Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 62—1 யோவான்

பைபிள் புத்தக எண் 62—1 யோவான்

பைபிள் புத்தக எண் 62—1 யோவான்

எழுத்தாளர்: அப்போஸ்தலன் யோவான்

எழுதப்பட்ட இடம்: எபேசு, அல்லது அருகில்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 98

இயேசு கிறிஸ்துவின் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அப்போஸ்தலன்தான் யோவான். அவர் நீதியை பெருமளவு நேசித்தார். இது இயேசுவின் சிந்தையை ஆழமாக புரிந்துகொள்வதற்கு அவருக்கு உதவியது. ஆகையால், அவருடைய எழுத்துக்களில் அன்பே மையப் பொருளாய் மேலோங்கியிருப்பதைக் குறித்து நாம் ஆச்சரியமடைகிறதில்லை. எனினும், அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்ல. ஏனென்றால் இயேசு அவரை ‘இடிமுழக்க மக்களில் [பொவனெர்கேஸ்]’ ஒருவராக குறிப்பிட்டார். (மாற். 3:17) உண்மையில், சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் போராடுகிறவராய் அவர் தன் மூன்று நிருபங்களையும் எழுதினார்; ஏனெனில் அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்த விசுவாசதுரோகம் அப்போது வெளிப்படையாய் தெரிந்தது. யோவானின் மூன்று நிருபங்களும் நிச்சயமாகவே காலத்துக்கேற்றவை. ஏனெனில் ‘பொல்லாங்கனின்’ ஆக்கிரமிப்பிற்கு எதிரான அவர்களுடைய போராட்டத்தில் பூர்வ கிறிஸ்தவர்களைப் பலப்படுத்துவதற்கு அவை உதவின.​—2 தெ. 2:​3, 4; 1 யோ. 2:​13, 14; 5:​18, 19.

2பொருளடக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், இந்த நிருபங்கள் மத்தேயு, மாற்கு சுவிசேஷங்களுக்கு வெகு காலத்திற்குப் பின் எழுதப்பட்டவை. சொல்லப்போனால், பேதுரு, பவுல் எழுதிய மிஷனரி நிருபங்களுக்கும் வெகு பிந்தி எழுதப்பட்டவை. காலம் மாறிவிட்டது. சபைகளின் ஆரம்ப காலத்தில் அவற்றிற்குப் பெரும் அச்சுறுத்தலாயிருந்த யூதேய மதத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இதில் சொல்லப்படுவதில்லை. மேலும் எபிரெய வேதாகமத்திலிருந்து நேரடி மேற்கோள்கள் எதுவும் இதில் காணப்படுவதில்லை. மறுபட்சத்தில், யோவான் ‘கடைசிக்காலத்தையும்,’ “அநேக அந்திக்கிறிஸ்துகள்” தோன்றியிருப்பதையும் பற்றி பேசுகிறார். (1 யோ. 2:18) தன் வாசகர்களைக் குறிப்பிடுகையில், “பிள்ளைகளே” எனவும் தன்னை ‘வயோதிபன்’ எனவும் குறிப்பிடுகிறார். (1 யோ. 2:​1, 12, 13, 18, 28; 3:​7, 18; 4:4; 5:21; 2 யோ. 1; 3 யோ. 1, NW) இவை அனைத்தும் அவருடைய மூன்று நிருபங்களும் பிந்தி எழுதப்பட்டதை தெரிவிக்கின்றன. மேலும், யோவானின் சுவிசேஷமும் ஏறக்குறைய அதே சமயத்தில் எழுதப்பட்டது என்பதை 1 யோவான் 1:​3, 4 வசனங்களிலிருந்து தெரிகிறது. பொதுவாக, யோவானின் மூன்று நிருபங்களும் பெரும்பாலும் பொ.ச. 98-ல் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது; இது அந்த அப்போஸ்தலன் மரணமடைவதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பாக இருக்கலாம். எபேசுவுக்கருகில் அவை எழுதப்பட்டன.

