பைபிள் புத்தக எண் 3—லேவியராகமம்
பைபிள் புத்தக எண் 3—லேவியராகமம்
எழுத்தாளர்: மோசே
எழுதப்பட்ட இடம்: வனாந்தரம்
எழுதி முடிக்கப்பட்டது: பொ.ச.மு. 1512
காலப்பகுதி: 1 மாதம் (பொ.ச.மு. 1512)
பைபிளின் மூன்றாவது புத்தகத்திற்கு மிகவும் பொதுவான பெயர் லேவியராகமம் (ஆங்கிலத்தில் லெவிட்டிக்கஸ்). இது கிரேக்க செப்டுவஜின்ட் பைபிளில் லெயிட்டிக்கான் (Leu·i·ti·konʹ). லத்தீன் வல்கேட்டில் “லெவிட்டிக்கஸ்” (“Leviticus”). லேவியர்களைப் பற்றி இப்புத்தகம் (25:32, 33-ல்) மேலோட்டமாகவே குறிப்பிடுகிறபோதிலும் இது பொருத்தமான பெயர். ஏனெனில் இந்தப் புத்தகத்தில் முக்கியமாக லேவி கோத்திரத்திலிருந்து தெரிந்தெடுத்த லேவிய ஆசாரியத்துவத்தைப் பற்றிய விதிமுறைகளும், ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டங்களும் அடங்கியுள்ளன: “ஆசாரியன் உதடுகள் அறிவைக் காக்க வேண்டும், அவன் வாயினின்று உபதேசம் வரத்தேடுவார்கள்.” (மல். 2:7, தி.மொ.) எபிரெயுவில் இந்தப் புத்தகம் வாய்யிக்ரா (Wai·yiq·raʼʹ) என அதன் முதல் வார்த்தையைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளது, சொல்லர்த்தமாக “அவர் கூப்பிட்டார்” என்பதாகும். பிற்கால யூதர்களால் இந்தப் புத்தகம் ஆசாரியர்களின் நியாயப்பிரமாணம் என்றும் பலிகளின் நியாயப்பிரமாணம் என்றும் அழைக்கப்பட்டது.—லேவி. 1:1, NW அடிக்குறிப்பு.
2லேவியராகமத்தை மோசே எழுதினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “யெகோவா . . . மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே” என்று அதன் முடிவுரை அல்லது பின்னணியுரை கூறுகிறது. (27:34, தி.மொ.) இதைப் போன்ற வாக்கியம் லேவியராகமம் 26:46-ல் காணப்படுகிறது. தொடக்கத்தில் ஐந்தாகம தொகுப்பு (Pentateuch) ஒரே சுருளாக இருந்தது. ஆகவே ஆதியாகமத்தையும் யாத்திராகமத்தையும் மோசே எழுதினார் என்று முன்பு கவனித்த அத்தாட்சி, லேவியராகமத்தையும் அவரே எழுதினார் என்பதை ஆதரிக்கிறது. அதோடு, லேவியராகமம் “மேலும்” (NW) என்ற இணைச் சொல்லால் ஆரம்பித்து, அது முந்தைய புத்தகங்களின் தொடர்ச்சி என காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவும் தேவாவியால் ஏவப்பட்ட யெகோவாவின் மற்ற ஊழியரும் லேவியராகமத்திலுள்ள சட்டங்களையும் நியமங்களையும் அடிக்கடி மேற்கோள் காண்பிக்கையில் அல்லது குறிப்பிட்டு பேசுகையில் அவற்றை மோசே எழுதியதாக கூறியிருக்கின்றனர். இது எல்லாவற்றையும்விட மிக பலமான அத்தாட்சியாகும்.—லேவி. 23:34, 40-43—நெ. 8:14, 15; லேவி. 14:1-32—மத். 8:2-4; லேவி. 12:2—லூக். 2:22; லேவி. 12:3—யோவா. 7:22; லேவி. 18:5—ரோ. 10:5.
3லேவியராகமம் எவ்வளவு காலப்பகுதியை உள்ளடக்குகிறது? “இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில்” ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்ட சம்பவத்தோடு யாத்திராகமம் முடிகிறது. எண்ணாகமம் (லேவியராகமத்தின் விவரத்தை உடனடியாகப் பின்தொடர்ந்து) “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில்” யெகோவா மோசேயினிடம் பேசுவதாக தொடங்குகிறது. ஆகவே, லேவியராகமத்திலுள்ள சில சம்பவங்கள் நிகழ ஒரு சந்திர மாதத்துக்கும் மேல் ஆகியிருக்காது. இந்தப் புத்தகத்தின் பெரும்பாகம் சட்டங்களும் விதிமுறைகளும் நிறைந்ததாய் இருக்கிறது.—யாத். 40:17; எண். 1:1; லேவி. 8:1–10:7; 24:10-23.
4மோசே லேவியராகமத்தை எப்போது எழுதினார்? சம்பவங்கள் நிகழ நிகழ அவர் அவற்றை பதிவு செய்தார். மேலும் கடவுளுடைய கட்டளைகளைப் பெற பெற அவற்றை எழுதி வைத்தார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. இது, அமலேக்கியரை இஸ்ரவேலர் போரில் தோற்கடித்தப்பின், அவர்களுக்கு எதிரான ஆக்கினைத்தீர்ப்பை உடனடியாக எழுதிவைக்கும்படி கடவுள் மோசேக்குக் கட்டளையிட்டதில் மறைமுகமாக காட்டப்படுகிறது. சொல்லப்பட்ட காலப்பகுதிக்கு முன்னதாகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம் என்பதை இதில் பதிவு செய்யப்பட்டுள்ள சில விஷயங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, இஸ்ரவேலர் உணவுக்காக பயன்படுத்த விரும்பிய மிருகங்களைக் கொல்வதற்கு அவற்றை ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவரும்படி கட்டளையிடப்பட்டனர். இந்தக் கட்டளை, ஆசாரியத்துவம் ஏற்படுத்தப்பட்டதற்குச் சற்றுப் பின் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரவேலரின் வனாந்தர பயணத்தின்போது வழிநடத்துதலுக்காக பல அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. இவை யாவும் பொ.ச.மு. 1512-ல் மோசே லேவியராகமத்தை எழுதியதை காட்டுகின்றன.—யாத். 17:14; லேவி. 17:3, 4; 26:46.
5லேவியராகமம் ஏன் எழுதப்பட்டது? யெகோவா ஒரு பரிசுத்த லேவி. 11:44; கலா. 3:19-25.
