அதிகாரம் 29
‘கிறிஸ்துவின் அன்பை தெரிந்துகொள்வது’
1-3. (அ) தம் தகப்பனைப் போலவே இருப்பதற்கு இயேசுவை எது உந்துவித்தது? (ஆ) இயேசுவின் அன்பை பற்றி நாம் ஆராயப்போகும் அம்சங்கள் யாவை?
சிறு பையன் ஒருவன் தன் அப்பா மாதிரியே நடந்துகொள்ள முயல்வதை எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா? நடக்கும் விதம், பேசும் விதம், செயல்படும் விதம் ஆகியவற்றில் தன் அப்பாவை போலவே அந்த மகன் செய்ய முயலலாம். காலப்போக்கில், ஒழுக்க நெறிகளிலும் ஆன்மீக காரியங்களிலும்கூட அந்தப் பையன் தன் அப்பாவின் மாதிரியையே பின்பற்றலாம். ஆம், அன்புள்ள அப்பாவிடம் உள்ள பாசமும் நேசமும் அவரைப் போலவே இருப்பதற்கு அந்தப் பையனை தூண்டுகிறது.
2 இயேசுவுக்கும் அவருடைய பரலோக தகப்பனுக்கும் இடையே நிலவும் உறவைப் பற்றியென்ன? “தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்” என இயேசு ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். (யோவான் 14:31) இந்த மகனைவிட அதிகமாக யெகோவாவை நேசிக்க வேறொருவராலும் முடியாது, ஏனென்றால் வேறெந்த சிருஷ்டிகளும் படைக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே தம் தகப்பனுடன் இவர் இருந்தார். அந்த அன்பின் பிணைப்பே மிகுந்த ஈடுபாட்டுடன் தம் தகப்பனைப் போல நடப்பதற்கு இந்த மகனை உந்துவித்தது.—யோவான் 14:9.
3 இந்தப் புத்தகத்தின் முந்தைய அதிகாரங்களில், யெகோவாவின் வல்லமை, நீதி, ஞானம் ஆகியவற்றை இயேசு எவ்வாறு பரிபூரணமாக பின்பற்றினார் என்பதைப் படித்தோம். ஆனால், தம் பிதாவின் அன்பை இயேசு எவ்வாறு பிரதிபலித்தார்? இயேசுவுடைய அன்பின் மூன்று அம்சங்களை—சுயதியாக மனப்பான்மை, கரிசனை, மன்னிக்கும் குணம் ஆகியவற்றை—நாம் ஆராயலாம்.
இந்த “அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை”
4. சுயதியாக அன்பிற்கு இயேசு எவ்வாறு மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்?
4 சுயதியாக அன்பிற்கு இயேசு மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார். நம்முடைய சொந்த தேவைகளுக்கும் அக்கறைகளுக்கும் மேலாக மற்றவர்களுடைய தேவைகளுக்கும் அக்கறைகளுக்கும் சுயநலமின்றி முக்கியத்துவம் கொடுப்பது சுயதியாகத்தில் உட்படுகிறது. இப்படிப்பட்ட அன்பை இயேசு எவ்வாறு காட்டினார்? அவர்தாமே இவ்வாறு விளக்கினார்: “ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை.” (யோவான் 15:13) இயேசு மனப்பூர்வமாக தம்முடைய பரிபூரண உயிரை நமக்காக கொடுத்தார். இது, எந்தவொரு மனிதனும் ஒருபோதும் செய்திராத மிகப் பெரிய அன்பின் செயல். ஆனால் வேறு வழிகளிலும் இயேசு சுயதியாக அன்பை காண்பித்தார்.
5. பரலோகத்தைவிட்டு வருவது ஏன் கடவுளுடைய ஒரே மகனுடைய பங்கில் அன்பான தியாகச் செயல்?
