Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 20—நீதிமொழிகள்

பைபிள் புத்தக எண் 20—நீதிமொழிகள்

பைபிள் புத்தக எண் 20—நீதிமொழிகள்

பேச்சாளர்கள்: சாலொமோன், ஆகூர், லேமுவேல்

எழுதப்பட்ட இடம்: எருசலேம்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 717

தாவீதின் குமாரனாகிய சாலொமோன் பொ.ச.மு. 1037-ல் இஸ்ரவேலின் அரசரானபோது, ‘இந்தப் பெரிய ஜனத்தை நியாயம் விசாரிப்பதற்கு அறிவும் ஞானமும்’ தரும்படி யெகோவாவிடம் ஜெபித்தார். யெகோவா அவருக்கு ‘அறிவையும் ஞானத்தையும் தெளிந்துணர்வுள்ள இருதயத்தையும்’ அருளினார். (2 நா. 1:10-12; 1 இரா. 3:12; 4:​30, 31; NW) இவற்றைப் பெற்றதால், சாலொமோன் ‘மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னார்.’ (1 இரா. 4:32) அவர் சொன்ன நீதிமொழிகளில் சில, பைபிளில் நீதிமொழிகள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன. சாலொமோனுடைய ஞானம் உண்மையில் ‘அவருடைய இருதயத்திலே தேவன் அருளிய ஞானமாகும்.’ ஆகவே, நீதிமொழிகளை நாம் படிக்கும்போது உண்மையில் யெகோவா தேவனுடைய ஞானத்தையே படிக்கிறோம். (1 இரா. 10:​23, 24) இந்த நீதிமொழிகள் நித்தியத்துக்கும் நிலைத்திருக்கும் சத்தியங்களைத் தொகுத்துரைக்கின்றன. அவை சொல்லப்பட்டபோது எந்தளவு காலத்திற்கு ஏற்றதாக இருந்ததோ, அந்தளவு இன்றைக்கும் ஏற்றதாகவே இருக்கின்றன.

2இத்தகைய தெய்வீக வழிநடத்துதலை அளிப்பதற்கு சாலொமோனின் ஆட்சிகாலம் பொருத்தமாக இருந்தது. சாலொமோன் ‘யெகோவாவின் சிங்காசனத்தில் வீற்றிருந்தார்’ என சொல்லப்பட்டது. தேவாட்சிக்குரிய ராஜ்யமாக இஸ்ரவேல் மிகவும் சிறப்புற்று விளங்கியது. சாலொமோனுக்கு மிகவும் உயர்வான “ராஜ மகத்துவம்” வழங்கப்பட்டிருந்தது. (1 நா. 29:​23, 25, தி.மொ.) அது சமாதானமும் செழுமையும் பாதுகாப்புமிக்க காலமாக திகழ்ந்தது. (1 இரா. 4:​20-25) ஆனால், அப்படிப்பட்ட தேவாட்சியிலும்கூட, மனித அபூரணத்தின் காரணமாக ஜனங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவித்தனர். ஜனங்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஞானமுள்ள அரசனாகிய சாலொமோனை நாடியதில் ஆச்சரியமில்லை. (1 இரா. 3:16-28) இப்படிப்பட்ட பல வழக்குகளை தீர்த்து வைக்கையில், அன்றாடம் எழும்பும் வாழ்க்கை சூழ்நிலைமைகளுக்கு ஏற்ற நீதிமொழிகளை சொன்னார். தங்களுடைய வாழ்க்கையை கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக ஒழுங்கமைக்க விரும்பியவர்கள், இரத்தின சுருக்கமான, அதேசமயத்தில் மனதில் பதியத்தக்க இந்தப் பழமொழிகளை பொக்கிஷமாக கருதினர்.

3நீதிமொழிகளை சாலொமோன் எழுதினார் என்று இந்தப் பதிவு சொல்வதில்லை. ஆனால், நீதிமொழிகளை ‘சொன்னார்’ என்றும், ‘பல நீதிமொழிகளை வரிசைப்படுத்தி அமைப்பதற்கு துருவி ஆராய்ந்தார்’ என்றும் அது சொல்கிறது. பிற்காலத்தில் பயன்படுத்துவதற்காக நீதிமொழிகளைப் பாதுகாத்து வைப்பதில் அவருக்கு அக்கறை இருந்ததை இது காட்டுகிறது. (1 இரா. 4:32; பிர. 12:​9, NW) தாவீது மற்றும் சாலொமோனின் காலத்தில் அரசவை அதிகாரிகள் மத்தியில் சம்பிரதிகள் இருந்தனர். (2 சா. 20:25; 2 இரா. 12:10) அரசவையில் இருந்த இவர்கள் அவருடைய நீதிமொழிகளை எழுதி தொகுத்தார்களா என்பது நமக்கு தெரியாது. ஆனால் சாலொமோனை போல் திறமையும் அறிவும் படைத்த எந்த அரசரின் சொற்களும் உயர்வாக மதிக்கப்பட்டு பொதுவாக பதிவு செய்யப்படும். இப்புத்தகம் மற்ற தொகுப்புகளிலிருந்து திரட்டப்பட்ட ஒரு தொகுப்பு என பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

4நீதிமொழிகள் புத்தகத்தை ஐந்து பகுதிகளாய் பிரிக்கலாம். அவை: (1அதிகாரங்கள் 1-9, ‘தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் நீதிமொழிகள்’ என்ற வார்த்தைகளோடு தொடங்குகின்றன; (2அதிகாரங்கள் 10-24, “சாலொமோனின் நீதிமொழிகள்” (தி.மொ.) என விவரிக்கப்படுகின்றன; (3அதிகாரங்கள் 25-29, இவ்வாறு தொடங்குகின்றன: “இவையும் சாலொமோனின் நீதிமொழிகளே: இவற்றை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் தொகுத்து எழுதினார்கள்” (தி.மொ.); (4அதிகாரம் 30, “யாக்கேயின் குமாரனாகிய ஆகூரின் வார்த்தைகள்” (தி.மொ.) என அறிமுகப்படுத்தப்படுகிறது; (5அதிகாரம் 31, ‘ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது’ என ஆரம்பிக்கிறது. எனவே, சாலொமோனே நீதிமொழிகளின் பெரும்பாகத்தை சொன்னவர். ஆகூரும் லேமுவேலும் யார் என்பது திட்டவட்டமாக அறியப்படவில்லை. லேமுவேல் என்பது சாலொமோனுக்கு மற்றொரு பெயராக இருந்திருக்கலாம் என விளக்கவுரையாளர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

5நீதிமொழிகள் எப்போது எழுதி தொகுக்கப்பட்டது? பெரும்பாலான பாகம் சாலொமோன் வழிவிலகிப் போவதற்கு முன் அவருடைய ஆட்சி காலத்தில் (பொ.ச.மு. 1037-998) எழுதப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆகூரும் லேமுவேலும் யார் என்பது தெளிவாக தெரியாததால், அவர்கள் எப்போது எழுதினார்கள் என்பதை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. இத்தொகுப்புகளில் ஒன்று எசேக்கியாவின் ஆட்சி காலத்தில் (பொ.ச.மு. 745-717) எழுதப்பட்டதால், கடைசி பகுதிகள் அவருடைய ஆட்சி காலத்துக்குமுன் எழுதப்பட்டிருக்க முடியாது. கடைசி இரண்டு பிரிவுகளும் அரசனாகிய எசேக்கியாவின் ஆட்சியில் தொகுக்கப்பட்டனவா? இதற்கு விடையாக, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—துணைக்குறிப்புகளுடன் என்ற ஆங்கில பைபிள் நீதிமொழிகள் 31:​31-க்கு அறிவொளியூட்டும் ஓர் அடிக்குறிப்பை தருகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “எபிரெய வாக்கியத்தின் சில பதிப்புகளில் சேத் (Chehth), ஸாயின் (Zaʹyin), கோஃப் (Qohph [חזק]) என்ற ட்ரைகிராமட்டன் அல்லது மூன்று எழுத்துக்கள் உள்ளன. இது, வேதபாரகர்களால் செய்யப்பட்ட நகல் எடுக்கும் வேலை நிறைவுற்றது என்பதை காட்டுவதற்கு எசேக்கியா ராஜா போட்ட கையொப்பம் என கருதப்படுகிறது.”

