Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“மகா பாபிலோன் விழுந்தது!”

“மகா பாபிலோன் விழுந்தது!”

அதிகாரம் 30

“மகா பாபிலோன் விழுந்தது!”

1. இரண்டாவது தூதன் என்ன அறிவிக்கிறார், மகா பாபிலோன் யார்?

 இது கடவுள் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அந்த மணிநேரம்! எனவே, இந்தத் தெய்வீகச் செய்திக்குச் செவிகொடுத்துக் கேளுங்கள்: “பின்னும் இரண்டாந் தூதன் ஒருவன் பின்சென்று: விழுந்தது! மகா பாபிலோன் விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிர மதுவைச் சகல ஜாதிகளுக்குங் குடிக்கக் கொடுத்தாளே என்றான்.” (வெளிப்படுத்துதல் 14:8, தி.மொ.) முதல் தடவையாக, ஆனால் கடைசியானதாக அல்ல, வெளிப்படுத்துதல் மகா பாபிலோனின்மீது கவனத்தை ஊன்றவைக்கிறது. பின்னால், 17-ம் அதிகாரம் அவளை இன்ப களியாட்டிலாழ்ந்த ஒரு வேசியாக விவரிக்கும். இவள் யார்? நாம் காணப்போகிறபிரகாரம், அவள் ஒரு பூகோளப் பேரரசு, அவள் மதபக்தியுடையவள், மேலும் அவள், கடவுளுடைய ஸ்திரீயின் வித்துக்கு எதிராகப் போர்செய்வதில் சாத்தான் பயன்படுத்தும் அவனுடைய போலியான ஒழுங்குமுறை. (வெளிப்படுத்துதல் 12:17) மகா பாபிலோன் முழு பொய்மத உலகப் பேரரசாகும். பூர்வ பாபிலோனின் மதப் போதகங்களையும் பழக்கச் செயல்களையும் பாதுகாத்துவைப்பவையும் அவளுடைய ஆவியை வெளிப்படுத்திக் காட்டுபவையுமான எல்லா மதங்களும் அதில் அடங்கியுள்ளன.

2. (அ) அந்தப் பாபிலோனிய மதம் பூமியின் எல்லா பாகங்களுக்கும் சிதறிப் பரவினது எவ்வாறு? (ஆ) மகா பாபிலோனின் மிக அதிக முனைப்பானப் பகுதி எது, இது எப்போது வல்லமைவாய்ந்த ஓர் அமைப்பாக தோன்றியது?

2 பாபிலோனில்தான், 4,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு முன்னால், பாபேல் கோபுரத்தைக் கட்டவிருந்தவர்களின் மொழிகளை யெகோவா தாறுமாறாக்கினார். அந்த வெவ்வேறுபட்ட மொழித் தொகுதிகள் பூமியின் கடையாந்தரம்வரையாக சிதறடிக்கப்பட்டு, இந்நாள்வரையாகப் பெரும்பான்மையான மதங்களின் அடிப்படையாகவுள்ள அந்த விசுவாசதுரோக நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் தங்களோடுகூட கொண்டுசென்றனர். (ஆதியாகமம் 11:1-9) மகா பாபிலோன் சாத்தானினுடைய அமைப்பின் மதப் பகுதியாக உள்ளது. (யோவான் 8:43-47-ஐ ஒப்பிடுங்கள்.) இன்று அதன் மிக அதிக முனைப்பான பகுதி விசுவாசதுரோகக் கிறிஸ்தவமண்டலமாகும், இது, பைபிளிலிருந்தல்ல, ஆனால் மிகப் பேரளவாய் பாபிலோனிய மதத்திலிருந்து எடுக்கப்பட்ட கோட்பாடுகளையும் சடங்காச்சாரங்களையும் கொண்ட வல்லமைவாய்ந்த, சட்டமீறிய அமைப்பாகக் கிறிஸ்துவுக்குப் பின்னான நான்காம் நூற்றாண்டில் தோன்றியது.—2 தெசலோனிக்கேயர் 2:3-12.

3. மகா பாபிலோன் வீழ்ந்ததென்று எவ்வாறு சொல்ல முடியும்?

3 நீங்கள் ஒருவேளை இவ்வாறு கேட்கலாம், ‘மதம் பூமியில் இன்னும் பெரும் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கையில், மகா பாபிலோன் விழுந்தது என்று அந்தத் தூதன் ஏன் அறிவிக்கிறார்?’ பூர்வ பாபிலோன் பொ.ச.மு. 539-ல் வீழ்ந்தபின்பு என்ன நடந்தது? இஸ்ரவேலர்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பும்படியும் அங்கே உண்மையான வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டும்படியும் விடுதலைசெய்யப்பட்டனர்! அவ்வாறே 1919-ல் ஆவிக்குரிய இஸ்ரவேலர் ஒளிவீசும் ஆவிக்குரிய செழுமைக்குத் திரும்ப நிலைநாட்டப்பட்டதும், மகா பாபிலோன் அந்த ஆண்டில் விழுந்ததென்பதற்கு அத்தாட்சியாக நிற்கிறது, இந்தச் செழுமை இந்நாள்வரையாகத் தொடர்ந்துகொண்டும் விரிவாகிக்கொண்டும் இருக்கிறது. கடவுளுடைய ஜனங்களைத் தடைசெய்வதற்கான வல்லமை இனிமேலும் அதற்கு இல்லை. மேலும், தன் சொந்த அணிவரிசைகளுக்குள்தானே அது மீளமுடியாத அளவில் தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறது. 1919 முதற்கொண்டு அதன் ஊழல், நேர்மையில்லாமை, ஒழுக்கக்கேடு ஆகியவை விரிவாக வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருக்கின்றன. ஐரோப்பாவின் பெரும் பாகத்தில், வெகு சிலரே இப்பொழுது சர்ச்சுக்குச் செல்கின்றனர், மேலும் பொதுவுடைமைவாத நாடுகள் சிலவற்றில், மதம் “ஜனங்களின் போதைப்பொருளாக” கருதப்படுகிறது. கடவுளுடைய சத்திய வார்த்தையை நேசிக்கும் எல்லாருடைய கண்களிலும் மானக்கேடடைந்து, மகா பாபிலோன் இப்பொழுது மரணத்துக்குச் செல்லும் வரிசையில் காத்திருப்பதுபோல், தன்மீது யெகோவா கூறியுள்ள நீதியுள்ள ஆக்கினைத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருக்கிறது.

பாபிலோனின் வெட்கக்கேடான வீழ்ச்சி

4-6. ‘மகா பாபிலோன் தன் வேசித்தனமாகிய உக்கிர மதுவைச் சகல ஜாதிகளுக்குங் குடிக்கக் கொடுத்தது’ எவ்வாறு?

4 மகா பாபிலோனின் வெட்கக்கேடான வீழ்ச்சியைச் சுற்றியமைந்த சூழ்நிலைமைகளை மேலும் நுட்பவிவரமாய் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். “மகா பாபிலோன் . . . தன் வேசித்தனமாகிய உக்கிர மதுவைச் சகல ஜாதிகளுக்குங் குடிக்கக் கொடுத்தாள்” என்று தேவதூதன் இங்கே நமக்குச் சொல்கிறார். இதன் பொருளென்ன? இது வென்று கைப்பற்றுவது சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. உதாரணமாக, யெகோவா எரேமியாவிடம் பின்வருமாறு கூறினார்: “நீ இந்த உக்கிர மதுவின் பாத்திரத்தை என் கையிலிருந்து வாங்கி, நான் உன்னை அனுப்பப்போகிற சகல ஜாதியாருக்கும் குடிக்கக்கொடு, அவர்கள் குடித்து, நான் அவர்களுக்குள் அனுப்பும் பட்டயத்தினிமித்தம் பைத்தியம் பிடித்தவர்கள்போல் தள்ளாடுவார்கள்.” (எரேமியா 25:15, 16, தி.மொ.) பொ.ச.மு. ஆறாவது மற்றும் ஏழாவது நூற்றாண்டுகளில், உபத்திரவத்தைக் கொண்ட அடையாள பாத்திரத்திலிருந்து குடிக்கும்படி அதை, விசுவாசதுரோகியான யூதா உட்பட, பல ராஜ்யங்களுக்கு ஊற்ற யெகோவா பூர்வ பாபிலோனைப் பயன்படுத்தினார், இவ்வாறு அவருடைய சொந்த ஜனத்தினருங்கூட நாடுகடத்திக் கொண்டுசெல்லப்பட்டனர். பின்பு, பாபிலோனின் அரசன் ‘பரலோகங்களின் ஆண்டவராகிய’ யெகோவாவுக்கு விரோதமாகத் தன்னை உயர்த்தினதால், பாபிலோன் வீழ்ச்சியடைந்தது.—தானியேல் 5:23.

5 மகா பாபிலோனுங்கூட பல நாடுகளை வென்று கைப்பற்றியது, ஆனால் பெரும் பாகமாக, இவை மிகுந்த தந்திரமாக இருந்திருக்கின்றன. வேசியின் கவர்ச்சியூட்டி ஏய்க்கும் முறைகளைப் பயன்படுத்தி, அவர்களோடு மத வேசித்தனத்தை நடப்பித்ததன் மூலம் அது “சகல ஜாதிகளுக்குங் குடிக்கக்கொடுத்”திருக்கிறது. தன்னோடு ஒப்பந்தங்களுக்கும் நட்புறவுகளுக்கும் உட்படும்படி அரசியல் அதிபதிகளை அது மயக்கிச் சிக்கவைத்திருக்கிறது. மதக் கவர்ச்சியூட்டுதல்களால் அது, அரசியல், வியாபார, மற்றும் பொருளாதார ஒடுக்குதல்களை சதித்திட்டமிட்டது. வெறும் அரசியல் மற்றும் வியாபார காரணங்களுக்காக அது, மதத் துன்புறுத்தலையும் மதப் போர்களையும் சிலுவைப்போர்களையும் மட்டுமல்லாமல் தேசீய போர்களையுங்கூட தூண்டிவிட்டிருக்கிறது. மேலும் அவை கடவுளுடைய சித்தம் என்று சொல்வதால் இவற்றை அது பரிசுத்தப்படுத்தியிருக்கிறது.

6 20-ம் நூற்றாண்டின் போர்களிலும் அரசியல்களிலும்—ஷின்டோ ஜப்பான், இந்து இந்தியா, புத்த வியட்நாம், “கிறிஸ்தவ” வட அயர்லாந்தும் லத்தீன் அமெரிக்காவும், மேலும் மற்றவற்றில் நடந்ததுபோல்—மதத்தின் தலையிடுதல் பொதுவாய் யாவரும் அறிந்திருக்கும் காரியமே—இரண்டு உலக யுத்தங்களின் இரு பக்கங்களிலுமிருந்த படைகளின் மத குருக்கள் வாலிபர்களை ஒருவரையொருவர் கொல்லும்படி ஊக்குவித்ததில் எடுத்தப் பங்கையும் கவனியாமல் விடமுடியாது. மகா பாபிலோன் காதல்கொண்டு திரிவதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, 1936-39-ல் நடந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரில் அது எடுத்தப் பங்கில் காணப்படுகிறது, அதில் குறைந்தபட்சம் 6,00,000 ஆட்களாவது கொல்லப்பட்டனர். இந்த இரத்தஞ்சிந்துதல், ஸ்பெய்னின் சட்டப்பூர்வ அரசாங்கம் சர்ச்சின் செல்வத்தையும் ஸ்தானத்தையும் பயமுறுத்தினதால், கத்தோலிக்க மதகுருக்களையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் ஆதரித்தவர்களால் ஓரளவில் தூண்டி நடத்தப்பட்டது.

7. மகா பாபிலோனின் தாக்குதலுக்குரிய முக்கிய குறியிலக்காக இருந்துவருவோர் யார், இந்தக் குறியிலக்குக்கு எதிராக என்ன செய்முறைகளை அது பயன்படுத்தியுள்ளது?

7 மகா பாபிலோன் சாத்தானினுடைய வித்தின் மதப் பாகமாக இருப்பதால், யெகோவாவின் “ஸ்திரீ”யாகிய ‘மேலான எருசலேமை’ தாக்குவதையே எப்பொழுதும் தன் முக்கிய குறியிலக்காக கொண்டிருக்கிறாள். முதல் நூற்றாண்டில், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை அந்த ஸ்திரீயின் வித்தாகத் தெளிவாய் அடையாளங் கண்டுகொள்ளப்பட்டிருந்தது. (ஆதியாகமம் 3:15; கலாத்தியர் 3:29; 4:26) மகா பாபிலோன் அதை மத வேசித்தனக் குற்றஞ்செய்யும்படி தூண்டி வற்புறுத்துவதால் அந்தக் கற்புள்ள சபையை வென்று கைப்பற்ற கடினமாய் முயற்சி செய்தது. பலர் அதற்கு ஆளாவார்கள், பெரும் விசுவாசதுரோகம் அதன் விளைவாக உண்டாகுமென்று அப்போஸ்தலர் பவுலும் பேதுருவும் எச்சரித்தார்கள். (அப்போஸ்தலர் 20:29, 30; 2 பேதுரு 2:1-3) யோவானின் வாழ்க்கையின் முடிவு சமயத்தில், மகா பாபிலோன் கறைப்படுத்தும் தன் முயற்சிகளில் ஓரளவு முன்னேறியிருந்ததென ஏழு சபைகளுக்குக் கொடுத்த இயேசுவின் செய்திகள் குறிப்பாய்க் காட்டின. (வெளிப்படுத்துதல் 2:6, 14, 15, 20-23) ஆனால் அது எவ்வளவு தூரம் செல்ல அனுமதிக்கப்படுமென்பதை இயேசு ஏற்கெனவே காட்டியிருந்தார்.

கோதுமையும் களைகளும்

8, 9. (அ) கோதுமையையும் களைகளையும் பற்றிய இயேசுவின் உவமை எதைக் குறிப்பிட்டுக் காட்டினது? (ஆ) “மனுஷர் நித்திரைபண்ணுகையில்” என்ன நேரிட்டது?

8 கோதுமையையும் களைகளையும் பற்றிய தம்முடைய உவமையில், இயேசு வயலில் நல்ல விதைகளை விதைத்த ஒரு மனிதனைப்பற்றிப் பேசினார். ஆனால் “மனுஷர் நித்திரைபண்ணுகையில்” சத்துரு ஒருவன் வந்து அதன்மீது களைகளை விதைத்துவிட்டான். ஆகையால், அந்தக் கோதுமை களைகளால் மறைக்கப்பட்டதாகிவிட்டது. இயேசு தம்முடைய உவமையை பின்வரும் வார்த்தைகளில் விளக்கிக் கூறினார்: “நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷ குமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு.” பின்பு, அந்தக் கோதுமையும் களைகளும் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” வரை ஒன்றாக வளரும்படி விடப்படும், முடிவின்போது தேவதூதர்கள் அந்த அடையாளக் குறிப்பான களைகளைப் பிடுங்கி ‘சேர்ப்பார்களெனக்’ காட்டினார்.—மத்தேயு 13:24-30, 36-43, NW.

