Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யார் பரலோகத்துக்குச் செல்கிறார்கள்? ஏன்?

யார் பரலோகத்துக்குச் செல்கிறார்கள்? ஏன்?

அதிகாரம் 14

யார் பரலோகத்துக்குச் செல்கிறார்கள்? ஏன்?

‘எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்துக்குச் செல்கிறார்கள்,’ என்று பலர் சொல்லுகின்றனர். என்றபோதிலும், அவர்கள் ஏன் பரலோகத்துக்குச் செல்கிறார்கள் என்று அவர்களைக் கேட்கையில், ‘கடவுளுடன் இருப்பதற்கு,’ அல்லது, ‘நல்லவர்களாக இருந்ததற்கு அது பரிசு,’ என்பதாக அவர்கள் சொல்லக்கூடும். இதைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?

2 இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்துக்குச் சென்றார் என்று பைபிள் தெளிவாகக் கூறுகிறது. மேலும், மற்ற மனிதரும் அங்கே கொண்டு போகப்படுவார்கள் என்றும் அது சொல்லுகிறது. தம்முடைய மரணத்துக்கு முந்தின அந்த இரவில், இயேசு தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலரிடம் பின்வருமாறு கூறினார்: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”—யோவான் 14:1-3.

3 தெளிவாகவே, இயேசு, தம்முடைய அப்போஸ்தலர் தம்முடன் இருக்கும்படி பரலோகத்துக்குக் கொண்டுபோகப்படுவார்கள் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போஸ்தலனாகிய பவுல், இந்த அதிசயமான நம்பிக்கையைப் பற்றிப் பூர்வ கிறிஸ்தவர்களிடம் அடிக்கடி கூறினான். உதாரணமாக, அவன் பின்வருமாறு எழுதினான்: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” (பிலிப்பியர் 3:20, 21; ரோமர் 6:5; 2 கொரிந்தியர் 5:1, 2) இப்படிப்பட்ட வாக்குகளை ஆதாரமாகக் கொண்டு, இலட்சக்கணக்கானோர் தங்கள் இருதயத்தைப் பரலோக வாழ்க்கையின்பேரில் ஊன்ற வைத்திருக்கின்றனர். என்றபோதிலும் எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்துக்குச் செல்வார்களா?

எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்துக்குச் செல்கிறார்களா?

4 இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு சிறிது காலத்துக்குப் பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு யூதர்களின் ஒரு கூட்டத்திடம் பின்வருமாறு கூறினான்: “கோத்திரத் தலைவனாகிய தாவீது . . . மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது . . . தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே.” (அப்போஸ்தலர் 2:29, 34) ஆகவே இந்த நல்ல மனிதனாகிய தாவீது பரலோகத்துக்குப் போகவில்லை. நீதிமானாகிய யோபைப் பற்றியதென்ன?

5 வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில், யோபு கடவுளிடம் பின்வருமாறு ஜெபித்தான்: “நீர் என்னைப் பாதாளத்தில் [ஷியோலில்; பிரேதக் குழியில்] ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.” தான் சாகையில் உணர்வற்றவனாக பிரேதக் குழியில் இருப்பான் என்றே யோபு எதிர்பார்த்தான். தான் பரலோகத்துக்குச் செல்வதில்லை என்று அவன் அறிந்திருந்தான். என்றாலும் அவன் பின்வருமாறு விளக்கினபடி அவனுக்கு நம்பிக்கை இருந்தது: “உடல் திடமுடைய ஒரு மனிதன் செத்தால் அவன் திரும்ப உயிர் வாழக்கூடுமா? என் விடுதலை வரும் வரையில், என்னுடைய வலுக்கட்டாய சேவையின் நாட்களெல்லாம் [பிரேதக்குழியில் இருக்கும்படி குறிக்கப்பட்ட காலமெல்லாம்] நான் காத்திருப்பேன். நீர் கூப்பிடுவீர், நான்தானேயும் உமக்குப் பதிலளிப்பேன்.”—யோபு 14:13-15, NW.

6 இயேசுவை முழுக்காட்டின யோவானுங்கூட ஒரு நல்ல மனிதனாயிருந்தான். என்றபோதிலும் இயேசு: “பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்,” என்று சொன்னார். (மத்தேயு 11:11) இது ஏனென்றால் முழுக்காட்டுபவனாகிய யோவான் பரலோகத்துக்குப் போவதில்லை. இயேசு பூமியில் இருந்தபோது, அதாவது, ஆதாம் ஏவாள் கலகஞ்செய்து 4,000-த்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப்பின், அவர் பின்வருமாறு கூறினார்: “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.—யோவான் 3:13.

