அப்போஸ்தல வாரிசுரிமை
அப்போஸ்தல வாரிசுரிமை
சொற்பொருள் விளக்கம்: 12 அப்போஸ்தலர்களுக்கும் வாரிசுகள் இருக்கிறார்கள் மற்றும் தெய்வீக நியமிப்பினால் இவர்களுக்கு அதிகாரம் கடத்தப்படுகிறது என்ற கொள்கை. ரோமன் கத்தோலிக்க சர்ச்சில், ஒரு குழுவாக, பேராயர்கள் அப்போஸ்தலரின் வாரிசுகள் என்றும் போப் பேதுருவின் வாரிசு என்றும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்துவரும் ரோம போப்புகள், கிறிஸ்து முழு சர்ச்சின்மீதும் பிரதான அதிகாரத்தை வழங்கியிருக்கும் பேதுருவின் ஸ்தானத்தை நிரப்புகின்றனரெனவும் அவனுடைய வேலைகளை நிறைவேற்றுகின்றனரெனவும் கருதப்படுகிறது. இது பைபிள் போதகமல்ல.
சர்ச் அதன்மீது கட்டப்பட்டுள்ள அந்தக் “கல்” பேதுருவா?
மத். 16:18: “நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” (சூழமைவைக் கவனிக்கையில் [வசனங்கள் 13, 20] இந்த உரையாடல் இயேசுவை அடையாளங்கண்டுகொள்வதை மையமாகக் கொண்டிருக்கிறது.)
அப்போஸ்தலராகிய பேதுருவும் பவுலும் யாரைக் “கல்” எனவும் “மூலைக்கல்” எனவும் புரிந்துகொண்டார்கள்?
அப். 4:8-11, கத். பை.: “அப்பொழுது இராயப்பர் [பேதுரு] இஸ்பிரீத்து சாந்துவினாலே [பரிசுத்த ஆவியினால்] நிரப்பப்பட்டு, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, மூப்பர்களே, கேளுங்கள் . . . உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும் சர்வேசுரனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய யேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே இவன் உங்களுக்கு முன்பாகச் செளக்கியமாய் நிற்கிறா[ன்] . . . வீடு கட்டுகிறவர்களாகிய உங்களாலே தள்ளுண்ட கல்லாகிய இவரே மூலைக்கு முதன்மைக்கல்லானார் [“தலைக்கல்லானார்,” NAB].”
1 இராயப்பர் [பேதுரு] 2:4-8, கத். பை.: “நீங்களும் ஜீவனுள்ள கற்களைப்போல யேசுக்கிறீஸ்துவின் வழியாய் . . . ஞான மாளிகையுமாகக் கட்டப்பட்டு எழும்புங்கள். இதினிமித்தமே, இதோ தெரிந்துகொள்ளப்பட்டதும், விலையேறப்பெற்றதுமான முக்கிய மூலைக்கல்லை சீயோன் நகரில் வைக்கிறேன். அதன்மேல் விசுவாசமாயிருக்கிறவன் கலங்கமாட்டான் என்று வேதத்திலே சொல்லியிருக்கின்றது. ஆகையால் விசுவாசிக்கிறவர்களாகிய உங்களுக்கு அது மகிமையாயிருக்கின்றது. விசுவாசியாதவர்களுக்கோ, கொத்தர்களால் தள்ளுண்டு, மூலைக்குத் தலைக்கல்லாகிய அந்தக் கல், அவர்களுக்கு இடறுகல்லாகவும் தவறிவிழுவதற்கு ஏதுவான கற்பாறையாகவும் இருக்கின்றது.”
எபே. 2:20, கத்.பை.: “அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் என்னப்பட்ட அஸ்திவாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். அதற்குக் கிறீஸ்து யேசுநாதர்தாமே ஆதிமூலைக்கல்லாயிருக்கிறார்.”
(பரிசுத்தவான் என கத்தோலிக் சர்ச் கருதின) அகஸ்டீனின் நம்பிக்கை என்ன?