5 மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன், கடவுளுடைய ஒரே மகன் பரலோகத்தில் ஒப்பற்ற, உயர்ந்த ஸ்தானத்தை வகித்தார். யெகோவாவுடனும் திரளான ஆவி சிருஷ்டிகளுடனும் நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்தார். இத்தகைய அனுகூலங்கள் இருந்தபோதிலும், இந்த அன்பு மகன் “தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல் ஆனார், ஒரு மனிதராக ஆனார்.” (பிலிப்பியர் 2:7) “பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற” ஓர் உலகில், பாவமுள்ள மனிதர் மத்தியில் வாழ்வதற்கு மனப்பூர்வமாக வந்தார். (1 யோவான் 5:19) கடவுளுடைய மகனுடைய பங்கில் அது அன்பான தியாகச் செயல் அல்லவா?
6, 7. (அ) தம்முடைய பூமிக்குரிய ஊழிய காலத்தின்போது இயேசு என்னென்ன விதங்களில் சுயதியாக அன்பை காட்டினார்? (ஆ) சுயநலமற்ற அன்பிற்கு யோவான் 19:25-27-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இதயத்தைத் தொடும் உதாரணம் என்ன?
6 தமது பூமிக்குரிய ஊழியக் காலம் முழுவதிலும், பல்வேறு வழிகளில் சுயதியாக அன்பை இயேசு காண்பித்தார். அவரிடம் துளியும் சுயநலம் இல்லாதிருந்தது. மனிதனின் அடிப்படை தேவைகளைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு அவர் தம்முடைய ஊழியத்தில் முழுமையாக ஈடுபட்டார். “குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கின்றன, ஆனால் மனிதகுமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” என்று கூறினார். (மத்தேயு 8:20) அவர் கைதேர்ந்த தச்சராக இருந்ததால், தமக்காக ஒரு வசதியான வீட்டைக் கட்டிக்கொள்வதற்கு தம்முடைய நேரத்தில் கொஞ்சத்தை அர்ப்பணித்திருக்கலாம்; அல்லது அழகிய மேஜை நாற்காலிகளை செய்து விற்று அதிக பணம் சம்பாதிப்பதற்கு நேரம் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அப்படி சொத்துபத்துக்களை சம்பாதிப்பதற்காக அவர் தம்முடைய திறமைகளைப் பயன்படுத்தவில்லை.
7 இயேசுவின் சுயதியாக அன்பிற்கு இதயத்தைத் தொடும் ஓர் உதாரணம் யோவான் 19:25-27-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மரிக்கவிருந்த பிற்பகல் வேளையில் அவருடைய மனதையும் இதயத்தையும் என்னென்ன விஷயங்கள் ஆக்கிரமித்திருந்திருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். சித்திரவதைக் கம்பத்தில் வேதனையை அனுபவித்தபோது, அவர் தம்முடைய சீஷர்களையும், பிரசங்க வேலையையும், முக்கியமாக தமது உத்தமத்தையும், தம்முடைய தகப்பனின் பெயருக்கு ஏற்படுத்தவிருந்த பாதிப்பையும் பற்றி கவலைப்பட்டார். சொல்லப்போனால், முழு மனிதகுலத்தின் எதிர்காலமே அவருடைய கைகளில்தான் இருந்தது! என்றாலும், இயேசு மரிப்பதற்கு சில கணநேரத்திற்கு முன்பு, விதவையாக இருந்த தன் அம்மா மரியாளைப் பற்றி கவலைப்பட்டார். ஆம், தன் சொந்த அம்மாவைப் போல மரியாளை கவனித்துக் கொள்ளும்படி அப்போஸ்தலன் யோவானிடம் இயேசு கேட்டுக்கொண்டார். அந்த அப்போஸ்தலன் பிற்பாடு மரியாளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இவ்வாறு இயேசு தம்முடைய அம்மாவை சரீரப் பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் கவனித்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். சுயநலமற்ற அன்பின் எப்பேர்ப்பட்ட கனிவான வெளிக்காட்டு!
“அவர் மனம் உருகினார்”
8. இயேசுவின் இரக்க குணத்தை விவரிப்பதற்கு பைபிள் பயன்படுத்தும் கிரேக்க வார்த்தையின் அர்த்தம் என்ன?
