடும்பம் முழுவதையும் அழிக்கக்கூடிய இராணுவப் போராயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இலாபத்துக்காக விற்கப்படுகின்றன. இவ்வாறாக சாத்தானின் வியாபார ஒழுங்குமுறை, பொய் மதத்துடனும் அரசியல் அரசாங்கங்களுடனுங்கூட, தன்னலத்தையும், பெருங் குற்றத்தையும், பயங்கர போர்களையும் முன்னேற்றுவிக்கிறது.

10 பிசாசாகிய சாத்தானுடைய ஆட்சிக்குட்பட்டுள்ள இந்த ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட மனித சமுதாயம் நிச்சயமாகவே பொல்லாததாயும் சீரழிந்ததாயும் இருக்கிறது. கடவுளுடைய நீதியுள்ள சட்டங்களை எதிர்ப்பதாய் அது இருக்கிறது. மேலும் எல்லா வகைகளான ஒழுக்கக்கேட்டுப் பழக்கவழக்கச் செயல்களால் அது நிறைந்திருக்கிறது. ஆகவே சாத்தானுடைய உலகத்தின் மற்றொரு அம்சமானது அதன் கட்டுப்பாடற்ற வாழ்க்கை, அதன் ஒழுக்கக்கேடான வழிகள் என்று சொல்லப்படலாம். இந்தக் காரணத்தினிமித்தமாகவே அப்போஸ்தலராகிய பவுலும் பேதுருவும் உலக ஜனங்களுடைய கெட்ட பழக்கவழக்கச் செயல்களைத் தவிர்க்கும்படி கிறிஸ்தவர்களை எச்சரித்தார்கள்.—எபேசியர் 2:1-3; 4:17-19; 1 பேதுரு 4:3, 4.

11 அப்போஸ்தலனாகிய யோவானுங்கூட, இந்த உலகத்தின் தவறான ஆசைகளுக்கும் ஒழுக்கக்கேடான வழிகளுக்கும் எதிராகக் கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாயிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கான தேவையை அறிவுறுத்தினான். அவன் எழுதினதாவது: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” (1 யோவான் 2:15, 16) “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குத் தன்னைப் பகைஞனாக்குகிறான்,” என்று சீஷனாகிய யாக்கோபு சொன்னான்.—யாக்கோபு 4:4.

இவ்வுலகத்தின் பாகமாயிருப்பதைத் தவிர்ப்பதெப்படி?

12 சாத்தானுடைய உலகம் இருந்துகொண்டிருக்கும் வரையில் கிறிஸ்தவர்கள் அதில் வாழவேண்டும். இயேசு தம்முடைய தகப்பனிடம்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல்,” என்று ஜெபிக்கையில் இதைத் தெரிவித்தார். என்றாலும் அதன் பின்பு தம்மைப் பின்பற்றுவோரைக் குறித்து: “அவர்கள் இந்த உலகத்தின் பாகமானவர்களல்லர்,” என்று இயேசு மேலுமாகத் தொடர்ந்து கூறினார். (யோவான் 17:15, 16) சாத்தானுடைய உலகத்தில் இருந்துகொண்டு அதே சமயத்தில் அதன் பாகமாக இராமல் இருப்பது எப்படி?

