டஹிடி
டஹிடி
டஹிடி, மோரேயா, போரா போரா போன்றவை பிரெஞ்சு பாலினேசியாவைச் சேர்ந்த தீவுகளாகும். வானிலிருந்து பார்க்கையில் அவை, பச்சை-நீலநிறத்தில் பரந்துவிரிந்து கிடக்கும் பசிபிக் பெருங்கடலில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் போல் காட்சியளிக்கின்றன. பவழப்பாறைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் அதன் உப்புநீர் ஏரிகளில் வண்ண வண்ண மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அதற்கு அடுத்தாற்போல அமைந்துள்ள கடற்கரைகள் பொன்னிறத்திலோ கருமை நிறத்திலோ கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. குலை குலையாய் தேங்காய்கள் தொங்கும் தென்னை மரங்கள் காற்றில் தலையசைக்கின்றன. கரடுமுரடும் மலைப்பாங்குமான உள்நாட்டு பகுதியோ, பச்சைக் கம்பளம் போர்த்தி, வெண்ணிற மேகங்களைக் குடையாக பிடித்திருக்கிறது. இப்படி ரம்யமான ஒவ்வொரு காட்சியும் வரைந்து வைத்த ஓவியம் போல காட்சியளிக்கிறது.
இந்தத் தீவுகளைப் ‘பூமியிலுள்ள பரதீஸ்’ என கலைஞர்களும் எழுத்தாளர்களும் புகழ்ந்ததில் ஆச்சரியமேதுமில்லை. அப்படியிருக்க, சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு அவற்றை முதன்முதலாக பார்த்துவிட்டு, அங்கு குடியேறிய மாலுமிகளுக்கு அவை ஒரு பரதீஸாகத்தான் காட்சியளித்திருக்கும். குறிப்பிடத்தக்க இந்த முன்னோடிகள், இன்று பாலினேசியர்கள் என நாம் அழைப்பவர்களின் மூதாதையர் ஆவர். இவர்கள் ஒருவேளை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம். நூற்றாண்டுகள் உருண்டோடுகையில், அவர்கள் ஆரம்பத்தில் குடியேறிய தீவுகளிலிருந்து மற்ற தீவுகளுக்கு சென்றனர். பரந்த பசிபிக் பெருங்கடலில் பயணித்து, அதன் எண்ணற்ற தீவுகளையும் வட்டப்பவழ திட்டுகளையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர்.
பாலினேசியா என்ற வார்த்தைக்கு “ஏராளமான தீவுகள்” என்று அர்த்தம். வடக்கே ஹவாய்க்கும், தென்கிழக்குக் கோடியில் அமைந்துள்ள ஈஸ்டர் a பிரெஞ்சு பாலினேசியாவில் ஐந்து தீவுக்கூட்டங்கள் உள்ளன: துபாய் (ஆஸ்டிரல்) தீவுகள், காம்பியர் தீவுகள், மார்கொஸ்ஸஸ் தீவுகள், சொசைட்டி தீவுகள், டுமோடு தீவுக்கூட்டம். இந்தப் பசிபிக் பகுதி 16-வது நூற்றாண்டில்தான் ஐரோப்பிய ஆய்வுப்பயணிகளின் கண்ணில் தட்டுப்பட்டது.
தீவுக்கும், தென்மேற்கே தொலைதூரத்தில் அமைந்த நியுஜிலாந்துக்கும் இடைப்பட்ட கற்பனையான முக்கோண வடிவ பகுதியில் அமைந்திருப்பதே இன்று பாலினேசியா என அழைக்கப்படுகிறது. பாலினேசியாவின் ஒரு பகுதியான பிரெஞ்சு பாலினேசியா பற்றியே இப்போது சிந்திக்கப் போகிறோம்; அதில் டஹிடியே முக்கிய தீவாகும்.ஐரோப்பியர்களின் வருகை
ஸ்பெயின் நாட்டவரான ஆல்வாரோ தே மேன்டான்யா தே நேரா என்பவர் 1595-ல் மார்கொஸ்ஸஸ் தீவுகளில் சிலவற்றை கண்டுபிடித்தார். மேன்டான்யா தே நேராவின் உதவியாளரான பேத்ரூ ஃபர்னான்டஷ் தே கேரோஷ் என்பவர் 1606-ல் டுமோடு தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியை கண்டுபிடித்தார். டச் ஆய்வுப்பயணியான யாகாப் ராகவேன் என்பவர் 1722-ல் போரா போரா, மாகட்டேயா, மாயுபீடி ஆகிய தீவுகளைக் கண்டுபிடித்தார். டால்ஃபின் என்ற பிரிட்டிஷ் போர்க் கப்பலில் பயணித்த கேப்டன் சாம்வேல் வாலஸ் 1767-ல் பிரெஞ்சு பாலினேசியாவின் மிகப் பெரிய தீவாகிய டஹிடியில் முதன்முதல் கால் பதித்தார். அதற்கடுத்த வருடம், பிரான்சு நாட்டு கடற்பயணியான கேப்டன் லுவீ ஆன்ட்வான் டெ பூகான்வேலும் அங்கு சென்றார்.
பூகான்வேல் அந்தத் தீவின் அழகில் மனதைப் பறிகொடுத்தார்; அதன் குடிமக்களுடைய காம உணர்வைக் கண்டு ஆச்சரியப்பட்டார்; எனவே டஹிடிக்கு “நூவெல் சீட்டெர்” என்று பெயரிட்டார். “[அன்பிற்கும் அழகிற்கும் தேவதையான] அஃப்ரோடைட் கடலிலிருந்து வெளியே வந்ததாக சொல்லப்படும் பெலபனீஸிய தீவாகிய கீதீராவின் நினைவாக” அப்பெயரை அதற்குச் சூட்டினார் என குக் அண்டு ஓமாய்—த கல்ட் ஆஃப் த சௌத் ஸீஸ் என்ற புத்தகம் கூறுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வுப்பயணியான ஜேம்ஸ் குக் 1769-க்கும் 1777-க்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு முறை டஹிடிக்கு விஜயம் செய்தார். டஹிடி உட்பட்ட இத்தீவுக்கூட்டத்திற்கு சொசைட்டி தீவுகள் என்று பெயரிட்டது இவர்தான்.
ஆய்வுப்பயணிகளுக்கு பிறகு மிஷனரிகள் வந்தார்கள். புராட்டஸ்டன்டினரின் ஆதரவு பெற்ற அமைப்பான லண்டன் மிஷனரி சொஸைட்டி
அனுப்பிய மிஷனரிகளே மாபெரும் வெற்றி கண்டார்கள். முதன்முதலாக வந்த மிஷனரிகளில் இருவரான ஹென்றி நாட்டும் ஜான் டேவிஸும் டஹிடிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்கள், பின்னர் அந்த மொழியில் பைபிளை மொழிபெயர்க்கிற இமாலயப் பணியை வெற்றிகரமாக முடித்தார்கள். இன்று வரையாக பிரெஞ்சு பாலினேசியாவில் டஹிடி மொழியிலுள்ள அந்த பைபிள்தான் மிகப் பரவலாக உபயோகிக்கப்படுகிறது; முக்கியமாக புராட்டஸ்டன்ட் சர்ச்சின் பிடியிலிருக்கும் அநேக தீவுகளில் அது உபயோகிக்கப்படுகிறது. அட்வென்டிஸ்ட், கத்தோலிக்க, மார்மன் மிஷனரிகளும் இந்த மண்ணில் ஓரளவு வெற்றி கண்டார்கள். உதாரணத்திற்கு, மார்கொஸ்ஸஸ், காம்பியர், கிழக்கு டுமோடு ஆகிய தீவுக்கூட்டங்களில் கத்தோலிக்க சர்ச் பலமான செல்வாக்கு செலுத்தி வருகிறது.இந்த ஐந்து தீவுக்கூட்டங்களும் எவ்வாறு பிரான்சின் உடைமையாயின? 1880 முதற்கொண்டு பிரான்சு இந்தத் தீவுகளை ஒவ்வொன்றாக இணைத்துக்கொண்டு ஒரு புதிய பிரெஞ்சு காலனியை உருவாக்கியது. டஹிடியிலுள்ள பபீடியை அதன் தலைநகரமாக்கியது, அங்கு வாழ்ந்தவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமையை வழங்கியது. 1946-ல், அந்தத் தீவுகளை தனக்குச் சொந்தமான கடல்கடந்த பிராந்தியமாக பிரான்சு அறிவித்தது; 1957-ல் அந்தப் பிராந்தியம் பிரெஞ்சு பாலினேசியா என்ற பெயரை ஏற்றுக்கொண்டது.
ராஜ்ய செய்தியின் வருகை
முதலாவதாக, 1931-ல் சிட்னி ஷெப்பர்ட் என்ற சாட்சி டஹிடி சென்றார். இரண்டு வருடங்கள் அவர் பசிபிக் தீவுகள் பலவற்றிற்கும் பயணித்து அங்குள்ளவர்களிடம் பிரசங்கித்தார். அதன் பிறகு, நியுஜிலாந்தைச் சேர்ந்த ஃபிராங்க் டீவார் என்பவர் அங்கு சென்றார். இந்த இரண்டு சகோதரர்களாலும் நீண்டகாலம் அங்கு தங்க முடியாவிட்டாலும் அவர்கள் ஏராளமான பிரசுரங்களை விநியோகித்திருந்தனர். சொல்லப்போனால் சுமார் இருபது வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியரான வட்டாரக் கண்காணி லென்னர்ட் (லென்) ஹெல்பர்க் இவ்வாறு அறிக்கை செய்தார்: “பபீடியில் ஒரு நாள், சபை ஊழியரோடு காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு மலைவாசிக்கு லிஃப்ட் கொடுப்பதற்காக காரை நிறுத்தினார். அவர் வயதான ஓர் அமெரிக்கர். நான் ஒரு சாட்சி என்பதை அறிந்ததும் அவர், ‘ஓ, உங்க ஆட்கள்ல ஒருத்தர் பல வருஷங்களுக்கு முன்னால இங்க வந்திருந்தார், ஜட்ஜ் ரதர்ஃபர்ட்டோட புத்தகங்களை என்கிட்ட கொடுத்துட்டு போனார்’ என்றார். எங்களுக்கு முன் இங்கு வந்திருந்த முன்னோடிகளின் உழைப்புக்கு இது ஓர் அத்தாட்சி. அவ்வாறு வந்தது சிட்னி ஷெப்பர்ட்டாகவோ ஃபிராங்க் டீவாராகவோதான் இருக்க வேண்டும்.”
பிரெஞ்சு பாலினேசியாவில் இன்னும் முழுமையாக சாட்சி கொடுத்த ஆரம்பகால ராஜ்ய பிரசங்கிகளில் தம்பதியரான ஷான்மாரீ ஃபேலீக்ஸும்
ஷான் ஃபேலீக்ஸும் அடங்குவர். அப்போது பிரெஞ்சு காலனியாக இருந்த அல்ஜீரியாவில் இவர்கள் சத்தியத்தை கற்றனர். 1953-ல் முழுக்காட்டுதல் பெற்றனர். தேவை அதிகமிருந்த இடங்களில் சேவை செய்வதற்காக 1955-ல் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட இடங்களில் பிரெஞ்சு பாலினேசியாவும் ஒன்று. அந்த அழைப்பை ஏற்ற ஃபேலீக்ஸ் தம்பதியர் 1956-ல் தங்கள் மகன் ஜான்மார்க்கை கூட்டிக்கொண்டு டஹிடி சென்றனர். ஆனால், என்ஜினியரான ஷான்மாரீக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. ஆகவே, டஹிடிக்கு வடகிழக்கே 230 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மாகட்டேயா தீவிற்கு சென்றனர். டுமோடு தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த இந்தப் பகுதியிலிருந்த பாஸ்ஃபேட் கம்பெனி ஒன்றில் ஷான்மாரீக்கு வேலை கிடைத்தது.உடனடியாக இந்தத் தம்பதியர் தங்கள் நண்பர்களிடமும் ஷான்மாரீயுடன் வேலை செய்பவர்களிடமும் சாட்சிகொடுக்க ஆரம்பித்தனர். ஷான் இவ்வாறு எழுதுகிறார்: “தீவுவாசிகளுக்கு பைபிள் மீது ஆழ்ந்த மரியாதை இருந்தது, ராஜ்ய செய்தியை கூர்ந்து கேட்டனர், பைபிள் படிப்பில் ஊக்கமாக ஈடுபட்டனர். அது எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. ஆனால், அங்கிருந்த பாதிரிமார்களோ எங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தனர். தங்கள் மத்தியிலுள்ள ‘கள்ள தீர்க்கதரிசிகளைக்’ குறித்து ஜாக்கிரதையாக இருக்கும்படி சர்ச் அங்கத்தினர்களை எச்சரித்திருந்தனர். எங்களிடம் பேசக்கூடாது, எங்கள் வீட்டைக் கடந்துகூட போகக்கூடாது என்றெல்லாம் கூறியிருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!”
இருந்தபோதிலும், காலப்போக்கில் பெரும்பாலானோர் இந்தக் கிறிஸ்தவ தம்பதியரைப் பற்றிய தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். தீவுவாசிகளில் அநேகர் ஷான்மாரீயிடமும் ஷானிடமும் ஆழ்ந்த மரியாதை காட்ட தொடங்கினர். மாகட்டேயாவில் வாழ்ந்த சில ஐரோப்பியர்களைப் போல இவர்கள் பாலினேசியர்களை தாழ்வானவர்களாக கருதாததே இதற்கு காரணம்.
என்றாலும், பிரசங்க வேலையில் தொடர்ந்து ஈடுபட தைரியம் தேவைப்பட்டது. ஏனெனில், எப்போது வேண்டுமானாலும் ஒருவரை வேலையிலிருந்து நீக்கிவிட பாஸ்ஃபேட் கம்பெனியின் இயக்குநருக்கு அதிகாரம் இருந்தது. அதுமட்டுமா, அந்தத் தீவிலிருந்த ஆயுதம் தாங்கிய இரண்டு பிரெஞ்சு போலீஸாரும்கூட இந்தக் குடும்பத்தினரை சில சமயங்களில் சந்தித்து அவர்களுடைய ஊழியத்தைப் பற்றி விசாரித்து வந்தனர். ஷான்மாரீயாலும், ஷானாலும் எந்த ஆபத்தும் இல்லை என்பதை இந்தப் போலீஸ் அதிகாரிகள் காலப்போக்கில் உணர்ந்துகொண்டனர். பிறகு அவர்களுடைய நண்பர்களாகவும்கூட ஆனார்கள்.
மாயூயி பீயிராய் என்பவர் ஆவிக்குரிய விதத்தில் நன்கு முன்னேற்றம் செய்த முதல் பைபிள் மாணாக்கர் ஆவார். பாலினேசியரான இவர் ஷான்மாரீ வேலை செய்த அதே கம்பெனியில் வேலை செய்தார். சத்தியம் இவர் இருதயத்தை தொட்டபோது தன் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை செய்தார். உதாரணமாக, புகைபிடிப்பதையும், எக்கச்சக்கமாகக் குடிப்பதையும் நிறுத்திவிட்டார்; திருமணம் செய்துகொள்ளாமலேயே 15 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த பெண்ணை மணந்துகொண்டார். அக்டோபர் 1958-ல் முழுக்காட்டுதல் பெற்றார்; இவ்வாறு அந்தப் பகுதியிலேயே யெகோவாவிற்கு தன்னை அர்ப்பணித்த முதல் பாலினேசியர் ஆனார். எல்லா சாட்சிகளையும் போலவே, இவரும் மற்றவர்களிடம் நற்செய்தியைப்
பிரசங்கிக்க ஆரம்பித்தபோது பாதிரிமார்கள் கோபமடைந்தனர். இவருடைய வேலைக்கு உலை வைக்கவும்கூட ஒரு பாதிரியார் சதித்திட்டம் தீட்டினார். ஆனால், இவர் கடின உழைப்பாளி என்று நல்ல பெயர் எடுத்திருந்ததால் அந்தத் திட்டம் பலிக்கவில்லை.மாகட்டேயாவில் கடவுளுடைய வார்த்தையை கேட்டு, ஏற்றுக்கொண்ட இரண்டாவது நபர் ஷெர்மென் ஆமாரூ ஆவார். பள்ளி ஆசிரியையான இவர் தனது மாணவன் மூலம் சத்தியத்தை அறிந்துகொண்டார். அந்த மாணவன் ஃபேலீக்ஸ் தம்பதியினரின் மகனான ஜான்மார்க்தான். அப்போது ஏழு வயதே ஆகியிருந்த அவனுக்கு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்திருந்ததைக் கண்டு ஷெர்மென் அசந்துபோனதால் அவனுடைய பெற்றோரை வரவழைத்தார். அவர்கள் ஷெர்மெனோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். ஆனால், கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. ஷெர்மென், தன்னோடு வேலை செய்த ஆசிரியையான மோனீக் சேஜுக்கும் அவருடைய கணவன் ராஜருக்கும் யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள உதவினார்.
ஃபேலீக்ஸ் தம்பதியரும் மாயூயி பீயிராயும், மாகட்டேயாவிலுள்ள புராட்டஸ்டன்ட் சர்ச்சின் இளம் உதவிக்குருவான மானூவாரீ டேஃபாடாவு என்பவரோடும் அவருடைய நண்பரான ஆராயீ டேரீயி என்பவரோடும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் தொடர்ந்து தங்கள் சர்ச்சுக்கே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திரித்துவம், நரகம், ஆத்துமா அழியாமை போன்றவற்றைப் பற்றிய பைபிள் சத்தியங்களை சர்ச்சிலுள்ள மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இதனால், எதிர்பார்த்த விதமாகவே புராட்டஸ்டன்ட் சமூகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் உண்மை மனதுள்ள அநேகர், தாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா என்பதை அறிய பூர்வகால பெரோயா பட்டணத்தார் போல பைபிளை ஆராய ஆரம்பித்தனர்.—அப். 17:10-12.
இதனால் சர்ச் பாதிரியாருக்கு எரிச்சல் ஏற்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ! சாட்சிகள் சொல்வதையெல்லாம் கேட்பவர்களைச் சர்ச்சிலிருந்து நீக்கிவிடப் போவதாகவும் அவர் பயமுறுத்தினார். சிலர் அந்தப் பயமுறுத்துதலுக்கு அடிபணிந்துவிட்டனர், மற்றவர்களோ ஆவிக்குரிய முன்னேற்றம் செய்து சர்ச்சைவிட்டு வெளியேறினர். மானூவாரீ, ஆராயீ, மாயூயி பீயிராயின் மனைவியான மோயேயா, டாயீனா ராடாரோ ஆகியோர் அப்படி வெளியேறியவர்கள். டாயீனா ராடாரோவைப் பற்றி பின்னர் அறிந்துகொள்வோம்.
எண்ணிக்கையில் அதிகரித்துவந்த பிரஸ்தாபிகளும் பைபிள் மாணாக்கர்களும் ஆரம்பத்திலே ஃபேலீக்ஸ் தம்பதியினரின் வீட்டில் நடத்தப்பட்ட
கூட்டங்களில் கலந்துகொண்டார்கள். அங்கே ஷான்மாரீ பிரெஞ்சில் பேச்சு கொடுக்க மாயூயி அதை டஹிடியனில் மொழிபெயர்த்தார். 1959-ல் ஃபேலீக்ஸ் குடும்பத்தினர் மாகட்டேயாவை விட்டுச் சென்ற பிறகு, ஏற்கெனவே முழுக்காட்டுதல் பெற்றிருந்த மாயூயியின் வீட்டில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தத் தீவுகளில் ஊழியம் செய்ததைப் பற்றி ஷான்மாரீயும், ஷானும் எவ்வாறு உணர்ந்தார்கள்? ஷான்மாரீ இப்போது உயிரோடில்லை; அவரது மனைவி ஷான் இத்தாலியில் வசிக்கிறார்; தன் கணவர் சார்பாக பேசுபவராய் அவர் இவ்வாறு கூறுகிறார்: “நாங்க கொஞ்சம்கூட வருத்தப்படவே இல்லை. எங்க வாழ்க்கையில நடந்த மற்ற எல்லாவற்றையும்விட மாகட்டேயாவில் செய்த ஊழியம்தான் மறக்க முடியாத அருமையான நினைவுகளை எங்க நெஞ்சில் பதிச்சிருக்கு.”நற்செய்தி டஹிடியை வந்தடைகிறது
1955-ல் ஃபேலீக்ஸ் குடும்பத்தினர் மாகட்டேயா தீவுக்குச் செல்வதற்கு சற்று முன்பு, ஆஸ்திரேலிய கிளை அலுவலகம் லென் ஹெல்பர்க் என்பவரை தென் பசிபிக் பிராந்தியத்தில் வட்டார ஊழியம் செய்வதற்காக நியமித்திருந்தது. நியூ கலிடோனியா முதல் பிரெஞ்சு பாலினேசியா வரை ஆங்காங்கே இருந்த லட்சக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பிலுள்ள தீவுகளுக்கெல்லாம் அவர் விஜயம் செய்ய வேண்டியிருந்தது. என்றாலும், இந்தப் பரந்த பிராந்தியத்தில் 90-க்கும் குறைவான பிரஸ்தாபிகளே வசித்து வந்தனர், டஹிடியிலோ பிரஸ்தாபிகள் யாருமே இல்லை. லென்னுக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருந்தன: ஒவ்வொரு சபையையும் தொகுதியையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சந்திக்க வேண்டும்; ஒதுக்குப்புறத்திலிருக்கும் ஒவ்வொரு பிரஸ்தாபியையும் அக்கறை காண்பிக்கும் நபரையும் போய் பார்க்க வேண்டும்; வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற படத்தைக் காட்டி புதிய பிராந்தியங்களில் ஊழியத்தை துவங்க வேண்டும்.
டிசம்பர் 1956-ல், டஹிடியில் முதன்முறையாக கால் பதித்த லென் இரண்டு மாதங்கள் அங்கு தங்கினார். பள்ளியில் அவர் பிரெஞ்சு கற்றிருந்தார்; இப்போதோ கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே மறந்துவிட்டிருந்தார். ஆகவே, ஆங்கிலம் தெரிந்தவர்களை சந்திக்கும் நம்பிக்கையோடு வியாபார பிராந்தியங்களில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். டஹிடியிலேயே மிகவும் பணக்காரர் ஒருவரை அங்கு சந்தித்தார். அவர் மிகவும் அக்கறையோடு செவிகொடுத்து கேட்டு, மறுபடியும் வரும்படி லென்னிடம் சொன்னார். அடுத்த சனிக்கிழமை இருவருமாக சேர்ந்து மதிய உணவு சாப்பிட்ட பிறகு தன் வீட்டிற்கு வரும்படி லென்னை அழைத்தார். காரை டிரைவர் ஓட்ட அதில் லென்னை அழைத்துச் சென்றார். அதைக் குறித்து லென் இவ்வாறு
எழுதுகிறார்: “பிறகு, மதிய வேளையில் அவர் சங்கு ஒன்றை எடுத்து ஊதினார். அதைக் கண்ட எனக்கு ஒரே ஆச்சரியம்! கிராமத்திலுள்ள பிரமுகர்கள் அனைவரும் அவருடைய வீட்டிற்கு அருகிலிருந்த மன்றத்தில் கூடிவருவதற்கு விடுக்கப்படும் அழைப்பு அது என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன்.“சுமார் ஒரு டஜன் நபர்கள் கூடிவந்தனர். அவர்களில் மேயர், போலீஸ் மேலதிகாரி, புராட்டஸ்டன்ட் சர்ச்சைச் சேர்ந்த பல உதவிக்குருக்கள் ஆகியோர் இருந்தனர். யெகோவாவின் சாட்சிகள் என்ற ‘புதிய மதத்தின்’ பிரதிநிதி என்று என்னை அறிமுகப்படுத்தி வைத்த பிறகு அவர் இவ்வாறு அறிவித்தார்: ‘பைபிள் சம்பந்தமாக நீங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் மிஸ்டர் லென் ஹெல்பர்க் இப்போது பதிலளிப்பார்.’ அவ்வாறு கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடிந்தது.” அடுத்த இரண்டு மாதங்களுக்கு சனிக்கிழமை தோறும் இவ்வாறே நடந்தது. அந்தப் பணக்காரர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை; ஆனாலும் குஷ்டரோகிகளுக்கான மருத்துவமனையில் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற படத்தைக் காண்பிக்க அவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதைக் காண 120-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.