8 இயேசு தம்முடைய தகப்பனைப் போலவே இரக்க குணம் படைத்தவராக விளங்கினார். துயரத்தில் இருந்தவர்களைப் பார்த்து அவர் மனம் உருகியதால் அவர்களுக்கு உதவ பிரயாசப்பட்டதாக வேதவசனங்கள் விவரிக்கின்றன. இயேசுவின் இரக்கத்தை வர்ணிப்பதற்கு, “மனம் உருகினார்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற ஒரு கிரேக்க வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது. “ஒருவருடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் ஓர் உணர்ச்சியை . . . இது விவரிக்கிறது. கிரேக்க மொழியில் இரக்க உணர்வுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் வலிமையான வார்த்தை இது” என ஓர் அறிஞர் கூறுகிறார். இயேசு ஆழ்ந்த இரக்கத்தால் உந்துவிக்கப்பட்டு செயல்பட்ட சந்தர்ப்பங்கள் சிலவற்றை கவனியுங்கள்.
9, 10. (அ) என்ன காரணங்களால் இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அமைதியான இடத்தைத் தேடி சென்றார்கள்? (ஆ) ஜனக்கூட்டத்தார் தமது தனிமையை கெடுத்தபோது இயேசு எப்படி பிரதிபலித்தார், ஏன்?
9 ஆவிக்குரிய தேவைகளுக்கு கவனம் செலுத்த உந்துவிக்கப்பட்டார். இரக்கம் காண்பிப்பதற்கு எது இயேசுவை முக்கியமாக உந்துவித்தது என்பதை மாற்கு 6:30-34-ல் உள்ள விவரப்பதிவு காட்டுகிறது. அந்தக் காட்சியை மனதில் கற்பனை செய்து பாருங்கள். அப்போஸ்தலர்கள் மிக சந்தோஷமாக இருந்தார்கள், ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்கள் விரிவான பிரசங்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருந்தார்கள். தாங்கள் கண்டதையும் கேட்டதையும் இயேசுவிடம் ஆவலோடு அறிவித்தார்கள். ஆனால் அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது, இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் சாப்பிடக்கூட நேரமில்லை. இயேசு எப்பொழுதும் போலவே கூர்ந்து நோக்குபவராக இருந்ததால், அப்போஸ்தலர்கள் சோர்வடைந்திருந்ததை கவனித்தார். “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்” என அவர்களிடம் சொன்னார். அவ்வாறே ஒரு படகில் ஏறி கலிலேயா கடலின் வடமுனையை கடந்து அமைதலான ஓரிடத்திற்கு சென்றார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தார் அவர்கள் செல்வதை கண்டார்கள். அதைப் பற்றி மற்றவர்களும் கேள்விப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் வடக்கு கரையோரமாக ஓடிச்சென்று அவர்களுடைய படகு வரும் முன்பே அங்கு போய் சேர்ந்துவிட்டார்கள்!
10 தனிமை கெடுக்கப்பட்டதால் இயேசு எரிச்சலடைந்தாரா? இல்லவே இல்லை! ஆயிரக்கணக்கானோர் அவருக்காக காத்திருந்த காட்சி அவருடைய இதயத்தைத் தொட்டது. மாற்கு இவ்வாறு எழுதினார்: “ஏராளமான மக்கள் அங்கே திரண்டு வந்திருந்ததைப் [அவர்] பார்த்தார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் இருந்ததால் அவர் மனம் உருகினார். அதனால், அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.” இயேசு இவர்கள் ஒவ்வொருவரையும் ஆவிக்குரிய தேவை உள்ளவர்களாக கருதினார். வழிநடத்தி செல்லவோ பாதுகாப்பு அளிக்கவோ மேய்ப்பனில்லாமல், ஆதரவின்றி அங்குமிங்கும் அலைந்து திரியும் ஆடுகளைப் போல அவர்கள் இருந்தார்கள். பாமர மக்களை அன்பான மேய்ப்பர்களைப் போல பேணிக் காக்க வேண்டிய மதத் தலைவர்கள் அவர்களை ஈவிரக்கமின்றி ஒதுக்கித் தள்ளியதை இயேசு அறிந்திருந்தார். (யோவான் 7:47-49) அவருடைய இதயம் அந்த மக்களுக்காக பரிதவித்தது, ஆகவே “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி” அவர்களுக்கு போதிக்கத் தொடங்கினார். (லூக்கா 9:11) தாம் கற்பிக்கப் போவதைக் கேட்டு எப்படி பிரதிபலிப்பார்கள் என்பதை அறிவதற்கு முன்பே இயேசு அவர்கள் மீது மனம் உருகியதைக் கவனியுங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த கரிசனை, அந்தக் கூட்டத்தாரிடம் போதித்ததால் வரவில்லை, ஆனால் அப்படி போதிப்பதற்கு அவரை தூண்டியதே அதுதான்.
