Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம்10

பிசாசுகளைவிட இயேசு பலமானவர்

பிசாசுகளைவிட இயேசு பலமானவர்

கடவுளுடைய ஒரு தூதன் ஏன் பிசாசாகிய சாத்தானாக மாறினான் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— எல்லாரும் தன்னை வணங்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். இதனாலேயே கடவுளுடைய எதிரி ஆனான். மற்ற தூதர்கள் சாத்தான் பக்கம் சேர்ந்துகொண்டார்களா?— ஆமாம் அவன் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை ‘சாத்தானுடைய தூதர்கள்’ அல்லது பிசாசுகள் என்று பைபிள் அழைக்கிறது.—வெளிப்படுத்துதல் 12:9.

இந்தக் கெட்ட தூதர்களாகிய பிசாசுகள் கடவுளை நம்புகின்றனவா?— ‘கடவுள் இருப்பதை பிசாசுகள் நம்புகின்றன’ என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:19) ஆனால் இப்போது அவை பயந்துகொண்டு இருக்கின்றன. ஏனென்றால் கெட்ட காரியங்கள் செய்ததற்காக கடவுள் தண்டிக்கப் போகிறார் என்று அந்தப் பிசாசுகளுக்குத் தெரியும். அவை என்னென்ன கெட்ட காரியங்கள் செய்திருக்கின்றன தெரியுமா?—

அவை தங்கள் வீடாகிய பரலோகத்தை விட்டு இந்தப் பூமிக்கு வந்து மனுஷ ரூபத்தில் வாழ்ந்தன என்று பைபிள் சொல்கிறது. ஏன் அப்படிச் செய்தன தெரியுமா? ஏனென்றால் பூமியில் இருந்த அழகான பெண்களோடு உடலுறவு கொள்ள அவை விரும்பின. (ஆதியாகமம் 6:1, 2; யூதா 6) உடலுறவு பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?—

ஒரு ஆணும் பெண்ணும் மிகவும் நெருங்கி ஒன்றுசேருவதுதான் உடலுறவு. அதன் பிறகு பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தை வளர ஆரம்பிக்கும். ஆனால் தேவதூதர்கள் உடலுறவு கொள்வது தவறு. கல்யாணம் செய்துகொண்ட ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அப்போதுதான் குழந்தை பிறக்கும்போது, கணவனும் மனைவியும் அதை வளர்க்க முடியும்.

இந்தத் தேவதூதர்கள் என்ன கெட்ட செயலை செய்தார்கள்?

தேவதூதர்கள் மனித உடலில் இந்தப் பூமிக்கு வந்து பெண்களோடு உடலுறவு கொண்டனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ராட்சசர்களாக வளர்ந்தனர். அவர்கள் பயங்கரமான கொடுமைகளை செய்தனர். மக்களை அடித்து காயப்படுத்தினர். ஆகவே இந்த ராட்சசர்களையும் கெட்டவர்கள் எல்லாரையும் அழிப்பதற்காக கடவுள் ஜலப்பிரளயத்தை, அதாவது ஒரு பெரிய வெள்ளத்தை கொண்டு வந்தார். ஆனால் சரியானதை செய்த சிலரைக் காப்பாற்ற எண்ணினார். ஆகவே ஒரு பேழையை, அதாவது பெரிய கப்பலை கட்டும்படி நோவா என்பவரிடம் சொன்னார். அந்த சமயத்தில் நடந்ததை நாம் நினைவில் வைப்பது முக்கியம் என்று பெரிய போதகர்கூட சொன்னார்.—ஆதியாகமம் 6:3, 4, 13, 14; லூக்கா 17:26, 27.

வெள்ளம் வந்தபோது அந்தக் கெட்ட தூதர்களுக்கு என்ன நடந்தது தெரியுமா?— அவர்கள் மனித உடல்களை விட்டுவிட்டு மறுபடியும் பரலோகத்திற்கு சென்றனர். அதன் பின்னர் கடவுளுடைய தூதர்களாக இருக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே சாத்தானுடைய தூதர்களாக, அதாவது பிசாசுகளாக ஆனார்கள். அவர்களது பிள்ளைகளான ராட்சசர்களுக்கு என்ன ஆனது?— அவர்கள் வெள்ளத்தில் மூழ்கி செத்துப் போனார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியாத மற்ற ஜனங்களும் செத்துப் போனார்கள்.

