Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 41—மாற்கு

பைபிள் புத்தக எண் 41—மாற்கு

பைபிள் புத்தக எண் 41—மாற்கு

எழுத்தாளர்: மாற்கு

எழுதப்பட்ட இடம்: ரோம்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-65

காலப்பகுதி: பொ.ச. 29-33

இயேசு கெத்செமனேயில் கைதுசெய்யப்படுகிறார். அப்போஸ்தலர் அனைவரும் அவரைவிட்டு ஓடிவிடுகின்றனர். அப்போது, ‘ஒரு வாலிபர் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு’ அவர் பின் செல்கிறார். கூட்டம் அவரையும் பிடிக்க முயலுகிறது. உடனே ‘அவர் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போகிறார்.’ மாற்குவே இந்த வாலிபராக இருக்கலாம் என பொதுவாய் நம்பப்படுகிறது. இவர் அப்போஸ்தலருடைய நடபடிகளில் ‘மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்’ என குறிப்பிடப்படுகிறார். மேலும் எருசலேமில் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவராய் அவர் இருக்கலாம்; ஏனெனில் அவர்களுக்கென்று சொந்தமாய் வீடும், வேலைக்காரர்களும் இருந்தார்கள். அவருடைய தாய் மரியாளும் கிறிஸ்தவளே; ஆரம்ப காலத்தில் அவர்களுடைய வீடு சபை கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. சிறையிலிருந்து பேதுருவை ஒரு தூதன் விடுவித்த சமயத்தில், பேதுரு நேராக இந்த வீட்டுக்குத்தான் சென்று, சகோதரர்கள் அங்கே கூடியிருக்கக் கண்டார்.​—மாற். 14:​51, 52; அப். 12:​12, 13.

2சீப்புரு தீவைச் சேர்ந்த லேவியராகிய பர்னபா, மிஷனரி மட்டுமல்ல, மாற்குவின் நெருங்கிய உறவினரும்கூட. (அப். 4:36; கொலோ. 4:10) பஞ்ச நிவாரண உதவி சம்பந்தமாக பர்னபா பவுலுடன் எருசலேமுக்கு வந்தபோது, பவுலுக்கு மாற்கு அறிமுகமானார். சபையினரோடும், விஜயம் செய்த வைராக்கியமிக்க இந்த ஊழியர்களோடும் மாற்கு கொண்ட கூட்டுறவு, மிஷனரி சேவையில் ஈடுபடும் ஆவலை அவரில் வித்திட்டது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆகவே, பவுலுக்கும் பர்னபாவுக்கும் துணையாக அவர்களுடைய முதல் மிஷனரி பயணத்தில் உடன் ஊழியராக மாற்கு சென்றார். எனினும், ஏதோ காரணத்தால், பம்பிலியாவிலுள்ள பெர்கேவில், மாற்கு அவர்களைவிட்டுப் பிரிந்து எருசலேமுக்குத் திரும்பிவிட்டார். (அப். 11:​29, 30; 12:25; 13:​5, 13) இதனால், இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, மாற்குவைத் தன்னோடு அழைத்துச் செல்ல பவுலுக்கு மனமில்லை. இது பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தியது. சீலாவை பவுல் தன்னுடன் அழைத்துச் சென்றார், பர்னபாவோ தன் உறவினரான மாற்குவை அழைத்துக் கொண்டு சீப்புருவுக்குக் கப்பலில் பயணப்பட்டார்.​—அப். 15:​36-41.

3ஊழியத்தில் மாற்கு சிறந்து விளங்கினார்; பின்னால், பர்னபாவுக்கு மட்டுமல்ல அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கும், ஏன் பவுலுக்கும்கூட ஒப்பற்ற உதவியாளரானார். ரோமில் பவுல் முதன்முறையாக சிறைப்பட்டபோது (ஏ. பொ.ச. 60-61) மாற்கு அவரோடு இருந்தார். (பிலே. 1, 24) பின்பு பொ.ச. 62-க்கும் 64-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பேதுருவுடன் பாபிலோனில் மாற்கு இருப்பதை அறிகிறோம். (1 பே. 5:13) சுமார் பொ.ச. 65-ல் மீண்டும் பவுல் ரோமில் கைதியாகிறார்; தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மாற்குவைத் தன்னுடன் அழைத்துவரும்படி சொல்கையில், ‘ஊழியத்தில் அவர் எனக்குப் பிரயோஜனமுள்ளவர்’ என்றும் குறிப்பிடுகிறார். (2 தீ. 1:8; 4:11) இதுவே பைபிள் பதிவில் கடைசியாக மாற்குவைப் பற்றி சொல்லப்படும் குறிப்பு.

4சுவிசேஷங்களில் மிகச் சிறியதான இப்பகுதியை எழுதியவர் மாற்கு என சொல்லப்படுகிறது. இவர் இயேசுவின் அப்போஸ்தலருடைய உடன் ஊழியர், நற்செய்தியின் சேவையில் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர். ஆனால் இவர் 12 அப்போஸ்தலரில் ஒருவரல்ல, இயேசுவின் மிக நெருங்கிய தோழர்களில் ஒருவரும் அல்ல. அப்படியென்றால், இயேசுவின் ஊழியத்தை தொடக்கத்திலிருந்து முடிவு வரை உயிரோட்டத்தோடு நுட்பமாக விவரிக்க இவரால் எப்படி முடிந்தது? பப்பையாஸ், ஆரிகென், டெர்ட்டுல்லியன் ஆகியோரின் பூர்வ பாரம்பரிய கருத்துப்படி, அவற்றை பேதுருவிடமிருந்தே அவர் பெற்றிருக்க வேண்டும்; ஏனெனில் பேதுரு அவருடைய நெருங்கிய கூட்டாளி. a சொல்லப்போனால், பேதுரு அவரை ‘என் குமாரன்’ என்றுகூட அழைத்தார்! (1 பே. 5:13) மாற்கு பதிவுசெய்த கிட்டத்தட்ட எல்லா விவரங்களுக்கும் பேதுருவே கண்கண்ட சாட்சி. ஆகவே மற்ற சுவிசேஷங்களில் இல்லாத பல விளக்கக் குறிப்புகள் பேதுருவினிடமிருந்து அவருக்குத் தெரிய வந்திருக்கலாம். உதாரணத்திற்கு, செபெதேயுவுக்காக வேலைசெய்த ‘கூலியாட்கள்,’ குஷ்டரோகி “முழங்கால்படியிட்டு” இயேசுவைக் கெஞ்சிக் கேட்டது, பிசாசுபிடித்த மனிதன் ‘கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டது,’ இயேசு “தேவாலயத்துக்கு எதிராக” ஒலிவ மலையின்மீது உட்கார்ந்திருக்கையில் “மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப்” பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தது போன்றவற்றை குறிப்பிடலாம்.​—மாற். 1:​20, 40; 5:5; 13:​3, 26.

