பைபிள் புத்தக எண் 47—2 கொரிந்தியர்
பைபிள் புத்தக எண் 47—2 கொரிந்தியர்
எழுத்தாளர்: பவுல்
எழுதப்பட்ட இடம்: மக்கெதோனியா
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 55
அது பெரும்பாலும் பொ.ச. 55-ன் கோடை காலத்தின் முடிவாக அல்லது இலையுதிர் காலத்தின் ஆரம்பமாக இருக்கலாம். கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவ சபை பற்றி கேள்விப்பட்ட இன்னும் சில விஷயங்கள், அப்போஸ்தலன் பவுலுக்குக் கவலையை ஏற்படுத்தின. கொரிந்தியருக்கு அவர் தன் முதல் நிருபத்தை எழுதி சில மாதங்களே ஆகியிருந்தன. தீத்துவும் கொரிந்துவுக்கு அனுப்பப்பட்டிருந்தார்; யூதேயாவிலிருந்த பரிசுத்தவான்களுக்காக காணிக்கை சேகரிப்பதில் உதவுவதற்கும், அத்தோடு பவுலின் முதல் நிருபத்துக்கு கொரிந்தியர் எப்படி பிரதிபலிக்கிறார்கள் என்பதை காண்பதற்கும் தீத்து அங்கு அனுப்பப்பட்டிருந்தார். (2 கொ. 8:1-6; 2:13) அவர்கள் அக்கடிதத்தை எவ்வாறு ஏற்றிருந்தனர்? அக்கடிதம் அவர்களைத் துக்கப்படவும் மனந்திரும்பவும் வைத்ததை அறிந்ததில் பவுல் அடைந்த ஆறுதலுக்கு அளவே இல்லை! மக்கெதோனியாவிலிருந்த பவுலிடம் தீத்து இந்த நல்ல செய்தியை கொண்டு வந்திருந்தார். தன் பிரியத்திற்குரிய உடன் விசுவாசிகளான கொரிந்தியர்களுக்காக இப்போது அப்போஸ்தலனுடைய இருதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது.—7:5-7; 6:11.
2ஆகவே பவுல் மீண்டும் கொரிந்தியருக்கு கடிதம் எழுதினார். இதயத்தைக் கனிவிக்கும், பயனுள்ள இந்த இரண்டாவது நிருபம் மக்கெதோனியாவில் எழுதப்பட்டு, தீத்துவால் கொண்டு செல்லப்பட்டது என்பது தெள்ளத் தெளிவானதே. (9:2, 4; 8:16-18, 22-24) கொரிந்தியருக்குள் ‘மகா பிரதான அப்போஸ்தலர்’ இருந்தனர்; இவர்களைக் “கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள்” என்றும் பவுல் விவரித்தார். இந்தக் கவலைக்குரிய விஷயமே இக்கடிதத்தை எழுதும்படி பவுலைத் தூண்டியது. (11:5, 13, 14) அனுபவமற்ற இந்தப் புதிய சபையின் ஆவிக்குரிய நலனிற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது; மேலும் அப்போஸ்தலனாக பவுலின் அதிகாரத்தைக் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இவ்வாறு கொரிந்துவுக்கு எழுதின அவருடைய இரண்டாவது நிருபம் பெரும் தேவையைப் பூர்த்தி செய்தது.
3“மூன்றாந்தரமாக உங்களிடம் வர ஆயத்தமாயிருக்கிறேன்” என்று பவுல் சொன்னது கவனிக்க வேண்டியது. (2 கொ. 12:14, தி.மொ.; 13:1) தன் முதல் நிருபத்தை அவர் எழுதினபோது, இரண்டாவது தடவை அவர்களைச் சென்று காண திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் செல்ல தயாராயிருந்தபோதிலும், ‘மகிழ்ச்சிக்குரிய இந்த இரண்டாவது சந்தர்ப்பம்’ கைகூடிவரவில்லை. (1 கொ. 16:5; 2 கொ. 1:15, NW) ஆகவே, பவுல் ஒரு தடவை மாத்திரமே சென்றிருந்தார்; அதுவும் பொ.ச. 50-52-க்கு இடைப்பட்ட காலத்தில் 18 மாதங்களை செலவழித்திருந்தார். அப்போதுதான் கொரிந்துவிலுள்ள அந்தக் கிறிஸ்தவ சபையும் ஸ்தாபிக்கப்பட்டது. (அப். 18:1-18) எனினும், மீண்டும் கொரிந்துவுக்குச் செல்ல வேண்டுமென்ற பவுலின் விருப்பம் பின்னர் நிறைவேறியது. பெரும்பாலும் பொ.ச. 56-ல் கிரீஸில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது, அந்தக் காலப்பகுதியில் பாதியை கொரிந்துவில் செலவழித்தார். அங்கிருக்கையில்தான் அவர் ரோமருக்குத் தன் நிருபத்தை எழுதினார்.—ரோ. 16:1, 23; 1 கொ. 1:15.