11, 12. (அ) பைபிள் காலங்களில் தொழுநோயாளிகள் எவ்வாறு கருதப்பட்டார்கள், ஆனால் “உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட” ஒரு மனிதனை இயேசு எப்படி நடத்தினார்? (ஆ) அந்த தொழுநோயாளியை இயேசு தொட்டது அவனை எவ்வாறு பாதித்தது, ஒரு டாக்டருடைய அனுபவம் இதை எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது?
11 வேதனையை தணிக்க உந்துவிக்கப்பட்டார். இயேசு இரக்க குணம் படைத்தவர் என்பதை பல்வேறு வியாதிகளில் அவதிப்பட்டோர் அறிந்திருந்தனர், ஆகவே அவர்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டார்கள். முக்கியமாக ஒரு சம்பவம் இதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இயேசுவை மக்கள் கூட்டம் சூழ்ந்திருந்தபோது, “உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட” ஒருவன் அவரை அணுகினான். (லூக்கா 5:12) பைபிள் காலங்களில், தொழுநோய் மற்றவர்களுக்கு தொற்றாமல் இருப்பதற்காக அந்த நோயாளிகள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். (எண்ணாகமம் 5:1-4) என்றபோதிலும், காலப்போக்கில், கல்நெஞ்சம் படைத்த ரபீக்கள் தொழுநோய் சம்பந்தமாக கெடுபிடியான சட்டங்களை உருவாக்கி தொழுநோயாளிகளை ஒடுக்கினார்கள். a ஆனால் தம்மை அணுகிய தொழுநோயாளியை இயேசு எப்படி நடத்தினார் என்பதை கவனியுங்கள்: “தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து மண்டிபோட்டு, ‘உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்’ என்று சொல்லிக் கெஞ்சினான். அப்போது, அவர் மனம் உருகி, தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, ‘எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு’ என்று சொன்னார். உடனே தொழுநோய் மறைந்து.” (மாற்கு 1:40-42) ஒரு தொழுநோயாளி பொது இடங்களுக்கு வருவது சட்டப்படி குற்றம் என்பதை இயேசு அறிந்திருந்தார். என்றாலும், அவனை ஒதுக்கித் தள்ளுவதற்குப் பதிலாக, இயேசு அவன்மீது மனம் உருகி, ஆச்சரியமான ஒன்றை செய்தார். ஆம், இயேசு அவனை தொட்டார்!
12 அவர் தொட்டபோது அந்த தொழுநோயாளிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இதற்கு ஓர் அனுபவத்தை கவனியுங்கள். தொழுநோய் நிபுணராகிய டாக்டர் பால் பிரான்டு, இந்தியாவில் தன்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு தொழுநோயாளியைப் பற்றி கூறுகிறார். அந்த தொழுநோயாளியைப் பரிசோதித்தபோது அவர் தோள்மீது தன் கைகளை வைத்தார், பின்பு அவர் பெற வேண்டிய சிகிச்சையைப் பற்றி மொழிபெயர்ப்பவர் வாயிலாக விளக்கினார். திடீரென அந்தக் தொழுநோயாளி அழ ஆரம்பித்துவிட்டார். “நான் ஏதாவது தப்பா சொல்லிவிட்டேனா?” என அந்த டாக்டர் கேட்டார். பதிலை மொழிபெயர்ப்பாளர் அந்த இளைஞனுடைய பாஷையில் கேட்டுவிட்டு பிறகு டாக்டரிடம் இவ்வாறு சொன்னார்: “இல்ல, டாக்டர். அவன் தோளின்மீது நீங்கள் கை போட்டதால் அழுவதாக சொல்கிறான். அவன் இங்கு வரும்வரை பல வருஷங்களாக வேறு யாருமே அவனை தொட்டதில்லையாம்.” இயேசு தொட்ட தொழுநோயாளிக்கோ இன்னும் அதிக பயன் உண்டானது. அதாவது அவர் தொட்ட மாத்திரத்தில் அவனுடைய வியாதி மறைந்தது! ஆம், சமுதாயத்தைவிட்டு புறம்பே ஒதுக்கப்பட காரணமாயிருந்த அந்த வியாதி அவனைவிட்டு விலகியது!