ராஜ்ய செய்தியை யாராவது ஏற்றுக்கொண்டார்களா? “1956-ம் வருடம், கிறிஸ்மஸ் அன்று அரூயே மாநிலத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது மிகேலி குடும்பத்தாரை சந்தித்தேன். அவர்கள் ஆர்வத்தோடு செய்தியை ஏற்றுக்கொண்டனர்” என சகோதரர் லென் ஹெல்பர்க் ஞாபகப்படுத்திக் கூறுகிறார். மிகேலி குடும்பத்தார் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். ஏனெனில், ஐக்கிய மாகாணங்களில் வசித்த அவர்களுடைய உறவுக்காரர் ஒருவர் இந்தப் பத்திரிகைகளை இவர்கள் சந்தா மூலம் பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பின்னர், மிகேலி தம்பதியரின் மகள் ஈரெனும் அவளுடைய கணவனும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். கார்ன்யே என்பவரோடும் லென் பைபிள் படிப்பை ஆரம்பித்தார். அதன் விளைவாக அவருடைய குடும்பத்திலுள்ள மற்றவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். 1959-ல் பபீடி சபை உருவானபோது அதன் ஆரம்ப அங்கத்தினர்களில் மிகேலி குடும்பத்தாரும், கார்ன்யே குடும்பத்தாருமே இருந்தார்கள்.
சகோதரர் லென் ஹெல்பர்க் 1957-ல் கிலியட் சென்றபோது, வட்டாரக் கண்காணியாக இருந்த பால் ஈவன்ஸையும், அவருடைய மனைவி ஃபிரான்ஸஸையும் டஹிடி செல்லும்படி ஆஸ்திரேலிய கிளை அலுவலகம் கேட்டுக்கொண்டது. அவர்கள் அத்தீவில் அதிக நாட்கள் தங்கவில்லை. இருந்தாலும், 70-க்கும் அதிகமான பைபிள்களையும் புத்தகங்களையும் கொடுத்திருந்தனர்; காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு அநேக சந்தாக்களையும் பெற்றிருந்தனர். சகோதரர் ஈவன்ஸ் இவ்வாறு எழுதினார்: “டஹிடியில் வசிக்கும் அநேகர் இப்போது பைபிளைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தளவு அக்கறை இருப்பதால் அமைப்பின் வழிநடத்துதலோடு பிரசங்க வேலையை ஆரம்பிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.” இந்தப் புதியவர்களுக்கு தேவையான உதவியும் வழிநடத்துதலும் கிடைக்குமா?
டஹிடியைச் சேர்ந்த சகோதரி ஊர் திரும்புகிறார்
டஹிடியைச் சேர்ந்த ஆன்யெஸ் என்ற இளம் பெண், எர்ல் ஷென்க் என்ற அமெரிக்கரை மணப்பதற்காக 1936-ல் ஐக்கிய மாகாணங்களுக்கு சென்றார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தனர், சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, 1954-ல் கலிபோர்னியாவிலுள்ள சான் டியகோவில் முழுக்காட்டுதல் பெற்றனர். 1957-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த மாவட்ட மாநாட்டின்போது தங்கள் நண்பர்களான கிளைட் நீல், ஆன் நீல் தம்பதியருடன் அமர்ந்திருந்தனர். அப்போது, தேவை அதிகமிருந்த அநேக இடங்களைப் பற்றி தலைமை காரியாலயத்தை சேர்ந்த நேதன் நார் அறிவித்தார். அதில் டஹிடியைப் பற்றியும் குறிப்பிட்டார்.
சகோதரர் நீல் இவ்வாறு கூறுகிறார்: “ஆன்யெஸ் உணர்ச்சிவசப்பட்டு தன் சீட்டிலிருந்து எழுந்து அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது நான் ஆன்யெஸையும் எர்லையும் பார்த்து, அவர்களது 11 வயது மகனோடு அவர்கள் டஹிடி செல்வதற்கு என்னால் முடிந்த எல்லா உதவியையும் செய்வதாக கூறினேன். உடல்நலம் சரியில்லாதிருந்த எர்லும் உடனே அழ ஆரம்பித்துவிட்டார். அவர் 17 வருடங்களாக தென் பசிபிக்கில் கலைஞராகவும், எழுத்தாளராகவும் வேலை செய்திருந்ததால் அங்கு திரும்பிச் செல்ல ஆர்வமாக இருந்தார். அதோடு அவருடைய மனைவி ஆன்யெஸுக்கு இன்னும் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது.”
சகோதரர் நீல் கிளைட் தொடர்கிறார்: “ஜெபத்துடன் நன்கு சிந்தித்த பிறகு, 12, 8, 3 வயது நிரம்பிய எங்கள் மூன்று மகன்களோடு நாங்களும் டஹிடி செல்ல தீர்மானித்தோம். தங்கள் மகன் டேவிட் ஜூனியரைக் கூட்டிக்கொண்டு எங்களோடு வருவதற்கு எங்கள் நண்பர்களான டேவிட் கரேனோ, லின் கரேனோ தம்பதியினரும் தீர்மானித்தனர். ஆகவே, 1958-ல் நியு யார்க் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டிற்கு பிறகு நாங்கள் டஹிடிக்கு புறப்பட்டோம்.
“அக்கறை காண்பித்திருந்த சில நபர்களின் பெயர்களை ஐக்கிய மாகாண கிளை அலுவலகம் எங்களிடம் கொடுத்திருந்தது. ஆகவே, அங்கு போய் சேர்ந்ததும் அவர்களை சந்திக்க ஆரம்பித்தோம். ஆன்யெஸ் எங்களுக்கு முன்பே அங்கு போய் சேர்ந்திருந்ததால் ஊழியத்தில் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார். ஆனுக்கும் எனக்கும் பிரெஞ்சும் தெரியாது, டஹிடியனும் தெரியாது என்பதால் முடிந்தபோதெல்லாம் ஆன்யெஸை எங்களோடு ஊழியத்திற்கு கூட்டிச் சென்றோம். நாங்களாக ஊழியம் செய்கையில் ‘தேவனே சத்தியபரர் என்று விளங்கட்டும்’ என்ற ஆங்கில புத்தகத்தின் பிரதியையும் பிரெஞ்சு மொழி பிரதியையும் எடுத்துச் சென்றோம். அந்தக் காலங்களில் பைபிள் படிப்பிற்கு அதைத்தான் உபயோகித்தோம்.”
இந்த முயற்சிகளின் பலனாகவும் சகோதரர் லென் ஹெல்பர்க்கும், ஈவன்ஸ் தம்பதியினரும் போட்ட அஸ்திவாரம் காரணமாகவும் ஒருசில வாரங்களுக்குள் 17 பேர் கடவுளுடைய வார்த்தையை படிக்க ஆரம்பித்தனர். சகோதரர் நீல் கிளைட் இவ்வாறு கூறுகிறார்: “பைபிளைப் படித்தவர்களில் முன்னாள் புராட்டஸ்டன்ட் பாதிரியான டேராடூவா வாயிடாபே என்பவர் குறிப்பிடத்தக்க மாணாக்கர் ஆவார். சர்ச் போதகங்களை எதிர்த்து பல கேள்விகள் கேட்டதால் அவர் தனது வேலையை இழந்திருந்தார். டேராடூவா தனது குடும்பத்துடன் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தார். ஒரே அறை கொண்ட அந்த வீட்டில் குழாய் நீரும் கிடையாது, மின்சாரமும் கிடையாது. நான்கு வருடங்கள் செமினரியில் இருந்தபோதும், ஏழு வருடங்கள் பாதிரியாக இருந்தபோதும் கற்றதைவிட நம்மோடு பைபிள் படிக்க ஆரம்பித்த சில வாரங்களுக்குள்ளாகவே அதிகத்தைக் கற்றுக்கொண்டதாக என்னிடம் கூறினார்.”
சகோதரர் நீல் கிளைட் தொடர்ந்து கூறுகிறார்: “நாங்கள் அந்தத் தீவுகளில் கால் பதித்து பல வாரங்கள் கழித்து ‘தேங்காய் ரேடியோ’ [ஜனங்கள் வாய்வழியாக பரவிய செய்தி] முழங்க ஆரம்பித்தது; ஜனங்கள் எங்களைப் பற்றி கேள்விப்பட ஆரம்பித்தார்கள். இது மிகவும் உதவியாக இருந்தது; ஏனெனில் டஹிடியர்கள் சிநேகப்பான்மையானவர்கள், பைபிளை மிகவும் நேசிப்பவர்கள்.”
முதலில், சிறிய தொகுதியாக இருந்த பிரஸ்தாபிகள், ஆன்யெஸ்-எர்ல் ஷென்க் தம்பதியர் வீட்டில் கூட்டங்களை நடத்தினார்கள். அக்கறை
காண்பித்த இருவர் மட்டுமே கூட்டங்களுக்கு வந்தார்கள். சகோதரர் நீல் கிளைட் இவ்வாறு கூறுகிறார்: “சீக்கிரத்திலேயே சுமார் 15 பேர் தவறாமல் வர ஆரம்பித்தார்கள். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்மணியின் வீட்டிற்கு முன்னால் லென் ஹெல்பர்கின் சைக்கிள் ரிப்பேர் ஆனது. அதை சரிசெய்ய அந்தப் பெண்மணி உதவியதால் லென் அவரிடம் சில பிரசுரங்களை கொடுத்திருந்தார். நாங்களும் அவரது மதத்தை சேர்ந்தவர்களே என்பதை அறிந்ததும் அந்தப் பெண்மணி மிகவும் சந்தோஷப்பட்டார். அவருக்கும் பைபிள் படிப்பு நடத்தினோம். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. ஆகவே, நாங்கள் அங்கு செல்லும்போதெல்லாம் அவர் எங்களுக்கு மதிய உணவளித்து உபசரித்தார். ஒரு ஸ்டீல் டிரம்மில் சமைக்கப்பட்ட சுவையான ஃபிரெஷ் மீனைத்தான் பெரும்பாலும் உணவாக கொடுத்தார்.”டிசம்பர் 1958-ல் நீல் குடும்பத்தாரும் கரேனோ குடும்பத்தாரும் திரும்பிச் சென்றனர். அதற்கு முன், பிரெஞ்சு பாலினேசியாவில் இரண்டாவது முழுக்காட்டுதல் பேச்சை நீல் கிளைட் கொடுத்தார். முதல் பேச்சு, அக்டோபரில் மாயூயி பீயிராய் முழுக்காட்டுதல் பெற்றபோது மாகட்டேயாவில் கொடுக்கப்பட்டது. இந்த முறை பேச்சைக் கேட்பதற்கு அறுபது பேர்
வந்திருந்தனர், எட்டு பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். அவர்களுள் நீல் கிளைட்டின் மகனான ஸ்டீவெனும் டஹிடியைச் சேர்ந்த ஆகஸ்ட் டமனஹா என்பவரும் இருந்தனர். ஆகஸ்ட் டமனஹா, பிற்பாடு வாஹீனீ தீவில் ஒரு சபையை உருவாக்க உதவினார்.பலப்படுத்துவதற்கான காலம்
பிஜி கிளை அலுவலகம் கேட்டுக்கொண்டதால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் ஹூப்ளரும் அவருடைய மனைவி எலெனும் 1959-ல் டஹிடி வந்தனர். புதிதாக பிறந்திருந்த பபீடி சபைக்கு உதவுவதற்காகவே வந்தனர். ஹூப்ளர் தம்பதியர் ஏழு மாதங்கள்தான் டஹிடியில் தங்க முடிந்தது. அந்தச் சமயத்தில் ஜான் ஹூப்ளர் சபை ஊழியராகச் சேவை செய்தார். அவர் சுவிட்சர்லாந்தில் பிறந்ததால் சரளமாக பிரெஞ்சு பேசினார். நியூ கலிடோனியாவில் தன் கணவரோடு பல வருடங்கள் சேவை செய்திருந்ததால் எலென் ஹூப்ளரும் பிரெஞ்சு பேசினார். ஹூப்ளர் தம்பதியர் புதிய பிரஸ்தாபிகளுக்கு வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பயிற்சியளித்தனர். அது மிகவும் தேவையாக இருந்தது, ஏனெனில் பெரும்பாலானோர் அதுவரை சந்தர்ப்ப சாட்சிதான் கொடுத்துப் பழகியிருந்தார்கள்.
1960-ல் ஹூப்ளர் தம்பதியர் வட்டார ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். பிரெஞ்சு பாலினேசியாதான் அவர்களுடைய பிராந்தியம். ஆகவே, அவர்களால் உள்ளூர் பிரஸ்தாபிகளுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முடிந்தது. “பிறகு, 1961-ல் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்தது. பட்டம் பெற்ற பிறகு, பசிபிக் பகுதியில் பிரெஞ்சு பேசப்படும் எல்லா தீவுகளுக்கும் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்” என்று ஜான் ஹூப்ளர் கூறுகிறார்.
முதல் ராஜ்ய மன்றம்
சகோதரர் ஜான் ஹூப்ளர் இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் இரண்டாவது முறை டஹிடி சென்றபோது, முன்னர் பள்ளி ஆசிரியையாக இருந்த மார்செல் அனஹோவா என்பவரோடு பைபிளைப் படிக்கும் சிலாக்கியம்
கிடைத்தது. அந்தச் சமயத்தில், சொந்தமாக ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு நிலத்தைத் தேடி அலையாய் அலைந்தோம். ஆனால், அதற்கு இரண்டு பெரிய முட்டுக்கட்டைகள் இருந்தன. ஒன்று, விற்பதற்கு யாரிடமுமே நிலம் இருந்ததாக தெரியவில்லை; இரண்டாவது, சபை கையிருப்பில் நிதியும் மிகக் குறைவாக இருந்தது. ஆனாலும், யெகோவா வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு நிலத்திற்காக தேடி வந்தோம்.“மார்செலுக்கு படிப்பு நடத்துகையில் அதைப் பற்றி அவரிடம் கூறினேன். ‘வாங்க உங்களுக்கு ஒண்ணு காட்டுறேன்’ என்று சொன்னார். என்னை வெளியே அழைத்துக்கொண்டு போய் ஓரிடத்தை சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார்: ‘இந்த நிலத்தை பாத்தீங்களா? இது எனக்கு சொந்தமானது. இதுல அப்பார்ட்மென்ட் கட்டலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்போ சத்தியத்தை படிக்கிறதால என் மனசை மாத்திக்கிட்டேன். நிலத்தில பாதிய ராஜ்ய மன்றம் கட்ட நன்கொடையா குடுக்கிறேன்.’ அதைக் கேட்டவுடன், மௌனமாக யெகோவாவுக்கு நன்றி தெரிவித்து இருதயப்பூர்வமான ஜெபம் செய்தேன்.”
சட்ட ரீதியில் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்த பிறகு, பபீடி சபை 1962-ல் முதல் ராஜ்ய மன்றத்தை கட்டி முடித்தது. அது, பாண்டனஸ் இலைகளால் வேயப்பட்ட கூரையும் திறந்த பக்கங்களும் கொண்ட தீவுகளுக்கே உரிய எளிய பாணியில் கட்டப்பட்டது. இருக்கைகளில் முட்டையிடவும் விட்டத்தில் தூங்கவும் அக்கம்பக்கத்திலுள்ள கோழிகளுக்கு
மிகவும் பிடித்துவிட்டது என்பதே வருத்தமான விஷயம். ஆகவே, சகோதரர்கள் கூட்டத்திற்கு வரும்போது கோழிகள் குடியிருந்ததற்கு அடையாளங்களாக முட்டைகளையும் ‘மற்றவற்றையும்’ தரையிலும் இருக்கைகளிலும் கண்டார்கள். என்றாலும், இன்னும் பெரிய, உறுதியான கட்டடம் கட்டப்படும் வரை அந்த மன்றமே போதுமானதாக இருந்தது.சட்ட ரீதியான குழப்பங்கள் நீங்கின
ஆரம்ப காலங்களில், பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ நிலை குறித்து சகோதரர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. ஏனெனில், 1952 முதற்கொண்டே பிரான்சில் காவற்கோபுரம் பத்திரிகை தடை செய்யப்பட்டிருந்தது, ஊழியமோ தடை செய்யப்படவில்லை. பிரான்சின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தத் தீவிற்கும் அந்தத் தடை பொருந்தியதா? இதற்கிடையே, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி பொதுமக்கள் அறிய ஆரம்பித்தனர். ஒரு சமயம், 1959-ம் வருடக் கடைசியில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது போலீஸார் உள்ளே நுழைந்து என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு சென்றனர்.
இதன் காரணமாக, ஒரு சட்டப்பூர்வ சங்கத்தை நிறுவும்படி சகோதரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துவிட்டால் குழப்பங்களும் நீங்கிவிடும், எந்தச் சந்தேகமும் எழும்பாது. யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கம் என அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் கடிதம் 1960, ஏப்ரல் 2-ம் தேதியன்று கிடைத்தபோது சகோதரர்கள் எவ்வளவாய் பூரித்துப்போனார்கள்!
என்றபோதிலும், பிரான்சில் காவற்கோபுரம் பத்திரிகைக்கு இன்னும் தடை இருந்தது. இந்தத் தடை பிரெஞ்சு பாலினேசியாவிற்கும் பொருந்தும் என்று நினைத்ததால், காவற்கோபுரத்தில் வந்த கட்டுரைகளை
லா சான்டீனெல் (காவலாளன்) என்ற ஓர் இதழில் சகோதரர்கள் பெற்றார்கள். இது சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில், காவற்கோபுரத்திற்குப் பதிலாகத்தான் லா சான்டீனெல் பிரசுரிக்கப்படுகிறது என்பது தங்களுக்கு தெரியுமென சட்டப்பூர்வ நிறுவனத்தின் அப்போதைய உறுப்பினரான மீஷெல் ஷெலாவிடம் போலீஸார் தெரிவித்தார்கள். இருந்தாலும், அந்தப் பத்திரிகைகள் இறக்குமதி செய்யப்படுவதை அவர்கள் தடுக்கவில்லை. 1975-ல் காவற்கோபுரம் பத்திரிகை மீதான தடை பிரான்சில் நீக்கப்பட்டபோதுதான் அதற்கான காரணத்தைச் சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள்.தடை நீக்கப்பட்டவுடன் காவற்கோபுர பத்திரிகையை டஹிடியில் பெறுவதற்கு அங்குள்ள சகோதரர்கள் அனுமதி கோரினர். பிரெஞ்சு பாலினேசியாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் அது தடை செய்யப்பட்டதாக பிரசுரிக்கப்படவே இல்லை என்ற விஷயமே அப்போதுதான் தெரிய வந்தது. இதன் காரணமாகத்தான், பிரெஞ்சு பாலினேசியாவில் காவற்கோபுர பத்திரிகை தடை செய்யப்படாமல் இருந்தது, அது அநேகருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
மறுபட்சத்தில், விசா வழங்குவதிலோ விசாவை நீட்டிப்பதிலோ உள்ளூர் அதிகாரிகள் கறாராக இருந்தார்கள். ஆகவே, பிரெஞ்சு குடியுரிமை இல்லாதவர்கள் பொதுவாக சில மாதங்களுக்கு மட்டுமே தங்கியிருக்க முடிந்தது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட கிளைட் நீல், ஆன் நீல் தம்பதியருக்கும், ஹூப்ளர் தம்பதியருக்கும் பிரெஞ்சு குடியுரிமை இல்லாதிருந்தது. ஆனால் ஜான் ஹூப்ளர், பதிவுசெய்யப்பட்ட சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்ததால் அதிக சிரமமின்றி அவருக்கு விசா கிடைத்தது. ஏனெனில், இயக்குநர் குழுவில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் இருக்க பிரான்சு நாட்டு சட்டம் இடமளித்தது.
இது, வட்டார வேலையில் ஈடுபடவும் ஜான் ஹூப்ளருக்கு உதவியது. ஒரு நாள் போலீஸ் கமிஷனர் ஜானை தன் அலுவலகத்திற்கு அழைத்து, அவர் ஏன் அடிக்கடி அநேக தீவுகளுக்கு சென்று வருகிறார் என்று கேட்டார். சங்கத்தின் உறுப்பினராக இருப்பதால் போர்ட் மீட்டிங்குகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று ஜான் விளக்கினார். அந்த
விளக்கம் அவருக்கு திருப்தியளித்தது. ஆனால், அதற்கு பிறகும் கமிஷனர் முன்பு ஜான் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது.பசிபிக் பகுதியில் அணுஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதால் 1963 முதற்கொண்டு அநேக பாலினேசியர்கள் கொதித்தெழுந்தனர். அதில் ஒரு பிரபல பாதிரியாரும் இருந்தார். சந்தடி சாக்கில், கிளர்ச்சி செய்தவர்களில் சகோதரர் ஜான் ஹூப்ளரும் ஒருவர் என்று ஒரு விசுவாசதுரோகி போலீஸாரிடம் குற்றம் சாட்டினார். ஆனால், அது ஒரு சுத்தப்பொய். இருந்தாலும், ஜான் மறுபடியும் கமிஷனர் முன்பு ஆஜராக வேண்டியிருந்தது. அப்போது குற்றம் சாட்டியவரை கண்டனம் செய்வதற்கு பதிலாக, பைபிள் அடிப்படையிலான நமது நடுநிலைமை வகிப்பு பற்றியும், அரசாங்க அதிகாரிகளுக்கு மரியாதை காட்டுவது பற்றியும் ஜான் கனிவுடன் விளக்கினார். (ரோ. 13:1) அதோடு கமிஷனருக்கு சில பிரசுரங்களையும் கொடுத்தார். கடைசியாக அந்த அதிகாரி, சாட்சிகளுக்கு யாரோ வேண்டுமென்றே தொந்தரவு கொடுக்க நினைத்திருப்பதை நன்கு புரிந்துகொண்டார்.
ஆனால் காலப்போக்கில், ஹூப்ளர் தம்பதியருக்கும் விசா கிடைக்காமல் போனது. ஆகவே, அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பினர்; 1993 வரை பயண ஊழியத்தை தொடர்ந்து செய்தனர். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அதை நிறுத்திவிட்டனர்.
இந்தத் தீவுகளில் இருக்கையில், யெகோவாவை பிரியப்படுத்துவதற்காக அநேகர் தங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் செய்ததை ஹூப்ளர் தம்பதியர் கண்ணாரக் கண்டிருக்கிறார்கள். அவர்களுள் 74 வயது நிரம்பிய பெண்மணியும் ஒருவர்; திருமணம் ஆகாமலேயே அவருக்கு 14 பிள்ளைகள் இருந்தார்கள். ஜான் ஹூப்ளர் இவ்வாறு கூறுகிறார்: “அவரை நாங்கள் மம்மா ரோரோ என்று அழைப்போம். அவர் சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது தன்னோடு வாழ்ந்து வந்த நபரையே திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய பிள்ளைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள் இருந்தபோதிலும் அவர்கள் அனைவரையும் சட்டப்படி பதிவு செய்தார். எல்லா பிள்ளைகளையும் பட்டியலிட ஒரு படிவம் போதாததால் மேயர் இரண்டு படிவங்களை ஒன்றாக சேர்க்க வேண்டியதாயிற்று. எல்லாவற்றையும் யெகோவாவின் வழியில் செய்ய வேண்டும் என்பதில் மம்மா ரோரோ குறியாக இருந்தார்.” உண்மையுள்ள இந்தச் சகோதரி முழுக்காட்டுதல் பெற்றவுடன் பயனியர் செய்ய ஆரம்பித்தார்; பத்திரிகைகளை அளிப்பதில் கெட்டிக்காரராக இருந்தார். மற்ற பிரஸ்தாபிகளோடு சேர்ந்து தொலைதூர தீவுகளுக்கு சென்றும் பிரசங்கித்தார்.