5பேதுருவைப் பொருத்தவரை அவர் ஆழ்ந்த உணர்ச்சியுள்ளவர். ஆகவே இயேசுவின் உணர்ச்சிகளை அப்படியே மாற்குவுக்கு விவரித்திருந்தார். அதன் காரணமாகவே மக்களுக்காக இயேசு பரிதாபப்பட்டு செயல்பட்ட விதத்தை மாற்கு அடிக்கடி தன் பதிவில் குறிப்பிடுகிறார். உதாரணமாக, “அவர் ஆழ்ந்த துக்கமடைந்து, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப்” பார்த்தார்; அவர் “ஆழ்ந்த பெருமூச்சுவிட்”டார், “மிகவும் மனம்புழுங்கினார்” என்றெல்லாம் அவர் பதிவுசெய்கிறார். (3:5; 7:34; 8:12; NW) பணம்படைத்த இளம் அதிபதியை அவர் “அன்புகூர்ந்”தார் என்று சொல்வதன்மூலம் அவன்மீது இயேசுவுக்கிருந்த கனிவான உணர்ச்சியைப் பற்றி மாற்கு மட்டுமே நமக்குச் சொல்கிறார். (10:21) மேலும் இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம் சீஷர்களின் நடுவில் நிறுத்தினார் என்று குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், “அதை அரவணைத்து” என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் “பிள்ளைகளை அன்பாக அணைத்து” என்றும் கூறும் விவரத்தில் எத்தகைய அன்புணர்ச்சியை நாம் காண்கிறோம்!​—9:36; 10:​13-16; NW.

6பேதுருவிடம் காணப்பட்ட சில குணங்களான உணர்ச்சிவசப்படுதல், உயிர்த்துடிப்பு, விறுவிறுப்பு, வருணிக்கும் போக்கு ஆகியவை மாற்குவின் எழுத்துநடையில் தொற்றிக்கொண்டிருக்கின்றன; சம்பவங்களை விரைவாக சொல்கிறார். உதாரணமாக, “உடனே” என்ற சொல்லை அடிக்கடி குறிப்பிட்டு, சரிதையை உயிர்த்துடிப்புள்ள முறையில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்.

7மத்தேயுவின் சுவிசேஷம் மாற்குவுக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தது என்பதும், மற்ற சுவிசேஷங்களில் அடங்கியிராத விஷயங்கள் அவருடைய பதிவில் 7 சதவீதமே இருக்கிறது என்பதும் உண்மைதான். அதற்காக, மத்தேயுவின் சுவிசேஷத்தை மாற்கு சுருக்கிக்கூறி, சில நுட்பவிவரங்களை மாத்திரமே சேர்த்தாரென சொல்வது சரியல்ல. ஏனெனில், இயேசுவை வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாகவும் அரசராகவும் மத்தேயு வருணித்திருக்கிறார். ஆனால், மாற்குவோ அவருடைய வாழ்க்கையையும் வேலைகளையும் மற்றொரு கோணத்திலிருந்து விவரிக்கிறார். அற்புதம் நடப்பிக்கும் கடவுளுடைய குமாரனாகவும் வெற்றி சிறக்கும் மீட்பராகவும் இயேசுவை வருணிக்கிறார். கிறிஸ்துவின் பிரசங்கங்கள், போதகங்கள் ஆகியவற்றின் மீது அல்ல, மாறாக அவருடைய செயல்கள் மீதே மாற்கு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார். இயேசுவின் உவமைகளில் சிலவற்றையும், அவருடைய நீண்ட போதனைகளில் ஒன்றையும் மட்டுமே மாற்கு குறிப்பிடுகிறார். மலைப்பிரசங்கத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. மாற்குவின் சுவிசேஷம் சிறியதாக இருப்பதற்கு இதுவே காரணம்; ஆனால் மற்ற சுவிசேஷங்களைப் போலவே இயேசு செய்த செயல்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் இதில் இருக்கின்றன. குறைந்தபட்சம் 19 அற்புதங்களாவது திட்டவட்டமாய் குறிப்பிடப்பட்டுள்ளன.

8மத்தேயு தன் சுவிசேஷத்தை யூதர்களுக்காக எழுதினார்; மாற்குவோ முக்கியமாய் ரோமருக்காக எழுதினாரென தோன்றுகிறது. இதை நாம் எவ்வாறு அறிகிறோம்? மோசேயின் நியாயப்பிரமாணத்தை அது சம்பந்தப்பட்ட உரையாடலில் மாத்திரமே குறிப்பிடுகிறார், இயேசுவின் வம்சாவளி சம்பந்தப்பட்ட விவரத்தை விட்டுவிடுகிறார். கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றதாய் காட்டப்படுகிறது. யூதரல்லாத வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத யூத பழக்கவழக்கங்கள், போதகங்கள் பற்றி விளக்கக் குறிப்புகளைத் தருகிறது. (2:18; 7:​3, 4; 14:12; 15:42) அரமிய சொற்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. (3:17; 5:41; 7:​11, 34; 14:36; 15:​22, 34) பலஸ்தீனா பகுதியை சார்ந்த பெயர்களுக்கும் தாவரங்களுக்கும் விளக்கம் தருகிறது. (1:​5, 13; 11:13; 13:3) யூத நாணயங்களின் மதிப்பை ரோம பணத்தில் குறிப்பிடுகிறது. (12:​42, NW அடிக்குறிப்பு) சுவிசேஷ எழுத்தாளர்களில் மற்றவர்களைப் பார்க்கிலும் மாற்கு அதிக லத்தீன் சொற்களைப் பயன்படுத்துகிறார். உதாரணங்கள்: ஸ்பெக்குலேட்டர் (சேவகன்), பிரிட்டோரியம் (அதிபதியின் மாளிகை), சென்டுரியோ (நூற்றுக்கதிபதி).​—6:27; 15:​16, 39.

9முக்கியமாய் ரோமருக்காக இந்த சுவிசேஷத்தை மாற்கு எழுதியதாய் தோன்றுவதால், அவர் தன் புத்தகத்தைப் பெரும்பாலும் ரோமில் எழுதியிருக்கலாம். ஆகவே, ரோமில் அப்போஸ்தலன் பவுல் முதல் தடவை அல்லது இரண்டாம் தடவை சிறைப்பட்டபோது, பொ.ச. 60-65-ல் எழுதியிருக்கலாம். இந்த முடிவுக்கு வர, பூர்வ பாரம்பரியமும் இந்தப் புத்தகத்தின் பொருளடக்கமும் வழிநடத்துகின்றன. அந்தக் காலப்பகுதிகளில் மாற்கு குறைந்தபட்சம் ஓரிரு முறைகளாவது ரோமில் இருந்தார். மாற்குதான் இப்புத்தகத்தை எழுதியவர் என இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிரபல நிபுணர்கள் யாவரும் உறுதிசெய்கின்றனர். இரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்திற்குள் இந்தச் சுவிசேஷம் கிறிஸ்தவர்களிடையே ஏற்கெனவே பிரபலமாகியிருந்தது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பூர்வ புத்தகப் பெயர்ப்பட்டியல்கள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்படுவது மாற்கு சுவிசேஷத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.

