எசேக்கியேல் 20:1-49

20  ஏழாம் வருஷம், ஐந்தாம் மாதம், பத்தாம் நாளில் இஸ்ரவேலின் பெரியோர்கள்* சிலர் யெகோவாவிடம் விசாரிப்பதற்காக என்முன் வந்து உட்கார்ந்தார்கள்.  அப்போது யெகோவா என்னிடம்,  “மனிதகுமாரனே, இஸ்ரவேலின் பெரியோர்களிடம் இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என்னிடம் விசாரிக்கவா வந்திருக்கிறீர்கள்? ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களுக்குப் பதில் சொல்ல மாட்டேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”’  அவர்களுக்குத் தீர்ப்பு சொல்ல நீ தயாரா? மனிதகுமாரனே, அவர்களுக்குத் தீர்ப்பு சொல்ல நீ தயாரா? அவர்களுடைய முன்னோர்கள் செய்த அருவருப்பான காரியங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்து.+  நீ அவர்களிடம் இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில்,+ யாக்கோபின் பிள்ளைகளுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். எகிப்து தேசத்தில் நான் யார் என்று அவர்களுக்குக் காட்டினேன்.+ ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’ என்று சொல்லி, அவர்களுக்கு அந்த வாக்குறுதி கொடுத்தேன்.  நான் அவர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் வாழ வைப்பதாக அந்த நாளில் வாக்குறுதி கொடுத்தேன்.+ அது தேசங்களிலேயே மிக அழகான* தேசம், நானே தேர்ந்தெடுத்த* தேசம்.  நான் அவர்களிடம், ‘நீங்கள் எல்லாரும் உங்கள் கண் முன்னால் இருக்கிற அருவருப்பான சிலைகளைத் தூக்கியெறிய வேண்டும். எகிப்திலுள்ள அருவருப்பான* தெய்வங்களை வணங்கி உங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’+ என்று சொன்னேன்.  ஆனால், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். என் பேச்சைக் கேட்கவே இல்லை. அவர்களுடைய கண் முன்னால் இருந்த அருவருப்பான சிலைகளைத் தூக்கியெறியவில்லை. எகிப்திலுள்ள அருவருப்பான தெய்வங்களை விட்டுவிடவில்லை.+ அதனால், எகிப்து தேசத்தில் நான் அவர்கள்மேல் என் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் கொட்டித் தீர்ப்பேன் என்று சொன்னேன்.  ஆனால், அவர்களோடு இருந்த மற்ற ஜனங்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன்.+ அதனால், அந்த ஜனங்களுடைய கண் முன்னால் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து, நான் யார் என்பதைக் காட்டினேன்.+ 10  அவர்களை எகிப்திலிருந்து வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ 11  அதன்பின், என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் கொடுத்தேன்.+ அவற்றின்படி நடந்து அவர்கள் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக அவற்றைக் கொடுத்தேன்.+ 12  எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு அடையாளமாக+ இருப்பதற்காக ஓய்வுநாளையும் கொடுத்தேன்.+ யெகோவாவாகிய நான்தான் அவர்களைப் புனிதப்படுத்தும் கடவுள் என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தேன். 13  ஆனால், இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.+ என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடக்கவில்லை. என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளினார்கள். அவற்றை மனுஷன் கடைப்பிடித்தால் வாழ்வு பெறுவானே. ஆனால், அவர்கள் அதையெல்லாம் கடைப்பிடிக்கவில்லை. என்னுடைய ஓய்வுநாளைக் கொஞ்சம்கூட மதிக்காமல் அதன் புனிதத்தைக் கெடுத்தார்கள். அதனால் வனாந்தரத்தில் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டி அவர்களை அழிக்கப்போவதாகச் சொன்னேன்.+ 14  ஆனால், மற்ற ஜனங்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்து, அந்த ஜனங்களுடைய கண் முன்னால் நான் இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ 15  இருந்தாலும், நான் கொடுத்த வாக்குறுதிப்படி தேசங்களிலேயே மிக அழகான* தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ அவர்களைக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன் என்று அவர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது ஆணையிட்டுச் சொன்னேன்.+ 16  ஏனென்றால், அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளினார்கள், என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடக்கவில்லை, என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தார்கள், அவர்களுடைய அருவருப்பான சிலைகளைத்தான் ஆசையோடு வணங்கினார்கள்.+ 17  ஆனாலும், நான் பரிதாபப்பட்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டேன். வனாந்தரத்தில் அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டாமல் விட்டுவிட்டேன். 