டஹிடிய பைபிள்—ஓர் ஆசீர்வாதம்
1960-களில் டஹிடிய மொழி மட்டுமே அறிந்தவர்கள் ஏராளமானோர் இருந்தார்கள். ஆனால் ஹென்றி நாட், ஜான் டேவிஸ் என்ற மொழிபெயர்ப்பாளர்களின் b கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் உட்பட முழு பைபிளிலும் டஹிடிய மொழியில் கடவுளுடைய பெயரான யேஹோவா என்பது உபயோகிக்கப்பட்டிருப்பது அதன் விசேஷ அம்சங்களில் ஒன்றாகும்.
முயற்சியால் 1835-க்கு பிறகு டஹிடிய மொழியில் பைபிள் கிடைத்தது.எல்லா தீவுகளிலும் பரவலாக விநியோகிக்கப்பட்ட டஹிடிய பைபிள், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற அநேகருக்கு உதவியிருக்கிறது. அவர்களில் டாயீனா ராடாரோவும் ஒருவர். 1927-ல் பிறந்த டாயீனா, மாகட்டேயாவிலிருந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்களில் ஒருவர். டஹிடியன் அவருடைய தாய்மொழியாக இருந்தபோதிலும் ஆரம்பத்தில் அவருக்கு அதை எழுதவோ, படிக்கவோ தெரியாது. ஆனால் ஊக்கமாக உழைத்து நல்ல முன்னேற்றம் செய்தார். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில்கூட சேர்ந்துகொண்டார், பின்னர் உதவி ஊழியராக நியமிக்கப்பட்டார்.
ஏலீஸாபெட் அவெ என்பவருக்கு இப்போது 78 வயது; இவர், துபாய் தீவுகளிலுள்ள ஒதுக்குப்புற தீவான ரீமேடாரா தீவில் பிறந்தார். இது டஹிடியிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1960-களில் அவருக்கு டஹிடிய மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும் பிரெஞ்சு மொழியில் ஒரு வார்த்தைகூட தெரியாது. திருமணத்திற்குப் பிறகு தன் கணவரோடு பபீடி சென்றார். அங்கிருக்கையில், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல துவங்கியிருந்த அவருடைய மூத்த மகளான மார்கரீட் மூலம் பைபிள் சத்தியங்களை அறிந்துகொண்டார். ஏலீஸாபெட்டும் தனது ஒன்பது பிள்ளைகளோடு கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். அவரது கணவன் கடுமையாக எதிர்த்தபோதிலும் தொடர்ந்து சென்றார். அவர் கூட்டங்களுக்கு சென்றிருக்கையில் அவரது கணவனோ அவருடைய துணிமணிகளை எல்லாம் வீட்டிற்கு வெளியே எறிந்துவிடுவார்.
அந்தக் காலத்தில் கூட்டங்கள் பிரெஞ்சு மொழியில்தான் நடத்தப்பட்டன. எப்போதாவது ஒரு முறை சில பகுதிகள் டஹிடியனில் மொழிபெயர்க்கப்பட்டன. வசனங்கள் வாசிக்கப்படுகையில் அவற்றை டஹிடிய பைபிளில் கவனிப்பதன் மூலம் அந்த நிகழ்ச்சிகளிலிருந்து ஏலீஸாபெட் ஆவிக்குரிய போஷாக்கை பெற்றார். அவருக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரி, “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” என்ற சிறு புத்தகத்தை உபயோகித்தார். பிரெஞ்சு மொழியில் அந்தப் புத்தகத்திலிருந்ததை அவர் டஹிடியனில் மொழிபெயர்த்து சொன்னார்; வசனங்களையோ ஏலீஸாபெட் தனது பைபிளிலேயே வாசித்தார். அதனால் அவர் நல்ல முன்னேற்றம் செய்து, 1965-ல் முழுக்காட்டுதல் பெற்றார். பிறகு அவர், டஹிடிய மொழி மட்டுமே அறிந்த மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார்.
அவர் தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்ததால் அவர்களில் ஆறு பேரும் பேரப்பிள்ளைகளில் சிலரும் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். பேரப்பிள்ளைகளில் அநேகரை அவரே வளர்த்து ஆளாக்கினார்.அவருடைய பேரப்பிள்ளைகளில் ஒருவரான டீயானா டாவுடூ, கடந்த 12 வருடங்களாக டஹிடி கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக சேவை செய்து வருகிறார். டீயானா இவ்வாறு கூறுகிறார்: “டஹிடிய மொழியை நன்கு கற்றுக்கொள்ள எனக்கு உதவியதற்காக பாட்டிக்கு நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். உயிர் காக்கும் ஆவிக்குரிய உணவை மற்றவர்கள் தங்கள் தாய்மொழியிலே பெறுவதற்கு உதவுவதில் இப்போது எனக்கு ஒரு சிறு பங்கு இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்.”
சீனர்கள் யெகோவாவைப் பற்றி அறிகிறார்கள்
1960-களில் டஹிடியின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவிகிதத்தினர் சீனர்கள். அப்போது டீனேஜராக இருந்த கிலெரீஸ் லீகான் என்பவரே பைபிள் சத்தியத்தை முதன்முதல் ஏற்றுக்கொண்ட சீனர் ஆவார். கிலெரீஸ் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே, குடும்பத்திற்கு ஒத்தாசையாக
இருக்க பள்ளி விடுமுறை நாளான புதன்கிழமைகளில் வேலையும் செய்து வந்தார். சாட்சிகளாக இருந்த ஒரு குடும்பத்தார் வீட்டில் அவர் வேலை செய்ததால் சத்தியத்தை அறிந்துகொண்டார். அவரது பெற்றோர் பயங்கரமாக எதிர்த்தபோதிலும் 1962-ல் தனது 18-வது வயதில் முழுக்காட்டுதல் பெற்றார்.அலெக்ஸாண்டர் லீ குவாய், ஆர்லெட் லீ குவாய் தம்பதியினரும், கி சிங் லீகான் என்பவரும் டஹிடியில் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்த சீனர்களில் சிலர். டாக்ஸி டிரைவரான அலெக்ஸாண்டர் ஒரு நாள் ஜிம் வாக்கர், ஷார்மீயென் வாக்கர் தம்பதியினரை சந்தித்தார். சாட்சிகளான அவர்கள் பிரசங்க வேலையில் உதவி செய்வதற்காக 1961-ல் நியுஜிலாந்திலிருந்து வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்ள தனக்கு விருப்பமிருந்ததை அலெக்ஸாண்டர் அவர்களிடம் தெரிவித்தார். அதைக் குறித்து ஷார்மீயென் வாக்கர் இவ்வாறு கூறுகிறார்: “அப்போது நான் ஒரு பயனியராக இருந்ததால், அலெக்ஸாண்டருக்கு என்னால் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முடியும் என்று என் கணவர் கூறினார். அவரும் அதற்குச் சம்மதித்தார். ஆகவே, அவருக்கு 30 நிமிடத்திற்கு ஆங்கில பாடமும், 30 நிமிடத்திற்கு பரதீஸ் இழக்கப்பட்டதிலிருந்து பரதீஸ் திரும்பப்பெறும் வரையில் என்ற புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பும் நடத்தப்பட்டது.”
இதற்கிடையில், அலெக்ஸாண்டரின் தம்பியான கி சிங்கும் சத்தியத்தை அறிய வந்தார். ஆனால், அந்தச் சமயத்தில் இருவருமே புதிதாக கத்தோலிக்க மதத்திற்கு மாறியிருந்ததால் அந்த மதத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள ஒரு கோர்ஸில் சேர்ந்திருந்தார்கள். ஆகவே, பைபிள் போதனைகளுக்கும் சர்ச்சு போதனைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை அவர்களால் தெளிவாக காண முடிந்தது. கோர்ஸின் முடிவில் ஏறக்குறைய 100 பேர் இருந்த அந்த வகுப்பில், யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்று பாதிரியார் கேட்டார். அலெக்ஸாண்டர் தன் கையை உயர்த்தி, ஆத்துமா அழியாது என்பதற்கு வேதப்பூர்வ ஆதாரங்கள் தர முடியுமா என்று கேட்டார். “நீ ஏன் இந்தக் கேள்வி கேட்கிறன்னு எனக்கு நல்லா தெரியும். நீ யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்கிற தானே?” என்று அந்தப் பாதிரி பதில் கேள்வி கேட்டார். பிறகு எல்லார் முன்பாகவும் அவரை கேலி செய்தார்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு, கத்தோலிக்க சர்ச்சிடம் சத்தியம் இல்லை என்பதை அலெக்ஸாண்டரும் கி சிங்கும் தெளிவாக புரிந்துகொண்டார்கள். கடைசியில், அவர்கள் இருவரும் தங்கள் மனைவிகளுடன் யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பின்னர் அந்தச் சகோதரர்கள் இருவரும் சபை மூப்பர்களாக நியமிக்கப்பட்டார்கள். அலெக்ஸாண்டர், டஹிடி கிளை அலுவலகக் குழுவிலும்கூட சில காலம் சேவை செய்தார்.
பிறகு, அவரும் அவருடைய மனைவியும் ராஜ்ய வேலையில் உதவுவதற்காக சொசைட்டி தீவுகளைச் சேர்ந்த ரையாடீ தீவிற்கு மாறிச் சென்றனர். அங்கிருந்து போரா போரா தீவிற்குச் சென்றனர்; அலெக்ஸாண்டர் தனது மரணம் வரை அங்கு உண்மையோடு சேவை செய்தார்.கடலில் பாதை மாறிய வாழ்க்கைப் பயணம்
இத்தாலியில், மிலானிலுள்ள தொலைக்காட்சி தொழிற்சாலையில் ஆன்டான்யோ லான்ட்ஸா என்பவர் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தார். டஹிடியில் ஒரு சர்வீஸ் சென்டரை கவனித்துக்கொள்ள ஆள் தேவைப்படுவதால் அங்கு செல்ல விரும்புகிறவர்கள் முன்வரும்படி 1966-ல் அந்தக் கம்பெனி கேட்டுக்கொண்டது. மூன்று வருடம் தங்கி செய்ய வேண்டிய அந்த வேலையை ஆன்டான்யோ ஏற்றுக்கொண்டார். அவரது மனைவி ஆன்னாவையும் இரண்டு சிறிய மகன்களையும் இத்தாலியிலேயே விட்டுவிட்டுச் செல்ல தீர்மானித்தார். தன் கணவனின் மனதை மாற்றுவதற்காக ஆன்னா பல வாரங்கள் அழுது புலம்பினாள். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை.
பிரான்சிலுள்ள மார்செய்ல்ஸிலிருந்து பபீடிக்குக் கப்பலில் செல்ல 30 நாள் பிடித்தது. ஆன்டான்யோ, கலகலவென்று பேசுகிற சிநேகப்பான்மையான நபர். ஆனால், ஏறக்குறைய கப்பலிலிருந்த அனைவருமே பிரெஞ்சு பேசினார்கள், அது அவருக்கு தெரியாத மொழி. ஒரு வழியாக இரண்டாம் நாளில், இத்தாலியைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க கன்னிகாஸ்திரீகளைச் சந்தித்தார். அவர்களுக்கோ அன்றாடம் செய்ய வேண்டிய ஏராளமான சடங்குகள் இருந்ததால் கதை பேச போதிய நேரம் இருக்கவில்லை. என்றாலும், இத்தாலிய மொழி தெரிந்த பிரெஞ்சு பெண்மணி ஒருவர் கப்பலில் இருந்ததை அவரிடம் கூறினார்கள். லீலீயென் செலாம் என்ற ஒரு சாட்சியே அவர். தன் பிள்ளைகளோடு அவர் டஹிடி சென்று கொண்டிருந்தார்; அவருடைய கணவருக்கு ஏற்கெனவே அங்கு வேலை கிடைத்திருந்ததால் குடும்பமாக சேர்ந்திருப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
லீலீயெனை சந்தித்து ஆன்டான்யோ அவரோடு பேசி மகிழ்ந்தார். அவரும் பைபிள் சம்பந்தப்பட்ட ஒரு பிரசுரத்தை இத்தாலிய மொழியில் ஆன்டான்யோவிற்கு கொடுத்தார். அதற்கு பிறகு, ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி அவர்கள் அநேக முறை பேசினார்கள். இவ்வாறு பேசுகையில் ஒரு நாள் அவரிடம், டஹிடியில் வேலை செய்யப்போகும் மூன்று வருடங்களும் அவரது மனைவியையும் பிள்ளைகளையும் விட்டு பிரிந்திருப்பது ஒழுக்க ரீதியில் அவருக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் பற்றி லீலீயென் கூறினார். திருமணத்தை கடவுள் எவ்வளவு பரிசுத்தமானதாக கருதுகிறார் என்பதை விவரித்த பின்பு எபேசியர் 5:28, 29; மாற்கு 10:7-9 போன்ற பைபிள் வசனங்களையும் அவருக்கு காண்பித்தார்.
இதைப் பற்றி சிந்தித்துப் பார்த்த பிறகு, தான் எடுத்த தீர்மானத்தை எண்ணி ஆன்டான்யோ வருத்தப்பட ஆரம்பித்தார். பனாமாவில் இருக்கையிலேயே தன் மனைவிக்கு கடிதம் எழுதினார்; போதிய பணம் சேர்ந்தவுடன் அவளும் பிள்ளைகளும் விமானத்தில் டஹிடி வருவதற்கு ஏற்பாடு செய்வதாக எழுதினார். பிறகு மனைவிக்கு மறுபடியும் ஒரு கடிதம் எழுதினார். அதில், அவள் வரும்போது பாதிரியாரிடமிருந்து ஒரு பைபிளை வாங்கிவரும்படி குறிப்பிட்டிருந்தார். இதைப் பற்றி அந்தப் பாதிரியார் என்ன நினைத்தார்? புரிந்துகொள்வதற்குக் கடினமான இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை அவளுடைய கணவன் வாசிக்க விரும்புகிறார் என்றால் அவருக்கு பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும் என்று அவளிடம் கூறினார்.
ஆன்டான்யோ டஹிடி சென்று ஆறு மாதம் கழித்து அவருடைய குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது. கடவுள் பக்தியுள்ள ஆன்னா, வந்து சேர்ந்த அடுத்த நாளே குடும்பத்தோடு சர்ச்சுக்கு செல்ல வேண்டுமென கணவரிடம் கேட்டார். அவர்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். “ஓகே, நாம சர்ச்சுக்கு போகலாம்” என்று ஆன்டான்யோ கூறினார். ஆனால், தன் குடும்பத்தாரை கத்தோலிக்க சர்ச்சிற்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ராஜ்ய மன்றத்திற்கு அழைத்துச் சென்றார்! ஆன்னாவுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். இருந்தாலும், அந்தக் கூட்டத்தை அவர் அனுபவித்து மகிழ்ந்தார், பைபிள் படிக்கவும் ஒப்புக்கொண்டார். அவரோடு பைபிளைப் படித்தது யார் தெரியுமா? வேறு யாருமில்லை, கப்பலில் ஆன்டான்யோவிடம் சாட்சி கொடுத்த அதே லீலீயென் செலாம்தான்!
டஹிடியில் மூன்று வருடம் தனியாக காலம் தள்ளுவதற்காக வந்த ஆன்டான்யோ இப்போது தன் முழு குடும்பத்தோடு 35 வருடங்களாக அங்கேயே இருக்கிறார். அதுமட்டுமா, அவர், அவரது மனைவி, நான்கு மகன்கள் என அனைவரும் மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஆன்டான்யோ இப்போது சபை மூப்பராக சேவை செய்கிறார்.
தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்த குடும்பங்கள்
ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்பட்ட ஒதுக்குப்புறமான தீவுகளுக்கு அநேக சகோதர, சகோதரிகள் கடந்த பல வருடங்களில் இடம்மாறி சென்றிருக்கின்றனர். மாரா, ஹாமரூராயி, டேரீயி ஆகிய குடும்பங்களை சேர்ந்தவர்களும், தனியாக சத்தியத்திலிருந்த ஆடோ லாகூர் என்பவரும் அவர்களில் சிலர். மாரா குடும்பத்தைச் சேர்ந்த வாயியேரேடியாயும் மரீ-மெட்லெனும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளும் டஹிடியிலிருந்து ரையாடீ தீவுக்கு சென்றனர். ஏனெனில், விசேஷ பயனியர்களாக அங்கு சேவை செய்துவந்த தம்பதியர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ஆதலால், அந்தத் தீவில் இரண்டு சகோதரிகளும், முழுக்காட்டப்படாத சில பிரஸ்தாபிகளுமே மீதமிருந்தனர்.
வாயியேரேடியாய் மர சிற்பியாகவும் பின்னர் பவழத்தில் சிற்பங்கள் செய்பவராகவும் இருந்ததால் தன் வேலையை மாற்றிக்கொள்ளாமலேயே அவரால் வேறு இடத்திற்கு செல்ல முடிந்தது. அங்கு அவர் மட்டுமே மூப்பராக இருந்ததால் தகுதிவாய்ந்த மற்றொரு சகோதரர் வரும்வரை ரையாடீயிலிருந்த சிறிய தொகுதியை ஐந்து வருடங்கள் கவனித்து வந்தார். அதற்கு பிறகு இந்தக் குடும்பத்தினர் டாஹாயாவிற்கு சென்று அங்கே நான்கு வருடங்கள் வசித்தனர்.
இந்த இரண்டு தீவுகளிலுமே மாரா குடும்பத்தினருக்கு வாழ்க்கை அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை, காரணம் பணக்கஷ்டம். வாயியேரேடியாய் இவ்வாறு சொல்கிறார்: “நான் செய்த சிற்பங்களை விற்க டஹிடி போக வேண்டியிருந்தது. சில சமயங்களில் விமான டிக்கெட் வாங்குவதற்குக்கூட கையில் காசில்லாதிருந்தது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், அந்தச் சிறிய விமான போக்குவரத்திற்கு பொறுப்பாளராய் இருந்தவரிடம் கடனில் எனக்கு டிக்கெட் கொடுக்கும்படி கேட்பேன். திரும்பி வந்ததும் முழு பணத்தையும் கொடுத்துவிடுவதாக வாக்குறுதி கொடுப்பேன். சில சமயங்களில் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டது என்னவோ உண்மைதான், ஆனாலும் ஒரு நாள்கூட பட்டினி கிடந்ததில்லை.” வாயியேரேடியாயும் மரீ-மெட்லெனும் வைத்த சுய தியாக முன்மாதிரி அவர்களுடைய மகள்
ஷானின் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது அவர் டஹிடி பெத்தேலில் 26 வருடங்களாக முழுநேர ஊழியம் செய்து வருகிறார்.1969-ல் ஆடோ லாகூர் தன் குடும்பத்தோடு ரூரூடூ தீவிற்கு இடம் மாறிச் சென்றார். இது துபாய் தீவுகளிலிருக்கிறது; தன்னுடைய வேலையை மாற்றிக்கொண்டு அங்கு செல்ல அவர் ஏற்பாடு செய்திருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்புதான் அவர் முழுக்காட்டுதல் பெற்றிருந்தார். அவருடைய குடும்பத்தில் வேறு யாருமே சத்தியத்தில் இல்லை, அந்தத் தீவுகளில் வேறு பிரஸ்தாபிகளும் இல்லை. அங்கு சென்று சேர்ந்த அடுத்த நாளே அவர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். தனது டைரியில் இவ்வாறு எழுதினார்: “தனியாக பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டேன். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. மகா பாபிலோன் இங்கு பலமாக வேரூன்றியிருக்கிறது.”
ஆனால் சீக்கிரத்திலேயே, அக்கறை காண்பித்தோர் நற்செய்தியை ஏற்க ஆரம்பித்தனர், ஒரு சிறிய தொகுதி உருவானது. ஆரம்பத்தில், லாகூரின் வீட்டிலிருந்த ஹாலில் கூட்டம் நடத்தப்பட்டது. ஆடோ லாகூர் கூறுவதாவது: “அந்தத் தீவைப் பொருத்தவரை நாங்கள் ஒரு புதிய மதத்தை சேர்ந்தவர்கள்; எனவே எங்கள் தொகுதிக்கு ‘லாகூரின் மதம்’ என்று பெயரிட்டார்கள். இருப்பினும், ‘யெகோவா விளையச் செய்து’ கொண்டே இருந்ததால் எங்கள் சிறிய தொகுதி 1976-ல் ஒரு சபையாக உருவானது. (1 கொ. 3:6)” சகோதரர் லாகூர் 2000-ல் இறந்தார். அதற்கு முன்பு, அவரது மனைவி பேரேனாவும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் மெய் வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
ருயிடால்ஃப் ஹாமரூராயியும் நார்ஸீஸ் ஹாமரூராயியும், போரா போரா தீவுக்குச் குடிமாறிச் சென்றனர். டஹிடி மண்டல எலெக்டிரிக் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்த ருயிடால்ஃப் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, போரா போராவில் தேங்காய்களைப் பறித்து அவற்றைக் கொப்பரை ஆக்கி விற்கும் வேலையை ஏற்றார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவருக்கு வேறு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஆனால், அவரையும் அவருடைய மனைவியையும் யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்தார். ஏனெனில், காலப்போக்கில் அந்தத் தீவில் ஒரு சபை உருவானது! 25 வருடங்களுக்கும் மேலாக ஹாமரூராயி தம்பதியர் வீட்டில்தான் சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிறகு, 2000-ல் தங்களுக்கு சொந்தமான, புத்தம்புதிய ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர்.
அந்த மன்றம், போரா போராவிலுள்ள எழில் கொஞ்சும் உப்புநீர் ஏரிக்கு அருகே அமைந்துள்ளது.டாரோவா டேரீயியும் காட்ரீன் டேரீயியும், சொசைட்டி தீவுக்கூட்டத்திலிருந்த மாயுபீடி என்ற சிறிய தீவுக்கு குடிபெயர்ந்து சென்றனர். அப்போது, அவர்களுடைய 15 பிள்ளைகளில் 7 பேர் இன்னும் அவர்களோடுதான் இருந்தார்கள். 1977-ல் டேரீயி குடும்பத்தினர் அங்கு சென்றபோது அவர்களைத் தவிர வேறு பிரஸ்தாபிகளே இருக்கவில்லை. உப்புநீர் ஏரியை ஒட்டியிருந்த, தாவரங்கள் நிறைந்த மோட்டு எனப்படும் சின்னஞ்சிறு தீவில் அவர்கள் வாழ்ந்தார்கள். மீனும் தேங்காய் துருவலும்தான் அவர்களுடைய முக்கிய உணவு. உண்ணத்தக்க சிப்பி வகைகளை அவர்கள் சேகரித்து விற்றார்கள். பிரசங்கிப்பதற்காக உப்புநீர் ஏரியை கடந்துதான் முக்கிய தீவிற்கு செல்ல வேண்டும். அவ்வாறு நடந்து செல்கையில், விஷ முட்கள் கொண்ட மீன்களை மிதித்துவிடாதபடி மிகவும் கவனமாக சென்றார்கள்.
1980-ல் டேரீயி தம்பதியர் விசேஷ பயனியர்களாக போரா போரா தீவிற்கு அனுப்பப்பட்டனர். அங்கு 5 வருடங்கள் விசேஷ பயனியர்களாக சேவை செய்த பிறகு, 15 வருடங்கள் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்தனர். அவர்களுடைய ஆரம்பகால பைபிள் மாணாக்கர்களில் ஒரு தம்பதியர் நற்செய்தியின் நிமித்தம் கடும் எதிர்ப்பை சந்தித்தனர். அதைப் பற்றித்தான் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.
ஆவிக்குரிய குழந்தைகளுக்கு வந்த சோதனை
போரா போரா தீவில் டேரீயி தம்பதியரோடு பைபிளைப் படித்தவர்களில் சத்தியத்தை முதலாவது ஏற்றுக்கொண்டவர்கள் எட்மோ (ஆபோ) ராய், வாஹினேரீய் ராய் தம்பதியர் ஆவர். இவர்கள் குடியிருந்த வீடு எட்மோவின் அம்மாவிற்கு சொந்தமானது. இவர்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கும்; அதற்குள் பாதிரியாரின் தூண்டுதலால் எட்மோவின் அம்மா, அந்த வீட்டைவிட்டு வெளியேறும்படி அவர்களிடம் கறாராக சொல்லிவிட்டார். அதனால் எட்மோவும் அவரது மனைவியும் அவர்களுடைய இரண்டு வயது மகனும் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு குடிசையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதோடுகூட அந்தப் பாதிரியார் எட்மோவின் முதலாளியிடம் சென்று
அவரை வேலையைவிட்டு நீக்கிவிடும்படி கட்டாயப்படுத்தினார். அவர் அத்தோடு நிற்கவில்லை, எட்மோவிற்கு வேலை தரக்கூடிய மற்ற முதலாளிகளிடமும் சென்று அவருக்கு வேலை கொடுக்கக்கூடாது என்றும் சொல்லி வைத்துவிட்டார்! அடுத்த எட்டு மாதத்திற்கு இந்தச் சிறிய குடும்பத்தார் பெரும்பாலும் மீன் பிடித்தே தங்கள் வாழ்க்கையை ஓட்டினார்கள்.பிறகு ஒரு நாள், வீடு கட்ட விரும்பிய ஒரு பெண்மணி எட்மோவின் முன்னாள் முதலாளியை சந்தித்துப் பேசினார். எட்மோவின் திறமைகளை அந்தப் பெண்மணி வெகுவாக போற்றியதால் அவரே தனக்காக வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால், யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டதால் எட்மோ வேலையிலிருந்து நீக்கப்பட்டதை அறிந்த உடனே, எட்மோ வேலை செய்தால் மட்டுமே அப்பணியை அந்த முதலாளியிடம் ஒப்படைக்கப் போவதாக கூறிவிட்டார். அதனால், இழந்த வேலையை எட்மோ மறுபடியும் பெற்றார். இதற்கிடையில், அவருடைய அம்மாவின் மனம் இளகியது; தன் மகனையும் மருமகளையும் தன் வீட்டிற்கே திரும்ப வந்துவிடும்படி அழைத்தார். இன்று, போரா போரா சபையில் எட்மோ மூப்பராக சேவை செய்கிறார்.
வாஹீனீ தீவில் நற்செய்தி வேரூன்றுகிறது
டஹிடியில் 1958-ல் முழுக்காட்டப்பட்ட ஆரம்பகால பைபிள் மாணாக்கரில் ஆகஸ்ட் டமனஹாவும் ஒருவர். முழுக்காட்டுதலுக்கு பிறகு அவர் ஐக்கிய மாகாணங்களுக்குக் குடிமாறினார். பிறகு, மனைவி ஸ்டெலாவுடனும் மூன்று பிள்ளைகளுடனும் 1960-களின் பிற்பகுதியில் டஹிடி திரும்பினார். அங்கே அவர் செய்த வியாபாரம் ஓஹோவென்று நடந்தது. ஆனால், 1971-ல் ஒரு வட்டார ஊழியர் அளித்த உற்சாகத்தாலும், முன்னர் குறிப்பிடப்பட்ட மாரா குடும்பத்தினரின் உதாரணம் அளித்த உற்சாகத்தாலும் டமனஹா குடும்பத்தினர் தங்கள் வியாபாரத்தை விற்றுவிட்டு, டஹிடியிலிருந்து 160-க்கும் சற்று அதிக கிலோமீட்டர் தொலைவிலிருந்த வாஹீனீ தீவிற்கு குடிமாறிச் சென்றனர்.
அந்தச் சமயத்தில், முழுக்காட்டப்பட்ட ஒரு சகோதரியும் அக்கறை காண்பித்த சிலருமே அந்தத் தீவில் இருந்தார்கள். பயனியர்களும் வட்டாரக் கண்காணியும் எப்போதாவது ஒருமுறை சந்திக்க வரும்போதுதான் அவர்களுக்கு யெகோவாவின் அமைப்போடு தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், டமனஹா குடும்பத்தினர் அங்கு சென்றபோது அவர்கள் அளவிலா ஆனந்தம் அடைந்தனர். ஆகஸ்ட் உடனடியாக கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்; அவருடைய வீட்டு சமையலறையில் அவை நடத்தப்பட்டன. ஏறக்குறைய 20 பேர் வந்தார்கள்.
இங்கு வந்ததும் ஆகஸ்டிற்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. இருந்தாலும், யெகோவா நிச்சயம் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்தனர். எதிர்பார்த்தபடியே யெகோவாவும் அவர்களுக்கு கொடுத்தார். உதாரணமாக, ஆகஸ்ட் தன் குடும்பத்தாருடன் பிரசங்கிக்க செல்கையில் பொதுவாக தனது காரை ஊழியம் செய்த பிராந்தியத்திலேயே நிறுத்தி வைப்பார். ஊழியம் முடிந்து திரும்புகையில், கார் முழுவதும் உணவுப்பண்டங்கள் நிரம்பியிருப்பதையே பெரும்பாலும் காண்பார்கள். அவற்றை யார் வைத்தது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அந்தப் பிராந்தியத்தில் வசித்த, தங்களுடைய சூழ்நிலையை அறிந்த, இரக்க குணமுள்ளவர்கள்தான்
வைத்திருக்க வேண்டும் என அவர்களாகவே ஊகித்துக்கொண்டார்கள். அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைமை மேம்படும் வரையில் பல வாரங்கள் இவ்வாறே நடந்தது.டமனஹா குடும்பத்தினரும் அவர்களைப் போன்ற மற்றவர்களும் அதிக வைராக்கியத்தையும் சகிப்புத்தன்மையையும் காண்பித்தனர். அதோடு, தீவுவாசிகளும் இரக்க குணமுள்ளவர்களாக இருந்தனர். இதனால், இன்று வாஹீனீயில் செழித்தோங்கும் ஒரு சபை இருப்பதில் ஆச்சரியமே இல்லை. சொல்லப்போனால், 53 தீவுவாசிகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் பிரஸ்தாபிகள் இங்கு இருக்கின்றனர். சமீப வருடங்களில், தீவிலுள்ள 12 பேரில் ஒருவர் என்ற வீதத்தில் நினைவு ஆசரிப்பிற்கு வந்திருக்கின்றனர்!
மற்ற அநேக சாட்சிகளின் குடும்பங்களும் இதேபோன்ற சுய தியாக மனப்பான்மையை காண்பித்திருக்கின்றன. உதாரணமாக, 1988 முதல் ஷான்-பால் லாசால், கிறிஸ்ட்யான் லாசால் தம்பதியர், மார்கொஸ்ஸஸ் தீவுகளில் இரண்டு வருடங்கள் ஊழியம் செய்தனர். டஹிடியிலுள்ள சமூக பாதுகாப்பு நிர்வாகத்தின் இயக்குநர் குழு அங்கத்தினர்களில் ஷான்-பாலும் ஒருவர். ஆனால், ஊழியத்தை விரிவாக்க வேண்டும் என்பதற்காக அந்த கௌரவமான வேலையை ராஜினாமா செய்தார். 1994-ல் லாசால் தம்பதியர் மறுபடியும் குடிமாறினர். இந்த முறை, டுமோடுவிலுள்ள ரேஙிரோவாவிற்கு சென்று மூன்று வருடங்கள் தங்கினர். ஷான்-பால் லாசால் இப்போது பிரான்சில் உண்மையோடு சேவை செய்கிறார்.
சமீபத்தில், கால்சோன் டீன் தனது மனைவி லீனாவுடன் துபாய் தீவுக்கூட்டத்திலுள்ள துபாய் தீவிற்கு மாறிச் சென்றார். அவர், டஹிடியிலுள்ள
சிறைச்சாலையில் துணை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர்கள் இருவருமே பயனியர்கள், அந்தத் தீவிலுள்ள சிறிய சபைக்கு பெரும் உதவியாகவும் இருக்கிறார்கள். அங்கு இன்றும் அநேக மூப்பர்கள் தேவைப்படுகிறார்கள்.உதவியளிக்க பிரான்சிலிருந்து வந்த குடும்பங்கள்
பிரசங்க வேலையில் உதவி செய்வதற்காக சில குடும்பத்தார் பிரான்சிலிருந்துகூட வந்தனர். உதாரணத்திற்கு, சீகாரி குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குடும்பத்தில், ஃபிரான்ஸீஸ், ஷானெட், 6 வயதும் 9 வயதும் நிரம்பிய அவர்களுடைய மகள்கள் ஆகியோர் இருந்தனர். ஃபிரான்ஸீஸ் இவ்வாறு கூறுகிறார்: “எங்கள் ஊழியத்தை இன்னும் விரிவாக்க வாய்ப்பு கிடைக்குமா என்று நாங்கள் காத்திருந்தோம். அப்போது, தென் பசிபிக் பகுதியில் ஊழியம் செய்ய பிரஸ்தாபிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1971-ல் வாசித்தோம்.” இவர்கள் அங்கு செல்வதை சில நண்பர்களும்
உறவினர்களும் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அதை ஒரு சவாலாக ஏற்று ஏப்ரல் 1972-ல் பபீடியில் வந்திறங்கினர்.ஃபிரான்ஸீஸ் ஒரு மூப்பராக இருந்ததால் டஹிடிக்கு அவர் வந்ததும் புனாயுயா குடியிருப்பில் இரண்டாவது சபை உருவாக்கப்பட்டது. அப்போது, ஷான்-பியெர் ஃபிரான்ஸீன் என்பவர் ஏற்கெனவே அங்கிருந்த சபையின் நடத்தும் கண்காணியாக இருந்தார். 1976-ல் கிளை அலுவலகக் குழு அமைக்கப்பட்டபோது டஹிடியின் முதல் கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்யும் சிலாக்கியம் இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. ஃபிரான்ஸீஸ், 12 வருடங்கள் அந்தப் பொறுப்பில் சேவை செய்தார்.
சீகாரி குடும்பத்தாரின் நண்பர்களும் உறவினர்களும் பயந்தது போல ஏதாவது நடந்ததா? ஃபிரான்ஸீஸ் கூறுவதாவது: “மற்றவர்கள் சொன்னதற்கு நேர்மாறாக, நாங்கள் இடம் மாறிச் சென்றது எங்களுடைய மகள்கள் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியது. சொல்லப்போனால், நாங்கள் நால்வரும் சேர்ந்து இப்போது முழுநேர ஊழியத்தில் 105 வருடங்களை செலவிட்டிருக்கிறோம். யெகோவா வாக்குறுதி அளித்தது போலவே அபரிமிதமான ஆசீர்வாதங்களையும் அனுபவித்திருக்கிறோம்.—மல். 3:10.”
மோவோரேயா தீவில் மூப்பர்கள் தேவை என்று 1981-ன் ராஜ்ய ஊழிய பிரதியில் பிரான்சு கிளை அலுவலகம் அறிவித்திருந்தது. பபீடியிலிருந்து அங்கு படகில் செல்ல 30 நிமிடம் பிடிக்கும். அதைக் கேட்ட இரண்டு சகோதரர்கள் தங்கள் மனைவிகளோடு அங்கு சென்றனர். அப்படி சென்றவர்களுள் ஒரு தம்பதியர் அலன் ராஃபாயெல்லீ, ஐலீன் ராஃபாயெல்லீ ஆவர். மோவோரேயாவில் எட்டு வருடங்கள் ஊழியம் செய்து அங்கு ஒரு சபையை உருவாக்க உதவினர். அலன், 1987 முதல் 1994 வரை கிளை அலுவலகக் குழுவிலும்கூட சேவை செய்தார்.
1997-ல் பிரான்சு கிளை அலுவலகம், வேலையிலிருந்து ஓய்வுபெற்ற சகோதரர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தது. அதில், அதிகமான மூப்பர்கள் தேவைப்பட்ட ஒதுக்குப்புற தீவுகளுக்கு சென்று இரண்டு வருடங்களோ அதற்கும் அதிகமோ அங்கிருந்து உதவ முடியுமா என்று கேட்டது. டஹிடி கிளை அலுவலகக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக சேவை செய்யும் ஷேரார் பல்ஷா இவ்வாறு கூறுகிறார்: “இரண்டு, மூன்று தம்பதியர் முன்வரலாம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 11 தம்பதியர் முன்வந்தபோது எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! இரண்டு தம்பதியர் நிரந்தரமாக இங்கேயே குடியேறிவிடவும் முடிவு செய்திருந்தார்கள். இந்தச் சகோதர, சகோதரிகளின் ஆவிக்குரிய முதிர்ச்சியும் அனுபவமும் இங்குள்ள பிரஸ்தாபிகளுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. இவர்கள் மிஷனரிகளாக இல்லாவிட்டாலும், மிஷனரி வாழ்க்கையையும் ஒதுக்குப்புறமான தீவில் வாழ்வதன் சவால்களையும் ருசித்திருக்கிறார்கள்.”
கிளை அலுவலகம் நிறுவப்படுகிறது
பசிபிக் பகுதியில் வேலை முன்னேறியபோது அமைப்பு சார்ந்த மாற்றங்களும் நிகழ்ந்தன. பிரெஞ்சு பாலினேசியாவில் நடைபெற்று வந்த ஊழியத்தை 1958 வரை ஆஸ்திரேலிய கிளை அலுவலகம் கவனித்துக்கொண்டது. அதன் பிறகு, இன்னும் அருகிலிருந்த பிஜி கிளை அலுவலகம் அப்பணியை ஏற்றது. 1975-ல் மற்றொரு மாற்றம் நிகழ்ந்தது. அப்போது, உலக தலைமை காரியாலயத்தைச் சேர்ந்த நேதன் நாரும் ஃபிரெட்ரிக் டபிள்யூ. ஃபிரான்ஸும் டஹிடிக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த உற்சாகமூட்டும் பேச்சுக்களை 700-க்கும் அதிகமானோர் கேட்டனர். ராஜ்ய மன்றம் ஒன்றில் கூடியிருந்த ஏறக்குறைய 500 பேருக்கு சகோதரர் நார் ஸ்லைடு படக்காட்சியைப் போட்டுக் காண்பித்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சகோதரர் நார் மூப்பர்களை சந்தித்து பேசினார். அப்போது டஹிடியில் ஒரு கிளை அலுவலகம் நிறுவுவதைப் பற்றி யோசனை தெரிவித்தார். அதைக் கேட்டதும் சகோதரர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஆங்கிலம் அறிந்த வட்டாரக் கண்காணியான அலன் ஷாமே கிளை அலுவலகக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அந்த வருடத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பட துவங்கிய இந்தப் புதிய ஏற்பாடு ஒரு முன்னேற்றப் படியாகவே இருந்தது. ஆஸ்திரேலியாவைவிட பிஜி அருகில் இருந்தாலும் மொழி பிரச்சினை இன்னமும் நிலவியது. இப்பொழுதோ, பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள சகோதரர்கள் தங்கள் கிளை அலுவலகத்தோடு உடனுக்குடன், நேரடியாக தொடர்புகொள்ள முடிந்தது.
முழு பிராந்தியத்திலும் 300-க்கும் குறைவான பிரஸ்தாபிகளே இருந்ததால் கிளை அலுவலகம் சிறியதாகவே இருந்தது. உண்மையைச் சொன்னால், பபீடி ராஜ்ய மன்றத்தின் பக்கத்திலுள்ள ஓர் அறையே கிளை அலுவலகமாக செயல்பட்டது. அறையின் ஒரு பக்கத்தில் மேஜை இருந்தது, மறுபக்கத்தில் பிரசுரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆரம்பத்தில், கிளை அலுவலகக் கண்காணியாகிய அலன் ஷாமேக்கு பகுதிநேர வேலையே இருந்தது. எனவே, அவரும் அவருடைய மனைவி மரீ-ஆன்னும் வட்டார ஊழியத்தை தொடர்ந்து செய்ய முடிந்தது. அதோடு, பிரஸ்தாபிகளே இல்லாத ஒதுக்குப்புற தீவுகளுக்கும் சென்று பிரசங்கிக்க முடிந்தது.
டுமோடு, காம்பியர் தீவுக்கூட்டங்களில் பிரசங்கித்தல்
டஹிடியில் கிளை அலுவலகம் நிறுவப்பட்டதால் ஒதுக்குப்புற தீவுகளிலும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில், சகோதரர்கள் சிறு தொகுதிகளாக சேர்ந்து இந்தத் தீவுகளுக்கு சென்றார்கள். டுமோடுவில் இருந்த மிகப்
பெரிய வட்டப்பவழ திட்டு ரேஙிரோவா தீவாகும். 20 சகோதர, சகோதரிகள் ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அந்தத் தீவிற்கு சென்றதைப் பற்றி, கொஞ்ச காலம் கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்த அக்செல் ஷாங் நினைவுகூருகிறார். அவர் கூறுவதாவது: “அங்கிருந்த அனைவரிடமும் பிரசங்கித்த பிறகு, ஒரு பொதுப்பேச்சுக்கு ஏற்பாடு செய்தோம். கூரை போடப்பட்ட ஓரிடத்தை உபயோகித்துக்கொள்ள மேயர் அனுமதி அளித்தார். ஆரம்பத்தில், நாங்கள் மட்டும்தான் பேச்சைக் கேட்க போகிறோம் என்று நினைத்தோம்! ‘ஒருவேளை மதத்தலைவர்களைக் கண்டு ஜனங்கள் பயப்படுகிறார்களோ’ என்று யோசித்தோம். ஆனால், பேச்சு ஆரம்பித்த பிறகு ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தனர். கடைசியில், அந்த இடமே நிரம்பிவிட்டது.”சகோதரர் ஷாங் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “பேச்சு நடந்துகொண்டிருக்கையில் ஒரு கத்தோலிக்க பாதிரி, கூட்டம் நடக்கும் இடத்திற்கு தன் சைக்கிளில் வேகவேகமாக வருவதைப் பார்த்தோம். ஆனால், பக்கத்தில் வந்ததும் வேகத்தை குறைத்துக்கொண்டு தன் சர்ச்சை சேர்ந்தவர்களில் யார், யார் அங்கு இருக்கிறார்கள் என்று கூர்ந்து கவனித்துவிட்டு சென்றார். இவ்வாறு அவர் பல முறை வந்து சென்றதைப் பார்த்த எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.”
1988-ல் காம்பியர் தீவுகளுக்குச் சென்று பிரசங்கிக்க அலன் ராஃபாயெல்லீ ஏற்பாடு செய்தார். இந்தத் தீவுகள் டஹிடியிலிருந்து 1,600 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ளன. பெரும்பாலும் கத்தோலிக்கர் வசிக்கும் இந்தத் தீவுக்கூட்டமே பிரெஞ்சு பாலினேசியாவில் மிகச் சிறியதும் மிகவும் ஒதுக்குப்புறத்தில் உள்ளதும் ஆகும். இதற்கு முன்பு 1979-ல்தான் அந்தத் தீவுவாசிகளுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அப்போது அலன் ஷாமே அங்கு மூன்று நாட்கள் தங்கி பிரசங்கித்திருந்தார்.
நம் ஊழியத்தைப் பற்றி விளக்கவும் ஒரு பொதுப்பேச்சைக் கொடுக்க இடமளிக்கும்படி கேட்கவும் சகோதரர்கள் மேயரைப் போய் முதலில் சந்தித்தனர். திருமண மண்டபம் ஒன்றை உபயோகிக்க மேயர் அனுமதி
கொடுத்தார். ஆனால், தேர்தல் வேலைகளில் அவர் மும்முரமாக இருந்ததால், பேச்சை கேட்பதற்கு ஜனங்களை அழைக்க சகோதரர்களுடன் தன்னால் வர முடியாது என்று கூறி வருத்தப்பட்டார். அதற்கென்ன பரவாயில்லை என்று சகோதரர்கள் உடனடியாக கூறியதை சொல்லவும் வேண்டுமா? அந்தப் பேச்சிற்கு மேயரும், உள்ளூர் பிரெஞ்சு போலீஸ்காரரும் உட்பட 30 பேர் வந்திருந்தனர்.அந்தப் பொதுப் பேச்சு மரித்தவர்களின் நிலைமை பற்றி விவரித்தது. அப்போது, பைபிளின்படி நரகம் என்பது வெறும் பிரேதக்குழிதான் என்றும், கிறிஸ்துவும் அங்கு சென்றார் என்றும் அலன் குறிப்பிட்டார். “இயேசு கட்டாயம் அங்கு போயிருக்க முடியாது!” என்று சபையாரில் ஒருவர் குரலெழுப்பினார். கிறிஸ்து “நரகத்திற்கு சென்றார்” என்று குறிப்பிடும் அப்போஸ்தல விசுவாசப்பிரமாணத்தை அலன் மேற்கோள் காட்டினார். இதைக் கேட்ட சபையார் வாயடைத்துப் போனார்கள். இந்தச் சொற்றொடரை பல வருடங்கள் சொல்லி வந்தும் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காதிருந்ததை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினர் இப்போது சத்தியத்தில் இருக்கிறார்கள்.