4ஒன்று கொரிந்தியரோடும், பவுலின் மற்ற நிருபங்களோடும் இரண்டு கொரிந்தியரும் பைபிளின் அதிகாரப்பூர்வமான தொகுப்பின் நம்பகமான பகுதியாக எப்போதும் கருதப்பட்டு வந்திருக்கிறது. கொரிந்திய சபைக்குள் நம்மால் மீண்டும் ஒருமுறை நோட்டம்விட
முடிகிறது; அவர்களுக்கும் நமக்கும் அறிவுரை கூறும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏவப்பட்ட பவுலின் வார்த்தைகளிலிருந்து பயனடையவும் நம்மால் முடிகிறது.இரண்டு கொரிந்தியரின் பொருளடக்கம்
5“எல்லாவித ஆறுதலின் கடவு”ளிடமிருந்து உதவி (1:1–2:11). தன் ஆரம்ப வாழ்த்துரையில் பவுல் தீமோத்தேயுவையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார். “இரக்கங்களின் பிதா, எல்லாவித ஆறுதலின் கடவுள், எங்களுடைய சகல உபத்திரவத்திலும் எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்,” “ஸ்தோத்திரத்துக்குரியவர்” என குறிப்பிட்டு, நாமும் அதுபோல மற்றவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் என பவுல் சொல்கிறார். பவுலும் அவருடைய தோழர்களும் கடும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தனர்; அவர்களுடைய உயிர் ஆபத்தில் இருந்தது. எனினும் கடவுள் அவர்களைக் காப்பாற்றினார். கொரிந்தியரும் அவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம் உதவலாம். தனது உண்மைத்தன்மையின் மீதும் கடவுளுடைய தகுதியற்ற தயவின் மீதும் இருக்கும் நம்பிக்கையிலேயே அவர்களுக்குக் கடிதத்தை எழுதுகிறார். கடவுளுடைய வாக்குறுதிகள் இயேசுவினால் “ஆம்” என்பதாய் ஆகியிருக்கின்றன. கிறிஸ்துவுக்குரியவர்களை அவர் அபிஷேகம் செய்து, ‘வரவிருப்பதன் உறுதிச்சான்றை, அதாவது, ஆவியை’ அவர்களுடைய இருதயங்களில் அளித்திருக்கிறார்.—1:3, 4, தி.மொ., 20, 22, NW.
6தன் முதல் நிருபத்தின் ஐந்தாம் அதிகாரத்தில் பவுல் ஒருவனைப் பற்றி முக்கியமாய் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவன் சபை நீக்கம் செய்யப்பட்டதாக தோன்றுகிறது. அவன் மனம் வருந்தி துக்கத்தை வெளிப்படுத்துகிறான். ஆகையால், அவனை மனப்பூர்வமாய் மன்னித்து, மனந்திரும்பியவனிடம் தங்கள் அன்பை உறுதிப்படுத்தும்படி பவுல் கொரிந்தியருக்குச் சொல்கிறார்.
7புதிய உடன்படிக்கையின் ஊழியர்களாய் தகுதிபெற்றது (2:12–6:10). தானும் கொரிந்திய கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவுடன் வெற்றி பவனியில் இருப்பதைப் போல் பவுல் பேசுகிறார். (அந்நாளில் வெற்றிவாகை சூடிய படைவீரர்கள் பவனி வரும் பாதையின் வழியெங்கும் எரிக்கப்பட்ட சுகந்தவர்க்க வாசனையைப் பற்றி அந்தக் கொரிந்தியர் அறிந்திருந்தனர்.) கிறிஸ்தவராக ஜீவனடையப் போகிறவர் முகரும் ‘வாசனைக்கும்’ அழிந்துபோகப் போகிறவர்கள் முகரும் ‘வாசனைக்கும்’ நிச்சயமாகவே பெரும் வேறுபாடு உண்டு. ‘நாங்கள் கடவுளின் வார்த்தையை லாபத்திற்கென்று கலப்பாக்குகிறவர்கள் அல்லர்’ என்று பவுல் வலியுறுத்திக் கூறுகிறார்.—2:16, 17, தி.மொ.