9 இயேசுவும் அப்போஸ்தலர் பவுலும் பேதுருவும் எச்சரித்தபடியே நடந்தது. “மனுஷர் நித்திரைபண்ணுகையில்,” அதாவது, அப்போஸ்தலர் மரணத்தில் நித்திரைக்குள்ளானபோது அல்லது கிறிஸ்தவ கண்காணிகள் கடவுளுடைய மந்தையைக் காவல்காப்பதில் தூக்கநிலைக்குள்ளானபோது, பாபிலோனிய விசுவாசதுரோகம் சபைக்குள்ளேதானே முளைத்துக் கிளம்பிற்று. (அப்போஸ்தலர் 20:31) சீக்கிரத்தில் இந்தக் களைகள் கோதுமைக்குமேலாக பெரும் எண்ணிக்கையில் பரவி அதைக் காட்சியிலிருந்து மறைத்துப்போட்டது. பல நூற்றாண்டுகளாக, ஸ்திரீயின் இந்த வித்து, மகா பாபிலோனின் பாரிய பலமடிப்பு அங்கித்தொங்கலுக்குள் முழுமையாக மூடிப்போடப்பட்டதுபோல் தோன்றியிருக்கலாம்.

10. 1870 வாக்கில் என்ன நடந்தது, மகா பாபிலோன் இதற்கு எவ்வாறு பிரதிபலித்தது?

10 அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1870 வாக்கில், அந்த மகா பாபிலோனின் வேசித்தனமான வழிகளிலிருந்து தொடர்பறுத்துத் தங்களை விலக்கிக்கொள்ள திடத்தீர்மானமான முயற்சிகளெடுக்கத் தொடங்கினர். கிறிஸ்தவமண்டலம் புறமதங்களிலிருந்து கொண்டுவந்திருந்த பொய்க் கோட்பாடுகளை அவர்கள் விட்டொழித்து, புறஜாதியாரின் காலங்கள் 1914-ல் முடிவடையுமென்று பிரசங்கிப்பதில் தைரியமாய் பைபிளைப் பயன்படுத்தினார்கள். மகா பாபிலோனின் முக்கிய கருவியான, கிறிஸ்தவமண்டல மதகுருக்கள், உண்மையான வணக்கம் திரும்பநிலைநாட்டப்படுவதன் இந்தக் கிளர்ச்சிகளை எதிர்த்தனர். முதல் உலக யுத்தத்தின்போது, உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் அந்தச் சிறிய தொகுதியை ஒழித்துப்போட முயற்சி செய்து, போர்க்கால மீறிய உணர்ச்சியெழுச்சியை அவர்கள் பயன்படுத்தினர். இந்தக் கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள், 1918-ல் ஏறக்குறைய முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டபோது, மகா பாபிலோனின் நோக்கம் ஈடேறினதுபோல் காணப்பட்டது. அது அவர்கள்மீது வெற்றிபெற்றதுபோல் தோன்றிற்று.

11. பூர்வ பாபிலோன் விழுந்ததின் பலனாக என்ன நடந்தது?

11 நாம் முன்னால் கவனித்தபடி, அகந்தையுள்ள பாபிலோன் நகரம் பொ.ச.மு. 539-ல் அதிகாரத்திலிருந்து நாசகரமான வீழ்ச்சியை அனுபவித்தது. அப்போது: “பாபிலோன் விழுந்தது, விழுந்தது”! என்ற கூக்குரல் கேட்கப்பட்டது. அந்த உலகப் பேரரசின் அந்தப் பெரிய ஆசனம் மகா கோரேசின்கீழிருந்த மேதிய-பெர்சிய படைகளின் கைக்குள் வீழ்ந்துவிட்டன. இவ்வாறு கைப்பற்றப்பட்டதை அந்த நகரம்தானே தப்பிப்பிழைத்தபோதிலும், அதிகாரத்திலிருந்து அது வீழ்ந்தது உண்மையாயிருந்தது, மேலும் அது, அதன் யூதக் கைதிகளின் விடுதலையில் விளைவடைந்தது. அவர்கள் தூய்மையான வணக்கத்தை அங்கே திரும்ப நிலைநாட்டும்படி எருசலேமுக்குத் திரும்பினார்கள்.—ஏசாயா 21:9; 2 நாளாகமம் 36:22, 23; எரேமியா 51:7, 8.

12. (அ) நம்முடைய நாட்களில், மகா பாபிலோன் விழுந்துவிட்டதென எவ்வாறு சொல்ல முடியும்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தை யெகோவா முற்றிலும் தள்ளிவிட்டாரென்று எது நிரூபிக்கிறது?

12 பாபிலோன் விழுந்தது என்ற கூக்குரல் நம்முடைய நாட்களில் கேட்கப்பட்டிருக்கிறது! பாபிலோனிய கிறிஸ்தவமண்டலம் 1918-ல் பெற்ற தற்காலிக வெற்றி, அபிஷேகம்செய்யப்பட்டவர்களின் மீதிபேராகிய யோவான் வகுப்பார், 1919-ல் ஆவிக்குரிய ஓர் உயிர்த்தெழுதலால் திரும்ப நிலைநாட்டப்பட்டபோது, திடீரென மாற்றப்பட்டது. கடவுளுடைய ஜனங்களை எவ்வகையிலாவது சிறைப்படுத்திவைப்பதைக் குறித்தவரையில் மகா பாபிலோன் விழுந்துவிட்டது. வெட்டுக்கிளிகளைப்போல், கிறிஸ்துவின் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்கள் அந்த அபிஸிலிருந்து கூட்டமாக வெளியேறி, செயல்பட ஆயத்தமாக இருந்தனர். (வெளிப்படுத்துதல் 9:1-3; 11:11, 12) அவர்களே இந்தத் தற்கால “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஆக இருந்தனர், எஜமான் அவர்களை பூமியிலுள்ள தம்முடைய உடைமைகள் எல்லாவற்றின்மீதும் பொறுப்புள்ளோராக நியமித்தார். (மத்தேயு 24:45-47, NW) அவர்கள் இவ்வகையில் பயன்படுத்தப்பட்டது, கிறிஸ்தவமண்டலம் பூமியில் கடவுளுடைய பிரதிநிதியாக இருப்பதாய் உரிமைபாராட்டினபோதிலும் யெகோவா அதை முற்றிலும் தள்ளிவிட்டாரென நிரூபித்தது. தூய்மையான வணக்கம் திரும்ப நிலைநாட்டப்பட்டது, 1,44,000 பேரின் மீதிப்பேரை—மகா பாபிலோனின் பழங்கால சத்துருவாகிய அந்த ஸ்திரீயினுடைய வித்தின் மீதியானவர்களை—முத்திரைபோடும் வேலை செய்துமுடிக்கப்படுவதற்கு வழி திறந்திருந்தது. இவையெல்லாம் சாத்தானிய மத அமைப்புக்கு அழிவுக்கேதுவான தோல்விக்கு அறிகுறியாக இருந்தன.

பரிசுத்தவான்களுக்குச் சகிப்புத்தன்மை

13. (அ) அந்த மூன்றாவது தூதன் என்ன அறிவிக்கிறார்? (ஆ) அந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெறுவோருக்கு என்ன ஆக்கினைத் தீர்ப்பை யெகோவா கொடுக்கிறார்?

