பாடம் 14
கடவுளுக்குக் கீழ்ப்படிந்த ஒரு அடிமை
வயதான காலத்தில் யாக்கோபுக்கு யோசேப்பு பிறந்தார். அதனால், மற்ற பிள்ளைகளைவிட யோசேப்பிடம் அவர் ரொம்பப் பாசமாக இருந்தார். அதைப் பார்த்தபோது யோசேப்பின் அண்ணன்களுக்கு எப்படி இருந்தது தெரியுமா? அவர்களுக்கு ஒரே பொறாமையாக இருந்தது. அவரைப் பார்த்தாலே வெறுப்பாக இருந்தது. யோசேப்புக்கு சில வித்தியாசமான கனவுகள் வந்தபோது, அதைத் தன் சகோதரர்களிடம் சொன்னார். ஒருநாள் அவர்கள் எல்லாரும் யோசேப்புக்கு முன் தலைவணங்குவார்கள் என்பதுதான் அந்தக் கனவுகளின் அர்த்தம். அதனால் அவர்களுக்கு யோசேப்பின் மேல் இன்னும் கோபம் வந்தது.
ஒருநாள் யோசேப்பின் அண்ணன்கள் சீகேம் நகரத்துக்குப் பக்கத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு வரச்சொல்லி யோசேப்பை யாக்கோபு அனுப்பினார். யோசேப்பு வருவதை அவர்கள் தூரத்திலேயே பார்த்துவிட்டார்கள். உடனே அவர்கள், ‘பாருங்கள், கனவு மன்னன் வருகிறான். அவனைக் கொன்றுவிடலாம்!’ என்றார்கள். யோசேப்பு பக்கத்தில் வந்ததும், அவரைப் பிடித்து இழுத்து ஆழமான தொட்டிக்குள் தள்ளினார்கள். அவருடைய அண்ணன் யூதா, ‘அவனைக் கொல்ல வேண்டாம், அடிமையாக விற்றுவிடலாம்’ என்று சொன்னார். அதனால் எகிப்துக்குப் போய்க்கொண்டிருந்த மீதியானிய வியாபாரிகளிடம், யோசேப்பை 20 வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டார்கள்.
பிறகு யோசேப்பின் சகோதரர்கள் அவருடைய அங்கியை ஆட்டு இரத்தத்தில் முக்கியெடுத்து, அப்பாவிடம் அனுப்பினார்கள். ‘இது உங்கள் மகனுடைய அங்கிதானே’ என்று அவரிடம் கேட்கச் சொன்னார்கள். ஏதோவொரு காட்டு மிருகம் யோசேப்பைக் கொன்றுவிட்டது என்று யாக்கோபு நினைத்தார். அதனால், யோசேப்பை நினைத்து அழுதுகொண்டே இருந்தார். யாராலும் அவரை ஆறுதல்படுத்த முடியவில்லை.
மீதியானிய வியாபாரிகள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே போத்திபார் என்ற பெரிய அதிகாரியிடம் அடிமையாக விற்றுவிட்டார்கள். ஆனால் யெகோவா யோசேப்போடு இருந்தார். யோசேப்பு நன்றாக வேலை செய்வதை போத்திபார் பார்த்தார். அவரை நம்பி வேலைகளைக் கொடுக்கலாம் என்று நினைத்தார். அதனால், சீக்கிரத்திலேயே தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பின் பொறுப்பில் விட்டுவிட்டார்.
யோசேப்பு அழகாகவும் வாட்டசாட்டமாகவும் இருப்பதை போத்திபாரின் மனைவி பார்த்தாள். அதனால், தன்னோடு வந்து படுக்கும்படி யோசேப்பைத் தினமும் நச்சரித்தாள். யோசேப்பு என்ன செய்தார்? ‘வேண்டாம்! இது தப்பு. என்னுடைய எஜமான் என்மேல் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறார். நீங்கள் அவருடைய மனைவி. நான் உங்களோடு படுத்தால், அது கடவுளுக்கு முன்னால் பெரிய பாவம்!’ என்று சொன்னார்.
ஒருநாள் போத்திபாரின் மனைவி யோசேப்பை தன்னோடு வந்து படுக்கும்படி கட்டாயப்படுத்தினாள். அவருடைய உடைகளை பிடித்து இழுத்தாள். ஆனால் அவர் ஓடிவிட்டார். போத்திபார் வீட்டுக்கு வந்தபோது, யோசேப்பு தன்னோடு படுக்க முயற்சி செய்ததாக போத்திபாரின் மனைவி பொய் சொன்னாள். அதைக் கேட்டு போத்திபாருக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால் யோசேப்பைச் சிறையில் தள்ளினார். ஆனால், யெகோவா யோசேப்பை மறக்கவே இல்லை.
“கடவுளுடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அப்போது, சரியான நேரத்தில் கடவுள் உங்களை உயர்த்துவார்.”—1 பேதுரு 5:6