10எனினும், 16-ம் அதிகாரம் 8-ம் வசனத்துக்குப் பின் சில வசனங்கள் அல்லது அநேக வசனங்கள் சேர்க்கப்படுகின்றன; இவை நம்பத்தகுந்தவையல்ல. சினியாட்டிக், வாடிகன் எண் 1209 போன்ற பூர்வ கையெழுத்துப் பிரதிகள் பலவற்றில் அவ்வசனங்கள் இடம்பெறவில்லை. “பயந்திருந்தார்கள்” (தி.மொ.) என்ற வார்த்தைகளோடுதான் நம்பத்தகுந்த பதிவு முடிகிறதென நான்காம் நூற்றாண்டு நிபுணர்களான யூஸிபியஸும் ஜெரோமும் ஒருமித்த கருத்து தெரிவிக்கின்றனர். இந்தச் சுவிசேஷம் திடீரென முடிவதை தவிர்க்கும் எண்ணத்தில் ஒருவேளை சில வசனங்கள் முடிவில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

11மாற்குவின் சுவிசேஷம் மற்ற சுவிசேஷங்களுடன் மாத்திரமல்ல, ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரையான முழு பரிசுத்த வேதாகம பதிவுடனும் ஒத்திருக்கிறது; எனவே அந்த விவரப்பதிவு திருத்தமானது என்பதை காண முடிகிறது. மேலும், இயேசு அதிகாரத்தோடு போதித்ததும், இயற்கை சக்திகளின்மீதும், சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின்மீதும், நோய்நொடிகளின்மீதும், ஏன் மரணத்தின்மீதும் அவருக்கு அதிகாரம் இருந்ததும் திரும்பத் திரும்ப காட்டப்படுகிறது. ஆகவே மாற்கு தன் விவரிப்பை உள்ளத்தைத் தொடும் இந்த அறிமுகத்துடன் தொடங்குகிறார்: “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.” அவருடைய வருகையும் ஊழியமும் ‘நற்செய்தியைக்’ குறித்தன, ஆகவே மாற்குவின் சுவிசேஷத்தை படிப்பது வாசகர்கள் எல்லாருக்கும் நன்மையளிக்கும். மாற்கு விவரிக்கும் சம்பவங்கள் பொ.ச. 29-ன் இளவேனிற்காலத்திலிருந்து பொ.ச. 33-ன் இளவேனிற்காலம் வரையான காலப்பகுதியை உள்ளடக்குகின்றன.

மாற்குவின் பொருளடக்கம்

12இயேசுவின் முழுக்காட்டுதலும் சோதனையும் (1:​1-13). முழுக்காட்டுபவரான யோவானைப் பற்றிய குறிப்போடு மாற்கு நற்செய்தியைத் தொடங்குகிறார். அவரே முன்னறிவிக்கப்பட்ட தூதுவர்; “யெகோவாவின் வழியை ஆயத்தப்படுத்துங்கள், ஜனங்களே நீங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வையாக்குங்கள்” என்று அறிவிக்கும்படி அனுப்பப்பட்டவர். சீக்கிரம் வரவிருப்பவரைக் குறித்து, ‘அவர் என்னிலும் வல்லவர்’ என்று முழுக்காட்டுபவராகிய யோவான் சொல்கிறார். ஆம், அவர் தண்ணீரில் அல்ல, பரிசுத்த ஆவியால் முழுக்காட்டுவார். இயேசு இப்பொழுது கலிலேயாவின் நாசரேத்திலிருந்து வருகிறார், யோவான் அவருக்கு முழுக்காட்டுதல் தருகிறார். ஆவி இயேசுவின்மேல் புறாவைப்போல் இறங்குகிறது: “நீர் என்னுடைய குமாரன், மிகவும் நேசமானவர்; நான் உம்மை அங்கீகரித்திருக்கிறேன்” என்று வானங்களிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. (1:​3, 7, 11, NW) இயேசு வனாந்தரத்தில் சாத்தானால் சோதிக்கப்படுகிறார், பின்னர் தேவதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்கிறார்கள். ஆர்வமூட்டும் இந்த விஷயங்கள் யாவும் மாற்குவின் புத்தகத்தில் முதல் 13 வசனங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

13இயேசு கலிலேயாவில் ஊழியத்தைத் தொடங்குகிறார் (1:​14–6:6). யோவான் சிறையிலிடப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவில் கடவுளின் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார். எத்தகைய ஆச்சரியமான செய்தி அது! “கடவுளின் ராஜ்யம் சமீபித்திருக்கிறது; மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்.” (1:​15, தி.மொ.) சீமோனையும் அந்திரேயாவையும் யாக்கோபையும் யோவானையும் மீன்பிடிக்கும் தங்கள் வேலையை விட்டுவிட்டு தம்மைப் பின்பற்றும்படி அழைக்கிறார். ஓய்வுநாளில் கப்பர்நகூமிலுள்ள ஜெபாலயத்தில் போதிக்கிறார். ஜனங்கள் வியப்படைகிறார்கள், ஏனெனில் அவர் “வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய்” போதிக்கிறார். அசுத்த ஆவி பிடித்த ஒருவனிலிருந்து அந்த ஆவியைத் துரத்துகிறார், காய்ச்சலால் கஷ்டப்பட்ட சீமோனின் மாமியாரைச் சுகப்படுத்துகிறார்; இவ்வாறு ‘கடவுளின் பரிசுத்தராகத்’ தம் அதிகாரத்தை அவர் மெய்ப்பித்துக் காட்டுகிறார். இந்தச் செய்தி காட்டுத்தீயைப்போல் மளமளவென பரவுகிறது, இரவுக்குள் “ஊர் முழுதும்” சீமோனின் வீட்டுக்கு முன் திரண்டுவிடுகிறது. நோயுற்ற பலரை இயேசு சுகப்படுத்தி, பேய்கள் பலவற்றைத் துரத்துகிறார்.​—1:​22, 24, 33, தி.மொ.

14“நான் பிரசங்கிக்க வேண்டும்” என்று சொல்வதன் மூலம் தாம் அனுப்பப்பட்ட காரணத்தை இயேசு அறிவிக்கிறார். (1:​38, தி.மொ.) கலிலேயாவின் நான்கு திசைகளிலும் அவர் பிரசங்கிக்கிறார். அவர் செல்லுமிடமெங்கும் பேய்களைத் துரத்துகிறார், நோயுற்றோரைச் சுகப்படுத்துகிறார். ஒரு குஷ்டரோகியையும் திமிர்வாதக்காரனையும் சுகப்படுத்துகிறார். அவனிடம்: “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று சொல்கிறார். வேதபாரகரில் சிலர், ‘இது தேவதூஷணம், தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்’ என்று சிந்திக்கின்றனர். அவர்களுடைய சிந்தனையை அறிந்த இயேசு, அந்தத் திமிர்வாதக்காரனிடம், எழுந்து வீட்டுக்குச் செல்லும்படி சொல்கிறார்; இவ்வாறு, “பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை” நிரூபிக்கிறார். கடவுளை ஜனங்கள் மகிமைப்படுத்துகிறார்கள். வரிவசூலிப்பவராகிய லேவி (மத்தேயு) அவரைப் பின்பற்றுகிறார்; அப்போது இயேசு அந்த வேதபாரகரிடம், “நீதிமான்களையல்ல, பாவிகளையே . . . அழைக்க வந்தேன்” என்கிறார். தாம் ‘ஓய்வுநாளுக்கு ஆண்டவர்’ என்பதைக் காட்டுகிறார்.​—2:​5, 7, 10, 17, 28.

