Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 65—யூதா

பைபிள் புத்தக எண் 65—யூதா

பைபிள் புத்தக எண் 65—யூதா

எழுத்தாளர்: யூதா

எழுதப்பட்ட இடம்: பலஸ்தீனா (?)

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 65

யூதாவின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆபத்து! கிறிஸ்து இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு, அந்நிய போதகங்கள் கிறிஸ்தவ சபைக்குள் மெல்ல மெல்ல நுழைந்திருந்தன. பவுல் அப்போஸ்தலன் 14 ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தபடியே, விசுவாசத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு எதிரி படிப்படியாக ஊடுருவியிருந்தான். (2 தெ. 2:3) இந்த ஆபத்தைக் குறித்து சகோதரர்களை எச்சரிப்பதும், தற்காத்துக் கொள்ள செய்வதும் எவ்வாறு? வெளிப்படையாய் சொல்வதில் உறுதியும் கண்டிப்பும் மிக்க யூதாவின் நிருபத்தில் இதற்கான பதிலிருந்தது. யூதா தானே 3-ம் 4-ம் (தி.மொ.) வசனங்களில் தன் நிலையைத் தெளிவாக கூறினார்: ‘உங்களுக்கு எழுதுவது அவசியமென கண்டேன். சிலர் கள்ள வழியாய் நுழைந்துவிட்டார்களே; அவர்கள் நமது கடவுளின் கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுகிறவர்கள்.’ சரியான கோட்பாடு, ஒழுக்கநெறி ஆகியவற்றின் அஸ்திவாரங்களே ஆபத்திலிருந்தன. தன் சகோதரர்களின் நலனுக்காக போராடும்படி தான் அழைக்கப்பட்டிருப்பதாக யூதா உணர்ந்தார். அப்போதுதான், அதைப் பின்பற்றி அவர்களும் தங்கள் பாகத்தில் விசுவாசத்துக்காக கடினமாக போராட முடியும்.

2ஆனால், யார் இந்த யூதா? இந்த நிருபத்தை “இயேசுகிறிஸ்துவின் அடியானும் யாக்கோபின் சகோதரனுமான யூதா, . . . அழைக்கப்பட்டவர்களுக்கு” எழுதினாரென்று தொடக்க வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றன. இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் 2 பேர் யூதா என்ற பெயரில் இருந்ததால் இந்த யூதா, அல்லது யூதாஸ் ஓர் அப்போஸ்தலனா? (லூக். 6:16, NW) யூதா தன்னை அப்போஸ்தலன் என சொல்லிக் கொள்வதில்லை; அதற்குப் பதிலாக, அப்போஸ்தலர்களை ‘அவர்கள்’ என்ற படர்க்கைச் சொல்லால் குறிப்பிட்டு தன்னை அவர்களிலிருந்து பிரித்துக் காட்டுகிறார். (யூ. 17, 18) மேலும், அவர் தன்னை ‘யாக்கோபின் சகோதரன்’ என குறிப்பிடுகிறார். யாக்கோபு நிருபத்தின் எழுத்தாளரான, இயேசுவின் சகோதரனை இது குறிக்கிறது. (வச. 1) எருசலேமிலிருந்த சபையின் “தூண்களில்” ஒருவராக இருந்த இந்த யாக்கோபு எல்லாராலும் நன்கு அறியப்பட்டவர்; ஆகவேதான் யூதா தன்னை அவரோடு சம்பந்தப்படுத்தி அடையாளம் காட்டுகிறார். அப்படியென்றால் இவர் இயேசுவின் தம்பி, மற்றவர்களும் அவ்வாறே கருதினர். (கலா. 1:19; 2:9; மத். 13:55; மாற். 6:3) எனினும், இயேசுவுடனான இரத்த சம்பந்தமான உறவுக்கு யூதா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இயேசுகிறிஸ்துவின் அடியான்’ என தன் ஆவிக்குரிய உறவையே மனத்தாழ்மையுடன் வலியுறுத்தினார்.​—1 கொ. 7:22; 2 கொ. 5:16; மத். 20:27.

3பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மியூராடோரியன் சுருளில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது; இவ்வாறு இந்தப் பைபிள் புத்தகத்தின் நம்பகத் தன்மை ஆதரிக்கப்படுகிறது. மேலுமாக, (பொ.ச. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த) இது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்ததென அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் ஒப்புக்கொண்டார். “ஒருசில வரிகளே இருந்தும், பரலோகக் கிருபைக்குரிய நற்பயன் விளைவிக்கும் வார்த்தைகள் நிறைந்த” படைப்பு என ஆரிகென் இதை குறிப்பிட்டார். a டெர்ட்டுல்லியனும் இதை நம்பகமானதாக கருதினார். இது, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பாகம் என்பதில் சந்தேகமில்லை.

4குறிப்பிட்ட ஒரு சபையையோ தனி நபரையோ அவர் குறிப்பிடாமல், “அழைக்கப்பட்டவர்களுக்கு” என யூதா எழுதுகிறார்; ஆகவே அவருடைய நிருபம் கிறிஸ்தவர்கள் எல்லாரும் வாசிப்பதற்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு பொது நிருபம். அது எங்கு எழுதப்பட்டது என குறிப்பிடப்படாவிட்டாலும், பலஸ்தீனாவாகவே பெரும்பாலும் இருக்கலாம். அது எழுதப்பட்ட காலப்பகுதியைத் திட்டவட்டமாக குறிப்பிடுவதும் கடினம். எனினும் கிறிஸ்தவ சபை நன்கு வளர்ச்சியடைந்த காலமாய் அது இருந்திருக்க வேண்டும்; ஏனெனில், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைக”ளிடம் யூதா கவனத்தைத் திருப்பி, 2 பேதுரு 3:​3-ஐயும் மேற்கோள் காட்டுவதிலிருந்து இது தெரிகிறது. (யூ. 17, 18) மேலும், யூதாவுக்கும் இரண்டு பேதுருவின் இரண்டாம் அதிகாரத்துக்கும் நெருங்கிய ஒப்புமை உள்ளது. ஏறக்குறைய பேதுரு எழுதின அதே சமயத்தில் எழுதப்பட்டதை இது குறிப்பாய் தெரிவிக்கிறது. அவை இரண்டுமே அந்தச் சமயத்தில் சபை எதிர்ப்படும் ஆபத்தின் பேரில் அதிக கவலையை வெளிப்படுத்துகின்றன. ஆகவே, பெரும்பாலும் அந்தக் காலப்பகுதி பொ.ச. 65 ஆக இருக்கலாமென குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொ.ச. 66-ல் செஸ்டியஸ் காலஸ் யூதரின் கலகத்தை அடக்குவதற்கு வந்ததைப் பற்றியும் பொ.ச. 70-ல் எருசலேமின் வீழ்ச்சியைப் பற்றியும் யூதா குறிப்பிடாதது அந்தக் காலப்பகுதியை மேலும் ஆதரிக்கிறது. பாவிகளின்மீது குறிப்பாக நிறைவேறிய கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை யூதா தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார். எருசலேம் வீழ்ச்சியடையும் என்பதாக இயேசு ஏற்கெனவே முன்னறிவித்திருந்தார். இந்த சமயத்தில் எருசலேம் அவ்வாறு வீழ்ச்சியடைந்திருந்தால், இந்த நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தை தவறாமல் குறிப்பிடுவதன் மூலம் யூதா தனது வாதத்தை மேலும் உறுதிப்படுத்தியிருப்பார்.​—யூ. 5-7; லூக். 19:​41-44.