3ஒன்று யோவான் புத்தகத்தின் எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய யோவான்தான்; சந்தேகமின்றி அவரே எழுதியதாக ஒப்புக்கொள்ளப்படும் நான்காவது சுவிசேஷத்துடன் அது நெருங்க ஒத்திருப்பதிலிருந்து இது தெரிகிறது. உதாரணமாக, “ஜீவவார்த்தையை . . . பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை” கண்ணாரக் கண்ட சாட்சி என்ற தன்னைப் பற்றிய குறிப்புடன் இந்த நிருபத்தை அவர் ஆரம்பிக்கிறார். இந்தச் சொற்கள் கவனத்தைக் கவரும் விதத்தில் யோவானுடைய சுவிசேஷத்தின் தொடக்க சொற்களுடன் அதிகம் ஒத்திருக்கின்றன. இதன் நம்பகத் தன்மை மியூராடோரியன் சுருள்களின் பாகங்களாலும், பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐரீனியஸ், பாலிக்கார்ப், பப்பையாஸ் போன்ற ஆரம்ப கால எழுத்தாளர்களாலும் உறுதி செய்யப்படுகிறது. a யூஸிபியஸின் (ஏ. பொ.ச. 260-342) பிரகாரம், ஒன்று யோவானின் நம்பகத் தன்மை ஒருபோதும் சந்தேகிக்கப்படவில்லை. b எனினும், பூர்வ மொழிபெயர்ப்புகள் சில, 5-ம் அதிகாரத்தின் 7-ம் வசனத்தின் முடிவிலும் 8-ம் வசனத்தின் தொடக்கத்திலும் பின்வரும் சொற்களைச் சேர்த்திருப்பது கவனிக்கத்தக்கது: “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று.” (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) ஆனால் இந்தப் பகுதி, ஆரம்ப கால கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் எதிலும் காணப்படுவதில்லை; திரித்துவ கோட்பாட்டை ஆதரிப்பதற்காக இது சேர்க்கப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாயுள்ளது. நவீன கால கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை இந்த வார்த்தைகளை வசனத்தோடு சேர்ப்பதில்லை.​—1 யோ. 1:​1, 2. c

4யோவான், தனக்கு ‘மிக நேசமானவர்களை,’ தன் ‘இளம் பிள்ளைகளை,’ ‘அநேக அந்திக்கிறிஸ்துக்களின்’ தவறான போதகங்களிலிருந்து பாதுகாப்பதற்காக இதை எழுதுகிறார். அவர்களுக்குள்ளிருந்து வெளியேறிவிட்ட இந்த அந்திக்கிறிஸ்துக்கள், சத்தியத்தைவிட்டு விலகிச் செல்ல இவர்களைத் தூண்டுகின்றனர். (2:​7, NW, 18) இந்த விசுவாச துரோகிகளான அந்திக்கிறிஸ்துக்கள், ஆரம்ப கால மறைஞான கோட்பாடு (Gnosticism) உட்பட, கிரேக்க தத்துவங்களால் வசப்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். இவற்றைப் பின்பற்றிய இந்த அந்திக்கிறிஸ்துக்கள் ஒருவித மறைபொருளான விசேஷித்த அறிவைத் தாங்கள் கடவுளிடமிருந்து பெற்றிருப்பதாக சொல்லிக் கொண்டனர். d விசுவாச துரோகத்துக்கு எதிராக உறுதியான நிலைநிற்கை ஏற்றவராய் யோவான், மூன்று விஷயங்களை விரிவாக கலந்தாலோசிக்கிறார். அவை பாவம், அன்பு, அந்திக்கிறிஸ்து. பாவத்தைப் பற்றியும், பாவங்களுக்கான இயேசுவின் பலியை ஆதரித்தும் அவர் பேசுகிறார். இவை, அந்த அந்திக்கிறிஸ்துக்கள் தாங்கள் பாவமில்லாதவர்கள், இயேசுவின் மீட்கும் பலி தங்களுக்குத் தேவையில்லையென சொல்லிக்கொண்ட சுயநீதிக்காரர்களாக இருந்ததைக் காட்டுகின்றன. சுயதிருப்தி காணும் அவர்களுடைய “அறிவு” தன்னலக்காரர்களாகவும் அன்பற்றவர்களாகவும் அவர்களை ஆக்கியிருந்தது. உண்மையான கிறிஸ்தவ அன்பை யோவான் தொடர்ந்து வலியுறுத்துகையில் அவர்களுடைய இந்த நிலைமையையும் அவர் வெட்டவெளிச்சமாக்குகிறார். மேலும், இயேசுவே கிறிஸ்து என்றும், மனிதராக வருவதற்கு முன்னதாகவே அவர் வாழ்ந்தார் என்றும், விசுவாசிக்கும் மனிதருக்கு இரட்சிப்பை அருள அவர் கடவுளுடைய குமாரனாக மாம்சத்தில் வந்தார் என்றும் அவர் விவரமாக எடுத்துரைக்கிறார். இவற்றை சொல்லி இவர்களுடைய பொய்க் கோட்பாட்டை எதிர்த்து யோவான் வாதிடுகிறார். (1:​7-10; 2:​1, 2; 4:​16-21; 2:22; 1:​1, 2, 4:​2, 3, 14, 15) இந்தக் கள்ளப் போதகர்களை “அந்திக்கிறிஸ்துகள்” என்று யோவான் வெளிப்படையாக அடையாளம் காட்டுகிறார். கடவுளுடைய பிள்ளைகளையும் பிசாசின் பிள்ளைகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்கான பல வழிவகைகளைக் கொடுக்கிறார்.​—2:​18, 22; 4:3.