சபைகளைப் போய் சந்தித்தது போக இடையிடையே ஒருசில வாரங்கள் பயணக் கண்காணிகள் ஃப்ரீயாக இருந்தனர். அந்த நேரங்களில், பிரஸ்தாபிகள் இல்லாத பிராந்தியங்களுக்கு சென்று பயனியர் ஊழியம் செய்தனர். டஹிடியைச் சேர்ந்த மாயூரீ மெர்ஸியே, மெலானீ மெர்ஸியே தம்பதியர் அப்படித்தான் செய்தனர். டுமோடுவிலுள்ள பல்வேறு வட்டப்பவழ திட்டுகளான அஹே, ஆனா, ஹாவு, மனிஹி, டகபோடோ, டகரோவா போன்ற இடங்களுக்குப் போய் நற்செய்தியை முதன்முதலாக பிரசங்கித்தது இவர்கள்தான். முடிந்தபோதெல்லாம், மாயூரீ பொதுப் பேச்சு கொடுத்தார் அல்லது ஸ்லைடு படக்காட்சி காண்பித்தார். “கத்தோலிக்க ஆதரவாளர்கள் நிறைந்த ஆனா தீவைத் தவிர மற்ற தீவுகளிலிருந்த பெரும்பாலானோர் சிநேகப்பான்மையாகவே நடந்துகொண்டார்கள். ஒருமுறை ஆனா தீவில் ஸ்லைடு படக்காட்சி நடக்கையில் சிலர் கூச்சல்போட
ஆரம்பித்தனர், இன்னும் சிலர் எங்களை அடித்துவிரட்ட நினைத்தனர். ஒரு வழியாக அவர்களை சமாதானப்படுத்திய பிறகே நாங்கள் நிம்மதியடைந்தோம்” என்று அவர் கூறுகிறார்.உதவிக்கு வரும் மிஷனரிகள்
1978 முதற்கொண்டு பிரான்சிலிருந்து அநேக மிஷனரிகள் ஒதுக்குப்புறமான தீவுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். அந்த வருடத்தின் ஆகஸ்ட்
மாதத்தில் மீஷெல் மல்லெர், பாபெட் மல்லெர் தம்பதியர் இங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மார்கொஸ்ஸஸ் தீவுகளிலேயே மிகவும் பெரியதும் அதிக ஜனத்தொகை உள்ளதுமான நுகு ஹிவா தீவிற்கு அனுப்பப்பட்டார்கள். கத்தோலிக்க ஆதிக்கத்திலிருந்த இந்தத் தீவுக்கூட்டத்திற்கு சகோதரர்கள் எப்போதாவது ஒரு முறை சென்றிருக்கிறார்கள். ஆனால், யாராலுமே நீண்டகாலம் அங்கு தங்க முடியவில்லை. சாலைகள் இல்லாததால் மீஷெல்லும் பாபெட்டும் நடந்தோ குதிரையிலோதான் பயணிக்க வேண்டியிருந்தது. இரவு தங்குவதற்கு உள்ளூர் வாசிகள் பெரும்பாலும் ஓரிடம் கொடுத்தனர். ஓர் இரவன்று, உலர்த்தியிருந்த காப்பி கொட்டைகள் மீது அவர்கள் படுக்க வேண்டியிருந்தது!மல்லெர் தம்பதியர் மார்கொஸ்ஸஸ் தீவுகளில் சுமார் ஒன்றரை வருடங்கள் தங்கியிருந்தனர்; பிறகு வட்டார ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களுடைய சந்திப்பை அநேகர் போற்றி, அவர்களிடமிருந்து பிரசுரங்களையும் வாங்கிக்கொண்டனர். சொல்லப்போனால், மீஷெல்லும் பாபெட்டும் சேர்ந்து ஒரே வருடத்தில் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தின் ஆயிரம் பிரதிகளை வினியோகித்திருந்தனர்! இப்படிப்பட்ட அருமையான மிஷனரிகளின் உழைப்பும், பிரஸ்தாபிகள் மற்றும் பயனியர்களின் உழைப்பும் சேர்ந்ததால் மார்கொஸ்ஸஸில் மட்டுமல்ல கிளை அலுவலகத்தின் கீழிருந்த பிராந்தியம் முழுவதிலும் ஊழியம் படுவேகமாக முன்னேறியது. உண்மையைச் சொன்னால், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 69 தொடர்ச்சியான உச்சநிலைகள் ஏற்பட்டதாக அறிக்கைகள் காண்பிக்கின்றன!
இந்தப் புதியவர்கள் அனைவருக்கும் பயிற்சி தேவைப்பட்டது. ஆனால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உதவிசெய்ய அனுபவம் வாய்ந்த சகோதரர்கள் போதுமானோர் எப்போதும் இருக்கவில்லை. மல்லெர் தம்பதியரோ, ஒரு சமயத்தில் இரண்டிரண்டு பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்ததன் மூலம் இந்தப் பிரச்சினையை சமாளித்தனர். அதாவது, மீஷெல்லுடனோ பாபெட்டுடனோ ஒரு பிரஸ்தாபி வீட்டிற்குள் சென்று பிரசங்கிக்கையில் மற்றவர் தன் முறை வருவதற்காக வெளியே காத்திருந்தார். இப்போது, மல்லெர் தம்பதியர் ஆப்பிரிக்காவிலுள்ள பெனினில் மிஷனரிகளாக சேவை செய்கின்றனர்.
‘பிரசங்க வேலை எங்களுடைய பைபிள் அறிவை சோதித்தது’
மிஷனரிகளான கிறிஸ்ட்யான் பேலோட்டி, ஷுல்யெட் பேலோட்டி தம்பதியர், பிப்ரவரி 1982-ல் பிரெஞ்சு பாலினேசியா வந்து சேர்ந்தனர். ஆரம்பத்தில் வட்டார ஊழியம் செய்தவர்கள் பின்னர் ரையாடீ தீவில் ஐந்து வருடங்கள் மிஷனரிகளாக ஊழியம் செய்தனர். இத்தீவின் சில பகுதிகளுக்கு ஒருவகை விசேஷித்த தோணியில்தான் செல்ல முடியும்.
ஆனால், அங்கு பிரசங்கிப்பது துடுப்பு வலிக்கும் ஒருவரின் திறமையை மட்டுமே சோதிக்கவில்லை. கிறிஸ்ட்யான் பேலோட்டி இவ்வாறு கூறுகிறார்: “பைபிளைப் பற்றிய எங்களுடைய அறிவையும் அது சோதித்தது. ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு தாங்கள் பரலோகத்திற்குப் போவார்கள் என்பது எப்படி தெரியும்?’ அல்லது ‘வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள மிருகங்கள் எதைக் குறிக்கின்றன?’ போன்ற கேள்விகளை ஜனங்கள் அடிக்கடி கேட்டார்கள்.”பெரும்பாலான சிறிய சமுதாயங்களில் இருப்பதைப் போலவே ரையாடீவாசிகள் அனைவருக்கும் ஒருவரையொருவர் நன்கு தெரியும். “ஆகவே, ஒரு பிரஸ்தாபி உற்சாகமிழந்து போனால், ‘இன்னாரை கொஞ்ச நாளாவே பாக்கலையே. சோர்ந்து போய்விட்டாரோ?’ அல்லது ‘இன்னாருக்கு கண்டிப்பா உதவி தேவை. ஆவிக்குரிய காரியங்கள்ல அவர்கிட்ட ஏதோ குறை இருக்கு’ என்றோ வீட்டுக்காரர்கள் அடிக்கடி சொல்வார்கள்” என கிறிஸ்ட்யான் பேலோட்டி கூறுகிறார். பேலோட்டி தம்பதியர் ரையாடீயை விட்டுச் செல்வதற்கு முன், அங்கிருந்த ஏறக்குறைய ஒவ்வொரு ஃபரே-யிலும் (“வீடு” என்பதற்கான டஹிடிய வார்த்தை) இருந்த யாராவது ஒருவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்திருந்தார்.
பேலோட்டி தம்பதியர் ரையாடீ தீவில் தங்கியிருந்தாலும் மாயுபீடி தீவிற்கும் பிரசங்கிக்கச் சென்றனர். ஒரு சந்தர்ப்பத்தில், சில புத்தகங்கள் நேரடியாக அந்தத் தீவிற்கே வந்துசேரும்படி ஏற்பாடு செய்திருந்தனர். புத்தகங்களோ சரியான நேரத்தில் வந்து சேரவில்லை. என்றபோதிலும், பேலோட்டி தம்பதியர் மனந்தளரவில்லை; அந்தப் புத்தகத்தின் தங்கள் சொந்த பிரதிகளை ஜனங்களிடம் காண்பித்தனர். அவை கட்டாயம் வந்துசேரும் என்ற நம்பிக்கையில் சுமார் 30 குடும்பத்தார் தங்களுக்கு ஒரு பிரதி வேண்டும் என்று கேட்டிருந்தனர். கடைசியாக அவை வந்து சேர்ந்த பிறகு, அக்கறை காண்பித்த ஒருவருடைய உதவியோடு அவற்றை விநியோகித்தனர்.
பேலோட்டி தம்பதியர் அடுத்ததாக ரேஙிரோவா தீவுக்கு அனுப்பப்பட்டனர். டுமோடுவைச் சேர்ந்த அத்தீவில் இவர்கள் மட்டுமே சாட்சிகளாக இருந்தார்கள். பின்னர் பிரெஞ்சு கயானாவிற்கும், கடைசியாக ஜனநாயக காங்கோ குடியரசிற்கும் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். இப்போது, சகோதரர் பேலோட்டி காங்கோ குடியரசு கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்து வருகிறார்.
“யெகோவா உனக்கு பயிற்சியளிப்பார்”
ஃபிரேடேரீக் லுகஸ், உர்மீன்டா லுகஸ் தம்பதியர், ஏப்ரல் 1985-ல் பிரான்சிலிருந்து வந்தனர். மூன்று பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்த டேஹாயா தீவில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டனர். இந்த இளம்
தம்பதியருக்கு முதல் இரண்டு வாரங்கள் கடினமாக இருந்தன. தங்கள் வீட்டு ஹாலில் கூட்டங்களை நடத்தினர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே. ராஜ்ய பாடல்களைப் பாடினர், துக்கம் தாளாமல் அழுதனர். ஆனாலும் அவர்கள் சோர்ந்துவிடவில்லை.அத்தீவில் மின்சார வசதியும் தொலைபேசி வசதியும் இல்லை. ஆனாலும், அவர்களிடம் ஒரு வாக்கீ-டாக்கீ இருந்தது. அதை உபயோகித்து அருகிலிருந்த ரையாடீ தீவிலிருந்த மிஷனரிகளோடு பேச முடிந்தது; அதுவும் தொடர்பு கிடைத்தபோதுதான் பேச முடிந்தது! அவர்களிடம் ஒரு சிறிய ஃபிரிட்ஜும் இருந்தது. அதைப் பக்கத்து வீட்டுக்காரரின் ஜெனரேட்டரோடு இணைத்திருந்தனர். “பொதுவாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் அதை ஆன் செய்வார். ஒரு நாள் நாங்கள் வீடு திரும்பியபோது தக்காளி பழங்கள் எல்லாம் ஐஸ் கட்டி போல விறைத்துப் போயிருந்தன. பக்கத்து வீட்டுக்காரர், டிவியில் ஏதோ மேட்ச் பார்க்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமாகவே அதை ஆன் செய்துவிட்டார்” என்று ஃபிரேடேரீக் கூறுகிறார்.
லுகஸ் தம்பதியர் டஹிடிய மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்வோருக்கு தர்மசங்கடமான சந்தர்ப்பங்கள் ஏற்படுவது சகஜம்; இது மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்கிற எவரும் அறிந்த விஷயமே. உதாரணமாக, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் “பரிசுத்த ஆவி”—வரூயா மோயா—என்று சொல்வதாக எண்ணிக்கொண்டு வேறொரு வார்த்தையைச் சொன்ன சமயங்களை ஃபிரேடேரீக் லுகஸ் நினைவுகூருகிறார். அந்தச் சமயத்தில், மோயா என்ற வார்த்தையின் கடினமான உச்சரிப்பை அவர் நன்கு பழகிக் கொள்ளாததால், பரிசுத்த ஆவி என்பதற்கு பதிலாக “கோழி ஆவி” என்று சொல்லியிருக்கிறார்.
இந்தத் தம்பதியர் டேஹாயா தீவுக்கு வந்தபோது ஃபிரேடேரீக் 23 வயது நிறைந்த, உதவி ஊழியராக இருந்தார். அவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைக் கையாள தகுதியற்றவரை போல உணர்ந்ததாக அப்போதைய கிளைக் குழு ஒருங்கிணைப்பாளரான அலன் ஷாமேயிடம் மனந்திறந்து சொன்னார். “கவலைப்படாதே, யெகோவா உனக்கு பயிற்சியளிப்பார்!” என்று அலன் கூறினார். அவ்வாறே யெகோவா பயிற்சியும் அளித்தார். ஐந்து வருடங்கள் கழித்து, லுகஸ் தம்பதியர் பர்கினா பாஸோ என்ற இடத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பப்பட்டனர். அதற்குள் டேஹாயாவிலிருந்த சிறிய தொகுதி 14 பிரஸ்தாபிகள் உள்ள சபையாக வளர்ந்திருந்தது, அவர்களுக்கு சொந்தமாக ஒரு ராஜ்ய மன்றமும் இருந்தது. அப்போது ஃபிரேடேரீக் ஒரு மூப்பராக ஆகியிருந்தார்.
துவக்கத்திலேயே சோர்ந்துவிடாததை எண்ணி இந்தத் தம்பதியர் எவ்வளவாய் சந்தோஷப்படுகிறார்கள்! “எங்கள் வாலிப காலத்தின்
மிகச் சிறந்த வருடங்கள் அவை. பொறுமையாயிருக்கவும், சுயபலத்தில் சார்ந்திராமல் யெகோவா மீது முழுமையாக சார்ந்திருக்கவும் கற்றுக்கொண்டோம். உற்சாகமிழந்திருந்த சமயங்களில் ஜெபம்தான் எங்களை தூக்கி நிறுத்தியது. யெகோவாவை எங்கள் அடைக்கலமாக ஆக்கியிருந்தோம்; அவர் ஒருபோதும் எங்களை கைவிடவில்லை. உண்மையிலேயே, யெகோவா எங்களுக்கு நல்ல பயிற்சியளித்தார்” என சமீபத்தில் அவர்கள் கூறினார்கள்.மணமாகாத மிஷனரிகள் கடினமான நியமிப்புகளை ஏற்கிறார்கள்
உதவி செய்வதற்காக பிரான்சிலிருந்து மணமாகாத மிஷனரிகளும் பிரெஞ்சு பாலினேசியா வந்தார்கள். ஆரம்பத்தில் ஷார்ஷ் பூர்ஷான்யே என்பவரும் மார்க் மாண்டே என்பவரும் வந்தார்கள். இருவருமே கிளை அலுவலகத்திலும் பயண ஊழியத்திலும் சேவை செய்தார்கள். துபாய், காம்பியர், மார்கொஸ்ஸஸ், டுமோடு தீவுகள் ஆகியவற்றில் மார்க் மாண்டே வட்டார ஊழியம் செய்தார். வட்டப்பவழ திட்டுகள் பலவற்றில் தனியாக ஊழியம் செய்தார்; மற்ற சமயங்களில் உள்ளூரிலிருந்த விசேஷ பயனியர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பொதுப் பேச்சு கொடுத்தார்; சில தீவுகளில் கிட்டத்தட்ட தீவுவாசிகள் அனைவருமே பேச்சைக் கேட்க திரண்டு வந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் மார்க் சில காலம் பயண ஊழியம் செய்து வந்தார். இப்போது அவரும் அவருடைய மனைவி ஜெஸிகாவும் போரா போரா சபையில் இருக்கிறார்கள். மார்க் அங்கே மூப்பராகவும் பயனியராகவும் சேவை செய்கிறார்.
பிப்ரவரி 1986-ல், ஃபீலீப் கூஷினே என்பவரும் பாட்ரீக் லமாசீஃப் என்பவரும் பிரான்சிலிருந்து வந்தனர். இருவரும் மார்கொஸ்ஸஸில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டனர். பிரெஞ்சு பாலினேசியாவின் மற்ற தீவுகளில் இருப்பது போல மார்கொஸ்ஸஸ் தீவுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் போல் பவழப்பாறைகள் இல்லை. இந்தத் தீவுகளிலுள்ள உயரமான மலைகள் மிகவும் செங்குத்தானவை; அவை நேரடியாக பச்சை-நீலநிற பசிபிக் கடலுக்குள் சென்று அதன் ராட்சத அலைகளால் தாக்கப்படுகின்றன. கரடுமுரடான மலைகளுக்கு மத்தியில் ஆறுகளும் நீர்வீழ்ச்சிகளும் உள்ள குறுகலான, வளம் கொழிக்கும் பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. இத்தீவுகளில் சுற்றித்திரியும் ஏராளமான ஆடுகள், குதிரைகள், காட்டெருமைகள் போன்றவற்றிற்கு இவை மிகவும் பொருத்தமான வாழிடங்களாகும்.
வருடங்களினூடே, பயனியர்களும் பிரஸ்தாபிகளும் மார்கொஸ்ஸஸ் தீவுகளுக்கு அவ்வப்போது வந்து போயிருக்கிறார்கள். உதாரணமாக,
1978-79-ல் மல்லெர் தம்பதியர் நுகு ஹிவாவில் 18 மாதங்கள் தங்கியிருந்தனர். ஆனால், அந்தத் தீவுக்கூட்டம் முழுவதிலும் சாட்சி கொடுக்கப்படவில்லை. ஃபீலீப்பும் பாட்ரீக்கும் வந்த பிறகு இந்த நிலைமை மாறியது. ஊழியம் செய்தும் அந்தளவுக்கு முன்னேற்றம் காண முடியவில்லை என்பது உண்மைதான். ஏனெனில் கத்தோலிக்க மதம் அங்கு வேரூன்றியிருந்தது, பாதிரிமார்களைக் கண்டு ஜனங்களும் பயந்தனர். இந்த இரண்டு சகோதரர்களுக்கு வந்த சில மிரட்டல்களுக்குக்கூட பாதிரிமார்கள்தான் காரணம். அந்தச் சமயத்தில் கத்தோலிக்க கரிஸ்மாட்டிக் இயக்கம் ஒன்றும் அங்கு வேகமாக பரவி வந்தது. அதனால் மதவெறி அதிகரித்தது, மோசமான சில சம்பவங்களும் நிகழ்ந்தன.ஆரம்பத்தில் ஃபீலீப்பும் பாட்ரீக்கும் சேர்ந்தே ஊழியம் செய்தனர்; பிராந்தியத்தை நன்கு அறிந்துகொண்ட பிறகு தனித்தனியாக ஊழியம் செய்தனர். ஒருவர் ஹிவா ஓவாவில் இருந்த மிஷனரி இல்லத்தை கவனித்துக்கொண்டு கூட்டங்களையும் நடத்தி வந்தார். மற்றவர் பிற தீவுகளுக்கு படகில் சென்று வாரக்கணக்கில் பிரசங்கித்தார். கடைசியில், முற்றிலும் தனித்தனியாக போய் ஊழியம் செய்வதே நடைமுறையானது, பிரயோஜனமானது என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆகவே, பாட்ரீக் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளிலும் ஃபீலீப் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளிலும் ஊழியம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்த இரண்டு மிஷனரிகளோடும் சேர்ந்து ஊழியம் செய்வதற்காக டஹிடியிலிருந்த விசேஷ பயனியர்களை கிளை அலுவலகம் இங்கு நியமித்தது. அந்தப் பயனியர்களில், இப்போது சபை மூப்பராக சேவை செய்யும் பாஸ்கல் படெர் என்பவரும் தற்போது வட்டாரக் கண்காணியாக இருக்கும் மீஷெல் புஸ்டமன்ட் என்பவரும் இருந்தனர். உற்சாகமிக்க இந்த வாலிபர்கள் தங்கள் இள வயதின் பராக்கிரமத்தை, அதாவது பலத்தைச் சந்தோஷமாக யெகோவாவுக்கு கொடுத்தனர். (நீதி. 20:29) அவர்களுக்கு அப்படிப்பட்ட பலம் தேவைப்பட்டது, ஏனெனில் வலுவற்றவர்களால் அல்லது பயந்த சுபாவமுள்ளவர்களால் மார்கொஸ்ஸஸில் பிரசங்கிக்க முடியாது. அங்கு சாலைகளே கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளும் குடியிருப்புகளும் தொலை தூரத்தில் இருந்தன. ஆழமான, குறுகலான பள்ளத்தாக்குகள் வழியாக வளைந்து நெளிந்து செல்லும் கரடுமுரடான, மண் பாதைகள் மூலமாகத்தான் அங்கு போக முடியும். அதுவும், ஒரு சிறிய, விசேஷ மோட்டார் வண்டியில்தான் இங்குள்ள சில இடங்களுக்கு செல்ல முடியும்.
ஃபீலீப் ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி சொல்கிறார். ஒருமுறை அவர் குறுகலான பாதையில் தனது வண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு வண்டியின் சத்தம் கேட்டு மிரண்டுபோன காட்டெருமை கூட்டம் ஒன்று தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்தார்.
ஒரு பக்கம் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் மலை முகடு, மறு பக்கம் சாலை ஓரத்தில் அதலபாதாளம்; அவர் தப்பிப்பதற்கு இடமே இருக்கவில்லை. இந்நிலையில், அவரால் செய்ய முடிந்ததெல்லாம் வண்டியை நிறுத்திவிட்டு மலை முகட்டின் மீது வண்டியோடு இறுக்கமாக பதுங்கிக்கொள்வதுதான்; அதைத்தான் அவர் செய்தார். காட்டெருமைகள் அவரைக் கடந்து தலைதெறிக்க ஓடின; அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை, என்றாலும் ஆடிப்போய்விட்டார்.மீஷெல் புஸ்டமன்ட் கூறுவதாவது: “என்னைப் பொருத்தவரை அங்கு ஊழியம் செய்தது வீரதீரமான ஓர் அனுபவம்தான். இருந்தாலும், சில தீவுகளில் தன்னந்தனியாக ஊழியம் செய்கையில் குலை நடுங்க வைத்த சமயங்களும் இருந்தன. ஒரு சமயம் நான் தங்கியிருந்த வீடு, ஊழியம் செய்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. அந்தப் பகுதியோ ஓர் ஆழமான பள்ளத்தாக்கு. கும்மிருட்டாக இருக்கும். அருகிலுள்ள கிராமத்தில் எங்காவது தங்க இடம் கிடைக்குமா என்று தேடியும் பிரயோஜனமில்லாமல்
போனது; எனவே வீட்டிற்கு நடந்துபோக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது அந்திசாயும் வேளையாக இருந்ததால், உயரமான மலைகள் எல்லாம் இருட்டில் என்னைப் பயமுறுத்தின. அந்தத் தீவுவாசிகள் ஆவிகளோடு தொடர்புகொள்வதும் பேய்கள் அங்கு பதுங்கியிருக்கக்கூடும் என்ற எண்ணமும் என் மனதில் அலைமோதின. இதனால் பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். உடனே ஜெபிக்க ஆரம்பித்தேன்; அதோடு யெகோவாவின் பெயர் அடிக்கடி வரும் ராஜ்ய பாடல்களையும் பாடினேன். ஒருவழியாக, வீட்டை அடைந்தேன், உள்ளே போய் கதவை மூடிக்கொண்டு பைபிளை திறந்து வாசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பயம் நீங்கி நிம்மதியடைந்தேன்.”இவர்களுடைய மூன்று வருட கடின உழைப்பிற்கு பிறகு, மார்கொஸ்ஸஸைச் சேர்ந்த முதல் பைபிள் மாணாக்கர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதைக் கண்டு இந்தச் சகோதரர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த மாணாக்கர் ஷான்-லுவீ பேடேரானோ என்ற ஓர் இளைஞர் ஆவார். அவரை ஒரு பாதிரியார் நேரில் போய் சந்தித்து, “மந்தைக்கு திரும்பி வந்துவிட” சொன்னார். அவரைக் ‘காப்பாற்றும்’ முயற்சியில் அந்தப் பாதிரியார், யெகோவா என்ற பெயரை யெகோவாவின் சாட்சிகளே கண்டுபிடித்தார்கள் என்று அடித்துக் கூறினார். அப்போது, பிரெஞ்சு மொழி கத்தோலிக்க பைபிளான கிரான்பான் பைபிளில் (1905) சங்கீதம் 83:18-ஐ ஷான்-லுவீ எடுத்துக் காட்டினார். கடவுளின் பெயர் அங்கு காணப்பட்டது. வாயடைத்துப்போன பாதிரியார் உடனே நடையைக் கட்டினார், திரும்பி வரவேயில்லை. மார்கொஸ்ஸஸைச் சேர்ந்த ஒருவர் கத்தோலிக்க பைபிளையே உபயோகித்து ஒரு பாதிரியாரை இறையியல் அடிப்படையில் வெற்றிகொண்டது இதுவே முதன்முறையாக இருக்க வேண்டும். பின்னர், கத்தோலிக்க பிஷப்பின் தனிப்பட்ட காரியதரிசிகூட சர்ச்சைவிட்டு விலகி சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்.
ஹிவா ஓவாவில் இந்த மிஷனரிகள், ஷான் ஒபர்லென், நடீன் ஒபர்லென் என்ற ஐரோப்பிய தம்பதியரை சந்தித்தனர். புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியரான பால் கோகன் போலவே சமுதாயத்திலிருந்து ஒதுங்கியிருப்பதற்காக அவர்கள் மார்கொஸ்ஸஸ் தீவிற்கு வந்திருந்தனர். எளிதில் சென்றடைய முடியாத ஓரிடத்தில், நவீன வசதிகள் எதுவுமில்லாமல் எளிய வாழ்க்கை நடத்தி வந்தனர். மூன்று வருடங்களுக்கு பைபிளைப் படித்து, தங்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை செய்த பிறகு அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றனர்.