15இயேசு இப்பொழுது 12 அப்போஸ்தலரைத் தேர்ந்தெடுக்கிறார். அவருடைய உறவினர்களின் எதிர்ப்பை ஓரளவு எதிர்ப்படுகிறார். பின்பு எருசலேமை சேர்ந்த வேதபாரகர் சிலர், பேய்களின் தலைவனுடைய உதவியால் அவர் பேய்களை துரத்துவதாய் குற்றஞ்சாட்டுகிறார்கள். இயேசு அவர்களிடம், “சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?” என்று கேட்டு, “ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணம் பேசுவானாகில் அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் என்றும் தொலையாப் பாவத்திற்கு ஆளாவான்” என்று எச்சரிக்கிறார். இந்த உரையாடலின்போது அவருடைய தாயும் சகோதரர்களும் அவரைத் தேடிக்கொண்டு வருகிறார்கள்; இயேசு, “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான்” என சொல்கிறார்.​—3:​23, 29, தி.மொ., 35.

16இயேசு, “தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை” உவமைகளின் மூலம் போதிக்க தொடங்குகிறார். (வார்த்தையைக் கேட்கும் பல்வேறு ஆட்களின் இதயநிலையை சித்தரிக்கும்) பல்வேறு வகை நிலத்தில் விழும் விதையைப் பற்றியும், விளக்குத்தண்டிலிருந்து பிரகாசிக்கும் விளக்கைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். மற்றொரு உவமையில், நிலத்தில் விதைக்கும் விதையைப்போல் தேவனுடைய ராஜ்யம் உள்ளதென்று இயேசு சொல்கிறார்: “நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும்.” (4:​11, 28) மேலும் கடுகு விதை பற்றிய உவமையையும் கொடுக்கிறார். அது எல்லா விதைகளிலும் மிகச் சிறியது; எனினும் நிழல் தரும் பெரும் கிளைகளுடன் உயர்ந்தோங்கி வளருகிறது.

17கலிலேயாக் கடலை அவர்கள் கடக்கையில், இயேசு அற்புதமாய் கடும் புயலை கட்டுப்படுத்துகிறார்; “இரையாதே அமைதலாயிரு” என்ற அவருடைய கட்டளைப்படி கொந்தளிக்கும் கடல் அமைதலாகிறது. (4:39) அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில், இயேசு ஒருவனிலிருந்து “லேகியோன் [மிகுந்த]” எண்ணிக்கையான பேய்களைத் துரத்துகிறார்; ஏறக்குறைய 2,000 பன்றிகளுக்குள் புகுந்துகொள்ள அவற்றை அனுமதிக்கிறார். அவை ஓர் உயர்ந்த மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மாண்டுவிடுகின்றன. (5:​8-13) இதன் பின்பு, இயேசு மறுகரைக்கு திரும்புகிறார். யவீருவின் 12 வயது மகளை உயிர்த்தெழுப்புவதற்கு இயேசு போகிறார். வழியில், அவருடைய மேலங்கியை ஒரு பெண் தொடுகிறாள்; அதனால், 12 ஆண்டுகள் இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்த அப்பெண் சுகமடைகிறாள். மனுஷகுமாரனுக்கு உயிர்மீதும் மரணத்தின்மீதும் அதிகாரம் இருப்பது உண்மைதான்! எனினும், இயேசு வளர்ந்த ஊரிலுள்ள ஜனங்கள் அவருக்கிருந்த அதிகாரத்தைக் குறித்து வாதாடுகிறார்கள். அவர்கள் விசுவாசமற்றவர்களாய் இருப்பதைக் குறித்து அவர் ஆச்சரியப்படுகிறார், ஆனால் தொடர்ந்து ‘சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவருகிறார்.’​—6:6, பொ.மொ.

18கலிலேய ஊழியம் விரிவாக்கப்படுகிறது (6:​7–9:50). பிரசங்கிக்க, கற்பிக்க, ஜனங்களை சுகப்படுத்த, பேய்களைத் துரத்த என அந்த 12 பேருக்கு அதிகாரமளிப்பதோடு ஊழியம் சம்பந்தப்பட்ட விவரங்களையும் அளித்து இரண்டிரண்டு பேராக அனுப்புகிறார். இயேசுவின் பெயர் எங்கும் பிரபலமாகிறது; முழுக்காட்டுபவராகிய யோவான்தான் உயிரோடு எழுந்து வந்துவிட்டதாக சிலர் நினைக்கின்றனர். ஒருவேளை அது நிஜமோ என ஏரோதும் மனம் கலங்குகிறார்; காரணம் அவருடைய பிறந்தநாள் விருந்தின்போதே யோவான் சிரச்சேதம் செய்யப்பட்டார். அப்போஸ்தலர் தங்கள் பிரசங்க ஊழியத்தை முடித்துக்கொண்டு திரும்பிவந்து தாங்கள் செய்தவற்றைப் பற்றி இயேசுவுக்கு அறிவிக்கின்றனர். கலிலேயாவைச் சுற்றியிருந்த இடங்களிலிருந்து பெரிய ஜனக்கூட்டம் இயேசுவைப் பின்தொடர்கிறது, ‘மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல் இருக்கிறபடியால் அவர்கள்மேல் இயேசு மனதுருகுகிறார்.’ ஆகவே அவர் பல காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத் தொடங்குகிறார். (6:34) அன்புடன் வயிறார உணவளிக்கிறார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்து 5,000 ஆண்களைப் போஷிக்கிறார். இதையடுத்து பெத்சாயிதாவுக்கு செல்லும் படகு பயணத்தின்போது வழியில் சீஷர்கள் புயலில் சிக்கிக்கொள்கின்றனர்; இக்கட்டான நிலையில் அதை எதிர்த்து போராடுகையில் அவர் கடலின்மேல் நடந்துவந்து புயலை அமர்த்துகிறார். அவருடைய சீஷர்களும் “பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்பதில் வியப்பேதுமில்லை!​—6:51.

19கெனேசரேத் மாகாணத்தில், கை கழுவாமல் சாப்பிடுவதைப் பற்றி எருசலேமைச் சேர்ந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவுடன் விவாதிக்கின்றனர். ‘தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொள்வதற்காக’ இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார். மனிதனைத் தீட்டுப்படுத்துவது வெளியிலிருந்து உள்ளுக்குள் செல்வதல்ல. மாறாக உள்ளே, இருதயத்திலிருந்து வெளிவருவதே, அதாவது ‘பொல்லாத சிந்தனைகளே’ அவனை தீட்டுப்படுத்தும் என்று சொல்கிறார். (7:​8, 21) வடக்கே தீரு சீதோன் எல்லைகளுக்குள், சீரோபேனிக்கியா தேசத்து பெண்ணின் மகளைப் பேய் பிடித்திருந்தது; அவளை சுகப்படுத்தி புறஜாதியாருக்குள் அற்புதத்தை நடப்பிக்கிறார்.