ஜனத்தை, சுத்திகரிக்கப்பட்ட மக்களை, தம்முடைய சேவைக்காக தனியே பிரித்துவைப்பதற்கு நோக்கம் கொண்டிருந்தார். ஆபேலின் காலம் முதல், கடவுளின் உண்மையுள்ள மனிதர் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்திவந்தனர். ஆனால் முதலாவதாக இஸ்ரவேல் ஜனத்துக்கே பாவநிவாரண பலிகளையும் மற்ற பலிகளையும் செலுத்துவதற்குரிய திட்டவட்டமான கட்டளைகளை யெகோவா கொடுத்தார். லேவியராகமத்தில் விவரமாக விளக்கப்பட்டுள்ளபடி, இவை பாவத்தின் மிகைப்பட்ட பாவத்தன்மையை இஸ்ரவேலர் உணரும்படி செய்தன; அந்தப் பாவம் யெகோவாவுக்கு எந்தளவு அவர்களை பிரியமற்றவர்களாக்கியது என்பதையும் அவர்களுடைய மனதில் பதியவைத்தன. நியாயப்பிரமாணத்தின் ஒரு பாகமாக இருக்கும் இந்த விதிமுறைகள், யூதர்களை கிறிஸ்துவினிடம் வழிநடத்தும் உபாத்தியாக சேவித்தன. இவை ஒரு மீட்பரின் தேவையை அவர்களுக்கு சுட்டிக்காட்டின; அதேசமயத்தில் உலகத்திலிருந்த மற்றவர்களிலிருந்து தனியே பிரிக்கப்பட்ட ஒரு ஜனமாக அவர்களை வைப்பதற்கும் உதவின. முக்கியமாய் ஆசார சுத்திகரிப்பை பற்றிய கடவுளுடைய சட்டங்கள் மேற்குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்கு உதவின.—6ஒரு புதிய ஜனமாக ஒரு புதிய தேசத்தை நோக்கிப் பயணப்படுகையில், இஸ்ரவேலுக்குச் சரியான வழிநடத்துதல் தேவைப்பட்டது. அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு ஒரு வருடம்கூட ஆகவில்லை, எகிப்தின் வாழ்க்கை போக்கும் அதன் மதப் பழக்கவழக்கங்களும் அவர்கள் மனதில் மங்காதிருந்தன. சகோதரனும் சகோதரியும் மணம் செய்துகொள்ளும் வழக்கம் எகிப்தில் இருந்தது. மிருக தெய்வங்கள் உட்பட, பல தெய்வங்களை கனப்படுத்தும் முறையில் பொய் வணக்கம் இருந்தது. இப்பொழுது இந்தப் பெருந்திரளான இஸ்ரவேலர் கானானை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். அங்கே வாழ்க்கையும் மதப் பழக்க வழக்கங்களும் இன்னும் மோசமானதாக இருந்தன. ஆனால் இஸ்ரவேலின் பாளையத்தை மறுபடியும் கவனியுங்கள். இஸ்ரவேலர் மத்தியில்தானே பல்வேறு இனத்தைச் சேர்ந்த திரளான ஜனங்கள் இருந்தனர், அதாவது எகிப்தியரும் கலப்பு எகிப்தியரும் இருந்தனர். இவர்கள் எகிப்திய பெற்றோருக்குப் பிறந்து, எகிப்தியரின் வழிகளிலும் மதத்திலும் நாட்டுப்பற்றிலும் கல்வி பயின்று வளர்ந்தவர்கள். சந்தேகமில்லாமல், இவர்களில் பலர் சிறிது காலத்துக்கு முன்புதானே தங்கள் தாய்நாட்டில் அருவருக்கத்தக்கப் பழக்க வழக்கங்களில் மனம்போனபோக்கில் ஈடுபட்டவர்கள். அப்படியென்றால், அவர்களுக்கு இப்போது யெகோவாவிடமிருந்து தெளிவான வழிநடத்துதல் எந்தளவு அவசியம்!
7தேவ ஆவியால் ஏவப்பட்டதற்கு அத்தாட்சி லேவியராகமம் முழுவதிலும் உள்ளது. அதன் ஞானமான, நீதியான சட்டங்களையும் விதிமுறைகளையும் வெறும் மனிதர் உருவாக்கியிருக்க முடியாது. உணவு, நோய், நோய் தொற்றாதிருக்க புறம்பாக்குதல், செத்த உடல்களைக் கையாளும் முறை ஆகியவற்றை பற்றிய சட்டங்களின் மதிப்பை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பே மருத்துவர்கள் அறியவந்தனர். அசுத்தமான விலங்குகளை உண்பதை தடைசெய்யும் சட்டம், இஸ்ரவேலர் பயணிக்கையில் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இது, பன்றிகளால் உண்டாகும் இழைநீர்ம நோய் (trichinosis), ஒரு வகை மீனை உண்பதால் உண்டாகும் டைபாய்டு (typhoid) பாராடைஃபாய்டு (paratyphoid), செத்த மிருகங்களிலிருந்து உண்டாகும் தொற்றுநோய் ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும். நடைமுறையான இந்தச் சட்டங்கள், அவர்கள் ஒரு பரிசுத்த ஜனமாக நிலைத்திருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று அதைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு உதவும் விதத்தில் அவர்களுடைய வணக்க முறையையும் வாழ்க்கை முறையையும் வழிநடத்தும். யெகோவா கொடுத்த விதிமுறைகள் உடல் ஆரோக்கியத்தைக் குறித்ததில் மற்ற ஜனங்களைவிட யூதர்கள் தழைத்தோங்க வழிவகுத்ததாக சரித்திரம் சான்றுபகருகிறது.
8லேவியராகமத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் மற்றும் மாதிரிகளின் (prophecies and types) நிறைவேற்றமும் அது தேவாவியால் ஏவப்பட்டது என்பதை மேலும் நிரூபிக்கிறது. கீழ்ப்படியாமையின் விளைவுகளைப் பற்றி லேவியராகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகளின் நிறைவேற்றத்தை பைபிள் சரித்திரமும் உலக சரித்திரமும் பதிவு செய்திருக்கின்றன. உதாரணமாக, பஞ்சத்தினிமித்தம் தாய்மார் தங்கள் சொந்த பிள்ளைகளை தின்பார்கள் என அது முன்னறிவித்தது. பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது இது நிறைவேறியதென எரேமியா குறிப்பிடுகிறார். பொ.ச. 70-ல் அந்த நகரம் அழிக்கப்பட்டபோதும் இது சம்பவித்ததைப் பற்றி ஜொஸிஃபஸ் சொல்கிறார். அவர்கள் மனந்திரும்பினால் யெகோவா அவர்களை நினைவுகூருவார் என்ற தீர்க்கதரிசன வாக்கு, பொ.ச.மு. 537-ல் அவர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிவந்தபோது நிறைவேறியது. (லேவி. 26:29, 41-45; புல. 2:20; 4:10; எஸ்றா 1:1-6) பைபிளின் மற்ற எழுத்தாளர்கள் லேவியராகமத்திலிருந்து எடுத்துக் குறிப்பிடும் மேற்கோள்களும் இந்தப் புத்தகம் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கு சாட்சிபகருகின்றன. மோசேதான் இதை எழுதினார் என்பதை உறுதிப்படுத்த ஏற்கெனவே குறிப்பிடப்பட்டவற்றோடு மத்தேயு 5:38; 12:4; 2 கொரிந்தியர் 6:16; 1 பேதுரு 1:16 ஆகியவற்றையும் தயவுசெய்து பாருங்கள்.
