அப்போஸ்தலரின் செயல்கள் 11:1-30

11  மற்ற தேசத்து மக்களும் கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை யூதேயாவிலிருந்த அப்போஸ்தலர்களும் மற்ற சகோதரர்களும் கேள்விப்பட்டார்கள்.  அதனால், பேதுரு எருசலேமுக்கு வந்தபோது விருத்தசேதனத்தை ஆதரித்தவர்கள்+ அவரிடம் போய்,  “விருத்தசேதனம் செய்யாதவர்களுடைய வீட்டுக்குப் போய், அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டீர்களே” என்று அவரைக் குறை சொல்ல* ஆரம்பித்தார்கள்.  அப்போது பேதுரு, நடந்த விஷயங்களை அவர்களுக்கு விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார்.  “யோப்பா நகரத்தில் நான் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைப் பார்த்தேன்.* பெரிய நாரிழை* விரிப்பைப் போன்ற ஒன்று நான்கு முனைகளில் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு என் பக்கத்திலேயே வந்தது.+  அதை நான் உற்றுப் பார்த்தபோது, பூமியில் இருக்கிற நான்கு கால் விலங்குகளும் கொடிய மிருகங்களும் ஊரும் பிராணிகளும் வானத்துப் பறவைகளும் அதில் இருந்தன.  அப்போது, ‘பேதுருவே, நீ எழுந்து இவற்றை அடித்துச் சாப்பிடு!’ என்று ஒரு குரல் கேட்டது.  ஆனால் நான், ‘வேண்டவே வேண்டாம், எஜமானே. தீட்டானதோ அசுத்தமானதோ ஒருபோதும் என் வாய்க்குள் போனதில்லை’ என்று சொன்னேன்.  வானத்திலிருந்து அந்தக் குரல் இரண்டாவது தடவை என்னிடம், ‘கடவுள் சுத்தமாக்கியவற்றைத் தீட்டென்று சொல்லாதே’ என்றது. 10  மூன்றாவது தடவையும் அந்தக் குரல் கேட்டது. பின்பு, எல்லாமே திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 11  அந்தச் சமயம் பார்த்து, செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூன்று ஆட்கள் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.+ 12  எதைப் பற்றியும் சந்தேகப்படாமல் அவர்களோடு புறப்பட்டுப் போகும்படி கடவுளுடைய சக்தி என்னிடம் சொன்னது. இந்த ஆறு சகோதரர்களும் என்னோடு வந்தார்கள். நாங்கள் அந்த மனுஷருடைய வீட்டுக்குள் போனோம். 13  ஒரு தேவதூதர் தன்னுடைய வீட்டில் வந்து நின்றதைப் பார்த்ததாகவும், அந்தத் தேவதூதர் அவரிடம், ‘யோப்பாவுக்கு ஆட்களை அனுப்பி பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிக்கொண்டு வா.+ 14  நீயும் உன் வீட்டில் இருப்பவர்களும் மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று அவர் உனக்குச் சொல்வார்’ என்று சொன்னதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்தார். 15  ஆனால் நான் பேச ஆரம்பித்தபோது, கடவுளுடைய சக்தி முதலில் நம்மேல் எப்படிப் பொழியப்பட்டதோ+ அப்படியே அவர்கள்மேலும் பொழியப்பட்டது. 16  ‘யோவான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்.+ ஆனால் நீங்கள் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்’+ என்று எஜமான் சொல்லிவந்த வார்த்தைகள் அப்போது என்னுடைய ஞாபகத்துக்கு வந்தன. 17  எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் நம்பிக்கை வைத்திருக்கிற நமக்குக் கொடுக்கப்பட்ட அதே இலவச அன்பளிப்பைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால், கடவுளைத் தடுக்க* நான் யார்?”+ என்றார். 18  அவர்கள் இதையெல்லாம் கேட்டபோது எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு,* “அப்படியென்றால், மற்ற தேசத்து மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக மனம் திருந்துகிற வாய்ப்பைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்”+ என்று சொல்லி கடவுளை மகிமைப்படுத்தினார்கள். 19  ஸ்தேவானுடைய மரணத்துக்குப் பின்பு துன்புறுத்தல் வந்ததால், பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா ஆகிய இடங்கள்வரை சீஷர்கள் சிதறிப்போயிருந்தார்கள்.+ அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அறிவித்தார்கள்.+ 20  ஆனால் அவர்களில் சீப்புரு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் அந்தியோகியாவுக்கு வந்து எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியைக் கிரேக்க மொழி பேசிய மக்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார்கள். 21  யெகோவாவின்* கை அவர்களோடு இருந்தது. ஏராளமான மக்கள் எஜமானின் சீஷர்களானார்கள்.+ 22  அவர்களைப் பற்றிய செய்தி எருசலேமில் இருந்த சபையாரின் காதுக்கு எட்டியது. அதனால், பர்னபாவை+ அந்தியோகியாவரை போகச் சொல்லி அனுப்பி வைத்தார்கள். 23  அவர் அங்கே போய்ச் சேர்ந்தபோது, கடவுளுடைய அளவற்ற கருணையைப் பார்த்து சந்தோஷப்பட்டார். இதயத்தில் உறுதியோடு எஜமானுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தினார்.+ 24  பர்னபா நல்லவராக, கடவுளுடைய சக்தியும் விசுவாசமும் நிறைந்தவராக இருந்தார். ஏராளமான ஆட்கள் எஜமான்மேல் நம்பிக்கை வைத்தார்கள்.+ 25  பின்பு, சவுலை மும்முரமாகத் தேடிக் கண்டுபிடிக்க பர்னபா தர்சுவுக்குப் போனார்.+ 26  சவுலைக் கண்டுபிடித்த பின்பு அந்தியோகியாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். பிறகு அவர்கள் ஒரு வருஷம் முழுவதும் அந்தச் சபையாரோடு கூடி, ஏராளமான மக்களுக்குக் கற்பித்தார்கள். தெய்வீக வழிநடத்துதலால், சீஷர்கள் முதன்முதலாக அந்தியோகியாவில்தான் கிறிஸ்தவர்கள்+ என்று அழைக்கப்பட்டார்கள். 27  அந்த நாட்களில், சில தீர்க்கதரிசிகள்+ எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 28  அவர்களில் அகபு+ என்ற ஒருவர், உலகம் முழுவதும் கொடிய பஞ்சம் வரப்போகிறது என்று கடவுளுடைய சக்தியால் முன்னறிவித்தார்.+ அதன்படியே கிலவுதியு அரசனின் காலத்தில் நடந்தது. 29  அப்போது, சீஷர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை+ யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்குச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.+ 30  அதன்படியே, நிவாரணப் பொருள்களை பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்து அங்கிருந்த மூப்பர்களுக்கு அனுப்பினார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அவருடன் வாக்குவாதம் செய்ய.”
நே.மொ., “மெய்மறந்த நிலையில் பார்த்தேன்.”
அதாவது, “லினன்.”
வே.வா., “கடவுளுடைய பாதையில் குறுக்கே நிற்க.”
நே.மொ., “அமைதியாகிவிட்டு.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா