Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?

நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?

அதிகாரம் 7

நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?

பூமியில் வாழ்க்கையின் அர்த்தமென்னவென்பதைப் பற்றி அறிய மக்கள் வெகு காலமாக ஆவல் கொண்டிருக்கின்றனர். நட்சத்திரங்கள் நிறைந்த மிக விரிவான வானத்தை அவர்கள் நோக்கியிருந்திருக்கின்றனர். பல நிறங்களோடு கூடிய சூரிய மறைவையும் நாட்டுப் புறத்தின் இயற்கை அழகையும் அவர்கள் கண்டு மனம் மகிழ்ந்திருக்கின்றனர். இந்த எல்லாக் காரியங்களுக்கும், ஏதோ மிக மேம்பட்ட நோக்கம் இருக்க வேண்டும் என்று யோசனையுள்ள ஆட்கள் பகுந்தறிந்து முடிவுக்கு வந்திருக்கின்றனர். என்றாலும் தாங்கள் எங்கே பொருந்துகிறார்கள் என்று அடிக்கடி வியந்து தங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றனர்.—சங்கீதம் 8:3, 4.

2 வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் பெரும்பான்மையான மக்கள் பின்வருமாறு கேட்கின்றனர்: நாம் வெறுமென ஒரு குறுகிய காலம் வாழ்ந்து, வாழ்க்கையிலிருந்து அடையக் கூடியதை அடைந்து, பின்பு மரித்துப் போக வேண்டியதுதானா? நாம் உண்மையில், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? பிறப்பு, வாழ்க்கை, இறப்பு ஆகிய இந்தச் சுருக்கமான கால வட்டத்தைத் தவிர நாம் எதிர்பார்க்கக்கூடிய அதிகமான ஏதாவது இருக்கிறதா? (யோபு 14:1, 2) நாம் எப்படி இங்கே வந்தோம்? என்ற இந்தக் கேள்விக்குப் பதில், இந்தக் காரியத்தை விளங்கிக்கொள்ள நமக்கு மிகவும் உதவி செய்யும்.

பரிணாமமா அல்லது படைப்பா?

3 நாம் காண்கிற ஒவ்வொன்றும் வெறுமென தானாகவே நேரிட்டதென்று, அது தற்செயலாக, அல்லது குருட்டுத்தனமாய் நேரிட்டு வந்ததென்று சில இடங்களில் பொதுவாய்க் கற்பிக்கப்படுகிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக உயிர் தற்செயலாகத் தோன்றி ஒன்று வேறொன்றாக மாறி வளர்ச்சியுற்றது, அதாவது கீழ்த்தர உயிரினங்களிலிருந்து கடைசியாக மனித இனம் வரும் வரையில் உயிரினம் படிப்படியாக மாறி வளர்ந்ததென்று சொல்லப்படுகிறது. பூமியின் பல பாகங்களில் இந்தப் பரிணாமக் கோட்பாடு உண்மை என்பதாகக் கற்பிக்கப்படுகிறது. ஆனால் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த வாலில்லாக் குரங்கைப் போன்ற ஒரு மிருகத்திலிருந்து நாம் வந்தோம் என்பது உண்மைதானா? இந்த மகா சர்வலோகம் வெறும் தற்செயலாக தானே தோன்றிவிட்டதா?

4 “ஆதியிலே தேவன் வானத்தையும் [வானங்களையும், NW] பூமியையும் சிருஷ்டித்தார்,” என்று பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 1:1) கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடன் இந்த வானங்களும், நம்முடைய பூமியும் ஒரு தொடக்கத்தை உடையனவாக இருந்தனவென்பது விஞ்ஞானத்தின் உண்மைகளோடு ஒத்திருக்கின்றன. அவை படைக்கப்பட்டன. நட்சத்திரங்களின் மற்றும் கிரகங்களின் இயக்கங்கள் அவ்வளவு நிலையான ஒழுங்குடையவையாக இருப்பதால், அவை இன்ன இடத்திலிருக்குமென்பது பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே, முற்றிலும் திருத்தமாய்த் தீர்மானிக்கப்படக்கூடும். இந்த நட்சத்திரங்களும் கிரகங்களும் கணக்கியலின் விதிகளின்படியும் நியமங்களின்படியும் இப்பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வரும் கணக்கியல் பேராசிரியராகிய பி. டிராக், சயின்டிபிக் அமெரிக்கன் என்ற பத்திரிகையில் பின்வருமாறு கூறினார்: “கடவுள் மிக உயர்ந்த ஒழுங்குக்குரிய ஒரு கணித நிபுணர் என்று சொல்வதன்மூலம் ஒருவன் ஒருவேளை இந்த நிலைமையை விவரிக்கக்கூடும். இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குவதில் அவர் வெகு உயர்தரமான கணக்கியலைப் பயன்படுத்தினார்.”

