Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 35

நாம் இறந்தால் உயிர்த்தெழுப்பப்படுவோம்!

நாம் இறந்தால் உயிர்த்தெழுப்பப்படுவோம்!

நாம் இறந்துபோனால் கடவுள் நம்மை உயிர்த்தெழுப்ப, அதாவது மறுபடியும் உயிருக்குக் கொண்டுவர விரும்புவாரா?— விரும்புவார் என யோபு என்பவர் நம்பினார். ஆகவே தான் இறக்கப்போவதாக யோபு நினைத்தபோது, ‘நீர் என்னைக் கூப்பிடுவீர், நான் உங்களுக்கு பதில் சொல்வேன்’ என்று கடவுளிடம் சொன்னார். யெகோவா தன்னை உயிர்த்தெழுப்ப ஏங்குவார், அதாவது மிகவும் விரும்புவார் என யோபு சொன்னார்.—யோபு 14:14, 15.

இயேசு தன் தகப்பன் யெகோவா தேவனைப் போலவே இருக்கிறார். நமக்கு உதவ இயேசுவும் விரும்புகிறார். குஷ்டரோகி ஒருவன் அவரிடம், ‘உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னை சுத்தமாக்க முடியும்’ என்று சொன்னான். அதற்கு இயேசு, ‘எனக்கு விருப்பம் உண்டு’ என்றார். பிறகு அந்தக் குஷ்டரோகியைக் குணப்படுத்தினார்.—மாற்கு 1:40-42.

Elisha resurrects a boy

பிள்ளைகள் மீது அன்பு காட்டுவதை இயேசு தன் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டார். ரொம்ப காலத்திற்கு முன்பு யெகோவா தன் ஊழியர்களைப் பயன்படுத்தி இரு முறை சிறு பிள்ளைகளை உயிர்த்தெழுப்பினார். எலியா, தன்னை நன்கு உபசரித்த பெண்ணின் மகனை உயிர்த்தெழுப்பும்படி யெகோவாவை கெஞ்சிக் கேட்டார். யெகோவா அதைச் செய்தார். இன்னொரு ஊழியரான எலிசாவின் மூலமும் யெகோவா ஒரு சிறுவனை உயிர்த்தெழுப்பினார்.—1 இராஜாக்கள் 17:17-24; 2 இராஜாக்கள் 4:32-37.

சிறுபிள்ளைகள் மீது அன்பு இருப்பதை யெகோவா எவ்வாறு காட்டினார்?

யெகோவா நம்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை அறிவது சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?— நாம் உயிரோடு இருக்கும்போது மட்டுமே அவர் நம்மைப் பற்றி நினைப்பதில்லை. நாம் செத்துவிட்டாலும் நம்மைப் பற்றி நினைப்பார். அவர் தனக்கு விருப்பமானவர்கள் இறந்தாலும் அவர்களை உயிருள்ளவர்களாக கருதுகிறார் என்று இயேசு சொன்னார். (லூக்கா 20:38) ‘மரணமானாலும், ஜீவனானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும் கடவுளுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்க முடியாது’ என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 8:38, 39.

யெகோவா சிறு பிள்ளைகள் மீது அக்கறையாக இருக்கிறார் என்பதை இயேசு பூமியில் இருந்தபோது காட்டினார். கடவுளைப் பற்றி பிள்ளைகளிடம் பேச இயேசு நேரத்தை ஒதுக்கியது உனக்கு நினைவிருக்கும். ஆனால் இறந்த பிள்ளைகளை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவரும் சக்தியை இயேசுவுக்கு கடவுள் கொடுத்தது உனக்குத் தெரியுமா?— ஒரு முறை யவீரு என்ற ஒருவரின் 12 வயது மகளை இயேசு உயிர்த்தெழுப்பினார். அந்தச் சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.