9லேவியராகமம் யெகோவாவின் பெயரையும் உன்னத அரசதிகாரத்தையும் தொடர்ந்து மகிமைப்படுத்துகிறது. அதன் சட்டங்கள் யெகோவாவால் அளிக்கப்பட்டவை என்பதை 36 தடவைக்கும் குறையாமல் குறிப்பிடுகிறது. யெகோவா என்ற பெயர்தானே ஒவ்வொரு அதிகாரத்திலும் சராசரி பத்து தடவை வருகிறது. மேலும், “நான் யெகோவா” என்ற நினைப்பூட்டுதல், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியதன் அவசியத்தை மறுபடியும் மறுபடியும் அறிவுறுத்துகிறது. பரிசுத்தம் என்ற பொருள் லேவியராகமம் முழுவதிலும் இழையோடுகிறது. பைபிள் புத்தகம் மற்ற எதையும்விட இதுவே மிக அடிக்கடி இந்தத் தேவையைக் குறிப்பிடுகிறது. யெகோவா பரிசுத்தமுள்ளவராக இருப்பதால் இஸ்ரவேலரும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆட்கள், இடங்கள், பொருட்கள், மற்றும் காலப்பகுதிகள் பரிசுத்தமுள்ளவையாக தனித்து வைக்கப்பட்டன. உதாரணமாக, பிராயச்சித்த நாளும் யூபிலி ஆண்டும் யெகோவாவை வணங்குவதில் விசேஷ ஆசரிப்புக்குரிய காலங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டன.
10லேவியராகமம் பரிசுத்தத்தைப் பற்றி அறிவுறுத்துவதற்கு இசைவாக, பாவங்கள் மன்னிக்கப்படுவதில் இரத்தம் சிந்தப்படுவது, அதாவது உயிர்ப் பலி செலுத்தப்படுவது வகித்த பாகத்தையும் வலியுறுத்துகிறது. சுத்தமான வீட்டு விலங்குகளே மிருக பலியாக செலுத்தப்பட்டன. சில பாவங்களுக்காக பலிசெலுத்துவதோடு, அறிக்கையிடுவதும் திரும்ப நிலைநாட்டப்படுவதும் தண்டத் தொகையைச் செலுத்துவதும் தேவைப்பட்டன. இன்னும் மற்ற பாவங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
லேவியராகமத்தின் பொருளடக்கம்
11லேவியராகமத்தில் பெரும்பாலும் சட்டமுறைமைகள் அடங்கியுள்ளன. அவற்றில் பெரும்பாகம் தீர்க்கதரிசன பொருளடங்கியதாக
உள்ளது. பொதுவாக இந்தப் புத்தகம் தலைப்பு வாரியாக (topical outline) எழுதப்பட்டுள்ளது. அதை எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கலாம், இவை ஒன்றன்பின் ஒன்றாக கோர்வையாக தொடருகின்றன.12பலிகளுக்கான பிரமாணங்கள் (1:1-7:38). பலிகள் பல்வேறு வகைப்பட்டவை. அவற்றை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம்: இரத்தம், மாடுகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், மற்றும் பறவைகள் அடங்கியது; இரத்தமற்றவை, தானியங்கள் அடங்கியது. இரத்தப் பலிகள் (1) தகன, (2) சமாதான, (3) பாவநிவாரண, அல்லது (4) குற்றநிவாரண பலிகளாக செலுத்தப்பட வேண்டும். இந்த நான்கிற்கும் பின்வரும் மூன்று காரியங்கள் பொதுவாயிருக்கின்றன: பலிசெலுத்துபவரே அதை ஆசரிப்புக் கூடாரத்துக்குமுன் கொண்டுவர வேண்டும், அவர் அதன்மீது தன் கைகளை வைக்க வேண்டும், பின்பு அந்த மிருகம் கொல்லப்பட வேண்டும். இரத்தம் தெளிக்கப்பட்ட பிறகு, அந்தந்த வகைக்கேற்ப உடலை பலிசெலுத்த வேண்டும். நாம் இப்பொழுது இரத்தப் பலிகளை வரிசையாக கவனிக்கலாம்.
13 (1) பலிசெலுத்துபவனின் வருவாய்க்குத் தகுந்தவாறு இளம் காளை, செம்மறியாட்டுக்கடா, வெள்ளாட்டுக்கடா, அல்லது புறா அல்லது காட்டுப்புறாவை தகன பலியாக செலுத்தலாம். அது துண்டுகளாக வெட்டப்பட வேண்டும், தோல் தவிர, மீதி அனைத்தும் பலிபீடத்தின்மீது எரிக்கப்பட வேண்டும். காட்டுப்புறா அல்லது புறாவைக் குறித்ததில், தலையைத் திருகியெடுக்க வேண்டும் ஆனால் அது துண்டாக வெட்டப்படக் கூடாது அதன் இரைப்பையும் இறகுகளும் நீக்கப்பட வேண்டும்.—1:1-17; 6:8-13; 5:8.
14 (2) சமாதான பலி ஆடுமாடுகளில் அல்லது பறவைகளில் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். அதன் கொழுப்புப் பாகங்கள் மாத்திரம் பலிபீடத்தின்மீது எரிக்கப்படும், குறிப்பிட்ட ஒரு பகுதி ஆசாரியனுக்குரியதாகும், மீதியை பலிசெலுத்துபவர் உண்பார். இது பொருத்தமாகவே சமாதான பலி [“கூட்டுறவு பலி,” NW] (communion sacrifice) என குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் அதன்மூலம் பலிசெலுத்துபவர் ஓர் உணவை யெகோவாவுடனும் ஆசாரியனுடனும் பகிர்ந்து கொள்வதுபோல், அல்லது கூட்டுறவு கொள்வதுபோல் உள்ளது.—3:1-17; 7:11-36.
15 (3) எதேச்சையாக செய்த பாவங்களுக்காக, அல்லது தவறுதலாக செய்துவிட்ட பாவங்களுக்காக பாவநிவாரண பலி தேவைப்படுகிறது. எந்த மிருகம் பலிசெலுத்தப்பட வேண்டுமென்பது, யாருடைய பாவத்திற்காக பரிகாரம் செய்யப்படுகிறது என்பதன் பேரில்தான் சார்ந்துள்ளது. அதாவது, ஆசாரியனுடையதா, முழு ஜனத்தாருடையதா, பிரபுவினுடையதா அல்லது சாதாரண மனிதனுடையதா என்பதன் பேரில்தான் சார்ந்துள்ளது. தனி நபர்கள் தாங்களாக விரும்பி செலுத்தும் தகன மற்றும் சமாதான பலிகளைப் போலிராமல், பாவநிவாரண பலி கட்டாய பலியாக உள்ளது.—4:1-35; 6:24-30.