5இன்ன சபைக்காக என குறிப்பிட்டு இது எழுதப்படவில்லை. எனவே, முழு கிறிஸ்தவ கூட்டத்தாருக்காகவும் இந்த நிருபம் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. தொடக்க வாழ்த்துரையும் முடிவில் வணக்கவுரையும் இல்லாதிருப்பதும் இதைக் குறிப்பிட்டு காட்டும். சிலர் இந்தப் படைப்பை நிருபம் என்பதைப் பார்க்கிலும் ஆய்வுக் கட்டுரை என்பதாகவே வர்ணிக்கின்றனர். “நீங்கள்” என்ற பன்மையை (ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் பெரியெழுத்துக்களால் காட்டியிருக்கிறபடி) நிருபம் முழுவதிலும் பயன்படுத்தியிருப்பது, இதை இந்த எழுத்தாளர் தனிப்பட்ட ஒருவருக்காக எழுதாமல் ஒரு தொகுதிக்காக எழுதினார் என்பதைக் காட்டுகிறது.

ஒன்று யோவானின் பொருளடக்கம்

6இருளில் அல்ல, ஒளியில் நடத்தல் (1:​1–2:29). “எங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்” என்று யோவான் சொல்கிறார். “கடவுள் ஒளி”யாய் (NW) இருக்கிறார். ஆதலால் ‘வெளிச்சத்தில் நடப்போர்’ மாத்திரமே அவரோடும் ஒருவருக்கொருவரும் ‘ஐக்கியப்பட்டவர்களாக’ இருக்கின்றனர். ‘அவர் குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தால்’ பாவம் நீங்க இவர்கள் சுத்திகரிக்கப்படுகிறார்கள். மறுபட்சத்தில், “நமக்குப் பாவமில்லை” என்று சொல்லிக் கொண்டு ‘இருளில் நடந்துகொண்டிருப்போர்’ தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள், சத்தியம் அவர்களுக்குள் இல்லை. அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டால், உண்மையுள்ளவராக கடவுள் அவர்களுக்கு மன்னிப்பார்.​—1:​4-8, தி.மொ.

7பாவங்களுக்குப் “பிராயச்சித்தபலி”யாகவும், “பிதாவினிடம் நமக்குச் சகாய”ராகவும் இயேசு கிறிஸ்து அடையாளம் காட்டப்படுகிறார். கடவுளை அறிந்திருப்பதாக சொல்லிக்கொண்டு, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதிருப்பவன் பொய்யன். தன் சகோதரனில் அன்புகூருகிறவன் வெளிச்சத்தில் நிலைத்திருக்கிறான், தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளில் நடக்கிறான். உலகிலாவது உலகில் உள்ளவற்றிலாவது அன்புகூர வேண்டாம் என்பதாக யோவான் கண்டிப்பான புத்திமதி அளிக்கிறார். ஏனெனில், “ஒருவன் உலகத்தில் அன்புகூருவானானால் அவனில் பிதாவின் அன்பில்லை” என்று சொல்கிறார். அநேக அந்திக்கிறிஸ்துகள் தோன்றியிருக்கிறார்கள்; ‘அவர்கள் நம்மிடத்திலிருந்து சென்றவர்கள்.’ ஏனெனில் “அவர்கள் நமக்குரியவர்களல்ல” என யோவான் விளக்குகிறார். இயேசுவைக் கிறிஸ்து அல்லவென்று மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. பிதாவையும் குமாரனையும் அவன் மறுதலிக்கிறான். அவரிடமிருந்து பெற்ற உண்மையான அபிஷேகத்தின்படி, “பிள்ளைகள்,” “குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திரு”ப்பதற்கு ஆரம்பம் முதல் தாங்கள் கற்றறிந்தவற்றில் நிலைத்திருப்பார்களாக.​—2:​1, 2, 15, 18, 19, 24, தி.மொ.