13, 14. (அ) நாயீன் நகரத்தை நெருங்கியபோது என்ன ஊர்வலத்தை இயேசு கண்டார், அங்கு நிலவிய வருத்தகரமான சூழல் என்ன? (ஆ) இயேசுவின் இரக்கம் அந்த நாயீன் நகரத்து விதவைக்காக என்ன செய்யும்படி அவரைத் தூண்டியது?
13 துயரத்தை நீக்குவதற்கு உந்துவிக்கப்பட்டார். மற்றவர்களுடைய துயரத்தைக் கண்டு இயேசு மிகவும் நெகிழ்ந்துபோனார். உதாரணமாக, லூக்கா 7:11-15-ல் உள்ள பதிவை கவனியுங்கள். ஏறக்குறைய இயேசுவினுடைய ஊழிய காலத்தின் மத்திபத்தில், நாயீன் என்ற கலிலேய நகரத்தின் புறநகர் பகுதியை அவர் அடைந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அவர் அந்தப் நகரத்தின் வாசலை நெருங்கியபோது ஒரு சவ ஊர்வலத்தைப் பார்த்தார். அது நெஞ்சைப் பிழியும் சோகக் காட்சியாக இருந்தது. ஏனென்றால் விதவையாக இருந்த அந்தத் தாயின் ஒரே மகன் வாலிப வயதிலேயே இறந்துவிட்டான். இப்படிப்பட்ட சவ ஊர்வலம் அவளுக்கு புதிதல்ல, ஒருவேளை தன் கணவனின் சவ ஊர்வலத்தில் அவள் கலந்திருக்கலாம். இப்பொழுது அவளுடைய மகன், அதுவும் ஆதரவாக இருந்த ஒரே மகன் இறந்துவிட்டான். அந்தக் கூட்டத்தில் ஒப்பாரி வைத்தவர்களும் சோக கீதம் இசைத்த வாத்தியக்காரர்களும் இருந்திருக்கலாம். (எரேமியா 9:17, 18; மத்தேயு 9:23) ஆனால் இயேசுவின் பார்வையோ துயரத்தில் துவண்டிருந்த அந்தத் தாயின் மீது விழுந்தது; அவள் தன் மகனின் பாடைக்கு மிக அருகில் நடந்து வந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.
14 மகனை இழந்த தாய்க்காக இயேசு ‘மனம் உருகினார்.’ ஆறுதலளிக்கும் குரலில், “அழாதே” என அவளிடம் கூறினார். அவரே பாடையிடம் சென்று அதை தொட்டார். அதை சுமந்தவர்களும் அங்கிருந்த கூட்டத்தாரும் நின்றுவிட்டனர். உயிரற்ற அந்தப் பையனிடம், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திரு!” என அதிகாரத் தொனியில் இயேசு கூறினார். அப்போது என்ன நடந்தது? ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்தது போல, “இறந்துபோனவன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்.” அதற்குப் பிறகு நெஞ்சைத் தொடும் சம்பவம் நிகழ்ந்தது; ஆம், “இயேசு அவனை அவனுடைய அம்மாவிடம் ஒப்படைத்தார்.”
15. (அ) இயேசு மனம் உருகியதைப் பற்றிய பைபிள் விவரப்பதிவுகள், இரக்கமெனும் குணத்திற்கும் செயலுக்கும் இடையே இருக்கும் என்ன தொடர்பை காட்டுகின்றன? (ஆ) இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?
