எசேக்கியேல் 19:1-14
19 “இஸ்ரவேலின் தலைவர்களைப் பற்றி நீ இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு:
2 ‘உன்னுடைய தாய் எப்படிப்பட்டவள்? அவள் சிங்கங்களோடு சிங்கமாக இருந்த ஒரு பெண் சிங்கம்.
பலமுள்ள இளம் சிங்கங்களோடு அவள் படுத்திருந்தாள்.
அங்கே தன்னுடைய குட்டிகளை வளர்த்தாள்.
3 அவள் வளர்த்த ஒரு குட்டி பலமுள்ள இளம் சிங்கமானான்.+
இரையைக் கடித்துக் குதறப் பழகிக்கொண்டான்.மனுஷர்களைக்கூட பீறிப்போட்டான்.
4 தேசங்கள் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டன; அவனைப் படுகுழியில் விழ வைத்துப் பிடித்தன.கொக்கிகள் மாட்டி அவனை எகிப்துக்கு இழுத்துச் சென்றன.+
5 அவன் திரும்பி வருவான் என்று அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்; கடைசியில், தன்னுடைய எதிர்பார்ப்பு வீண் என்பதைப் புரிந்துகொண்டாள்.
அதன்பின், இன்னொரு குட்டிக்குப் பயிற்சி கொடுத்து அவனைப் பலமுள்ள இளம் சிங்கமாக்கினாள்.
6 அவனும் மற்ற சிங்கங்களோடு நடந்து திரிந்து பலமுள்ள இளம் சிங்கமானான்.
இரையைக் கடித்துக் குதறப் பழகிக்கொண்டான்; மனுஷர்களைக்கூட பீறிப்போட்டான்.+
7 அவர்களுடைய கோட்டைகளில் சுற்றித் திரிந்து, அவர்களுடைய நகரங்களைச் சின்னாபின்னமாக்கினான்.பாழாக்கப்பட்ட தேசமெங்கும் அவனுடைய கர்ஜனை கேட்டது.+
8 அவனை வலைவீசிப் பிடிப்பதற்காகச் சுற்றுப்புற தேசத்தார் வந்தார்கள்.அவர்கள் தோண்டிய படுகுழியில் அவன் விழுந்தான்.
9 அவனுக்குக் கொக்கிகள் மாட்டி, அவனைக் கூண்டில் அடைத்து, பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள்.
அவனுடைய கர்ஜனை இனி இஸ்ரவேலின் மலைகளில் கேட்காதபடி அவனை அடைத்து வைத்தார்கள்.
10 உன்னுடைய தாய் தண்ணீரின் ஓரமாக நடப்பட்ட திராட்சைக் கொடி போல* இருந்தாள்.+
நிறைய தண்ணீர் கிடைத்ததால் நிறைய கிளைகளோடும் கனிகளோடும் செழிப்பாக இருந்தாள்.
11 அவளுடைய கிளைகள் ராஜாக்களின் செங்கோலாக ஆகுமளவுக்கு உறுதியாயின.
அவள் மற்ற மரங்களைவிட உயரமாக வளர்ந்தாள்.உயரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்ததால் எல்லா இடங்களிலிருந்தும் அவளைப் பார்க்க முடிந்தது.
12 ஆனாலும், கடவுளுடைய கடும் கோபத்தினால் அவள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டாள்.+அவளுடைய கனிகள் கிழக்குக் காற்றில் கருகிப்போயின.
அவளுடைய உறுதியான கிளைகள் முறிக்கப்பட்டு, காய்ந்துபோயின.+ அவை நெருப்பில் எரிந்துபோயின.+
13 இப்போது அவள் வனாந்தரத்தில் நடப்பட்டிருக்கிறாள்.தண்ணீர் இல்லாத வறண்ட தேசத்தில் இருக்கிறாள்.+
14 அவளுடைய கிளைகளில் பற்றிக்கொண்ட நெருப்பு அவளுடைய துளிர்களையும் கனிகளையும் சுட்டெரித்தது.அவளுடைய உறுதியான கிளைகள் எதுவுமே மிஞ்சவில்லை; ஆட்சி செய்ய செங்கோல் எதுவுமே இல்லை.+
‘இதுதான் புலம்பல் பாட்டு. இதுதான் புலம்பல் பாட்டாக இருக்கும்.’”
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “உன் இரத்தத்திலே திராட்சைக் கொடி போல.”