8கொரிந்தியருக்குக் கொடுக்க அல்லது அவர்களிடமிருந்து பெற, பவுலுக்கும் அவருடைய உடன் ஊழியர்களுக்கும் சிபாரிசு கடிதங்கள் தேவையில்லை. கொரிந்திய விசுவாசிகள்தான், ‘ஊழியர்களாக எங்களால்’ கற்பலகைகளில் அல்ல, ‘சதை பலகைகளாகிய இருதயங்களில்’ எழுதப்பட்ட சிபாரிசு கடிதங்களாக இருக்கின்றனர் என்று பவுல் அறிவிக்கிறார். புதிய உடன்படிக்கையின் இந்த ஊழியர்களைக் கடவுள் நன்கு தகுதிபெற செய்திருக்கிறார். எழுதப்பட்ட தீர்ப்பானது மரண தண்டனைக்குரியதாய், மகிமையில் மங்கிப் போனதாய், தற்காலிகமானதாய் இருந்தது. எனினும், ஆவியின் தீர்ப்போ, ஜீவனுக்கு வழிநடத்துவதாய், நிரந்தரமானதாய், மகிமையில் மிகுந்திருப்பதாய் உள்ளது. ‘மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது’ இஸ்ரவேல் புத்திரரின் இருதயங்களின்மீது முக்காடு இருக்கிறது, ஆனால் யெகோவாவிடம் திரும்புகையில், அந்த முக்காடு நீக்கப்படுகிறது, அவர்கள் “அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூப”மாக்கப்படுகிறார்கள்.—3:3, NW, 15, 18.
9பின்பு பவுல் தொடர்ந்து கூறுகிறதாவது: ‘எங்களுக்குக் காட்டப்பட்ட இரக்கத்தின் காரணமாகவே இந்த ஊழியத்தை உடையோராக இருக்கிறோம். அந்தரங்க காரியங்களை ஒழித்துவிட்டோம், கடவுளுடைய வார்த்தையைக் கலப்படம் செய்கிறதில்லை, சத்தியத்தையே வெளிப்படுத்தி எங்களைச் சிபாரிசு செய்திருக்கிறோம். நற்செய்தி மனதை எட்டாதிருந்தால், அது இந்த உலகத்தின் கடவுள் அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கியிருப்பதே காரணமாகும். எனினும் எங்கள் இருதயங்கள், கிறிஸ்துவின் முகத்தால் கடவுளின் மகிமையான அறிவால் பிரகாசிக்கும்படி செய்யப்பட்டுள்ளன. நம்மிடமுள்ள இந்தப் பொக்கிஷம் எவ்வளவு மேன்மையானது! இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை கடவுளுடையதாய் இருக்கும்படி இது மண்பாண்டங்களில் உள்ளது. துன்புறுத்துதலின்கீழும் அழுத்தத்தின்கீழும், ஆம், மரணத்தை எதிர்ப்படுகையிலுங்கூட, விசுவாசத்தைக் காண்பித்து சகித்து நிலைத்திருக்கிறோம். ஏனெனில் குறுகிய கால உபத்திரவம் மிக மேன்மையுள்ளதும் நித்தியமுமாயிருக்கிற ஒரு மகிமையை நமக்கு உண்டாக்குகிறது. ஆகவே நமது கண்களை நாம் காணப்படாதவற்றின் மீது ஊன்ற வைக்கிறோம்.’—4:1-18, NW.
10‘நம்முடைய பூமிக்குரிய வீடு அழிந்து பரலோகங்களிலுள்ள நித்திய வீட்டிற்கு இடமளிக்கும் என்று அறிந்திருக்கிறோம். இதற்கிடையில் விசுவாசத்தில் நாம் தொடர்ந்து முன்னேறுகிறோம், நல்ல தைரியத்தோடும் இருக்கிறோம். கிறிஸ்துவோடிராத போதிலும், அவருக்கு ஏற்கத்தகுந்தவர்களாக இருக்க நாடுகிறேம்’ என்று பவுல் எழுதுகிறார். (5:1, 7-9, NW) கிறிஸ்துவுடன் ஐக்கியமாயிருப்போர் ‘புது சிருஷ்டியாகவும்,’ ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை பெற்றவர்களாகவும் உள்ளனர். அவர்கள் “கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிரு”க்கின்றனர். (5:17, 20) எல்லா விதத்திலும் பவுல் தன்னை கடவுளுடைய ஊழியனாய் நிரூபிக்கிறார். எவ்வாறு? ‘மிகுந்த சகிப்பிலும், உபத்திரவங்களிலும், அடிகளிலும், உழைப்புகளிலும், கண் விழிப்புகளிலும், தூய்மையிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயாளத்திலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்திய வசனத்திலும், தெய்வ வல்லமையிலும், தரித்திரரென்றாலும் அநேகரை ஐசுவரியவான்களாக ஆக்குகிறவர்களாகவும், ஒன்றுமே இல்லாதவர்கள் என்றாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் இருப்பதன் மூலமே.’—6:4-10, தி.மொ.
