பொல்லாங்கு
பொல்லாங்கு
சொற்பொருள் விளக்கம்: ஒழுக்கப் பிரகாரமாய் மிகக் கேடானது. தீங்கானது, வன்மக்கேடுசெய்வது அல்லது பாதிப்பில் அழிவுண்டாக்குவது என்பவற்றை அடிக்கடி குறிக்கிறது.
பொல்லாங்கு அவ்வளவு அதிகம் இருந்துவருவதேன்?
கடவுள் அதற்குக் காரணர் அல்ல. அவர் மனிதவர்க்கத்துக்கு ஒரு பரிபூரண தொடக்கத்தைக் கொடுத்தார், ஆனால் மனிதர் கடவுளுடைய கட்டளைகளை அசட்டைசெய்து எது நல்லது எது கெட்டதென்பதைத் தங்களுக்குத்தாங்களே தீர்மானித்துக்கொள்ளத் தெரிந்துகொண்டனர். (உபா. 32:4, 5; பிர. 7:29; ஆதி. 3:5, 6) இவ்வாறு செய்ததால், அவர்கள் மனிதத்தன்மைக்கு மீறிய பொல்லாதச் சேனைகளின் ஆதிக்கத்தின்கீழ் வந்தனர்.—எபே. 6:11, 12.
1 யோவான் 5:19: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [பொல்லாங்கனின் அதிகாரத்துக்குள், NW] கிடக்கிறது.”
வெளி. 12:7-12: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று, . . . வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். . . . ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” (இந்த உலகத்துக்கு அதிகரிக்கப்பட்ட இந்த ஆபத்து ராஜ்யத்தின் பிறப்பைப் பின்தொடர்ந்து சாத்தான் பரலோகத்திலிருந்து வெளித் தள்ளப்பட்டது முதற்கொண்டு நேரிட்டுள்ளது, 10-ம் வசனத்தைப் பாருங்கள்.)
2 தீமோ. 3:1-5: “மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” (இதுவே, நூற்றாண்டுகளாக உண்மையான வணக்கத்திலிருந்து வழுவின விசுவாசத்துராகத்தின் கனியாகும். மதப் பக்தியுள்ளவர்களாகத் தங்களைச் சொல்லிக்கொண்ட ஜனங்கள் கடவுளுடைய வார்த்தை உண்மையில் சொல்வதைப்
புறக்கணித்ததனால் இந்த நிலைமைகள் தோன்றிவளர்ந்தன. உண்மையான தெய்வபக்தி ஒருவரின் வாழ்க்கையில் கொண்டிருக்கவேண்டிய நன்மைக்குரிய வல்லமைக்கு அவர்கள் வஞ்சகப் போலியானவர்களாக நிரூபித்தனர்.)கடவுள் அதை ஏன் அனுமதிக்கிறார்?
பொல்லாதவர்களாயிருக்கும் எல்லாரையும் வெறுமென ஒழித்துக் கட்டுவதே மிகச் சிறந்தக் காரியமென சில சமயங்களில் நமக்குத் தோன்றலாம். பொல்லாங்கின் முடிவுக்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம், எனினும் பொல்லாங்கு இருந்துவந்திருக்கும் காலத்தோடு ஒப்பிட, சம்பந்தப்பட்ட முறையில் நாம் அதை சில ஆண்டுகளே அனுபவித்திருக்கிறோம். யெகோவா தேவன் எவ்வாறு உணரவேண்டும்? ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்கள் அவரையே குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், தாங்கள் சகித்தத் தீங்கான நிலைமைகளுக்காக அவரைச் சபித்துங்கூட இருக்கின்றனர். எனினும், அவற்றை அவர் உண்டுபண்ணவில்லை, சாத்தானும் பொல்லாத மனிதருமே அவற்றை உண்டுபண்ணினர். பொல்லாதவர்களை அழிக்க யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறது. அவ்வாறு செய்யாமல் அவர் அத்தகைய பொறுமையைக் காட்டிவந்திருப்பதற்கு நிச்சயமாகவே நல்ல காரணங்கள் இருக்கவேண்டும். இந்த நிலைமையைக் கையாளும் யெகோவாவின் முறை நாம் சிபாரிசுசெய்யும் முறைக்கு வேறுபட்டிருந்தால், அது நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவேண்டுமா? அவருடைய அனுபவம் மனிதனுடையதைப் பார்க்கிலும் மிகப் பெரியது, நிலைமையைப் பற்றிய அவருடைய நோக்கு எந்த மனிதனுடையதைப் பார்க்கிலும் மிகப் பரந்தது.—ஏசாயா 55:8, 9; எசேக்கியேல் 33:17 ஆகியவற்றை ஒப்பிடுங்கள்.
