Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 7

பிள்ளைகளை பயிற்றுவிப்பது எப்படி?

பிள்ளைகளை பயிற்றுவிப்பது எப்படி?

“இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதி.”—உபாகமம் 6:6, 7

குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவாதான் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பை பெற்றோருக்குத் தந்திருக்கிறார். (கொலோசெயர் 3:20) ஆகவே, பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கவும் பொறுப்புள்ளவர்களாக வளரவும் நீங்கள்தான் உதவ வேண்டும். (2 தீமோத்தேயு 1:5; 3:15) பிள்ளைகளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் சொல்வதைவிட செய்வதைத்தான் பிள்ளைகள் கூர்ந்து கவனிப்பார்கள். அதனால், அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். யெகோவாவின் வார்த்தைகள் முதலில் உங்களுடைய இருதயத்தில் பதிந்திருந்தால்தான் பிள்ளைகளுடைய இருதயத்தில் அதை உங்களால் பதிய வைக்க முடியும்.—சங்கீதம் 40:8.

1 பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேச உதவுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும் . . . இருக்க வேண்டும்.” (யாக்கோபு 1:19) பிள்ளைகள் உங்களிடம் தயக்கமில்லாமல் பேசவே நீங்கள் ஆசைப்படுவீர்கள். ‘நான் எப்போ வேணும்னாலும் அப்பா அம்மாகிட்ட பேசலாம்’ என்று பிள்ளைகள் நினைக்கும்படி நடந்துகொள்ளுங்கள். பிள்ளைகள் மனந்திறந்து பேச நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துங்கள். (யாக்கோபு 3:18) நீங்கள் கடுகடுப்பாக நடந்துகொண்டாலோ விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்கு முன்பே, ‘நீ எப்போவும் இப்படித்தான்’ என்று சொன்னாலோ பிள்ளைகள் உங்களிடம் எதையும் சொல்லமாட்டார்கள். பிள்ளைகளிடம் பொறுமையாக இருங்கள்; அவர்களை உயிராக நேசிப்பதைச் சொல்லிலும் செயலிலும் காட்டுங்கள்.—மத்தேயு 3:17; 1 கொரிந்தியர் 8:1.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • நீங்கள் ‘பிஸியாக’ இருந்தாலும் பிள்ளைகள் பேச வரும்போது அவர்கள் சொல்வதை கேளுங்கள்

  • பிரச்சினைகள் வரும்போது மட்டுமல்ல, எப்போதும் பிள்ளைகளிடம் பேசுங்கள்

2 பிள்ளைகள் சொல்ல நினைப்பதைப் புரிந்துகொள்ளுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்.” (நீதிமொழிகள் 16:20) உங்கள் பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டுமல்லாமல் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். பிள்ளைகள் சில விஷயங்களை வேண்டுமென்றே சொல்லியிருக்க மாட்டார்கள், கோபத்தில்தான் சொல்லியிருப்பார்கள். அதேசமயத்தில் ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூட பெரிதுபடுத்தி சொல்வார்கள். ‘காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் [அதாவது, பதில்] சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனம்.’ (நீதிமொழிகள் 18:13) அதனால், நீங்கள் சட்டெனக் கோபப்படாதீர்கள்.—நீதிமொழிகள் 19:11.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • உங்கள் பிள்ளை என்ன பேசினாலும் குறுக்கிடாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீர்கள்

  • நீங்கள் அவர்களுடைய வயதில் இருந்தபோது எப்படி உணர்ந்தீர்கள், எது உங்களுக்கு முக்கியமாக இருந்தது என்பதை யோசித்துப் பாருங்கள்

3 கணவன் மனைவியாக ஒன்றுபட்டு செயல்படுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” (நீதிமொழிகள் 1:8) பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கும் பொறுப்பை அப்பா அம்மா இருவருக்குமே யெகோவா கொடுத்திருக்கிறார். உங்களுக்கு மரியாதை காட்டவும் கீழ்ப்படியவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். (எபேசியர் 6:1-3) அப்பா அம்மா இருவரும் ‘ஒரே மனதுடன் ஒன்றுபட்டு’ செயல்படுகிறார்களா என்பதைப் பிள்ளைகளால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். (1 கொரிந்தியர் 1:10) கண்டிக்கும் விஷயத்தில் நீங்கள் இருவரும் ஒத்துப்போகவில்லை என்றால் பிள்ளைகள்முன் அதைக் காட்டாதீர்கள். ஏனென்றால், பெற்றோராக உங்கள் மீதுள்ள மதிப்பை அது குறைத்துவிடும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • பிள்ளைகளை எப்படிக் கண்டிப்பது என்று இருவரும் பேசி முடிவெடுங்கள்

  • பிள்ளை வளர்ப்பில் உங்கள் இருவருக்கும் வித்தியாசமான கருத்துகள் இருந்தால், கணவருடைய (அல்லது மனைவியுடைய) கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்

4 நன்கு திட்டமிடுங்கள்

பைபிள் என்ன சொல்கிறது? “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து.” (நீதிமொழிகள் 22:6) பிள்ளைகள் பொறுப்பானவர்களாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. அவர்களைப் பயிற்றுவிக்க, கண்டித்துத் திருத்த முன்னதாகவே திட்டமிடுங்கள். (சங்கீதம் 127:5; நீதிமொழிகள் 29:17) கண்டிப்பது என்பது தண்டிப்பதை மட்டுமே குறிப்பதில்லை, கண்டிப்பதற்கான காரணத்தைச் சொல்லி புரியவைப்பதையும் குறிக்கிறது. (நீதிமொழிகள் 28:7) யெகோவாவின் வார்த்தையை நேசிக்கவும் அதிலுள்ள ஆலோசனைகளைப் புரிந்து நடக்கவும் அவர்களுக்கு உதவுங்கள். (சங்கீதம் 1:2) இப்படிச் செய்வது அவர்கள் நல்ல மனசாட்சியோடு இருப்பதற்கு உதவும்.—எபிரெயர் 5:14.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • கடவுளை ஒரு நிஜமான நபராக... நம்பகமானவராக... பார்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்

  • இன்டர்நெட்டிலும் சோஷியல் நெட்வர்க்கிலும் உள்ள ஒழுக்க ரீதியிலான ஆபத்துகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைத் தவிர்க்கவும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். காம வெறியர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் கற்றுக்கொடுங்கள்

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து”