Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 34

சாகும்போது நமக்கு என்ன நடக்கும்?

சாகும்போது நமக்கு என்ன நடக்கும்?

இன்று மக்கள் வயதாகி, வியாதிப்பட்டு, கடைசியில் சாவது உனக்குத் தெரியும். சில பிள்ளைகள்கூட சாகிறார்கள். சாவைப் பற்றி அல்லது ஏற்கெனவே செத்தவர்களைப் பற்றி நீ பயப்பட வேண்டுமா?— நாம் சாகும்போது என்ன நடக்கிறது தெரியுமா?—

இறந்துபோய் மறுபடியும் உயிருக்கு வந்த அனுபவம் இன்று வாழும் யாருக்குமே இல்லை; ஆகவே இறந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் பெரிய போதகரான இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது அப்படிப்பட்ட ஒருவர் வாழ்ந்தார். அவரைப் பற்றி வாசிப்பதன் மூலம் இறந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம். அந்த மனிதர் இயேசுவின் நண்பர். எருசலேமுக்குப் பக்கத்தில் பெத்தானியா என்ற சிறிய பட்டணத்தில் வசித்து வந்தார். அவருடைய பெயர் லாசரு. அவருக்கு மார்த்தாள், மரியாள் என்ற இரு சகோதரிகள் இருந்தார்கள். என்ன நடந்ததென்று பைபிள் சொல்வதை பார்க்கலாம்.

ஒருநாள் லாசரு மிகவும் வியாதிப்பட்டு இருந்தார். அந்தச் சமயத்தில் இயேசு ரொம்ப தூரத்தில் இருந்தார். ஆகவே மார்த்தாளும் மரியாளும் தங்கள் சகோதரன் லாசரு வியாதியாயிருக்கிறான் என்று இயேசுவுக்கு செய்தி அனுப்பினார்கள். இயேசுவினால் லாசருவை குணப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பியதால் அவருக்கு செய்தி அனுப்பினார்கள். இயேசு ஒரு டாக்டராக இல்லாதபோதிலும், கடவுள் அவருக்கு சக்தி கொடுத்திருந்தார். ஆகவே அவரால் எல்லாவித வியாதிகளையும் குணப்படுத்த முடிந்தது.—மத்தேயு 15:30, 31.

ஆனால் லாசருவைப் பார்க்க இயேசு செல்வதற்கு முன்பாகவே லாசருவின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவர் இறந்துவிட்டார். அப்போது, லாசரு தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவரை எழுப்ப தான் போகப் போவதாகவும் இயேசு தன் சீஷர்களிடம் கூறினார். இயேசு சொன்னது சீஷர்களுக்குப் புரியவில்லை. ஆகவே ‘லாசரு இறந்துவிட்டான்’ என்று நேரடியாகவே இயேசு சொன்னார். மரணத்தைப் பற்றி இது எதைக் காட்டுகிறது?— ஆமாம், மரணம் ஆழ்ந்த தூக்கத்தைப் போன்றது என்பதைக் காட்டுகிறது. அது மிகவும் ஆழ்ந்த தூக்கம் என்பதால் கனவுகள் கூட வராது.

இயேசு மார்த்தாளையும் மரியாளையும் பார்க்கச் சென்றார். குடும்ப நண்பர்கள் அநேகர் அங்கு கூடியிருந்தார்கள். லாசரு இறந்துவிட்டதால் அவரது சகோதரிகளை ஆறுதல்படுத்தவே அங்கு கூடியிருந்தார்கள். இயேசு வந்துகொண்டிருந்ததை மார்த்தாள் கேள்விப்பட்டபோது அவரைப் பார்க்கச் சென்றாள். அதன் பிறகு மரியாளும் இயேசுவைப் பார்க்கச் சென்றாள். அவள் தேம்பித்தேம்பி அழுதவாறே இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். மரியாளுக்கு பின்னே வந்த மற்ற நண்பர்களும் அழுதுகொண்டு இருந்தார்கள்.