13 நீங்கள், இன்றைய ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட மனித சமுதாயத்தை உண்டுபண்ணுகிற மக்களுக்குள் வாழ்கிறீர்கள். இந்த மக்களுக்குள் வேசித்தனக்காரர், பேராசைக் கொண்ட ஆட்கள், பொல்லாதக் காரியங்களைச் செய்கிற இன்னும் மற்றவர்கள் ஆகியோர் அடங்கியிருக்கின்றனர். நீங்கள் ஒருவேளை அவர்களோடு வேலை செய்யலாம், அவர்களோடு பள்ளிக்குச் செல்லக்கூடும், அவர்களோடு உணவு உண்ணக்கூடும், இன்னும் மற்ற நடவடிக்கைகளில் அவர்களோடு பங்குகொள்ளக்கூடும். (1 கொரிந்தியர் 5:9, 10) கடவுள் நேசிக்கிறதுபோல, நீங்கள் அவர்களை நேசிக்க வேண்டும். (யோவான் 3:16) ஆனால் உண்மையான கிறிஸ்தவன் அந்த மக்கள் செய்கிற பொல்லாதக் காரியங்களை நேசிக்கிறதில்லை. அவர்களுடைய மனப்பான்மைகளையோ செயல்களையோ, வாழ்க்கைக் குறிக்கோள்களையோ தான் மேற்கொள்ளுகிறதில்லை. அவர்களுடைய சீர்கெட்ட மதத்திலும் அரசியலிலும் அவன் எவ்வித பங்கும் கொள்ளுகிறதில்லை. மேலும் தன் வாழ்க்கையை நடத்த வியாபார உலகத்தில் அநேகமாய் அவன் வேலை செய்ய வேண்டியதாயிருக்கையில், நேர்மையற்ற அலுவல் பழக்கவழக்கச் செயல்களில் அவன் ஈடுபடுகிறதில்லை; பொருள் சம்பந்தமான காரியங்களை அடைவதை வாழ்க்கையில் தன்னுடைய முக்கிய குறிக்கோளாகக் கொள்வதுமில்லை. அவன் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருப்பதனால் சாத்தானுடைய உலகத்தின் சார்பாக வாழ்கிறவர்களின் கெட்ட சகவாசத்தைத் தவிர்க்கிறான். (1 கொரிந்தியர் 15:33, தி.மொ. சங்கீதம் 1:1; 26:3-6, 9, 10) இதன் பலனாக, அவன் சாத்தானுடைய உலகத்தில் இருக்கிறான், என்றாலும் அதன் பாகமாக இல்லை.

14 உங்களைப் பற்றியதென்ன? நீங்கள் சாத்தானுடைய உலகத்தின் பாகமாயிருக்க விரும்புகிறீர்களா? அல்லது கடவுளுடைய புதிய ஒழுங்கின் சார்பாக இருக்கிறீர்களா? நீங்கள் கடவுளுடைய புதிய ஒழுங்கின் சார்பாக இருக்கிறீர்களென்றால், இவ்வுலகத்தின் மதம் உட்பட, இவ்வுலகத்திலிருந்து விலகியவர்களாய் இருப்பீர்கள். “என் ஜனங்களே, அவளை விட்டு [மகா பாபிலோனை விட்டு] வெளியே வாருங்கள்,” என்ற இந்தக் கட்டளைக்குச் செவிகொடுப்பீர்கள். (வெளிப்படுத்துதல் 18:4) என்றபோதிலும், இந்தப் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனை விட்டு வெளியே வருவதானது, வெறுமென பொய் மத அமைப்புடன் தொடர்புகளைத் துண்டித்துக்கொள்வதைப் பார்க்கிலும் அதிகம் உட்படுகிறது. இந்த உலகத்தின் மத கொண்டாட்டங்களுடன் எதுவும் வைத்துக்கொள்ளாதிருப்பதையுங்கூட குறிக்கிறது.—2 கொரிந்தியர் 6:14-18.

15 கிறிஸ்மஸ் ஒரு பிரசித்திப்பெற்ற மத விடுமுறை நாளாக இருக்கிறது. ஆனால் அது முதல் கிறிஸ்தவர்களால் தாமேயும் கைக்கொள்ளப்படாத ஒரு கொண்டாட்டமென்று சரித்திரம் காட்டுகிறது. இயேசு, தம்முடைய பிறப்பை அல்ல, தம்முடைய மரணத்தின் நினைவுகூருதலையே கைக்கொள்ள வேண்டுமென்று தம்மைப் பின்பற்றினவர்களுக்குச் சொன்னார். (1 கொரிந்தியர் 11:24-26) உண்மை என்னவென்றால், டிசம்பர் 25 இயேசு பிறந்த தேதி அல்ல. அவர் பிறந்த சமயத்தில் மேய்ப்பர்கள் இரவில் வயல்வெளிகளில் இருந்தார்கள் என்று பைபிள் காட்டுவதால், இது அந்தத் தேதியாக இருந்திருக்க முடியாது. குளிரும் மழைப்பருவமுமான அந்தக் குளிர் காலத்தில் அவர்கள் அங்கே இருந்திருக்க முடியாது. (லூக்கா 2:8-12) உண்மையில், இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கான தேதியாக டிசம்பர் 25 தெரிந்துகொள்ளப்பட்டதன் காரணத்தை தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா விவரிக்கிறது: “ரோமின் மக்கள் அதை ஏற்கெனவே சனியின் பண்டிகையாகக் கைக்கொண்டு சூரியனின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.”