முன்பைவிட இப்போது ஏன் இந்தப் பூமியில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன?

அதுமுதல், மனிதர்களைப் போல் மாறுவதற்கு பிசாசுகளை கடவுள் அனுமதிக்கவே இல்லை. பிசாசுகளை நம்மால் பார்க்க முடியாதுதான். ஆனால் மிகவும் கெட்ட காரியங்களை செய்ய அவை இன்னும் மனிதர்களை தூண்டிவிடுகின்றன. முன்பைவிட இப்போது இன்னும் அதிக தொந்தரவுகளை ஏற்படுத்துகின்றன. ஏனென்றால் அவை பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

நம்மால் ஏன் பிசாசுகளைப் பார்க்க முடியாது என்று தெரியுமா?— ஏனென்றால் அவை ஆவி ஆட்கள். நம் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் அவை இருப்பது நிஜம். சாத்தான் ‘உலகம் முழுவதும் உள்ள மக்களை ஏமாற்றுகிறான்’ என்றும், அவனுக்கு பிசாசுகள் உதவி செய்கின்றன என்றும் பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 12:9, 12.

சாத்தானும் அவனோடு சேர்ந்த பிசாசுகளும் நம்மைக்கூட ஏமாற்ற முடியுமா?— முடியும், நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அவை நம்மை ஏமாற்றும். ஆனால் நாம் பயப்பட வேண்டியதில்லை. ‘சாத்தானுக்கு என்மேல் அதிகாரம் இல்லை’ என்று பெரிய போதகர் சொன்னார். நாம் கடவுளிடம் நெருங்கி இருந்தால், சாத்தானிடமிருந்தும் பிசாசுகளிடமிருந்தும் அவர் நம்மை பாதுகாப்பார்.—யோவான் 14:30.

என்னென்ன கெட்ட காரியங்களை செய்யும்படி பிசாசுகள் நம்மை தூண்டும் என்று நாம் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். ஆகவே அதைப் பற்றி யோசித்துப் பார். பிசாசுகள் பூமிக்கு வந்தபோது என்ன கெட்ட காரியங்களைச் செய்தன?— வெள்ளம் வருவதற்கு முன்பு அவை பெண்களோடு உடலுறவு கொண்டன. ஆனால் தேவதூதர்கள் இப்படி செய்வது தவறு. இன்று, உடலுறவு சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்களை மக்கள் மீற வேண்டும் என்றே பிசாசுகள் விரும்புகின்றன. ஆனால் யார் மட்டும்தான் உடலுறவு கொள்ள வேண்டும்?— சரியாக சொன்னாய், கல்யாணம் செய்தவர்கள் மட்டும்தான் உடலுறவு கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சின்ன பையன்களும் பெண்களும் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் அது தவறு. ஆண்களுடைய பிறப்புறுப்பாகிய ‘ஆண்குறி’யைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (லேவியராகமம் 15:1-3) பெண்களுடைய பிறப்புறுப்பு பெண்குறி என்று அழைக்கப்படுகிறது. யெகோவா ஒரு விசேஷ நோக்கத்தோடு இந்த உடல் உறுப்புகளை படைத்தார்; கல்யாணம் செய்திருப்பவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே அவற்றைப் படைத்தார். யெகோவாவுக்கு பிடிக்காத காரியங்களை மக்கள் செய்யும்போது பிசாசுகள் சந்தோஷப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு பையனும் பெண்ணும் ஒருவர் மற்றவருடைய பிறப்புறுப்புகளோடு விளையாடுவதைப் பார்ப்பது பிசாசுகளுக்குப் பிடிக்கும். நாம் பிசாசுகளை சந்தோஷப்படுத்த விரும்புவதில்லை, சரிதானே?—

இன்னொரு காரியமும் பிசாசுகளுக்குப் பிடிக்கும். ஆனால் அதையும் யெகோவா வெறுக்கிறார். அது என்னவென்று உனக்குத் தெரியுமா?— அதுதான் வன்முறை. (சங்கீதம் 11:5) மக்கள் கொடூரமாக நடந்துகொண்டு மற்றவர்களை காயப்படுத்துவதுதான் வன்முறை. பிசாசுகளின் பிள்ளைகளான ராட்சசர்கள் அதைத்தான் செய்தார்கள், இது உனக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா?