7 ஆகையால், இயேசுவின் சொந்த வார்த்தைகளின்படி, அவருடைய நாள்வரையாக, மனித சரித்திரத்தின் அந்த எல்லா 4,000 ஆண்டுகளிலும் ஒரு மனிதனும் பரலோகத்துக்குச் சென்றிருக்கவில்லை. தாவீதும், யோபும், முழுக்காட்டுபவனாகிய யோவானும் பூமியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். உண்மையில், இயேசு மரித்ததற்கு முன்னால் மரித்திருந்த உண்மையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும், பரலோகத்திலல்ல, பூமியிலேயே மறுபடியும் வாழும் நம்பிக்கையை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களில் சிலராகும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.—சங்கீதம் 72:7, 8; அப்போஸ்தலர் 17:31.

உண்மையுள்ள சிலர் ஏன் பரலோகத்துக்குச் செல்கின்றனர்?

8 இயேசு ஏன் பரலோகத்துக்குச் சென்றார்? அங்கே அவர் என்ன வேலையைச் செய்ய வேண்டியதாய் இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்குரிய பதில்கள் முக்கியமானவை. இது ஏனென்றால் பரலோகத்துக்குச் செல்கிறவர்கள் இயேசுவுடன் அவருடைய வேலையில் பங்கு கொள்வார்கள். இந்த நோக்கத்திற்காகவே அவர்கள் பரலோகத்துக்குச் செல்கிறார்கள்.

9 இயேசு, கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் அரசராக அந்தப் பரதீஸான புதிய பூமியின்மேல் ஆளுகை செய்வாரென்று முந்தின அதிகாரங்களில் நாம் கற்றறிந்தோம். இயேசு பூமிக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பாக, பைபிள் புத்தகமாகிய தானியேல், அந்த “மனுஷகுமாரன்” ‘ஆளுகை கொடுக்கப்படுவார்’ என்று முன்னறிவித்தது. அந்த “மனுஷகுமாரன்” இயேசுகிறிஸ்துவே. (மாற்கு 14:41, 62) மேலும் தானியேல் பின்வருமாறு தொடர்ந்து சொல்லுகிறான்: “அவருடைய ஆளுகை நீங்காத நித்திய ஆளுகை, அவருடைய ராஜ்யம் அழியாதது.”—தானியேல் 7:13, 14, தி.மொ.

10 என்றபோதிலும், இந்த “மனுஷகுமாரன்” தனிமையாக அரசாளப் போகிறதில்லை என்பதை இங்கே இந்தத் தானியேலின் புத்தகத்தில் கவனிப்பது முக்கியமானது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “ராஜரீகமும் ஆளுகையும் . . . உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனத்துக்குக் கொடுக்கப்படும்; அந்த ஜனத்தின் ராஜ்யம் நித்திய ராஜ்யம்.” (தானியேல் 7:27, தி.மொ.) “அந்த ஜனம்,” “அந்த ஜனத்தின் ராஜ்யம்” என்ற இந்தச் சொற்றொடர்கள், கடவுளுடைய அரசாங்கத்தில் கிறிஸ்துவுடன் மற்றவர்களும் ஆட்சி செய்வார்கள் என்று நமக்குத் தெரிவிக்கின்றன.

11 அவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தில் தம்முடன் அரசர்களாக இருப்பார்களென்பதை இயேசு, தம்முடைய உண்மையுள்ள 11 அப்போஸ்தலருடன் செலவிட்ட அந்தக் கடைசி இரவில் காட்டினார். அவர் அவர்களுக்குப் பின்வருமாறு கூறினார்: “என் சோதனைகளில் என்னோடு நிலைத்திருந்தவர்கள் நீங்களே; ஒரு ராஜ்யத்துக்காக என் தகப்பன் என்னோடு ஓர் உடன்படிக்கை செய்திருக்கிறதைப் போல், நானும் உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்.” (லூக்கா 22:28, 29, NW) பின்னால், அப்போஸ்தலனாகிய பவுலும் தீமோத்தேயுவும் ராஜ்யத்துக்கான இந்த உடன்படிக்கையில், அல்லது ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்தக் காரணத்தினிமித்தமாகவே பவுல் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு எழுதினான்: “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்.” (2 தீமோத்தேயு 2:12) மேலும், அப்போஸ்தலனாகிய யோவானுங்கூட, இயேசுகிறிஸ்துவுடன் ராஜாக்களாக “பூமியின்மீது அரசாளப்” போகிறவர்களைக் குறித்து எழுதினான்.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:6.