யவீரு தன் மனைவியோடும் ஒரே மகளோடும் கலிலேயாக் கடலுக்குப் பக்கத்தில் வசித்து வந்தார். ஒருநாள் அந்தச் சிறுமியின் உடல்நிலை ரொம்பவும் மோசமானது. அவள் சாகப்போவதை யவீரு உணர்ந்தார். அப்போது இயேசுவின் ஞாபகம் அவருக்கு வந்தது. அந்த அருமையானவரால் மக்களை குணப்படுத்த முடியும் என யவீரு கேள்விப்பட்டிருந்தார். ஆகவே அவர் இயேசுவைத் தேடிச் சென்றார். கலிலேயாக் கடற்கரையில் இயேசு அநேகருக்கு கற்பித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

யவீரு அந்தக் கூட்டத்தின் நடுவே சென்று இயேசுவுக்கு முன் மண்டியிட்டார். ‘என்னுடைய செல்ல மகள் ரொம்பவும் சுகமில்லாமல் இருக்கிறாள். தயவுசெய்து நீங்கள் வந்து உதவி செய்ய முடியுமா? உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்’ என்றார். உடனடியாக இயேசு அவரோடு சென்றார். பெரிய போதகரைப் பார்க்க வந்திருந்த கூட்டத்தாரும் அவருக்குப் பின் சென்றனர். ஆனால் கொஞ்ச தூரம் போன பிறகு யவீருவின் வீட்டிலிருந்து சில ஆட்கள் வந்து, ‘உங்கள் மகள் இறந்துவிட்டாள்! இனியும் போதகரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?’ என்றார்கள்.

அந்த ஆட்கள் சொன்ன விஷயம் இயேசுவின் காதில் விழுந்தது. தனது ஒரே மகளை இழந்த யவீரு எந்தளவு வேதனைப்பட்டிருப்பார் என்று அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, ‘பயப்படாதே. கடவுள் மீது விசுவாசம் வை, உன் மகள் பிழைப்பாள்’ என்றார். பிறகு அவர்கள் யவீருவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். குடும்ப நண்பர்கள் எல்லாரும் அழுது கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுமி இறந்துபோனதால் மிகவும் வருத்தப்பட்டார்கள். ஆனால் இயேசு அவர்களிடம், ‘அழாதீர்கள். இந்தச் சிறுமி இறக்கவில்லை, வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கிறாள்’ என்றார்.

ஆனால் இயேசு அப்படி சொன்னபோது அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் அந்தச் சிறுமி இறந்துவிட்டது அவர்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அவள் தூங்கிக் கொண்டிருப்பதாக இயேசு சொன்னார் என்று நினைக்கிறாய்?— அந்த மக்களுக்கு என்ன பாடம் கற்பிக்க அவர் விரும்பியிருப்பார்?— மரணம் என்பது ஆழ்ந்த தூக்கத்தைப் போன்றது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினார். தூங்கிக் கொண்டிருப்பவரை எவ்வாறு நம்மால் சுலபமாக எழுப்ப முடியுமோ அப்படியே இறந்தவர்களை கடவுளுடைய சக்தியின் மூலம் தன்னால் உயிர்த்தெழுப்ப முடியும் என்பதை அவர்களுக்கு கற்பிக்க விரும்பினார்.

யவீருவின் மகளை இயேசு உயிர்த்தெழுப்பியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

வீட்டிலிருந்த எல்லாரையும் இயேசு வெளியே போகச் சொன்னார். அவருடைய அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு, யோவான், அந்த சிறுமியின் அப்பா, அம்மா ஆகியவர்கள் மட்டுமே அங்கே இருந்தார்கள். பிறகு அவர் அந்தச் சிறுமியின் பக்கத்தில் சென்று, அவளது கையைப் பிடித்து, ‘சிறுமியே, எழுந்திரு!’ என்றார். உடனடியாக அவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்! அவளது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.—மாற்கு 5:21-24, 35-43; லூக்கா 8:40-42, 49-56.

இதைக் கொஞ்சம் யோசித்துப் பார். இயேசுவினால் அந்தச் சிறுமியை உயிர்த்தெழுப்ப முடிந்ததால், மற்றவர்களையும் அவரால் உயிர்த்தெழுப்ப முடியும் அல்லவா?— அவர் உண்மையிலேயே மற்றவர்களை உயிர்த்தெழுப்புவார் என்று நினைக்கிறாயா?— ஆமாம், அவர் உண்மையில் அதைச் செய்வார். அவரே இப்படி சொன்னார்: ‘ஞாபகார்த்த கல்லறைகளிலுள்ள எல்லாரும் என் சத்தத்தைக் கேட்டு வெளியே வரும் காலம் வரப்போகிறது.’—யோவான் 5:28, 29.