யூதாவின் பொருளடக்கம்

5வேசித்தனத்துக்கும் கர்த்தத்துவத்தை அவமதிப்பதற்கும் எதிராக எச்சரிக்கைகள் (வச. 1-16). “அழைக்கப்பட்டவர்களுக்கு” அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அதன்பின், “நமக்குப் பொதுவாயுள்ள இரட்சிப்பைப்பற்றி” எழுத விரும்பியதாக குறிப்பிடுகிறார். ஆனால் இப்பொழுது ‘விசுவாசத்துக்காகக் கடும் போராட்டத்தைப் போராடும்படி’ அவர்களுக்கு எழுதுவது அவசியம் என உணர்ந்ததாக யூதா கூறுகிறார். ஏன் அவ்வாறு? ஏனெனில் தேவபக்தியற்ற மனிதர் சபைக்குள் நுழைந்துள்ளனர், கடவுளுடைய தகுதியற்ற தயவை காமவிகார நடக்கைக்கு சாக்குப்போக்கு சொல்ல பயன்படுத்துகின்றனர். இந்த மனிதர்கள், “நமது ஒரே எஜமானும் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறவர்கள்” என்று யூதா சொல்கிறார். (வச. 1, 3, NW, 4, தி.மொ.) யெகோவா ஒரு ஜனத்தை எகிப்திலிருந்து காப்பாற்றியபோதிலும், “விசுவாசியாதவர்களை அழித்தார்” என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். மேலுமாக, தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டு வந்த அந்தத் தூதர்களையும் “மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று” யெகோவா வைத்திருக்கிறார். அவ்வாறே, சோதோம் கொமோராவின்மீதும் அவற்றின் அருகிலுள்ள பட்டணங்களின்மீதுமான நித்திய தண்டனை, ‘விபசாரத்தில் மிதமிஞ்சி அந்நிய மாம்சத்தை நாடித் தொடருவோரின்’ முடிவைக் குறித்து எச்சரிக்கை விடுக்கும் உதாரணமாகும்.​—வச. 5-7, தி.மொ.

6இப்போது, அவ்வாறே தேவபக்தியற்ற மனிதர் “மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைசெய்து, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.” பிரதான தூதனாகிய மிகாவேல்கூட, மோசேயின் உடலைக் குறித்து தர்க்கித்த பிசாசை தூஷிக்கவில்லை; “யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று மட்டுமே சொன்னார். எனினும் இந்த மனிதர்கள் தூஷணமாக பேசி, பகுத்தறிவில்லாத மிருகங்களைப்போல் தங்களைத் தொடர்ந்து கெடுத்துக் கொள்கின்றனர். காயீன், பிலேயாம், கலகக்கார கோரா ஆகியோரின் பாதையை அவர்கள் பின்பற்றியிருக்கின்றனர். அவர்கள், தண்ணீருக்குள் மறைந்து கிடக்கும் கற்பாறைகளைப் போன்றவர்கள்; தண்ணீரற்ற மேகங்கள்; இருமுறை செத்து வேரோடு பிடுங்கப்பட்ட கனியற்ற மரங்களைப் போன்றவர்கள்; தங்கள் அவமானத்தை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளைப் போன்றவர்கள்; மேலும், பாதை தவறி அலைகிற நட்சத்திரங்களைப் போலவும் அவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்காக “என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.” (வச. 8, 9, NW, 13) தேவபக்தியற்றவர்களை யெகோவா நியாயந்தீர்ப்பார் என ஏனோக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர்கள் முறுமுறுக்கிறவர்களும் குறைகூறுகிறவர்களுமாக இருக்கின்றனர்; சுயநலத்திற்காக முகஸ்துதி செய்கின்றனர்.

7கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதன்பேரில் அறிவுரை (வச. 17-25). “கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள்” என்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின் எச்சரிக்கையை சகோதரர்களுக்கு யூதா நினைப்பூட்டுகிறார். இத்தகைய கலகக்காரர் ‘ஆவிக்குரிய தன்மையில்லாத மிருகத்தனமான மனிதர்.’ ஆகவே, ‘நித்திய ஜீவனை நோக்கில் கொண்டு,’ கிறிஸ்துவின் இரக்கத்துக்கு காத்திருக்கும் ‘பிரியமானவர்கள்,’ விசுவாசத்தில் உறுதிப்பட்டு, தொடர்ந்து கடவுளுடைய அன்புக்கு தங்களை தகுதியுள்ளவர்களாய் வைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் பாகத்தில் இவர்கள், உறுதியற்றோருக்கு இரக்கங்காட்டி உதவுவார்களாக. இடறிவிழாதபடி தங்களைக் காப்பவரான “இரட்சகராகிய தேவனுக்கு,” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் செலுத்தும் துதியுடன் யூதா முடிக்கிறார்.​—வச. 18-21, 25.