5 பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “யெகோவாவே கடவுளென்று அறிந்து கொள்ளுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்.” (சங்கீதம் 100:3, தி.மொ.) நம்முடைய மனித உடல் அப்பேர்ப்பட்ட அதிசயமான திட்ட அமைப்பைக் காட்டுவதால், பைபிள் எழுத்தாளன் ஒருவன் கடவுளிடம் பின்வருமாறு சொல்லும்படி தூண்டுவிக்கப்பட்டான்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன். . . . நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு . . . உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை . . . என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; . . . அவைகள் அனைத்தும் . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” (சங்கீதம் 139:14-16) ஒரு குழந்தை அதன் தாய்க்குள் அதிசயமான முறையில் வளர்ந்து உருவாகிறது. நியூஸ்வீக் பத்திரிகை இதைக் குறித்துப் பின்வருமாறு சொன்னது: “இது, வெகு தெளிவாக, ஓர் அற்புதமே.” பின்னும் அது: “கருக்கொள்ளும் அந்தப் பெரும் விளைவுகளை உண்டாக்கவல்ல நேரத்தை நுட்பமாய்க் குறிப்பிட எந்தக் கலை நுணுக்கத்திறனாலும் முடியாது. அப்பொழுது ஒரு மனித கருவின் உள்ளுறுப்புகளையும் பத்தாயிரக்கணக்கான நரம்பு வலைப் பின்னல் அமைப்புகளையும் உருவாக்க எந்த அதிசயமான சக்திகள் பொறுப்பேற்றுக் கொள்கின்றனவென்பதை எந்த விஞ்ஞானியும் சொல்ல முடியாது.”

6 நம்முடைய மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றியும், அதோடுகூட அதிசயமான கட்டமைப்பையும் திட்டமைப்பையும் கொண்ட நம்முடைய சொந்த உடலைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் காரியங்கள் வெறுமென தற்செயலாக ஏற்படவில்லை அல்லது தாங்களாக வந்துவிடவில்லை என்று நேர்மையான பகுத்தறிவுக்குரிய யோசனை நமக்குச் சொல்ல வேண்டும். அவற்றிற்கு ஒரு திட்டமிடுபவர், ஒரு சிருஷ்டிகர் இருக்க வேண்டியதாய் இருந்தது. நம்மைச் சுற்றி நாம் காணும் மற்றக் காரியங்களைக் கவனியுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் இருக்கையில் உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: என்னுடைய எழுதுமேசை, விளக்கு, படுக்கை, நாற்காலி, மேசை, சுவர்கள், அல்லது இந்த வீடுதானேயும் தற்செயலாய்த் தாங்களாகத் தோன்றினவா? அல்லது அவற்றிற்கு உண்டாக்குபவன் ஒருவன் தேவைப்பட்டானா? நிச்சயமாகவே அறிவுள்ள ஆட்கள் அவற்றை உண்டாக்க வேண்டியவர்களாக இருந்தார்கள்! அப்படியானால், மிக மிக அதிக சிக்கலான நம்முடைய பிரபஞ்சத்திற்கும் நமக்கும் சிருஷ்டிகர் ஒருவர் தேவைப்படவில்லை என்று எவ்வகையில் வாதாடக்கூடும்? மேலும் கடவுள் நம்மை இங்கே வைத்தாரென்றால், அப்படிச் செய்வதற்கு அவருக்கு நிச்சயமாகவே ஒரு காரணம் இருந்தது.

7 அந்த முதல் மனிதனையும் மனுஷியையும் குறித்து இயேசு கிறிஸ்துதாமே பின்வருமாறு கூறினார்: “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். . . . இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னார்.” (மத்தேயு 19:4, 5) இங்கே இயேசு ஆதாம் ஏவாளின் படைப்பைப் பற்றிய விவரமாகிய ஆதியாகமம் 1:27-லிருந்தும் 2:24-லிருந்தும் மேற்கோள் எடுத்துக் கூறினார். இவ்வாறாக, அவர் இந்தப் பைபிள் விவரம் சத்தியமாயிருப்பதாகக் குறிப்பிட்டார். (யோவான் 17:17) மேலும் ஏனோக்கை “ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையானவன்” என்றும் பைபிள் அழைக்கிறது. (யூதா 14) ஆதாம் மெய்யான ஆளாக இருந்திராவிட்டால், பைபிள் அவனை இவ்வித திட்டவட்டமான முறையில் அடையாளங் குறித்துக் காட்டியிராது.—லூக்கா 3:37, 38.