11‘பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்துதல்’ (6:11–7:16). ‘உங்களை ஏற்பதற்கு எங்கள் இருதயம் விரிவாகியுள்ளது’ என்று பவுல் கொரிந்தியருக்குச் சொல்கிறார். கனிவான பாசத்தை எல்லாரிடமும் காட்டுமளவுக்கு அவர்கள் தாராளமாக பழகவேண்டும். ஆனால் இதோ ஓர் எச்சரிக்கை! “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.” (6:11, NW, 14) ஒளிக்கும் இருளுக்கும், அல்லது கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் சம்பந்தமேது? ஜீவனுள்ள கடவுளின் ஆலயமாக, அவர்கள் அசுத்தமானதைத் தொடாமல் தனியே பிரிந்திருக்க வேண்டும். பவுல் சொல்வதாவது: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.”—7:1.
12மேலும், “ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்” என்று பவுல் சொல்கிறார். (7:4) ஏன்? தீத்துவின் வருகை மாத்திரமல்ல, கொரிந்தியர்கள் பவுலைக் காண ஆவலாய் இருப்பதையும், அவர்கள் துக்கப்படுவதையும், அவர்கள் பக்தி வைராக்கியத்துடன் இருப்பதையும் பற்றி அவர் கேள்விப்பட்டதும் அதற்குக் காரணம். தன்னுடைய முதல் நிருபம் அவர்களுக்குத் தற்காலிக துக்கத்தை உண்டாக்கியதை அவர் உணருகிறார்; ஆனால் இரட்சிப்படையும்படி மனந்திரும்புவதற்கேதுவான துக்கத்தை அவர்கள் வெளிக்காட்டியதற்காக அவர் சந்தோஷப்படுகிறார். தீத்துவுடன் ஒத்துழைப்பதற்காக அவர்களைப் பாராட்டுகிறார்.
13தாராள குணம் பலனளிக்கப்படும் (8:1–9:15). தேவையிலிருக்கும் “பரிசுத்தவான்களுக்”காக நன்கொடைகளை சேர்க்கும் விஷயத்தில், பவுல் மக்கெதோனியரின் முன்மாதிரியைக் குறிப்பிடுகிறார். அதிக வறுமையிலிருந்த போதிலும் அவர்கள் காட்டிய தாராள குணம் உண்மையில் அவர்களுடைய சக்திக்கு மீறியது. அதே போன்ற தாராள குணத்தை இப்போது கொரிந்தியர்களிடமும் காண பவுல் விரும்புகிறார். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமுள்ள தங்களுடைய உண்மையான அன்பின் வெளிக்காட்டாக இருக்கும்; ஏனெனில் அவர்கள் ஐசுவரியவான்களாகும்படி இயேசு கிறிஸ்து தரித்திரரானார். இவ்வாறு, தங்களுக்குரியவற்றை தாராளமாக கொடுப்பது சரிசமமாக பகிர்ந்துகொள்வதில் விளைவடையும்; இவ்வாறு அதிகமுள்ளவனுக்கு அதிகமிராது, குறைச்சலுள்ளவனுக்கு குறைவுபடாது. இந்த வகையான நன்கொடை சம்பந்தமாகவே தீத்துவும் மற்றவர்களும் கொரிந்தியர்களிடம் அனுப்பப்பட்டிருக்கின்றனர். கொரிந்தியரின் தாராள குணத்தையும் உடனடியாக செயல்படும் அவர்கள் குணத்தையும் பவுல் பெருமையாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்; அந்தப் பெரும் நன்கொடையை சேர்க்கும் விஷயத்தில் ஏதோவொரு விதத்தில் தவறுவதனால் அவர்கள் அவமானப்படுவதை அவர் விரும்புகிறதில்லை. ஆம், “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.” அது மனப்பூர்வமாய் கொடுக்கப்பட வேண்டும்; ஏனெனில் “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” மேலும், அவர்களிடம் தம்முடைய தகுதியற்ற தயவை மிகுதியாக காட்டவும், எல்லா விதமான தாராள குணத்தில் அவர்களை பெருகும்படி செய்விக்கவும் அவரால் முடிகிறது. “தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.”—9:1, 6, 7, 15.