16 ஈஸ்டர் மற்றொரு பிரசித்திப்பெற்ற மத விடுமுறை நாளாகும். இலத்தீன்-அமெரிக்க நாடுகள் சிலவற்றில் பரிசுத்த வாரம் என்பது இதற்கொப்பானதே. ஆனால் ஈஸ்டருங்கூட பூர்வ கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படவில்லை. இதுவுங்கூட அதன் தொடக்கங்களைக் கிறிஸ்தவமல்லாத கொண்டாட்டங்களில் கொண்டிருந்தது. தி என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு சொல்லுகிறது: “ஈஸ்டர் பண்டிகை கொண்டாடினதைப் பற்றிய எந்த அறிகுறியும் புதிய ஏற்பாட்டில் இல்லை.” என்றபோதிலும் கிறிஸ்மஸூம் ஈஸ்டரும் கிறிஸ்தவ கொண்டாட்டங்கள் அல்ல, உண்மையில், அவற்றின் தொடக்கங்களைப் பொய்க் கடவுட்களின் வணக்கத்தாரிடமிருந்து கொண்டிருக்கின்றனவென்பது கவலைப்படுவதற்கேதுவானதாய் இருக்கிறதா? உண்மையையும் பொய்யையும் ஒன்றாய்க் கலப்பதற்கு எதிராக அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்து, “புளிப்புள்ள கொஞ்ச மாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்,” என்று சொன்னான். (கலாத்தியர் 5:9) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஆனால் கிறிஸ்தவர்களுக்கு இராதபடி கடவுளால் நீக்கப்பட்டிருந்த நாட்களை அவர்கள் கைக்கொள்வது தவறு என்று அவன் பூர்வ கிறிஸ்தவர்கள் சிலருக்குச் சொன்னான். (கலாத்தியர் 4:10, 11) அப்படியானால், கைக்கொள்ளும்படி கடவுள் ஒருபோதும் சொல்லாதவையும், பொய் மதத்திலிருந்து வந்தவையுமான கொண்டாட்ட விடுமுறை நாட்களிலிருந்து விலகியிருப்பது இன்று உண்மையான கிறிஸ்தவர்களுக்கு ஆ, எவ்வளவு மிக முக்கியமானதாய் இருக்கிறது!

17 இவ்வுலகத்தின் மற்ற விடுமுறை நாட்கள் பிரசித்திப்பெற்ற மனிதரைக் கனம் பண்ணுகின்றன. இன்னும் மற்றவை தேசங்களை அல்லது உலகப் பிரகாரமான அமைப்புகளைக் கனப்படுத்தி உயர்த்துகின்றன. ஆனால், மனிதருக்கு வணக்கத்துக்குரிய கனத்தைச் செலுத்துவதற்கு, அல்லது கடவுள் மாத்திரமே செய்யக்கூடியதை மனித அமைப்புகள் நிறைவேற்றும்படி அவற்றில் நம்பிக்கை வைப்பதற்கு எதிராக பைபிள் எச்சரிக்கிறது. (அப்போஸ்தலர் 10:25, 26; 12:21-23; வெளிப்படுத்துதல் 19:10; எரேமியா 17:5-7) ஆகவே ஒரு மனிதனை அல்லது ஒரு மனித அமைப்பை உயர்த்தும் போக்குடைய விடுமுறை நாட்கள் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக இல்லை, உண்மையான கிறிஸ்தவர்கள் அவற்றில் பங்குகொள்ள மாட்டார்கள்.—ரோமர் 12:2.