8 மனிதனைப் படைக்க இந்தப் பரிணாம வழிமுறையைக் கடவுள் பயன்படுத்தினார் என்று சில ஆட்கள் சொல்லுகின்றனர். மனிதன், ஒன்றிலிருந்து மற்றொன்றாக தற்செயலாய் வளரும்படி விட்டு, அவன் குறிப்பிட்ட ஓர் நிலையை அடைந்த போது அவர் அவனுக்குள் ஓர் ஆத்துமாவை வைத்தார் என்று அவர்கள் வாதாடுகிறார்கள். ஆனால் இந்த அபிப்பிராயம் பைபிளில் ஓரிடத்திலும் காணப்படுகிறதில்லை. அதற்கு மாறாக, தாவரங்களும் மிருகங்களும் “தங்கள் தங்கள் ஜாதியின்படியே” படைக்கப்பட்டன என்றே பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 1:11, 21, 24) மேலும் ஒரு வகையான தாவரமோ மிருகமோ காலப்போக்கில் படிப்படியாய் வேறொரு வகையாக மாறிவிடுகிறதில்லை என்று உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. நாம் பரிணாமத்தின் விளைபயன் அல்ல என்பதை நிரூபிக்க மேலுமதிகமான தகவலை உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? என்ற தலைப்பையுடைய ஆங்கில புத்தகத்தில் காணலாம்.

கடவுள் மனிதனை எப்படிப் படைத்தார்?

9 கடவுள் மனிதனை இந்தப் பூமியில் வாழும்படி இந்தப் பூமியிலிருந்தே படைத்தார், பைபிள் சொல்லுகிற பிரகாரம்: “கடவுளாகிய யெகோவா மனுஷனை தரையினின்றெடுத்து மண்ணினால் உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அப்படியே மனுஷன் உயிருள்ள ஆத்துமாவானான்.” (ஆதியாகமம் 2:7, தி.மொ.) இதிலிருந்து மனிதன் கடவுளுடைய நேரடியான படைப்பாக இருந்தானென்று நாம் காணக்கூடும். ஓர் தனிப்பட்ட படைப்பு செயலில், கடவுள் மனிதனை ஒரு பூரண முழு ஆளாக உண்டாக்கினார். கடவுள் மனிதனின் நாசிகளில் “ஜீவ சுவாசத்தை” ஊதினபோது, மனிதனின் நுரையீரல்கள் காற்றால் நிரப்பப்பட்டன. என்றாலும் அதைப் பார்க்கிலும் அதிகம் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் கடவுள் மனிதனின் உடலுக்கு உயிரைக் கொடுத்தார். மூச்சு விடுவதன் மூலம் இந்த உயிர்சக்தி நீடித்திருக்கும்படி, அல்லது விடாது தொடரும்படி செய்யப்படுகிறது.

10 என்றபோதிலும், கடவுள் மனிதனுக்கு ஓர் ஆத்துமாவைக் கொடுத்தார் என்று பைபிள் சொல்லுகிறதில்லை என்பதைக் கவனியுங்கள். அதற்கு மாறாக, கடவுள் மனிதனை சுவாசிக்க அல்லது மூச்சுவிட தொடங்கிவிட்ட பின்பு “மனுஷன் உயிருள்ள ஆத்துமாவானான்,” என்று அது சொல்லுகிறது. மருத்துவனாக ஆகும் ஒருவன் மருத்துவனாக இருக்கிறதைப் போலவே, மனிதன் ஓர் ஆத்துமாவாக இருந்தான். (1 கொரிந்தியர் 15:45) மாம்ச உடல் எதிலிருந்து உருவாக்கப்பட்டதோ அந்தத் “தரையினின்றெடுத்த மண் [தூசி]” ஆத்துமா அல்ல. அந்த “ஜீவ சுவாசத்தை” ஆத்துமாவென்றும் பைபிள் சொல்லுகிறதில்லை. அதற்கு மாறாக, இந்த இரண்டு காரியங்களையும் ஒன்றாகச் சேர்த்துவைத்ததுதானே ‘மனுஷன் உயிருள்ள ஆத்துமாவாவதில்’ விளைவடைந்ததென்று பைபிள் காட்டுகிறது.