18  அங்கே அவர்களுடைய மகன்களிடம்,+ ‘உங்கள் முன்னோர்கள் போன வழியில் போகாதீர்கள்,+ அவர்களுடைய நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிக்காதீர்கள், அவர்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்கி உங்களைத் தீட்டுப்படுத்தாதீர்கள். 19  நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடங்கள், என்னுடைய நீதித்தீர்ப்புகளை எப்போதும் கடைப்பிடியுங்கள்.+ 20  என்னுடைய ஓய்வுநாளைப் புனிதப்படுத்துங்கள்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக அது எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு அடையாளமாக இருக்கும்’+ என்று சொன்னேன். 21  ஆனால், அந்த மகன்களும் எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.+ என்னுடைய சட்டதிட்டங்களின்படி நடக்கவில்லை. என்னுடைய நீதித்தீர்ப்புகளைப் பின்பற்றவில்லை. அவற்றை மனுஷன் கடைப்பிடித்தால் வாழ்வு பெறுவானே. ஆனால், அவர்கள் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளினார்கள். என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தார்கள். அதனால், வனாந்தரத்தில் நான் அவர்கள்மேல் என் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் கொட்டித் தீர்ப்பேன்+ என்று சொன்னேன். 22  ஆனால், மற்ற ஜனங்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது+ என்பதற்காக என் கோபத்தை அடக்கிக்கொண்டு,+ அந்த ஜனங்களுடைய கண் முன்னால் அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன். 23  அவர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது, மற்ற ஜனங்களுக்குள்ளும் தேசங்களுக்குள்ளும் அவர்களைச் சிதறிப்போகச் செய்வேன் என்று சொன்னேன்.+ 24  ஏனென்றால், அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளின்படி நடக்கவில்லை, என்னுடைய சட்டதிட்டங்களை ஒதுக்கித்தள்ளினார்கள்,+ என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுத்தார்கள், அவர்களுடைய முன்னோர்களின் அருவருப்பான சிலைகளைத்தான் ஆசையோடு வணங்கினார்கள்.+ 25  இப்படி, நன்மை தராத விதிமுறைகளையும் வாழ்வு தராத நீதித்தீர்ப்புகளையும் கடைப்பிடிப்பதற்கு நான் அவர்களை விட்டுவிட்டேன்.+ 26  அவர்கள் தங்களுடைய மூத்த பிள்ளைகளை நெருப்பில் பலி கொடுத்து,*+ அந்தப் பலியினாலேயே தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளும்படி விட்டுவிட்டேன். நான் யெகோவா என்று காட்டுவதற்காகவும், அவர்களை அழிப்பதற்காகவும்தான் அப்படி விட்டுவிட்டேன்.”’ 27  அதனால் மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “உங்களுடைய முன்னோர்கள் இப்படித்தான் எனக்குத் துரோகம் செய்து, என்னை நிந்தித்தார்கள். 28  நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி தந்த தேசத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ ஆனால், உயரமான குன்றுகளையும் அடர்த்தியான மரங்களையும்+ பார்த்தவுடன் அவர்கள் அருவருப்பான காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அங்கே வாசனையுள்ள பலிகளையும் திராட்சமது காணிக்கையையும் அவர்கள் செலுத்தினார்கள். 29  அதனால் நான் அவர்களிடம், ‘எதற்காக இந்த ஆராதனை மேடுகளுக்குப் போகிறீர்கள்? (அவை இன்றுவரை ஆராதனை மேடுகள் என்றுதான் அழைக்கப்படுகின்றன)’+ என்று கேட்டேன்.”’ 30  இப்போது இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நீங்களும் உங்களுடைய முன்னோர்களைப் போலவே அருவருப்பான சிலைகளை வணங்கி, எனக்குத் துரோகம் செய்து,+ உங்களையே தீட்டுப்படுத்துகிறீர்கள். 31  இன்றுவரை உங்களுடைய அருவருப்பான சிலைகளுக்குப் பலிகளைச் செலுத்தி, உங்கள் மகன்களை நெருப்பில் பலி கொடுத்து,*+ உங்களையே தீட்டுப்படுத்துகிறீர்கள். அதேசமயத்தில் என்னிடம் வந்து விசாரிக்கிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமோ?+ ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களுக்குப் பதில் சொல்ல மாட்டேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 32  ‘நீங்கள் எதை மனதில் வைத்துக்கொண்டு, “மரத்தையும் கல்லையும் வணங்குகிற+ மற்ற தேசங்களையும் ஜனங்களையும் போல நாம் இருக்கலாம்” என்று சொல்கிறீர்களோ அது நடக்கவே நடக்காது.’” 33  ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் கைபலத்தோடும் மகா வல்லமையோடும் பற்றியெரிகிற கோபத்தோடும்+ உங்களை ஆட்சி செய்வேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 34  நான் கைபலத்தோடும் மகா வல்லமையோடும் பற்றியெரிகிற கோபத்தோடும்+ உங்களைச் சிதறிப்போக வைத்த எல்லா தேசங்களிலிருந்தும் எல்லா ஜனங்கள் மத்தியிலிருந்தும் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன். 