6எபிரெய பைபிள்களில் இப்புத்தகத்தின் ஆரம்ப வார்த்தையைக் கொண்டு முதலில் மிஷ்லே (mish·lehʹ) என இப்புத்தகம் அழைக்கப்பட்டது, இதன் அர்த்தம் “நீதிமொழிகள்” என்பதாகும். மிஷ்லே என்பது மாஷால் (ma·shalʹ) என்ற எபிரெய பெயர்ச்சொல்லின் பன்மை. “போல” அல்லது “ஒப்பான” என அர்த்தம் தரும் ஒரு மூல வார்த்தையிலிருந்து இந்தப் பெயர்ச்சொல் வந்ததாக பொதுவாய் கருதப்படுகிறது. இந்தப் பதங்கள் இப்புத்தகத்தின் பொருளடக்கத்தை நன்றாக விவரிக்கின்றன. ஏனெனில் நீதிமொழிகள் கருத்துச் செறிவுமிக்க பழமொழிகளாகும்; அவை பெரும்பாலும் உவமைகளை அல்லது ஒப்புமைகளை பயன்படுத்துகின்றன; அவை செவிகொடுத்துக் கேட்போரை சிந்திக்க வைப்பதற்கு வடிவமைக்கப்பட்டவை. நீதிமொழிகள் சுருக்கமாக இருப்பதால், அவற்றை எளிதில் புரிந்துகொள்ளவும் முடிகிறது; ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது; அதோடு, இவற்றை கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும் நினைவில் வைப்பதும் மிக எளிது. இதன் கருத்து ஆழமாக பதிந்துவிடுகிறது.

7இந்தப் புத்தகத்தின் மொழிநடையும் அதிக ஆர்வத்தை தூண்டுகிறது. இது எபிரெய கவிதை நடையில் உள்ளது. இப்புத்தகத்தின் பெரும்பாகம் ஒப்புமையான கவிதை நடையில் (parallel poetry) அமைந்துள்ளது. இது வாக்கியங்களின் அல்லது வசனங்களின் கடைசி வரிகளை கவிதை நடையிலோ எதுகை மோனையிலோ கொடுப்பதில்லை. ஒப்புமையான கருத்துக்களை அல்லது எண்ணங்களை அடுக்கு மொழியில் கொடுக்கின்றன. கருத்தாழமிக்க இக்கவிதை நடையில் அதன் அழகும் போதிக்கும் வலிமையும் இருக்கிறது. அந்தக் கருத்துக்கள் ஒரே பொருளுடையவையாக அல்லது எதிரிடையான பொருளுடையவையாக இருக்கலாம். ஆனால் அக்கருத்தை விளக்குவதற்கும், பொருளை விரிவாக எடுத்துரைப்பதற்கும், அதன் அர்த்தத்தை நன்கு தெளிவுபடுத்துவதற்கும் ஒப்புமை உதவுகிறது. ஒரே பொருளுடைய ஒப்புமைகளுக்கான உதாரணங்கள் நீதிமொழிகள் 11:25; 16:18; 18:​15 ஆகியவற்றில் காணப்படுகின்றன. எதிரிடையான பொருளுடைய ஏராளமான ஒப்புமைகளுக்கான உதாரணங்கள் நீதிமொழிகள் 10:​7, 30; 12:25; 13:25; 15:​8 ஆகியவற்றில் காணப்படுகின்றன. மற்றொரு வகை எழுத்துநடை அப்புத்தகத்தின் கடைசியில் காணப்படுகிறது. (நீதி. 31:​10-31) அந்த 22 வசனங்களும் எபிரெய எழுத்துக்களின் அகர வரிசையில் (கரந்துரை வரிகள் [acrostic style]) அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, அவற்றின் ஒவ்வொரு வசனமும் எபிரெய மொழியின் 22 எழுத்துக்களில் அடுத்தடுத்த எழுத்தோடு தொடங்குகிறது. இந்த நடை பல சங்கீதத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எழுத்து நடையின் அழகிற்கு இணையாக பூர்வகால எழுத்துக்கள் எதுவும் இல்லை.

8நடத்தை பற்றிய விதிமுறைகளை குறிப்பிடுகையில் பூர்வ கிறிஸ்தவர்கள் இப்புத்தகத்தைப் பரவலாக பயன்படுத்தினர். இதிலிருந்து நீதிமொழிகளின் நம்பகத்தன்மையை தெரிந்துகொள்ளலாம். நீதிமொழிகளை யாக்கோபு நன்கு அறிந்திருந்தார் என தெரிகிறது. கிறிஸ்தவ நடத்தை சம்பந்தமாக அவர் கொடுத்த சிறந்த அறிவுரையில் இதன் அடிப்படை நியமங்களைப் பயன்படுத்தினார். (நீதிமொழிகள் 14:29; 17:​27-ஐ யாக்கோபு 1:19, 20 உடனும்; நீதிமொழிகள் 3:​34-ஐ யாக்கோபு 4:6 உடனும்; நீதிமொழிகள் 27:​1-ஐ யாக்கோபு 4:​13, 14 உடனும் ஒப்பிடுக.) நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட நேரடியான மேற்கோள்களும் பின்வரும் பகுதிகளில் காணப்படுகின்றன: ரோமர் 12:20நீதிமொழிகள் 25:​21, 22; எபிரெயர் 12:​5, 6நீதிமொழிகள் 3:​11, 12; 2 பேதுரு 2:22நீதிமொழிகள் 26:11.

9நீதிமொழிகள் புத்தகம் பைபிளின் மீதிபாகத்தோடு இசைந்திருக்கிறது. ஆகவே இது ‘முழு வேதாகமத்தின்’ ஒரு பாகம் என்பதை நிரூபிக்கிறது. மோசேயின் நியாயப்பிரமாணம், இயேசுவின் போதனை, அவருடைய சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்கள் ஆகியவை, நீதிமொழிகளில் உள்ள கருத்துக்களோடு மிகவும் அருமையாக இசைந்திருக்கின்றன. (நீதிமொழிகள் 10:161 கொரிந்தியர் 15:58 மற்றும் கலாத்தியர் 6:​8, 9; நீதிமொழிகள் 12:25மத்தேயு 6:25; நீதிமொழிகள் 20:20யாத்திராகமம் 20:12 மற்றும் மத்தேயு 15:14 ஆகியவற்றை காண்க.) மனிதனுக்காக பூமியை ஆயத்தம் செய்வது போன்ற விஷயங்களை குறிப்பிடும்போதும் பைபிளின் மற்ற எழுத்தாளர்களோடு ஒருமித்த சிந்தை இருக்கிறது.​—நீதி. 3:​19, 20; ஆதி. 1:​6, 7; யோபு 38:​4-11; சங். 104:​5-9.