18 ஜனங்கள் கனம் பண்ணும்படி அல்லது வணங்கும்படி சொல்லப்பட்டிருக்கிற பல பொருட்கள் மனிதரால் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில உலோகத்தால் அல்லதுமரத்தால் செய்யப்பட்டிருக்கின்றன. மற்றவை துணியால் செய்யப்பட்டு அதன் மீது வானத்திலோ பூமியிலோ இருக்கிற ஏதோவொன்றின் உருவப் படம் தைத்திருக்கலாம் அல்லது வர்ணம் தீட்டியிருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு பொருளுக்கு எல்லோரும் வணக்கத்துக்குரிய கனத்தைக் கொடுக்க வேண்டுமென்று கட்டளையிடும் ஒரு சட்டத்தை ஒரு தேசம் கொண்டுவரலாம். ஆனால் கடவுளுடைய சட்டமோ தம்முடைய ஊழியர்கள் அப்படிச் செய்யக்கூடாதென்று சொல்லுகிறது. (யாத்திராகமம் 20:4, 5; மத்தேயு 4:10) இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்ப நிலையில் கடவுளுடைய ஜனங்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

19 பூர்வ பாபிலோனில் அரசனாகிய நேபுகாத்நேச்சார் ஒரு மிகப் பெரிய பொற் சிலையை உண்டுபண்ணி, எல்லோரும் அதற்குமுன் பணியவேண்டுமென்று கட்டளையிட்டான். ‘எவனாகிலும் பணியாமற்போனால் அவன் எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவான்,’ என்று அவன் சொன்னான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களாகிய மூன்று இளைஞரான எபிரெயர், அரசன் கட்டளையிட்டதைச் செய்ய மறுத்துவிட்டனர். ஏன்? ஏனென்றால் அது வணக்கத்தை உட்படுத்தியது, அவர்களுடைய வணக்கம் யெகோவா தேவனுக்கு மாத்திரமே உரியதாயிருந்தது. அவர்கள் செய்ததைக் கடவுள் அங்கீகரித்து, அந்த அரசனின் கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றினார். உண்மையில், யெகோவாவின் இந்த ஊழியர் அரசாங்கத்துக்கு எவ்வித அபாயமுமில்லை என்பதை நேபுகாத்நேச்சார் கண்டதால், அவர்களுடைய வணக்க உரிமையைப் பாதுகாக்க ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தான். (தானியேல் 3:1-30) இந்த வாலிபரின் உண்மைத் தவறாமையை நீங்கள் போற்றுகிறீர்களல்லவா? நீங்கள் உண்மையில் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருக்கிறீர்களென்பதைக் கடவுளுடைய எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படிவதன் மூலம் காட்டுவீர்களா?—அப்போஸ்தலர் 5:29.

20 நாம் யெகோவாவைச் சேவிப்பதைச் சாத்தான் நிச்சயமாகவே விரும்புகிறதில்லை. நாம் அவனைச் சேவிக்கும்படியே அவன் விரும்புகிறான். நாம் யாரைச் சேவிக்கிறோமோ அவருடைய அடிமைகள், அல்லது ஊழியராகிறோமென்று அவன் அறிந்திருக்கிறடிபயால், தான் விரும்புவதை நாம் செய்யும்படி நம்மைச் செய்விக்க அவன் முயலுகிறான். (ரோமர் 6:16) டெலிவிஷன், திரைப்படங்கள், சில நடன வகைகள், ஒழுக்கக்கேடான புத்தகங்கள் முதலியவை உட்பட பற்பல வழி வகைகளின் மூலம், சாத்தான், மக்கள் விபசாரத்தில் ஈடுபடும்படியும், மணமாகதவர்கள் பாலுறவுகள் கொள்ளும்படியும் தூண்டி ஊக்குவிக்கிறான். இப்படிப்பட்ட நடத்தை ஏற்கத்தக்கதாகவும், சரியானதாகவுங்கூட தோன்றும்படி செய்யப்படுகிறது. என்றபோதிலும், இது கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமானது. (எபிரெயர் 13:4; எபேசியர் 5:3-5) இப்படிப்பட்ட நடத்தையில் ஈடுபடுகிற ஓர் ஆள், தான் சாத்தானுடைய உலகத்தின் சார்பாக இருக்கிறானென்று உண்மையில் காட்டுகிறான்.