8கடவுளின் பிள்ளைகள் பாவத்தைப் பழக்கமாக செய்வதில்லை (3:​1-24). பிதாவுடைய அன்பின் காரணமாக, இவர்கள் “கடவுளின் பிள்ளைகளென்று” அழைக்கப்படுகின்றனர்; மேலும் கடவுள் வெளிப்படும்போது இவர்கள் அவரைப்போலவே இருந்து ‘அவர் இருக்கிறபடியே அவரைத் தரிசிப்பார்கள்.’ சட்டத்தை மீறுவதே பாவம். கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் நிலைத்திருப்பவர்கள் அதைப் பழக்கப்படுத்திக் கொள்வதில்லை. தொடர்ந்து பாவஞ்செய்கிறவன் பிசாசினால் உண்டானவன். அவனுடைய கிரியைகளைக் கடவுளுடைய குமாரன் அழிப்பார். கடவுளின் பிள்ளைகள் இன்னாரென்றும் பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் இதனால் வெளிப்படும்: கடவுளிலிருந்து உண்டானவர்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாக இருக்கின்றனர். பொல்லாங்கனிலிருந்து உண்டானவர்கள் தன் சகோதரனைப் பகைத்து கொலைசெய்த காயீனைப்போல் இருக்கிறார்கள். “பிள்ளைகளுக்கு” யோவான் சொல்வதாவது, அவர்களுக்காக ‘தமது ஜீவனைக் கொடுத்தவராலே’ அன்பு இன்னதென்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் சகோதரர்களுக்கு, ‘கனிவான இரக்கங்களுக்குரிய கதவை அடைத்துக்கொள்ள’ வேண்டாமென அறிவுரை கூறுகிறார். அவர்கள் ‘வார்த்தையினாலும் நாவினாலுமல்ல கிரியையினால் சத்தியத்திலே அன்புகூரக்கடவர்கள்.’ அவர்கள் ‘சத்தியத்துக்குரியவர்களாவென’ தீர்மானிக்க, தங்கள் இருதயத்திலிருப்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதோடு, ‘அவர் [கடவுளுடைய] பார்வையில் பிரியமானவைகளைச் செய்கிறவர்களாகவும்’ காணப்பட வேண்டும். ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசமாயிருக்கவும் ஒருவரிலொருவர் அன்புகூரவும்’ வேண்டுமென்ற அவருடைய கட்டளைப்படி அவர்கள் நடக்க வேண்டும். இவ்வாறு, அவருடன் ஐக்கியத்தில் தாங்கள் நிலைத்திருக்கிறார்கள் என்றும், ஆவியின் மூலம் அவர் தங்களுடன் நிலைத்திருக்கிறார் என்றும் அறிந்துகொள்வார்கள்.​—3:​1, 2, 16-19, 22, 23, தி.மொ.

9கடவுளுடன் ஐக்கியத்தில் ஒருவரிலொருவர் அன்புகூருதல் (4:​1–5:21). ஏவப்பட்ட வார்த்தைகளை சோதித்தறிய வேண்டும். கிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை மறுக்கிற வார்த்தைகள் ‘தேவனால் உண்டானவையல்ல,’ அந்திக்கிறிஸ்துவினுடையதே. அவை இந்த உலகத்திலிருந்து உண்டானவை, உலகத்தோடு இணைந்திருப்பவை; ஆனால் ஏவப்பட்ட சத்திய வார்த்தை கடவுளிடமிருந்து வந்திருக்கிறது. யோவான் சொல்வதாவது: ‘கடவுள் அன்புள்ளவர்,’ “நாம் கடவுளினிடம் அன்புகூர்ந்ததில்லை, அவர் நம்மிடம் அன்புகூர்ந்து நமது பாவங்களை நிவிர்த்திசெய்கிற பிராயச்சித்தபலியாகத் தமது குமாரனை அனுப்பினதிலேயே அன்பு விளங்குகிறது.” அவ்வாறெனில், ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டியது எவ்வளவு பெரிய பொறுப்பு! மற்றவர்களை நேசிப்பவர்களிடத்தில் கடவுள் நிலைத்திருக்கிறார். இவ்வாறு, அவர்களுக்குப் பயம் நீங்கி, ‘பேச்சு சுயாதீனம் இருக்கும்படி’ அன்பு பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது. நம்மைக் குறித்ததிலோ, “அவர் முந்தி நம்மில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அன்புகூருகிறோம்.” “கடவுளில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிலும் அன்புகூரவேண்டும்.”​—4:​3, 8, 10, 17, 19, 21, தி.மொ.