12 ஆகவே பரலோகத்துக்குப் போகிறவர்கள், கடவுளுடைய பரலோக அரசாங்கத்தில் கிறிஸ்துவுடன் துணை அரசர்களாகச் சேவிப்பதற்கு அங்கே செல்கிறார்கள். இயேசு வாக்குப்பண்ணப்பட்ட முக்கிய “வித்தாக” இருக்கையில், ராஜ்யத்தில் இயேசுவுடன் ஆளுவதற்கு மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து மற்றவர்களையும் கடவுள் தெரிந்து கொள்ளுகிறார். இவ்வாறு இவர்கள், பைபிள் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம் அந்த “வித்தின்” பாகமாகிறார்கள்: “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.”—கலாத்தியர் 3:16, 29; யாக்கோபு 2:5.

எத்தனை பேர் பரலோகத்துக்குச் செல்கின்றனர்?

13 இவர்கள் பூமியின்மீது அரசாளப்போகிறபடியால், பரலோகத்துக்குச் செல்கிறவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களும் சோதித்துப் பரீட்சிக்கப்பட்டவர்களுமாயிருப்பார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. இது, கிறிஸ்தவ சேவைக்குரிய ஆண்டுகளினூடே முழுமையாய்ச் சோதிக்கப்பட்டிராதவர்களாகிய குழந்தைகள் அல்லது இளம் பிள்ளைகள் பரலோகத்துக்குக் கொண்டுபோகப்பட மாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. (மத்தேயு 16:24) என்றபோதிலும், இப்படிப்பட்ட இளம் பிள்ளைகள் மரிக்கும்போது, பூமியில் உயிர்வாழும்படி எழுப்பப்படும் நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறார்கள். (யோவான் 5:28, 29) ஆகவே, ராஜ்ய ஆட்சியின் கீழ் பூமியில் உயிரை அடையப்போகிற அந்த மிகப் பலரோடு ஒப்பிடுகையில் பரலோகத்துக்குச் செல்லப் போகிறவர்களின் மொத்த எண்ணிக்கை சிறியதாயிருக்கும். இயேசு தம்முடைய சீஷர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.”—லூக்கா 12:32.

14 ராஜ்ய அரசர்களின் அந்த வகுப்பு, எண்ணிக்கையில் எவ்வளவு சிறியதாயிருக்கும்? அது அப்போஸ்தலரும் தொடக்கக் காலத்தில் இயேசுவைப் பின்பற்றின மற்றவர்களுமான இவர்கள் மாத்திரமே அடங்கியதாக இருக்குமா? இல்லை, இந்தச் “சிறு மந்தை” மேலும் பலர் அடங்கியதாயிருக்குமென்று பைபிள் காட்டுகிறது. வெளிப்படுத்துதல் 14:1, 3-ல் பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “பின்பு நான் பார்த்தபோது, இதோ [பரலோகச்] சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டியானவரையும் [அதாவது, இயேசு கிறிஸ்துவையும்], அவரோடே கூட . . . இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக் கண்டேன் . . . அவர்கள் . . . பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் [அல்லது, எடுக்கப்பட்டவர்கள்].” 1,44,000 ஆட்கள் மாத்திரமே ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுடன் பரலோக சீயோன் மலையின்மேல் காணப்படுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். (எபிரெயர் 12:22) ஆகவே எல்லா நல்ல ஆட்களும் பரலோகத்துக்குப் போவதற்கு மாறாக, சோதித்து உண்மையுள்ளவர்களாக நிரூபிக்கப்பட்ட 1,44,000 ஆட்கள் மாத்திரமே, கிறிஸ்துவுடன் ஆளுகை செய்ய பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களென்று பைபிள் வெளிப்படுத்துகிறது.

ஏன் பூமியிலிருந்து தெரிந்து கொள்ளப்படுகிறார்கள்?