16 (4) துரோகம், மோசடி, களவு போன்ற சொந்த குற்றத்தைத் தீர்க்க குற்றநிவாரண பலிகள் தேவைப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் குற்றத்தை அறிக்கையிட்டு வருவாய்க்குத் தகுந்தபடி பலிசெலுத்த வேண்டும். மற்றவற்றில், இழப்புக்கு சரிசமமானதையும் அதோடு 20 சதவீதத்தையும் கொடுக்க வேண்டும்; ஒரு செம்மறியாட்டுக்கடாவையும் பலிசெலுத்த வேண்டும். பலிகளைப் பற்றி விவரிக்கும் லேவியராகமத்தின் இந்தப் பகுதியில், இரத்தம் சாப்பிடுவது மீண்டும் மீண்டும் பலமாக கண்டனம் செய்யப்படுகிறது.—5:1–6:7; 7:1-7, 26, 27; 3:17.
17 இரத்தமற்ற பலிகள் தானியங்கள் அடங்கியவை. அவை வறுக்கப்பட்ட முழு தானியமாக, குறுணையாக, அல்லது அரைத்த மாவாக செலுத்தப்பட வேண்டும்; அவற்றை வேகவைத்து, சுட்டு, அல்லது எண்ணெய்யில் பொரித்து பல்வேறு வகைகளில் தயாரிக்க வேண்டும். அவற்றை உப்போடும் எண்ணெய்யோடும் சில சமயங்களில் தூபவர்க்கத்தோடும் செலுத்த வேண்டும், ஆனால் அவற்றில் புளிப்பும் தேனும் கொஞ்சமும் இருக்கக் கூடாது. சில பலிகளில் ஒரு பங்கு ஆசாரியனுக்கு உரியதாயிருக்கும்.—2:1-16.
18ஆசாரியத்துவம் முறைப்படியாக ஏற்படுத்தப்படுதல் (8:1–10:20). இஸ்ரவேலில் பெரும் சிறப்பு நிகழ்ச்சிக்குரிய காலம் இப்பொழுது வருகிறது, அதாவது ஆசாரியத்துவம் ஏற்படுத்தப்படுதல். மோசே, தனக்கு யெகோவா கட்டளையிட்டபடியே, அதன் எல்லா நுட்பவிவரத்துடனும் அதை கையாளுகிறார். “யெகோவா மோசேயைக் கொண்டு கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.” (8:36, தி.மொ.) ஆசாரியத்துவம் முறைப்படியாக ஆரம்பிக்கப்படுவதற்கு ஏழு நாட்கள் எடுத்தன. அதன் பின்பு விசுவாசத்தைப் பலப்படுத்தும் அற்புதமான சம்பவம் நிகழ்கிறது. கூடிவந்த முழு ஜனமும் அங்கிருக்கிறது. ஆசாரியர்கள் இப்போதுதான் பலிகளைச் செலுத்தி முடித்திருந்தனர். ஆரோனும் மோசேயும் ஜனங்களை ஆசீர்வதித்தாகிவிட்டது. அப்போது, இதோ! “யெகோவாவின் மகிமை முழு ஜனத்திற்கும் காணப்பட்டது. அன்றியும் யெகோவாவின் சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டுப் பலிபீடத்தின்மேல் இருந்த தகனபலியையும் கொழுப்பையும் பட்சித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது கெம்பீர சத்தமிட்டு முகங்குப்புற விழுந்து பணிந்தார்கள்.” (9:23, 24, தி.மொ.) நிச்சயமாகவே, அவர்களுடைய கீழ்ப்படிதலுக்கும் வணக்கத்துக்கும் யெகோவா தகுதியுள்ளவர்!
19எனினும் நியாயப்பிரமாணம் மீறப்படுகிறது. உதாரணமாக, ஆரோனின் குமாரரான நாதாபும் அபியூவும், யெகோவாவின் சந்நிதிக்குமுன் தகாத விதமாக அந்நிய அக்கினியை படைக்கின்றனர். “அக்கினி யெகோவாவின் சந்நிதியிலிருந்து புறப்பட்டு அவர்களைப் பட்சித்தது; அவர்கள் யெகோவாவின் சந்நிதியிலேயே செத்தார்கள்.” (10:2, தி.மொ.) ஏற்கத்தக்க பலியைச் செலுத்தி யெகோவாவின் அங்கீகாரத்தை அனுபவித்து மகிழ, ஜனங்களும் ஆசாரியனும் ஒன்றுபோல் யெகோவாவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். இதைத் தொடர்ந்து, ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் சேவை செய்கையில் மதுபானங்கள் அருந்தக் கூடாது என்ற கட்டளையை கடவுள் கொடுக்கிறார். இது, ஆரோனின் அந்த இரண்டு குமாரர் தவறு செய்ததற்குக் காரணமாக இருந்திருக்கலாமென மறைமுகமாக குறிப்பிடுகிறது.
20சுத்தத்தின் சம்பந்தமாக நியாயப்பிரமாணங்கள் (11:1–15:33). இந்தப் பகுதி ஆசார மற்றும் உடல்நல சுத்தத்தைப் பற்றி கூறுகிறது. வீட்டு மற்றும் காட்டு விலங்குகளான இரு வகைகளிலுமே சில அசுத்தமானவை. சடலங்கள் யாவும் அசுத்தமானவை; அவற்றை தொடுவோரை அசுத்தமாக்குகின்றன. பிள்ளை பிறப்பும்கூட அசுத்தத்தைக் கொண்டுவருகிறது, தனியே பிரித்து வைக்கப்படுவதையும் விசேஷ பலிகள் செலுத்தப்படுவதையும் தேவைப்படுத்துகிறது.
21குஷ்டரோகம் போன்ற சில சரும நோய்களும் ஆசாரப்படி அசுத்தத்தை உண்டுபண்ணுகின்றன. ஆட்கள் மட்டுமல்ல, உடைகளும் வீடுகளும் சுத்திகரிக்கப்பட வேண்டும். தனியே அடைத்துவைப்பதும் தேவைப்படுகிறது. கழிவுகள் அசுத்தமாகுதலை உண்டுபண்ணுவதுபோல், மாதவிடாய் மற்றும் விந்து நீர்மக் கழிவுகளும் அசுத்தப்படுத்துகின்றன. இந்தக் காரியங்களில் தனியே பிரித்து வைப்பது தேவைப்படுகிறது. நலமடைகையில் தேகத்தைக் கழுவுவது அல்லது பலிகள் செலுத்துவது அல்லது இரண்டுமே தேவைப்படுகின்றன.