35  ஜனங்களுடைய வனாந்தரத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வந்து நேருக்கு நேராக உங்களோடு வழக்காடுவேன்.+ 36  ‘எகிப்தின் வனாந்தரத்தில் உங்களுடைய முன்னோர்களோடு வழக்காடியது போல உங்களோடும் வழக்காடுவேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 37  ‘மேய்ப்பனுடைய கோலின்கீழ் உங்களைப் போக வைப்பேன்.+ ஒப்பந்தத்தின் கட்டுப்பாட்டுக்குள்* உங்களைக் கொண்டுவருவேன். 38  ஆனால், எனக்கு அடங்கி நடக்காதவர்களை உங்கள் மத்தியிலிருந்து விலக்கிவிடுவேன்.+ அவர்கள் குடியிருக்கிற வேறு தேசத்திலிருந்து அவர்களை நான் கூட்டிக்கொண்டு வந்தாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்குள் நுழைய மாட்டார்கள்.+ அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.’ 39  இஸ்ரவேல் ஜனங்களே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எல்லாரும் போங்கள், போய் உங்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்குங்கள்!+ அதன் பின்பு, நீங்கள் என்னதான் என் பேச்சைக் கேட்காமல் போனாலும், உங்களுடைய அருவருப்பான சிலைகளாலும் பலிகளாலும் என்னுடைய பெயரின் பரிசுத்தத்தைக் கெடுக்க முடியாது.’+ 40  ‘இஸ்ரவேலில் இருக்கிற உயரமான மலையாகிய என்னுடைய பரிசுத்த மலையில்+ இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் என்னை வணங்குவார்கள்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘அங்கே உங்களைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன். பரிசுத்த காணிக்கைகளையும் முதல் விளைச்சலையும் நீங்கள் கொண்டுவர வேண்டுமென்று எதிர்பார்ப்பேன்.+ 41  மற்ற ஜனங்கள் மத்தியிலிருந்தும் மற்ற தேசங்களிலிருந்தும் நான் உங்களைக் கூட்டிச்சேர்க்கும்போது+ நீங்கள் செலுத்தும் வாசனையுள்ள பலிகளைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன். நான் உங்களுடைய பரிசுத்தமான கடவுள் என்று மற்ற எல்லா ஜனங்களுக்கும் காட்டுவேன்.’+ 42  ‘உங்கள் முன்னோர்களுக்குக் கொடுப்பதாக நான் வாக்குறுதி தந்த இஸ்ரவேல் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வரும்போது+ நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+ 43  முன்பு நீங்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டீர்கள் என்பதையும், என்னென்ன அக்கிரமங்கள் செய்து உங்களைத் தீட்டுப்படுத்தினீர்கள் என்பதையும் நினைத்துப் பார்ப்பீர்கள்.+ நீங்கள் செய்த எல்லா கெட்ட காரியங்களையும் நினைத்து உங்களையே அருவருப்பீர்கள்.+ 44  இஸ்ரவேல் ஜனங்களே, நான் உங்களுடைய பாவத்துக்கும் அக்கிரமத்துக்கும் ஏற்றபடி உங்களை நடத்தாமல் என் பெயருக்காக+ உங்களை இரக்கத்தோடு நடத்தும்போது நான் யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்” என்றார். 45  யெகோவா மறுபடியும் என்னிடம், 46  “மனிதகுமாரனே, தென்திசைக்கு நேராக உன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அதற்கு எதிராகவும் அங்கே இருக்கிற காட்டுப்பகுதிக்கு எதிராகவும் தீர்க்கதரிசனம் சொல். 47  தெற்கில் இருக்கிற காட்டுப்பகுதியைப் பார்த்து இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தியைக் கேள். உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இதோ, நான் உன்மேல் தீ வைக்கப் போகிறேன்.+ அது பச்சையான எல்லா மரங்களையும் பட்டுப்போன எல்லா மரங்களையும் ஒன்றுவிடாமல் பொசுக்கிவிடும். அந்தத் தீயை அணைக்க முடியாது.+ தெற்கிலிருந்து வடக்குவரை எல்லாருடைய முகங்களையும்* அது சுட்டெரிக்கும். 48  யெகோவாவாகிய நான்தான் தீ வைத்தேன் என்று எல்லா மனுஷர்களும் தெரிந்துகொள்வார்கள். அந்தத் தீயை யாராலும் அணைக்க முடியாது”’”+ என்றார். 49  அப்போது நான், “ஐயோ, உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! இந்த ஜனங்களிடம் நான் பேசினாலே, ‘இவன் வெறும் புதிராகத்தான் பேசிக்கொண்டிருக்கிறான்!’ என்று சொல்கிறார்கள்” என்றேன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்கள்.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “சிங்காரமான.”
வே.வா., “பார்த்து வைத்த.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
வே.வா., “சிங்காரமான.”
நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்து.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்து.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “கட்டுக்குள்.”
வே.வா., “எல்லா நிலங்களையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா