பரவசம்
பரவசம்
சொற்பொருள் விளக்கம்: உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், “ஆகாயத்தில்” கர்த்தருடன் ஒன்றுபட, உடலில் பூமியிலிருந்து மேலெடுத்துக்கொள்ளப்படுவர், திடீரென்று உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவர் என்ற நம்பிக்கை. “பரவசம்” என்றச் சொல் 1 தெசலோனிக்கேயர் 4:17-ன் பொருள் என சில ஆட்கள் விளங்கிக்கொள்கின்றனர், எல்லாரும் அல்ல. “பரவசம்” என்றச் சொல் தேவாவியால் ஏவப்பட்ட வேத எழுத்துக்களில் காணப்படுகிறதில்லை.
கிறிஸ்தவர்கள் கர்த்தருடன் இருக்கும்படி “எடுத்துக்கொள்ளப்படுவர்” என்று அப்போஸ்தலன் பவுல் சொது என்ன காரியத்தைத் தர்க்கித்துப் பேசிக்கொண்டிருந்தான்?
1 தெச. 4:13-18: “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் [“மரணத்தில் நித்திரையடைந்தவர்கள்,” NE; “மரித்தவர்கள்,” TEV, JB] நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.” (தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் சிலர் மரித்ததாகத் தெரிகிறது. உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைக் கொண்டு ஒருவரையொருவர் ஆறுதல்படுத்தும்படி உயிரோடிருப்போரைப் பவுல் ஊக்கப்படுத்தினான். இயேசு தம்முடைய மரணத்துக்குப் பின் உயிர்த்தெழுப்பப்பட்டார்; அவ்வாறே, கர்த்தருடைய வருகையின்போது, அவர்களுக்குள் மரித்திருந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடன் இருக்கும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்களென அவன் அவர்களுக்கு நினைப்பூட்டினான்.)
1 தெசலோனிக்கேயர் 4:17-ல் சொல்லப்பட்டுள்ளபடி ‘ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோர்’ யார்?
வசனம் 15 விளக்குகிறபடி அவர்கள் “கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும்” உண்மையுள்ளோர் ஆவர், அதாவது, கிறிஸ்து வந்திருக்கும் சமயத்தின்போது அவர்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதாவது மரிப்பார்களா? ரோமர் 6:3-5 மற்றும் 1 கொரிந்தியர் 15:35, 36, 44-ன்படி (314, 315-ம் பக்கங்களில் எடுத்துக் குறிப்பிட்டுள்ளன), அவர்கள் பரலோக வாழ்க்கையை அடைய முடிவதற்குமுன் மரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் திரும்பிவருகைக்காகக் காத்துக்கொண்டு அந்த மரித்த நிலையில் இருக்கவேண்டியதில்லை. அவர்கள் கர்த்தருடன் இருக்கும்படி அக்கணத்திலேயே “ஒரு இமைப்பொழுதிலே” “மறுரூபமாக்கப்படு”வார்கள்.—1 கொரி. 15:51, 52; மேலும் வெளிப்படுத்துதல் 14:13.
கிறிஸ்து காணக்கூடியவராய் மேகத்தில் தோன்றி, பின்பு உலகம் பார்த்துக்கொண்டிருக்கையில் உண்மையுள்ள கிறிஸ்தவர்களைப் பரலோகத்துக்குள் எடுத்துக்கொள்வாரா?
உலகம் தங்கள் மாம்சக் கண்களால் தம்மை மறுபடியும் காணும் என்று இயேசு சொன்னாரா?
யோவான் 14:19: “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ [அவருடைய உண்மையுள்ள சீஷர்கள்] என்னைக் காண்பீர்கள்; நான் பிழைத்திருக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.” (தடித்த அச்சு சேர்க்கப்பட்டது.) (1 தீமோத்தேயு 6:16-உடன் ஒத்துப்பாருங்கள்.)
கர்த்தர் ‘வானத்திலிருந்து இறங்கிவருவதன்’ பொருளென்ன?