16:1-34). இது மேம்பட்டு விளங்கும் ஓர் அதிகாரம். ஏனெனில் இது இஸ்ரவேலின் மிக முக்கிய நாளாகிய பிராயச்சித்த நாளுக்குரிய கட்டளைகள் அடங்கியதாக உள்ளது. இது ஏழாம் மாதம் பத்தாம் நாளில் வருகிறது. இது ஆத்துமாவை ஒடுக்குவதற்குரிய ஒரு நாள் (பெரும்பாலும் உபவாசிப்பதால் இருக்கலாம்), அதில் மற்ற வேலைகள் எதுவும் அனுமதிக்கப்படாது. அது, ஆரோன் மற்றும் அவனுடைய குடும்பத்தாரான லேவி கோத்திரத்தாரின் பாவங்களுக்காக ஓர் இளங்காளை பலிசெலுத்தப்படுவதோடு தொடங்குகிறது. பின்பு மீதியான ஜனத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடா பலி செலுத்தப்படுகிறது. தூபவர்க்கம் எரிக்கப்பட்ட பிறகு, அந்த ஒவ்வொரு மிருகத்தின் இரத்தத்திலும் சிறிதளவை உடன்படிக்கைப் பெட்டி மூடிக்கு முன்னால் தெளிப்பதற்கு ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவர வேண்டும். பின்னால் அந்த மிருகங்களின் உடல்களைப் பாளையத்துக்கு வெளியே கொண்டுசென்று எரித்துவிட வேண்டும். இந்த நாளில் உயிருள்ள ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் யெகோவாவுக்கு முன்பாக கொண்டுவந்து, அதன்மீது ஜனங்களின் எல்லா பாவங்களையும் கூறவேண்டும், அதன்பின் அதை வனாந்தரத்துக்கு அனுப்பிவிட வேண்டும். பின்பு இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களை, ஒன்றை ஆரோனுக்காகவும் அவனுடைய வீட்டாருக்காகவும் மற்றதை மீதியான ஜனத்துக்காகவும், தகனபலிகளாக செலுத்த வேண்டும்.
22பிராயச்சித்த நாள் (23இரத்தத்தின் பேரிலும் மற்ற காரியங்களின் பேரிலும் சட்டங்கள் (17:1–20:27). ஜனங்களுக்கான பல சட்டங்களை இந்தப் பகுதி குறிப்பிடுகிறது. மறுபடியும் இரத்தம் தடை செய்யப்படுகிறது. வேதவாக்கியங்கள் முழுவதிலும் இங்குதான் இவ்வளவு நேரடியாக இரத்தம் தடைசெய்யப்படுகிறது. (17:10-14) இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது பயன்படுத்தலாம், ஆனால் அதை சாப்பிடக்கூடாது. முறைதகா புணர்ச்சி, ஓரினப் புணர்ச்சி, மிருகப் புணர்ச்சி ஆகியவற்றைப் போன்ற அருவருக்கத்தக்க பழக்கங்கள் கூடாதென கட்டளையிடப்படுகின்றன. துன்பப்படுவோன், ஏழை, பரதேசி ஆகியோருக்கு பாதுகாப்புக்காக கட்டளைகள் இருக்கின்றன. மேலும், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் அயலானிடத்திலும் அன்புகூர வேண்டும்; நானே யெகோவா” என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. (19:18, தி.மொ.) அந்த ஜனத்தின் சமூக, பொருளாதார நலன் பாதுகாக்கப்படுகிறது. மோளேகின் வணக்கம், ஆவியுலகத் தொடர்பு போன்ற ஆன்மீகத்திற்கு ஆபத்தான பழக்கங்களும் கண்டனம் செய்யப்பட்டன. அதை மீறுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. தம்முடைய ஜனம் தனியே பிரிந்திருக்க வேண்டுமென கடவுள் மறுபடியும் அறிவுறுத்துகிறார்: “யெகோவாவாகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினால் நீங்களும் எனக்கென்று பரிசுத்தராயிருக்க வேண்டும். நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படி நான் உங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசம்பண்ணி உங்களைப் பிரித்தெடுத்தேன்.”—20:26, தி.மொ.
24ஆசாரியத்துவமும் பண்டிகைகளும் (21:1–25:55). அடுத்த மூன்று அதிகாரங்கள் முக்கியமாய் இஸ்ரவேலின் முறைப்படியான வணக்கத்தை விவரிக்கின்றன: ஆசாரியர்கள் கைக்கொள்ள வேண்டிய சட்டங்கள், அவர்களுடைய சரீர தகுதிகள், அவர்கள் யாரை மணம் செய்யலாம், பரிசுத்தப் பொருட்களை யார் உண்ணலாம், குறைபாடில்லா மிருகங்களைப் பலிசெலுத்த வேண்டிய தேவைகள் ஆகியவை விவரிக்கப்படுகின்றன. மூன்று பருவகால பண்டிகைகளை தேசமாக கொண்டாடும்படி கட்டளையிடப்படுகிறது. இவை, “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் சந்நிதியில் . . . மகிழ்ச்சியாயிருக்க” சந்தர்ப்பங்களை அளிக்கின்றன. (23:40, தி.மொ.) இவ்வகையில் அந்த ஜனம் ஒருமித்திருக்கும். யெகோவாவிடம் கவனத்தைத் திருப்பி, அவருக்குத் துதியையும் வணக்கத்தையும் செலுத்தி, அவருடன் அதன் உறவை பலப்படுத்தும். இவை யெகோவாவுக்குப் பண்டிகைகள், வருடாந்தர பரிசுத்த சபை கூடிவருதல். பஸ்கா, புளிப்பில்லா அப்பப் பண்டிகையோடுகூட, இளவேனிற்பருவத்தின் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டும்; பெந்தெகொஸ்தே, அல்லது வாரங்களின் பண்டிகை, இளவேனிற்பருவத்தின் முடிவில் வருகிறது; பிராயச்சித்த நாளும் எட்டு நாட்கள் அடங்கிய கூடாரப் பண்டிகை அல்லது அறுப்புக்கால பண்டிகையும் இலையுதிர்ப் பருவத்தில் வருகின்றன.