அறிவுள்ள சிருஷ்டிகளுக்குத் தெரிவு சுயாதீனத்தைக் கடவுள் அளித்திராவிட்டால் பொல்லாங்கு இருந்திராது. ஆனால் நாம் கடவுளை நேசிப்பதனால் அவருக்குக் கீழ்ப்படிவதற்கு அல்லது கீழ்ப்படியாமற்போவதற்குத் தெரிந்துகொள்ளும் திறமையைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். (உபா. 30:19, 20; யோசுவா 24:15) இது வேறுவகையில் இருக்கும்படி நாம் விரும்புகிறோமா? நாம் பெற்றோராயிருந்தால், எது நமக்கு அதிக மகிழ்ச்சியுண்டாக்கும்—நம்முடைய பிள்ளைகள் நம்மை நேசிப்பதனால் நமக்குக் கீழ்ப்படியும்போதா அல்லது நாம் அவர்களை வலுக்கட்டாயப்படுத்திக் கீழ்ப்படிய செய்கையிலா? கடவுள் ஆதாமைக் கீழ்ப்படியும்படி வலுக்கட்டாயப்படுத்தியிருக்க வேண்டுமா? கடவுளுக்குக் கீழ்ப்படியும்படி நம்மை வலுக்கட்டாயப்படுத்தும் ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்திருந்தால் நாம் உண்மையில் மேலும் சந்தோஷமாயிருந்திருப்போமா? இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அழிப்பதற்குமுன், ஆட்கள் தம்முடைய நீதியுள்ள சட்டங்களுக்குப் பொருந்த வாழ்வதற்கு உண்மையில் விரும்புகிறார்களா இல்லையா என்பதை மெய்ப்பித்துக் காட்டும்படி கடவுள் அவர்களுக்கு வாய்ப்பை அளித்துக்கொண்டிருக்கிறார். தாம் குறித்துள்ள காலத்தில், அவர் தவறாமல் பொல்லாதவர்களை அழிப்பார்.—2 தெச. 1:9, 10.
மிக முக்கியமான விவாதங்கள் தீர்க்கப்படுவதற்கு அவர் ஞானமாய்க் காலத்தை அனுமதிக்கிறார்: (1) யெகோவாவின் ஆட்சியின் நீதியும் நேர்மையும் ஏதேனில் எதிர்த்து சவாலிடப்பட்டது. (ஆதி. 2:16, 17; 3:1-5) (2) பரலோகத்திலும் பூமியிலுமுள்ள கடவுளுடைய எல்லா ஊழியரின் உத்தமத்தின்பேரிலும் சந்தேகக் கேள்வி எழுப்பப்பட்டது. (யோபு 1:6-11; 2:1-5; லூக்கா 22:31) அந்தக் கலகக்காரரை (சாத்தான், ஆதாம் மற்றும் ஏவாளை) கடவுள் உடனடியாக அழித்திருக்கலாம், ஆனால் அது காரியங்களைத் தீர்த்திராது. பலம் ஒருவருடைய வழக்காடும் பொருள் சரியென நிரூபிப்பதில்லை. எழுப்பப்பட்ட இந்த விவாதங்கள் நீதிநெறி சம்பந்தமானவை. கடவுள் காலத்தை அனுமதித்தது, தமக்கு ஏதோ குறிப்பை நிரூபித்துக்கொள்வதற்கு அல்ல, ஆனால் தெரிவு சுயாதீனமுள்ள சிருஷ்டிகள் யாவரும் தம்முடைய ஆட்சிக்கு எதிரான கலகத்தால் விளைந்த கெட்ட கனியைத் தாங்கள்தாமே காண்பதற்கு அனுமதிக்கவும், மேலும் இந்த முக்கிய காரியங்களில் தாங்கள் ஒவ்வொருவரும் தனியே என்ன நிலையை எடுக்கிறார்களென்பதை மெய்ப்பித்துக்காட்ட அவர்களுக்கு வாய்ப்பை அளிக்கவுமேயாகும். இந்த விவாதங்கள் தீர்க்கப்பட்ட பின்பு, சமாதானத்தைக் கெடுக்க எவரும் மறுபடியும் ஒருபோதும் அனுமதிக்கப்படார். சர்வலோகம் முழுவதிலும் நல்ல ஒழுங்கும், ஒத்திசைவும், நல்ல நிலையும் நிலவுவது யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதன்பேரில், அறிவுள்ள எல்லாச் சிருஷ்டிகளும் இருதயப்பூர்வமான உயர்மதிப்புடன் அவரைக் கனப்படுத்துவதன்பேரில் சார்ந்திருக்கிறது. (பக்கங்கள் 363, 364-ல், “பிசாசாகிய சாத்தான்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)