21 சாத்தானுடைய உலகம் மக்கள் சுவைக்கேற்பச் செய்திருக்கிறவையும், ஆனால் கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராக இருப்பவையுமான மற்றப் பழக்க வழக்கச் செயல்களும் இருக்கின்றன. வெறியச் சத்துள்ள மதுபானங்களைக் குடித்து வெறித்திருப்பது அவற்றில்ஒன்று. (1 கொரிந்தியர் 6;9, 10) மற்றொன்று, மரிஹூவானா ஹெரோய்ன் போன்ற போதைப் பொருட்களை இன்பத்துக்காகப் பயன்படுத்துவது. இதில் புகையிலையைப் பயன்படுத்துவதுங்கூட உட்படுகிறது. இவை உடலுக்குத் தீங்கு செய்பவை, மேலும் அசுத்தப்படுத்துபவை. இவற்றின் உபயோகமானது, “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்”கொள்ள வேண்டுமென்று கூறும் கடவுளுடைய கட்டளையைத் தெளிவாகவே மீறுவதாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 7:1) புகைபிடித்தலானது, அந்தப் புகையைச் சுவாசிக்க வேண்டியதாயிருக்கிற அருகிலிருப்பவர்களின் சுகத்தையும் கெடுக்கிறது, ஆகவே வழக்கமாய்ப் புகைபிடிக்கிறவன், கிறிஸ்தவன் தன் அயலானை நேசிக்க வேண்டுமென்ற கடவுளுடைய சட்டத்தை மீறுகிறான்.—மத்தேயு 22:39.

22 இரத்தத்தைச் சாப்பிடுவது இந்த உலகத்தின் பற்பல பாகங்களில் இருந்துவரும் மற்றொரு பொதுவான பழக்கமாயிருக்கிறது. இவ்வாறாக, சரியானபடி, இரத்தம் நீக்கப்படாத மிருகங்கள் சாப்பிடப்படுகின்றன அல்லது அந்த இரத்தம் வடித்தெடுக்கப்பட்டு உணவாக சாப்பாட்டில் ஒருவேளை பயன்படுத்தப்படலாம். கடவுளுடைய வார்த்தையோவெனில் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாதென்று தடையுத்தரவிடுகிறது. (ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:10) அப்படியானால் இரத்தமேற்றுதலை ஏற்பதைப் பற்றியதென்ன? இரத்தமேற்றுதலை ஏற்பது உண்மையில் “சாப்பிடுவது” அல்ல என்று சிலர் விவாதிக்கலாம். ஆனால் ஒரு நோயாளி தன் வாயின் மூலமாய் உணவை உட்கொள்ளக் கூடாதவனாக இருக்கையில், இரத்தமேற்றுதலைக் கொடுக்கும் அதே முறையின் மூலமாய் அவனுக்கு உணவை உட்செலுத்தும்படி வைத்தியர் அடிக்கடி கூறுவது உண்மையல்லவா? “இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி” பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 15:20, 29) இதன் பொருளென்ன? சாராயத்துக்கு விலகியிரு என்று ஒரு வைத்தியர் உங்களுக்குச் சொல்வாரென்றால், நீங்கள் அதை உங்கள் வாயின் மூலமாய் உட்கொள்ளக்கூடாது, ஆனால் அதை நேரடியாக உங்கள் இரத்தக் குழாய்க்குள் ஊசியின் மூலம் ஏற்றிக்கொள்ளலாமென்று பொருள்படுமா? நிச்சயமாகவே இல்லை! அப்படியே, “இரத்தத்திற்கு விலகியிரு”ப்பதானது, அதை உங்கள் உடலுக்குள் எவ்வகையிலும் ஏற்கவே கூடாதென்று பொருள்படுகிறது.