லாசரு எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்று பெரிய போதகர் கேட்டார். லாசருவின் உடல் வைக்கப்பட்டிருந்த ஒரு குகைக்கு அவர்கள் இயேசுவை அழைத்துச் சென்றார்கள். எல்லாரும் அழுவதை பார்த்தபோது இயேசுவும் அழுதார். அன்பான ஒருவர் இறக்கும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அந்தக் குகைக்கு முன் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. எனவே, “கல்லை எடுத்துப்போடுங்கள்” என்று இயேசு சொன்னார். அவர்கள் அதைச் செய்ய வேண்டுமா?— அது நல்லதல்ல என்று மார்த்தாள் நினைத்தாள். ஆகவே, “ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே” என்று சொன்னாள்.

இயேசு அவளிடம், “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா” என்றார். கடவுளுக்கு மகிமை சேர்க்கும் ஒன்றை மார்த்தாள் பார்ப்பாள் என இயேசு அர்த்தப்படுத்தினார். இயேசு என்ன செய்ய இருந்தார்? கல் நீக்கப்பட்டவுடன் யெகோவாவிடம் அவர் சப்தமாக ஜெபம் செய்தார். பிறகு மிகவும் சத்தமாக, “லாசருவே, வெளியே வா” என்றார். லாசரு வந்தாரா? அவரால் வர முடிந்ததா?—

தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை உன்னால் எழுப்ப முடியுமா?— முடியும். ரொம்ப சத்தமாக நீ கூப்பிட்டால் அவர் எழுந்திருப்பார். ஆனால் மரணத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை உன்னால் எழுப்ப முடியுமா?— முடியாது. நீ எவ்வளவு சத்தமாக கூப்பிட்டாலும் அவரால் கேட்க முடியாது. என்ன செய்தாலும், உன்னாலோ என்னாலோ பூமியில் உள்ள வேறு எவராலோ இறந்தவர்களை எழுப்ப முடியாது.

லாசருவை இயேசு என்ன செய்தார்?

ஆனால் இயேசு வித்தியாசமானவர். அவருக்கு விசேஷ சக்தியை கடவுள் கொடுத்திருந்தார். ஆகவே இயேசு லாசருவைக் கூப்பிட்டபோது ஆச்சரியமான ஒன்று நடந்தது. நான்கு நாட்களாக இறந்திருந்த அவர் குகையிலிருந்து வெளியே வந்தார்! மறுபடியும் உயிரோடு வந்தார்! அவரால் மறுபடியும் சுவாசிக்கவும் நடக்கவும் பேசவும் முடிந்தது! ஆமாம், இறந்த லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பினார்.—யோவான் 11:1-44.

இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்: லாசரு இறந்தபோது என்ன நடந்தது? ஒரு ஆத்துமாவோ ஆவியோ அவருடைய உடலைவிட்டு பிரிந்து, வேறெங்கோ வாழச் சென்றதா? லாசருவின் ஆத்துமா பரலோகத்திற்குச் சென்றதா? நான்கு நாட்களாக அவர் கடவுளோடும் பரிசுத்த தேவதூதர்களோடும் இருந்தாரா?—

இல்லவே இல்லை. லாசரு தூங்கிக்கொண்டிருப்பதாக இயேசு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கும். நீ தூங்கும்போது எப்படியிருக்கும்? நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது உன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாது இல்லையா?— நீ எழுந்திருக்கும்போது, கடிகாரத்தைப் பார்த்த பிறகுதான் எவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறாய் என்று தெரியும்.

இறந்தவர்களும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களால் எதையுமே அறிய முடியாது. அவர்களால் எதையுமே உணர முடியாது. அவர்களால் எதையுமே செய்ய முடியாது. லாசரு இறந்தபோது அப்படித்தான் இருந்தார். மரணம் என்பது ஆழ்ந்த தூக்கம் போன்றது, இறந்தவர்களுக்கு எந்த நினைவும் இருக்காது. ‘இறந்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாது’ என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:5, 10.

லாசரு இறந்தபோது என்ன நிலையில் இருந்தார்?