25அதிகாரம் 24-ல், ஆசரிப்புக்கூடார சேவையில் பயன்படுத்தப்பட வேண்டிய அப்பத்தையும் எண்ணெய்யையும் பற்றி போதனை கொடுக்கப்படுகிறது. அதைப் பின்தொடர்ந்து நடக்கிற ஒரு நிகழ்ச்சியில், “அந்தப் பெயரை”—ஆம், யெகோவா என்ற அந்தப் பெயரை—நிந்திக்கிற எவனும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என யெகோவா கட்டளையிடுகிறார். பின்பு அவர், “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்ற தண்டனையின் சட்டத்தைக் கூறுகிறார். (24:11-16, 20, NW) 25-ம் அதிகாரத்தில், ஆண்டு முழுவதும் நீடித்த ஓய்வு, அல்லது ஓய்வு ஆண்டை பற்றிய கட்டளைகள் காணப்படுகின்றன. இதை ஒவ்வொரு 7-வது ஆண்டும், யூபிலியை ஒவ்வொரு 50-வது ஆண்டும் கைக்கொள்ள வேண்டும். இந்த 50-வது ஆண்டில், தேசம் முழுவதிலும் விடுதலை அறிவிக்கப்பட வேண்டும். கடந்த 49 ஆண்டுகளின்போது விற்ற அல்லது ஒப்படைத்த பரம்பரை சொத்துடைமை அதற்குரியவனுக்குத் திரும்ப கொடுக்கப்பட வேண்டும். ஏழைகளின் மற்றும் அடிமைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நியாயப்பிரமாண சட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் “ஏழு” என்ற எண் அடிக்கடி தோன்றுகிறது—ஏழாம் நாள், ஏழாவது ஆண்டு, ஏழு நாட்களின் பண்டிகைகள், ஏழு வாரங்களின் காலப்பகுதி, மற்றும் ஏழேழு ஆண்டுகளுக்குப் பின் வரும் யூபிலி.
26கீழ்ப்படிதலின் மற்றும் கீழ்ப்படியாமையின் விளைவுகள் (26:1-46). லேவியராகமம் இந்த அதிகாரத்தில் அதன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. கீழ்ப்படிதலுக்கு அளிக்கப்படும் பலன்களையும் கீழ்ப்படியாமைக்கான தண்டனைகளையும் யெகோவா இங்கே வரிசையாக கொடுக்கிறார். அதே சமயத்தில், இஸ்ரவேலர் தங்களைத் தாழ்த்தினால் என்ன ஆசீர்வாதத்தை பெறுவார்கள் என கூறுகிறார்: “அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நன்மைக்கென்று நினைவுகூருவேன்; நான் அவர்களுக்குக் கடவுளாயிருக்கும்படி புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக அந்த முன்னோர்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவந்தேன்; நானே யெகோவா.”—26:45, தி.மொ.
27மற்ற சட்டங்கள் (27:1-34). பொருத்தனைகளைச் செலுத்துவதன்பேரிலும், முதற்பேறு யெகோவாவுக்கு உரியதென்பதன்பேரிலும், யெகோவாவுக்குப் பரிசுத்தமான தசமபாகத்தின்பேரிலும் கட்டளைகளைக் கொடுப்பதோடு லேவியராகமம் முடிகிறது. அதன் கடைசி வார்த்தைகள் இவையே: “இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்லும்படி யெகோவா சீனாய் மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.”—27:34, தி.மொ.
ஏன் பயனுள்ளது
28தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமங்களின் பாகமாக, லேவியராகமம் இன்று கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் இஸ்ரவேலர் விஷயத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளபடி, யெகோவாவையும்
அவருடைய குணங்களையும் மனிதரை கையாளும் முறைகளையும் நன்கு புரிந்துகொள்வதற்கான சிறந்த உபகரணம் இது. எல்லா காலத்திற்கும் பொருந்தும் அடிப்படையான நியமங்கள் பலவற்றை லேவியராகமம் கூறுகிறது. மேலும் தீர்க்கதரிசனங்களோடுகூட, தீர்க்கதரிசன மாதிரிகள் பல அதில் அடங்கியுள்ளன. இவற்றை சிந்திப்பது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. இதன் நியமங்கள் பல, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் திரும்பக் கூறப்பட்டிருக்கின்றன, அவற்றில் சில நேரடியாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பிடத்தக்க ஏழு அம்சங்கள் கீழே கலந்தாராயப்படுகின்றன.29 (1) யெகோவாவின் உன்னத அரசதிகாரம். அவர் நியாயப்பிரமாணிகர், நாம் அவருடைய படைப்புகள், ஆகவே அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தமக்குப் பயந்து நடக்கும்படி அவர் கட்டளையிடுவதும் சரியே. சர்வலோக உன்னத அரசதிகாரமுடையவராக இருப்பதால், தமக்கு விரோதமான எதையும், அது விக்கிரகாராதனை, ஆவியுலகத் தொடர்பு, அல்லது பேய்த்தனத்துக்குரிய மற்ற அம்சங்களின் எந்த வகையாக இருந்தாலும்சரி அவர் பொறுப்பதில்லை.—லேவி. 18:4; 25:17; 26:1; மத். 10:28; அப். 4:24.
30 (2) யெகோவாவின் பெயர். அவருடைய பெயர் பரிசுத்தமாய் வைக்கப்பட வேண்டும், சொல்லாலோ செயல்களாலோ அதற்கு நிந்தையைக் கொண்டுவர கூடாது.—லேவி. 22:32; 24:10-16; மத். 6:9.
31 (3) யெகோவாவின் பரிசுத்தம். அவர் பரிசுத்தராக இருப்பதால், அவருடைய ஜனமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அதாவது, புனிதமாக்கப்பட்டோராக, அல்லது அவருடைய சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டோராக இருக்க வேண்டும். இது நம்மை சுற்றியுள்ள தேவபக்தியற்ற உலகத்திலிருந்து விலகியிருப்பதை உட்படுத்துகிறது.—லேவி. 11:44; 20:26; யாக். 1:27; 1 பே. 1:15, 16.
32 (4) பாவத்தின் மிதமீறிய பாவத்தன்மை. எது பாவம் என்பதைக் கடவுளே தீர்மானிக்கிறவர், நாம் அந்த பாவத்திற்கு எதிராக போராட வேண்டும். பாவத்திற்குப் பிராயச்சித்தப் பலி எப்போதும் தேவைப்படுகிறது. கூடுதலாக, அறிக்கையிடுவதையும் மனந்திரும்புவதையும், கூடியவரை அதற்கு இழப்பீடுகள் செய்வதையும் தேவைப்படுத்துகிறது. சில பாவங்களுக்கு மன்னிப்பு கிடையாது.—லேவி. 4:2; 5:5; 20:2, 10; 1 யோ. 1:9; எபி. 10:26-29.
33 (5) இரத்தத்தின் பரிசுத்தத் தன்மை. இரத்தம் பரிசுத்தமாக இருப்பதால், எந்த முறையிலும் அதை உடலுக்குள் ஏற்கக் கூடாது. பாவத்துக்காக பிராயச்சித்தம் செய்வதற்கு மட்டுமே இரத்தத்தைப் பயன்படுத்த வேண்டும்.—லேவி. 17:10-14; அப். 15:29; எபி. 9:22.