20கலிலேயாவுக்குத் திரும்பிய இயேசு தம்மைப் பின்தொடரும் ஜனத்தாருக்காக பரிதபித்து, ஏழு அப்பங்களையும் சில சிறிய மீன்களையும் வைத்து 4,000 ஆண்களுக்கு மீண்டும் உணவளிக்கிறார். பரிசேயர், ஏரோது ஆகியோரின் புளித்தமாவைக் குறித்து தம்முடைய சீஷர்களை எச்சரிக்கிறார்; ஆனால் அப்போது அவர்கள் அந்தக் குறிப்பைப் புரிந்துகொள்ளவில்லை. பின்பு பெத்சாயிதாவில் ஒரு குருடனைச் சுகப்படுத்துவதன் மூலம் மற்றொரு அற்புதத்தை நிகழ்த்துகிறார். பிலிப்புசெசரியாவிலுள்ள கிராமங்களுக்குச் செல்லும் வழியில் நடந்த உரையாடலில், இயேசுவை “கிறிஸ்து” என பேதுரு உறுதியாக அடையாளப்படுத்துகிறார்; ஆனாலும் மனுஷகுமாரனுக்கு சம்பவிக்கவிருக்கும் பாடுகளையும் மரணத்தையும் குறித்து இயேசு பேசுகிறபோது பேதுரு கடுமையாக ஆட்சேபிக்கிறார். இதற்காக, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்று இயேசு அவரைக் கடிந்துகொள்கிறார். (8:​29, 33) நற்செய்தியின் காரணமாக தம்மைத் தொடர்ந்து பின்பற்றும்படி இயேசு தம் சீஷர்களுக்கு அறிவுரை கூறுகிறார்; அவரைக் குறித்து அவர்கள் வெட்கப்படுவார்களாகில், அவரும் தம்முடைய பிதாவினால் மகிமையடைகையில் அவர்களைக் குறித்து வெட்கப்படுவார் என கூறுகிறார்.

21ஆறு நாட்களுக்குப் பின்னால், ஓர் உயர்ந்த மலையின்மேல் இருக்கையில் இயேசு மகிமையில் மறுரூபமாவதைப் பேதுருவும் யாக்கோபும் யோவானும் காண்கின்றனர்; இவ்வாறு “கடவுளின் ராஜ்யம் வல்லமையோடு வருவதை” முன்னதாகவே காணும் பாக்கியம் பெறுகின்றனர். (9:​1, தி.மொ.) ஒரு பையனிடமிருந்து ஊமையான ஆவியை துரத்துவதன் மூலம் இயேசு மறுபடியும் தம் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறார். தாம் படப்போகும் பாடுகளையும் அனுபவிக்கவிருக்கும் மரணத்தையும் குறித்து இரண்டாவது தடவையாக பேசுகிறார். ஜீவனைப் பெறுவதிலிருந்து தங்களை எதுவும் தடைசெய்ய அனுமதிக்காதிருக்கும்படி தம் சீஷர்களுக்கு அவர் அறிவுரை கூறுகிறார். உன் கை உனக்கு இடறல் உண்டாக்குகிறதா? அதைத் தறித்துப்போடு! உன் பாதமா? அதைத் தறித்துப்போடு! உன் கண்ணா? அதைப் பிடுங்கிப்போடு! முழுமையாக கெஹென்னாவுக்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஊனமாய் கடவுளுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது மிக மேலானது.

22பெரேயாவில் ஊழியம் (10:​1-52). இயேசு யூதேயாவின் எல்லைப்புறங்களுக்கும் “யோர்தானுக்கு அக்கரை”க்கும் (பெரேயாவுக்கும்) வருகிறார். பரிசேயர்கள் இப்பொழுது விவாகரத்தைப் பற்றி கேள்வி கேட்கின்றனர். திருமணம் சம்பந்தமான கடவுளுடைய நியமங்களைக் குறிப்பிடுவதற்கு அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். பணக்கார வாலிபன் ஒருவன் நித்திய ஜீவனைப் பெறுவதைப் பற்றி அவரைக் கேள்வி கேட்கிறான். ஆனால், பரலோகத்தில் பொக்கிஷத்தைப் பெற அவன் தன் உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் கேட்கையில் துக்கமடைகிறான். “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்று இயேசு தம் சீஷரிடம் சொல்கிறார். நற்செய்தியின் காரணமாக எல்லாவற்றையும் விட்டுவந்தவர்களை அவர் ஊக்குவித்து, “இப்பொழுது துன்புறுத்தல்களோடுகூட நூறத்தனை[யும்] . . . வரவிருக்கும் காரிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனையும்” பெறுவார்கள் என வாக்குறுதி அளிக்கிறார்.​—10:​1, 25, 30, NW.

23இயேசுவும் அந்த 12 பேரும் இப்பொழுது எருசலேமுக்குப் பயணப்படுகின்றனர். மூன்றாவது தடவையாக இயேசு, தமக்கு வரவிருக்கும் பாடுகளைப் பற்றியும் தம் உயிர்த்தெழுதலைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்கிறார். தாம் பானம்பண்ணும் அதே பாத்திரத்தில் அவர்களால் பானம்பண்ண முடியுமாவென அவர்களைக் கேட்கிறார். “உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” என்று சொல்கிறார். அவர்கள் எரிகோவை விட்டுச் செல்கையில், வழியோரத்திலிருந்த குருடனான பிச்சைக்காரன் ஒருவன், “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று கூப்பிடுகிறான். அந்தக் குருடனை இயேசு பார்வையடைய செய்கிறார்; மாற்குவின் பதிவின்படி இதுவே அவருடைய கடைசி அற்புதச் சுகப்படுத்துதல்.​—10:​44, 47, 48.

24எருசலேமிலும் அதன் சுற்றுப்புறத்திலும் இயேசு (11:​1–15:47). பதிவு விறுவிறுவென முன்னேறுகிறது! இயேசு ஒரு கழுதைக் குட்டியின்மீது நகரத்துக்குள் பவனிவருகிறார், ஜனங்கள் அவரை அரசராக வாழ்த்தி ஆர்ப்பரிக்கின்றனர். அடுத்தநாள் அவர் ஆலயத்தைச் சுத்தப்படுத்துகிறார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மீதிருந்த பயத்தால் அவரைக் கொல்ல வழிதேடுகிறார்கள். “நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்?” என்று அவர்கள் கேட்கின்றனர். (11:28) இயேசு சாதுரியமாக கேள்வியை அவர்களிடமே திருப்புகிறார்; திராட்சத்தோட்டத்தின் சுதந்தரவாளியைக் கொன்ற தோட்டக்காரர்களைப் பற்றிய உவமையைச் சொல்கிறார். அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அங்கிருந்து போய்விடுகின்றனர்.