14பவுல் அப்போஸ்தலத்துவத்தின் சார்பாக வாதாடுகிறார் (10:1–13:14). தோற்றத்தில் தான் தாழ்மையானவர் என்பதை பவுல் ஒப்புக்கொள்கிறார். ஆனால் கிறிஸ்தவர்கள் மாம்சத்தின்படி போர் செய்கிறதில்லை; கடவுளின் அறிவுக்கு எதிர்மாறான வாதங்களைக் கவிழ்ப்பதற்கு அவர்களுடைய போராயுதங்கள் ஆவிக்குரியவை, “தேவபலமுள்ளவை.” (10:4) அப்போஸ்தலனின் நிருபங்கள் பாரமானவை; ஆனால் அவருடைய பேச்சோ அற்பமாயிருக்கிறது என்று சிலர் தோற்றத்தை வைத்து எடை போடுகின்றனர். பவுலின் செயல்கள் நிருபத்தில் காணப்படும் அவருடைய வார்த்தையைப் போலவே உறுதியானவையாய் இருக்குமென்பதை அவர்கள் அறிய வேண்டும். வேறொருவரின் பிராந்தியத்தில் நிகழ்ந்த சாதனைகளைப் பற்றி பவுல் பெருமையாய் பேசிக்கொண்டில்லை என்பதை கொரிந்தியர்கள் உணர வேண்டும். அவரே நேரில் நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்திருந்தார். மேலும், பெருமை பாராட்ட ஏதாவது காரணமிருந்தால், அது யெகோவாவைப் பற்றியே இருக்கட்டும்.
15கொரிந்திய சபையைக் கற்புள்ள கன்னிகையாய் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்க தனக்கிருக்கும் பொறுப்பைப் பவுல் உணருகிறார். சர்ப்பத்தின் தந்திரத்தினால் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதுபோல், அவர்களுடைய மனதும் கெடுக்கப்படும் ஆபத்து இருக்கிறது. ஆகையால், கொரிந்திய சபையின் “மகா பிரதான அப்போஸ்தல”ருக்கு எதிராக பவுல் உறுதியோடு பேசுகிறார். (11:5) அவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள். சாத்தான்கூட ஒளியின் தூதனாக எப்போதும் வேஷம் போடுகிறான்; அப்படியென்றால் அவனுடைய ஊழியர்களும் அதையே செய்வதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் கிறிஸ்துவின் ஊழியராக, பவுலோடு ஒப்பிடுகையில் அவர்கள் எவ்வாறு உள்ளனர்? சிறையிருப்பு, அடிகள், மூன்று தடவை கப்பற்சேதம், அநேக ஆபத்துக்கள், அடிக்கடி தூக்கமின்றி அல்லது உணவின்றி போதல் என அவர் சகித்திருப்பவை எத்தனை எத்தனையோ. எனினும் இவை எல்லாம் அவருக்கு சம்பவித்திருந்தும், சபைகளின் தேவைகளை அவர் ஒருபோதும் மறக்கவில்லை; யாராவது ஒருவர் இடறலடையச் செய்யப்பட்டால் அதைக் கண்டு அவர் எப்போதும் சினமடைந்தார்.
16ஆகவே பெருமைப்பட யாருக்காவது காரணமிருக்கிறதென்றால், அது பவுலுக்கு மட்டுமே இருந்தது. கொரிந்துவில் அப்போஸ்தலர்கள் என தங்களை அழைத்துக் கொண்டவர்கள், வாக்குக்கெட்டாத காரியங்களைக் கேட்பதற்குப் பரதீஸுக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக தங்களைப் பற்றி சொல்ல முடியுமா? எனினும் பவுல் தன் பலவீனங்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவர் மட்டுக்குமீறி பெருமைப்படாதபடிக்கு அவருக்கு “மாம்சத்திலே ஒரு முள்” கொடுக்கப்பட்டது. அதை நீக்கும்படி பவுல் கடவுளை வேண்டினார், ஆனால், “என் தகுதியற்றத் தயவு உனக்குப் போதுமானது” என்ற பதிலைப் பெற்றார். “கிறிஸ்துவின் வல்லமை” கூடாரத்தைப்போல் தன்மீது தங்கியிருக்கும்படி பவுல் தன் பலவீனங்களைக் குறித்தே பெருமைபாராட்டுவார். (12:7, 9, NW) எந்த விதத்திலும் அந்த ‘மகா பிரதான அப்போஸ்தலருக்குக்’ குறைவுபட்டவர் அல்ல பவுல். மேலும் “எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும்” அவர்களிடம் அவர் நடப்பித்த அப்போஸ்தலத்துவத்தின் நிரூபணங்களை கொரிந்தியர் கண்டிருக்கிறார்கள். அவரால் அனுப்பப்பட்ட தீத்துவும் மற்ற உடன் ஊழியர்களும் தங்களுடைய அனுகூலத்திற்காக கொரிந்தியர்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை; அதே போலவே பவுலும் அவர்களுடைய உடைமைகளை நாடுகிறதில்லை.—12:11, 12.
17சகலமும் அவர்களைக் கட்டியெழுப்புவதற்குத்தான். எனினும், பவுல் கொரிந்தியரை சந்திக்க வருகையில், மாம்சத்தின் கிரியைகளிலிருந்து மனந்திரும்பாதிருக்கும் சிலர் அங்கு இருப்பார்களோ என்ற பயம் தனக்கிருப்பதை குறிப்பிடுகிறார். அவர், ஒருவரையும் தப்பவிடாமல் தக்க நடவடிக்கை எடுப்பாரென்று தவறுசெய்பவர்களை முன்னதாகவே எச்சரிக்கிறார். இயேசு கிறிஸ்துவுக்கு இசைவான விசுவாசத்தில் இருக்கிறார்களா என தங்களைத் தாங்களே தொடர்ந்து சோதித்துப் பார்க்கும்படி சபையிலுள்ள எல்லாருக்கும் அறிவுரை கூறுகிறார். பவுலும் தீமோத்தேயுவும் அவர்கள் சார்பாக கடவுளிடம் ஜெபிப்பார்கள். அன்புக்கும் சமாதானத்திற்கும் தேவனானவர் அவர்களுடன் இருக்கும்படிக்கு, மகிழ்ந்திருக்கவும் ஒற்றுமையில் மீண்டும் ஸ்தாபிக்கப்படவும் வேண்டும் என தான் விரும்புவதைத் தெரிவிக்கிறார். பரிசுத்தவான்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதத்துக்காக தன் வாழ்த்துதலையும் குறிப்பிட்டு தன் கடிதத்தை முடிக்கிறார்.
ஏன் பயனுள்ளது
18இரண்டு கொரிந்தியரில் காட்டப்பட்டபடி, கிறிஸ்தவ ஊழியத்தின்மீது பவுலுக்கு இருந்த போற்றுதல் எவ்வளவு உந்துவிப்பதாயும் ஊக்கமூட்டுவதாயும் உள்ளது! நாமும் அவரைப் போலவே அதைக் கருதுவோமாக. கிறிஸ்தவ ஊழியராக கடவுளிடமிருந்து தகுதிபெற்றவர், கடவுளுடைய வார்த்தையை சுய ஆதாயத்திற்கு 2:14-17; 3:1-5; 4:7; 5:18-20; 6:1.