13 இப்பொழுது மூன்றாவது தூதன் பேசுகிறார். செவிகொடுத்துக் கேளுங்கள்! “அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடி[ப்பான் என்றான்].” (வெளிப்படுத்துதல் 14:9, 10அ) கர்த்தருடைய நாளின்போது அந்த மூர்க்க மிருகத்தின் சொரூபத்தை வணங்காதவர்கள் துன்பப்படுவார்கள்—கொல்லவும்படுவார்கள் என்று வெளிப்படுத்துதல் 13:16, 17-ல் வெளிப்படுத்தப்பட்டது. இப்பொழுது, “அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிற”வர்களுக்கு யெகோவா ஆக்கினைத்தீர்ப்பைக் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். அவர்கள் யெகோவாவினுடைய கோபத்தின் கசப்பான ‘கோபாக்கினைப் பாத்திரத்திலிருந்து’ குடிக்கும்படி வற்புறுத்தப்படுவர். இது அவர்களுக்கு எதைக் குறிக்கும்? பொ.ச.மு. 607-ல், தம்முடைய “உக்கிரகோப பாத்திரத்”திலிருந்து குடிக்கும்படி யெகோவா எருசலேமை வற்புறுத்தினபோது, அந்த நகரம் பாபிலோனியரின் கைகளில் “கொடுமை சங்காரங்களும், பஞ்சம் பட்டயங்களும்” அனுபவித்தது. (ஏசாயா 51:17, 19, தி.மொ.) அவ்வாறே, பூமியின் அரசியல் அதிகாரங்களையும், அவற்றின் சொரூபமாகிய, ஐக்கிய நாட்டுச் சங்கத்தையும் தெய்வமாகப் போற்றுகிறவர்கள், யெகோவாவின் உக்கிரகோப பாத்திரத்திலிருந்து குடிக்கையில், அதன் விளைவு அவர்களுக்குக் கடுந்துயர இக்கட்டாக இருக்கும். (எரேமியா 25:17, 32, 33) அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவர்.

14. அந்த மூர்க்க மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குவோர் அழிக்கப்படுவதற்கு முன்பாகவேயும், அத்தகையோர் எதை அனுபவிக்க வேண்டும், யோவான் இதை எவ்வாறு விவரிக்கிறார்?

14 எனினும், அது நடப்பதற்கு முன்பேயும், மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள், யெகோவாவின் கண்டனத்தின் வாதிக்கும் பாதிப்புகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். மூர்க்க மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குவோரைக் குறித்துப் பேசி, அந்தத் தூதன் யோவானுக்குப் பின்வருமாறு தெரிவிக்கிறார்: “பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.”—வெளிப்படுத்துதல் 14:10ஆ, 11.

15, 16. வெளிப்படுத்துதல் 14:10-ல் குறிப்பிடப்படும் ‘அக்கினியும் கந்தகமும்’ என்றச் சொற்களின் உட்பொருள் என்ன?

15 அக்கினியும் கந்தகமும் இங்கே குறிப்பிடப்படுவதை நரக அக்கினி இருப்பதன் நிரூபணமாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் இதைப்போன்ற ஒரு தீர்க்கதரிசனத்தைச் சற்றுக் கவனித்துப் பார்ப்பது இந்தச் சூழமைவிலுள்ள இவ்வார்த்தைகளின் உண்மையான உட்பொருளைக் காட்டுகிறது. முன்னால் ஏசாயாவின் நாட்களில், ஏதோமின் ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கொண்டிருந்த பகைமையினிமித்தமாகத் தண்டிக்கப்படுவரென, யெகோவா அவர்களை எச்சரித்தார். அவர் சொன்னதாவது: “ஏதோமின் நீரோடைகள் பிசினாகவும் அதின் மண் கந்தகமாகவும் மாறி அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம். இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றும் [வரையறையில்லா காலத்துக்கும், NW] எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலங்களாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.”—ஏசாயா 34:9, 10, தி.மொ.

16 ஏதோம், என்றென்றும் எரியும்படியாக ஏதோ கற்பனையான நரக அக்கினிக்குள் தள்ளப்பட்டதா? நிச்சயமாகவே இல்லை. மாறாக, அந்தத் தேசம் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் முழுமையாகச் சுட்டெரித்துப் போடப்பட்டதுபோல் உலகக் காட்சியிலிருந்தே முற்றிலுமாக மறைந்துபோயிற்று. அந்தத் தண்டனையின் கடைசி விளைவு நித்தியமாய் வாதிக்கப்படுவதல்ல ஆனால் ‘வெறுமை . . . பாழ்க்கடிப்பு . . . ஒன்றுமில்லாமை’யே. (ஏசாயா 34:11, 12) அந்தப் புகை ‘வரையறையில்லா காலத்துக்கும்’ எழும்புவது இதைத் தெளிவாய்ச் சித்தரித்துக் காட்டுகிறது. ஒரு வீடு எரிந்துவிழுகையில், கொழுந்துவிட்டெரிவது அணைந்துவிட்டபின்பு அந்தச் சாம்பலிலிருந்து புகை சிறிது காலத்துக்கு வந்துகொண்டிருக்கிறது, இது, அங்கே அழிவுண்டாக்கின பெருந் தீ ஏற்பட்டதென்பதற்கு அத்தாட்சியைக் காண்போருக்கு அளிக்கிறது. இன்றுங்கூட கடவுளுடைய ஜனங்கள் ஏதோமின் அழிவிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய அந்தப் பாடத்தை நினைவுபடுத்திக்கொள்கின்றனர். இவ்வகையில் ‘அது எரிந்ததன் புகை’ அடையாளக் குறிப்பான முறையில் இன்னும் எழும்பிக்கொண்டிருக்கிறது.

17, 18. (அ) அந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெறுவோரின் முடிவு என்ன? (ஆ) அந்த மூர்க்க மிருகத்தை வணங்குவோர் எவ்வகையில் வாதிக்கப்படுகின்றனர்? (இ) எவ்வாறு “அவர்களுடைய வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பு”கிறது?

17 அந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெற்றிருப்பவர்களும் அக்கினியினால் அழிக்கப்பட்டதுபோல், முற்றிலும் அழிக்கப்பட்டுப்போவார்கள். தீர்க்கதரிசனம் பின்னால் வெளிப்படுத்துகிறபடி, மிருகங்களும் பறவைகளும் தின்னும்படி அவர்களுடைய பிணங்கள் புதைக்கப்படாமல் விடப்படும். (வெளிப்படுத்துதல் 19:17, 18) ஆகவே, சொற்பொருளின்படி அவர்கள் என்றென்றுமாக வாதிக்கப்படுகிறதில்லை என்பது தெளிவாயிருக்கிறது! அவர்கள் எவ்வாறு ‘அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுகிறார்கள்?’ சத்தியம் யாவரறிய அறிவிக்கப்படுவது அவர்களை வெளிப்படுத்திக் காட்டி கடவுளுடைய வரவிருக்கும் ஆக்கினைத்தீர்ப்பைக் குறித்து அவர்களை எச்சரிக்கிறது. ஆகையால் அவர்கள் கடவுளுடைய ஜனங்களைப்பற்றி அவதூறாய்ப் பேசி, கூடிய இடத்திலெல்லாம், யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்தவும் கொல்லவுங்கூட அரசியல் மூர்க்க மிருகத்தை மறைமுகமாய்ப் படுசூழ்ச்சி செய்து வற்புறுத்தித் தூண்டிவிடுகின்றனர். உச்சநிலையாக, இந்த எதிரிகள் அக்கினியாலும் கந்தகத்தாலும் அழிக்கப்படுவதுபோல் அழிக்கப்பட்டுப்போவர். பின்பு “அவர்களுடைய வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பும்,” எவ்வாறெனில், யெகோவாவின் நியாயமான அரசாட்சி மறுபடியும் எப்போதாவது சவாலிடப்பட்டால், கடவுள் அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்புசெய்தது ஒரு மாதிரி நியமமாகச் சேவிக்கும். அந்த விவாதம் எல்லா நித்தியத்துக்குமாகத் தீர்க்கப்பட்டுவிட்டிருக்கும்.

18 இந்த வாதிக்கும் செய்தியை இன்று யார் கொடுக்கின்றனர்? தங்கள் நெற்றிகளில் கடவுளுடைய முத்திரையைப் பெற்றிராத மனிதரை வாதிக்கும்படி அடையாளக் குறிப்பான வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் இருக்கிறதென்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (வெளிப்படுத்துதல் 9:5) சந்தேகமில்லாமல், இவர்கள் தேவதூதரின் வழிநடத்துதலின்கீழ் வாதிக்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்த அடையாளக் குறிப்பான வெட்டுக்கிளிகளின் விடாப்பிடியாய்த் தொடரும் தன்மை அத்தகையதாக இருப்பதால் “மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.” முடிவில், அவர்கள் அழிக்கப்பட்டப் பின்பு, யெகோவாவின் அரசாட்சியின் நியாயம் நிரூபிக்கப்பட்ட அந்த நிலைபேறான அத்தாட்சியாகிய, “அவர்களுடைய வாதையின் புகை” சதாகாலமாக மேலெழும்பிக்கொண்டிருக்கும். இந்த நியாய நிரூபிப்பு நிறைவேற்றி முடிக்கப்படும் வரை யோவான் வகுப்பார் சகித்துநிலைத்திருப்பார்களாக! தேவதூதன் முடிவாகக் கூறுகிறபடி: “பரிசுத்தவான்களின் சகிப்பு இதிலேதான். அவர்கள் கடவுளின் கற்பனைகளையும் இயேசுவைப்பற்றும் விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்கள்.”—வெளிப்படுத்துதல் 14:12, தி.மொ.

19. பரிசுத்தவான்களுக்குச் சகிப்புத்தன்மை ஏன் வேண்டியதாயிருக்கிறது, அவர்களைப் பலப்படுத்துகிற எதை யோவான் அறிவிக்கிறார்?

19 ஆம், “பரிசுத்தவான்களின் சகிப்பு” அவர்கள் இயேசு கிறிஸ்துவின்மூலம் யெகோவாவைத் தனிப்பட்ட பக்தியுடன் வணங்குவதைக் குறிக்கிறது. அவர்களுடைய செய்தி யாவரும் விரும்புவதாக இல்லை. அது எதிர்ப்புக்கும், துன்புறுத்தலுக்கும், விசுவாசத்துக்காகக் கொல்லப்படுதற்குங்கூட வழிநடத்துகிறது. ஆனால் யோவான் அடுத்தபடியாக அறிவிப்பதால் அவர்கள் பலப்படுத்தப்படுகின்றனர்: “பின்பு வானத்திலிருந்து ஒரு சத்தங் கேட்டேன்; அது: ஆண்டவருக்குள் சாகிற மரித்தோர் இதுமுதல் பாக்கியர் [சந்தோஷமுள்ளவர்கள், NW] என்றெழுது, ஆம், அவர்கள் தங்கள் உழைப்பினின்று இளைப்பாறுவார்கள், அவர்கள் செய்கைகள் அவர்களோடு கூடப்போகுமென்று ஆவியானவரும் சொல்லுகிறார் என்றது.”—வெளிப்படுத்துதல் 14:13, தி.மொ.

20. (அ) யோவான் அறிவித்த வாக்கு எவ்வாறு இயேசுவின் வந்திருத்தலைப்பற்றிய பவுலின் தீர்க்கதரிசனத்தோடு ஒத்திருக்கிறது? (ஆ) சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட பின்பு மரிக்கிற அபிஷேகம்செய்யப்பட்டவர்களுக்கு என்ன தனிப்பட்ட சிலாக்கியம் வாக்குக் கொடுக்கப்படுகிறது?

20 இந்த வாக்கு, இயேசுவின் வந்திருத்தலைப்பற்றிய பவுலின் பின்வரும் தீர்க்கதரிசனத்தோடு நன்றாய் ஒத்திருக்கிறது. “கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடு விடப்பட்டிருக்கும் நாமும் [உயிரோடிருந்து கர்த்தருடைய நாளுக்குள் பிரவேசிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களானவர்கள்], அவர்களோடு ஆண்டவருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.” (1 தெசலோனிக்கேயர் 4:15-17, தி.மொ.) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாக இருந்தவர்கள், சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட பின்பு, முதலாவதாக உயிர்த்தெழும்பினார்கள். (வெளிப்படுத்துதல் 6:9-11-ஐ ஒப்பிடுங்கள்.) அதன்பின்பு, கர்த்தருடைய நாளின்போது மரிக்கிற அபிஷேகம்செய்யப்பட்டவர்களுக்கு ஒரு தனிப்பட்ட சிலாக்கியம் வாக்களிக்கப்படுகிறது. பரலோகத்தில் ஆவி வாழ்க்கைக்கு அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவது உடனடியாக, “ஒரு இமைப்பொழுதிலே” நடக்கும். (1 கொரிந்தியர் 15:51) இது எவ்வளவு அதிசயமாக இருக்கிறது! அவர்களுடைய நீதிக்குரிய வேலைகள் பரலோக ராஜ்ய எல்லையில் விடாது தொடருகின்றன.

பூமியின் அறுவடை

21. “பூமி அறுவடையா”வதைப் பற்றி யோவான் நமக்கு என்ன சொல்கிறார்?

21 யோவான் தொடர்ந்து நமக்குச் சொல்லுகிறபடி, இந்த நியாயத்தீர்ப்பு நாளில் மற்றவர்களுங்கூட பலனடைகின்றனர்: “பின்னுங் கண்டேன், இதோ, வெண்மையான மேகம்! அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பான ஒருவர் உட்கார்ந்திருந்தார்; அவர் சிரசின்மேல் பொற்கிரீடம்; அவர் கையில் கருக்குள்ள அரிவாள். அப்பொழுது வேறொரு தூதன் [நான்காவதானவன்] தெய்வாலயத்திலிருந்து [ஆலய மகாபரிசுத்த ஸ்தலத்திலிருந்து, NW] வெளிப்பட்டான். அவன் மேகத்தின்மேல் உட்கார்ந்திருந்தவரைப் பார்த்து மிகுந்த சத்தமிட்டு: உமது அரிவாளை நீட்டி அறுத்துவிடும்; அறுக்கிறதற்குக் காலம் வந்தது; பூமியின் விளைச்சல் முற்றிவிட்டது என்றான்; அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் போட்டார் [நீட்டினார், NW]; பூமி அறுவடையாயிற்று.”—வெளிப்படுத்துதல் 14:14-16, தி.மொ.

22. (அ) பொற்கிரீடம் தரித்து வெண்மையான மேகத்தின்மேல் உட்கார்ந்திருப்பவர் யார்? (ஆ) இந்த அறுவடை வேலையின் உச்சநிலை எப்பொழுது நிறைவேறுகிறது, எவ்வாறு?

22 வெண்மையான மேகத்தின்மேல் உட்கார்ந்திருப்பவரை அடையாளம் கண்டுகொள்வது சந்தேகத்துக்குரியதாக இல்லை. வெண்மையான மேகத்தில் உட்கார்ந்தும், மனுஷகுமாரனுக்கொப்பாகவும் பொற்கிரீடம் தரித்தும் இருப்பதால், அவர் தெளிவாகவே, தானியேலுங்கூட தரிசனத்தில் கண்ட மேசியானிய அரசரான இயேசுவே. (தானியேல் 7:13, 14; மாற்கு 14:61, 62) ஆனால் இங்கே தீர்க்கதரிசனம் சொல்லப்படுகிற இந்த அறுவடை என்ன? பூமிலிருக்கையில், இயேசு, சீஷராக்கும் வேலையை மனிதவர்க்க உலக வயலின் அறுவடைக்கு ஒப்பிட்டார். (மத்தேயு 9:37, 38; யோவான் 4:35, 36) இந்த அறுவடை வேலையின் உச்சநிலை கர்த்தருடைய நாளில், இயேசு அரசராக முடிசூட்டப்பட்டு தம்முடைய பிதாவின் சார்பாக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் வருகிறது. இவ்வாறு, 1914 முதற்கொண்டு, அவருடைய ஆட்சியின் காலம், அறுவடையை உள்ளே கொண்டுவருவதற்கான மகிழ்ச்சியுள்ள காலமாகவும் இருக்கிறது.—உபாகமம் 16:13-15-ஐ ஒப்பிடுங்கள்.