25அடுத்தபடியாக, வரிசெலுத்தும் விஷயத்தில் கேள்வி கேட்டு அவரை மடக்க பரிசேயரில் சிலரை அவர்கள் அனுப்புகின்றனர். இயேசு ஒரு திநாரியத்தைக் கேட்டுவாங்கி, ‘இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?’ என்று கேட்கிறார். “இராயனுடையது” என்று அவர்கள் பதிலளிக்கையில், “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என்று சொல்கிறார். அவரைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்! (12:​16, 17, தி.மொ.) உயிர்த்தெழுதல் நம்பிக்கையற்ற சதுசேயர், ‘ஒரு பெண்ணுக்கு ஒருவர்பின் ஒருவராக ஏழு கணவர்கள் இருந்திருந்தால், உயிர்த்தெழுதலில் அவள் யாருடைய மனைவியாக இருப்பாள்?’ என்ற கேள்வியால் அவரை திக்குமுக்காட வைக்க நினைக்கின்றனர். மரித்தோரிலிருந்து எழுந்திருப்பவர்கள் “பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப் போலிருப்பார்கள்,” அவர்கள் மணம் செய்வதில்லை என்று இயேசு தயங்காமல் பதிலளிக்கிறார். (12:​19-23, 25) ‘எந்தக் கட்டளை எல்லாவற்றிலும் முதலாவதானது?’ என்று வேதபாரகரில் ஒருவன் கேட்கிறான். இயேசுவின் பதில்: “முதலாவதானது, ‘இஸ்ரவேலே கேள், நம்முடைய கடவுள் யெகோவா ஒரே யெகோவா, நீ உன் கடவுளாகிய யெகோவாவை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும்.’ இரண்டாவதானது ‘உன்னைப்போல் உன் அயலானை நேசிக்க வேண்டும்’ என்பதே.” (12:​28-31, NW) இதன் பின்பு, ஒருவரும் அவரைக் கேள்வி கேட்கத் துணிவதில்லை. பரிபூரண போதகராக இயேசுவின் அதிகாரம் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த பெரும் கூட்டத்தார் மிகுந்த ஆர்வத்தோடு செவிசாய்க்கின்றனர்; தற்பெருமைமிக்க வேதபாரகர்களைக் குறித்து இயேசு அவர்களை எச்சரிக்கிறார். பின்பு, ஆலய காணிக்கைப் பெட்டிக்குள் மற்ற எல்லாரையும்விட ஒரு ஏழை விதவை போட்டது வெகு அதிகம்; ஏனெனில் அவளுடைய இரண்டு சிறு காசுகள் ‘அவளுக்கிருந்த யாவும், அவளுடைய ஜீவனுக்கான எல்லாமுமாக’ இருந்ததென்று தம் சீஷர்களிடம் அவர் பாராட்டிப் பேசுகிறார்.​—12:​44, தி.மொ.

26ஆலயத்தை பார்த்தபடி ஒலிவ மலையின்மீது உட்கார்ந்திருக்கையில், இயேசு தனியே தம்முடைய சீஷர்கள் நால்வருக்கு, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் குறிக்கும் ‘அடையாளத்தை’ சொல்கிறார். (இந்த ஒன்றே மாற்கு பதிவுசெய்த நீண்ட பிரசங்கமாகும், இது மத்தேயு 24-ம் 25-ம் அதிகாரங்களுக்கு இணையானது.) இது, “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்” என்ற இயேசுவின் எச்சரிப்புரையோடு முடிகிறது.​—13:​4, 32, 37.

27அருகிலுள்ள பெத்தானியாவில், ஒரு ஸ்திரீ விலையுயர்ந்த பரிமள தைலத்தை இயேசுவின் சிரசின்மீது ஊற்றுகிறாள். அது வீண் செலவு என சிலர் எதிர்க்கின்றனர். ஆனால் இயேசுவோ, அதை நல்ல செயலாக பாராட்டுகிறார்; தாம் அடக்கம் செய்யப்படுவதற்கான ஆயத்த நிகழ்ச்சி என அதை சொல்கிறார். குறிக்கப்பட்ட நேரத்தில், இயேசுவும் பன்னிருவரும் பஸ்காவுக்காக எருசலேமில் கூடுகின்றனர். தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனை அவர் அடையாளம் காட்டுகிறார். உண்மையுள்ள தமது சீஷருடன் நினைவு ஆசரிப்பு இராப்போஜனத்தைத் தொடங்கி வைக்கிறார்; அவர்கள் ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போகின்றனர். போகையில், தம்நிமித்தம் அவர்களெல்லாரும் இடறலடைவார்கள் என்று இயேசு சொல்கிறார். “நான் இடறலடையேன்” என்று பேதுரு உணர்ச்சிவசப்பட்டு கூறுகிறார். ஆனால் இயேசு அவரிடம், “இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய்” என்று சொல்கிறார். கெத்செமனே என்ற இடத்திற்கு வந்தபோது, விழித்திருக்கும்படி தம்முடைய சீஷருக்குச் சொல்லிவிட்டு, இயேசு ஜெபிப்பதற்குத் தனியே செல்கிறார். “அப்பா, பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என அவருடைய ஜெபத்தில் உணர்ச்சியின் விளிம்புக்கே செல்கிறார். (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) மூன்று தடவை இயேசு தம் சீஷர்களிடம் திரும்பி வருகிறார், மூன்று தடவையும்​—‘இதைப்போன்ற இத்தகைய நேரத்திலுங்கூட’​—அவர்கள் தூங்குவதைப் பார்க்கிறார்! (14:​29, 30, 36, 41, NW) நேரமும் வந்தது! இதோ, காட்டிக்கொடுப்பவனும் வந்துவிட்டான்!

28யூதாஸ் இயேசுவை நெருங்கி முத்தமிடுகிறான். பிரதான ஆசாரியனுடைய சேவகர்கள் அவரைக் கைதுசெய்வதற்கான அடையாளம் இதுவே. அவரைப் பிரதான ஆசாரியனின் விசாரணை மன்றத்துக்கு கொண்டு செல்கின்றனர், அங்கே பலர் அவருக்கு எதிராக பொய் சாட்சி சொல்கின்றனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று பொருந்தாத சாட்சியங்கள். இயேசுவோ வாய் திறப்பதில்லை. கடைசியாக, பிரதான ஆசாரியன் அவரைக் கேள்வி கேட்கிறார்: “நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா?” “நான் அவர்தான்” என்று இயேசு பதிலுரைக்கிறார். ‘தேவதூஷணம்’ என்று பிரதான ஆசாரியன் கத்துகிறார்; அவர் மரிக்க வேண்டியவர் என அவர்கள் எல்லாரும் கண்டனம் செய்கின்றனர். (14:​61-64) கீழே முற்றத்தில், இயேசுவை பேதுரு மூன்று தடவை மறுதலித்திருக்கிறார். சேவல் இரண்டாவது தடவை கூவுகையில் பேதுரு, இயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்தி மனங்கசந்து அழுகிறார்.

29பொழுது விடிந்தவுடனே ஆலோசனை சங்கம் கூடுகிறது; ஆலோசனைக்குப் பின், இயேசு கட்டப்பட்டவராக பிலாத்துவினிடம் அனுப்பப்படுகிறார். இயேசு குற்றமற்றவரென விரைவில் தெரிந்துகொண்ட பிலாத்து அவரை விடுதலைசெய்ய முயற்சிக்கிறான். எனினும், தலைமை ஆசாரியர்களால் தூண்டிவிடப்பட்ட கலகக் கூட்டத்தினரின் வற்புறுத்துதலால், இயேசுவைக் கழுமரத்தில் அறையும்படி தீர்ப்பளிக்கிறான். (“கபாலஸ்தலம்” என பொருள்படும்) கொல்கொதாவுக்கு இயேசு கொண்டு செல்லப்பட்டு கழுமரத்தில் அறையப்படுகிறார்; “யூதருடைய ராஜா” என்று அவருக்கெதிரான குற்றச்சாட்டு அதற்கு மேலே எழுதி வைக்கப்படுகிறது. “மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை” என்று வழியில் போவோர் வருவோர் அவரை நிந்திக்கின்றனர். நடுப்பகலில் (ஆறாம் மணிநேரத்தில்) பூமி முழுவதையும் இருள் மூடுகிறது, மூன்று மணி வரை அது நீடிக்கிறது. பின்பு இயேசு மிகுந்த சத்தமிட்டு, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என சொல்லிவிட்டு மரிக்கிறார். இவற்றைக் கண்டபோது, சேனாதிபதி, “மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்” என்று சொல்கிறான். ஆலோசனை சங்கத்தைச் சேர்ந்தவரும் கடவுளுடைய ராஜ்யத்தில் நம்பிக்கை வைத்திருப்பவருமான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு பிலாத்துவிடம் கேட்டு இயேசுவின் உடலை வாங்குகிறார்; அதைக் கற்பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில் வைக்கிறார்.​—15:​22, 26, 31, 34, 39.