பேசுபவர் அல்ல; மனப்பூர்வமாக சேவிக்கிறவர். அவரை சிபாரிசு செய்வது எந்தவொரு கடிதமும் அல்ல, ஊழியத்தில் அவர் பிறப்பிக்கும் கனிகளே. எனினும், அந்த ஊழியம் நிச்சயமாகவே மகிமை பொருந்தியதுதான்; அதற்காக அவர் அகந்தையுள்ளவராக வேண்டியதில்லை. காரணம், அந்த வல்லமை கடவுளுடையது என தெளிவாய் தெரியும்படிக்கு, அபூரணர்களாக கடவுளுடைய ஊழியர்கள், இந்த ஊழிய பொக்கிஷத்தை எளிதில் உடையும் தன்மையுள்ள மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறார்கள். ஆகவே கடவுளுடைய ஊழியர்கள் எனும் பெரும் பாக்கியத்தை ஏற்பதற்கு மனத்தாழ்மை தேவை. ‘கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாய்ச்’ சேவிப்பது, கடவுள் அருளிய எத்தகைய தகுதியற்ற தயவு! அவ்வாறெனில், ‘கடவுளின் தகுதியற்ற தயவை ஏற்று அதன் நோக்கத்தைத் தவறவிடாதிருக்கும்படி’ கூறும் பவுலின் அறிவுரை எவ்வளவு பொருத்தமானது!—19நிச்சயமாகவே, கிறிஸ்தவ ஊழியர்கள் பின்பற்றுவதற்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார் பவுல். ஒரு காரியமானது, அவர் ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தை உயர்வாய் மதித்து, ஆழ்ந்து ஆராய்ந்தார், அதிலிருந்து திரும்பத்திரும்ப மேற்கோள்கள் காட்டினார், மறைமுகமாக அதிலிருந்து குறிப்பிட்டு பேசினார், அவற்றைப் பொருத்தினார். (2 கொ. 6:2, 16-18; 7:1; 8:15; 9:9; 13:1; ஏசா. 49:8; லேவி. 26:12; ஏசா. 52:11; எசே. 20:41; 2 சா. 7:14; ஓசி. 1:10) மேலும், ஒரு கண்காணியாக, அவர் பின்வருமாறு கூறுவதன் மூலம் மந்தையிடமாக தனக்குள்ள ஆழ்ந்த கரிசனையை வெளிக்காட்டினார்: “நானோ உங்கள் ஆத்துமாக்களுக்காக மிகவும் சந்தோஷமாய்ச் செலவுபண்ணுவேன், முழுவதும் செலவாவேன்.” பதிவு தெளிவாய்க் காட்டுகிறபடி, சகோதரர்களுக்காக அவர் தன்னையே முழுமையாய் தியாகம் செய்தார். (2 கொ. 12:15, தி.மொ.; 6:3-10) கொரிந்திய சபையில் அவர் போதிக்கையிலும் சரி, அறிவுரை கூறுகையிலும் சரி, பிரச்சினைகளை சரிசெய்கையிலும் சரி அவர் அயராது உழைத்தார். இருளுடன் கூட்டுறவு வைத்துக்கொள்வதற்கு எதிராக தெள்ளத் தெளிவாய் எச்சரிக்கை விடுத்தார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று கொரிந்தியருக்குக் கூறினார். அவர் அன்பான கரிசனையை அவர்களிடம் காட்டினார். அதன் காரணமாக, “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல,” அவர்களுடைய மனம் கெடுக்கப்படுவதைக் காண அவர் விரும்பவில்லை. ஆகவே, “நீங்கள் விசுவாசத்தில் நிலைக்கிறீர்களோவென்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள், உங்களையே பரீட்சித்துப்பாருங்கள்” என்று இதயப்பூர்வ அறிவுரை கொடுத்தார். “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்பதைக் காண்பித்து, கிறிஸ்தவ தாராள குணத்தை அவர்களில் தட்டியெழுப்பினார். கடவுளின் அளவற்ற ஈவுக்காக அவருக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றியை அவரும் தெரிவித்தார். மெய்யாகவே கொரிந்துவிலிருந்த அவருடைய சகோதரர்கள் பவுலின் இதயமெனும் மாம்ச பலகையின்மீது அன்பில் எழுதப்பட்டவர்களாக இருந்தனர். வைராக்கியத்தோடும், எப்போதும் விழிப்போடும் இருக்கும் கண்காணிக்கு, அவரது தளராத சேவையே நல்ல எடுத்துக்காட்டு. இன்று நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி அவர்!—6:14; 11:3; 13:5, தி.மொ.; 9:7, 15; 3:2.
20சோதனை காலத்தில், ‘கனிவான இரக்கங்களின் பிதாவும், எல்லா ஆறுதலின் கடவுளுமானவரே’ பலத்தின் உண்மையான பிறப்பிடம் என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலம் அப்போஸ்தலன் பவுல் நம் மனதைச் சரியான விதத்தில் சிந்திக்க வைக்கிறார். அவருடைய புதிய உலகில் இரட்சிப்படைவதற்கு நாம் சகித்து நிலைத்திருக்கும்படி ‘நம்முடைய எல்லா உபத்திரவத்திலும் நம்மை ஆறுதல்படுத்துகிறவர்’ அவரே. “கடவுளிடமிருந்து ஒரு கட்டடம், கையாலமைக்கப்படாத நித்திய வீடு, பரலோகத்தில்” இருப்பதன் மகிமையான நம்பிக்கையையும் பவுல் குறிப்பிடுகிறார். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையன ஒழிந்துபோயின, இதோ, புதிதாயின” என்று சொல்கிறார். உண்மையிலேயே, பவுலைப் போல் பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிக்கப் போகிறவர்களுக்கு உறுதியளிக்கும் அருமையான வார்த்தைகள் இரண்டு கொரிந்தியரில் அடங்கியுள்ளன.—1:3, 4, NW; 5:1, 17, தி.மொ.