மாம்சக் கண்களுக்குக் காணப்படாமல் கர்த்தர் 1 தெசலோனிக்கேயர் 4:16-ல் சொல்லியுள்ளபடி “வானத்திலிருந்து இறங்கிவர” முடியுமா? பூர்வ சோதாம் கொமாராவின் நாட்களில், ஜனங்கள் செய்துகொண்டிருந்ததை “நான் இறங்கிபோய்ப் பார்ப்பேன்” என யெகோவா சொன்னார். (ஆதி. 18:21, தி.மொ.) ஆனால் அவர் அனுப்பின பிரதிநிதிகளான தேவதூதர்களை மனிதர் கண்டபோதிலும், யெகோவா அவ்வாறு பார்வையிட்டபோது, எந்த மனிதனும் அவரைக் காணவில்லை. (யோவான் 1:18) அவ்வாறே, இயேசு, மாம்சத்தில் திரும்பிவரத் தேவைப்படாமல் பூமியில் தம்மை உண்மையுடன் பின்பற்றுவோருக்குப் பலனளிக்க அவர் தம்முடைய கவனத்தை அவர்களிடம் திருப்ப முடியும்.
அப்படியானால், மனிதர், என்ன கருத்தில் கர்த்தர் “மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்”?
இயேசு பின்வருமாறு முன்னறிவித்தார்: “அப்பொழுது மனுஷகுமாரன் [இயேசு கிறிஸ்து] மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.” (லூக்கா 21:27) யோவன் 14:19-ல் பதிவுசெய்திருக்கிறபடி இயேசு சொன்னதற்கு இந்தக் கூற்றோ அல்லது மற்ற வசனங்களிலுள்ள இதைப்போன்றக் கூற்றுகளோ முரண்பாடாக இல்லை. கவனியுங்கள்: யாத்திராகமம் 19:9-ல் சொல்லியுள்ளபடி சீனாய் மலையில், கடவுள் ‘ஜனங்களிடம் கார்மேகத்தில் வந்தபோது’ என்ன நடந்தது? கடவுள் காணக்கூடாதவராக அங்கிருந்தார், இஸ்ரவேல் ஜனங்கள் அவர் வந்திருந்ததற்குக் காணக்கூடிய அத்தாட்சியையே கண்டார்கள், ஆனால் அவர்களில் எவரும் தங்கள் கண்களால் கடவுளை உண்மையில் காணவில்லை. அவ்வாறே, தாம் “மேகத்தின்மேல்” வருவாரென இயேசு சொன்னபோது, தாம் மனிதக் கண்களுக்குக் காணக்கூடாதவராய் இருப்பாரெனவும் ஆனால் மனிதர் அவர் வந்திருப்பதை உணருவார்களெனவும் கருதியிருக்கவேண்டும். அவர்கள் அவரைத் தங்கள் மனக்கண்களால் “காண்பார்கள்,” அவர் வந்திருக்கும் உண்மையை உணருவார்கள். (மேலுமான குறிப்புகளுக்கு “கிறிஸ்து திரும்பிவருதல்,” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)
கிறிஸ்தவர்கள் தங்கள் மாம்ச உடல்களுடன் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவது சாத்தியமா?
1 கொரி. 15:50: “சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.”
தீர்க்கதரிசி எலியாவின் அனுபவம் இதற்கு முரண்படுகிறதா? இல்லவேயில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இயேசு சொன்ன தெளிவான கூற்றின் உதவியைக்கொண்டு இதை விளங்கிக்கொள்ள வேண்டும், அதாவது: “பரலோகத்திலிருந்து இறங்கினவராகிய மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” (யோவான் 3:13, தி.மொ.) எலியா “சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போ”வதைப் பார்த்தபோதிலும், இது அவன் ஆவிப் பகுதிக்குள் சென்றான் என பொருள்கொள்கிறதில்லை. ஏன் அவ்வாறில்லை? ஏனெனில் பின்னால் அவன் யூதாவின் அரசனுக்கு ஒரு கண்டன கடிதத்தை அனுப்பினதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. (2 இரா. 2:11; 2 நாளா. 21:1, 12-15) ஆகாயவிமானங்களை மனிதர் உருவாக்குவதற்கு முன்னால், யெகோவா எலியாவைத் தரையினின்று பறவைகள் பறக்கும் வானத்துக்குத் தூக்கி மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல தம்முடைய சொந்த வழிவகைகளை (அக்கினி இரதத்தையும் சுழல்காற்றையும்) அங்கே பயன்படுத்தினார்.—ஆதியாகமம் 1:6-8, 20-ஐ ஒத்துப்பாருங்கள்.
உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஒருவேளை இரகசியமாய்ப் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களா, சாகாமல் பூமியிலிருந்து வெறுமென மறைந்துபோவார்களா?
ரோமர் 6:3-5, NW: “கிறிஸ்து இயேசுவுக்குள் முழுக்காட்டப்பட்டிருக்கிற நாமெல்லாரும் அவருடைய மரணத்துக்குள் முழுக்காட்டப்பட்டோமென அறியீர்களா? . . . ஏனெனில் அவருடையதைப்போன்ற மரணத்தில் நாம் அவருடன் இணைக்கப்பட்டிருந்தால், நிச்சயமாகவே அவருடையதைப்போன்ற உயிர்த்தெழுதலிலும் நாம் இணைக்கப்பட்டிருப்போம்.” (இயேசுவின் காரியத்தில் நடந்தது மாதிரியை வைத்தது. அவருடைய சீஷர்களும் மற்றவர்களும் அவர் மரித்ததை அறிந்திருந்தார்கள். அவருடைய மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னான வரையில் அவர் திரும்ப பரலோக வாழ்க்கைக்கு நிலைநாட்டப்படவில்லை.)
1 கொரி. 15:35, 36, 44, தி.மொ.: “ஆகிலும், மரித்தோர் எப்படி எழுப்பப்படுவார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் கேட்பான். மதிகேடனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்பெறமாட்டாதே. ஜன்ம சுபாவ சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுப்பப்படும்.” (ஆகவே, ஒருவன் அந்த ஆவிக்குரிய சரீரத்தைப் பெறுவதற்குமுன் மரணம் வருகிறதல்லவா?)
மிகுந்த உபத்திரவம் வருவதற்கு முன்னால், உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரையும் கர்த்தர் பூமியிலிருந்து அற்புதமாய் எடுத்துக்கொள்வாரா?
மத். 24:21, 22: “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.” (“தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” எல்லாரும் மிகுந்த உபத்திரவத்துக்கு முன்னால் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பரென இது சொல்கிறதில்லையல்லவா? அதற்கு மாறாக, மாம்சத்திலுள்ள தோழர்களோடுகூட பூமியில் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் எதிர்பார்ப்பை இது அவர்களுக்குக் கொடுக்கிறது.)
வெளி. 7:9, 10, 14: “இவைகளுக்குப் பின்பு நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். . . . இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்.” (ஒன்றிலிருந்து ‘வெளிவர’ ஒருவன் அதற்குள் செல்ல அல்லது அதில் இருக்க வேண்டும். ஆகையால் இந்தத் திரள் கூட்டத்தார் அந்த மிகுந்த உபத்திரவத்தை உண்மையில் அனுபவிக்கும் ஆட்களாயிருந்து அதிலிருந்து தப்பிப்பிழைப்போராக வெளிவர வேண்டும்.) (அவர்கள் பூமியிலிருப்பதைக் குறித்து, பக்கங்கள் 167, 168-ஐ பாருங்கள்.)
இந்த மிகுந்த உபத்திரவத்தின்போது உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?
ரோமர் 10:13, NW: “யெகோவாவின் நாமத்தின்பேரில் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.”
செப். 2:3, தி.மொ.: “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் [யெகோவாவை, NW, AS, Yg, By] தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (ஏசாயா 26:20-ம்)
ஒருவேளை மிகுந்த உபத்திரவத்துக்குப் பின் எல்லா உண்மையுள்ள கிறிஸ்தவர்களும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களா?