30இயேசுவின் மரணத்துக்குப் பிற்பட்ட சம்பவங்கள் (16:​1-8). வாரத்தின் முதல்நாள் விடிகாலையில் மூன்று பெண்கள் கல்லறைக்குச் செல்கின்றனர். கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரிய கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். உள்ளே உட்கார்ந்திருக்கிற ‘ஒரு வாலிபர்,’ இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டிருப்பதை அவர்களிடம் சொல்கிறார். (16:5) அவர் அங்கில்லை, அவர்களுக்கு முன்னாக கலிலேயாவுக்குப் போகிறார். அவர்கள் பயந்து நடுநடுங்கி, கல்லறையைவிட்டு ஓடுகின்றனர்.

ஏன் பயனுள்ளது

31கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலம் முதல் இப்பொழுது வரை, மாற்குவின் வாசகர் யாவரும், மேசியாவைக் குறித்த எபிரெய வேதாகமத்தின் பல தீர்க்கதரிசன நிறைவேற்றங்களை அடையாளம் கண்டுகொண்டிருக்கின்றனர்; அதற்கு இப்புத்தகத்திலுள்ள இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உயிர்த்துடிப்புமிக்க வர்ணனை உதவியிருக்கிறது. “இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்” என்ற முதல் மேற்கோளிலிருந்து, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கழுமரத்தில் அவர் கூறின வேதனை நிறைந்த வார்த்தைகள் வரை மாற்கு பதிவுசெய்திருக்கும் இயேசுவின் வைராக்கியமிக்க ஊழியத்தின் முழு விவரம், எபிரெய வேதாகமம் முன்னறிவித்தவற்றோடு ஒத்திருக்கிறது. (மாற். 1:2; 15:34; மல். 3:1; சங். 22:1) மேலும், அவர் நிகழ்த்திய அற்புதங்களும் அருமையான செயல்களும், அவருடைய பயனளிக்கும் போதனைகளும், அவருடைய வெளிப்படையான கண்டனக் குறிப்புகளும், யெகோவாவின் வார்த்தையையும் ஆவியையும் அவர் முழுமையாக சார்ந்திருப்பதும், செம்மறியாடுகளை அவர் கனிவாக ‘மேய்ப்பதும்,’ அவரை கடவுளுடைய குமாரனெனவும் அதிகாரத்துடன் வந்தவரெனவும் காட்டுகின்றன. அவர் யெகோவாவிடமிருந்து அதிகாரம் பெற்றவராய் ‘அதிகாரத்தோடு’ போதித்தார். “கடவுளின் நற்செய்தியைப் பிரசங்கி”ப்பதை, அதாவது, “கடவுளின் ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிப்பதை இங்கே பூமியில் தம்முடைய “முதன்மையான” வேலை என அறிவுறுத்தினார். அவருடைய போதகத்தைக் கேட்ட யாவருக்கும் அது பெரும் பயனளித்திருக்கிறது.​—மாற். 1:​22, 14, 15, தி.மொ.

32இயேசு தம்முடைய சீஷரிடம், “தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது” என்று சொன்னார். ‘தேவனுடைய ராஜ்யம்’ என்ற இந்தச் சொற்றொடரை 14 தடவை பயன்படுத்தி, அந்த ராஜ்யத்தில் ஜீவனடையவிருப்போருக்கு உதவும் நியமங்கள் பலவற்றை மாற்கு குறிப்பிடுகிறார். “என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” என்று இயேசு சொன்னார். ஜீவனடைவதற்குத் தடையாயிருக்கும் எதுவும் நீக்கப்பட வேண்டும். “இரண்டு கண்களுடனும் கெஹென்னாவுக்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒற்றைக் கண்ணனாய்க் கடவுளுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.” இயேசு மேலும் அறிவித்ததாவது: “எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை.” “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது”! பிரதான கட்டளைகள் இரண்டிற்கும் கீழ்ப்படிவதே சர்வாங்க தகனபலிகளையும் மற்றெல்லா பலிகளையும் பார்க்கிலும் அதிக மதிப்புள்ளதென்று பகுத்துணருகிறவன் “தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல” என்று சொன்னார். இவை மட்டுமன்றி, மாற்கு சுவிசேஷத்தில் ராஜ்யம் சம்பந்தப்பட்ட போதனைகள் மற்றவையும் உள்ளன; நம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு உதவும் நல்ல அறிவுரைகள் இவை.​—4:11; 8:35; 9:​43-48, NW; 10:​13-15, 23-25; 12:​28-34.

33“மாற்கு எழுதின” இந்த நற்செய்தியை ஓரிரு மணிநேரத்தில் முழுமையாக வாசித்து முடித்துவிடலாம். இவ்வாறு அது, வாசகருக்கு இயேசுவின் ஊழியத்தைப் பற்றிய சிலிர்க்க வைக்கும், விறுவிறுப்பான, ஊக்கமிக்க விவரிப்பை அளிக்கலாம். தேவாவியால் ஏவப்பட்ட இந்த விவரத்தை வாசிப்பதும், கூர்ந்து ஆராய்வதும், தியானிப்பதும் எப்பொழுதும் பயனுள்ளது. முதல் நூற்றாண்டைப் போலவே இன்றும் மாற்குவின் சுவிசேஷம், துன்புறுத்துதலைச் சகிக்கும் கிறிஸ்தவர்களுக்கு உதவும்; ஏனெனில் உண்மை கிறிஸ்தவர்கள் ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களை’ இப்பொழுது எதிர்ப்படுகின்றனர். எனவே, நமக்கு முன்மாதிரியாய் உள்ள இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இந்தப் பதிவில் காணப்படுவதைப் போன்ற தெய்வீக வழிநடத்துதல் இன்றும் தேவை. அதை வாசியுங்கள், அதன் உயிர்த்துடிப்பான நிகழ்ச்சிகளை அறிந்து ஊக்கமடையுங்கள். நம்முடைய விசுவாசத்தின் பிரதான காரியகர்த்தாவும் அதைப் பூரணமாக்குகிறவருமான இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்க உற்சாகத்தைப் பெறுங்கள், அவரைப் போலவே சந்தோஷத்தை இழக்காமல் கடவுளை சேவியுங்கள். (2 தீ. 3:1; எபி. 12:​2; NW) இயேசுவை செயல்வீரராக நோக்குங்கள்; அவருடைய வைராக்கியத்தை அறிந்து ஊக்கம் பெறுங்கள்; சோதனை மற்றும் எதிர்ப்பின் மத்தியில் விட்டுக்கொடாத அவருடைய உத்தமத்தையும் தைரியத்தையும் பின்பற்றுங்கள். தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் இந்த வளம் மிகுந்த பகுதியிலிருந்து ஆறுதலடையுங்கள். நித்திய ஜீவனை நாடும் விஷயத்தில் இது உங்களுக்கு நன்மையளிப்பதாக!