34 (6) குற்றவாளி, குற்றங்களுக்கு தகுந்த தண்டனை (Relativity). எல்லா பாவங்களும் பாவிகளும் ஒரே முறையில் கருதப்படவில்லை. ஒவ்வொருவர் வகிக்கும் பொறுப்பை பொறுத்து பாவத்துக்கான உத்தரவாதமும் தண்டனையும் பெரிதாக இருந்தது. வேண்டுமென்றே செய்த பாவம் எதேச்சையாக செய்த பாவத்தைப் பார்க்கிலும் அதிக கடுமையாக தண்டிக்கப்பட்டது. ஒவ்வொருவரது திராணிக்குத் தக்கதாக தண்டத் தொகை விதிக்கப்பட்டது. இந்தச் சார்பியல் நியமம் பாவத்துக்கும் தண்டனைக்கும் மட்டுமல்லாமல், ஆசாரப்படியான அசுத்தம் போன்ற மற்ற விஷயங்களிலும் பொருத்திப் பயன்படுத்தப்பட்டது.—லேவி. 4:3, 22-28; 5:7-11; 6:2-7; 12:8; 21:1-15; லூக். 12:47, 48; யாக். 3:1; 1 யோ. 5:16.
35 (7) நீதியும் அன்பும். நம்முடைய சக மனிதரிடமாக நமக்குள்ள கடமைகளை சுருக்கமாக தொகுத்து, லேவியராகமம் 19:18 இவ்வாறு கூறுகிறது: “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக.” இது எல்லாவற்றையும் உள்ளடக்குகிறது. பட்சபாதம் காட்டுதல், திருடுதல், பொய்சொல்லுதல், அவதூறு பேசுதல் ஆகியவற்றை இது விலக்கி, ஊனமுற்றவர்கள், ஏழைகள், குருடர், செவிடர் ஆகியோருக்கு உதவி செய்வதை அர்த்தப்படுத்துகிறது.—லேவி. 19:9-18; மத். 22:39; ரோ. 13:8-13.
36மேலும் கிறிஸ்தவ சபையில், “உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ள”தாக லேவியராகமம் சிறந்து விளங்குகிறது. இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும், முக்கியமாய் பவுலும் பேதுருவும் திரும்பத் திரும்ப இந்தப் புத்தகத்திலிருந்து குறிப்பிடும் மேற்கோள்கள் இதை நிரூபிக்கின்றன. இவை, பல தீர்க்கதரிசன மாதிரிகளும் வரவிருக்கும் காரியங்களின் நிழல்களுமானவற்றிற்குக் கவனத்தை இழுத்தன. பவுல் குறிப்பிட்டபடி, “நியாயப்பிரமாணம் வரப்போகிற நன்மைகளின் . . . நிழலாய் மாத்திரம் இருக்கிறது.” அது “பரலோகத்திலுள்ளவைகளின் சாயலும் நிழலுமானவற்றை” குறிப்பிடுகிறது.—2 தீ. 3:16; எபி. 10:1; 8:5, தி.மொ.
37ஆசரிப்புக்கூடாரம், ஆசாரியத்துவம், பலிகள், முக்கியமாய் வருடாந்தர பிராயச்சித்த நாள் ஆகியவை நடக்கப்போகும் காரியங்களுக்கு நிழலாக இருந்தன. யெகோவாவின் வணக்கத்துக்குரிய ‘மெய்யான கூடாரம்’ சம்பந்தமாக இந்தக் காரியங்களின் ஆவிக்குரிய பொருத்தத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கு, எபிரெயருக்கு எழுதின தன் நிருபத்தில் பவுல் நமக்கு உதவி செய்கிறார். (எபி. 8:2) பிரதான ஆசாரியனாகிய ஆரோன், ‘பெரிதும் அதிகப் பரிபூரணமுமான கூடாரத்தின் மூலம் நிறைவேறிய நல்ல காரியங்களின் பிரதான ஆசாரியராகிய’ கிறிஸ்து இயேசுவுக்கு மாதிரியாக அமைகிறார். (எபி. 9:11, NW; லேவி. 21:10) அந்த மிருக பலிகளின் இரத்தம், நமக்கு “நித்திய மீட்பை” உண்டுபண்ணுகிற இயேசுவின் இரத்தத்தை நிழலாக குறிக்கிறது. (எபி. 9:12) பலியின் இரத்தம், ஆசரிப்புக் கூடாரத்தின் உட்புற அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தில் செலுத்தப்பட வேண்டும். அதற்காக, பிரதான ஆசாரியன் வருடாந்தர பிராயச்சித்த நாளில் மாத்திரமே அதனுள் செல்வார். இது, இயேசு “நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி” ஏறிச்சென்ற ‘மெய்யான பரிசுத்த ஸ்தலம்’ ஆகிய ‘பரலோகத்துக்கு’ “அடையாள”மாக இருக்கிறது.—எபி. 9:24; லேவி. 16:14, 15.
38பலிசெலுத்தப்பட்டவை—தகன அல்லது பாவநிவாரண பலிகளாகச் செலுத்தப்பட்ட ஊறுபாடில்லா பழுதற்ற மிருகங்கள்—இயேசு கிறிஸ்துவினுடைய மனித உடலின் பரிபூரண பழுதற்ற பலியைக் குறித்தன. (எபி. 9:13, 14; 10:1-10; லேவி. 1:3) பாவநிவாரண பலிக்குரிய மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுசென்று எரிக்கப்பட்டதைப் பற்றிய பிராயச்சித்த நாளின் இந்த அம்சத்தை பவுலும் கூறுவது அக்கறைக்குரியது. (லேவி. 16:27) “அந்தப்படியே, இயேசுவும் . . . நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்” என்று பவுல் எழுதுகிறார். (எபி. 13:12, 13) இத்தகைய ஏவப்பட்ட விளக்கத்தால், லேவியராகமத்தில் குறிப்பிட்டுள்ள இந்த ஆசாரங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றின் மூலம் யெகோவா நடக்கவிருப்பவற்றை அதிசயக்கத்தக்க விதத்தில் முன்நிழலாக காட்டியிருப்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. (எபி. 9:8) “தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர்” கிறிஸ்து இயேசுவின் மூலம் யெகோவா செய்கிற, ஜீவனடைவதற்கான இந்த ஏற்பாட்டால் நன்மையடைவோருக்கு இத்தகைய சரியான புரிந்துகொள்ளுதல் இன்றியமையாதது.—எபி. 10:19-25.