11 மனிதன் தானே மனித ஆத்துமாவாக இருப்பதால், அது உடலுக்குள் வாழ்கிற அல்லது அந்த உடலை விட்டுச் செல்லக்கூடிய ஏதோ நிழலுருவான ஒன்றாக இருக்க முடியாது. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், உன்னுடைய ஆத்துமா நீயே என்று பைபிள் கற்பிக்கிறது. உதாரணமாக, ஆத்துமா ஆகாரம் அருந்த விரும்புவதாக பைபிள் சொல்லுகிறது: “உன்னுடைய ஆத்துமா இறைச்சி சாப்பிட ஆசைப்படுகிறது.” (உபாகமம் 12:20, NW) மேலும் ஆத்துமாக்களுக்கு அவர்களின் இரத்தக் குழாய்களினூடே இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறதென்றுங்கூட அது சொல்லுகிறது, எப்படியெனில், “குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம்” என்பதாக அது பேசுகிறது.—எரேமியா 2:34

கடவுள் ஏன் மனிதனை இங்கே வைத்தார்

12 ஆதாமும் ஏவாளும் சிறிது காலத்துக்குப் பிறகு மரித்து வேறு எங்கேயாவது வாழவேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாயிருக்கவில்லை. பூமியையும் அதன் உயிருள்ள எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ள அவர்கள் இங்கே தங்கியிருக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். பைபிள் சொல்லுகிற பிரகாரம்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 1:28; 2:15) ஆதாமும் ஏவாளும் அவர்களுக்கு உண்டாயிருக்கப்போகிற எல்லா பிள்ளைகளும், கடவுள் அவர்கள் செய்யும்படி விரும்பின காரியங்களைச் செய்துகொண்டு, பூமியில் என்றுமாகச் சந்தோஷமாய் இருந்திருக்கக்கூடும்.

13 “தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” என்பதைக் கவனியுங்கள். அவர் தம்முடைய பூமிக்குரிய பிள்ளைகளைப் பற்றி உண்மையில் அக்கறையுள்ளவராக இருந்தார். ஆகையால் அன்புள்ள தகப்பனாக அவர் அவர்களுடைய நன்மைக்கானவையாக இருந்த கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தார். அவற்றிற்குக் கீழ்ப்படிவதில் அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டடைந்திருப்பார்கள். இயேசு இதை அறிந்திருந்தார். ஆகவே, பின்பு அவர்: “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே [கடைப்பிடிக்கிறவர்களே] அதிக பாக்கியவான்கள் [சந்தோஷமுள்ளவர்கள், NW],” என்று சொன்னார். (லூக்கா 11:28) இயேசு கடவுளுடைய வார்த்தையைக் கடைப்பிடித்தார். “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்,” என்று அவர் சொன்னார். (யோவான் 8:29) நாம் இங்கே இருப்பதற்கும் முக்கியக் காரணம் இதுவே. அதாவது, கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக வாழ்வதன்மூலம் நிறைவான, மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையை உடையவர்களாக இருப்பதேயாகும். யெகோவாவைச் சேவிப்பது இப்பொழுதேயும் நம்முடைய வாழ்க்கைக்கு மெய்யான அர்த்தத்தைக் கொடுக்கும். மேலும் இவ்விதம் செய்துவருவதன் மூலம் பூமியில் பரதீஸில் என்றுமாக வாழ்வதற்குச் செல்லும் வழியில் நம்மை வைத்து வருகிறவர்களாகவும் நாம் இருப்போம்.—சங்கீதம் 37:11, 29.

நாம் ஏன் வயோதிபராகி மரணமடைகிறோம்?