ஏன் பயனுள்ளது

8தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள், ‘பிரியமானவர்களை’ எச்சரிப்பதற்கும், அறிவுரை கூறுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், போதிப்பதற்கும், கண்டித்துரைப்பதற்கும் பயனுள்ளதாக இருப்பதை யூதாவே அறிந்திருந்தார். சபைக்குள் நுழைந்த தேவபக்தியற்றோரின் படுமோசமான பாவத்தை வெட்டவெளிச்சமாக்குவதில், எபிரெய வேதாகமத்திலிருந்து பிரத்தியேக உதாரணங்களைப் பயன்படுத்தினார். அவை: தாங்கள் விட்டு வந்ததையே நாடிச் சென்ற இஸ்ரவேலர்கள், பாவம் செய்த தூதர்கள், சோதோம் கொமோராவின் மக்கள். அத்தகைய தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்து வருவோர் அதே போன்ற தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதை காட்ட இவற்றைப் பயன்படுத்தினார். மோசமான மனிதரை பகுத்தறிவற்ற மிருகங்களுக்கு ஒப்பிட்டார். மேலும் அவர்கள் காயீனின் பாதையில் சென்றதையும், பிலேயாமின் பாவத்துக்குள் விரைந்தோடியதையும், தங்கள் கலகத்தனமான பேச்சினிமித்தம் கோராவைப்போல் அழிந்ததையும் குறிப்பிட்டார். ‘இயற்கையின் புத்தகத்திலிருந்தும்’ தெளிவான காட்சிகளை மனக்கண்முன் நிறுத்தினார். ஒளிவுமறைவற்ற யூதாவின் நிருபம்தானே, “கடைசிக்காலத்திலே” நேர்மையாக நடப்பதற்குப் புத்திமதி கூறுவதாய் இருக்கிறது. அதோடு, மற்ற வேதவாக்கியங்களோடுகூட படிக்கப்படும்படி ‘முழு வேதாகமத்தின்’ பாகமாகியது.​—யூ. 17, 18, 5-7, 11-13; எண். 14:​35-37; ஆதி. 6:4; 18:​20, 21; 19:​4, 5, 24, 25; 4:​4, 5, 8; எண். 22:​2-7, 21; 31:8; 16:​1-7, 31-35.

9வெளியே இருந்துவந்த எதிர்ப்புகளும் துன்பங்களும் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை; ஆனால் இப்போது உள்ளுக்குள் எழும்பும் மோசங்களால் சகோதரர்கள் ஆபத்தை எதிர்ப்பட்டனர். தண்ணீரின் அடியில் மறைந்து கிடக்கும் பாறைகள் முழு சபைக்குமே அச்சுறுத்தலாய் அமைந்தன. இந்த ஆபத்து பெரும் சேதத்தை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்த யூதா, ‘விசுவாசத்துக்காக கடும் போராட்டத்தைப் போராடும்படி’ உறுதியாய் விவாதித்தார். அவருடைய நிருபம் அன்றும் இன்றும் காலத்திற்கு ஏற்றது. அதே எச்சரிக்கை இன்னமும் தேவைப்படுகிறது. விசுவாசம், கட்டிக் காக்கப்பட வேண்டிய ஒன்று; அதற்காக போராடவும் வேண்டும். ஒழுக்கக்கேடு வேரோடு பிடுங்கப்பட வேண்டும், சந்தேகிப்போருக்கு இரக்கத்துடன் உதவிசெய்து, முடிந்தால், அவர்களை ‘அக்கினியிலிருந்து பறித்திழுக்க’ வேண்டும். ஒழுக்கப்பிரகாரமான உண்மை, ஆவிக்குரிய பயன், உண்மையான வணக்கம் ஆகியவற்றின் மீதுள்ள நலன் காரணமாய், கிறிஸ்தவர்கள் இன்று மகா பரிசுத்த விசுவாசத்தில் தொடர்ந்து உறுதிப்பட வேண்டியது அவசியம். சரியான நியமங்களை அவர்கள் கடைப்பிடித்து ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கிவர வேண்டும். கிறிஸ்தவ சபையில் கடவுள் ஏற்படுத்தியுள்ள அதிகாரத்தை அவர்கள் மதித்துணர்ந்து, ‘கர்த்தத்துவத்துக்குத்’ தகுந்த மரியாதை காட்டுவதும் அவசியம்.​—யூ. 3, 22, தி.மொ., 8.