ஃபீலீப் கூஷினேயும் பாட்ரீக் லமாசீஃப்பும் 1986-ல் மார்கொஸ்ஸஸ் வந்தபோது அந்தத் தீவுக்கூட்டம் முழுவதிலும் ஒரேவொரு சாட்சி மட்டுமே இருந்தார். எட்டு வருடங்கள் கழித்து கேமரூன் செல்ல ஃபீலீப் நியமிப்பை பெற்றார்; இரண்டு மிஷனரிகளில் இவரே கடைசியாக
தீவைவிட்டுச் சென்றார். அதற்குள் அங்கு 36 பிரஸ்தாபிகள் இருந்தனர்; அதாவது தீவுவாசிகள் 210 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் பிரஸ்தாபிகள் இருந்தனர். அப்போது, மூன்று முக்கிய தீவுகளான ஹிவா ஓவா, நுகு ஹிவா, உவா பூ ஆகிய ஒவ்வொன்றிலும் ஒரு சபை இருந்தது.சமீபத்தில் வந்த மிஷனரிகள்
நவம்பர் 1990-ல் வந்த ஷெர்ஷ் காலென், மரீ-லுவிஸ் காலென் தம்பதியர்தான் சமீபத்தில் பிரான்சிலிருந்து வந்த மிஷனரிகள். மார்கொஸ்ஸஸுக்கு நியமிக்கப்பட்ட அவர்களும் சபைகளை பலப்படுத்த பெரிதும் உதவியிருக்கிறார்கள். காலென் தம்பதியர் மார்கொஸ்ஸிய மொழியை கற்றுள்ளனர்; ஜனங்கள் குடியிருக்கும் ஆறு தீவுகளிலுமுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரையும் அவர்கள் சந்தித்திருப்பது பெரும் ஆச்சரியமான விஷயம்!
காலென் தம்பதியர் ஹிவா ஓவாவில் தங்கியிருக்கிறார்கள், அங்கு ஷெர்ஷ் காலென் மட்டுமே மூப்பராக இருக்கிறார். அங்கிருந்து மற்ற அநேக தீவுகளுக்கு அவர்கள் அடிக்கடி போய் வருகிறார்கள். பிரஸ்தாபிகள் யாருமே இல்லாத இரண்டு தீவுகளுக்கும்கூட போய் வருகிறார்கள். அவர்கள் பாட்டு ஹிவாவுக்கு முதன்முறையாக சென்றபோது அங்கிருந்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் மதங்களின் உதவிக்குருக்கள் ஆதரவளித்ததைக் கண்டு ஷெர்ஷ் காலென் ஆச்சரியப்பட்டுப் போனார். தங்கள் மத ஆராதனைக்கு பிறகு இந்த இரண்டு உதவிக்குருக்களும் ஓர் அறிவிப்பு செய்தனர். என்ன அறிவிப்பு? அங்கிருந்த ஒரு பள்ளியில் ஷெர்ஷ் காலென் கொடுக்கவிருந்த அரைமணி நேர பொதுப் பேச்சிற்கு அனைவரையும்
வரச்சொல்லி அழைத்த அறிவிப்புதான். அதுமட்டுமா, அந்தப் புராட்டஸ்டன்ட் உதவிக்குரு கூட்டத்திற்கும் வந்திருந்தார். அந்தச் சமயத்தில், மார்கொஸ்ஸிய மொழியை ஷெர்ஷ் காலெனைவிட நன்கு அறிந்த அவர் அந்தப் பேச்சை மொழிபெயர்க்கவும் செய்தார்.சபையார் வேத வசனங்களை தங்கள் பைபிளிலேயே கண்டுபிடிப்பதற்கு வசதியாக ஷெர்ஷ் காலென் அவற்றை ஒரு கரும்பலகையில் எழுதினார். ஜெபங்களையும் அவரே செய்தார், அதற்கு அனைவரும் தெளிவான குரலில் “ஆமென்” என்றனர். அடுத்த நாள் காலென் தம்பதியர், பாட்டு ஹிவாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரையும் சந்தித்து பிரசுரங்களை அளித்தனர். அன்று முதல், இந்தத் தீவிற்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு அன்பான வரவேற்பு கிடைக்கிறது. இங்கு 600 பேருக்கும் குறைவானவர்களே வசிக்கிறார்கள்.
பைபிள் சத்தியம் சிறைகளுக்குள் நுழைகிறது
மற்ற அநேக நாடுகளைப் போலவே பிரெஞ்சு பாலினேசியாவிலும் பலர் சிறையில் இருக்கையில் பைபிள் சத்தியத்தை அறிந்துகொண்டார்கள். உதாரணத்திற்கு, இளம் வயதிலேயே குற்றவாளியாகி, ஏழு வருடம் சிறையில் கழித்த அலெக்ஸாண்டர் டேட்யாராஹி என்பவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் குறைந்தது ஆறு முறை சிறையிலிருந்து தப்பியோடியிருக்கிறார்; அதனால், ‘பட்டர்ஃபிளை’ என்ற பட்டப்பெயரையும் பெற்றார். தப்பியோடும் கைதி பற்றிய புகழ்பெற்ற ஒரு நாவலின் கதாநாயகனும் அப்படித்தான் செய்தானாம்.
அப்படி ஒரு முறை தப்பியோடி ரையாடீ தீவிலுள்ள ஓரிடத்தில் தலைமறைவாக இருந்தார். அப்போது ஒரு பைபிளும் “கடவுள் பொய்ச் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்” என்ற புத்தகமும் அவருக்குக் கிடைத்தன. பைபிளை ஆரம்பம் முதல் கடைசி வரையிலும் வாசித்து முடித்தார்; அந்தப் புத்தகத்தையோ பல முறை படித்தார். சத்தியத்தை கண்டுபிடித்துவிட்டதாக உறுதியாய் நம்பினார்; அதனால் அவருடைய மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது. ஆகவே, என்ன செய்தார் தெரியுமா?
அந்தப் புத்தகத்தை பிரசுரித்த யெகோவாவின் சாட்சிகளை அவர் சந்திக்கவே இல்லை. என்றாலும், தானாகவே போய் போலீஸாரிடம் சரணடைந்தார்; அவரை மீண்டும் டஹிடியிலுள்ள சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கால்சோன் டீன் என்பவர் வார்டனாக இருந்தார். அலெக்ஸாண்டர் சிறைக்கு வந்த பிறகு ஒரு நாள், கால்சோன் தன் நண்பரிடம் சாட்சி கொடுத்தது இவர் காதில் விழுந்தது. அந்தப் போதனைகளை உடனடியாக இனம் கண்டுகொண்டார். ஆகவே, அவர் கால்சோனை தனியாக சந்தித்து இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள விரும்புவதாக சொன்னார்.
அலெக்ஸாண்டருடைய அறையிலேயே பைபிளைப் படிப்பதற்கு சகோதரர் டீன் சிறைச்சாலை இயக்குநரிடம் அனுமதி பெற்றார். சீக்கிரத்திலேயே, மற்ற அநேக கைதிகளும் படிக்க விரும்பினர். இவர்களுடன் படிப்பதற்கும் இயக்குநர் அவருக்கு அனுமதியளித்தார்; ஆனால், அவரது உணவு இடைவேளையின்போது மட்டுமே படிக்க அனுமதி கிடைத்தது. பின்னர், வேறே இரண்டு மூப்பர்கள் படிப்பை நடத்தினால் நல்லது என்று முடிவு செய்யப்பட்டது. பல வருடங்களுக்கு, அங்கு நடந்த வாராந்தர பைபிள் பேச்சில் 30 முதல் 50 கைதிகள் கலந்துகொண்டனர். அதற்கு பிறகு, விருப்பமுள்ளவர்களுக்கு தனிப்பட்ட விதமாகவும் படிப்பு நடத்தப்பட்டது.
இதற்கிடையில் அலெக்ஸாண்டர் நல்ல மாற்றங்களை செய்தார்; சிறைச்சாலை அதிகாரிகளும் இதை கவனித்தனர். அதனால், தப்பியோடுவதில் கில்லாடியாக இருந்த அவருக்கு முதன்முறையாக மாவட்ட மாநாட்டிற்கு செல்ல விசேஷ அனுமதியளித்தனர். சகோதரர் டீன்னின் பாதுகாப்பில் அனுப்பப்பட்டார். அங்கே அவர் முழுக்காட்டுதல் பெற்றார். அதற்கு பிறகு சீக்கிரத்தில் விடுதலையானார்; இப்போது தொடர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்து வருகிறார்.
டஹிடியில் சர்வதேச மாநாடுகள்
டஹிடியில் 1969-ல் முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அப்போது அங்கு 124 பிரஸ்தாபிகளே இருந்தனர். ஆகவே, 16 நாடுகளைச்
சேர்ந்த 210 பிரதிநிதிகளை உபசரிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் எந்தளவு பூரித்துப் போயிருப்பார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! டஹிடிக்கு விஜயம் செய்த முதல் ஆளும் குழு அங்கத்தினரான ஃபிரெட்ரிக் டபிள்யூ. ஃபிரான்ஸும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார். உச்சக்கட்ட எண்ணிக்கையாக 610 பேர் வந்திருந்தனர். அது சகோதரர்களுக்கு பெரும் உந்துவிப்பை அளித்ததால் மறு வருடமே பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 15 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டது. பிறகு, 1978-ல் “வெற்றிகரமான விசுவாசம்” சர்வதேச மாநாடுகளில் ஒன்று டஹிடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள 985 பேர் வந்திருந்தார்கள்!டஹிடியனில் மொழிபெயர்ப்பு
பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது கிளை அலுவலகத்திலும் வேலை அதிகரித்தது. முக்கியமாக, பாலினேசியாவின் பிரதான மொழியான டஹிடியனில் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கும் வேலை அதிகரித்தது. கிளை அலுவலகம் நிறுவப்படுவதற்கு முன்பேகூட, டஹிடியனை நன்கு அறிந்த சில ஆரம்பகால பிரஸ்தாபிகள் சில பிரசுரங்களை மொழிபெயர்த்தனர். பகுதிநேர மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட இவர்கள் பொதுவாக பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தனர். உதாரணமாக, 1963 முதற்கொண்டு ராஜ்ய ஊழிய பிரதியை மொழிபெயர்த்தனர்.
பிறகு, 1971-ல் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தை மொழிபெயர்த்து முடித்தனர்.1975-ல் டஹிடியில் கிளை அலுவலகம் நிறுவப்பட்டதால் மொழிபெயர்ப்பு வேலை அதிக சூடுபிடித்தது. பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டதால் புதிய மொழிபெயர்ப்பாளர்களில் அநேகர் அதை நன்கு அறிந்திருந்தனர். ஆகவே இப்போது, பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்பதற்கு பதிலாக ஆங்கிலத்திலிருந்து நேரடியாக அவர்களால் மொழிபெயர்க்க முடிந்தது. 1976 முதற்கொண்டு மாதம் இருமுறை பதிப்பாக காவற்கோபுரம் டஹிடியனில் வெளிவர ஆரம்பித்தது. சில காலத்திற்கு விழித்தெழு!-வையும் மொழிபெயர்த்தனர். ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது,’ வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல், முழு பாட்டு புத்தகம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தனர். உண்மையில், யெகோவாவின் சாட்சிகளைப் போல வேறு எந்தத் தொகுதியும் டஹிடிய மொழியில் இத்தனை அநேக பிரசுரங்களை வெளியிட்டதில்லை!
என்றாலும், கடந்த 30 வருடங்களாக டஹிடியன் மொழியையும் பாலினேசியாவில் பேசப்படும் மற்ற மொழிகளையும்விட பிரெஞ்சு மொழியே மேலோங்கி இருக்கிறது. அதற்கு ஒரு காரணம், முக்கிய மொழியான பிரெஞ்சின் சொற்றொகுதி மிகவும் விரிவானது; அதோடு, மீடியாவிலும்
பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலும் பிரெஞ்சு மொழியே புழக்கத்தில் இருக்கிறது.எனினும், டஹிடிய மொழியை தங்கள் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக அநேக பாலினேசியர்கள் இன்னும் கருதுகிறார்கள். ஆகவே, சகோதரர்கள் பெரும்பாலும் அந்த மொழியிலேயே சாட்சி கொடுக்கிறார்கள். கிளை அலுவலக பிராந்தியத்திலுள்ள 26 சபைகளில் 5 சபைகள் டஹிடிய மொழி சபைகளாகும். மொத்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 20 சதவிகிதத்தினர் இந்தச் சபைகளில் இருக்கிறார்கள். ஆகவே, அந்த மொழி பிரசுரங்களை இன்றும் அநேகர் விரும்பி வாசிக்கிறார்கள்.
முழு மூச்சோடு துவங்கும் கட்டுமான திட்டம்
பபீடியிலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு அருகிலிருந்த சிறிய அறையிலேயே 1975 முதல் 1983 வரை கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது. பிறகு, பபீடியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பயேயா குடியிருப்பில் புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது. இந்தப் புதிய பெத்தேலின் மொத்த வளாகத்தையும் உள்ளூர் சகோதரர்களே கட்டினார்கள். அதில், பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களுக்கு நான்கு அறைகளும், மூன்று அலுவலகங்களும், பிரசுரங்களை சேமித்து வைக்கும் இடமும், ஒரு ராஜ்ய மன்றமும் இருந்தன. ஆளும் குழு அங்கத்தினரான
லாயிட் பாரி 1983, ஏப்ரல் 15-ம் தேதியன்று 700 பேர் கூடிவந்திருக்கையில் இந்தப் புதிய வளாகத்தை பிரதிஷ்டை செய்தார்.ஆனால், சீக்கிரத்தில் அந்த இடமும் போதவில்லை. ஆகவே டோவஹோடு தீவில், அசெம்பிளி ஹாலோடு சேர்த்து இன்னும் பெரிய வளாகத்தை கட்ட ஆளும் குழு அனுமதியளித்தது. இந்தக் கட்டடம், தீவின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பூசந்தியின் அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியில் கட்டப்பட்டது. ஆஸ்திரேலியா, ஐக்கிய மாகாணங்கள், கனடா, நியுஜிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்த சகோதரர்கள் இதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் சகோதரர்கள்கூட பெரும் உதவியளித்தனர். ஆளும் குழுவைச் சேர்ந்த மில்டன் ஜி. ஹென்ஷல் இந்தப் புதிய வளாகத்தை 1993, டிசம்பர் 11-ம் தேதி பிரதிஷ்டை செய்தார்.
ஏறக்குறைய அதே சமயத்தில், ராஜ்ய மன்ற கட்டுமான வேலையும் முழு வீச்சில் ஆரம்பமானது. உள்ளூர் மண்டல கட்டடக் குழுவின் மேற்பார்வையில் பத்து வருடங்களுக்குள் சகோதரர்கள் 16 புதிய மன்றங்களைக் கட்டினார்கள். அதனால், இப்போது பெரும்பாலான சபைகளுக்கு சொந்த ராஜ்ய மன்றங்கள் உள்ளன.
கிளை அலுவலகத்தில் மாற்றங்களும் கூடுதல் பயிற்சியும்
1995-க்குள் அலன் ஷாமே கிளைக் குழு ஒருங்கிணைப்பாளராக ஏறக்குறைய 20 வருடங்கள் சேவை செய்திருந்தார். ஆனால், குடும்ப உத்தரவாதங்கள் காரணமாக அவரால் தொடர்ந்து அந்தப் பொறுப்பை கையாள முடியவில்லை. என்றாலும், தொடர்ந்து கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராகவும் பகுதிநேர மாவட்ட கண்காணியாகவும் அவரால் சேவை செய்ய முடிந்தது. ஆகவே, அந்த வருடம் செப்டம்பர் மாதத்தில், பிரான்சு பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த ஷேரார் பல்ஷா, டாமீனீக் பல்ஷா தம்பதியரை டஹிடியில் சேவை செய்யும்படி ஆளும் குழு நியமித்தது. ஷேரார் பல்ஷா, கிளைக் குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
லுயிக் காண்ஷே, கிளை அலுவலகக் குழுவிலுள்ள மூன்றாவது அங்கத்தினர் ஆவார். அவரும் அவருடைய மனைவி ரேபெகாவும் தேவை அதிகமிருந்த இடத்தில் சேவை செய்வதற்காக 1991-ல் டஹிடிக்கு வந்தனர். கொஞ்ச காலம் விசேஷ பயனியர்களாக சேவை செய்தனர். பிறகு, நான்கு வருடங்கள் வட்டார, மாவட்ட ஊழியத்தில் சேவை செய்தனர். 1995-ல் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய நியமிக்கப்பட்டனர்.
மே 1997-ல் ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பை டஹிடி கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது. அதில் கலந்துகொண்ட 20 மாணாக்கர்களில் பெரும்பாலானோர் விசேஷ சிலாக்கியங்களை
பெற்றனர். உதாரணமாக, ஃபெலிக்ஸ் டேமாரீயி அத்தீவுகளிலுள்ள இரண்டு வட்டாரக் கண்காணிகளில் ஒருவர். ஷேரார் பல்ஷா கூறுவதாவது: “இன்னும் அதிகமான சகோதரர்கள் தகுதிபெற முயற்சி எடுத்து, முன்னுக்கு வர வேண்டும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். அப்போதுதான் இரண்டாவது வகுப்பை நடத்த முடியும். அநேக தீவுகளில் தேவை அதிகம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை; இன்றும் சில தீவுகளில் ஒரு பிரஸ்தாபிகூட இல்லை. மற்ற தீவுகளில், சபை பொறுப்புகளைக் கையாள தகுதிபெற்ற சகோதரர்கள் தேவை. மேலும், 58 தீவுகளில் வசிப்போர், அதாவது ஜனத்தொகையில் சுமார் 7 சதவிகிதத்தினர் எப்போதாவதுதான் நற்செய்தியை கேள்விப்படுகிறார்கள். இந்தத் தேவைகளில் சிலவற்றை, ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்ற, வேலையிலிருந்து ஓய்வு பெற்ற, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதியரால் பூர்த்திசெய்ய முடியும். அப்படி யாராவது எங்களுக்கு உதவ விரும்பினால் தயவுசெய்து கடிதம் எழுதுங்கள். இரண்டு வருடங்கள் மட்டுமே உதவ முடிந்தாலும் போதும், நாங்கள் அதிக சந்தோஷப்படுவோம்.”வேகமாய் மாறி வரும் சமுதாயத்தின் சவால்கள்
முக்கியமாய் டஹிடியில், பொருளாதார வளர்ச்சியும் மத சார்பற்ற தன்மையும் நகரமயமாக்கலும் அதிகரித்து வருகின்றன. இதனால், மற்ற தீவுகளிலுள்ள ஜனங்கள் டஹிடியை நோக்கி படையெடுக்கின்றனர். பொருளாதார செல்வ செழிப்பின் காரணமாக மக்கள் மத்தியில் பண ஆசை, பொருளாசை, சிற்றின்ப ஆசை போன்றவை அதிகரித்து வருகின்றன.
இந்த மறைமுகமான அழுத்தங்கள் யெகோவாவின் மக்களில் சிலரையும் பாதித்திருப்பது வருத்தமான விஷயம். ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதும் ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருப்பதும் முக்கியமாக இளைஞர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆனாலும், யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில், ஜனத்தொகையில் 141 நபர்களுக்கு 1 பிரஸ்தாபி என்ற விகிதத்தில் நற்செய்தியை அறிவிப்போர் இந்தப் பிராந்தியத்தில் இருக்கிறார்கள்.
யோவா. 6:44; அப். 15:14) அதுமட்டுமா, வெகு சீக்கிரத்தில் இந்தப் பூமியை அலங்கரிக்கப்போகிற நிஜமான பரதீஸிற்கு இது ஒரு முன்நிழலும்கூட. மனிதர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, அவர்கள் சந்ததியாரில் ஒவ்வொருவரையும் பாதித்திருக்கும் வலியோ, துக்கமோ, மரணமோகூட அந்தப் பரதீஸில் இருக்காது.—யோபு 14:1; வெளி. 21:3, 4.
பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள அநேகர் மற்றொரு அழகிய பரதீஸின் மதிப்பை உணர ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதற்கு இது அத்தாட்சி அளிக்கிறது. அந்தப் பரதீஸ், கடவுளுடைய பெயர் தாங்கிய ஜனங்களுக்கு மட்டுமே உரிய ஆவிக்குரிய பரதீஸாகும். (ஆரம்பகால பாலினேசியர்கள் படு தைரியசாலிகள், கப்பலோட்டுவதில் கைதேர்ந்தவர்கள். அதுமட்டுமா, தொடுவானத்திற்கு அப்பாலும் நிலம், இதைவிட நல்ல நிலம் இருக்கக்கூடும் என்று உறுதியாக நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. அதைப் போலவே, யெகோவா தங்களுக்காக வைத்திருக்கும் மிகவும் உன்னதமான பரிசைப் பெற இந்தப் பகுதியில் நாம் சந்தித்த அவருடைய உண்மையுள்ள வணக்கத்தார் இன்றும் கடினமாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையும் வீண்போகாது. பூர்வகால மாலுமிகளுக்கு வழிகாட்டிய எந்த விண்மீனும் செய்ய முடியாத ஒன்றை யெகோவா செய்வார். ஆம், அவர் மீது நம்பிக்கை வைத்திருப்போரை வெகு சீக்கிரத்தில் வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸிற்கு நிச்சயம் வழிநடத்தி செல்வார்.—சங். 73:23, 24; லூக். 23:43.
[அடிக்குறிப்புகள்]
a பக்கம் 67-ல், தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள “டஹிடி,” பிரெஞ்சு பாலினேசியா முழுவதையும் குறிக்கிறது. ஏனெனில் இதுவே இப்பகுதியிலுள்ள முக்கிய தீவாகும்; அதோடு டஹிடி என்ற பெயர் அநேகருக்குப் பரிச்சயமான ஒன்றாகும். தலைப்பைத் தவிர கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள “டஹிடி,” அந்தப் பெயரிலுள்ள தீவை மட்டுமே குறிக்கிறது.
b டஹிடிய பைபிள் தோன்றிய கதையை அறிய 2003, ஜூலை 1 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில் பக்கங்கள் 26-9-ஐக் காண்க.
[பக்கம் 72-ன் பெட்டி]
பிரெஞ்சு பாலினேசியா—ஒரு கண்ணோட்டம்
நிலம்: பிரெஞ்சு பாலினேசியாவைச் சேர்ந்த 130 தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 4,000 சதுர கிலோமீட்டர்தான்; ஆனால் அந்தத் தீவுகள் 50 லட்சம் சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு கடலில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவை, துபாய் (ஆஸ்டிரல்), காம்பியர், மார்கொஸ்ஸஸ், சொசைட்டி, டுமோடு என்ற ஐந்து தீவுக்கூட்டங்களாக பிரிக்கப்படுகின்றன. ஜனத்தொகையில் 85 சதவிகிதத்தினர் சொசைட்டி தீவுகளைச் சேர்ந்த 14 தீவுகளில் குடியிருக்கிறார்கள்.
மக்கள்: பெரும்பாலானோர் பாலினேசியர்கள் அல்லது கலப்பின பாலினேசியர்கள். மீதமிருக்கும் சொற்பமானோர் சீனர், ஐரோப்பியர், அமெரிக்கர் ஆகியோர்.