23 நீங்கள் அவருடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருக்கிறீர்கள், இந்த உலகத்தின் பாகமாக இல்லை என்பதை யெகோவா தேவனுக்குக் காட்ட வேண்டும். இது ஒரு தீர்மானத்தைக் கேட்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய இந்தத் தீர்மானமானது, யெகோவாவைச் சேவித்து, அவருடைய சித்தத்தைச் செய்வதேயாகும். பூர்வ காலங்களில் இஸ்ரவேலரில் சிலர் இருந்ததைப்போல், நீங்கள் தீர்மானமற்றவர்களாய் இருக்க முடியாது. (1 இராஜாக்கள் 18:21) நீங்கள் யெகோவாவைச் சேவித்துக் கொண்டில்லை என்றால் நீங்கள் சாத்தானைச் சேவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருப்பதாய் நீங்கள் ஒருவேளை சொல்லலாம், ஆனால் உங்கள் நடத்தை என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது? கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருப்பதானது, கடவுள் கண்டனம் செய்கிறவையும் அவருடைய நீதியுள்ள புதிய ஒழுங்குமுறையில் இருக்கப் போகாதவையுமான எல்லா பழக்க வழக்கச் செயல்களையும் தவிர்ப்பதை உட்படுத்துகிறது.

[கேள்விகள்]

1. நீங்கள் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருக்கிறீர்களென்பதை எது உண்மையில் நிரூபிக்கிறது?

2. (எ) நாம் சேவிக்கக்கூடிய இரண்டு எஜமான்கள் யாவர்? (பி) நாம் யாருடைய அடிமை அல்லது ஊழியராக இருக்கிறோமென்பதை எது காட்டுகிறது?

3. (எ) இந்த உலகத்தின் அதிபதி யார் என்று பைபிள் காட்டுகிறது? (பி) ஜெபத்தில், இயேசு இந்த உலகத்துக்கும் தம்முடைய சீஷருக்குமுள்ள வேறுபாட்டை எப்படிக் காட்டினார்?

4. (எ) யோவான் 3:16-ல் “இந்த உலகம்” என்ற இந்தப் பதம் யாரைக் குறிப்பிடுகிறது? (பி) கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் விட்டுவிலக வேண்டிய “இந்த உலகம்” எது?

5. இந்த உலகத்தின் ஒரு முக்கிய பாகம் எது, பைபிளில் இது எப்படிக் குறிக்கப்பட்டிருக்கிறது?

6, 7. (எ) மகா பாபிலோன் ஒரு மதப் பேரரசு என்று எது நிரூபிக்கிறது? (பி) பொய் மதம், அரசியல் அரசாங்கங்களோடு என்ன உறவைக் கொண்டிருந்திருக்கிறது?

8. சாத்தானுடைய உலகத்தின் மற்றொரு முக்கிய பாகம் எது, இவை பைபிளில் எப்படிக் குறிப்பிடப்படுகின்றன?

9. (எ) வெளிப்படுத்துதல் 18:11-ல் சாத்தானுடைய உலகத்தின் மற்றொரு பாகம் எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது? (பி) சாத்தான் அதைத் தூண்டுவிப்பவனாக அதன் பின்னால் இருக்கிறான் என்பதை நிரூபிப்பதாய், அது என்ன செய்கிறது, எவற்றை முன்னேற்றுவிக்கிறது?

10, 11. (எ) சாத்தானுடைய உலகத்தின் மற்றொரு அம்சம் என்ன? (பி) இந்த அம்சத்தில் சிக்கிக்கொள்ளாதபடி என்ன எச்சரிக்கைகளைப் பைபிள் கொடுக்கிறது?

12, 13. (எ) கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் இருக்க வேண்டுமென்பதை இயேசு எப்படிக் காட்டினார்? (பி) இந்த உலகத்தில் இருந்துகொண்டு அதே சமயத்தில் அதன் பாகமாக இராமலிருப்பது எப்படி?

14. நீங்கள் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாக இருக்கிறீர்களென்றால், பைபிளின் எந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவீர்கள்?