“என்னுடைய குருத்துவத்தின் அதே காலப்பகுதியில், நான் டோனாடஸின் நிருபத்திற்கு எதிராக ஒரு புத்தகத்தையும் எழுதினேன் . . . இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியில் நான் அப்போஸ்தலனாகிய பேதுருவைப்பற்றிச் சொன்னேன்: ‘அவனையே கல்லாகக் கொண்டு சபை கட்டப்பட்டது.’ . . . ஆனால் பிற்பட்ட காலங்களில் கர்த்தர் சொன்னதை, அதாவது, ‘நீ பேதுருவாய் இருக்கிறாய் இந்தக் கல்லின்மேல் நான் என் சபையைக் கட்டுவேன்’ என்பதை அடிக்கடி இவ்வாறு விளக்கினேன். அது பேதுரு: ‘நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனான கிறிஸ்து’ என்று அறிக்கைச்செய்த அவரின்மீதே கட்டப்பட்டதென விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவே இந்தக் கல்லைப் பின்பற்றுவதற்கு அழைக்கப்பட்ட பேதுரு இந்தக் கல்லின்மேல் கட்டப்பட்ட சபையின் ஓர் ஆள் அவன் ‘பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைப்’ பெற்றான், ஏனென்றால் ‘நீ பேதுருவாய் இருக்கிறாய்’ என்று அவனுக்குச் சொல்லப்பட்டதேயன்றி, “நீயே அந்தக் கல்,” என்று அவனுக்குச் சொல்லப்படவில்லை. ஆனால் ‘அந்தக் கல் கிறிஸ்துவே’ அவரை அறிக்கையிடும் முழு சர்ச்சுடன், இசைவாயிருக்கும் சீமோன், பேதுரு என்று அழைக்கப்பட்டான்.”—சர்ச்சின் பிரமுகர்கள்—பரிசுத்த அகஸ்டீன், பின்வாங்கல்கள் (உவாஷிங்டன், D.C.; 1968), மேரி I. போகன், புத்தகம் I, பக். 90.
மற்ற அப்போஸ்தலர்கள் பேதுருவை தங்களுக்குள்ளே முதன்மை ஸ்தானம் வகிப்பவனாகக் கருதினார்களா?
லூக்காஸ் 22:24-26, கத். பை.: “தங்களில் அதிக பெரியவனாகக் காணப்படுகிறவன் யார் என்று அவர்களுக்குள்ளே [அப்போஸ்தலருக்குள்] ஒரு வாக்குவாதம் உண்டாயிற்று. யேசுநாதரோ அவர்களை நோக்கி: புறஜாதியாருடைய இராஜாக்கள் அவர்கள்மேல் மேட்டிமையுடன் அதிகாரம் செலுத்துகிறார்கள். அவர்கள்மேல் அதிகாரமுள்ளவர்களும் உபகாரிகளென்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல . . .” (பேதுரு “கல்”லாக இருந்திருந்தால், ‘தங்களில் அதிகப் பெரியவன் யார்’ என்ற கேள்விக்கு இடமிருந்திருக்குமா?)
சபையின் தலையாகிய இயேசு கிறிஸ்து உயிருடன் இருப்பதால், அவருக்கு வாரிசுகள் தேவையா?
எபி. 7:23-25, கத். பை.: “அன்றியும் அந்தக் குருக்கள் மரணத்தின் நிமித்தம் எப்பொழுதும் நிலைநிற்கக்கூடாதவர்களானபடியால், அநேகர் குருக்களாக ஏற்படுத்தப்பட்டார்கள். இவரோ நித்தியகாலம் நிலைத்திருப்பவரானதால் என்றென்றைக்கும் குருத்துவம் உள்ளவராயிருக்கிறார். ஆகையால் இவர் நமக்காக மனுப்பேசுவதற்கு எப்போதும் ஜீவியராயிருந்து, தமதுமூலமாய்ச் சர்வேசுரனிடத்தில் அண்டிவருகிறவர்களை என்றென்றைக்கும் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.”
உரோமர் 6:9, கத்.பை.: “மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த கிறீஸ்துநாதர் இனி மரிக்கமாட்டாரென்று அறிந்திருக்கிறோம்.”