உதாரணம்: குடும்பத் தலைவனாக உங்கள் நிலையை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினீர்களென்றும், உங்கள் பிள்ளைகள் உங்கள்பேரில் சாராமல் தங்கள் சொந்தத் தீர்மானங்களைச் செய்தால் மேம்பட்டிருப்பார்கள் என்றும், அவர்களெல்லாரும், அன்பினால் அல்ல, நீங்கள் கொடுத்துள்ள பொருளாதார நன்மைகளினிமித்தமே உங்களுக்குக் கீழ்ப்படிகிறார்களென்றும், முழு சமுதாயத்தின் முன்னும் எவராவது உங்களைக் குற்றஞ்சாட்டினால், இந்தக் காரியத்தைத் தீர்ப்பதற்கு மிகச் சிறந்த முறை என்னவாயிருக்கும்? அந்தப் பொய்க் குற்றஞ்சாட்டுபவரைச் சுட்டுக்கொல்வது அந்தக் குற்றச் சாட்டுகளை அந்தச் சமுதாயத்தினரின் மனதில் தீர்த்து சரிப்படுத்திவிடுமா? அதற்குப்பதில், நீங்கள் நீதியும் அன்புமுள்ள குடும்பத் தலைவராக இருக்கிறீர்கள் என்றும் தாங்கள் உங்களை நேசிப்பதனால் உங்களுடன் வாழ்கிறார்களென்றும் காட்டுவதற்கு உங்களுடைய சாட்சிகளாயிருக்கும்படி உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு அளிப்பீர்களானால் அது எத்தகைய மிக நல்ல பதிலாயிருக்கும்! உங்கள் பிள்ளைகளில் சிலர் உங்கள் எதிரி சொன்னதை நம்பி, வீட்டைவிட்டுச் சென்று, மற்ற வாழ்க்கை-முறைகளை ஏற்பதனால் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கினால், அந்தப் பிள்ளைகள் உங்கள் வழிநடத்துதலுக்குச் செவிகொடுத்திருந்தால் மேம்பட்டிருந்திருப்பார்களென்றே கவனித்துக்கொண்டிருக்கும் நேர்மை மனமுள்ள ஆட்கள் உணரும்படி அது செய்யும்.
தற்போது வரை கடவுள் பொல்லாங்கை அனுமதித்ததால் நாம் எவ்வகையிலேனும் நன்மையடைந்திருக்கிறோமா?
2 பேதுரு 3:9: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [யெகோவா, NW] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (அவருடைய பொறுமை நம்முடைய நாள்வரையில் நீடிக்கப்பட்டதால், நாம் மனந்திரும்புகிறோமெனவும், நன்மை தீமையைக் குறித்து நம்முடைய சொந்தத் தீர்மானங்களைச் செய்வதற்குப்பதில், யெகோவாவின் நீதியுள்ள ஆட்சிக்கு நம்மைக் கீழ்ப்படுத்த விரும்புகிறோமெனவும் மெய்ப்பித்துக் காட்டுவதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது.)
ரோமர் 9:14-24, தி.மொ.: “ஆகையால் என்ன சொல்லுவோம்? கடவுளிடத்தில் அநீதி இருக்குமென்போமோ? அல்லவே அல்ல. . . . கடவுள் தமது கோபத்தைக் காண்பிக்கவும் தமது வல்லமையைத் தெரிவிக்கவும் அதோடுகூடத் தாம் மகிமைக்காக ஆயத்தமாக்கின இரக்கப் பாத்திரங்கள்மேல், அதாவது யூதரிலிருந்து மாத்திரமல்ல புறஜாதிகளிலிருந்தும் அவர் அழைத்த நம்மேல், தமது மகிமையின் ஐசுவரியத்தைத் தெரிவிக்கவும் சித்தங்கொண்டு அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாயிருந்தாரானாலென்ன? [அதாவது, பொல்லாத ஆட்கள் இருப்பதை ஒருகாலத்துக்குச் சகித்தார். அந்தக் காலத்தைத் தம்முடைய நோக்கத்துக்குப் பொருந்த, குறிப்பிட்ட சிலருக்கு இரக்கங்காட்ட அவர் பயன்படுத்துவார்.]” (இவ்வாறு பரலோக ராஜ்யத்தின் உறுப்பினராகக் கிறிஸ்துவுடன் தாம் மகிமைப்படுத்தவிருக்கும் ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் காலத்தை அனுமதிக்கும்படி கடவுள் பொல்லாதவர்களை அழிப்பதைத் தள்ளிவைத்தார். கடவுள் இதைச் செய்தது எவருக்காயினும் அநீதியாயிற்றா? இல்லை; இது, பரதீஸான பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பளித்துத் தயவுகூரப்படவிருக்கிற எல்லா வகையினரான ஆட்களையும் ஆசீர்வதிப்பதற்கான யெகோவாவின் ஏற்பாட்டின் பாகமாயிருக்கிறது. சங்கீதம் 37:10, 11-ஐ ஒப்பிடுங்கள்.)
ஒருவர் இவ்வாறு சொன்னால்—
‘இத்தகைய பொல்லாங்கைக் கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர் பலர் தங்களைச் சுற்றியுள்ள பொல்லாங்கினால் மனசங்கடமடைந்திருக்கின்றனர். (ஆப. 1:3, 13)’ பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘இது கடவுள் அக்கறையற்றிருப்பதனால் அல்ல. தாம் ஒரு காலத்தைக் குறித்திருக்கிறாரெனவும் அப்பொழுது பொல்லாதவர்களைக் கணக்கு ஒப்புவிக்கும்படி செய்வாரெனவும் அவர் நமக்கு உறுதியளிக்கிறார். (ஆப. 2:3)’ (2) ‘ஆனால் அந்தச் சமயம் வருகையில் தப்பிப்பிழைப்போருக்குள் நாம் இருக்கவேண்டுமானால் நம் பங்கில் என்ன தேவைப்படுகிறது? (ஆப. 2:4b; செப். 2:3)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘இந்தக் கேள்வியை நீங்கள் கொண்டுவந்ததில் சந்தோஷப்படுகிறேன். இது நேர்மை-இருதயமுள்ள ஆட்கள் பலரை மனங்கலங்கச் செய்யும் ஒன்று. உங்கள் கேள்விக்கு விடையளிக்கும் மிக உதவியான சில குறிப்புகளை நான் இங்கே வைத்திருக்கிறேன். (பின்பு பக்கங்கள் 428-430-லுள்ள குறிப்புகள் சிலவற்றை ஒன்றுசேர்ந்து வாசியுங்கள்.)’
‘இந்த எல்லா ஆண்டுகளுக்குப்பின், காரியங்களை மாற்ற கடவுள் ஏதாவது செய்யப்போகிறாரென நான் நம்புகிறதில்லை’
நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்: ‘உங்களுக்குக் கடவுளில் நம்பிக்கை உண்டென்று அறிந்ததில் நான் சந்தோஷப்படுகிறேன். பொல்லாங்கு மிகுதியாய் இருப்பதும், அது நம்முடைய நாளுக்கு வெகுகாலத்துக்கு முன்பே தொடங்கினதென்பதும் நிச்சயமாகவே உண்மை. ஆனால் நீங்கள் இதை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா . . . ? (கடவுள் அதைச் சகித்திருக்கிற நீடித்தக் காலத்தைக் குறித்து, பக்கம் 428-ல், பத்தி 1-லுள்ள எண்ணங்களைப் பயன்படுத்துங்கள்.)’
அல்லது இவ்வாறு சொல்லலாம்: ‘ஒரு வீட்டைக் கட்டுவதற்குத் திறமையுள்ள ஒருவர் அதைச் சுத்தஞ்செய்வதற்கும் நிச்சயமாகவே திறமைவாய்ந்தவரென்று நான் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களென்று நிச்சயமாயிருக்கிறேன். . . . கடவுள் இந்தப் பூமியைச் சிருஷ்டித்ததனால், அதைச் சுத்தப்படுத்துவது அவருக்குக் கடினமான காரியமாயிராது. அவர் ஏன் இவ்வளவு நீடித்தக் காலம் காத்திருக்கிறார்? இந்தப் பதிலை மிகத் திருப்தியளிப்பதாக நான் கண்டேன். நீங்கள் நினைப்பதை எனக்குச் சொல்லுங்கள். (பின்பு பக்கங்கள் 428-430-லுள்ள குறிப்புகளை ஒன்றுசேர்ந்து வாசியுங்கள்.)’