15 இந்தப் பதிவுகளிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோம்? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இரக்கமெனும் குணத்துக்கும் செயலுக்கும் இடையே இருந்த தொடர்பை கவனியுங்கள். மற்றவர்களுடைய கஷ்டத்தைக் கண்டு இயேசுவால் இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை, அதோடு அதற்காக எதுவும் செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. அவருடைய முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? நற்செய்தியைப் பிரசங்கித்து சீஷராக்கும் பொறுப்பு கிறிஸ்தவர்களான நமக்கு இருக்கிறது. மிக முக்கியமாக, கடவுள் மீதுள்ள அன்பு நம்மை தூண்டுவிக்கிறது. ஆனால் அவ்வேலையைச் செய்ய இரக்கமும் அவசியம் என்பதை மறந்துவிடாதிருப்போமாக. இயேசுவைப் போல மக்களுக்காக பரிதாபப்படும் போது, அவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய நம் இதயம் நம்மை உந்துவிக்கும். (மத்தேயு 22:37-39) துன்பப்படுகிற அல்லது துக்கப்படுகிற சக விசுவாசிகளுக்கு இரக்கம் காண்பிப்பதைப் பற்றி என்ன சொல்லலாம்? சரீரப்பிரகாரமான வேதனையை நம்மால் அற்புதமாக குணப்படுத்தவும் முடியாது, இறந்தவர்களை உயிர்த்தெழுப்பவும் முடியாது. ஆனால் நம்முடைய அக்கறையை வெளிப்படுத்துவதற்கு அல்லது நடைமுறையான உதவியை அளிப்பதற்கு முன்வந்தால் இரக்கத்தை நாம் செயலில் காண்பிக்க முடியும்.—எபேசியர் 4:32.
“தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள்”
16. சித்திரவதைக் கம்பத்தில் இருந்தபோதும் மன்னிக்க தயாராயிருக்கும் குணத்தை இயேசு எவ்வாறு காட்டினார்?
16 மற்றொரு விதத்தில் இயேசு தமது தகப்பனின் அன்பை பூரணமாக பிரதிபலித்தார், அதாவது ‘மன்னிக்கத் தயாராக இருந்தார்.’ (சங்கீதம் 86:5) சித்திரவதைக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த சமயத்திலும்கூட இந்தக் குணத்தை தெளிவாக காட்டினார். கால்களிலும் கைகளிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு, அவமானமிக்க மரணத்திற்கு ஆளாக்கப்பட்டபோது, இயேசு என்ன சொன்னார்? தமக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கியவர்களை தண்டிக்கும்படி யெகோவாவை கூப்பிட்டாரா? இல்லை, அதற்கு நேர்மாறானதையே செய்தார்; “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை” என குறிப்பிட்டார்.—லூக்கா 23:34. b
17-19. பேதுரு தம்மை மூன்று முறை மறுதலித்ததை மன்னித்துவிட்டதாக இயேசு எவ்வாறு காண்பித்தார்?
17 இயேசுவின் மன்னிக்கும் குணத்திற்கு இதைவிட சிறந்த உதாரணம் அப்போஸ்தலன் பேதுருவை அவர் நடத்திய விதமாகும். இயேசுவை பேதுரு மிகவும் நேசித்தார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நிசான் 14 அன்று, அதாவது இயேசுவின் மானிட வாழ்க்கையின் கடைசி இரவு அன்று, பேதுரு அவரிடம் இவ்வாறு கூறினார்: “எஜமானே, உங்களோடு சிறைக்குப் போவதற்கும் சாவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.” ஆனால் சில மணிநேரத்திற்குப் பிறகு, இயேசுவை தெரியவே தெரியாது என்றுகூட சொல்லி மூன்று தடவை மறுதலித்தார்! பேதுரு மூன்றாவது தடவை மறுதலித்தபோது என்ன நடந்தது என்பதை பைபிள் நமக்கு சொல்கிறது: “இயேசு திரும்பி, பேதுருவை நேராகப் பார்த்தார்.” தான் மிகப் பெரிய பாவத்தை செய்துவிட்டதை உணர்ந்த பேதுரு “வெளியே போய்க் கதறி அழுதார்.” அன்றைய தினம் இயேசு இறந்தபோது, ‘என்னுடைய எஜமான் என்னை மன்னித்தாரா?’ என இந்த அப்போஸ்தலன் யோசித்திருக்கலாம்.—லூக்கா 22:33, 61, 62.