எபே. 5:23, கத்.பை.: “கிறீஸ்துநாதர் திருச்சபைக்குத் தலைவராயிருக்கி”றார்.
பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்ட “திறவுகோல்கள்” யாவை?
மத். 16:19: “பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.”
மனிதர்களுக்குச் சிலாக்கியங்களையும் வாய்ப்புகளையும் திறந்துவைப்பதற்குத் தாமே பயன்படுத்தும் ஓர் அடையாளக்குறிப்பான திறவுகோலை இயேசு, வெளிப்படுத்துதலில் குறிப்பிட்டார்
காட்சி [வெளி.] 3:7, 8, கத்.பை.: “பரிசுத்தரும், சத்தியரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், எவனும் பூட்டாவண்ணம் திறக்கிறவரும், திறக்காவண்ணம் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது: . . . இதோ, உனக்கு முன்பாக வாசலைத் திறந்து வைத்திருக்கிறேன்; அதை ஒருவனும் பூட்டமாட்டான்.”
பேதுரு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட “திறவுகோல்களை” (யூதருக்கு, சமாரியருக்கு, புறஜாதியாருக்கு) பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் எதிர்நோக்குடன் கடவுளுடைய ஆவியைப் பெறும் வாய்ப்பைத் திறப்பதற்குப் பயன்படுத்தினான்
அப். 2:14-39, கத்.பை.: “இராயப்பர் [பேதுரு], பதினோரு பேரோடுங்கூட நின்று, தமது சத்தத்தை உயர்த்தி அவர்களுக்கு வசனித்ததாவது: யூதர்களே, ஜெருசலேமில் வசிக்கும் சமஸ்த ஜனங்களே, . . . நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த யேசுநாதரையே சர்வேசுரன் ஆண்டவரும் கிறீஸ்துவுமாக்கினார். . . . இவைகளை அவர்கள் கேட்டமாத்திரத்தில் இருதயங் குத்துண்டவர்களாய், இராயப்பரையும் மற்ற அப்போஸ்தலர்களையும் நோக்கி: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இராயப்பர் அவர்களை நோக்கி: நீங்கள் தவஞ்செய்து [மனந்திரும்பி], உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் யேசுக்கிறீஸ்துநாதருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவன்: அப்பொழுது இஸ்பிரீத்துசாந்துவின் [பரிசுத்த ஆவியின்] வரத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். ஏனெனில் வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் புத்திரருக்கும், நமது ஆண்டவராகிய சர்வேசுரன் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.”
அப். 8:14-17, கத்.பை.: “சமாரியர் சர்வேசுரனுடைய வாக்கியத்தைக் கைப்பற்றிக்கொண்டார்களென்று ஜெருசலேமிலிருந்த அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு இராயப்பரையும் அருளப்பரையும் அவர்களிடத்தில் அனுப்பினார்கள். இவர்கள் வந்து, இஸ்பிரீத்து சாந்துவை அவர்கள் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக வேண்டிக்கொண்டார்கள். ஏனெனில் அவர்களுக்குள் ஒருவனிடத்திலாவது அவர் இன்னும் இறங்கிவராதிருந்தார். ஆனால் அவர்கள் ஆண்டவராகிய யேசுநாதருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் மாத்திரம் பெற்றிருந்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் கரங்களை நீட்டி இவர்கள்மேல் வைக்கவே, இவர்கள் இஸ்பிரீத்துசாந்துவைப் [பரிசுத்த ஆவியைப்] பெற்றுக்கொண்டார்கள்.” (இந்தச் சந்தர்ப்பத்தில் இராயப்பரே [பேதுருவே] முன்னின்று நடத்தினானென வசனங்கள் 19-ம் 20-ம் காட்டுகின்றன.)
அப். 10:24-28, கத்.பை.: “மறுதினத்தில் அவர்கள் செசாரையாப் பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்னேலியூ [விருத்தசேதனஞ்செய்யப்படாத புறஜாதியான்] . . . அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். . . . அப்பொழுது இராயப்பர் [பேதுரு] பேசத்தொடங்கி சொன்னதாவது: . . . இராயப்பர் இந்த வார்த்தைகளை இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், வாக்கியத்தைக் கேட்டுக்கொண்டிருந்த யாவர்மேலும் இஸ்பிரீத்துசாந்துவானவர் [பரிசுத்த ஆவி] இறங்கினார்.”