10விஞ்ஞானப்பூர்வ விஷயங்களில்​—அது ரசாயனம், மருத்துவம், அல்லது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நீதிமொழியாக இருந்தாலும்​—திருத்தமாக இருப்பது இப்புத்தகம் தேவாவியால் ஏவப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. நீதிமொழிகள் 25:20 (NW) அமிலம்-காரப்பொருள் ஆகியவற்றின் விளைவுகளை குறிப்பிடுகிறது. சிந்திக்கும் திறமையை மதுபானம் மந்தமாக்குகிறது என்ற நவீன அறிவியல் கண்டுபிடிப்போடு நீதிமொழிகள் 31:4, 5 ஒத்திருக்கிறது. தேன் உடல்நலத்துக்கு ஏற்றது என்பதை பல மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இது, “என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது” என்ற நீதிமொழியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. (நீதி. 24:13) மனதுக்கும் உடலுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றிய நவீன கருத்துக்கள் (psychosomatics) நீதிமொழிகள் புத்தகத்துக்குப் புதியவை அல்ல. “மனமகிழ்ச்சியே நல்ல மருந்தாம்.”​—17:​22, தி.மொ.; 15:17.

11மனிதருடைய ஒவ்வொரு தேவையையும் சூழ்நிலைமையையும் நீதிமொழிகள் புத்தகம் முழுமையாக குறிப்பிடுகிறது. எனவேதான் ஒரு நிபுணர் பின்வருமாறு கூறினார்: “ஒவ்வொரு மனித உறவுக்கும் பொருத்தமான போதனைகள் இதில் இருக்கின்றன. சரியான மனப்பான்மைகள் அனைத்தையும் போற்றுகிறது, அதேசமயத்தில் தவறான மனப்பான்மைகள் அனைத்தையும் கண்டிக்கிறது. எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதனுடைய மனசாட்சி தெய்வீகத்தோடு உடனடியாக சம்பந்தப்படுத்தப்படுகிறது, . . . தன்னை உண்டாக்கியவரும் நீதிபதியுமான தேவனுக்கு முன்னிலையில் இருப்பதுபோல மனிதன் நடக்கிறான் . . . மனித இயல்பின் ஒவ்வொரு அம்சமும் இந்தப் பழமையான புத்தகத்தில் காணப்படுகிறது; மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டபோதிலும், இப்பொழுதுதான் எழுதப்பட்டதைப்போல காலத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.”​—ஸ்மித்தின் பைபிள் அகராதி (ஆங்கிலம்), 1890, தொ. III, பக்கம் 2616.

நீதிமொழிகளின் பொருளடக்கம்

12முதல் பகுதி (1:​1–9:18). இது, மகனுக்கு தகப்பன் சொல்வது போன்ற சுருக்கமான போதனைகள் அடங்கிய கோர்வையான செய்யுளாகும். இருதயத்தை அல்லது மனப்போக்கை வழிநடத்துவதற்கும் ஆசையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஞானம் தேவைப்படுவதை விவரிக்கிறது. ஞானத்தின் மதிப்பையும் அதன் ஆசீர்வாதங்களாகிய மகிழ்ச்சி, இன்பம், சமாதானம், ஜீவன் ஆகியவற்றையும் கற்பிக்கிறது. (1:33; 3:​13-18; 8:​32-35) இதை ஞானமில்லாமையோடும் அதன் விளைவுகளான துன்பம், முடிவில் மரணம் ஆகியவற்றோடும் வேறுபடுத்திக் காட்டுகிறது. (1:​28-32; 7:​24-27; 8:36) வாழ்க்கையில் நிகழும் எல்லையில்லா சூழ்நிலைகளையும் சாத்தியங்களையும் சிந்தித்து, மனித நடத்தையையும் அந்த நடத்தையின் தற்போதைய மற்றும் எதிர்கால விளைவுகளையும் பற்றிய அடிப்படை பாடத்தை தருகிறது. நீதிமொழிகள் 1:​7-ல் (NW) உள்ள வார்த்தைகள் அப்புத்தகம் முழுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன: “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.” எல்லாவற்றிலும் யெகோவாவை மனதில் வைத்திருக்கிறோம் என்பதை எல்லா செயல்களிலும் காட்ட வேண்டும். கடவுளுடைய சட்டங்களை மறவாதிருக்கவும், அவருடைய கட்டளைகளை விட்டுவிலகாமலும் அவற்றை புறக்கணியாமலும் இருக்க திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறது.

13இதன் முதல் பகுதியில் காணப்படும் முக்கிய அம்சங்கள் நடைமுறை ஞானம், அறிவு, யெகோவாவுக்குப் பயப்படும் பயம், சிட்சை, தெளிந்துணர்வு ஆகியவையாகும். கெட்ட சகவாசம், யெகோவாவின் சிட்சையை ஏற்க மறுத்தல், அந்நிய பெண்களுடன் தகாத உறவுகள் ஆகியவற்றிற்கு எதிராக எச்சரிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. (1:​10-19; 3:​11, 12; 5:​3-14; 7:​1-27) ஞானம் பொது இடங்களில் இருப்பதால் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகவும் இருமுறை விவரிக்கப்படுகிறது. (1:​20, 21; 8:​1-11) ஞானம் ஒரு நபராக உருவகப்படுத்தப்படுகிறது. அனுபவமில்லாதவர்களை கவர்ந்திழுக்கிறது. பூமியின் படைப்பை பற்றிய சில விளக்கங்களையும் தருகிறது. (1:​22-33; 8:​4-36) எப்பேர்ப்பட்ட அற்புதகரமான புத்தகம் இது! “யெகோவாவுக்குப் பயப்படுவதே அறிவின் ஆரம்பம்” என்ற அதன் ஆரம்ப பொருளில் இப்பகுதி முடிகிறது. (9:​10, NW) யெகோவாவின் நீதியை கடைப்பிடிப்பதும் நம்முடைய வழிகளிலெல்லாம் அவரை ஏற்றுக்கொள்வதுமே வாழ்க்கை முறை. அது அநேக பொல்லாத விஷயங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் என விவாதிக்கிறது.

