ஆதியாகமம் 38:1-30
38 கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான், யூதா தன்னுடைய சகோதரர்களைவிட்டுப் பிரிந்துபோனார். அதுல்லாம் ஊரைச் சேர்ந்த ஹிரா என்பவர் குடியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர் கூடாரம் போட்டுத் தங்கினார்.
2 அங்கே சூவா என்ற ஒரு கானானியனின் மகளைப்+ பார்த்தார். அவளைக் கல்யாணம் செய்துகொண்டார்.
3 அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். யூதா அவனுக்கு ஏர்+ என்று பெயர் வைத்தார்.
4 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஓனேன் என்று பெயர் வைத்தாள்.
5 அதன்பின், அவள் இன்னொரு மகனையும் பெற்றெடுத்தாள். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தாள். சேலா பிறந்தபோது அவர்* அக்சீப்பில்+ இருந்தார்.
6 சில காலம் கழித்து, யூதா தன்னுடைய மூத்த மகன் ஏருக்கு தாமார்+ என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துவைத்தார்.
7 ஆனால், யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.
8 அவன் இறந்துவிட்டதால் யூதா தன்னுடைய மகன் ஓனேனிடம், “கொழுந்தனுடைய* கடமைப்படி நீ உன் அண்ணன் மனைவியைக் கல்யாணம் செய்துகொண்டு அவனுக்கு வாரிசு உண்டாக்கு”+ என்றார்.
9 அது தன்னுடைய வாரிசாக இருக்காது+ என்று ஓனேனுக்குத் தெரிந்ததால், தன்னுடைய அண்ணனின் மனைவியோடு உறவுகொண்ட எல்லா சமயத்திலும் தன் விந்துவைத் தரையில் விழவைத்தான்.+
10 அவன் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவே இல்லை. அதனால், அவனையும் கொன்றுபோட்டார்.+
11 அப்போது யூதா தன்னுடைய மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகும்வரை நீ உன்னுடைய அப்பா வீட்டுக்குப் போய் விதவையாகத் தங்கியிரு” என்றார். ஏனென்றால், சேலாவும் அவனுடைய சகோதரர்களைப் போலச் செத்துவிடுவானோ+ என்று யூதா பயந்தார். அவர் சொன்னபடியே, தாமார் தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குப் போய்த் தங்கியிருந்தாள்.
12 கொஞ்சக் காலம் கழித்து, சூவாவின்+ மகளான யூதாவின் மனைவி இறந்துபோனாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுசரித்தார். பின்பு, தன்னுடைய ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக அதுல்லாம் ஊரைச்+ சேர்ந்த தன்னுடைய நண்பர் ஹிராவைக் கூட்டிக்கொண்டு திம்னாவுக்குப்+ புறப்பட்டுப் போனார்.
13 அப்போது ஒருவர் தாமாரிடம், “ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன்னுடைய மாமனார் திம்னாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார்.
14 உடனே அவள் விதவையின் உடைகளை மாற்றிவிட்டு, முக்காடு போட்டுக்கொண்டு, ஒரு சால்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டாள். பின்பு, திம்னாவுக்குப் போகும் வழியிலிருந்த ஏனாயிம் ஊர்வாசலில் உட்கார்ந்துகொண்டாள். சேலா பெரியவனாகியும் யூதா அவனை அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்காததால்தான்+ அப்படிச் செய்தாள்.
15 யூதா அவளைப் பார்த்தவுடனே அவள் ஒரு தாசி என்று நினைத்துக்கொண்டார். ஏனென்றால், அவள் தன்னுடைய முகத்தை மூடியிருந்தாள்.
16 அவள் தன்னுடைய மருமகள்+ என்று தெரியாமல் அவள் பக்கமாகப் போய், “இன்றைக்கு ராத்திரி நாம் சேர்ந்து இருக்கலாமா?” என்று கேட்டார். “நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று அவள் கேட்டாள்.
17 அதற்கு அவர், “என்னுடைய மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்பி வைக்கிறேன்” என்றார். ஆனால் அவள், “அதை அனுப்பும்வரை எதையாவது எனக்கு அடமானமாகத் தருவீர்களா?” என்று கேட்டாள்.