15 கடவுள் ஏன் இந்த அரசர்களை மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து தெரிந்துகொள்ளுகிறார்? கிறிஸ்துவுடன் ஆளும்படி ஏன் தூதர்களைத் தெரிந்துகொள்ளவில்லை? ஏனென்றால், ஆளுவதற்கு யெகோவாவுக்கு இருக்கும் உரிமை, இங்கே இந்த பூமியிலேயே சவால் விடப்பட்டது. இங்கேயே, பிசாசின் எதிர்ப்பின் கீழும் மனிதர் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாயிருப்பது சோதிக்கப்படக் கூடும். இங்கேயே இயேசு சோதனையின் கீழ் கடவுளுக்குத் தம்முடைய முழு பற்றுறுதியை நிரூபித்து, தம்முடைய உயிரை மனிதவர்க்கத்தை மீட்கும் கிரயமாகக் கொடுத்தார். ஆகவே, பரலோக ராஜ்யத்தில் தம்முடைய குமாரனுடன் இணைந்திருக்கும்படி ஒரு “சிறு மந்தை”யான ஆட்களை, இந்தப் பூமியிலிருந்தே எடுக்க யெகோவா ஏற்பாடு செய்தார். இவர்களே, கடவுளுக்கு உண்மைத் தவறாதவர்களாக நிலைத்திருப்பதன் மூலம், மனிதர் தன்னல காரணங்களுக்காகவே கடவுளைச் சேவிக்கிறார்கள் என்ற பிசாசின் இந்தக் குற்றச்சாட்டைப் பொய்யாக நிரூபித்தவர்கள். ஆகையால், இந்த மனிதரைத் தம்முடைய மகிமைக்காக யெகோவா பயன்படுத்துவது ஏற்றதாயிருக்கிறது.—எபேசியர் 1:9-12.

16 மேலும், பூமியில் கடவுளுக்கு உண்மைத் தவறாதவர்களாக நிரூபித்தவர்களை அரசர்களாகக் கொண்டிருப்பது ஆ, எவ்வளவு அதிசயமாயிருக்குமென்று எண்ணிப்பாருங்கள்; இவர்களில் பலர் ராஜ்யத்தின் சார்பாகத் தங்கள் உயிரையும் தியாகஞ்செய்தார்கள். (வெளிப்படுத்துதல் 12:10, 11; 20:4) தூதர்கள் இவ்வகையான சோதனைகளை எதிர்ப்பட்டிருக்கவில்லை. மேலும் மனிதவர்க்கத்துக்குப் பொதுவாயுள்ள பிரச்னைகளையுங்கூட அவர்கள் அனுபவித்திருக்கவில்லை. ஆகவே பாவமுள்ள ஒரு மனிதனாயிருப்பதும், மனிதராகிய நமக்கு இருக்கும் பிரச்னைகளைக் கொண்டிருப்பதும் எப்படியிருக்குமென்பதை அவர்கள் முழுமையாய் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த 1,44,000 பேர்கள், இதே பிரச்னைகளை அனுபவித்திருப்பதனால் அதை விளங்கிக் கொள்வார்கள். இவர்களில், சிலர் மிகப் பாவமான பழக்க வழக்கங்களை அடக்கி மேற்கொள்ள வேண்டியவர்களாய் இருந்திருக்கின்றன, அப்படிச் செய்வது எவ்வளவு கடினமாயிருக்கக்கூடுமென்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 6:9-11) ஆகையால், அவர்கள் தங்கள் பூமிக்குரிய குடிமக்களை விளங்கிக்கொள்ளும் ஒரு முறையில் கையாண்டு நடத்துவார்கள்.—எபிரெயர் 2:17, 18.

கடவுளுடைய சபை

17 கிறிஸ்து கடவுளுடைய சபையின் தலையாக இருக்கிறாரென்றும், அதன் உறுப்பினர் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்களென்றும் பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (எபேசியர் 5:23, 24) ஆகவே, “சர்ச்”, அல்லது “கடவுளின் சபை” என்பதானது, ஏதோவொரு கட்டடத்தைக் குறிப்பதில்லை. அதற்குமாறாக, அது கிறிஸ்தவர்களின் ஒரு தொகுதியைக் குறிக்கிறது. (1 கொரிந்தியர் 15:9) இன்று நாம் கூட்டுறவு கொள்ளுகிற கிறிஸ்தவர்களின் அந்தச் சபையைக் குறித்துப் பேசக்கூடும். அதைப் போலவே, பைபிளில் ‘லவோதிக்கேயரின் சபையைப்’ பற்றியும், மேலும், பிலேமோனுக்கு எழுதின அப்போஸ்தலனாகிய பவுலின் நிருபத்தில், அவனுடைய “வீட்டிலே கூடிவருகிற சபை”யைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம்.—கொலோசெயர் 4:16, NW; பிலேமோன் 2.