14இரண்டாவது பகுதி (10:​1–24:34). வாழ்க்கையின் சிக்கலான நிலைமைகளை சமாளிப்பதற்கு உதவும் பல்வேறுபட்ட சிறந்த நியமங்களை இப்பகுதியில் நாம் காண்கிறோம். அவற்றை சரியாக பொருத்தி பயன்படுத்துவது எப்படி என நமக்கு கற்பிப்பதன் மூலம், அதிக மகிழ்ச்சியையும் இன்பமான வாழ்வையும் முன்னேற்றுவிப்பதே இதன் இலக்கு. இணையான எதிரிடைகள் இந்தப் போதகங்களை நம்முடைய மனதில் ஆழப் பதியச் செய்கின்றன. 10, 11, 12-ம் அதிகாரங்களில் மாத்திரமே சிந்திக்கப்படுகிற விஷயங்களுடைய பட்டியலின் ஒரு பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது:

அன்புக்கு எதிராக பகை

ஞானத்துக்கு எதிராக மூடத்தனம்

நேர்மைக்கு எதிராக வஞ்சனை

உண்மைத்தன்மைக்கு எதிராக பழிதூற்றுதல்

சத்தியத்திற்கு எதிராக பொய்

தாராளகுணத்துக்கு எதிராக கஞ்சத்தனம்

சுறுசுறுப்புக்கு எதிராக சோம்பேறித்தனம்

உத்தம வழிக்கு எதிராக தவறான வழி

நல்ல ஆலோசனைக்கு எதிராக பிரயோஜனமற்ற வழிநடத்துதல்

திறமையான மனைவிக்கு எதிராக மோசமான மனைவி

நீதிக்கு எதிராக அக்கிரமம்

பணிவுக்கு எதிராக அகந்தை

அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய இந்தப் பட்டியலை கவனிக்கும்போது, நீதிமொழிகளின் புத்தகம் உண்மையில் நடைமுறைக்கு ஏற்ற ஒரு புத்தகமென நம்மை நிச்சயமாகவே நம்ப வைக்கும்!

15இந்தப் பகுதியின் மீதிபாகம் (13:​1–24:34), நாம் உட்பார்வையையும் பகுத்துணர்வையும் பெற்றிருப்பதற்காக யெகோவாவின் தராதரங்களைப் பற்றிய நினைப்பூட்டுதல்களை தருகிறது. இப்பகுதி கலந்தாராயும் மனித சூழ்நிலைமைகளை பட்டியலிட்டால், இது எப்பேர்ப்பட்ட அறிவுக் களஞ்சியம் என்பது புலனாகும். பாசாங்குத்தனம், துணிகரம், கொடுத்த வாக்கை காப்பாற்றுதல், விவேகம், கூட்டுறவு, பிள்ளையைத் திருத்துவதும் பயிற்றுவிப்பதும், சரியானதைப் பற்றிய மனிதனுடைய கருத்து, கோபப்படுவதில் தாமதமாக இருத்தல், இக்கட்டில் இருப்பவர்களுக்கு தயவுகாட்டுதல், மோசடி, ஜெபம், ஏளனம் செய்தல், வாழ்க்கை தேவைகள் சம்பந்தமாக திருப்தியோடு இருத்தல், கர்வம், குறுக்கு வழியில் லாபம், லஞ்ச ஊழல், சண்டை சச்சரவு, தன்னடக்கம், தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மெளனம், பட்சபாதம், சண்டையிடுதல், மனத்தாழ்மை, ஆடம்பர வாழ்க்கை, தகப்பனையும் தாயையும் கவனித்தல், போதையூட்டும் மதுபானங்கள், வஞ்சித்தல், மனைவியின் பண்புகள், அன்பளிப்புகள், கடன் வாங்குதல், கடன்கொடுத்தல், தயவு, நம்பகத்தன்மை, சொத்து எல்லைக்கோடுகள், குடும்பத்தைக் கட்டியெழுப்புதல், பொறாமை, பழிக்குப்பழி, மாயை, சாந்தமான பதில், தியானம், உண்மையான நட்பு ஆகிய பைபிளின் அறிவுரையால் நிரம்பிவழியும் இப்புத்தகம் அதிக பயனுள்ளது. அன்றாட விவகாரங்களின் சம்பந்தமாக நல்ல வழிநடத்துதலை ஏராளமாக தருகிறது. இவற்றில் பெரும்பாலானவை முக்கியமில்லாதது போல சிலருக்கு தோன்றலாம். ஆனால், சிறியதாக தோன்றும் காரியங்களிலுங்கூட நம்முடைய தேவைகளை பைபிள் கவனியாமல் விடுவதில்லை என்பதை நாம் இதில் கவனிக்கிறோம். இந்த விஷயத்தில், நீதிமொழிகள் புத்தகம் விலைமதியா மதிப்புடையது.

16மூன்றாவது பகுதி (25:​1–29:27). கனம், பொறுமை, எதிரிகள், மதிகேடரை கையாளுதல், கேளிக்கைகளில் மகிழ்தல், முகஸ்துதி, பொறாமை, நண்பனால் செய்யப்படும் தீமை, பசி, பழிதூற்றுதல், பொறுப்பை கவனித்தல், வட்டி, பாவ அறிக்கை, பொல்லாத ஆட்சியின் விளைவுகள், இறுமாப்பு, நீதியுள்ள ஆட்சியின் ஆசீர்வாதங்கள், சிறுபிள்ளையின் குற்றச்செயல், வேலையாட்களை நடத்தும் முறை, உட்பார்வை, தரிசனம் ஆகியவற்றின் சம்பந்தமாக கட்டியெழுப்பும் அறிவுரைகள் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

17நான்காவது பகுதி (30:​1-33). இது ஆகூர் கூறியதாக சொல்லப்படும் ‘முக்கியத்துவம் வாய்ந்த செய்தி.’ தனது முக்கியத்துவமற்ற நிலையை மனத்தாழ்மையுடன் இவர் ஒப்புக்கொண்ட பிறகு, பூமியையும் அதிலுள்ளவற்றையும் படைப்பதற்கு மனிதனின் திறமையின்மையை குறிப்பிடுகிறார். கடவுளுடைய வார்த்தை புடமிடப்பட்டது, கேடகம் என அறிவிக்கிறார். பொய்யை தன்னிடமிருந்து வெகுதூரம் அப்புறப்படுத்தும்படி கேட்கிறார். செல்வத்தையோ வறுமையையோ தனக்கு கொடுக்க வேண்டாம் என அவர் கேட்கிறார். தன்னை பெற்றெடுத்தவர்களையே சபிக்கும் தூய்மையற்ற, மேட்டிமையான, பேராசை பிடித்த ஒரு சந்ததியை விவரிக்கிறார். “போதும்” என்று சொல்லாத நான்கு காரியங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன, புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாயுள்ள நான்கு காரியங்களும் குறிப்பிடப்படுகின்றன. (30:​15, 16) தான் குற்றமற்றவளென ஒரு விபச்சாரி வெட்கமில்லாமல் கூறிக்கொள்வதும் இங்கு சொல்லப்படுகிறது. பின்பு இந்தப் பூமி சகிக்க முடியாத நான்கு காரியங்களும், இயல்புணர்ச்சியால் ஞானமாக செயல்படும் நான்கு சிறு உயிரினங்களும், தங்கள் நடையில் சிறந்து விளங்கும் நான்கும் விவரிக்கப்படுகின்றன. “கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்” என்பதை பொருத்தமான உவமைகளின் வாயிலாக இந்த எழுத்தாளர் எச்சரிக்கிறார்.​—30:33.