18 பதிலுக்காக பேதுரு நெடுநாள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நிசான் 16 காலையில் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார், அன்றே பேதுருவை தனிப்பட்ட விதமாக சந்தித்தார். (லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:4-8) தன்னை அப்பட்டமாக மறுதலித்த இந்த அப்போஸ்தலன் மீது இயேசு ஏன் விசேஷ கவனம் செலுத்தினார்? இன்னும் அவரை நேசிப்பதையும் உயர்வாக மதிப்பதையும் மனந்திரும்பிய பேதுருவுக்கு உறுதியளிப்பதற்கு இயேசு விரும்பியிருக்கலாம். அதேசமயத்தில், பேதுருவுக்கு உறுதியளிக்க இயேசு இன்னும் அதிகத்தை செய்தார்.
19 கொஞ்ச நாட்களில், கலிலேயா கடற்கரையில் இயேசு தமது சீஷர்களுக்கு தரிசனமானார். இந்தச் சந்தர்ப்பத்தில், பேதுரு தம்மிடம் வைத்திருந்த அன்பைக் குறித்து அவரிடம் (தம்மை மூன்று முறை மறுதலித்தவரிடம்) இயேசு மூன்று முறை கேள்வி கேட்டார்; மூன்றாவது முறைக்குப் பிறகு, பேதுரு இவ்வாறு பதிலளித்தார்: “எஜமானே, உங்களுக்கு எல்லாமே தெரியும். உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பதும் தெரியும்.” இதயத்தில் இருப்பதை அறியும் ஆற்றல் படைத்த இயேசு, தம் மீது பேதுரு வைத்திருந்த அன்பையும் பாசத்தையும் நன்கு அறிந்திருந்தார். என்றாலும், அந்த அன்பை உறுதிப்படுத்த பேதுருவுக்கு இயேசு வாய்ப்பளித்தார். அதோடு, தமது “ஆட்டுக்குட்டிகளுக்கு” ‘உணவு கொடுத்து’ அவற்றை ‘மேய்க்கும்’ பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார். (யோவான் 21:15-17) இதற்கு முன்னரே பிரசங்கிக்கும் நியமிப்பை பேதுரு பெற்றிருந்தார். (லூக்கா 5:10) இப்பொழுதோ, இயேசு அவரிடம் இன்னும் பெரிய உத்தரவாதத்தை, அதாவது கிறிஸ்துவை பின்பற்றுவோரை கவனித்துக் கொள்ளும் உத்தரவாதத்தை கொடுத்தார்; இவ்வாறு அவர் மீது தாம் வைத்திருந்த நம்பிக்கையை அபாரமாக வெளிப்படுத்தினார். அதற்குப் பின் சீக்கிரத்தில், சீஷராக்கும் வேலையில் ஒரு முக்கியமான பொறுப்பையும் பேதுருவுக்கு இயேசு கொடுத்தார். (அப்போஸ்தலர் 2:1-41) இயேசு தன்னை மன்னித்துவிட்டார், இன்னும் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டபோது பேதுரு எந்தளவு நிம்மதி அடைந்திருப்பார்!
‘கிறிஸ்துவின் அன்பை தெரிந்திருக்கிறீர்களா?’
20, 21. நாம் எவ்வாறு “கிறிஸ்துவின் அன்பை” முழுமையாக ‘தெரிந்துகொள்ள’ முடியும்?