மக்களை பயமுறுத்துவதுகூட பிசாசுகளுக்குப் பிடிக்கும். சிலசமயம் இறந்துபோன மக்களைப் போல் அவை நடிக்கின்றன. அவர்களைப் போலவே பேசுகின்றன. இதன் மூலம், இறந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள், நம்மோடு அவர்களால் பேச முடியும் என்று அநேகரை நம்ப வைத்து ஏமாற்றுகின்றன. ஆமாம், செத்தவர்கள் ஆவிகளாக சுற்றிக் கொண்டிருப்பதாக அநேகரை பிசாசுகள் நம்ப வைத்திருக்கின்றன.

ஆகவே சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் நம்மை ஏமாற்றாதபடி நாம் உஷாராக இருக்க வேண்டும். ‘சாத்தான் தன்னை ஒரு நல்ல தூதன் போல் காட்டிக் கொள்கிறான், அவனுடைய ஆட்களும் அதையேதான் செய்கிறார்கள்’ என்று பைபிள் எச்சரிக்கிறது. (2 கொரிந்தியர் 11:14, 15) ஆனால், பிசாசுகள் உண்மையில் ரொம்ப கெட்டவை. நம்மையும் அவற்றைப் போல் ஆக்குவதற்கு என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்.

வன்முறை, தவறான உடலுறவு, ஆவிகள், பேய்கள் போன்ற காரியங்களைப் பற்றி மக்கள் எதிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்?— டிவி, சினிமா, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட், காமிக்ஸ் போன்றவற்றிலிருந்து தானே கற்றுக்கொள்கிறார்கள்? இவையெல்லாம் கடவுளிடம் நெருங்கிச் செல்ல நமக்கு உதவுகின்றனவா? அல்லது சாத்தானிடமும் அவனுடைய பிசாசுகளிடமும் நெருங்கிச் செல்ல உதவுகின்றனவா? நீ என்ன நினைக்கிறாய்?—

வன்முறையை பார்த்தால் நமக்கு என்ன ஆகும்?

கெட்ட காரியங்களை நாம் பார்க்கவும் கேட்கவும் வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள்?— ஆமாம், சாத்தானும் அவனுடைய பிசாசுகளும்தான். ஆகவே நீயும் நானும் என்ன செய்ய வேண்டும்?— நமக்கு நல்லது செய்யும் காரியங்களையே நாம் படிக்க, கேட்க, அல்லது பார்க்க வேண்டும். யெகோவாவை சேவிக்க அவை நமக்கு உதவ வேண்டும். இப்படிப்பட்ட சில நல்ல காரியங்களை உன்னால் யோசிக்க முடிகிறதா?—

நாம் என்ன செய்வது நல்லது?

நாம் நல்லது செய்தால், பிசாசுகளைப் பற்றி பயப்பட வேண்டியதே இல்லை. அவற்றைவிட இயேசு பலமானவர். அவை இயேசுவைக் கண்டு பயப்படுகின்றன. ஒருமுறை, ‘எங்களை அழிக்கவா வந்திருக்கிறீர்?’ என்று இயேசுவைப் பார்த்து பிசாசுகள் கேட்டன. (மாற்கு 1:24) சாத்தானையும் அவனது பிசாசுகளையும் இயேசு அழிப்பதற்கான காலம் வரும்போது நாம் ரொம்ப சந்தோஷப்படுவோம் இல்லையா?— அதுவரை, பிசாசுகளிடமிருந்து இயேசு நம்மை கண்டிப்பாகக் காப்பாற்றுவார். ஆனால் நாம் அவரிடமும் அவருடைய பரலோக தந்தையிடமும் நெருக்கமாக இருக்க வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பைபிளில் வாசித்துப் பார்க்கலாம்: 1 பேதுரு 5:8, 9; யாக்கோபு 4:7, 8.