இதையும் யோசித்துப் பார்: அந்த நான்கு நாட்கள் லாசரு பரலோகத்தில் இருந்திருந்தால் அதைப் பற்றி எதையாவது சொல்லியிருப்பார் அல்லவா?— அவர் உண்மையிலேயே பரலோகத்தில் இருந்திருந்தால், இயேசு அவரை அந்த அருமையான இடத்தைவிட்டு மறுபடியும் பூமிக்கு வரவழைத்திருப்பாரா?— நிச்சயமாக அப்படி செய்திருக்க மாட்டார்!

ஆனாலும் நமக்குள் ஒரு ஆத்துமா இருக்கிறது என்றும் உடல் செத்த பிறகு அந்த ஆத்துமா உயிரோடு இருக்கிறது என்றும் நிறைய பேர் சொல்கிறார்கள். லாசருவின் ஆத்துமா எங்கோ உயிரோடு இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால் பைபிள் அப்படிச் சொல்வதில்லை. முதல் மனிதனான ஆதாமை கடவுள் ‘உயிருள்ள ஆத்துமாவாக’ உண்டாக்கினார் என்று பைபிள் சொல்கிறது. ஆதாம் ஒரு ஆத்துமாவாக இருந்தான். அவன் பாவம் செய்தபோது இறந்துபோனான் என்றும் பைபிள் சொல்கிறது. ஆம், அவன் ஆத்துமா ‘செத்தது,’ மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்ட அவன் மண்ணுக்கே திரும்பினான். ஆதாமின் பிள்ளைகள் அனைவரும் அவனிடமிருந்து பாவத்தையும் மரணத்தையும் பெற்றனர் என்றும் பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 2:7; 3:17-19; எசேக்கியேல் 18:4; ரோமர் 5:12.

ஆகவே நம் உடம்புக்குள் தனியாக ஒரு ஆத்துமா இருப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் ஒவ்வொருவருமே ஒரு ஆத்துமாதான். முதல் மனிதனாகிய ஆதாமிடமிருந்து எல்லாரும் பாவத்தை பெற்றிருப்பதால், ‘பாவம் செய்கிற ஆத்துமா சாகும்’ என்று பைபிள் சொல்கிறது.—எசேக்கியேல் 18:4.

இறந்தவர்களைப் பற்றி நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

இறந்தவர்களைக் குறித்து சிலர் பயப்படுகிறார்கள். சுடுகாட்டிற்கு பக்கத்தில்கூட அவர்கள் போகமாட்டார்கள். ஏனென்றால் இறந்தவர்களின் ஆத்துமா உயிருள்ளவர்களுக்கு தீங்கு செய்யும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இறந்தவர்கள் உயிருள்ளவர்களுக்கு தீங்கு செய்ய முடியுமா?— முடியாது.

இறந்தவர்கள் உயிருள்ளவர்களை சந்திக்க ஆவியாக வருவார்கள் என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆகவே இறந்தவர்களுக்கு உணவை படையல் வைக்கிறார்கள். ஆனால் அப்படி செய்கிறவர்கள், இறந்தவர்களைப் பற்றி கடவுள் சொல்வதை உண்மையில் நம்புவதில்லை. கடவுள் சொல்வதை நாம் நம்பினால் இறந்தவர்களைப் பற்றி பயப்பட மாட்டோம். உயிர் கொடுத்திருப்பதற்காக நாம் உண்மையிலேயே கடவுளுக்கு நன்றியோடு இருந்தால், அவர் விரும்பும் காரியங்களை செய்வதன் மூலம் அதைக் காட்டுவோம்.

ஆனால், ‘இறந்துபோன பிள்ளைகளை கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டு வருவாரா? அவர்களை உயிர்த்தெழுப்ப அவர் உண்மையிலேயே விரும்புகிறாரா?’ என நீ யோசிக்கலாம். அடுத்ததாக அதைப் பற்றி பேசலாம்.

இறந்தவர்களின் நிலையைப் பற்றியும் மனிதன் ஆத்துமாவாக இருப்பதைப் பற்றியும் வேறு சில வசனங்களை இப்போது படிக்கலாம். சங்கீதம் 115:17; 146:3, 4; எரேமியா 2:34.