Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 77

கிணற்றின் பக்கத்தில் ஒரு பெண்

கிணற்றின் பக்கத்தில் ஒரு பெண்

பஸ்கா முடிந்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் சமாரியா வழியாக கலிலேயாவுக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். சீகார் நகரத்துக்குப் பக்கத்தில் யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு அங்கே உட்கார்ந்து ஓய்வெடுத்தார். சீஷர்கள் உணவு வாங்க நகரத்துக்குள் போனார்கள்.

அப்போது ஒரு பெண் தண்ணீர் எடுப்பதற்காக அந்தக் கிணற்றுக்கு வந்தாள். இயேசு அவளிடம், “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்டார். அதற்கு அவள், ‘நீங்கள் ஏன் என்னிடம் பேசுகிறீர்கள்? நான் ஒரு சமாரியப் பெண். யூதர்கள் சமாரியர்களிடம் பேச மாட்டார்களே’ என்றாள். அப்போது இயேசு, ‘நான் யார் என்று தெரிந்திருந்தால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்’ என்று சொன்னார். அதற்கு அவள், ‘என்ன சொல்கிறீர்கள்? உங்களிடம் வாளிகூட இல்லையே’ என்று கேட்டாள். அதற்கு இயேசு, ‘நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமே எடுக்காது’ என்றார். அப்போது அந்தப் பெண், “ஐயா, எனக்கு அந்தத் தண்ணீரைக் கொடுங்கள்” என்று கேட்டாள்.

இயேசு அவளிடம், ‘உன் கணவனை இங்கே கூட்டிக்கொண்டு வா’ என்றார். அதற்கு அவள், ‘எனக்குக் கணவன் இல்லை’ என்றாள். அப்போது அவர், ‘நீ சொல்வது உண்மைதான். நீ ஐந்து தடவை கல்யாணம் செய்திருக்கிறாய். இப்போது, கல்யாணம் செய்யாமலேயே ஒருவனோடு வாழ்கிறாய்’ என்றார். அதற்கு அவள், ‘நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று எனக்குப் புரிந்துவிட்டது. எங்களுடைய மக்கள் இந்த மலையில் கடவுளை வணங்கலாம் என்று சொல்கிறார்கள். யூதர்களோ எருசலேமில்தான் வணங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்று மேசியா வந்து சொல்லித் தருவார்’ என்றாள். அப்போது இயேசு, ‘நான்தான் மேசியா’ என்று சொன்னார். இந்த விஷயத்தை அதுவரை வேறு யாரிடமும் அவர் சொன்னதில்லை.

அந்தப் பெண் வேக வேகமாக நகரத்துக்குப் போய், ‘ஒருவர் என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர்தான் மேசியா என்று நினைக்கிறேன். நீங்களே வந்து பாருங்கள்’ என்று மற்ற சமாரியர்களிடம் சொன்னாள். அவர்களும் அவளோடு அந்தக் கிணற்றுக்குப் போய் இயேசு கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கேட்டார்கள்.

தங்களுடைய நகரத்தில் தங்கும்படி சமாரியர்கள் இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு இரண்டு நாட்கள் அங்கே தங்கி பல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். நிறைய பேர் அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள். ‘இவர் சொன்ன விஷயங்களைக் கேட்ட பிறகு, இவர்தான் இந்த உலகத்தைக் காப்பாற்றப்போகிறவர் என்று புரிந்துகொண்டோம்’ என்று அந்தச் சமாரியப் பெண்ணிடம் அவர்கள் சொன்னார்கள்.

“‘வருக, வருக!’ . . . தாகமாயிருக்கிற எவரும் வரட்டும்; விருப்பமுள்ள எவரும் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளட்டும்.”—வெளிப்படுத்துதல் 22:17