10கடவுளின் பிள்ளைகளாக அன்பு காட்டுவது, அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது; இது, விசுவாசத்தால் உலகை ஜெயிப்பதில் விளைவடைகிறது. கடவுள் தம் குமாரனில் விசுவாசம் வைப்போரைக் குறித்து சாட்சி பகருகிறார். தாம் அவர்களுக்கு ‘நித்திய ஜீவனைத் தந்தார், இந்த ஜீவன் அவர் குமாரனிலிருக்கிறது’ என்கிறார். இவ்வாறு, அவர்கள் கடவுளுடைய சித்தத்திற்கு இசைய எதைக் கேட்டாலும் அவர் செவிசாய்ப்பார் என்ற திடநம்பிக்கையோடு இருக்கலாம். அநீதியெல்லாம் பாவமே. எனினும் மரணத்துக்கேதுவல்லாத பாவமுண்டு. தேவனிலிருந்து பிறந்த எவனும் பாவத்தைப் பழக்கமாய் செய்வதில்லை. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற” போதிலும் ‘கடவுளுடைய குமாரன் வந்திருக்கிறார்’; உண்மையான கடவுளைப் பற்றிய அறிவை அடையும்படி அவர் தம்முடைய சீஷர்களுக்கு ‘அறிவுத்திறனை’ தந்திருக்கிறார். அந்தக் கடவுளுடன் ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம்’ அவர்கள் இப்பொழுது ஐக்கியத்தில் இருக்கின்றனர். விக்கிரகங்களிலிருந்தும் அவர்கள் தங்களை விலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்!​—5:​11, 19, 20, NW.

ஏன் பயனுள்ளது

11பொது சகாப்தம் முதல் நூற்றாண்டின் முடிவான ஆண்டுகளில் இருந்ததைப்போல், இன்றும் “அநேக அந்திக்கிறிஸ்துகள்” உள்ளனர். இவர்களுக்கு எதிராக உண்மை கிறிஸ்தவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும். இந்த மெய்க் கிறிஸ்தவர்கள் ‘ஆதிமுதல் தாங்கள் கேள்விப்பட்ட செய்தியை’ தொடர்ந்து உறுதியாய் பற்றியிருக்க வேண்டும், ‘ஒருவரிலொருவர் அன்புடையோராக’ இருக்க வேண்டும், கடவுளிலும் உண்மையான போதகத்திலும் நிலைத்திருக்க வேண்டும், பேச்சு சுயாதீனத்துடன் நீதியைப் பழக்கமாய் நடப்பிக்க வேண்டும். (2:18; 3:11; 2:​27-29) கிறிஸ்தவர்களென்று தங்களைச் சொல்லிக்கொள்கிற பெரும்பான்மையரை பொருளாசை என்ற உலகப்பிரகாரமான தீய சக்திகள் சூழ்ந்திருக்கின்றன. இந்த, ‘மாம்சத்தின் இச்சைக்கும், கண்களின் இச்சைக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும்’ எதிராக கொடுக்கப்படும் எச்சரிக்கையும் மிக முக்கியமானது. “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று அறிந்தவர்களாய் மெய்க் கிறிஸ்தவர்கள் உலகத்தையும் அதன் இச்சையையும் அறவே விட்டொழிப்பர். உலக இச்சையும், பிரிவினை மனப்பான்மையும், பகைமையும் நிரம்பிய இந்தக் காலத்தில் கடவுளுடைய சித்தத்தை ஏவப்பட்ட வேதாகமத்தில் படிப்பதும், அந்தச் சித்தத்தைச் செய்வதும் நிச்சயமாகவே எவ்வளவு நன்மையளிக்கும்!​—2:​15-17.