18ஐந்தாவது பகுதி (31:​1-31). இங்கே, அரசனாகிய லேமுவேலின் மற்றொரு ‘முக்கியத்துவம் வாய்ந்த செய்தி’ உள்ளது. இது இரண்டு வகையான எழுத்து நடைகளில் உள்ளது. முதல் பாகம், ஒரு கெட்ட பெண்ணால் வரக்கூடிய படுசீரழிவான நிலையை விவரித்து, போதையூட்டும் மதுபானங்கள் எவ்வாறு நியாயத்தைப் புரட்டும் என்பதை எச்சரிக்கிறது. மேலும் நீதியாக தீர்ப்பளிக்கும்படி கூறுகிறது. பிற்பகுதியிலுள்ள கரந்துரை வரிகள் திறமை வாய்ந்த ஒரு மனைவியின் சிறப்பை விவரிப்பதற்கு முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. அவளுடைய பெரும் மதிப்பை ஓரளவு விவரமாக சிந்தித்து, அவள் தன் துணைவருக்கு நம்பிக்கையானவளாகவும் நன்மையளிப்பவளாயும் இருப்பதை குறிப்பிடுகிறது. சுறுசுறுப்பாய் உழைப்பவளாக, விடியற்காலமே எழும்புபவளாக, பொருட்களை கவனமாக வாங்குபவளாக, ஏழைகளிடம் தயவுள்ளவளாக, எதிர்கால விளைவுகளை யோசித்து செயல்படுபவளாக, ஞானமாக பேசுபவளாக இருப்பது அவளுடைய பண்புகளில் அடங்கியுள்ளன. மேலும் அவள் விழிப்புள்ளவளாக இருக்கிறாள், அவளுடைய பிள்ளைகள் அவளை மதிக்கின்றனர், அவளுடைய கணவர் அவளைப் புகழுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் யெகோவாவுக்குப் பயப்படுகிறாள்.

ஏன் பயனுள்ளது

19நீதிமொழிகள் புத்தகத்தின் பயனுள்ள நோக்கம் அதன் தொடக்க வசனங்களில் கூறப்பட்டுள்ளது: “ஞானத்தையும் சிட்சையையும் ஒருவன் அறிந்துகொள்வதற்கும், பகுத்துணர்வின் கூற்றுகளைத் தெளிந்துணர்வதற்கும், உட்பார்வையை அளிக்கும் சிட்சையையும், நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் பெறுவதற்கும், அனுபவமில்லாதோருக்கு விவேகத்தையும், இளைஞன் ஒருவனுக்கு அறிவையும் சிந்திக்கும் திறமையையும் அளிக்கவுமே.” (1:​2-4, NW) இதற்கு இசைவாக, இப்புத்தகம் அறிவையும் ஞானத்தையும் பகுத்துணர்வையும் சிறப்பித்துக் காட்டுகிறது. இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு முறையில் பயனுள்ளது.

20 (1) அறிவு மனிதனுக்கு மிகவும் தேவை, ஏனெனில் அறியாமைக்குள் வீழ்வது மனிதனுக்கு நல்லதல்ல. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் இல்லாமல் ஒருவன் திருத்தமான அறிவை ஒருபோதும் அடைய முடியாது. ஏனெனில் அறிவு அந்தப் பயத்தோடுதான் தொடங்குகிறது. மதிப்பு வாய்ந்த பொன்னை பார்க்கிலும் அறிவையே மேம்பட்டதாக விரும்ப வேண்டும். ஏன்? அறிவின் மூலமே நீதிமான்கள் காப்பாற்றப்படுகிறார்கள்; பாவத்துக்குள் விரைந்து செல்வதிலிருந்து அது நம்மை தடுக்கிறது. அதற்காக தேடுவதும் அதை எடுத்துக்கொள்வதும் எவ்வளவு அவசியம்! அது விலைமதிப்புள்ளது. ஆகவே “உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.”​—22:17; 1:7; 8:10; 11:9; 18:15; 19:2; 20:15.

21 (2யெகோவாவுக்குத் துதியுண்டாக அறிவைச் சரியான முறையில் பயன்படுத்தும் திறமையே ஞானம், இதுவே “பிரதானம்.” இதை தேடிப் பெறுங்கள். யெகோவாவே இதன் ஊற்றுமூலர். ஜீவனளிக்கும் ஞானம் யெகோவா தேவனை அறிவதிலும் அவருக்குப் பயப்படுவதிலுமே ஆரம்பிக்கிறது​—அதுவே ஞானத்தின் பெரும் இரகசியம். ஆகவே, மனிதனுக்கு அல்ல, கடவுளுக்கே பயப்படுங்கள். ஒரு நபராக உருவகப்படுத்தி பேசப்படுகிற ஞானம், எல்லாரும் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று துரிதப்படுத்துகிறது. தெருக்களில் ஞானம் உரத்த சத்தமிடுகிறது. அனுபவமில்லாதவர்களும் நல்ல உள்ளெண்ணம் இல்லாதவர்களும், தங்கள் போக்கை விட்டுத் திரும்பி ஞானத்தின் அப்பத்தை போஷிக்கும்படி யெகோவா அழைக்கிறார். அப்பொழுது, அவர்கள் யெகோவாவுக்குப் பயப்படுவதால், செல்வத்தில் குறைவுபட்டாலும் மகிழ்ச்சியில் நிறைவாக இருப்பார்கள். ஞானத்தின் ஆசீர்வாதங்கள் மிகுதியானவை; அதன் விளைவுகளும் நன்மை அளிக்கின்றன. ஞானமும் அறிவும் நமது சிந்திக்கும் திறமைக்குத் தேவைப்படும் அடிப்படை அம்சங்கள், அவை நம்மை பாதுகாக்கும். ஞானமும் தேனைப் போல பயனுள்ளதாகவும் இனிமையானதாகவும் இருக்கிறது. அது பொன்னை பார்க்கிலும் அதிக மதிப்புள்ளது; அது ஜீவ விருட்சம். ஞானமில்லாமல் மக்கள் அழிகின்றனர், ஏனெனில் ஞானம் உயிரைப் பாதுகாக்கிறது; அது ஜீவனை அடையாளப்படுத்துகிறது.​—4:7; 1:​7, 20-23; 2:​6, 7, 10, 11; 3:​13-18, 21-26; 8:​1-36; 9:​1-6, 10; 10:8; 13:14; 15:​16, 24; 16:​16, 20-24; 24:​13, 14.

22 (3அறிவும் ஞானமும் மட்டுமல்லாமல் பகுத்துணர்வும் இன்றியமையாதது; ஆகவே, ‘நீ சம்பாதிக்கும் எல்லாவற்றோடுங்கூட, பகுத்துணர்வையும் சம்பாதித்துக்கொள்.’ பகுத்துணர்வு என்பது ஒரு காரியத்தை அதோடு சம்பந்தப்பட்ட விஷயங்களோடு சேர்த்து காண்பதாகும்; இது பகுத்துணர்வை குறிப்பிடுகிறது. தன் சுயபுத்தியின் மேல் சாயாமல் எப்பொழுதும் கடவுளை மனதில் வைத்து செயல்படுவதை இது குறிக்கிறது. யெகோவாவுக்கு எதிராக ஒருவன் செயல்பட்டால் பகுத்துணர்வை அல்லது தெளிந்துணர்வை பெறவே முடியாது. பகுத்துணர்வை நாம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு, புதைந்துள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடுவதைப் போல் ஊக்கமாய் தேட வேண்டும். பகுத்துணர்வதற்கு நமக்கு அறிவு தேவை. பகுத்துணரும் ஒருவன் அறிவை பெறுவதற்காக செய்யும் முயற்சி பலன்தருகிறது, ஞானம் அவனுக்கு முன்பாக உள்ளது. இந்த உலகத்தின் எண்ணற்ற படுகுழிகளிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகிறான். இருளில் தங்களோடு நடக்கும்படி ஒருவனை கண்ணியில் அகப்படுத்த முயற்சிக்கும் எண்ணற்ற கெட்டவர்களிடமிருந்து அவன் பாதுகாக்கப்படுகிறான். ஜீவனளிக்கும் அறிவுக்கும், ஞானத்துக்கும், பகுத்துணர்வுக்கும் மூலகாரணராகிய யெகோவா தேவனுக்கு நன்றி!​—4:7, NW; 2:​3, 4; 3:5; 15:14; 17:24; 19:8; 21:30.

