Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தனியாகப் போராடாதீர்கள், உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

தனியாகப் போராடாதீர்கள், உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

தனியாகப் போராடாதீர்கள், உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

“தனியாக இருப்பவனை ஒருவன் சுலபமாக வீழ்த்திவிடலாம். ஆனால், இரண்டு பேராக இருந்தால் அவனை எதிர்த்து நிற்க முடியும்.”—பிரசங்கி 4:12.

தனியாகப் போராடுவதைவிட இன்னொருவருடைய உதவியோடு போராடும்போது எதிரியை ஈஸியாக ஜெயித்துவிடலாம். அந்த எதிரி யாராக இருந்தாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி! புகைப்பழக்கம் என்ற எதிரியை ஜெயிக்க நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்களுடைய மற்றும் நண்பர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது, உங்களிடம் அக்கறையாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்கிற ஒருவரின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஏற்கெனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்ட ஒருவரின் உதவியைக்கூட நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் எப்படியெல்லாம் போராடுகிறீர்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும்; உங்களுக்கு உண்மையிலேயே உதவி செய்யவும் முடியும். டென்மார்க்கில் இருக்கிற டார்பன் என்ற ஒரு கிறிஸ்தவர் இப்படிச் சொல்கிறார்: “மத்தவங்க செஞ்ச உதவிய என்னால மறக்கவே முடியாது. அது எனக்கு உண்மையிலேயே கை கொடுத்துச்சு.” இந்தியாவில் வாழ்கிற ஆபிரஹாம் இப்படி எழுதுகிறார்: “என் குடும்பத்தில் இருக்கிறவர்களும் சபையில் இருந்தவர்களும் காட்டின உண்மையான அன்புதான் புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு எனக்கு உதவியது.” ஆனால், சிலசமயங்களில் குடும்பத்தில் இருப்பவர்களும் நண்பர்களும் செய்கிற உதவி மட்டுமே போதாது.

பகவான்தாஸ் என்ற ஒருவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “நான் 27 வருஷமா புகைப்பிடிச்சேன். ஆனா, கெட்ட பழக்கங்கள பத்தி பைபிள் என்ன சொல்லுதுனு தெரிஞ்சிக்கிட்டப்போ, புகைப்பிடிக்கிறத விடணும்னு முடிவு பண்னேன். அதனால கம்மியா சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன், கெட்ட நண்பர்கள்கிட்ட பழகுறத நிறுத்துனேன், கவுன்சிலிங்கூட போனேன். ஆனா, எதுவுமே வேலைக்கு ஆகல. கடைசியா யெகோவாகிட்ட, இந்த பழக்கத்தை எப்படியாவது விடுறதுக்கு எனக்கு உதவி செய்யுங்கனு ஒருநாள் ராத்திரி கெஞ்சி கதறுனேன். அதுக்கு அப்புறம்தான் ஒரு வழியா என்னால அத விட முடிஞ்சுது.”

புகைப்பழக்கத்தை நிறுத்துவதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. அது: புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் வரும் பிரச்சினைகளைப் பற்றி முன்பே யோசித்து அதற்காக தயாராக இருப்பது. அப்படி என்னென்ன பிரச்சினைகள் வரும்? அதைப்பற்றி அடுத்த சில கட்டுரைகளில் பார்ப்போம்.

[பெட்டி]

நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

புகைப்பழக்கத்தை விடுவதற்காகவே நிக்கோடின் பாட்ச் (nicotine patch) மாதிரியான நிறைய மருந்துகளை இப்போது விற்கிறார்கள். அது பலகோடி லாபம் தருகிற தொழிலாக மாறிக்கொண்டு வருகிறது. அந்த மாதிரி மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு இந்தக் கேள்விகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள்.

என்ன நன்மைகள் இருக்கின்றன? இதுபோன்ற சிகிச்சை முறைகள், சிகரெட் பழக்கத்தை விடுவதால் வரும் பின்விளைவுகளைக் குறைப்பதாக நம்பப்படுகிறது. இருந்தாலும், இந்தச் சிகிச்சை முறைகளில் அவ்வளவாக பலன் கிடைப்பதில்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

என்ன ஆபத்துகள் இருக்கின்றன? சில மருந்துகளால் சில பின்விளைவுகள் வரலாம். உதாரணத்துக்கு குமட்டல், மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் போன்ற பின்விளைவுகள் வரலாம். நிக்கோடின் மாற்று மருத்துவ முறைகளில்கூட நிக்கோடினை வேறு வழியில் கொடுப்பதற்குத்தான் முயற்சி செய்வார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப் பார்த்தால், இந்தச் சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்கிற ஒருவர் இன்னமும் நிக்கோடினுக்கு அடிமையாகத்தான் இருப்பார்.

மாற்று வழிகள் என்ன இருக்கின்றன? ஒரு அறிக்கை என்ன சொல்கிறது என்றால், சிகரெட் பழக்கத்தை வெற்றிகரமாக நிறுத்திய 88 சதவீதம் பேர் எந்த மருந்து மாத்திரையின் உதவியும் இல்லாமல் திடீரென்று நிறுத்தியவர்கள்தான்!