20 உண்மையில், கிறிஸ்துவின் அன்பை யெகோவாவின் வார்த்தை அருமையாக வர்ணிக்கிறது. ஆனால் இயேசுவின் அன்பிற்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? ‘அறிவைவிட மிக மிக உயர்ந்த கிறிஸ்துவின் அன்பை தெரிந்துகொள்ளும்படி’ பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (எபேசியர் 3:19) நாம் பார்த்தபடி, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய சுவிசேஷ பதிவுகள் கிறிஸ்துவின் அன்பைப் பற்றி நமக்கு நிறைய கற்பிக்கின்றன. என்றபோதிலும், “கிறிஸ்துவின் அன்பை” முழுமையாக தெரிந்துகொள்வதற்கு அவரைப் பற்றி பைபிள் சொல்வதைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது.
21 “தெரிந்துகொள்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “நடைமுறையில், அனுபவ ரீதியில்” அறிந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. இயேசு காண்பித்தது போன்ற அன்பை நாம் காண்பிக்க வேண்டும், அதாவது மற்றவர்களுக்காக சுயநலமின்றி நம்மையே அளிக்கிற, அவர்களுடைய தேவைகளை இரக்கத்தோடு பூர்த்தி செய்கிற, நம்முடைய இதயத்திலிருந்து அவர்களை மன்னிக்கிற அன்பை நாம் காட்டும்போது, நாம் அவருடைய உணர்ச்சிகளை உள்ளப்பூர்வமாக புரிந்துகொள்ளலாம். இந்த முறையில், “அறிவைவிட மிக மிக உயர்ந்த கிறிஸ்துவின் அன்பை” நாம் அனுபவ ரீதியில் தெரிந்துகொள்கிறோம். நாம் எந்தளவுக்கு கிறிஸ்துவைப் போல ஆகிறோமோ அந்தளவுக்கு இயேசு பரிபூரணமாக பின்பற்றிய நம் அன்பான கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்கி வருவோம்.
a ரபீக்களின் சட்டப்படி, ஒருவரும் தொழுநோயாளியின் பக்கத்தில் நான்கு முழ தூரத்திற்கு (சுமார் ஆறு அடிக்கு) வரக் கூடாது. அதுவும் காற்றடித்தால், அந்த நோயாளி குறைந்தபட்சம் 100 முழ தூரம் (சுமார் 150 அடி) தள்ளி நிற்க வேண்டும். தொழுநோயாளிகளிடமிருந்து ஒரு ரபீ ஒளிந்து கொண்டதாகவும், மற்றொரு ரபீ அவர்களை தூரப் போகும்படி செய்வதற்கு கற்களை வீசி எறிந்ததாகவும் மிட்ராஷ் ரப்பா கூறுகிறது. இவ்வாறு, இழிவானவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் கருதப்பட்டு, ஒதுக்கப்படும் வேதனையை தொழுநோயாளிகள் அனுபவித்தனர்.
b லூக்கா 23:34-ல் பதிவு செய்யப்பட்டுள்ள வசனத்தின் முற்பகுதி பூர்வ கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றில் இல்லை. ஆனால், அதிகாரப்பூர்வமான மற்ற அநேக கையெழுத்துப் பிரதிகளில் இந்த வார்த்தைகள் இருப்பதால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலும் எண்ணற்ற பிற மொழிபெயர்ப்புகளிலும் அவை சேர்க்கப்பட்டுள்ளன. தன்னை கொலை செய்த ரோம போர்வீரர்களைப் பற்றி இயேசு பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. தாங்கள் செய்வது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது, இயேசு உண்மையில் யார் என்பதை அறியாமலிருந்தார்கள். அதோடு, தன்னை கொலை செய்யும்படி சொன்ன சில யூதர்களையும் இயேசு மனதில் வைத்து இதை சொல்லியிருக்கலாம். ஏனென்றால், சில யூதர்கள் பிற்பாடு அவர்மீது விசுவாசம் வைத்தார்கள். (அப்போஸ்தலர் 2:36-38) ஆனால், அவரை தண்டிப்பதற்குத் தூண்டிய மதத் தலைவர்கள் மிகவும் கண்டிக்கப்படத்தக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அவர்கள் வேண்டுமென்றே தீய நோக்குடன் செயல்பட்டார்கள். ஆகவே அவர்களில் பெரும்பாலோர் மன்னிப்பைப் பெற வழியே இல்லை.—யோவான் 11:45-53.