12ஒன்று யோவான் நம்முடைய நன்மைக்காக சில வேறுபாடுகளை தெளிவுபடுத்திக் காட்டுகிறது. அவை: பிதாவினிடமிருந்து தோன்றும் ஒளிக்கும் தீயோனிடமிருந்து வரும் சத்தியத்தை அழிக்கும் இருளுக்கும் உள்ள வித்தியாசம். ஜீவனளிக்கும் கடவுளுடைய போதகங்களுக்கும் அந்திக்கிறிஸ்துவின் வஞ்சகப் பொய்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு. குமாரனோடுகூட பிதாவுடன் ஐக்கியத்திலிருப்போரின் முழு சபையிலும் வியாபித்திருக்கும் அன்புக்கும் ‘நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கு,’ ‘நம்மைவிட்டுப் பிரிந்துபோன’வர்களில் உள்ள காயீனைப்போன்ற கொலைபாதக பகைக்கும் இடையேயுள்ள வித்தியாசம். (2:19; 1:​5-7; 2:​8-11, 22-25; 3:​23, 24, 11, 12) இதைப் புரிந்தவர்களாக, ‘உலகத்தை ஜெயிப்பது’ நம்முடைய இதயப்பூர்வ ஆவலாய் இருக்க வேண்டும். இதை நாம் எவ்வாறு செய்யலாம்? உறுதியான விசுவாசம் உள்ளோராயும் ‘கடவுளில் அன்புகூரு’பவர்களாயும் இருப்பதன் மூலமே; இது அவருடைய கட்டளைகளின்படி நடப்பதைக் குறிக்கிறது.​—5:​3, 4, தி.மொ.

13“கடவுளின் அன்பு.” தூண்டுவிக்கும் இந்தச் சக்தி, இந்த நிருபம் முழுவதிலும் எவ்வளவு அழகாக வலியுறுத்தப்படுகிறது! 2-ம் அதிகாரத்தில், உலகத்தில் அன்புகூருவதற்கும் பிதாவில் அன்புகூருவதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நாம் காண்கிறோம். பின்னர், ‘கடவுள் அன்பானவர்’ என்பது நம் கவனத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. (4:​8, NW, 16, தி.மொ.) எப்பேர்ப்பட்ட நடைமுறையான அன்பு! பிதா தம்முடைய ‘குமாரனை உலகரட்சகராக அனுப்பினதில்’ அத்தகைய உயர்வான அன்பு வெளிக்காட்டப்பட்டது. (4:14) “அவர் முந்தி நம்மில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அன்புகூருகிறோம்” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கு இசைய, இது நம் இருதயங்களில் நன்றியோடு கலந்த பயமற்ற அன்பைத் தூண்ட வேண்டும். (4:​19, தி.மொ.) பிதாவிடமும் குமாரனிடமும் உள்ள நடைமுறையான, சுயதியாக அன்பைப் போன்று நம்முடைய அன்பு இருக்க வேண்டும். இயேசு நமக்காக தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார். அவ்வாறே “நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள்.” ஆம், நம்முடைய சகோதரர்களை வார்த்தைகளால் மாத்திரமல்ல, “கிரியையினால் சத்தியத்திலே” அன்புகூரும்படி நம் கனிவான இரக்கங்களுக்குரிய கதவைத் திறக்க வேண்டும். (3:​16-18, தி.மொ.) யோவானின் நிருபம் தெளிவாய் காட்டுகிறபடி, கடவுளைப் பற்றிய உண்மையான அறிவோடு சேர்ந்த அன்பே, பிதாவோடும் குமாரனோடும் முறிக்க முடியாத ஐக்கியத்தில் கடவுளோடு தொடர்ந்து நடப்பவர்களை இணைக்கிறது. (2:​5, 6) இந்த ஆசீர்வாதமான அன்பின் பிணைப்பிலுள்ள ராஜ்ய சுதந்தரவாளிகளுக்கே யோவான் பின்வருமாறு சொல்கிறார்: ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் அந்தச் சத்தியருடன் ஐக்கியத்தில் இருக்கிறோம். இவரே [அந்தச் சத்தியரே] மெய்க் கடவுளும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.’​—5:​20, NW.