23. (அ) அறுவடையைத் தொடங்கும்படியான கட்டளை யாரிடமிருந்து வருகிறது? (ஆ) 1919-லிருந்து இதுவரை என்ன அறுவடை நடைபெற்று வருகிறது?

23 தாம் அரசராகவும் நியாயாதிபதியாகவும் இருக்கிறபோதிலும், இயேசு அறுவடைசெய்யத் தொடங்குவதற்குமுன் தம்முடைய கடவுளாகிய யெகோவாவிடமிருந்து கட்டளை வரும்வரை காத்திருக்கிறார். இந்தக் கட்டளை “ஆலய மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து” ஒரு தூதன்மூலம் வருகிறது. உடனடியாக, இயேசு கீழ்ப்படிகிறார். முதலாவதாக, 1919-லிருந்து, தம்முடைய தூதர்கள் 1,44,000 பேரின் அறுவடையைச் செய்து முடிக்கும்படி செய்திருக்கிறார். (மத்தேயு 13:39, 43; யோவான் 15:1, 5, 16) அடுத்தபடியாக, வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டத்தை அறுவடைசெய்து கூட்டிச் சேர்க்கும்படி செய்கிறார். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9) இந்த மற்றச் செம்மறியாடுகளின் பேரளவான எண்ணிக்கை 1931-க்கும் 1935-க்கும் இடையில் தோன்றத் தொடங்கினவென சரித்திரம் காட்டுகிறது. வெளிப்படுத்துதல் 7:9-17-ல் குறிப்பிட்டுள்ள திரள் கூட்டத்தார் உண்மையில் யாவர் என்பதை அடையாளம் கண்டுகொள்ளும்படி 1935-ல் யெகோவா, யோவான் வகுப்பாருக்கு விளக்கமளித்தார். அதுமுதற்கொண்டு, இந்தக் கூட்டத்தாரைக் கூட்டிச்சேர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் எண்ணிக்கை 2005-க்குள் அறுபது லட்சத்துக்கும் மிக மேலாகப் பெருகிவிட்டிருந்தது, அது இன்னும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நிச்சயமாகவே, மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர், இந்த முடிவு காலத்தின்போது மகிழ்ச்சிநிறைந்த, ஏராளமான அறுவடை செய்திருக்கிறார்.—ஒப்பிடுங்கள்: யாத்திராகமம் 23:16; 34:22.

பூமியின் திராட்சையை மிதித்தல்

24. ஐந்தாவது தூதன் கைகளில் என்ன இருக்கிறது, ஆறாவது தூதன் உரத்த சத்தமாய் என்ன சொல்கிறார்?

24 இரட்சிப்பின் அறுவடை முடிவடைவதோடு, மற்றொரு அறுவடைக்குக் காலமாகிறது. யோவான் அறிவிப்பதாவது: “பின்பு வேறொரு தூதனும் [ஐந்தாவதானவன்] கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் [ஆறாவதானவன்] பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் [பூமியின் திராட்சச் செடியின், NW] குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.” (வெளிப்படுத்துதல் 14:17, 18) கர்த்தருடைய நாளின்போது இந்தத் தூதர் சேனைகளுக்கு நல்லதைக் கெட்டதிலிருந்து பிரிக்கும் மிகுந்த அறுவடை வேலை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது!

25. (அ) ஐந்தாவது தூதன் ஆலய மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வந்த இந்த நிகழ்ச்சி எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) அறுவடை செய்யும்படியான இந்தக் கட்டளை, ‘பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்த’ ஒரு தூதனிடமிருந்து வருவது ஏன் பொருத்தமாயுள்ளது?

25 இந்த ஐந்தாவது தூதன் அந்த ஆலய மகா பரிசுத்த ஸ்தலத்தில் யெகோவாவின் சமுகத்திலிருந்து வருகிறார், ஆகையால், இந்த முடிவான அறுவடையும் யெகோவாவின் சித்தத்தின்படி நடைபெறுகிறது. ‘பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்த’ மற்றொரு தூதன் மூலம் கொடுக்கப்பட்ட ஒரு செய்தியால் தன் வேலையைத் தொடங்கும்படி இந்தத் தூதன் கட்டளையிடப்படுகிறார். இந்த உண்மை மிக அதிகமாய்க் கவனிக்கத்தக்கது, ஏனெனில் பலிபீடத்தின் கீழுள்ள உண்மையுள்ள ஆத்துமாக்கள் பின்வருமாறு கேட்டிருந்தனர்: “பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்”? (வெளிப்படுத்துதல் 6:9, 10) பூமியின் திராட்சப்பழங்கள் அறுவடை செய்யப்படுவதோடு, பழிவாங்கும்படி கேட்கும் இந்தக் கூக்குரல் திருப்திசெய்யப்படும்.

26. “பூமியின் திராட்சச் செடி” எது?

26 ஆனால் ‘பூமியின் இந்தத் திராட்சச் செடி’ எது? எபிரெய வேதவார்த்தைகளில், யூத ஜனம் யெகோவாவின் திராட்சச் செடியாகப் பேசப்பட்டிருக்கிறது. (ஏசாயா 5:7; எரேமியா 2:21) அவ்வாறே, இயேசு கிறிஸ்துவும் அவரோடு கடவுளுடைய ராஜ்யத்தில் சேவிக்கவிருப்போரும் ஒரு திராட்சச் செடியாகப் பேசப்பட்டிருக்கின்றனர். (யோவான் 15:1-8) இந்தக் காட்சியமைவில், ஒரு திராட்சச் செடியின் கவனிக்கத்தக்க இயல்பு அது கனிதருகிறதென்பதே. உண்மையான கிறிஸ்தவ திராட்சச் செடி யெகோவாவுக்குத் துதியுண்டாக ஏராளமான கனிகள் தந்திருக்கிறது. (மத்தேயு 21:43) ஆகையால் ‘பூமியின் இந்தத் திராட்சச் செடி’ இந்த மெய்யான திராட்சச் செடியாக இருக்க முடியாது, ஆனால் அதற்கொப்பாய் சாத்தான் உண்டாக்கின போலியானதாகவே இருக்க வேண்டும், இது, நூற்றாண்டுகளினூடே விளைவித்த அதன் பல்வேறு பேய்த்தன பழங்களைக் கொண்ட ‘குலைகள்’ அடங்கியதாய், மனிதவர்க்கத்தின்மீதுள்ள சாத்தானின் ஊழல்நிறைந்த காணக்கூடிய அரசாங்க ஒழுங்குமுறையே ஆகும். மகா பாபிலோன், அதில் அவ்வளவு அதிக முதன்மைவாய்ந்ததாயிருக்கும் விசுவாசதுரோகியான கிறிஸ்தவம் இந்த நச்சுத்தன்மையுடைய திராட்சச் செடியின்மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது.—உபாகமம் 32:32-35-ஐ ஒப்பிடுங்கள்.

27. (அ) அரிவாளையுடைய தூதன் பூமியின் திராட்சச் செடியை ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்தபோது என்ன நடக்கிறது? (ஆ) இந்த அறுவடையின் பேரளவை எபிரெய வேதவார்த்தைகளிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?