மொழி: பிரெஞ்சும், டஹிடியனும் முக்கிய மொழிகளாகும். அரசாங்கத்திலும் வாணிபத்திலும் பிரெஞ்சு மொழியே உபயோகிக்கப்படுகிறது.
பிழைப்பு: அரசு நிறுவனங்கள் மீதும் சுற்றுலா துறை உட்பட மற்ற சேவை நிறுவனங்கள் மீதுமே பொருளாதாரம் முக்கியமாக சார்ந்திருக்கிறது. விவசாயம், தொழில்துறை, முத்து வளர்த்தல் ஆகியவை மற்ற வேலைகளாகும். ஏற்றுமதியில் 80 சதவிகிதம் இடம் பிடித்திருப்பது முத்துக்களே.
உணவு: இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளையே தீவுவாசிகள் பெருமளவு நம்பியிருக்கிறார்கள். வாழை, மரவள்ளி, தேங்காய், கீரை வகைகள், பப்பாளி, அன்னாசி, சேப்பங்கிழங்கு வகைகள், தக்காளி, தர்பூசணி போன்றவை அங்கேயே பயிரிடப்படுகின்றன. மீன்கள், சிப்பிகள், இறால், ஆடுமாடுகள், பன்றிகள் ஆகியவற்றின் இறைச்சியை புசிக்கிறார்கள்.
சீதோஷ்ணம்: வெப்பமண்டல சீதோஷ்ண நிலையே, அதாவது சூடான, ஈரப்பசை மிக்க சீதோஷ்ண நிலையே இங்கு நிலவுகிறது; இருந்தாலும் ஒவ்வொரு தீவுக்கூட்டத்திற்கு இடையேயும் இது ஓரளவு வித்தியாசப்படுகிறது. ஈரப்பதம் அதிகமான காலம் (கோடைக்காலம்) நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கிறது. ஒரு வருடத்தில், 9 மீட்டருக்கும் அதிகமான மழை நீரில் மத்திப டஹிடி தத்தளிக்க நேரிடலாம்.
[பக்கம் 74-ன் பெட்டி/படங்கள்]
உயரமான தீவுகளும் தாழ்வான தீவுகளும் மோட்டுகளும்
பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள தீவுகள் அனைத்தும் எரிமலை வெடிப்பால் உருவானவையே. அவை உயரமான தீவுகள், தாழ்வான தீவுகள் என்ற இரண்டு வகைப்படும். உயரமான தீவுகள் கரடுமுரடானவை, மலைகள் நிறைந்தவை; அவற்றுள் சில, கடல் மட்டத்திற்கு மேலே ஆயிரக்கணக்கான மீட்டர் உயரமுள்ள சிகரங்கள் உடையவை. டஹிடி, உயரமான தீவுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உயரமான தீவுகள் அனைத்திற்கும் பாதுகாப்பு வளையம் போல் அவற்றைச் சுற்றி பவழப்பாறைகள் அமைந்துள்ளன. ஆனால் மார்கொஸ்ஸஸ் தீவுகளைச் சுற்றி மட்டும் பவழப்பாறைகள் இல்லை. போரா போரா தீவைச் சுற்றி இருப்பதைப் போன்ற ஏராளமான பவழப்பாறைகள் மீது தாவரங்கள் நிறைந்த குட்டித் தீவுகள் அமைந்துள்ளன, அவை மோட்டுகள் என அழைக்கப்படுகின்றன. இவை, ஹோட்டல் நடத்துபவர்களுக்கு பிடித்தமான இடங்களாகும்.
தாழ்வான தீவுகள், கடல் மட்டத்திலிருந்து ஓரிரு மீட்டர் உயரமுள்ள வட்டப்பவழ திட்டுகளாகும். பொதுவாக, இந்தப் பவழப்பாறைகள் வட்டமாக அமைந்திருப்பதால் தெள்ளத்தெளிவான உப்புநீர் ஏரி அதன் மத்தியில் உருவாகிறது. டுமோடு தீவுக்கூட்டத்திலுள்ள தீவுகள் இந்த வகையைச் சேர்ந்தவையே. சில உப்புநீர் ஏரிகள் பரப்பளவில் மிகவும் பெரியவை. உதாரணமாக, ரேஙிரோவா தீவில் உள்ள உப்புநீர் ஏரி 70 கிலோமீட்டர் நீளமும், அதன் மிக அகலமான இடத்தில் 20 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.
பக்கம் 77-ன் பெட்டி/படம்]
அன்று சர்ச் உதவிக்குரு, இன்று ராஜ்ய பிரஸ்தாபி
மானூவாரீ டேஃபாடாவு
பிறந்தது: 1913
முழுக்காட்டப்பட்டது: 1959
பின்னணிக் குறிப்பு: புராட்டஸ்டன்ட் சர்ச்சில் உதவிக்குருவாக இருந்தவர்; மாகட்டேயா தீவிலிருந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர் சிலரிடமிருந்து சத்தியத்தை கற்றுக்கொண்டவர்.
யெகோவாவின் சாட்சிகளான ஷான்மாரீ ஃபேலீக்ஸ், ஷான் ஃபேலீக்ஸ் தம்பதியர் 1956-ல் மாகட்டேயா வந்தனர். அவர்களோடு முதன்முதலாக பைபிளைப் படிக்க ஆரம்பித்த மாயூயி பீயிராய், ஷெர்மென் ஆமாரூ என்பவர்களே என்னிடம் நற்செய்தியை அறிவித்தவர்கள். சீக்கிரத்திலேயே, சர்ச்சுக்கு வருபவர்களிடம் பைபிள் சத்தியங்களைப் பற்றி பேச ஆரம்பித்தேன்; இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. யெகோவாவின் சாட்சிகளோடு பேசவே கூடாது என பாதிரியார் என்னிடம் கூறினார்.
உடனே சர்ச்சிலிருந்து விலகிவிட்டேன். ஃபேலீக்ஸ் தம்பதியர் வீட்டில் நடந்த கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். சர்ச்சுக்கு வந்துகொண்டிருந்த இன்னும் சிலரும்கூட பைபிள் படிக்க ஆரம்பித்து சபை கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர். முதன்முதல் பிரெஞ்சு பாலினேசியாவில் உருவான பைபிள் மாணாக்கர்களின் சிறிய தொகுதியில் நானும் ஒருவனாக இருந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
[பக்கம் 83, 84-ன் பெட்டி/படம்]
யெகோவா என் குறைவை நிறைவாக்கினார்
லென்னர்ட் (லென்) ஹெல்பர்க்
பிறந்தது: 1930
முழுக்காட்டப்பட்டது: 1951
பின்னணிக் குறிப்பு: வட்டார ஊழியத்தை ஆரம்பிக்கையில் திருமணம் ஆகாதவராக இருந்தார், டஹிடியில் ஊழியத்தைத் துவங்கி வைத்தார். இவரும் இவருடைய மனைவி ரீடாவும் இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்கள்.
1955-ல் தென் பசிபிக் பகுதியில் வட்டார ஊழியத்தை துவங்க ஆஸ்திரேலிய கிளை அலுவலகம் என்னை நியமித்தது. அப்போது இந்தப் பரந்த பிராந்தியத்தில் இரண்டே இரண்டு சபைகள்தான் இருந்தன; ஒன்று பிஜியிலும் மற்றொன்று சமோவாவிலும் இருந்தன, அதோடு ஆறு ஒதுக்குப்புற தொகுதிகளும் இருந்தன. டஹிடியிலோ ஒரு பிரஸ்தாபிகூட இல்லை.
டிசம்பர் 1956-ல் முதன்முறையாக அங்கு செல்ல திட்டமிட்டிருந்தேன். பிஜியிலிருந்து சதர்ன் கிராஸ் என்ற பயணிகள் கப்பலில் அங்கு போய் சேர ஆறு நாட்கள் பிடித்தன. பபீடியின் எழில் கொஞ்சும் துறைமுகத்தை பார்த்தவாறு அமைந்த ஒரு வீட்டில் தங்குவதற்கு எனக்கு இடம் கிடைத்தது. அடுத்த நாள் காலை வெளி ஊழியம் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கையில் நான் தங்கியிருந்த வீட்டிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் சதர்ன் கிராஸ் கப்பல் திரும்பிச் செல்வதை பார்த்தேன். முன்பின் தெரியாத புதிய இடத்தில், நான் துளியும் அறியாத பிரெஞ்சு மொழியைப் பேசும் ஜனங்கள் மத்தியில் தன்னந்தனியாக இருந்தேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொள்ள பக்கத்தில் ஒருவர்கூட இல்லை; 3,000 கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தார்கள். விழித்தெழு! பத்திரிகையை தொடர்ச்சியாக பெற்றுவந்த ஒரே ஒரு நபரின் விலாசம்தான் கைவசம் இருந்தது.
திடீரென்று தனிமையுணர்வு என்னைக் கவ்விக்கொண்டது; தாங்க முடியாமல் மனமுடைந்து போய், விம்மிவிம்மி அழ ஆரம்பித்தேன். அழுகையை கட்டுப்படுத்த முடியாததால், ‘அவ்வளவுதான், இன்னிக்கி வேஸ்டா போச்சு, படுத்து தூங்க வேண்டியதுதான். நாளைக்கு ஊழியத்தை ஆரம்பிக்கலாம்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அன்றிரவு மிகவும் ஊக்கமாய் ஜெபித்தேன்; அடுத்த நாள் எழுந்திருக்கையில் உற்சாகமாய் உணர்ந்தேன். அன்று மதியம், விழித்தெழு! சந்தாதாரரை சந்தித்தேன்; அவர் அல்ஜீரியாவைச் சேர்ந்த பெண்மணி. அவரும் 34 வயதுள்ள அவருடைய மகனும் என்னை இருகரம் நீட்டி வரவேற்றனர். அப்போஸ்தலர் புத்தகத்தில் சொல்லப்பட்ட லீதியாளைப் போல அவர்களோடு வந்து தங்கச் சொல்லி என்னை வற்புறுத்தினர். (அப். 16:15) திடீரென்று என் தனிமையுணர்வு இருந்த இடம் தெரியாமல் போனது! யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தேன். நீண்ட நேரம் கண்ணீரோடு செய்த என் வேண்டுதலை அவர் கேட்டார் என்பதில் சந்தேகமே இல்லை.
இப்போது, கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கையில் யெகோவா எப்பேர்ப்பட்ட அன்புள்ள தகப்பன் என்பதை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது! அவருடைய சேவைக்காக நம்மையே மனமுவந்து அளிக்கையில் நம்முடைய எந்தக் குறைவையும் அவர் முற்றுமுழுக்க நிறைவாக்குவார்.
[பக்கம் 87, 88-ன் பெட்டி/படங்கள்]
ஆரம்பகால பயனியர்கள்
அலெக்ஸீ டினோரூவா என்பவர் 1950-களின் முடிவில் லென் ஹெல்பர்க் ஏற்பாடு செய்த கூட்டங்களுக்குச் சென்றார். அலெக்ஸீ இவ்வாறு கூறினார்: “ஒருமுறை புராட்டஸ்டன்ட் உதவிக்குருக்கள் அநேகரோடு சகோதரர் ஹெல்பர்க் பைபிளை கலந்தாலோசித்தபோது நானும் அங்கு இருந்தேன். யெகோவாவின் சாட்சிகள் போதிப்பதுதான் சத்தியம் என்பது அப்போதே எனக்குப் புரிந்துவிட்டது, அதனால் அவர்களோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தேன். 1960-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். அதற்குப் பிறகு ஒன்பது வருடங்கள் பயனியராக ஊழியத்தை அனுபவித்தேன். 1965-ல் ஒரு சிலாக்கியத்தைப் பெற்றேன். அப்போது, சொசைட்டி தீவுக்கூட்டத்திலுள்ள வாஹீனீ தீவில் நற்செய்தியைப் பிரசங்கித்த முதல் நபர் ஆனேன். பைபிள் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற 80 பேருக்கு உதவும் பாக்கியத்தை அளித்ததற்காக யெகோவாவுக்கு மிகுந்த நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.” அலெக்ஸீ, மே 2002-ல் மரிக்கும்வரை யெகோவாவை சேவித்து வந்தார்.
ஏலென் மாப்பூ 1963-ல் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட உடனேயே டஹிடியில் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய கணவர் சாட்சியாக இல்லாதபோதும் அவருக்குப் பெரிதும் உறுதுணையாய் இருந்தார். கப்பலில், டஹிடியிலிருந்து ரையாடீ தீவுக்கு சென்று வருவதுதான் அவருடைய வேலை. எனவே, ரையாடீயில் விசேஷ பயனியராக சேவை செய்ய ஏலென் மாப்பூ நியமிக்கப்பட்டபோது அவர் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. ஏலென் மாப்பூதான் அங்கு நற்செய்தியை பிரசங்கித்த முதல் நபர். பிறகு ஏலென் மறுபடியும் டஹிடி வந்து, தீபகற்ப பகுதியில் (டஹிடி ஈடீ என்றும் அழைக்கப்பட்ட அத்தீவின் சிறிய பகுதியில்) குடியேறினார். அங்கு, அவரும் மேரேயானீ டேஃபாரோவா என்ற மற்றொரு சகோதரியும் மட்டுமே சாட்சிகளாக இருந்தார்கள். “தீபகற்ப பகுதியில் ஏராளமானோர் அக்கறை காண்பித்தார்கள். குறுகிய காலத்திற்குள்ளாகவே நாங்கள் அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பித்தோம்” என்று ஏலென் கூறுகிறார்.
இந்த உண்மையுள்ள சகோதரிகளை யெகோவா ஆசீர்வதித்தார் என்பது தெளிவானது. ஆம், அந்தப் பிராந்தியத்தில் இருந்த வாயீராவோ குடியிருப்பில் பின்னர் ஒரு சபை உருவானது.
[பக்கம் 101-ன் பெட்டி/படம்]
“நான் வேணுமா, யெகோவா வேணுமா? நீயே முடிவு பண்ணிக்கோ”
ஈவெட் ஷீலோ
பிறந்தது: 1932
முழுக்காட்டப்பட்டது: 1968
பின்னணிக் குறிப்பு: பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள பயனியர்களிலேயே நீண்ட காலம் ஒழுங்கான பயனியராக சேவை செய்திருப்பவர்.
யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு விரும்புகிறேன் என்று என் கணவரிடம் கூறியபோது, “நான் வேணுமா, யெகோவா வேணுமா? நீயே முடிவு பண்ணிக்கோ” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறிவிட்டார். அவருக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தேன், ஆனால் எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. மூன்று பிள்ளைகளோடு என்னை விட்டுவிட்டுப் பிரிந்து சென்றார். என்றாலும், பல வருடங்கள் கழித்து திரும்பி வந்தார்.
அந்தச் சமயத்தில், குடும்பத்தைக் காப்பாற்ற என்னால் உலகப்பிரகாரமான வேலையும் செய்துகொண்டு, அதேசமயத்தில் ஒழுங்கான பயனியர் சேவையும் செய்ய முடிந்தது. என்னுடைய வேலையை அதிகாலையிலேயே செய்து முடித்துவிட்டு, பிறகு வெளி ஊழியத்திற்கான கூட்டத்தை நடத்தினேன். 1960-களின் பிற்பகுதியில் இத்தீவுகளில் சுமார் 100 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். ஆகவே, சகோதரர்களை கண்டுபிடிப்பது வெகு கடினமாக இருந்தது.
சுமார் 50 பேர் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க உதவும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதற்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களில், 1991 முதற்கொண்டு டஹிடி பெத்தேலில் சேவை செய்யும் ரிச்சர்ட் வாங் ஃபூவும் ஒருவர். என்னுடைய இரண்டு மகன்களும் இப்போது சபை மூப்பர்களாக சேவை செய்கிறார்கள் என்று சொல்வதில் அகமகிழ்கிறேன்.
[பக்கம் 105-ன் பெட்டி/படம்]
கடைசி இளவரசியின் சவ அடக்கம்
பபீடி சபையில் மூப்பராக சேவை செய்யும் மீஷெல் ஷெலா ஒரு வினோதமான அனுபவத்தைப் பெற்றார். டஹிடி அரச குடும்பத்தின் கடைசி நபரான இளவரசி டாகாயூ போமாரே சம்பந்தப்பட்ட அனுபவம் அது. அந்த இளவரசி 1976-ல் தனது 89-வது வயதில் மரணமடைந்தார். இவர், டஹிடியையும் அருகிலுள்ள பல தீவுகளையும் சில காலம் ஆண்டு வந்த போமாரே வம்சத்தின் நேரடி வாரிசு. இவர் தத்தெடுத்து வளர்த்த பெண் ஒரு யெகோவாவின் சாட்சி. இளவரசி சாட்சியாக இராவிட்டாலும் அவருக்காக சவ அடக்க பேச்சைக் கொடுக்கும்படி அந்த வளர்ப்பு மகள் மீஷெலிடம் கேட்டுக்கொண்டார்.
உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றி அரசியல்வாதிகளுக்கும், மதத் தலைவர்களுக்கும், நியூஸ் மீடியாவைச் சேர்ந்தவர்களுக்கும் விளக்க அது ஓர் அருமையான வாய்ப்பாக இருக்குமென்பதால் மீஷெலும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதற்கடுத்த நாள், சகோதரர் மீஷெல் ஷெலா பேச்சு கொடுப்பதும் அவருக்கு முன்னால் சவப்பெட்டி இருப்பதும் செய்தித்தாளில் படமாக வெளிவந்தது. ஆளுநரும், பாலினேசிய அரசாங்கத்தின் தலைவரும், மற்ற அதிகாரிகளும் சவ அடக்கத்திற்கு வந்திருந்தனர். கத்தோலிக்க தலைமைக் குருவும்கூட தனது அதிகாரப்பூர்வ நீண்ட வெள்ளை அங்கி தரித்து வந்திருந்தார்.
[பக்கம் 109, 110-ன் பெட்டி/படம்]
ஒரு பாதிரி தன் ஸ்கூட்டரை கொடுத்தார்; மற்றொருவர் எங்கள் புத்தகங்களை எரித்தார்
ஷாக் எண்ணோடீ
பிறந்தது: 1944
முழுக்காட்டப்பட்டது: 1965
பின்னணிக் குறிப்பு: தன் மனைவி பாலெட்டுடன் பிரான்சில் விசேஷ பயனியராகவும் பசிபிக் பகுதியில் பயண ஊழியராகவும் சேவை செய்தவர்.
1969-ல் பிரான்சிலுள்ள உற்றார் உறவினர் எல்லாருக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டு எங்கள் புதிய நியமிப்பான டஹிடிக்கு கப்பல் ஏறினோம். எங்கள் பயணத்திற்கு கொஞ்சம் பரபரப்பூட்டும் விதத்தில் பசிபிக் கடலின் நட்டநடுவில் இருக்கும்போது கப்பல் தீப்பற்றிக்கொண்டது. நான்கு நாட்கள் இங்குமங்குமாக அலைந்தோம்! ஒருவழியாக, டஹிடி வந்து சேர்ந்தோம்; வட்டாரக் கண்காணியாக சேவை செய்ய நியமிக்கப்பட்டேன்.
நியூ கலிடோனியா, வனுவாட்டு, பிரெஞ்சு பாலினேசியா ஆகியவை எங்கள் வட்டாரத்தில் இருந்த தீவுகள். அப்போது பிரெஞ்சு பாலினேசியாவில் ஒரு சபையும் ஒதுக்குப்புற தொகுதிகள் இரண்டும் இருந்தன. 1971-ல் பிரெஞ்சு பாலினேசியா மட்டுமே எங்கள் வட்டாரமாக ஆக்கப்பட்டது. இதனால் ஒதுக்குப்புறத்திலிருந்த அநேக தீவுகளுக்கு சென்று பிரசங்கிக்க நேரம் கிடைத்தது. அந்தத் தீவுகள் சிலவற்றில் அதுவரை ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்படவே இல்லை. நாங்கள் இருவரும் வாஹீனீயில் ஒன்பது மாதங்களும் மாயுபீடி என்ற சிறிய தீவில் கொஞ்ச காலமும் செலவிட்டோம். வாஹீனீயில் இருக்கும்போது 44 பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்ததில் சந்தோஷமடைந்தோம்.
உணவுக்காக மீன்களைப் பிடித்தேன், அப்படிப் பிடிக்க பெரும்பாலும் ஈட்டி எறியும் ஒருவகை துப்பாக்கியையே உபயோகித்தேன். தொட்டுக்கொள், துடைத்துக்கொள் என்ற நிலையில்தான் நாங்கள் வாழ்ந்தோம், ஆனாலும் ஒருபோதும் பட்டினி கிடக்கவில்லை. எங்களுடைய பொருளாதார தேவைகள் எப்போதுமே பூர்த்தி செய்யப்பட்டன. துபாய் தீவில் பிரசங்கிக்கையில் எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு பாதிரியார் தனது ஸ்கூட்டரை எங்களுக்குக் கொடுத்தார். எங்களிடம் போக்குவரத்து வசதி இல்லாததால் எங்கள் மீது இரக்கப்பட்டு அதைக் கொடுத்தாரோ என்னவோ!
1974-ல் மார்கொஸ்ஸஸ் தீவுகளிலுள்ள ஹிவா ஓவா, நுகு ஹிவா, ஊவா ஹூகா, உவா பூ ஆகிய நான்கு தீவுகளுக்கு சென்றோம். காலினா டோம் சிங் வியென் என்ற சகோதரியைப் போய்ச் சந்திக்கும்படி கிளை அலுவலகம் எங்களிடம் சொன்னது. அவர் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் வாழ்ந்து வந்தார்; நர்ஸாக இருந்த அவர் 1973-ல் உவா பூ என்ற இடத்திற்கு குடிமாறிச் சென்றிருந்தார். அவர் 13 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்ததால் மார்கொஸ்ஸஸிலிருந்து வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பித்த முதல் ராஜ்ய பிரஸ்தாபி அவர்தான்.
உவா பூவிலிருந்த பாதிரியார், துபாய் தீவிலிருந்த அன்பான பாதிரியாரைப் போல இருக்கவில்லை. நாங்கள் செய்த ஊழியத்தை அவர் எதிர்த்தார். உண்மையில், நாங்கள் ஊழியம் செய்கையில் எங்களுக்கு தெரியாமல் எங்களைப் பின்தொடர்ந்து வந்து அவரது சர்ச்சைச் சேர்ந்தவர்களிடம் நாங்கள் கொடுத்திருந்த பிரசுரங்களை எல்லாம் வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பிறகு, அவற்றை காலினாவின் வீட்டிற்கு முன்பாக போட்டு எரித்தார். இந்தச் செயல் எங்களுக்கு மட்டுமல்ல அநேக கத்தோலிக்கருக்கும்கூட அதிர்ச்சி அளித்தது!
இப்பேர்ப்பட்ட எதிர்ப்பு இருந்தபோதிலும் மார்கொஸ்ஸஸில் ஊழியம் முன்னேறியது. அதில் ஒரு சிறிய பங்கு எங்களுக்குக் கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறோம். பாலெட்டின் உடல்நிலை காரணமாக நாங்கள் முழுநேர ஊழியத்தை கைவிட நேர்ந்தது. இருந்தாலும், எங்களால் முடிந்தளவுக்கு மிகச் சிறந்ததை யெகோவாவிற்கு கொடுக்க தீர்மானமாய் இருக்கிறோம்.
