ஆதியாகமம் 28:1-22
28 அதனால், ஈசாக்கு யாக்கோபைக் கூப்பிட்டு, “நீ கானானியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக் கூடாது.+
2 பதான்-அராமில் இருக்கிற உன் தாத்தா* பெத்துவேலின் வீட்டுக்குப் புறப்பட்டுப் போ. அங்கே உன்னுடைய தாய்மாமன் லாபானின் மகள்களில்+ ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொள்” என்று சொன்னார்.
3 அதோடு, “சர்வவல்லமையுள்ள கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். உன்னை ஏராளமாகப் பெருக வைப்பார். உன் சந்ததி ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆகும்.+
4 ஆபிரகாமுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை+ அவர் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பார். நீ அன்னியனாகக் குடியிருக்கிற இந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வாய். ஆபிரகாமுக்கு அவர் கொடுத்த இந்தத் தேசம்+ உனக்குச் சொந்தமாகும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
5 பின்பு ஈசாக்கு யாக்கோபை அனுப்பி வைத்தார். அவர் பதான்-அராமில் இருந்த அரமேயனான பெத்துவேலின் மகன் லாபானுடைய வீட்டுக்குப் புறப்பட்டுப் போனார்.+ யாக்கோபையும் ஏசாவையும் பெற்றெடுத்த ரெபெக்காளின் சொந்த அண்ணன்தான் லாபான்.+
6 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்ததையும், கானானியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக் கூடாதென்று+ அவரிடம் சொல்லி பதான்-அராமுக்குப் போய் பெண் பார்க்கச் சொன்னதையும் ஏசா கேள்விப்பட்டான்.
7 யாக்கோபு தன்னுடைய அம்மா அப்பாவின் பேச்சைக் கேட்டு பதான்-அராமுக்குப் போனதையும் கேள்விப்பட்டான்.+
8 தன்னுடைய அப்பா ஈசாக்குக்கு கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை+ என்பது அவனுக்குப் புரிந்தது.
9 அதனால், ஏற்கெனவே மனைவிகள் இருந்தும்+ அவன் ஆபிரகாமின் மகன் இஸ்மவேலிடம்* போய், அவருடைய மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான மகலாத்தைக் கல்யாணம் செய்துகொண்டான்.
10 யாக்கோபு பெயெர்-செபாவிலிருந்து புறப்பட்டு ஆரானுக்குப்+ போய்க்கொண்டிருந்தார்.
11 பின்பு, ஒரு இடத்தில் தங்க முடிவுசெய்தார். ஏனென்றால், சூரியன் மறைந்து இருட்டாகியிருந்தது. அவர் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்துத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துத் தூங்கினார்.+
12 அப்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், பரலோகத்தைத் தொடும் அளவுக்கு உயரமான ஒரு படிக்கட்டு* பூமியில் இருந்தது. அதில் தேவதூதர்கள் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்தார்கள்.+
13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம்,
“உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+
14 உன்னுடைய சந்ததி நிச்சயம் பூமியின் மணலைப் போலப் பெருகும்.+ உன்னுடைய வம்சம் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் பரவும். உன் மூலமாகவும் உன் சந்ததி மூலமாகவும் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் நிச்சயமாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்.+
15 நான் உன்னோடு இருப்பேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாப்பேன். உன்னை இந்தத் தேசத்துக்குத் திரும்பி வரப் பண்ணுவேன்.+ நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், உன்னைக் கைவிடவே மாட்டேன்”+ என்று சொன்னார்.
16 யாக்கோபு தூக்கத்திலிருந்து எழுந்து, “நிஜமாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நான் தெரிந்துகொண்டேன்” என்றார்.
17 பின்பு பயபக்தியோடு, “இந்த இடம் எவ்வளவு பரிசுத்தமானது! இது கடவுளுடைய வீடாகத்தான் இருக்க வேண்டும்,+ பரலோகத்தின் வாசலாகத்தான் இருக்க வேண்டும்”+ என்றார்.
18 யாக்கோபு விடியற்காலையில் எழுந்து, தான் தலைவைத்துப் படுத்திருந்த கல்லை எடுத்து நினைவுக்கல்லாக நாட்டி அதன்மேல் எண்ணெய் ஊற்றினார்.+
19 அந்த இடத்துக்கு பெத்தேல்* என்று பெயர் வைத்தார். முன்பு அந்த நகரம் லஸ்+ என்று அழைக்கப்பட்டது.
20 அங்கே யாக்கோபு, “யெகோவா தொடர்ந்து என்னோடு இருந்து, பயணத்தில் என்னைப் பாதுகாத்து, உணவும் உடையும் தந்து,
21 என் அப்பாவின் வீட்டுக்கு என்னைப் பத்திரமாகத் திரும்பிவர வைத்தால், அவர் உண்மையிலேயே என்னுடைய கடவுள் என்பதை நிரூபிப்பார்.
22 நான் நாட்டிய இந்த நினைவுக்கல் கடவுளுடைய வீடாக இருக்கும்.+ என்னிடம் இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை நிச்சயமாகவே கடவுளுக்குக் கொடுப்பேன்” என்று நேர்ந்துகொண்டார்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “அம்மாவின் அப்பா.”
^ அதாவது, “இஸ்மவேலர்களிடம்.” இதற்குள் இஸ்மவேல் இறந்துவிட்டார்; ஏசாவுக்கு சுமார் 77 வயது.
^ வே.வா., “ஏணி.”
^ அர்த்தம், “கடவுளுடைய வீடு.”