23நீதிமொழிகளின் பயன்தரும் நோக்கத்துக்கு இசைவாக, இந்தப் புத்தகம் ஞானமுள்ள அறிவுரையை மிகுதியாக கொடுக்கிறது; பகுத்துணர்வை சம்பாதித்து இருதயத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவாவியால் ஏவப்பட்ட அறிவுரை நமக்கு உதவுகிறது. ஏனெனில் “அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (4:23) பின்வருபவை இந்தப் புத்தகம் முழுவதிலும் அறிவுறுத்தப்படும் ஞானமான சில அறிவுரைகள்.

24 பொல்லாதவர்களுக்கும் நீதிமான்களுக்கும் உள்ள வித்தியாசம்: பொல்லாதவன் தன் கோணலான வழிகளில் சிக்கிக்கொள்வான், கோபத்தின் நாளில் அவனுடைய பொக்கிஷங்கள் அவனை காப்பாற்றாது. நீதிமான் ஜீவ பாதையில் நடக்கிறான், யெகோவா அவனுக்குப் பலனளிப்பார்.​—2:​21, 22; 10:​6, 7, 9, 24, 25, 27-32; 11:​3-7, 18-21, 23, 30, 31; 12:​2, 3, 7, 28; 13:​6, 9; 14:​2, 11; 15:​3, 8, 29; 29:16.

25 சுத்தமான ஒழுக்க நெறிகளுக்கான தேவை: ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக சாலொமோன் தொடர்ந்து எச்சரிக்கிறார். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் வாதையையும் அதோடு அவமானத்தையும் பெறுவர், அவர்களுடைய நிந்தை அழியாது. இளைஞனுக்குத் “திருட்டுத் தண்ணீர்” தித்திப்பாக தோன்றலாம், ஆனால் அந்த விபச்சாரி மரணத்துக்கு இறங்குகிறாள், தனக்கு பலியான அனுபவமற்றவர்களையும் அங்கே அழைத்துச் செல்கிறாள். ஒழுக்கக்கேட்டின் ஆழமான படுகுழிக்குள் வீழ்வோரை யெகோவா கண்டனம் செய்கிறார்.​—2:​16-19; 5:​1-23; 6:​20-35; 7:​4-27; 9:​13-18; 22:14; 23:​27, 28.

26 தன்னடக்கத்தின் தேவை: குடிபோதையும் பெருந்திண்டியும் கண்டனம் செய்யப்படுகின்றன. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புவோர் யாவரும், உண்பதிலும் குடிப்பதிலும் மிதமாயிருக்க வேண்டும். (20:1; 21:17; 23:​21, 29-35; 25:16; 31:​4, 5) கோபப்படுவதில் தாமதமாக இருப்போர் தெளிந்துணர்வு மிகுந்தவர்கள், ஒரு பட்டணத்தைக் கைப்பற்றும் பலவானை பார்க்கிலும் மேலானவர்கள். (14:​17, 29; 15:​1, 18; 16:32; 19:11; 25:​15, 28; 29:​11, 22) பொறாமையைத் தவிர்ப்பதற்கு தன்னடக்கம் தேவை, பொறாமை எலும்புருக்கி.​—14:30; 24:1; 27:4; 28:22.

27 ஞானமாகவும் ஞானமற்ற விதத்திலும் பேசுதல்: தாறுமாறான பேச்சு, பழிதூற்றுபவர், பொய்ச்சாட்சி சொல்பவர், வஞ்சகம் பேசுபவர் யாவரும் வெளிப்படுத்தப்படுவர், ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் யெகோவாவுக்கு வெறுப்பானவர்கள். (4:24; 6:​16-19; 11:13; 12:​17, 22; 14:​5, 25; 17:4; 19:​5, 9; 20:17; 24:28; 25:18) ஒருவனுடைய வாய் நல்ல காரியங்களைப் பேசினால், அது ஜீவனின் ஊற்று; ஆனால் மதிகேடனின் வாய் அவனுக்கு அழிவை விரைவுபடுத்துகிறது. “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.” (18:21) பழிதூற்றுவது, வஞ்சகப் பேச்சு, முகஸ்துதி, மற்றும் பதற்றமான வார்த்தைகள் கண்டனம் செய்யப்படுகின்றன. சத்தியத்தைப் பேசுவதும் கடவுளைக் கனப்படுத்துவதுமே ஞானத்தின் வழி.​—10:​11, 13, 14; 12:​13, 14, 18, 19; 13:3; 14:3; 16:​27-30; 17:​27, 28; 18:​6-8, 20; 26:28; 29:20; 31:26.

28 பெருமையின் மடமையும் மனத்தாழ்மையின் தேவையும்: பெருமையானவன், தான் உண்மையில் இராத உயர்ந்த நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்கிறான். இதன் காரணமாக அவன் அழிந்துபோவான். இருதயத்தில் பெருமை கொண்டவனை யெகோவா வெறுக்கிறார். ஆனால் மனத்தாழ்மை உள்ளவர்களுக்கோ அவர் ஞானத்தையும், மகிமையையும், செல்வங்களையும், ஜீவனையும் அருளுகிறார்.​—3:7; 11:2; 12:9; 13:10; 15:33; 16:​5, 18, 19; 18:12; 21:4; 22:4; 26:12; 28:​25, 26; 29:23.

29 சோம்பலாக அல்ல, சுறுசுறுப்பாக இருத்தல்: சோம்பேறியைப் பற்றிய விவரிப்புகள் ஏராளம் உள்ளன. ஞானமடைவதற்கு பாடம் கற்றுக்கொள்ள அவன் எறும்பிடம் செல்ல வேண்டும். ஆனால் சுறுசுறுப்பாக இருக்கிறவனோ செழிப்பான்!​—1:32; 6:6-11; 10:​4, 5, 26; 12:24; 13:4; 15:19; 18:9; 19:​15, 24; 20:​4, 13; 21:​25, 26; 22:13; 24:​30-34; 26:​13-16; 31:​24, 25.

30 சரியான நட்புறவு: யெகோவாவுக்குப் பயப்படாதவர்களோடும், பொல்லாதவர்களோடும் அல்லது மூடரோடும், கோபக்காரரோடும், புறங்கூறுவோரோடும், பெருந்திண்டிக்காரரோடும் கூட்டுறவு கொள்வது மடமை. மாறாக, ஞானமுள்ளோரோடு கூட்டுறவு கொள்ளுங்கள், நீங்கள் இன்னும் ஞானமடைவீர்கள்.​—1:​10-19; 4:​14-19; 13:20; 14:7; 20:19; 22:​24, 25; 28:7.

