Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 63—2 யோவான்

பைபிள் புத்தக எண் 63—2 யோவான்

பைபிள் புத்தக எண் 63—2 யோவான்

எழுத்தாளர்: அப்போஸ்தலன் யோவான்

எழுதப்பட்ட இடம்: எபேசு, அல்லது அருகில்

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 98

யோவானின் இரண்டாம் நிருபம் சுருக்கமானது. ஒருவேளை இது ஒரே ஒரு நாணற்புல் தாளில் எழுதப்பட்டிருக்கலாம்; ஆனால் அர்த்தம் நிறைந்த ஒன்று. இது, “தெரிந்தெடுக்கப்பட்ட அம்மாளுக்கும் அவர் பிள்ளைகளுக்கும்” எழுதப்பட்டிருக்கிறது. “கைரியா” (“அம்மாள்” என்பதற்குக் கிரேக்கப் பதம்) என்ற பெயர், அந்தக் காலத்தில் தனிப்பட்ட நபர்களுக்கு வைக்கப்பட்டது. அதனால், அந்தப் பெயருடைய ஒரு நபருக்கே அது எழுதப்பட்டதாக பைபிள் கல்விமான்கள் சிலர் நினைக்கின்றனர். மறுபட்சத்தில், கிறிஸ்தவ சபையையே ‘தெரிந்தெடுக்கப்பட்ட அம்மாள்’ என குறிப்பிட்டு யோவான் எழுதினார் என்பது சிலருடைய கருத்து. துன்புறுத்துவோரைக் குழப்புவதற்கு இவ்வாறு எழுதியிருக்கலாம். அப்படியென்றால், கடைசி வசனத்தில் வாழ்த்துதல்கள் சொல்வதாக குறிப்பிடப்பட்ட “சகோதரி” மற்றொரு சபையின் உறுப்பினர்களாக இருக்கலாம். எனவே, இந்த இரண்டாம் நிருபம், முதலாம் நிருபத்தைப் போல் பொதுவாக எழுதப்படவில்லை. ஏனெனில் இது தனி நபருக்கோ, தனிப்பட்ட சபைக்கோ எழுதப்பட்டதாக தெரிகிறது.​—வச. 1, தி.மொ.

2யோவானே இந்த நிருபத்தின் எழுத்தாளர் என்பதை சந்தேகிப்பதற்கு எந்தக் காரணமுமில்லை. இந்த எழுத்தாளர் தன்னை ‘மூப்பர்’ (NW) என குறிப்பிடுகிறார். இது நிச்சயமாகவே யோவானுக்குப் பொருந்துகிறது; ஏனெனில் அவர் முதிர்வயதானவர் மட்டுமல்ல, ‘தூண்களில்’ (கலா. 2:9) ஒருவராகவும் விளங்கினார். உயிரோடிருக்கும் அப்போஸ்தலர்களில் கடைசியானவர், கிறிஸ்தவ சபையில் உண்மையான ஒரு ‘மூப்பர்.’ அவர் வெகு பிரபலமானவராக இருந்தார்; எனவே அவருடைய வாசகர்களுக்கு அவரைப் பற்றிய மேலுமான விளக்கம் தேவையில்லை. முதல் நிருபத்தோடும் யோவானின் சுவிசேஷத்தோடும் எழுத்துநடையில் ஒத்திருப்பதிலிருந்து அவரே எழுத்தாளர் என்பது தெரிகிறது. முதல் நிருபத்தைப்போல், இந்த இரண்டாம் நிருபமும் எபேசுவில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலும் பொ.ச. 98-ல் எழுதப்பட்டதாக தோன்றுகிறது. யோவானின் இரண்டாம், மூன்றாம் நிருபங்களைக் குறித்து மக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா பின்வருமாறு கருத்துரைக்கிறது: “அந்த இரண்டு நிருபங்களுமே பொதுவாக ஒத்திருக்கின்றன. எனவே, எபேசுவிலிருந்து முதல் நிருபம் எழுதப்பட்ட காலத்திற்குப் பின் உடனடியாக இந்த இரண்டு நிருபங்களும் எழுதப்பட்டதென நாம் ஊகிக்கலாம். முதலாம் நிருபத்தில் வெகு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ள நியமங்களை, இந்த இரண்டு நிருபங்களும் தனிப்பட்ட நபர்களுடைய நடத்தைக்கும் பொருத்துகின்றன. a இரண்டாம் நூற்றாண்டின் ஐரீனியஸ் இந்நிருபத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் இதன் நம்பகத் தன்மையை ஆதரிக்கிறார்; மேலும் அதே காலப்பகுதியில் வாழ்ந்த அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட்டாலும் இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. b மேலும் யோவானின் நிருபங்கள் மியூராடோரியன் சுருள்களின் பாகத்தில் காணப்படுகின்றன.

3யோவானின் முதலாம் நிருபத்தைப் போலவே கிறிஸ்தவ விசுவாசத்துக்கு எதிரான கள்ளப் போதகர்களின் கடுந்தாக்குதலே இந்த நிருபமும் எழுதப்பட காரணமாய் அமைந்தது. அப்படிப்பட்டவர்களைக் குறித்து தம் வாசகர்களை எச்சரிக்க யோவான் விரும்புகிறார். அப்போதுதான் அவர்கள் இன்னார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியும். மேலும், அவர்களை விட்டு முற்றிலும் விலகியிருக்க முடியும். பரஸ்பர அன்புள்ளவர்களாய் சத்தியத்தில் தொடர்ந்து நடக்க இது உதவும்.