[பக்கம் 113-ன் பெட்டி]
முதன்முறையாக ஒரு தீவிற்கு செல்லுதல்
ஒதுக்குப்புறமான ஒரு தீவிற்கு அல்லது வட்டப்பவழ திட்டிற்கு முதன்முறையாக செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். ஓரிரண்டு வாரங்கள் அங்கு தங்கி ஜனங்களிடம் பிரசங்கிக்க நினைக்கிறீர்கள். ஆனால் அந்தத் தீவில் உங்களைத் தவிர சாட்சிகள் யாருமே இல்லை. தங்குவதற்கு ஹோட்டல் போன்ற இடங்களும் இல்லை, போக்குவரத்து வசதியும் இல்லை. என்ன செய்வீர்கள்? எங்கு தங்குவீர்கள்? பயனியர்களாகவும் வட்டாரக் கண்காணிகளாகவும் சேவை செய்திருக்கும் மார்க் மாண்டேயும் ஷாக் எண்ணோடீயும் இதே போன்ற சூழ்நிலையை பல முறை சந்தித்திருக்கிறார்கள்.
மார்க் இவ்வாறு கூறுகிறார்: “விமானத்திலிருந்தோ படகிலிருந்தோ இறங்கியவுடன் பிரசங்கிக்க ஆரம்பித்துவிடுவேன். அதே சமயத்தில், தங்கும் இடத்தைப் பற்றியும் விசாரிப்பேன். மணமாகாத வாலிபருக்கு தங்க இடம் கிடைப்பது கடினம்தான். இருப்பினும், பொதுவாக யாராவது ஒருவர் தங்க இடமும், உண்ண உணவும் கொடுப்பார். அதற்கு அடுத்த முறை அங்கு செல்லும்போது தங்க இடம் கிடைப்பது ரொம்ப சுலபமாக இருக்கும்; ஏனெனில் ஜனங்களுக்கு அப்போது என்னைப் பற்றி நன்றாக தெரிந்துவிட்டிருந்தது. திருமணத்திற்குப் பின் இடம் கிடைப்பது இன்னும் சுலபமாக ஆனது. ஏனெனில் தம்பதிகளைக் குடிவைக்கவே ஜனங்கள் அதிகம் விரும்பினார்கள்.”
ஷாக் தன் அனுபவத்தை இவ்வாறு விளக்குகிறார்: “பொதுவாக நான் அந்த ஊர் மேயரை சந்தித்து, குறிப்பிட்ட நாள்வரை தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு விசாரிப்பேன். அநேகமாக அவர் நல்ல இடத்தையே சிபாரிசு செய்வார். கடவுள் அனுப்பியவராக தாங்கள் கருதும் ஒரு நபருக்கு அநேக தீவுவாசிகள் மரியாதை கொடுக்கிறார்கள்; அதோடு, தங்களால் முடிந்த உதவியும் செய்கிறார்கள். ஆகவே, செலவில்லாமல் தங்குவதற்கு வழக்கமாய் ஏதோவொரு இடம் எனக்கு கிடைத்தது.”
[பக்கம் 117, 118-ன் பெட்டி/படம்]
வெளி ஊழியம் என்றால் எங்களுக்கு உயிர்
அலன் ஷாமே
பிறந்தது: 1946
முழுக்காட்டப்பட்டது: 1969
பின்னணிக் குறிப்பு: மனைவி மரீ-ஆன்னுடன் பிரான்சிலும் பிரெஞ்சு பாலினேசியாவிலும் முழுநேர ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் பங்குகொண்டவர்.
எனக்கு 13 வயதாக இருக்கையில் எங்கள் குடும்பம் பிரான்சிலிருந்து டஹிடிக்கு குடிமாறியது. பள்ளிப் படிப்பை முடித்ததும் மருத்துவம் பயில மறுபடியும் பிரான்சுக்கு சென்றேன். அங்கே உயிரியல் பயின்ற மாணவியான மரீ-ஆன்னை சந்தித்தேன்; இவளும் டஹிடியைச் சேர்ந்தவள். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். 1968-ல் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. சத்தியத்தையும் ஏற்றுக்கொண்டோம்.
புதிதாக அறிந்த சத்தியத்தைப் பற்றி எங்கள் பெற்றோரிடம் பேசினோம். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சர்ச்சிலிருந்து எங்களுடைய பெயரை நீக்கிவிடுமாறு டஹிடியிலிருந்த எங்கள் இருவருடைய சர்ச்சுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம். பபீடியிலிருந்த மரீ-ஆன்னின் சர்ச் ஒரு படி மேலே சென்று அவளை சர்ச்சிலிருந்து நீக்குவதாக பகிரங்கமாகவே அறிவித்தது. அந்தச் சமயத்தில் அவளுடைய பெற்றோரும் வரும்படி அந்தப் பாதிரியார் அழைத்திருந்தார்.
நாங்கள் 1969-ல் முழுக்காட்டுதல் பெற்று பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம். பிரான்சிலுள்ள மார்செய்ல்ஸில் இருக்கையில் இராணுவ சேவை செய்ய எனக்கு அழைப்பு வந்தது. நடுநிலைமை வகித்ததன் காரணமாக இரண்டு மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டேன். விடுதலை பெற்றதும் மார்செய்ல்ஸிலும் பார்டோவிலும் விசேஷ பயனியர்களாக சேவை செய்ய நியமிக்கப்பட்டோம். பிறகு, வயதான எங்கள் பெற்றோரின் விருப்பப்படி 1973-ல் டஹிடி திரும்பினோம். ஒரு வருடத்திற்கு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக முழு நேரம் வேலை செய்தோம்.
பிரெஞ்சு பாலினேசியாவிலும் நியூ கலிடோனியாவிலும் ஒரு வட்டாரக் கண்காணி தேவைப்பட்டதால், முழுநேர ஊழியத்தை திரும்பவும் ஆரம்பிக்கும் இலக்கு இருக்கிறதா என பிஜி கிளை அலுவலகக் கண்காணி எங்களிடம் கேட்டார். அதற்குள் எங்கள் பெற்றோரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவே அந்த அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 1974-ல் வட்டார ஊழியத்தை ஆரம்பித்தோம். 1975-ல் என். ஹெச். நார் வந்தபோது டஹிடியின் முதல் கிளை அலுவலகக் கண்காணியாகச் சேவை செய்யும்படி நியமிக்கப்பட்டேன்.
1986-ல் எங்கள் மகன் ராவூமா பிறந்தான். ஆகவே, என் மனைவி முழுநேர ஊழியத்தை நிறுத்த வேண்டி வந்தது. இன்று ராவூமா எங்கள் ஆவிக்குரிய சகோதரன் என்பதைச் சொல்வதில் சந்தோஷப்படுகிறேன். கடந்த காலத்தை நினைக்கையில், நாங்கள் அனுபவித்த ஊழிய சிலாக்கியங்கள் அனைத்திற்காகவும் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால், இன்றுகூட எல்லாவற்றையும்விட வெளி ஊழியம் என்றால் எங்களுக்கு உயிர்.
[பக்கம் 123-125-ன் பெட்டி/படம்]
யெகோவா தமது ஆடுகளை கவனித்துக்கொள்கிறார்
மீஷெல் புஸ்டமன்ட்
பிறந்தது: 1966
முழுக்காட்டப்பட்டது: 1987
பின்னணிக் குறிப்பு: பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள இரண்டு வட்டாரங்களில் ஒன்றில் மனைவி சான்ட்ராவுடன் சேவை செய்கிறார்.
பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள ஐந்து தீவுக்கூட்டங்களும் எங்கள் வட்டாரத்தில் அடங்கும்; அதன் பரப்பளவு ஐரோப்பாவின் அளவிற்கு இருக்கும். சில ஒதுக்குப்புறமான தீவுகளில் ஓரிரண்டு பிரஸ்தாபிகள் மட்டுமே இருக்கலாம். அவ்வளவு தொலைதூர இடங்களில் வசித்தாலும் அவர்களைப் போய் சந்தித்தோம். உதாரணத்திற்கு, டுமோடுவிலுள்ள டகபோடோவில் ரோஸீடா என்பவர் வசிக்கிறார். உண்மையுள்ள இந்தச் சகோதரி தவறாமல் வாரா வாரம் எல்லா கூட்டங்களுக்கும் தயாரிக்கிறார். சத்தியத்தில் இல்லாத அவருடைய கணவரும் பெரும்பாலும் அவரோடு சேர்ந்து தயாரிக்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில், தீவிலுள்ள பெருவாரியான மக்கள் உப்புநீர் ஏரிகளில் நீச்சலடிக்கவோ மீன் பிடிக்கவோ சென்றுவிடுவார்கள். ஆனால் ரோஸீடா கூட்டத்திற்கு செல்வது போல நேர்த்தியாக உடை உடுத்திக்கொண்டு அந்த வாரத்திற்குரிய காவற்கோபுர கட்டுரையை படிக்கிறார். தவறாமல் தனது ஊழிய மணிநேரத்தையும் அறிக்கை செய்கிறார். அதை தொலைபேசி மூலம் தெரிவிப்பார். சொல்லப்போனால், கிளை அலுவலகத்திற்கு வந்து சேரும் முதல் அறிக்கை அநேகமாக இவருடையதாகத்தான் இருக்கும்! அதைவிட பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் தங்கியிருக்கும் மோட்டுவிலிருந்து 45 நிமிடம் படகில் பயணித்தால்தான் ‘பக்கத்திலுள்ள’ டெலிஃபோன் பூத்துக்கு செல்ல முடியும்.
அந்தத் தீவிற்கு ஒரு விமானம் வந்திறங்கினால் அது பெரிய திருவிழா மாதிரிதான். ஆகவே, நம் சகோதரியைப் பார்க்க
நாங்கள் விமானத்தில் செல்கையில், யார் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க பெரும்பாலும் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள அனைவருமே கூடிவிடுவார்கள். ஒரு சமயத்தில், “யாரை வரவேற்க காத்திருக்கீங்க?” என்று ஒரு பெண்மணி ரோஸீடாவிடம் கேட்டார். “என்னுடைய ஆவிக்குரிய சகோதரனையும், சகோதரியையும் வரவேற்கத்தான். எனக்காகவே, என்னை உற்சாகப்படுத்துவதற்காகவே அவங்க வர்ராங்க” என்று பதிலளித்தார். ரோஸீடாவோடு மூன்று நாட்கள் தங்கினோம்; அவரோடு வெளி ஊழியத்தில் ஈடுபட்டு அவருக்கு ஆவிக்குரிய உற்சாகம் அளித்தோம். பெரும்பாலும், நடுராத்திரி வரை பேசிக்கொண்டே இருப்போம். அந்தளவிற்கு ஆவிக்குரிய தோழமையை விரும்புகிறவர் அவர்.ஒரு சாட்சியை சந்திக்க மற்றொரு தீவிற்கு சென்றிருந்தோம். அவரது பக்கத்து வீட்டுக்காரரான அட்வெண்டிஸ்ட் சர்ச்சை சேர்ந்த ஒருவர் அதைக் கவனித்தார். பிறகு நம் சகோதரரிடம், “நான் ஏழு வருஷமா இங்க இருக்கேன், ஆனா என்னை உற்சாகப்படுத்த எங்க சர்ச்சிலிருந்து இதுவரைக்கும் ஒருத்தருமே வந்ததில்ல” என்று ஆதங்கத்தோடு சொன்னாராம். இவர், அத்தீவிலுள்ள சிறிய அட்வெண்டிஸ்ட் தொகுதிக்கு பாதிரியார் போல சேவை செய்கிறவர்.
துபாய் தீவுகளிலுள்ள ராய்வாவா என்ற இடத்தில் டான்யெல், டாரீஸ் என்ற இரண்டு பிரஸ்தாபிகள் மட்டுமே இருக்கிறார்கள். மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் வசித்துவந்த அவர்களை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருந்தது. ஒருவழியாக கண்டுபிடித்ததும், அன்று பிற்பகல் அவர்கள் வீட்டில் கூட்டம் நடத்தலாமா என்று கேட்டோம். அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆகவே, கூட்டத்திற்கு வரும்படி ஜனங்களை அழைக்க எல்லாருமாக சென்றோம். பிறகு, கூட்டம் நடத்த வந்தபோது ஏழு பேர் வீட்டுக்கு வெளியே காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். அவர்கள் பண்ணை வேலையாட்கள்; அன்றைய வேலையை முடித்துவிட்டு வந்திருந்தார்கள். சிலர் ஒரு வகை சேப்பங்கிழங்கு மூட்டைகளை தங்கள் தோள்களில் சுமந்து கொண்டிருந்தார்கள்.
“உங்க உடைகளை பத்தி கவலைப்படாதீங்க. உள்ள வந்து உக்காருங்க” என்றோம். உள்ளே வந்து இருக்கைகளில் உட்காராமல் தரையில் உட்கார்ந்தார்கள். அவர்கள் கூட்டத்தை அனுபவித்தார்கள், பிறகு அநேக கேள்விகளை கேட்டார்கள். அன்று மதியம் நம் சகோதரனும், சகோதரியும் படு உற்சாகமடைந்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ! நாங்கள் சென்ற முக்கிய நோக்கம் நிறைவேறியது.
சில சமயங்களில், தனியாக ஓரிடத்தில் வசிக்கும் பிரஸ்தாபிகளை சந்திப்பது ரொம்ப கஷ்டம். ஏனெனில் அந்தத் தீவில் விமான நிலையம் இருக்காது. ஒரு சமயம், இரண்டு பிரஸ்தாபிகள் வசித்த ஒரு தீவிற்கு செல்ல விமானத்திலிருந்து இறங்கிய பிறகு நடுக்கடலில் இரண்டு மணிநேரம் படகில் பயணிக்க வேண்டியிருந்தது. அந்தப் படகோ சுமார் 4 மீட்டர் நீளமான, கூரையில்லாத, படுவேகமாக செல்லும் படகு. அது கடலில் செல்ல ஏற்றதுதானா, கைவசம் மற்றொரு மோட்டார் இருக்கிறதா என்றெல்லாம் படகோட்டியிடம் கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டோம். ஆம், பசிபிக் கடலின் நடுவில் உதவியின்றி அலைந்து தவிப்பது படுமோசமான அனுபவமே!
சேர வேண்டிய இடத்தை அடைந்தபோது நாங்கள் தொப்பையாக நனைந்திருந்தோம். படகின் மீது அலைகள் மோதிக்கொண்டே இருந்ததால் எங்கள் இடுப்பு கழன்றுவிடும் போல் ஆனது. திரும்பி வரும்போதும் அதே அனுபவம்தான். சான்ட்ரா இவ்வாறு கூறுகிறாள்: “அன்று பிற்பகல் வீடு திரும்பியதும், ஊழியத்திற்கு செல்ல என் சைக்கிளில் ஏறினேன். ஆனால், படகில் பயணம் செய்ததால் என் உடல் மிகவும் களைத்துப்போய் நடுநடுங்கிக் கொண்டிருந்தது. அதனால் பவழப்பாறைகள் நிறைந்த சாலையில் என்னால் சைக்கிளை ஓட்டவே முடியவில்லை, அப்படியே சரிந்து விழுந்தேன்!”
மேலே சொல்லப்பட்ட அனுபவத்தைப் பார்க்கையில், ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கும் நம் சகோதர, சகோதரிகளை சந்திக்க செல்கிற ஒவ்வொரு முறையும், யெகோவாவும் அவருடைய அமைப்பும் அவர்கள் மீது வைத்துள்ள ஆழமான அன்பைப் பற்றி நாங்கள் ஏன் நினைத்துப் பார்க்கிறோம் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். நாம் மிக விசேஷித்த ஓர் ஆவிக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.—யோவா. 13:35.
[சிறு குறிப்பு]
“எனக்காகவே, என்னை உற்சாகப்படுத்துவதற்காகவே அவங்க வர்ராங்க”
[பக்கம் 80, 81-ன் அட்டவணை/படங்கள்]
பிரெஞ்சு பாலினேசியா கால வரலாறு
1835: டஹிடியன் பைபிள் மொழிபெயர்ப்பு நிறைவுறுகிறது.
1930-கள்: சிட்னி ஷெப்பர்ட்டும் ஃபிராங்க் டீவாரும் டஹிடி தீவுக்குச் செல்கின்றனர்; மற்ற தீவுகளுக்கும் சென்றிருக்கலாம்.
1956: மாகட்டேயாவிலும் டஹிடியிலும் பிரசங்க வேலை முழு வீச்சில் ஆரம்பமாகிறது.
1958: இரண்டு முழுக்காட்டுதல்கள் நடைபெறுகின்றன, பிரெஞ்சு பாலினேசியாவில் முதன்முதலாக நடைபெற்றவை.
1959: பிரெஞ்சு பாலினேசியாவிலுள்ள பபீடியில் முதல் சபை உருவாகிறது.
1960
1960: யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு பதிவு செய்யப்படுகிறது.
1962: பபீடியில் முதல் ராஜ்ய மன்றம் கட்டப்படுகிறது.
1969: டஹிடியில் முதல் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.
1975: டஹிடியில் கிளை அலுவலகம் நிறுவப்படுகிறது.
1976: காவற்கோபுரம் பத்திரிகை டஹிடியனில் மொழிபெயர்க்க ஆரம்பிக்கப்படுகிறது.
1980
1983: முதல் பெத்தேல் இல்லம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
1989: 1,000 பிரஸ்தாபிகள் என்ற உச்சநிலை எட்டப்படுகிறது.
1993: புதிய பெத்தேல் இல்லமும் அருகிலுள்ள அசெம்பிளி மன்றமும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
1997: ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பு நடைபெறுகிறது.
2000
2004: பிரெஞ்சு பாலினேசியாவில் 1,746 பிரஸ்தாபிகள் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.
[வரைபடம்]
(பிரசுரத்தைக் காண்க)
மொத்த பிரஸ்தாபிகள்
மொத்த பயனியர்கள்
2,000
1,000
1940 1960 1980 2000
[பக்கம் 73-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பிரெஞ்சு பாலினேசியா
பிரெஞ்சு பாலினேசியா
மார்கொஸ்ஸஸ் தீவுகள்
நுகு ஹிவா
உவா பூ
ஊவா ஹூகா
ஹிவா ஓவா
பாட்டு ஹிவா
டுமோடு தீவுக்கூட்டம்
மனிஹி
அஹே
ரேஙிரோவா
டகரோவா
டகபோடோ
மாகட்டேயா
ஆனா
ஹாவு
சொசைட்டி தீவுகள்
மாயுபீடி
டாஹாயா
ரையாடீ
போரா போரா
வாஹீனீ
மோரேயா
டஹிடி
துபாய் (ஆஸ்டிரல்) தீவுகள்
ரூரூடூ
ரீமேடாரா
துபாய்
ராய்வாவாய்
காம்பியர் தீவுகள்
மோரேயா
டஹிடி
பபீடி
புனாயுயா
பயேயா
டோவஹோடு
வாயீராவோ
[பக்கம் 66-ன் முழுபக்க படம்]
[பக்கம் 70-ன் படம்]
பிரெஞ்சு பாலினேசியாவில் முழுமையாக சாட்சி கொடுத்த முதல் நபர்களில் ஷான்மாரீ ஃபேலீக்ஸ் ஷான் ஃபேலீக்ஸ் தம்பதியரும் அடங்குவர்
[பக்கம் 71-ன் படங்கள்]
மாயூயி பீயிராய், யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த முதல் பாலினேசியர், 1958-ல் ஷான்மாரீ ஃபேலீக்ஸால் முழுக்காட்டப்பட்டார்
[பக்கம் 79-ன் படங்கள்]
டஹிடியில் பிரசங்க வேலையில் ஈடுபட்டிருந்த ஆன்யெஸ் ஷென்க்-க்கு (வலது) உதவ வந்த கிளைட் நீல், ஆன் நீல் தம்பதியர் (கீழே)
[பக்கம் 85-ன் படம்]
ஜான் ஹூப்ளர், எலென் ஹூப்ளர் தம்பதியர் 1960-ல் வட்டார ஊழியத்தை ஆரம்பித்தனர்
[பக்கம் 86-ன் படம்]
1962-ல், வேயப்பட்ட கூரையுடனும் திறந்த பக்கங்களுடனும் எளிய ஸ்டைலில் கட்டப்பட்டிருந்த பபீடி சபையின் முதல் ராஜ்ய மன்றம்
[பக்கம் 89-ன் படம்]
“காவற்கோபுர” கட்டுரைகளைக் கொண்டிருந்த 1965, ஏப்ரல் 15, தேதியிட்ட “லா சான்டீனெல்” பிரதி
[பக்கம் 92-ன் படம்]
டாயீனா ராடாரோ, ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்காக டஹிடிய மொழியில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார்
[பக்கம் 92-ன் படம்]
ஏலீஸாபெட் அவெ (அமர்ந்திருப்பவர்) பேத்தி டீயானா டாவுடூவுடன்
[பக்கம் 95-ன் படம்]
ஆன்னா லான்ட்ஸா, ஆன்டான்யோ லான்ட்ஸா தம்பதியர்
[பக்கம் 96-ன் படம்]
வாயியேரேடியாய் மாரா, மரீ-மெட்லென் மாரா தம்பதியர்
[பக்கம் 97-ன் படம்]
ஆடோ லாகூர்
[பக்கம் 98-ன் படம்]
ருயிடால்ஃப் ஹாமரூராயி
[பக்கம் 99-ன் படம்]
டாரோவா டேரீயி, காட்ரீன் டேரீயி தம்பதியருடன் (வலது) வாஹினேரீய் ராய், எட்மோ ராய் தம்பதியர் (இடது)
[பக்கம் 100-ன் படம்]
ஆகஸ்ட் டமனஹா, ஸ்டெலா டமனஹா தம்பதியர்
[பக்கம் 102-ன் படங்கள்]
கிறிஸ்ட்யான் லாசால், ஷான்-பால் லாசால் தம்பதியர் (இடது) லீனா டீன், கால்சோன் டீன் தம்பதியர் (வலது)
[பக்கம் 103-ன் படம்]
1970-களில் நடந்த மாவட்ட மாநாட்டில் ராஜர் சேஜ் (இடது) ஃபிரான்ஸீஸ் சீகாரியின் பேச்சை டஹிடியனில் மொழிபெயர்க்கிறார்
[பக்கம் 107-ன் படம்]
ஐலீன் ராஃபாயெல்லீ, அலன் ராஃபாயெல்லீ தம்பதியர்
[பக்கம் 108-ன் படம்]
மாயூரீ மெர்ஸியே, மெலானீ மெர்ஸியே தம்பதியர்
[பக்கம் 120-ன் படம்]
மார்கொஸ்ஸஸில் மிஷனரிகளாக சேவை செய்யும் மரீ-லுவிஸ் காலென், ஷெர்ஷ் காலென் தம்பதியர்
[பக்கம் 122-ன் படம்]
அலெக்ஸாண்டர் டேட்யாராஹி மனைவி எல்மாவுடனும், கடைசி இரண்டு மகள்களான ராவாவுடனும் (இடது), ரீவாவுடனும்
[பக்கம் 126-ன் படம்]
டஹிடிய மொழிபெயர்ப்புக் குழு
[பக்கம் 127-ன் படம்]
1969-ல் நடந்த “பூமியில் சமாதானம்” மாநாடே டஹிடியில் நடைபெற்ற முதல் சர்வதேச மாநாடாகும்
[பக்கம் 128-ன் படம்]
போரா போரா தீவிலுள்ள இந்த ராஜ்ய மன்றம், பிரெஞ்சு பாலினேசியாவில் கட்டப்பட்டதிலேயே மிகவும் புதியது
[பக்கம் 130-ன் படம்]
கிறிஸ்டீன் டேமாரீயி, ஃபெலிக்ஸ் டேமாரீயி தம்பதியர்
[பக்கம் 131-ன் படம்]
கிளைக் குழுவினர், இடமிருந்து வலம்: அலன் ஷாமே, ஷேரார் பல்ஷா, லுயிக் காண்ஷே
[பக்கம் 132, 133-ன் படங்கள்]
(1) டஹிடி கிளை அலுவலகம்
(2) ஜூலை, 2002-ல் “யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்” புத்தகத்தை டஹிடியனில் ஷேரார் பல்ஷா வெளியிடுகிறார்
(3) டஹிடி பெத்தேல் குடும்பம்