பேதுரு தீர்மானங்களை எடுப்பதற்குப் பரலோகம் காத்திருந்து பின்பு அவனுடைய வழிநடத்துதலைப் பின்பற்றினதா?
அப். 2:4, 14, கத்.பை.: “அவர்கள் எல்லாரும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு, பேசும்படிக்கு இஸ்பிரீத்துசாந்துவானவர் அவர்களுக்குக் கொடுத்த வரத்தின்படியே பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். . . . அப்பொழுது [சபையின் தலைவராகிய கிறிஸ்து, பரிசுத்த ஆவியைக்கொண்டு அவர்களைத் தூண்டியெழுப்பின பின்பு] இராயப்பர், பதினோருபேரோடுங்கூட நின்று, . . . அவர்களுக்கு வசனித்ததாவது: . . .” (33-ம் வசனத்தைப் பாருங்கள்.)
அப். 10:19, 20, கத்.பை.: “இஸ்பிரீத்துவானவர் [பரிசுத்த ஆவி] அவரை [பேதுருவை] நோக்கி: இதோ, மூன்றுபேர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து புறப்பட்டுச் சற்றும் ஐயப்படாமல் அவர்களுடனேகூடப்போ; ஏனெனில் நாமே அவர்களை அனுப்பினோம் என்றார்.”
மத்தேயு 18:18, 19-ஐயும் ஒத்துப்பாருங்கள்.
ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கத் தகுதியுள்ளவன் யாரெனத் தீர்க்கும் நியாயாதிபதி பேதுருவா?
2 தீமோ. 4:1, கத்.பை.: “ஜீவியர்களையும் மரித்தவர்களையும் நடுத்தீர்க்கப்போகிறவராகிய யேசுக்கிறீஸ்துநாதர்.”
2 தீமோ. 4:8, கத்.பை.: “கடைசியாய் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராகிய [நியாயாதிபதியாகிய, JB] கர்த்தர் [இயேசு கிறிஸ்து] அந்த மகாநாளில் எனக்குக் கொடுப்பார். எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை ஆசிக்கிற சகலருக்கும் அவர் அதைக் கொடுப்பார்.”
பேதுரு ரோமில் இருந்தானா?
பரிசுத்த வேத எழுத்துக்களிலுள்ள ஒன்பது வசனங்களில் ரோம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனங்கள் எதிலும் பேதுரு அங்கே இருந்தான் என்று சொல்லப்படவில்லை. பேதுரு எழுதின முதல் நிருபம் 5:13-ல் பேதுரு பாபிலோனில் இருந்தானென காட்டுகிறது. இது ரோமைக் குறிப்பிடும் மறைமொழியா? அவன் பாபிலோனில் இருந்தது (கலாத்தியர் 2:9-ல் காட்டியுள்ளபடி), யூதருக்குப் பிரசங்கிக்கும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலைநியமிப்போடு ஒத்திருக்கிறது. ஏனெனில் பாபிலோனில் ஒரு பெரும் யூத ஜனத்தொகை இருந்தது. என்ஸைக்ளோபீடியா ஜுடேய்க்கா (எருசலேம், 1971, புத். 15, பத்தி 755), பாபிலோனிய டால்முட் (யூதப் பாரம்பரிய சட்டங்கள்) உருவாக்கப்பட்டதைப்பற்றிப் பேசுகையில், பொது சகாப்தத்தின்போது யூதமதத்துக்குரிய “பாபிலோனிலுள்ள பெரிய கல்விச்சாலைகளைப்” பற்றிக் குறிப்பிடுகிறது.
பேதுருவிலிருந்து நவீனகால போப்புகள் வரையில் தொடர்ச்சியாக வரும் வாரிசுதாரர்களின் வரிசை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதா?