18 என்றபோதிலும், பைபிள், “ஜீவனுள்ள தேவனுடைய சபை”யைப் பற்றிப் பேசுகையில், அது, கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் ஒரு தனிப்பட்ட வகுப்பைக் குறிப்பிடுகிறது. (1 தீமோத்தேயு 3:15) இவர்கள், “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சபை” என்றுங்கூட அழைக்கப்படுகின்றனர். (எபிரெயர் 12:23) ஆகவே இந்தக் “கடவுளின் சபை” பரலோக வாழ்க்கைக்குரிய இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற பூமியிலுள்ள எல்லாக் கிறிஸ்தவர்களாலும் ஆகியது. மொத்தத்தில் 1,44,000 ஆட்கள் மாத்திரமே கடைசியாக இந்தக் “கடவுளின் சபை”யை உண்டுபண்ணுகிறவர்களாக இருப்பர். இன்று இவர்களில் ஒரு சிலர், அதாவது, ஒரு மீதிப்பேர் மாத்திரமே, இன்னும் பூமியில் இருக்கிறார்கள். பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைக் கொண்டிருக்கிற கிறிஸ்தவர்கள் இந்த “ஜீவனுள்ள தேவனுடைய சபை”யின் உறுப்பினரிடமிருந்து ஆவிக்குரிய வழிநடத்துதலை நாடி எதிர்பார்க்கிறார்கள். 1,44,000 உறுப்பினரைக் கொண்ட இந்தச் சபையை, “ஆட்டுக் குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி,” “கிறிஸ்துவின் சரீரமாகிய சபை,” “தேவனுடைய ஆலயம்,” “தேவனுடைய இஸ்ரவேலர்,” “புதிய எருசலேம்” ஆகிய இப்படிப்பட்ட சொற்றொடர்களாலும் பைபிள் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 21:9; எபேசியர் 4:12; 1 கொரிந்தியர் 3:17; கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 21:2

கடவுளுடைய நோக்கத்தில் இந்தப் புதிய காரியம்

19 ஆதாம், மனித குலத்தைப் பாவம், மரணம் என்ற பாதையில் செல்லத் தொடங்கி வைத்தப் பின்பும், யெகோவா தேவன் பூமிக்கும் அதன்மீதுள்ள மனிதவர்க்கத்துக்கும் தாம் கொண்டிருந்த தம் நோக்கத்தை மாற்றவில்லை. கடவுள் அப்படிச் செய்திருப்பாரானால், அவர் தம்முடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றக் கூடாதவராக இருந்தாரென்று அர்த்தங்கொள்ளும். ஆரம்பத்திலிருந்து அவருடைய நோக்கம், பூமியெங்கும் விரிவான ஒரு பரதீஸ், மகிழ்ச்சி நிறைந்த சுகபலமுள்ள மக்களால் நிரப்பப்பட்டிருக்க வேண்டுமென்பதேயாகும். அந்த நோக்கம் இன்னும் நிலைநிற்கிறது. கடவுள் கொண்டுவந்திருக்கிற அந்த ஒரே புதிய காரியமானது, தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர் செய்திருக்கும் ஒரு புதிய அரசாங்கத்திற்கான அவருடைய ஏற்பாடேயாகும். நாம் பார்த்தபடி, குமாரனாகிய இயேசுகிறிஸ்து, இந்த அரசாங்கத்தில் முக்கிய அரசராயிருக்கிறார், அவரோடுகூட பரலோகத்தில் ஆளுவதற்கு 1,44,000 ஆட்கள் மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து எடுக்கப்படுவர்.—வெளிப்படுத்துதல் 7:4.