39ஆரோனின் ஆசாரிய வீட்டாரைப்போல், இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரியராக, துணை ஆசாரியர்களைத் தம்மோடு கொண்டுள்ளார். இவர்கள் “ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்” என பேசப்பட்டிருக்கின்றனர். (1 பே. 2:9) யெகோவாவின் மகா பிரதான ஆசாரியரும் அரசருமானவரின் பாவப் பிராயச்சித்தம் செய்யும் வேலையை லேவியராகமம் தெளிவாக சுட்டிக்காட்டி விளக்குகிறது. ‘பாக்கியவானும் பரிசுத்தவானும்’ எனவும் ‘கடவுளுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் ஆசாரியராயிருந்து அவரோடுகூட அந்த ஆயிரம் ஆண்டுகள் ஆளுவதாகவும்’ பேசப்பட்டிருக்கும் அவருடைய வீட்டாரின் உறுப்பினர்கள்மீது வைக்கப்பட்ட பொறுப்புகளையும் அது விளக்குகிறது. கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தைப் பரிபூரணத்துக்கு உயர்த்துவதில் எத்தகைய ஆசீர்வாதங்களுக்கு இந்த ஆசாரிய ஊழியம் வழிவகுக்கும். மேலும் இந்தப் பூமியில் சமாதானத்தையும் நீதியையும் திரும்ப நிலைநாட்டுவதால் எத்தகைய மகிழ்ச்சியை அந்தப் பரலோக ராஜ்யம் கொண்டுவரவிருக்கிறது! தம்முடைய பெயர் பரிசுத்தப்படும்படி தம்முடைய மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்குப் பிரதான ஆசாரியரும் அரசருமான ஒருவரையும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்ததற்காக பரிசுத்த கடவுளாகிய யெகோவாவுக்கு நாம் எல்லாரும் நன்றிசெலுத்த வேண்டும். நிச்சயமாகவே, யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களை அறிவிப்பதில் ‘வேதாகமம் முழுவதோடும்’ லேவியராகமம் அருமையாய் ஒத்திசைகிறது.—வெளி. 20:6.
[கேள்விகள்]
1. (அ) லேவியராகமம் என்ற பெயர் ஏன் பொருத்தமாக உள்ளது? (ஆ) லேவியராகமத்துக்கு வேறு என்ன பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
2. மோசே எழுதினார் என்பதை என்ன அத்தாட்சி ஆதரிக்கிறது?
3. லேவியராகமத்தில் எவ்வளவு காலப்பகுதி அடங்கியுள்ளது?
4. லேவியராகமம் எப்போது எழுதப்பட்டது?
5. பலிகளையும் ஆசார சுத்திகரிப்பையும் பற்றிய சட்டங்கள் என்ன நோக்கத்தைச் சேவித்தன?
6. யெகோவாவினிடமிருந்து நுட்பவிவரமான வழிநடத்துதல் இப்பொழுது ஏன் முக்கியமாய் தேவைப்பட்டது?
7. எவ்வகையில் லேவியராகமத்திலுள்ள கட்டளைகள் கடவுளால் ஏவப்பட்டதன் அத்தாட்சியைக் கொண்டுள்ளன?
8. லேவியராகமத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் தேவாவியால் ஏவப்பட்டதை எவ்வாறு மேலும் நிரூபிக்கின்றன?
9. எவ்வாறு லேவியராகமம் யெகோவாவின் பெயரையும் பரிசுத்தத் தன்மையையும் மகிமைப்படுத்துகிறது?
10. பலிகள் சம்பந்தமாக என்ன அறிவுறுத்தப்படுகிறது, பாவத்திற்கான என்ன தண்டனைகள் குறிப்பிடப்படுகின்றன?
11. லேவியராகமத்தை எவ்வாறு சுருக்கியுரைக்கலாம்?
12. இரத்தப் பலிகளின் வகைகள் யாவை, அவை எவ்வாறு செலுத்தப்பட வேண்டும்?
13-16. (அ) பின்வருபவை சம்பந்தப்பட்ட கட்டளைகளை சுருக்கமாக கூறுங்கள்: (1) தகன பலிகள், (2) சமாதான (கூட்டுறவு) பலிகள், (3) பாவநிவாரண பலிகள், (4) குற்றநிவாரண பலிகள். (ஆ) இரத்தப் பலிகள் சம்பந்தமாக, எது மீண்டும் மீண்டும் தடைசெய்யப்படுகிறது?
17. இரத்தமற்ற பலிகள் எவ்வாறு செலுத்தப்பட வேண்டும்?
18. விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்ன சம்பவம், ஆசாரியத்துவம் ஏற்படுத்தப்பட்டதன் உச்சக்கட்டமாக நடக்கிறது?
19. என்ன மீறுதல் ஏற்படுகிறது, அதைப் பின்தொடர்ந்து என்ன நடக்கிறது?
20, 21. என்ன கட்டளைகள் சுத்தத்தையும் சரியான சுகாதாரத்தையும் உட்படுத்துகின்றன?
22. (அ) அதிகாரம் 16 ஏன் மேம்பட்டு விளங்கும் ஒன்றாக உள்ளது? (ஆ) பிராயச்சித்த நாளில் செய்ய வேண்டியவை என்ன?
23. (அ) இரத்தத்தின்பேரில் பைபிளின் மிக தெளிவான கூற்றுகளில் ஒன்றை நாம் எங்கே காண்கிறோம்? (ஆ) வேறு என்ன கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன?
24. ஆசாரியர்களுக்குரிய தகுதிகளையும் பருவகால பண்டிகைகளையும் குறித்து லேவியராகமம் சுருக்கமாய் என்ன குறிப்பிடுகிறது?
25. (அ) “அந்தப் பெயர்” உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என எவ்வாறு காட்டப்படுகிறது? (ஆ) “ஏழு” என்ற எண் சம்பந்தப்பட்ட கட்டளைகள் யாவை?
26. எதில் லேவியராகமம் அதன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது?
27. லேவியராகமம் எவ்வாறு முடிகிறது?
28. லேவியராகமம் இன்று கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு பயனுள்ளது?
29-31. யெகோவாவின் (அ) உன்னத அரசதிகாரத்துக்கு, (ஆ) பெயருக்கு, மற்றும் (இ) பரிசுத்தத்துக்கு மதிப்பு கொடுப்பதை லேவியராகமம் எவ்வாறு அறிவுறுத்துகிறது?
32-34. பின்வருபவற்றை பற்றி என்ன நியமங்கள் சுருக்கமாய் குறிப்பிடப்படுகின்றன: (அ) பாவம், (ஆ) இரத்தம், மற்றும் (இ) சார்பியல் குற்றப்பழி?
35. நம்முடைய சக மனிதரிடமாக நம் கடமைகளை லேவியராகமம் எவ்வாறு தொகுத்துக் கூறுகிறது?
36. லேவியராகமம் கிறிஸ்தவ சபைக்கு நன்மை பயக்குவதாக இருப்பதை எது நிரூபிக்கிறது?
37. எந்த நிறைவேற்றங்கள் எபிரெயரில் விவரிக்கப்படுகின்றன?
38. மாதிரிகளாயிருந்த பலிகள் எவ்வாறு இயேசுவில் நிறைவேறின?
39. யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களை அறிவிப்பதில் லேவியராகமம் எவ்வாறு ‘வேதாகமம் முழுவதோடும்’ ஒத்திசைகிறது?