ஜெசூயிட் ஜான் மெக்கென்ஸி, நாட்டர் டேமில் இறைமையியல் பேராசிரியராக இருந்தபோது பின்வருமாறு எழுதினார்: “சர்ச் அதிகாரத்தின் வாரிசு உரிமையின் முழு வரிசைத் தொடர்புக்கு சரித்திர அத்தாட்சி கிடையாது.”—தி ரோமன் கத்தோலிக் சர்ச் (நியு யார்க், 1969), பக். 4.
நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “. . . பூர்வ சர்ச் வாரிசு உரிமையின் முன்னேற்றத்தைக் குறித்தத் தகவல்கள் பற்றிய தஸ்தாவேஜிகள் குறைவாக இருப்பதால் அதைக் குறித்தக் காரியங்கள் குழப்பமாகவே இருக்கின்றன. . . .”—(1967), புத். I, பக். 696.
தெய்வீக நியமிப்புகளைப்பற்றி உரிமைபாராட்டுவோர் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் கீழ்ப்படிகிறதில்லையென்றால் அந்த உரிமைபாராட்டல்கள் அர்த்தமற்றவை
மத். 7:21-23, கத்.பை.: “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ஆண்டவரே! ஆண்டவரே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனஞ் சொன்னோம். உமது நாமத்தினால் பேய்களை ஓட்டினோம். உமது நாமத்தினால் அநேக அற்புதங்களையுஞ் செய்தோமல்லோ? என்பார்கள். அப்போது நான் அவர்களை நோக்கி: உங்களை ஒருபோதும் அறியேன்; பாவக்கிரமங்களைச் செய்வோரே! என்னைவிட்டு அகன்றுபோங்களென்று பிரசித்தமாய்ச் சொல்லுவேன்.”
எரேமியா 7:9-15-ஐயும் பாருங்கள்.
அப்போஸ்தலருக்கு வாரிசுகளென உரிமைபாராட்டினவர்கள் இயேசு கிறிஸ்துவின் மற்றும் அவருடைய அப்போஸ்தலரின் போதகங்களையும் செயல்முறைகளையும் கடைப்பிடித்தனரா?
ஒரு கத்தோலிக்க அகராதி பின்வருமாறு சொல்கிறது: “ரோமன் சர்ச் அப்போஸ்தலர் வழிமுறையிலானது. ஏனென்றால், அதன் கொள்கை அப்போஸ்தலருக்கு ஒருமுறை வெளிப்படுத்தப்பட்ட விசுவாசமாகும். அந்த விசுவாசத்தை அது பாதுகாக்கிறது மற்றும் விளக்கி எடுத்துரைக்கிறது. அதோடு ஒன்றும் கூட்டுவதில்லை அல்லது அதிலிருந்து ஒன்றும் எடுத்துப்போடுவதில்லை.” (லண்டன், 1957, W. E. அட்டிஸ் மற்றும் T. அர்னால்ட், பக். 176) உண்மையில் நடப்பவை இதோடு ஒத்திருக்கின்றனவா?
கடவுள் யாரென அறிதல்
“திரித்துவம், கிறிஸ்தவ மதத்தின் முதன்மையான கோட்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படுத்தும் பதம்.”—தி கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1912), புத். XV, பக். 47.
“திரித்துவம் என்ற சொல்லோ, அவ்வாறு இருப்பதாகத் தெளிவான கோட்பாடோ, புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதில்லை. . . . இந்தக் கோட்பாடு பல நூற்றாண்டுகளின்போது பல கருத்துமாறுபாடுகளினூடே படிப்படியாய் வளர்ந்தது.”—தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1976), மைக்ரோபீடியா, புத். X, பக். 126.