31 கண்டிப்புக்கும் திருத்துதலுக்குமான தேவை: ‘யெகோவா தாம் நேசிப்பவனைக் கண்டிக்கிறார்.’ இந்தச் சிட்சைக்குச் செவிகொடுப்போர் மகிமைக்கும் ஜீவனுக்குமான வழியில் இருக்கின்றனர். கண்டிப்பை வெறுக்கிறவன் அவமானப்படுவான்.​—3:​11, 12, தி.மொ.; 10:17; 12:1; 13:18; 15:​5, 31-33; 17:10; 19:25; 29:1.

32 நல்ல மனைவியாக இருப்பதற்கு அறிவுரை: ஒரு மனைவி சண்டைக்காரியாகவும் மோசமானவளாகவும் இருக்கக்கூடாது என்று நீதிமொழிகள் புத்தகம் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறது. விவேகமும் திறமையும் கடவுள் பயமுமுள்ள மனைவி அன்புள்ள தயவுக்குரிய சட்டத்தைத் தன் நாவிலே கொண்டிருக்கிறாள். அத்தகைய மனைவியைக் கண்டடைகிறவன் யெகோவாவினிடமிருந்து நற்பிரியத்தை அடைகிறான்.​—12:4; 18:22; 19:​13, 14; 21:​9, 19; 27:​15, 16; 31:​10-31.

33 பிள்ளைகளை வளர்ப்பது: கடவுளுடைய கட்டளைகளை பிள்ளைகள் ‘மறவாமல்’ இருப்பதற்கு அவற்றை தவறாமல் கற்பியுங்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே யெகோவாவின் போதனையில் அவர்களை வளருங்கள். பிரம்பு தேவைப்படுகையில் அதை பயன்படுத்துங்கள். அன்பின் வெளிக்காட்டாக பயன்படுத்தப்படும் பிரம்பும் கண்டிப்பும் சிறுவனுக்கு ஞானத்தை அளிக்கின்றன. கடவுளுடைய வழியில் பிள்ளைகளை வளர்ப்போர், தகப்பனுக்கும் தாய்க்கும் மகிழ்ச்சியையும் மிகுந்த இன்பத்தையும் கொண்டுவரும் ஞானமான பிள்ளைகளை கொண்டிருப்பார்கள்.​—4:​1-9; 13:24; 17:21; 22:​6, 15; 23:​13, 14, 22, 24, 25; 29:​15, 17.

34 மற்றவர்களுக்கு உதவும் பொறுப்பு: நீதிமொழிகளில் இது அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. ஞானமுள்ளவன் மற்றவர்களின் நன்மைக்காக அறிவை பரப்ப வேண்டும். ஏழைகளுக்கு ஆதரவு காட்டுவதில் ஒருவன் தாராளமாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவன் உண்மையில் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான், அவர் அதைத் திரும்பக் கொடுப்பதாக உறுதியளிக்கிறார்.​—11:​24-26; 15:7; 19:17; 24:​11, 12; 28:27.

35 யெகோவாவில் நம்பிக்கை வைத்திருத்தல்: நாம் கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைக்கும்படி அறிவுரை கொடுப்பதன் மூலம் நீதிமொழிகள் பிரச்சினைகளின் மூலகாரணத்திற்கு செல்கிறது. நம்முடைய எல்லா வழிகளிலும் யெகோவாவை நினைத்துக்கொள்ள வேண்டும். ஒருவன் தன் வழியைத் திட்டமிடலாம், ஆனால் யெகோவாவே அவனுடைய நடைகளை வழிநடத்த வேண்டும். யெகோவாவின் பெயர் பலத்தக் கோட்டை, நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பை பெறுகின்றனர். யெகோவாவில் நம்பிக்கை வைத்து வழிநடத்துதலுக்காக அவருடைய வார்த்தையிடம் செல்லுங்கள்.​—3:​1, 5, 6; 16:1-9; 18:10; 20:22; 28:​25, 26; 30:​5, 6.

36கற்பிப்பதிலும் சிட்சிப்பதிலும் நீதிமொழிகளின் புத்தகம் நமக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு பயனுள்ளது! மனித உறவின் எந்தக் கட்டமும் கவனியாமல் விடப்பட்டதாக தெரியவில்லை. ஒருவர் கடவுளை வணங்குபவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளுகிறாரா? (18:1) உயர் பதவியிலுள்ள ஒருவர் ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் கேட்பதற்கு முன் முடிவுக்கு வருகிறாரா? (18:17) ஒருவர் ஆபத்தான முறையில் கேலிசெய்பவரா? (26:​18, 19) பட்சபாதம் காட்டுபவரா? (28:​21, தி.மொ.) கடைக்காரர், வயலில் இருக்கும் விவசாயி, கணவனும் மனைவியும் பிள்ளையும் என எல்லாரும் நல்ல போதனை பெறுகின்றனர். இளைஞரின் பாதையில் மறைந்திருக்கும் பல ஆபத்துகளை தங்களுடைய பிள்ளைகளுக்கு தெரிவிக்க பெற்றோருக்கு உதவியளிக்கப்படுகிறது. ஞானமுள்ளோர் அனுபவம் இல்லாதவர்களுக்குக் கற்பிக்கக்கூடும். நாம் எங்கு வாழ்ந்தாலும் நீதிமொழிகள் நடைமுறைக்கு ஏற்றவையே; இந்தப் புத்தகத்தின் போதனையும் அறிவுரையும் காலத்துக்கு ஏற்றவையே: “நீதிமொழிகளின் புத்தகம் இன்று காலை வந்த செய்தித்தாளைப் பார்க்கிலும் நவீன காலத்திற்கு அதிக பொருத்தமாக இருக்கிறது” என்று வில்லியம் லியான் ஃபெல்ப்ஸ் என்ற அமெரிக்க கல்வியாளர் ஒருசமயம் கூறினார். a நீதிமொழிகளின் புத்தகம் தேவாவியால் ஏவப்பட்டதன் காரணமாகக் காலத்துக்குப் பொருத்தமானதாயும் நடைமுறைக்கு ஏற்றதாயும் கற்பிப்பதற்குப் பயனுள்ளதாயும் இருக்கிறது.

37பெரும்பாலும் சாலொமோனால் பேசப்பட்ட நீதிமொழிகளின் புத்தகம், சீர்திருத்தலுக்குப் பயனுள்ளதாக இருப்பதால் மனிதரை சர்வவல்லமையுள்ள கடவுளிடம் திருப்புகிறது. “சாலொமோனிலும் பெரியவர்” என்று மத்தேயு 12:​42-ல் குறிப்பிடப்பட்ட இயேசு கிறிஸ்துவும் அவ்விதமே செய்தார்.