மத். 5:5: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”
சங். 37:29: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (10, 11, 34-ம் வசனங்களும்)
1 கொரி. 15:50: “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது.”
“பரலோகம்” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.
சில கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்துவுடன் இருக்கும்படி பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்?
வெளி. 20:6: “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” (இவர்கள் கிறிஸ்துவுடன் அரசாளுவதால், தாங்கள் ஆளுவதற்கு ஜனங்கள் இருக்கவேண்டும். அவர்கள் யாவர்? மத்தேயு 5:5-ம் சங்கீதம் 37:29-ம் பாருங்கள்.)
“மறுபடியும் பிறத்தல்” என்ற முக்கிய தலைப்பின்கீழும் பாருங்கள்.
பரலோகத்துக்குச் செல்பவர்கள் பின்னால் இங்கே பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்கு பூமிக்குத் திரும்ப அனுப்பப்படுவார்களா?
நீதி. 2:21: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.” (இத்தகைய நேர்மையுள்ள ஜனங்கள் பூமிக்குத் திரும்பி வருவார்கள் என்று வேத எழுத்துக்கள் சொல்கிறதில்லை, அவர்கள் அதில் தொடர்ந்து தங்கியிருப்பார்கள் என்றே சொல்வதைக் கவனியுங்கள்.)
1 தெச. 4:17: “நாமும் [பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள்] எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘பரவசமாதலில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘பரவசம் குறிப்பதைப் பற்றி எல்லாரும் ஒரே முறையில் எண்ணுவதில்லையென நான் காண்கிறேன். அதைப்பற்றி உங்களுடைய எண்ணம் என்னவென நான் கேட்கலாமா? . . . எந்தக் காரியத்திலும், பைபிள்தானே சொல்வதோடு நம்முடைய எண்ணங்களை ஒத்துப் பார்ப்பது நன்மைபயக்கும். (மேல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் பொருத்தமானவற்றைப் பயன்படுத்துங்கள்.)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘இந்தப் பரவசம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு தப்பும் திட்டமென எனக்குச் சிலர் விளக்கியிருக்கிறார்கள். வரவிருக்கிற மிகுந்த உபத்திரவத்தைத் தாங்கள் இவ்வாறே தப்புவார்களென பலர் உணருகின்றனர். நீங்கள் அவ்வாறே உணருகிறீர்களா?’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘நிச்சயமாகவே அந்தச் சமயத்தில் நமக்குக் கடவுளுடைய பாதுகாப்பு வேண்டும், அதிலிருந்து நாம் எவ்வாறு பயனடைய முடியுமென்று காட்டும் சில வசனங்கள் மிகவும் ஊக்கமூட்டுபவையாய் இருப்பதை நான் காண்கிறேன். (செப். 2:3)’ (2) ‘கவனத்தைக் கவருவதாய், உண்மையுள்ளோரான சிலரைக் கடவுள் இங்கே இந்தப் பூமியிலேதானே பாதுகாப்பாரென பைபிள் காட்டுகிறது. (நீதி. 2:21, 22) இது, கடவுள் முதன்முதல் ஆதாமை சிருஷ்டித்து அவனைப் பரதீஸில் வைத்தபோது அவர் கொண்டிருந்த நோக்கத்தோடு பொருந்துகிறதல்லவா?’
பயன்படுத்தக்கூடிய இன்னொரு முறை: ‘பரவசம் என்பதால், நீங்கள் கருதுவது, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பதா? . . . அவர்கள் பரலோகத்துக்குப் போய்ச் சேருகையில் என்ன செய்வார்கள் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? . . . வெளிப்படுத்துதல் 20:6-ல் (5:9, 10-லுங்கூட) சொல்லியிருப்பதைக் கவனியுங்கள் . . . ஆனால் அவர்கள் யார்மீது ஆளுகை செய்வார்கள்? (சங். 37:10, 11, 29)’