“வேதவாக்கிய விளக்கவுரையாளர்களும், பைபிள் இறைமையியல் வல்லுநரும், ரோமன் கத்தோலிக்கரின் வளர்ந்துகொண்டேபோகும் எண்ணிக்கையினரும் உட்பட ஒப்புக்கொள்வதாவது: நல்ல தகுதிகளில்லாமல் புதிய ஏற்பாட்டில் திரித்துவக் கொள்கையைப்பற்றிப் பேசக்கூடாது. அதைப்போலவே கொள்கைப்பிடிவாதமுள்ள வரலாற்று ஆசிரியர்களும், மதப்பாரம்பரிய இறைமையில் வல்லுநர்களும் நெருங்கிய விதத்தில் ஒப்புக்கொள்வதாவது: ஒருவன் தகுதியற்ற திரித்துவக் கொள்கையைப்பற்றிப் பேசும்போது அவன் 4-வது நூற்றாண்டின் கடைசி கால நூற்றாண்டு காலப்பகுதியின் கிறிஸ்தவ ஆரம்பங்களிலிருந்து விலகிப் போயிருக்கிறான்.”—நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா (1967), புத். XIV, பக். 295.
மதகுருமாரின் மணமாகாத நிலை
போப் ஆறாவது பால் தன்னுடைய சேக்கர்டோட்டாலிஸ் சேலிபேட்டஸ் (ஆசாரிய மணமாகாத நிலை, 1967) என்ற சுற்றறிக்கையில் மதகுருமாருக்கு மணமாகாநிலையை ஒரு தேவையென ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தாலும் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “கிறிஸ்துவின் மற்றும் அப்போஸ்தலரின் போதகத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் புதிய ஏற்பாடு . . . பரிசுத்த ஊழியக்காரருக்கு மணமாகாத நிலையை, வெளிப்படையாக வற்புறுத்துவதில்லை. . . . தம்முடைய பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கையில் அதை முன்தேவயாக இயேசுதாமேயும் வைக்கவில்லை. பூர்வ கிறிஸ்தவ சமுதாயங்களைக் கண்காணித்து வந்தவர்களுக்கும் இதை ஒரு தேவையாக அப்போஸ்தலர்கள் நிர்ணயிக்கவில்லை.”—போப்பின் சுற்றறிக்கைகள் 1958-1981 (ஃபால்ஸ் சர்ச், Va.; 1981), பக். 204.
யோவன் 1:42-ஐப் பாருங்கள். மேலும் மாற்கு 1:29-31-ஐயும் பாருங்கள், அங்கே சீமோன் அல்லது பேதுருவின் மாமியாரைக் குறித்து சொல்லியிருக்கிறது.)
1 கொரி. 9:5: “மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?” (“கேபா” என்பது பேதுருவுக்குக் கொடுக்கப்பட்ட அரமேயிக் பெயர்;1 தீமோ. 3:2, கத்.பை.: “மேற்றிராணியாரானவர் . . . ஒரே தாரப் பூமா[னாய்] [“ஒரே தடவை மணஞ்செய்தவனாய்,” NAB] . . இருக்கவேண்டும்.”
கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன், புத்தமதம் அதன் ஆசாரியரும், சந்நியாசிகளும் மணமில்லாதிருக்கவேண்டும் என்ற தேவையைக் கடைப்பிடித்தது. (கிறிஸ்தவ சர்ச்சில் ஆசாரிய மணமாகாத நிலையின் சரித்திரம், லண்டன், 1932, நான்காவது பதிப்பு, திருத்தியமைத்தது, ஹென்ரி C. லியா, பக். 6) இதற்கு முன்பேயும் A. ஹிஸ்லாப் எழுதிய இரண்டு பாபிலோன்கள் (நியு யார்க், 1943), பக். 219-ல் சொல்லியிருக்கிறபடி பாபிலோனிய ஆசாரியத்துவத்தின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் மணமாகாத நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தேவையிருந்தது.
1 தீமோ. 4:1-3, கத். பை.: “இஸ்பிரீத்துவானவர் வெளியரங்கமாய் அறிவித்திருக்கிறபடி, இனி வருங்காலங்களிலே சிலர் தப்பறைப் புத்தியுள்ளவர்களுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் காதுகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள். . . . இவர்கள், விவாகம் பண்ணப்படாதென்றும், . . . விலக்குகிறவர்கள்.”