14 ஆனால் இப்பொழுது நாமெல்லோரும் வயோதிபராகி மரணமடைகிறோம். ஏன்? முந்தின அதிகாரத்தில் கவனித்தபடி, ஆதாம் ஏவாளின் கலகத்தின் காரணமாகவே மரிக்கிறோம். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டிய தேவையைச் சுட்டிக் காட்டின ஒரு சோதனையை யெகோவா தேவன் அவர்கள்பேரில் வைத்தார். அவர் ஆதாமுக்கு: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதியாகமம் 2:16, 17) இந்த மரத்தின் கனியைச் சாப்பிடுவதன் மூலம், ஆதாமும் ஏவாளும் தங்கள் பரலோகத் தகப்பனுக்குப் புறங்காட்டி அவருடைய வழிநடத்துதலை வேண்டாமென்று தள்ளிவிட்டனர். அவர்கள் கீழ்ப்படியாமற்போய்த் தங்களுக்கு உரியதாயிராததை எடுத்துக் கொண்டனர். அவர்கள் வறுமையோ துன்பங்களோ இல்லாமல் ஒரு பரதீஸில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இப்பொழுதோ பாவத்தின் தண்டனையைத் தங்கள்மேல் தாங்களே அவர்கள் வருவித்துக் கொண்டார்கள். இந்தத் தண்டனை அபூரணமும் மரணமுமாகும்.—ரோமர் 6:23.

15 நாம் எப்படி நம்முடைய பாவத்தை ஆதாமிலிருந்து பெற்றோமென்று உங்களுக்குத் தெரியுமா? ஆதாம் அபூரணனான பின்பு, அவன் அந்த அபூரணத்தையும் மரணத்தையும் தன்னுடைய எல்லா பிள்ளைகளுக்கும் கடத்தினான். (யோபு 14:4; ரோமர் 5:12) இந்நிலைமையை விளங்கிக் கொள்ள உங்களுக்கு ஓர் உதவியாக, ரொட்டிக் கடைக்காரன் ஒருவன் ஒடுக்கு விழுந்த ஒரு ரொட்டித் தட்டில் ரொட்டி செய்யும்போது என்ன நடக்கிறதென்பதை எண்ணிப் பாருங்கள். அந்த ரொட்டித் தட்டில் செய்த எல்லா ரொட்டிகளிலும் அந்த ஒடுக்குக்குறி காணப்படும். ஆதாம் அந்த ரொட்டித் தட்டைப் போலானான், நாம் அந்த ரொட்டியைப் போலானோம். கடவுளுடைய சட்டத்தை அவன் மீறினபோது அவன் அபூரணனானான். அது அவன் ஒரு ஒடுக்குக் குறியை அடைந்ததைப் போலாயிற்று. ஆகவே அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தபோது அவர்களெல்லோரும் அதே பாவக் குறியை அல்லது அபூரணத்தைப் பெற்றார்கள்.

16 நாமெல்லோரும் ஆதாமிலிருந்து பெற்றிருக்கிற இந்தப் பாவத்தின் காரணமாக இப்பொழுது நாம் நோயுற்று வயோதிபராகிறோம். இயேசு நடப்பித்த அற்புதங்களில் ஒன்று இதைக் காட்டுகிறது. இயேசு தாம் தங்கியிருந்த வீட்டில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, அந்த அறைக்குள் வேறு எவருமே நெருக்கி நுழைய முடியாத அளவுக்கு ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. அப்பொழுது நான்கு மனிதர் ஒரு கட்டிலில் படுத்தப் படுக்கையாய்க் கிடந்த ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்து வந்தபோது, தாங்கள் உள்ளே நுழைய முடியாதென்பதைக் கண்டார்கள். ஆகையால் அவர்கள் கூரைமேலேறி அதைப் பிரித்து கட்டிலோடு அந்தத் திமிர்வாதக்காரனை உள்ளே இயேசுவுக்கருகில் நேராக இறக்கினார்கள்.

17 அவர்களுக்கு எவ்வளவு விசுவாசம் இருந்ததென்பதை இயேசு கண்டபோது அவர் அந்தத் திமிர்வாதக்காரனிடம்: “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன,” என்று சொன்னார். ஆனால் அங்கிருந்த மக்களில் சிலர், இயேசு பாவங்களை மன்னிக்கக் கூடுமென்று எண்ணவில்லை. ஆகையால் இயேசு பின்வருமாறு கூறினார்: “பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான்.”—மாற்கு 2:1-12.