38இந்த மேம்பட்ட உயர்ஞானமுள்ளவரையே ராஜ்ய வித்தாக யெகோவா தேர்ந்தெடுத்ததற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! இவருடைய சிங்காசனம் “நீதியில் நிலைநாட்டப்படும்,” அவரது ஆட்சியில் சமாதானம் பொங்கும், இவ்வாறு அது அரசன் சாலொமோனுடைய ஆட்சியை காட்டிலும் அதிக மகிமை பொருந்தியதாக இருக்கும். அந்த ராஜ்ய ஆட்சியைக் குறித்தே, ‘அன்புள்ள தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுகிறார்’ என்று சொல்லப்படும். அது நித்தியத்துக்குமாக நீதியுள்ள ஓர் அரசாங்கத்தை மனிதகுலத்துக்குத் தொடங்கி வைக்கும். இதைக் குறித்து, “சிறுமையுற்றோர் வழக்கை நியாயமாய் விசாரிக்கும் ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைக்கும்” என்றும் நீதிமொழிகள் சொல்கிறது. இவ்வாறு, நீதிமொழிகள் புத்தகம் அறிவுக்கும், ஞானத்துக்கும், பகுத்துணர்வுக்கும், அவற்றோடுகூட நித்திய ஜீவனுக்கும் வழிநடத்தும் நம்முடைய பாதைக்கு ஒளி தருகிறது. அதுமட்டுமல்லாமல், அதிமுக்கியமாக, யெகோவாவை உண்மையான ஞானத்துக்கு மூலகாரணராகவும் மகிமைப்படுத்துகிறது. இதை அவர், ராஜ்ய சுந்தரவாளியாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் வழங்குகிறார். கடவுளுடைய ராஜ்யத்தையும் அது இப்பொழுது ஆளுகையில் கடைப்பிடிக்கிற நீதியுள்ள நியமங்களையும் பற்றிய நம்முடைய போற்றுதலை நீதிமொழிகள் புத்தகம் அதிகமாக்குகிறது.​—நீதி. 25:​5, தி.மொ.; 16:12; 20:28; 29:​14, தி.மொ.

[அடிக்குறிப்பு]

a கிறிஸ்தவ விசுவாசத்தின் பொக்கிஷசாலை (ஆங்கிலம்), 1949, ஸ்டூபர், கிளார்க் என்போரால் பதிப்பிக்கப்பட்டது, பக்கம் 48.

[கேள்விகள்]

1. நீதிமொழிகள் புத்தகத்தில் யாருடைய ஞானத்தைக் கண்டடையலாம்?

2. நீதிமொழிகளில் கடவுளுடைய வழிநடத்துதலை அளிப்பதற்கு சாலொமோனின் காலம் ஏன் பொருத்தமாக இருந்தது?

3. நீதிமொழிகள் எவ்வாறு தொகுக்கப்பட்டது?

4. (அ) பொதுவாக நீதிமொழிகள் புத்தகம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது? (ஆ) பெரும்பாலான நீதிமொழிகளை சொன்னது யார்?

5. நீதிமொழிகள் எப்போது எழுதி தொகுக்கப்பட்டது?

6. நீதிமொழி என்றால் என்ன, இப்புத்தகத்தின் எபிரெய பெயர் ஏன் பொருத்தமானது?

7. நீதிமொழிகள் புத்தகத்தின் மொழிநடையில் எதை கவனிக்க வேண்டும்?

8. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் நீதிமொழிகளைப் பயன்படுத்தியது இதன் நம்பகத்தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறது?

9. நீதிமொழிகள் எவ்வாறு பைபிளின் மீதிபாகத்தோடு ஒத்திருக்கிறது?

10, 11. இப்புத்தகம் கடவுளால் ஏவப்பட்டது என்பதை எதுவும் நிரூபிக்கிறது?

12. (அ) நீதிமொழிகளின் முதல் பகுதியிலுள்ள கோர்வையான செய்யுள் என்ன? (ஆ) ஞானத்தையும் மனித நடத்தையையும் பற்றி அது என்ன கற்பிக்கிறது? (இ) எவ்வாறு நீதிமொழிகள் 1:7 அப்புத்தகம் முழுவதற்கும் அடிப்படையாக அமைகிறது?

13. நீதிமொழிகளின் முதல் பகுதியில் காணப்படும் முக்கிய அம்சங்களை குறிப்பிடுங்கள்.

14. என்ன இணையான எதிரிடைகள் நீதிமொழிகளின் நடைமுறையான போதகங்களை சிறப்பானதாக்குகின்றன?

15. நீதிமொழிகளில் கையாளப்படுகிற மனிதனின் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு சில உதாரணங்களை கொடுங்கள்.

16. நீதிமொழிகளின் மூன்றாவது பகுதியில் கட்டியெழுப்பும் என்ன அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது?

17. (அ) என்ன ‘முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை’ ஆகூர் அளிக்கிறார்? (ஆ) நான்கு காரியங்கள் அடங்கிய என்ன வெவ்வேறு தொகுதிகளை அவர் விவரிக்கிறார்?

18. இவர்களைப் பற்றி அரசனாகிய லேமுவேல் என்ன சொல்கிறார்: (அ) கெட்ட பெண் (ஆ) திறமையான மனைவி?

19. நன்மையளிக்கும் நோக்கத்தை எவ்வாறு நீதிமொழிகள் விளக்குகிறது?

20. அறிவைப் பற்றி நீதிமொழிகள் என்ன சொல்கிறது?

21. ஞானத்தைக் குறித்த கடவுளுடைய போதனை என்ன?

22. பகுத்துணர்வில் என்ன பாதுகாப்பைக் கண்டடையலாம்?

23. என்ன வகையான ஞானமுள்ள அறிவுரை அடுத்தபடியாக கலந்தாராயப்படும்?

24. பொல்லாதவர்களையும் நீதிமான்களையும் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

25. ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக நீதிமொழிகள் எவ்வாறு எச்சரிக்கிறது?

26. தன்னடக்கத்தைக் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

27. (அ) ஞானமற்ற பேச்சுகள் யாவை? (ஆ) ஏன் நம் உதடுகளையும் நாவையும் ஞானமாக பயன்படுத்த வேண்டும்?

28. பெருமையால் என்ன தீமை ஏற்படுகிறது, மனத்தாழ்மையால் என்ன நன்மை?

29. சோம்பல் எவ்வாறு கருதப்பட வேண்டும், சுறுசுறுப்பின் மதிப்பு என்ன?

30. சரியான நட்புறவை நீதிமொழிகள் எவ்வாறு அறிவுறுத்துகிறது?

31. கண்டிப்பைக் குறித்த ஞானமான அறிவுரை என்ன?

32. நல்ல மனைவியாக இருப்பதற்கு என்ன சிறந்த புத்திமதி அளிக்கப்பட்டிருக்கிறது?

33. பிள்ளையைப் பயிற்றுவிப்பது சம்பந்தமாக நன்மையளிக்கும் என்ன அறிவுரை அளிக்கப்பட்டிருக்கிறது?

34. மற்றவர்களுக்கு உதவிசெய்வதால் என்ன நன்மை?

35. நம்முடைய பிரச்சினைகளின் மூலகாரணத்திற்கு கவனத்தை செலுத்தி என்ன அறிவுரையை நீதிமொழிகள் கொடுக்கிறது?

36. என்ன நோக்குநிலைகளிலிருந்து நீதிமொழிகளின் புத்தகம் காலத்துக்கும், நடைமுறைக்கும் ஏற்றதாகவும் பயனுள்ளதாயும் இருக்கிறதென விவரிக்கலாம்?

37. பெரிய சாலொமோனின் போதகங்களோடு நீதிமொழிகள் புத்தகம் எவ்வாறு இசைந்திருக்கிறது?

38. கடவுளுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியுள்ள நியமங்களையும் பற்றிய நம்முடைய போற்றுதலை நீதிமொழிகள் எவ்வாறு அதிகமாக்குகிறது?