27 ஆக்கினைத்தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்! “அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேல் போட்டு பூமியின் திராட்சையை [திராட்சச் செடியை, NW] அறுத்துக் கடவுளுடைய கோக்கினையின் பெரிய ஆலையிலிட்டான். நகரத்திற்கு வெளியே ஆலை மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து இருநூறுமைல் [ஆயிரத்து அறுநூறு ஃபர்லாங்கு, NW] தூரமளவும் குதிரைகளின் கடிவாள உயரமாக இரத்தம் பெருகினது.” (வெளிப்படுத்துதல் 14:19, 20, தி.மொ.) இந்தத் திராட்சச் செடிக்கு எதிராக யெகோவாவின் உக்கிரகோபம் நீண்டகாலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. (செப்பனியா 3:8) திராட்ச ஆலை மிதிக்கப்படுகையில், மொத்தமாக எல்லா ராஜ்யங்களும் மிதிக்கப்படுமென்பதற்கு ஏசாயா புத்தகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம் எந்தச் சந்தேகத்தையும் விட்டுவைக்கிறதில்லை. (ஏசாயா 63:3-6) ‘நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கில்’ உள்ள திராட்ச “ஆலை”யில் “ஜனங்கள் திரள் திரளாய்” முழுமையாக எல்லா ராஜ்யங்களும் அழிவடையும்படி மிதிக்கப்படுவரென யோவேலுங்கூட தீர்க்கதரிசனம் உரைத்தார். (யோவேல் 3:12-14, தி.மொ.) மெய்யாகவே மா பெரிய அறுவடை, இதைப்போன்ற அறுவடை இனி ஒருபோதும் நடைபெறாது! யோவானின் தரிசனத்தின்படி, திராட்சப்பழங்கள் அறுவடைசெய்யப்படுகிறது மட்டுமல்லாமல், அந்த அடையாளக் குறிப்பான முழு திராட்சச் செடியும் வெட்டப்பட்டு திராட்ச ஆலைக்குள் மிதிக்கப்படும்படி எறியப்படுகிறது. ஆகவே இந்தப் பூமியின் திராட்சச் செடி முற்றிலும் மிதித்தழிக்கப்படும் மறுபடியும் ஒருபோதும் வளரமுடியாது.

28. பூமியின் திராட்சச் செடியை மிதிப்பவர்கள் யார், இந்தத் திராட்ச ஆலை “நகரத்திற்கு வெளியே . . . மிதிக்கப்ப”டுகிறதென்பது குறிக்கும் பொருள் என்ன?

28 தரிசனத்தில் இந்த மிதிக்கப்படுதல் குதிரைகளால் செய்யப்படுகிறது, எவ்வாறெனில் திராட்சையை மிதித்து வெளிவரச் செய்யப்படும் இரத்தம் ‘குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும்’ பெருகி எட்டுகிறது. ‘குதிரைகள்’ என்ற பதம் பொதுவாய் போர் நடவடிக்கைகளைக் குறிப்பதால், இது ஒரு போர்க் காலமாக இருக்க வேண்டும். சாத்தானின் காரிய ஒழுங்குமுறைக்கு எதிரான இந்தக் கடைசி போரில் இயேசுவுக்குப் பின்செல்லும் பரலோகங்களின் சேனைகள் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிப்பதாகச்’ சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:11-16) தெளிவாக, இவர்களே பூமியின் திராட்சையை மிதிப்பவர்கள். இந்தத் திராட்ச ஆலை ‘நகரத்திற்கு வெளியே . . . மிதிக்கப்படுகிறது,’ அதாவது பரலோக சீயோனுக்கு வெளியிலாகும். நிச்சயமாகவே, இந்தப் பூமியின் திராட்சச் செடி பூமியில் மிதிக்கப்பட வேண்டியது பொருத்தமாயுள்ளது. ஆனால் அது “நகரத்திற்கு வெளியே . . . மிதிக்கப்ப”டும், எவ்வாறெனில் பூமியில் பரலோக சீயோனைப் பிரதிநிதித்துவஞ் செய்யும் அந்த ஸ்திரீயின் வித்தின் மீதிபேருக்கு ஒரு தீங்கும் வராது. இவர்கள் அந்தத் திரள் கூட்டத்தாரோடுகூட யெகோவாவின் பூமிக்குரிய அமைப்புக்கடுத்த ஏற்பாட்டுக்குள் பத்திரமாய் மறைத்துவைக்கப்பட்டிருப்பார்கள்.—ஏசாயா 26:20, 21.

29. இந்தத் திராட்ச ஆலையிலிருந்து ஓடும் இரத்தம் எவ்வளவு ஆழமாயிருக்கிறது, எவ்வளவு தூரமளவாக இது நீடிக்கிறது, இவையெல்லாம் குறிப்பிட்டுக் காட்டுவதென்ன?

29 தானியேல் 2:34, 44-ல் விவரிக்கப்பட்டுள்ள அந்த ராஜ்யக் கல் பூமியின் ராஜ்யங்களை நொறுக்கிப்போடுவதில் இந்த உயிர்ப்புள்ள தரிசனம் ஓர் ஒத்த இணையைக் கொண்டிருக்கிறது. முழுமையான அழித்தொழிக்கப்படுதல் இருக்கும். திராட்ச ஆலையிலிருந்து பெருகி ஓடும் இரத்த நதி அந்தக் குதிரைகளின் கடிவாளத்தை எட்டுமளவாக, வெகு ஆழமாயிருக்கிறது, 1,600 ஃபர்லாங்கு தூரத்துக்கு நீடிக்கிறது. a நான்கின் சதுர அளவை பத்தின் சதுர அளவால் பெருக்குவதால் (4 × 4 × 10 × 10) உண்டாகிற இந்த மிகப் பெரிய எண், இந்த அழிவின் அத்தாட்சி பூமி முழுவதையும் உட்படுத்தும் என்ற செய்தியை அழுத்தந்திருத்தமாய்த் தெரிவிக்கிறது. (ஏசாயா 66:15, 16) இந்த அழிவு பூரணமாயும் திரும்ப மாற்ற முடியாததாகவும் இருக்கும். ஒருபோதும், மறுபடியும் இனி ஒருபோதும், சாத்தானின் பூமிக்குரிய திராட்சச்செடி வேர்கொள்ளாது!—சங்கீதம் 83:17, 18.

30. சாத்தானின் திராட்சச் செடியின் கனிகள் யாவை, நம்முடைய திடத்தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?

30 முடிவுகாலத்துக்குள் வெகுதொலைவாகச் சென்று வாழும் நமக்கு, இந்த இரண்டு அறுவடைகளின் தரிசனம் மிக உட்பொருளையுடையதாக இருக்கிறது. சாத்தானின் திராட்சச் செடியின் கனிகளைக் காண நாம் வெறுமென நம்மைச் சுற்றி நோக்க வேண்டியதேயாகும். கருச்சிதைவுகளும் கொலைசெய்யும் மற்ற வகைகளும்; ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி, விபசாரம், இன்னும் மற்ற ஒழுக்கக்கேட்டு வகைகள்; நேர்மையில்லாமையும் இயல்பான அன்பற்றத் தன்மையும்—இத்தகைய எல்லா காரியங்களும் இந்த உலகத்தை யெகோவாவின் கண்களில் வெறுக்கத்தக்கதாக்குகின்றன. சாத்தானின் திராட்சச் செடி “நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற” செடியின் கனியைப் பிறப்பிக்கிறது. அதன் விக்கிரகாராதனைக்குரிய பாழாக்கும் போக்கு மனிதவர்க்கத்தின் மகத்தான சிருஷ்டிகரை அவமதிப்புச் செய்கிறது. (உபாகமம் 29:18; 32:5; ஏசாயா 42:5, 8) யெகோவாவுக்குத் துதியுண்டாக இயேசு பிறப்பிக்கச் செய்யும் நற்பலனுள்ள கனிகளின் அறுவடையில் யோவான் வகுப்பாருடன் சுறுசுப்பாய்ச் செயல்பட்டுச் சேர்ந்திருப்பது எத்தகைய சிலாக்கியம்! (லூக்கா 10:2) இந்த உலகத்தின் திராட்சச் செடியால் ஒருபோதும் கறைப்படாதிருக்கும்படி நாம் எல்லாரும் உறுதியாய்த் தீர்மானித்திருப்போமாக, இவ்வாறு நாம், யெகோவா அளித்திருக்கும் ஆக்கினைத்தீர்ப்பு நிறைவேற்றப்படுகையில், இந்தப் பூமியின் திராட்சச் செடியோடு மிதிக்கப்படுவதைத் தவிர்ப்போமாக.