இரண்டு யோவானின் பொருளடக்கம்

4ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்; விசுவாசதுரோகிகளை ஒதுக்கிவிடுங்கள் (வச. 1-13). ‘தெரிந்தெடுக்கப்பட்ட அம்மாளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும்’ சத்தியத்தில் தன் அன்பை யோவான் வெளிப்படுத்துகிறார்; அவர்களில் சிலர், பிதா கட்டளையிட்டபடி சத்தியத்தில் நடப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். கடவுளுடைய கட்டளைகளுக்கு இசைய தொடர்ந்து நடப்பதன்மூலம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கிறார். ஏனெனில் வஞ்சகர்களும் அந்திக்கிறிஸ்துக்களும் உலகில் உள்ளனர். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்ததை அவர்கள் ஒப்புக்கொள்கிறதில்லை. கிறிஸ்துவின் போதகத்தை மீறுகிறவன் கடவுளையுடையவனல்ல. இந்தப் போதகத்தில் நிலைத்திருப்பவனே “பிதாவையும் குமாரனையும் உடையவன்.” இந்தப் போதகத்தை ஏற்காத எவனையும் தங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்கவும் கூடாது, அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும் கூடாது. அவர்களுக்கு எழுத பல விஷயங்கள் யோவானுக்கு இருக்கின்றன; எனினும், அவர்களுடைய சந்தோஷம் “நிறைவாயிருக்கும்படி” அவர்களிடம் வந்து, முகமுகமாய் பேசும் நாளை எதிர்பார்த்திருக்கிறார்.​—வச. 9, 12.

ஏன் பயனுள்ளது

5தற்காலத்தைப் போலவே, யோவானின் நாளிலும் சிலர், தெளிவாயும் எளிதாயுமுள்ள கிறிஸ்துவின் போதகங்களில் திருப்தியற்றிருந்தது தெரிகிறது. அவர்கள் இன்னும் அதிகத்தை, தங்கள் தற்பெருமையைத் தூண்டிவிடும் ஒன்றை, தங்களை மதிப்புமிக்கவர்களாக்கி, உலக தத்துவஞானிகளுக்கு இணையானவர்களாக்கும் ஒன்றை விரும்பினர். மேலும் தங்கள் தன்னல தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள கிறிஸ்தவ சபையைக் கறைபடுத்தவும் பிரிவினை உண்டாக்கவும் தயாராய் இருந்தனர். பிதாவுடனும் குமாரனுடனும் ஐக்கியப்பட்டு, அன்பிலும் சரியான போதகத்திலும் நிலைத்திருக்கிற சபையின் ஒற்றுமையை யோவான் உயர்வாய் மதித்தார். இன்று நாமும் சபையின் ஐக்கியத்திற்கு அத்தகைய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களை அல்லாமல் வேறே போதகத்தை ஏற்ற விசுவாச துரோகிகளுடன் கூட்டுறவு கொள்ளவோ வாழ்த்துதல் சொல்லவோ கூடாது. கடவுளுடைய கட்டளைகளுக்கு ஏற்ப, உண்மை கிறிஸ்தவ கூட்டுறவில் காணப்படும் சந்தோஷ நிறைவில் தொடர்ந்து நடக்க வேண்டும். அதன் மூலம், “பிதாவாகிய கடவுளிடமிருந்தும் பிதாவின் குமாரன் இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் வரும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் சத்தியத்திலும் அன்பிலும் நம்மோடிருக்கும்” என்று நாம் உறுதியாய் இருக்கலாம். (வச. 3, தி.மொ.) அத்தகைய கிறிஸ்தவ ஒற்றுமையின் ஆசீர்வாதத்தை யோவானின் இரண்டாவது நிருபம் நிச்சயமாகவே அறிவுறுத்துகிறது.

[அடிக்குறிப்புகள்]

a 1981-ன் மறுபதிப்பு, தொ. IV, பக்கம் 955.

b நியூ பைபிள் டிக்ஷ்னரி, இரண்டாம் பதிப்பு, 1986, ஜே. டி. டக்லஸ் பதிப்பித்தது, பக்கம் 605.

[கேள்விகள்]

1. இரண்டு யோவான் யாருக்காக எழுதப்பட்டிருக்கலாம்?

2. (அ) இரண்டு யோவானின் எழுத்தாளர் அப்போஸ்தலன் யோவான் என என்ன அத்தாட்சி காட்டுகிறது? (ஆ) இந்த நிருபம் எபேசுவில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து பெரும்பாலும் பொ.ச. 98-ல் எழுதப்பட்டதென எது குறிப்பிடுகிறது, அதன் நம்பகத் தன்மையை எது ஆதரிக்கிறது?

3. யோவான் இந்த நிருபத்தை ஏன் எழுதினார்?

4. முக்கியமாய், ஒருவரிலொருவர் அன்புகூரும்படி யோவான் ஏன் புத்திமதி கூறுகிறார், கிறிஸ்துவின் போதகத்தை மீறுபவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?

5. (அ) யோவானின் நாளில் நிலவியது போன்றே இன்றும் என்ன நிலைமை உள்ளது? (ஆ) யோவானைப்போல், இன்று சபையின் ஒற்றுமைக்கு நாம் எவ்வாறு மதித்துணர்வைக் காட்டலாம்?