20 பரலோகத்தில் இந்த அரசர்கள், கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் அந்தப் “புதிய வானங்களாக” இருப்பர். என்றபோதிலும் பூமியின்மீது ஆளுவதற்கு இப்படிப்பட்ட நீதியுள்ள அரசர்கள் இருக்கப்போகிறார்களென்றால், அவர்கள் ஆட்சி செலுத்துவற்கு குடிமக்களும் இருக்க வேண்டும். இந்த ஆட்களைப் “புதிய பூமி” என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4) யோபு, தாவீது, முழுக்காட்டுபவனாகிய யோவான் ஆகியோர்—ஆம், கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு முன்பாக வாழ்ந்த உண்மையுள்ளவர்களாகிய எல்லோரும் இதில் அடங்கியிருப்பார்கள். என்றாலும் இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைக்கிற ஆட்கள் உட்பட இன்னும் மிகப் பலரும் இந்தப் “புதிய பூமி”யாகிறவர்களாக இருப்பார்கள். இந்தத் தப்பிப் பிழைக்கிறவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களா? கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரு குடிமகனாக அல்லது குடிமகளாக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் பூர்த்தி செய்யவேண்டிய தகுதிகள் இருக்கின்றன.

[கேள்விகள்]

1. பலர் இந்தக் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிப்பார்கள்: யார் பரலோகத்துக்குச் செல்கின்றனர்? ஏன்?

2, 3. (எ) மனிதர்களில் சிலர் பரலோகத்துக்குச் செல்வார்களென்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்? (பி) எந்தக் கேள்வி பதிலளிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது?

4, 5. தாவீதும் யோபும் பரலோகத்துக்குச் செல்லவில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

6, 7. (எ) கிறிஸ்துவுக்கு முன்னால் மரித்த ஒருவரும் பரலோகத்துக்குப் போகவில்லையென்று எது காட்டுகிறது? (பி) கிறிஸ்துவுக்கு முன்னால் மரித்த உண்மையுள்ள எல்லோருக்கும் என்ன நேரிடும்?

8. எந்தக் கேள்விகளுக்கு பதில்கள் முக்கியமானவையாக இருக்கின்றன? ஏன்?

9, 10. தானியேல் சொல்லுகிற பிரகாரம் கிறிஸ்துவைத் தவிர வேறு எவரும் கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்வார்கள்?

11. தொடக்கத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள் அவரோடுகூட ஆளுவார்கள் என்று எது காட்டுகிறது?

12. ஆபிரகாமின் “வித்து”வைப் பற்றிய என்ன உண்மை, கிறிஸ்துவுக்குத் துணை அரசர்கள் இருப்பார்களென்று வெளிப்படுத்துகிறது?

13. (எ) குழந்தைகள் ஏன் பரலோகத்துக்குப் போகமாட்டார்கள்? (பி) இந்த ராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளப்போகிற இந்த எண்ணிக்கையை இயேசு எப்படி விவரித்தார்?

14. எத்தனை பேர் பரலோகத்துக்குச் செல்லும் இந்தச் “சிறு மந்தை” யாவார்கள்?

15. கடவுள் ஏன் இந்த ராஜ்ய அரசர்களை மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து தெரிந்து கொள்ளுகிறார்?

16. இந்த ராஜ்ய அரசர்கள் பூமியில் வாழ்ந்திருந்தவர்கள் என்பதற்காக நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்?

17. “சபை” என்ற சொல் எதைக் குறிக்கிறது?

18. (எ) “ஜீவனுள்ள தேவனுடைய சபை” யாரால் ஆகியது? (பி) வேறு என்ன சொற்றொடர்களாலும் இந்தச் சபை பைபிளில் குறிப்பிடப்படுகிறது?

19. பூமிக்குரிய தம்முடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எந்தப் புதிய காரியத்தைக் கடவுள் கொண்டு வந்தார்?

20. (எ) யார் “புதிய வானங்களாக” இருப்பர்? “புதிய பூமி”யாகிறவர்கள் யார்? (பி) இந்தப் “புதிய பூமி”யின் பாகமாவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

[பக்கம் 121-ன் படங்கள்]

இந்த நல்ல மனிதர் பரலோகத்துக்குச் சென்றார்களா?

அரசனாகிய தாவீது

யோபு

முழுக்காட்டும் யோவான்

[பக்கம் 122-ன் படம்]

அப்போஸ்தலருடன் இருந்த தம்முடைய கடைசி இரவில், இயேசு, அவர்கள் தம்முடைய தகப்பனின் ராஜ்யத்தில் தம்முடன் அரசர்களாக இருப்பார்களென்று சொன்னார்