18 அதற்கு அவர், “அடமானமாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அப்போது அவள், “உங்கள் முத்திரை மோதிரத்தையும்+ அதன் கயிற்றையும் உங்கள் கையிலுள்ள கோலையும் கொடுங்கள்” என்றாள். அவர் அவற்றைக் கொடுத்து, அன்றைக்கு ராத்திரி அவளோடு சேர்ந்து இருந்தார். அதனால் அவள் கர்ப்பமானாள்.
19 அதன்பின் அவள் எழுந்துபோய், தன்னுடைய சால்வையை எடுத்துவிட்டு விதவையின் உடைகளைப் போட்டுக்கொண்டாள்.
20 பின்பு யூதா, அதுல்லாம் ஊரைச் சேர்ந்த தன்னுடைய நண்பரின்+ கையில் அந்த வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்து, அந்தப் பெண்ணிடமிருந்த அடமானத்தை வாங்கிவரச் சொன்னார். ஆனால், அவரால் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
21 அதனால் அவர் அந்த ஊரிலிருந்த ஆண்களிடம் போய், “ஏனாயிமில் வழியோரமாக உட்கார்ந்திருந்த கோயில் தாசி* எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “கோயில் தாசி யாரும் இந்த ஊரில் இருந்ததே கிடையாது” என்றார்கள்.
22 கடைசியில் அவர் யூதாவிடம் திரும்பிப் போய், “அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுமட்டுமல்ல, ‘கோயில் தாசி யாரும் இந்த ஊரில் இருந்ததே கிடையாது’ என்று அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள்” என்றார்.
23 அதற்கு யூதா, “அவற்றை அவளே வைத்துக்கொள்ளட்டும். இனியும் அவளைத் தேடிப்போனால் நமக்குத்தான் அவமானம். சொன்னபடியே நான் இந்த வெள்ளாட்டுக் குட்டியை அனுப்பி வைத்தேன். என்ன செய்வது, உன்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.
24 சுமார் மூன்று மாதம் கழித்து, “உங்கள் மருமகள் தாமார் விபச்சாரம் செய்திருக்கிறாள், அதனால் கர்ப்பமாகிவிட்டாள்” என்று யாரோ யூதாவிடம் சொன்னார்கள். யூதா அதைக் கேட்டதும், “அவளை இழுத்து வந்து சுட்டெரியுங்கள்”+ என்றார்.
25 அவள் இழுத்து வரப்பட்டபோது, அடமானப் பொருள்களைத் தன்னுடைய மாமனாரிடம் அனுப்பி, “இந்தப் பொருள்களுக்கு யார் சொந்தக்காரரோ அவரால்தான் நான் கர்ப்பமானேன். இந்த முத்திரை மோதிரமும், கயிறும், கோலும்+ யாருடையது என்று தயவுசெய்து பாருங்கள்” என்று சொல்லச் சொன்னாள்.
26 யூதா அவற்றைப் பார்த்தவுடன், “அவள் என்னைவிட நீதியுள்ளவள். அவளை என் மகன் சேலாவுக்குக் கொடுக்காததால்தான்+ அவள் இப்படி நடந்துகொண்டாள்” என்று சொன்னார். அதற்குப்பின், அவளை அவர் தொடவே இல்லை.
27 அவளுக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அவள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன.
28 பிரசவ நேரத்தில், ஒரு குழந்தை தன் கையை வெளியே நீட்டியது. உடனே மருத்துவச்சி அடையாளத்துக்காக ஒரு சிவப்பு நூலை அதன் கையில் கட்டி, “இதுதான் முதலில் வந்த குழந்தை” என்று சொன்னாள்.
29 அந்தக் குழந்தை தன் கையை உள்ளே இழுத்துக்கொண்டது. உடனே, இன்னொரு குழந்தை வெளியே வந்தது. அப்போது அவள், “நீ கருப்பையைக் கிழித்துக்கொண்டு வந்திருக்கிறாய்!” என்று சொன்னாள். அதனால், அவனுக்கு பாரேஸ்*+ என்று பெயர் வைக்கப்பட்டது.
30 அதன்பின், கையில் சிவப்பு நூல் கட்டப்பட்டிருந்த அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்கு சேராகு+ என்று பெயர் வைக்கப்பட்டது.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “யூதா.”
^ அதாவது, “கணவனுடைய அண்ணன் அல்லது தம்பியுடைய.”
^ அநேகமாக, “கானானிய தெய்வ வழிபாட்டின் பாகமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்.”
^ அர்த்தம், “கிழிதல்.”