[அடிக்குறிப்புகள்]

a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 337.

[கேள்விகள்]

1. மாற்குவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி என்ன அறிந்திருக்கிறோம்?

2, 3. (அ) மிஷனரி சேவையில் ஈடுபட மாற்குவுக்கு எது தூண்டுதலளித்தது? (ஆ) மற்ற மிஷனரிகளுடன், முக்கியமாக பேதுருவோடும் பவுலோடும் எத்தகைய கூட்டுறவை அவர் வைத்திருந்தார்?

4-6. (அ) மாற்கு தன்னுடைய சுவிசேஷத்துக்கு தேவையான நுட்பவிவரங்களை எவ்வாறு பெற முடிந்தது? (ஆ) பேதுருவுடன் அவருக்கிருந்த நெருங்கிய தோழமையை எது குறிப்பிட்டுக் காட்டுகிறது? (இ) இந்தச் சுவிசேஷத்தில் பேதுருவின் பண்புகளைக் காட்டும் உதாரணங்களைக் குறிப்பிடுங்கள்.

7. மத்தேயுவிலிருந்து மாற்குவின் சுவிசேஷத்தை எது தனிப்படுத்திக் காட்டுகிறது?

8. மாற்குவின் சுவிசேஷம் ரோமருக்காகவே எழுதப்பட்டதை என்ன அம்சங்கள் காட்டுகின்றன?

9. மாற்கு சுவிசேஷம் எங்கே, எப்போது எழுதப்பட்டது, அதன் நம்பகத்தன்மையை எது உறுதிப்படுத்துகிறது?

10. மாற்கு புத்தகத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள வசனங்களை எவ்வாறு கருதவேண்டும், ஏன்?

11. (அ) மாற்குவின் சுவிசேஷம் திருத்தமானதென எது நிரூபிக்கிறது, இயேசுவிற்கு இருந்த என்ன அதிகாரம் அறிவுறுத்தப்படுகிறது? (ஆ) இது ஏன் “நற்செய்தி,” எந்தக் காலப்பகுதி மாற்கு சுவிசேஷத்தில் அடங்கியுள்ளது?

12. மாற்குவின் முதல் 13 வசனங்களில் என்ன விஷயங்கள் அடங்கியுள்ளன?

13. ‘கடவுளின் பரிசுத்தராக’ தம்முடைய அதிகாரத்தை ஆரம்பத்தில் இயேசு என்ன வகைகளில் மெய்ப்பித்துக் காட்டுகிறார்?

14. பாவங்களை மன்னிக்க தமக்கு அதிகாரம் இருப்பதை இயேசு எவ்வாறு நிரூபிக்கிறார்?

15. தம்முடைய அற்புதங்களை மறுப்போரைக் குறித்து இயேசு என்ன அறிவிக்கிறார், குடும்ப உறவுகளைப் பற்றி என்ன சொல்கிறார்?

16. இயேசு உவமைகளைப் பயன்படுத்தி, ‘தேவனுடைய ராஜ்யத்தை’ பற்றி என்ன போதிக்கிறார்?

17. இயேசுவுக்கிருந்த பெரும் அதிகாரத்தை அவருடைய அற்புதங்கள் எவ்வாறு காட்டுகின்றன?

18. (அ) இயேசு ஊழியத்தை எவ்வாறு விரிவாக்கினார்? (ஆ) போதிக்கவும், அற்புதங்களை நடப்பிக்கவும் எது இயேசுவைத் தூண்டுவித்தது?

19, 20. (அ) எவ்வாறு இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் கடிந்துகொள்கிறார்? (ஆ) எந்த சந்தர்ப்பத்தில் பேதுருவும் கடிந்துகொள்ளப்படுகிறார்?

21. (அ) “கடவுளின் ராஜ்யம் வல்லமையோடு வருவதை” முன்னதாகவே யார் காண்கின்றனர், எவ்வாறு? (ஆ) ராஜ்யத்தை முதலாவதாக வைப்பதை இயேசு எவ்வாறு அறிவுறுத்துகிறார்?

22. பெரேயாவில் இயேசுவினுடைய ஊழியத்தை சிறப்பித்துக் காட்டும் அறிவுரைகள் என்ன?

23. எருசலேமுக்குச் செல்லும் வழியில் என்ன உரையாடலும் அற்புதமும் நிகழ்கின்றன?

24, 25. (அ) இயேசு தம்முடைய அதிகாரத்தை என்ன செயல்களால் நிரூபிக்கிறார்? (ஆ) என்ன விவாதங்களை உபயோகித்து தம் எதிரிகளுக்குப் பதிலளிக்கிறார்? (இ) இயேசு அந்தக் கூட்டத்தாருக்கு என்ன எச்சரிக்கை விடுக்கிறார், தம்முடைய சீஷர்களிடம் எதைக் குறித்து பாராட்டிப் பேசுகிறார்?

26. மாற்கு பதிவுசெய்துள்ள ஒரே ஒரு நீண்ட பேச்சு எது, என்ன எச்சரிப்புரையோடு அது முடிகிறது?

27. கெத்செமனேயில் இயேசு காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பு நடந்த சம்பவங்களை விவரியுங்கள்.

28. இயேசு கைதுசெய்யப்படுவது, பிரதான ஆசாரியருக்கு முன்பாக கொண்டுசெல்லப்படுவது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் யாவை?

29. இயேசுவின் கடைசி விசாரணையையும் கழுமரத்தில் அறையப்படுவதையும் பற்றி மாற்கு என்ன பதிவுசெய்கிறார், ராஜ்யம் விவாதத்திற்குரிய விஷயமாக எவ்வாறு காட்டப்படுகிறது?

30. வாரத்தின் முதலாம் நாளில், கல்லறையருகில் என்ன நடக்கிறது?

31. (அ) இயேசுவே மேசியா என்பதற்கு மாற்கு எவ்வாறு சாட்சிபகருகிறார்? (ஆ) கடவுளுடைய குமாரனாக இயேசுவின் அதிகாரத்தை எது நிரூபிக்கிறது, அவர் எதை அறிவுறுத்தினார்?

32. ‘தேவனுடைய ராஜ்யம்’ என்ற சொற்றொடரை மாற்கு எத்தனை தடவை பயன்படுத்துகிறார், ராஜ்யத்தின் மூலம் ஜீவனடைவதற்கு அவர் குறிப்பிடும் நியமங்கள் சில யாவை?

33. (அ) மாற்குவின் சுவிசேஷத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்? (ஆ) என்ன போக்கை பின்பற்ற மாற்கு நம்மை ஊக்குவிக்கிறது, ஏன்?