15. (எ) இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு மாறாக எதை ஆசரிக்கும்படி கிறிஸ்தவர்கள் கட்டளையிடப்பட்டிருக்கின்றனர்? (பி) இயேசு அந்தக் குளிர் காலத்தில் பிறந்திருக்க முடியாதென்று என்ன காட்டுகிறது? (சி) இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாளாக டிசம்பர் 25 ஏன் தெரிந்தெடுக்கப்பட்டது?

16. (எ) பிரசித்திப் பெற்ற வேறு எந்த மத விடுமுறை கிறிஸ்தவமல்லாதத் தொடக்கங்களை உடையதாயிருக்கிறது? (பி) என்ன நல்ல காரணங்களினிமித்தமாக உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸையும் ஈஸ்டரையும் கொண்டாடுகிறதில்லை?

17. (எ) பிரசித்திப் பெற்ற மனிதரை அல்லது தேசங்களைக் கனம் பண்ணும் விடுமுறை நாட்களில் என்ன தவறு இருக்கிறது? (பி) கிறிஸ்தவர்கள் என்ன போக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பைபிள் எப்படிக் காட்டுகிறது?

18. (எ) கனம் பண்ணுவதற்கு அல்லது வணங்குவதற்கு மனிதர் என்ன பொருட்களைச் செய்திருக்கின்றனர்? (பி) ஒரு பொருளுக்கு வணக்கத்துக்குரிய கனத்தைச் செலுத்துவதைப் பற்றி கடவுளுடைய சட்டம் என்ன சொல்லுகிறது?

19. (எ) பாபிலோனின் அரசன் என்ன செய்யும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டான்? (பி) கிறிஸ்தவர்கள் யாருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவது நல்லது?

20. பால் சம்பந்த நடத்தையின் பேரில் கடவுளுடைய சட்டங்களை மீறும்படி நம்மைச் செய்விக்க முயலுபவனாய்ச் சாத்தான் பயன்படுத்தும் பற்பல வழிவகைகள் யாவை?

21. ஒருவன் அவற்றில் ஈடுபட்டால், அவன் சாத்தானுடைய உலகத்தின் சார்பாக இருக்கிறான் என்று காட்டும் மற்றப் பழக்கவழக்க நடத்தைகள் யாவை?

22. (எ) இரத்தத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது? (பி) இரத்தமேற்றுதலை ஏற்பது ஏன் ‘இரத்தத்தைச் சாப்பிடுவதிலிருந்து’ உண்மையில் வேறுபட்டதாயில்லை? (சி) ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்பதானது அதை உங்கள் உடலுக்குள் எவ்வகையிலும் ஏற்கவே கூடாதென்று பொருள்படுகிறதென எது காட்டுகிறது?

23. (எ) நீங்கள் என்ன தீர்மானத்தைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்? (பி) நீங்கள் செய்திருக்கிற தீர்மானத்தை எது வெளிப்படுத்திக்காட்டும்?

[பக்கம் 209-ன் படம்]

இயேசு ஜெபிக்காததும் அவருடைய சீஷர்கள் பாகமாயிராததுமான அந்த உலகம் எது?

[பக்கம் 211-ன் படங்கள்]

பைபிளில், பொய் மதம், குடிபோதையிலிருக்கிற ஒரு வேசியாகவும், அவள் சவாரி செய்கிற உலக அரசாங்கம் ஒரு மூர்க்க மிருகமாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

கட்டுப்பாடற்ற வாழ்க்கை சாத்தானுடைய உலகத்தின் முக்கிய அம்சம். பேராசைக் கொண்ட வியாபார ஒழுங்குமுறையுங்கூட அதன் ஒரு பிரதான பாகம்

[பக்கம் 213-ன் படம்]

இயேசு பிறந்த சமயம் மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கள் மந்தைகளுடன் இரவில் தங்கியிருந்ததனால், அவர் டிசம்பர் 25-ல் பிறந்திருக்க முடியாது

[பக்கம் 214-ன் படம்]

கடவுளுடைய ஊழியர்கள் ஓர் அரசனால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு சிலையை வணங்க மறுத்துவிட்டனர். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?