10‘ஆவிக்குரியத்தன்மை இல்லாத, மிருகத்தனமான மனிதர்’ கடவுளுடைய ராஜ்யத்தில் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை; அவர்கள் நித்திய ஜீவனுக்குச் செல்லும் பாதையில் உள்ள மற்றவர்களை ஆபத்துக்கு உட்படுத்துவர். (யூ. 19, NW; கலா. 5:​19-21) இவர்களைக் குறித்து சபையாரை எச்சரிக்க வேண்டும்; இவர்களை சபையிலிருந்து நீக்க வேண்டும்! இவ்வாறு, நேசத்திற்குரியவர்களிடம், “இரக்கமும் சமாதானமும் அன்பும்” பெருகும்; ‘நித்திய ஜீவனுக்கேதுவாக தங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருக்கையில்’ தங்களைக் கடவுளின் அன்புக்குத் தகுதியுள்ளவர்களாய் வைத்துக் கொள்வார்கள். இரட்சகராகிய கடவுள் இந்த ராஜ்ய சுதந்தரவாளிகளைத் ‘தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே மாசற்றவர்களாய்’ நிறுத்துவார். இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கே “மகிமையும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும்” உரியதென யூதாவுடன் சேர்ந்து இவர்களும் நிச்சயமாகவே சொல்கின்றனர்.​—யூ. 2, 21, 24, 25.

[அடிக்குறிப்பு]

a புதிய ஏற்பாட்டின் அதிகாரப்பூர்வ பட்டியல், (ஆங்கிலம்) 1987, பி. எம். மெட்ஸ்கர் எழுதியது, பக்கம் 138.

[கேள்விகள்]

1. சபைக்குள் நிலவிய என்ன நிலைமைகளால், தன் சகோதரர்களின் நன்மைக்காக உறுதியான ஒரு நிருபம் எழுதுவதை அவசியம் என யூதா உணர்ந்தார்?

2. (அ) யார் இந்த யூதா? (ஆ) இயேசுவுடன் இருந்த என்ன உறவை யூதா மிக உயர்வாய் மதித்தார்?

3. யூதாவின் நம்பகத் தன்மையை எது நிரூபிக்கிறது?

4. யூதா என்ன வகை நிருபம், பெரும்பாலும் அது எங்கே எழுதப்பட்டது, அது எழுதப்பட்ட காலத்தை எது குறிப்பிட்டு காட்டுகிறது?

5. (அ) அழைக்கப்பட்டவர்கள், ‘விசுவாசத்துக்காக கடும் போராட்டத்தைப் போராடும்படி’ எழுதுவதை யூதா ஏன் அவசியம் என கருதுகிறார்? (ஆ) என்ன எச்சரிக்கை விடுக்கும் உதாரணங்களை யூதா எடுத்துரைக்கிறார்?

6. தேவபக்தியற்ற மனிதர் எதில் மூழ்கிவிடுகின்றனர், அவர்களுடைய நடக்கையின் தவறான போக்கையும் அதன் விளைவையும் யூதா எவ்வாறு உதாரணங்களால் விளக்குகிறார்?

7. (அ) பரியாசக்காரரைக் குறித்து அப்போஸ்தலர்கள் எவ்வாறு எச்சரித்தார்கள்? (ஆ) நித்திய ஜீவன் எனும் நம்பிக்கையின் நோக்குநிலையில், “பிரியமானவர்கள்” தங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்ய வேண்டும்?

8. தன் சகோதரர்களுக்கு அறிவுரை கூறுவதில் யூதா, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களையும் ‘இயற்கையின் புத்தகத்தையும்’ எவ்வாறு பயன்படுத்தினார்?

9. யூதாவின் எச்சரிக்கை ஏன் இன்றும் தேவைப்படுகிறது, என்ன விஷயங்களில் கிறிஸ்தவர்கள் தங்களைத் தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்?

10. (அ) மிருகத்தனமான மனிதரை சபை எவ்வாறு நடத்த வேண்டும், இது எதில் விளைவடையும்? (ஆ) ராஜ்ய சுதந்தரவாளிகளுக்கு என்ன பரிசு காத்திருக்கிறது, எதில் இவர்கள் யூதாவுடன் சேர்ந்து கொள்கின்றனர்?