மக்களை உயிர்த்தெழுப்ப இயேசு விரும்புகிறார் என நீ நினைக்கிறாயா?— பைபிளில் உள்ள மற்றொரு உதாரணம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும். சவ அடக்கத்தின்போது அழுது புலம்பும் மக்களைப் பற்றி இயேசு எவ்வாறு உணருகிறார் என்பதை நாயீன் ஊருக்குப் பக்கத்தில் நடந்த ஒரு சம்பவம் காட்டுகிறது.

ஒரு பெண் தன் மகனின் சவ அடக்க ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தாள். அந்தக் கூட்டம் நாயீன் என்ற ஊருக்கு வெளியே சென்று கொண்டிருந்தது. கொஞ்ச காலத்திற்கு முன்புதான் அவளுடைய கணவன் இறந்தார், இப்போது அவளுடைய ஒரே மகனும் இறந்துவிட்டான். அதனால் அவள் ரொம்பவும் வேதனையோடு இருந்தாள்! நாயீன் ஊரிலிருந்த நிறைய பேர் அந்த சவ அடக்க ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அந்தத் தாய் அழுது கொண்டிருந்தாள். கூட்டத்தில் இருந்தவர்களால் அவளை எவ்விதத்திலும் ஆறுதல்படுத்த முடியவில்லை.

அப்போது இயேசுவும் அவரது சீஷர்களும் நாயீன் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஊரின் வாசலுக்குப் பக்கத்தில் அவர்கள் அந்த சவ அடக்க ஊர்வலத்தைப் பார்த்தார்கள். அந்தப் பெண் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தபோது இயேசு மனதுருகினார். அவள் வேதனையில் துடித்ததைப் பார்த்து மனம் நெகிழ்ந்துபோனார். அவளுக்கு உதவி செய்ய விரும்பினார்.

ஆகவே கனிவோடும், அவள் கேட்கும் விதத்தில் சற்று உறுதியோடும், “அழாதே” என்று கூறினார். அவர் பேசிய விதமும் செயல்பட்ட விதமும் எல்லாரின் கவனத்தையும் கவர்ந்தது. இயேசு பிணத்தின் அருகே போனார். என்ன செய்யப் போகிறார் என அனைவரும் யோசித்திருக்கலாம். அப்பொழுது அவர் அதிகாரத்தோடு, “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். இறந்தவன் உடனடியாக எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான்!—லூக்கா 7:11-17.

அந்தப் பெண் எப்படி உணர்ந்திருப்பாள் என்று யோசித்துப் பார்! அன்பானவர் இறந்த பிறகு மறுபடியும் உயிரோடு வந்தால் உனக்கு எப்படி இருக்கும்?— இயேசு மக்களை உண்மையிலேயே நேசிக்கிறார் என்றும் அவர்களுக்கு உதவ விரும்புகிறார் என்றும் இது காட்டுகிறது அல்லவா?— இறந்தவர்களை கடவுளுடைய புதிய உலகில் மறுபடியும் உயிரோடு வரவேற்பது எவ்வளவு அருமையாக இருக்கும்!—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.

இந்தப் பெண்ணின் ஒரே மகனுடைய உயிர்த்தெழுதல் எதைக் காட்டுகிறது?

நமக்குத் தெரிந்த சிலரும் அப்போது உயிரோடு வருவார்கள். அவர்களில் பிள்ளைகளும் இருப்பார்கள். அவர்களை நம்மால் அடையாளம் காண முடியும். இயேசு தன் மகளை உயிர்த்தெழுப்பியபோது யவீரு அவளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததைப் போல்தான் அது இருக்கும். மற்றவர்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்திருக்கலாம். ஆனால் அவ்வளவு காலத்திற்கு முன்பு வாழ்ந்திருந்தாலும் அவர்களை கடவுள் மறக்கமாட்டார்.

யெகோவா தேவனும் அவருடைய மகன் இயேசுவும் நம்மை மிகவும் நேசிக்கிறார்கள் என்று அறிவது சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?— நாம் சில ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, என்றென்றும் வாழ வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்!

இறந்தவர்களுக்கு இருக்கும் அருமையான நம்பிக்கையைப் பற்றி இப்போது பைபிளில் வாசிக்கலாம். ஏசாயா 25:8; அப்போஸ்தலர் 24:15; 1 கொரிந்தியர் 15:20-22.