[அடிக்குறிப்பு]

a ஆயிரத்தறுநூறு ஃபர்லாங்கு ஏறக்குறைய 300 கிலோமீட்டர், அல்லது 180 ஆங்கில மைல்.—வெளிப்படுத்துதல் 14:20, துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பு.

[கேள்விகள்]

[பக்கம் 208-ன் பெட்டி]

‘அவளுடைய வேசித்தனமாகிய உக்கிர மது’

மகா பாபிலோனின் முதன்மை வாய்ந்த ஒரு பகுதி ரோமன் கத்தோலிக்கச் சர்ச் ஆகும். இந்தச் சர்ச் ரோமிலுள்ள போப்பால் ஆளப்படுகிறது, ஒவ்வொரு போப்பும் அப்போஸ்தலன் பேதுருவின் வாரிசு என உரிமைபாராட்டுகிறது. பின்வருபவை, இந்த வாரிசுகளென அழைக்கப்படுவோரைப்பற்றிப் பிரசுரிக்கப்பட்ட உண்மையான செய்திகளில் சில:

ஃபர்மோஸஸ் (891-96): “அவர் மரித்து ஒன்பது மாதங்களுக்குப் பின்பு, ஃபர்மோஸஸின் உடல் போப்புகளுக்குரிய நிலவறை புதைக்குழியிலிருந்து வெளியெடுத்து ‘பிணத்தன்மையுடைய’ ஆலோசனை சபைக்கு முன்னால் விசாரணைக்காகக் குற்றஞ் சாட்டப்பட்டது, அதில் [புதிய போப்பாகிய] ஸ்டீஃபன் தலைமை வகித்தார். மரித்த அந்தப் போப், போப்புக்குரிய அதிகாரப் பதவிக்காக அளவுமீறிய ஆவல் கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவருடைய எல்லா நடவடிக்கைகளும் சட்டப்படி செல்லாதவையெனத் தீர்ப்பளிக்கப்பட்டது. . . . போப் பதவிக்குரிய அங்கிகள் அந்தப் பிணத்திலிருந்து களைந்தகற்றப்பட்டன; அதன் வலது கரத்தின் விரல்கள் துண்டிக்கப்பட்டன.”—நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா.

ஸ்டீஃபன் VI (896-97): “[ஃபர்மோஸஸின் பிணத்தினுடைய விசாரணைக்குப் பின்] சில மாதங்களுக்குள்ளேயே வன்முறையான எதிர்த்தாக்குதல் போப் ஸ்டீஃபனின் போப் பதவியை முடிவடையச் செய்தது; போப் பதவிக்குரிய சிறப்புரிமை உடை சின்னங்கள் யாவும் பறித்து நீக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு குரல்வளை நெரித்துக் கொல்லப்பட்டார்.”—நியூ கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா.

செர்கியஸ் III (904-11): “இவருடைய இரண்டு உடனடியாக முந்திய முற்பதவியாளர்கள் . . . சிறைச்சாலையில் குரல்வளை நெரித்துக் கொல்லப்பட்டனர். . . . ரோமில் இவர் தியோஃபிலாக்ட்டஸ் குடும்பத்தால் ஆதரிக்கப்பட்டார், இவர்களுடைய குமாரத்திகளில் ஒருத்தியான, மரோஸியாவால் இவருக்கு ஒரு குமாரன் (பின்னால் போப் ஜான் XI) பிறந்ததாகக் கருதப்படுகிறது.”—நியூ கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா.

ஸ்டீஃபன் VII (928-31): “இவருடைய போப் பதவியின் கடைசி ஆண்டுகளில், போப் ஜான் X . . . ரோமின் டோனா செனாட்ரிக்ஸ் ஆக இருந்த, மரோஸியாவின் கடுங்கோபத்துக்காளாகி, சிறைப்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். பின்பு மரோஸியா போப் பதவியை, பொறுப்பை போப் லியோ VI-க்கு அளித்தாள், இவர் பதவிபொறுப்பில் 6 1/2 மாதங்களுக்குள் மரித்துவிட்டார். இவரைப் பின்தொடர்ந்து ஸ்டீஃபன் VII பதவி ஏற்றார், ஒருவேளை மரோஸியாவின் செல்வாக்கின்மூலம் இருக்கலாம். . . . போப் ஆக இருந்த அவருடைய 2 ஆண்டுகளில், அவர் மரோஸியாவின் ஆதிக்கத்தின்கீழ் வல்லமையற்றவராக இருந்தார்.”—நியூ கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா.

ஜான் XI (931-35): “ஸ்டீஃபன் VII-ன் மரணத்திற்குப்பின் . . . , மரோஸியா, தியோஃபிலாக்ட்டஸ் குடும்பத்தாள், 20-க்குச் சற்று அதிக வயது இளைஞனாயிருந்த தன் குமாரனாகிய ஜானுக்குப் போப் பதவியைப் பெற்றாள். . . . போப்பாக ஜான் தன் தாயாரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தார்.”—நியூ கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா.

ஜான் XII (955-64): “இவருக்கு இன்னும் பதினெட்டு வயதாகவில்லை, ஆவிக்குரிய காரியங்களில் அவருடைய அக்கறையில்லாமையையும், முரட்டுத்தன இன்பப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டிருந்ததையும், கட்டுப்பாடற்ற ஒழுக்கக்கேட்டு இன்பத்தில் தோயும் வாழ்க்கையையும் பற்றி சமகாலத்து அறிக்கைகள் ஒப்புக்கொள்கின்றன.”—தி ஆக்ஸ்ஃபர்ட் டிக்‍ஷனரி ஆஃப் போப்ஸ்.

பெனிடிக்ட் XI (1032-44; 1045; 1047-48): “இவர் போப் பதவியைத் தன் ஞானத்தகப்பனுக்கு இருமுறை விற்று பின்பு திரும்ப மீட்டதற்குப் பேர்போனவர்.”—தி நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.

இவ்வாறு, இவர்களும் மற்ற போப்புகளும், உண்மையுள்ள பேதுருவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு மாறாக, தீய வழிக்குக் கவர்ந்திழுப்போராக இருந்தனர். தாங்கள் ஆண்ட சர்ச்சைக் கறைபடுத்துவதற்கு, இரத்தப் பழியையும் ஆவிக்குரிய மற்றும் மாம்சப்பிரகாரமான வேசித்தனத்தையும், இவற்றோடுகூட யேசபேலின் செல்வாக்கையும் அவர்கள் அனுமதித்தார்கள். (யாக்கோபு 4:4) பைபிள் மாணாக்கர்களின் புத்தகமான, நிறைவேறித்தீர்ந்த இரகசியம் இந்த உண்மையான செய்திகள் பலவற்றை மறைவுபொதிவற்று நுட்பவிவரமாய்க் குறிப்பிட்டது. இது, அந்நாட்களிலிருந்த பைபிள் மாணாக்கர்கள் ‘பூமியைச் சகலவித வாதைகளால் வாதித்த’தன் ஒரு வகையாகும்.—வெளிப்படுத்துதல் 11:6; 14:8; 17:1, 2, 5.

[பக்கம் 206-ன் படம்]

சிங்காசனத்திலமர்த்தப்பட்ட கிறிஸ்து, தூதர்களின் உதவியைக் கொண்டு நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார்

[பக்கம் 207-ன் படம்]

பாபிலோன் பொ.ச.மு. 539-ல் வீழ்ந்தபின்பு, அதன் கைதிகள் விடுதலை செய்யப்பட்டன