18 இயேசுவின் இந்த வல்லமை நமக்கு எதைக் குறிக்கக் கூடுமென்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! கடவுளுடைய ராஜ்யத்தின் ஆளுகையின் கீழ், கடவுளை நேசித்து சேவிக்கிற எல்லா ஆட்களின் பாவங்களையும் கிறிஸ்து மன்னிக்கக்கூடியவராக இருப்பார். இது, எல்லா வலிகளும், வேதனைகளும், நோய்களும் நீக்கப்படும் என்பதைக் குறிக்கிறது. ஒருவரும் ஒருபோதும் வயோதிபராகி மரிக்க வேண்டியதில்லை! இது எதிர்காலத்துக்கான ஆ, எப்பேர்ப்பட்ட அதிசயமான நம்பிக்கை! ஆம், பிறந்து, குறுகிய காலமே வாழ்ந்திருந்து, பின்பு மரித்துப்போவதைப் பார்க்கிலும் மிக அதிகத்தை நாம் மெய்யாகவே எதிர்பார்க்கலாம். கடவுளைப் பற்றித் தொடர்ந்து கற்றுக்கொண்டும் அவரைச் சேவித்துக்கொண்டும் வருவதன் மூலம் நாம் மெய்யாகவே பூமியில் பரதீஸில் என்றும் வாழக்கூடும்.

[கேள்விகள்]

1. யோசனையுள்ள ஆட்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கின்றனர்?

2. மக்கள் என்ன கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர்?

3. பரிணாம போதகம் என்ன?

4. “தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று நாம் ஏன் நம்பலாம்?

5. நாம் பரிணாமத்தின் விளைவாக உருவாகவில்லை, நாம் படைக்கப்பட்டோம் என்று நம்முடைய உடலமைப்பு எப்படிக் காட்டுகிறது?

6. பரிணாமத்தில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும் படைப்பில் நம்பிக்கை வைப்பதே ஏன் நமக்கு அறிவுள்ள காரியமாயிருக்கிறது?

7. (எ) இயேசு, தாம் படைப்பில் நம்பினாரென்று எப்படிக் காட்டினார்? (பி) ஆதாம் ஒரு மெய்யான ஆள் என்பதற்கு மேலுமாக என்ன அத்தாட்சி இருக்கிறது?

8. மனிதனின் தொடக்கத்தைப் பற்றிய என்ன கருத்தைப் பைபிள் கற்பிக்கிறதில்லை?

9. (எ) மனிதனின் படைப்பைப் பைபிள் எப்படி விவரிக்கிறது? (பி) கடவுள் மனிதனின் நாசிகளில் “ஜீவ சுவாசத்தை” ஊதினபோது என்ன நடந்தது?

10. மனித ஆத்துமா என்பது என்ன? அது எப்படிப் படைக்கப்பட்டது?

11. அது ஓர் ஆளிலிருந்து தனியே பிரிந்து வாழக்கூடிய ஓர் நிழலுருவான ஒன்றாக இருக்க முடியாதென்று மனித ஆத்துமாவைப் பற்றிய எந்தப் பைபிள் உண்மைகள் காட்டுகின்றன?

12. பூமியிலுள்ள மனிதரைக் குறித்த கடவுளுடைய நோக்கம் என்னவாக இருந்தது?

13. (எ) நாம் எப்படிச் சந்தோஷமாய் இருக்கலாம்? (பி) எது நம்முடைய வாழ்க்கைக்கு மெய்யான அர்த்தத்தைக் கொடுக்கும்?

14. கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமற்போவதன்மூலம் ஆதாமும் ஏவாளும் என்ன செய்தார்கள்?

15. நாம் எப்படி நம்முடைய பாவத்தை ஆதாமிலிருந்து பெற்றோம்?

16, 17. பாவத்தின் காரணமாக மனித குடும்பத்தின்மேல் நோய் வந்ததென்று இயேசுவின் அற்புதங்களில் ஒன்று எப்படிக் காட்டுகிறது?

18. கடவுளுடைய ஊழியர்கள் என்ன வகையான எதிர்காலத்துக்காக ஆவலோடு காத்திருக்கலாம்?

[பக்கம் 69-ன் படம்]

வாழ்க்கையின் அர்த்தமென்ன என்பதைப் பற்றி அறிய பலர் ஆவலாயிருக்கின்றனர்

[பக்கம் 70-ன் படம்]

இந்தப் பொருட்கள் தற்செயலாய்த் தாங்களாகத் தோன்றினவா, அல்லது இவை உண்டாக்கப்பட்டனவா?

[பக்கம் 75-ன் படம்]

இந்தத் திமிர்வாதக்காரனை இயேசு சுகப்படுத்தினதைப் பற்றிய பைபிள் விவரம், மக்கள் ஆதாமின் பாவத்தின் காரணமாக நோயுறுகின்றனர் என்று காட்டுகிறது