உலகிலிருந்து பிரிந்திருத்தல்
போப் ஆறாவது பால், ஐக்கிய நாட்டு சங்கத்தில் 1965-ல் பேசியபோது சொன்னதாவது: “உலகின் மக்கள் ஒத்திசைவுக்கும், சமாதானத்துக்கும் கடைசி நம்பிக்கையாக ஐக்கிய நாட்டுச் சங்கத்தினிடம் திரும்புகிறார்கள்; நாங்கள் அவர்களுடைய மற்றும் எங்களுடைய மரியாதையையும் நம்பிக்கையையும் புகழ்மாலையாக இங்கே அளிக்கிறோம் என்று நம்புகிறோம்.”—போப்பின் வருகை (நியு யார்க், 1965), டைம்-லைஃப் விசேஷ அறிக்கை, பக். 26.
அருளப்பர் [யோவான்] 15:19, கத்.பை.: “[இயேசு கிறிஸ்து சொன்னார்:] நீங்கள் உலகத்தாராய் இருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும். ஆனால் நீங்கள் உலகத்தார் அல்லாததினாலும், நானே உலகத்தினின்று உங்களைத் தெரிந்துகொண்டதினாலும் உலகம் உங்களைப் பகைக்கிறது.”
இயாகப்பர் [யாக்கோபு] 4:4, கத்.பை.: “இவ்வுலகத்தின் சிநேகம் சர்வேசுரனுக்குப் பகையாயிருக்கிறதென்று அறியீர்களோ?”
போராயுதங்களை உதவிக்காக நாடுதல்
கத்தோலிக்க சரித்திராசிரியனாகிய E. I. வாட்கின் பின்வருமாறு எழுதுகிறார்: “ஒப்புக்கொள்ள வருத்தமுள்ளதாயிருப்பினும் ஒரு பொய்யான உபதேசம் அல்லது நேர்மையற்ற பற்றுறுதிக்கு அக்கறைகாட்டும் வகையில்
பேராயர்கள் தங்கள் தேசத்தின் அரசாங்கங்களால் நடத்தப்பட்ட எல்லாப் போர்களையும் முரண்பாடின்றி ஆதரித்தனர் என்ற சரித்திர உண்மையை நான் மறுதலிக்கவோ அல்லது அசட்டை செய்யவோ முடியாது. தேசத்தின் குருமரபு எந்த ஒரு போரயாவது அநீதியென கண்டித்த ஒரு சந்தர்ப்பத்தையும் நான் அறியேன். . . . அதிகாரப்பூர்வமான விளக்கம் எவையாயிருந்தாலும், நடைமுறையில் ‘என் தேசம் எப்பொழுதும் சரியானது’ என்பதே கத்தோலிக்க பேராயர்கள் போர்க்காலங்களில் பின்பற்றின ஒழுக்கவிதியாகும்.”—ஒழுக்கத் தத்துவங்களும் எறிபடைகளும் (லண்டன், 1959), சார்ல்ஸ் S. தாம்ஸன் பதிப்பித்தது, பக். 57, 58.மத். 26:52, கத்.பை.: “யேசுநாதர் அவனை நோக்கி: உன் பட்டயத்தை அதனிடத்தில் போடு, ஏனெனில் பட்டயத்தை எடுப்பவர்களெல்லாரும் பட்டயத்தாலே மடிவார்கள்.”
1 அருளப்பர் [யோவான்] 3:10-12, கத்.பை.: “இதைக்கொண்டே தெய்வபுத்திரரும், பேயின் மக்களும் வெளியாகிறார்கள். . . . தன் சகோதரனை நேசியாத . . . இவர்கள் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறவர்கள் அல்ல. . . . [நாம்] ஒருவரொருவரை நேசிக்கவேண்டும் . . . துர்ச்சனனுக்குப் பிள்ளையாய்த் தன் சகோதரனைக் கொன்ற காயீனைப்போல் இராதேயுங்கள்.”
மேற்சொல்லப்பட்டவைகளின் துணைகொண்டு பார்க்கையில், அப்போஸ்தலரின் வாரிசுகள் என்று உரிமைபாராட்டுவோர் கிறிஸ்துவும் அப்போஸ்தலரும் போதித்துச் செய்தவற்றையே உண்மையில் போதித்தும் செய்தும் வந்திருக்கிறார்களா?