[கேள்விகள்]
1, 2. (அ) கொரிந்தியருக்குத் தன் இரண்டாவது நிருபத்தை எழுதும்படி பவுலைத் தூண்டியது எது? (ஆ) பவுல் எங்கிருந்து எழுதினார், எதைக் குறித்து அவர் கவலைப்பட்டார்?
3, 4. (அ) பவுல் எந்தெந்த சந்தர்ப்பங்களில் கொரிந்துவுக்குச் சென்றார்? (ஆ) இரண்டு கொரிந்தியர் இப்பொழுது நமக்கு எப்படி பயனளிக்கிறது?
5. (அ) ஆறுதலைக் குறித்து பவுல் என்ன எழுதுகிறார்? (ஆ) கிறிஸ்துவின் மூலம் உண்டான எது மேலுமான உறுதியை அளிக்கிறது?
6. தவறுசெய்து சபை நீக்கம் செய்யப்பட்டிருந்தவன் தற்போது மனந்திரும்பியவனாய் இருக்கையில் என்ன செய்ய வேண்டுமென பவுல் அறிவுரை கூறுகிறார்?
7. பவுல் தன்னையும் கொரிந்தியரையும் எதனுடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறார், எதை வலியுறுத்துகிறார்?
8. (அ) ஊழியர்களாக பவுலுக்கும் அவருடைய உடன் ஊழியர்களுக்கும் என்ன ஆதாரங்கள் இருந்தன? (ஆ) புதிய உடன்படிக்கையின் ஊழியம் எவ்வாறு மேம்பட்டது?
9. ஊழியமாகிய பொக்கிஷத்தை பவுல் எவ்வாறு விவரிக்கிறார்?
10. (அ) கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் இருப்போரைக் குறித்து பவுல் என்ன சொல்கிறார்? (ஆ) பவுல் எவ்வாறு தன்னைக் கடவுளுடைய ஊழியராக சிபாரிசு செய்கிறார்?
11. என்ன அறிவுரையையும் எச்சரிக்கையையும் பவுல் கொடுக்கிறார்?
12. கொரிந்துவிலிருந்து வந்த அறிக்கை குறித்து பவுல் ஏன் சந்தோஷப்பட்டார்?
13. (ஆ) தாராள குணமுள்ள எந்த முன்மாதிரிகளைப் பவுல் குறிப்பிடுகிறார்? (ஆ) கொடுப்பதன் சம்பந்தமாக என்ன நியமங்களைப் பவுல் கலந்தாலோசிக்கிறார்?
14. தன் அப்போஸ்தலத்துவத்துக்கு ஆதரவாக என்ன குறிப்புகளைப் பவுல் சொல்கிறார்?
15. (அ) என்ன உதாரணங்களை உபயோகித்து பவுல் கள்ள அப்போஸ்தலருக்கு எதிராக பேசுகிறார்? (ஆ) பவுலின் சொந்த பதிவு என்ன?
16. (அ) எதைக் குறித்து பவுல் பெருமை பாராட்டலாம், ஆனால் அதைப் பார்க்கிலும் ஏன் தன் பலவீனங்களைக் குறித்தே அவர் பேசுகிறார்? (ஆ) பவுல் தன் அப்போஸ்தலத்துவத்தின் நிரூபணங்களை எவ்வாறு அளித்திருக்கிறார்?
17. முடிவான என்ன அறிவுரையைப் பவுல் கொரிந்தியருக்குக் கூறுகிறார்?
18. ஊழியத்தைக் குறித்து என்ன சரியான நோக்குநிலையைக் கிறிஸ்தவர்கள் ஏற்க வேண்டும்?
19. என்னென்ன வழிகளில், இன்றுள்ள கிறிஸ்தவ ஊழியர்களுக்கு, முக்கியமாய்க் கண்காணிகளுக்கு பவுல் மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார்?
20. (அ) எவ்வாறு பவுல் நம் மனதைச் சரியான விதத்தில் சிந்திக்க வைக்கிறார்? (ஆ) என்ன மகிமையான நம்பிக்கையை இரண்டு கொரிந்தியர் குறிப்பிடுகிறது?