[அடிக்குறிப்புகள்]

a தி இன்டர்நாஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, தொ. 2, 1982, ஜி. டபிள்யு. பிரோமிலி பதிப்பித்தது, பக்கங்கள் 1095-6.

b தி எக்லெஸியாஸ்டிக்கல் ஹிஸ்டரி, III, XXIV, 17.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கம் 1019.

d நியூ பைபிள் டிக்ஷ்னரி, இரண்டாம் பதிப்பு, 1986, ஜே. டி. டக்லஸ் பதிப்பித்தது, பக்கங்கள் 426, 604.

[கேள்விகள்]

1. (அ) யோவானின் எழுத்துக்களில் என்ன பண்பு மேலோங்கியிருக்கிறது, எனினும் அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்ல என்பதை எது காட்டுகிறது? (ஆ) அவருடைய மூன்று நிருபங்களும் ஏன் காலத்துக்கு ஏற்றவையாக இருந்தன?

2. (அ) மத்தேயு, மாற்கு, மிஷனரி நிருபங்கள் ஆகியவற்றிற்கு வெகு காலத்திற்குப் பின்னரே யோவானின் நிருபங்கள் எழுதப்பட்டது என்பதை எது காட்டுகிறது? (ஆ) இந்த நிருபங்கள் எப்போது, எங்கே எழுதப்பட்டிருக்கலாம்?

3. (அ) ஒன்று யோவானின் எழுத்தாளர், அதன் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு எது உறுதியளிக்கிறது? (ஆ) எந்த வசனம் பின்னால் சேர்க்கப்பட்டது, ஆனால் அது தவறானது என்பதை எது நிரூபிக்கிறது?

4. உடன் கிறிஸ்தவர்களை யாரிடமிருந்து பாதுகாக்க யோவான் நாடுகிறார், எந்தப் பொய்ப் போதகங்களை தவறென வாதிட்டு நிரூபிக்கிறார்?

5. ஒன்று யோவான் முழு கிறிஸ்தவ சபைக்கும் உரியதாக கருதப்பட்டது என்பதை எது காட்டுகிறது?

6. ஒளியில் நடப்போருக்கும் இருளில் இருப்போருக்கும் இடையே உள்ள என்ன வேறுபாட்டை யோவான் குறிப்பிடுகிறார்?

7. (அ) கடவுளை அறிந்திருப்பதையும் அவரில் அன்புகூருவதையும் ஒருவர் எவ்வாறு காட்டுகிறார்? (ஆ) அந்திக்கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொள்வது எப்படி?

8. (அ) கடவுளுடைய பிள்ளைகளைப் பிசாசின் பிள்ளைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது எது? (ஆ) அன்பை ‘பிள்ளைகள்’ எவ்வாறு அறிந்துகொண்டனர், எது சம்பந்தமாக தங்கள் இருதயத்தை அவர்கள் தொடர்ந்து சோதித்துக்கொள்ள வேண்டும்?

9. (அ) ஏவப்பட்ட வார்த்தைகளை எப்படி சோதித்தறிய வேண்டும்? (ஆ) ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டிய கடமையை எது வலியுறுத்துகிறது?

10. (அ) கடவுளுடைய பிள்ளைகள் இந்த உலகத்தை எவ்வாறு ஜெயிக்கலாம், என்ன நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது? (ஆ) பாவத்தையும் விக்கிரகாராதனையையும் குறித்து என்ன மனப்பான்மை அவர்களுக்கு இருக்க வேண்டும்?

11. அந்திக்கிறிஸ்துகளுக்கும் உலக இச்சைகளுக்கும் எதிராக இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு போராடலாம்?

12. நம்முடைய நன்மைக்காக ஒன்று யோவான் என்ன வேறுபாடுகளை தெளிவாக்குகிறது, நாம் எவ்வாறு உலகத்தை ஜெயிக்கலாம்?

13. (அ) கடவுளுடைய அன்பு நடைமுறைக்கு உகந்த சக்தியாக எவ்வாறு வலியுறுத்திக் காட்டப்படுகிறது? (ஆ) கிறிஸ்தவ அன்பு என்ன வகையானதாக இருக்க வேண்டும், அது என்ன ஐக்கியத்தைத் தர வேண்டும்?