எபிரெயருக்குக் கடிதம் 4:1-16
4 அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பது பற்றிய வாக்குறுதி இன்னும் இருப்பதால், நம்மில் யாரும் அதை அனுபவிக்கத் தகுதியில்லாதவர்களாக ஆகிவிடாதபடி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.+
2 நம் முன்னோர்களைப் போலவே நமக்கும் நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது;+ ஆனால், அவர்கள் கேட்ட அந்தச் செய்தி அவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கவில்லை; ஏனென்றால், அந்தச் செய்திக்குக் கீழ்ப்படிந்தவர்களுக்கு இருந்த அதே விசுவாசம் அவர்களுக்கு இருக்கவில்லை.
3 விசுவாசம் வைத்திருக்கிற நாம்தான் அவரோடு ஓய்வை அனுபவிக்கிறோம்; அந்த ஓய்வைப் பற்றித்தான் கடவுள், “‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்” என்று சொல்லியிருக்கிறார்;+ இந்த உலகம் உண்டானதுமுதல் அவருடைய வேலைகள் முடிவுக்கு வந்தபோதிலும் அப்படிச் சொல்லியிருக்கிறார்.+
4 ஏனென்றால், இன்னொரு வசனத்தில், “கடவுள் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார்” என்று ஏழாம் நாளைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.+
5 “அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்” என்றும் சொல்லியிருக்கிறார்.+
6 இன்னும் சிலர் அந்த ஓய்வை அனுபவிக்க வேண்டியிருக்கிறது; நல்ல செய்தியை முதலில் கேட்டவர்கள் கீழ்ப்படியாமல்போனதால் அதை அனுபவிக்கவில்லை.+
7 அதனால்தான், அவர் “இன்று” என மறுபடியும் ஒரு நாளைத் தீர்மானித்து, “இன்று அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்” என்று மேலே சொல்லப்பட்டபடியே பல காலத்துக்குப் பின்பு தாவீதின் சங்கீதத்தில் சொன்னார்.+
8 ஓய்வெடுக்கிற இடத்துக்கு அவர்களை யோசுவா+ வழிநடத்தியிருந்தார் என்றால், வேறொரு நாளைப் பற்றிப் பிற்பாடு கடவுள் சொல்லியிருக்க மாட்டாரே.
9 அதனால், கடவுளுடைய மக்களுக்கு ஓய்வுகாலம் வரப்போகிறது.+
10 ஏனென்றால், கடவுள் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுப்பது போலவே அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பவனும் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்கிறான்.+
11 அதனால், அந்த ஓய்வை அனுபவிக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்; அப்போதுதான், நம்மில் யாரும் கீழ்ப்படியாதவர்களுடைய மாதிரியைப் பின்பற்றிப் பாவத்தில் விழுந்துவிட மாட்டோம்.+
12 கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.+ அது இரண்டு பக்கமும் கூர்மையான எந்த வாளையும்விட+ கூர்மையானது. அகத்தையும்* புறத்தையும்* மூட்டுகளையும் அவற்றின் மஜ்ஜையையும் பிரிக்குமளவுக்கு ஊடுருவக்கூடியது. இதயத்தில் இருக்கிற எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியும் சக்தி கொண்டது.
13 எந்தப் படைப்பும் அவருடைய பார்வைக்கு மறைவாக இல்லை;+ எல்லாமே அவருடைய கண்களுக்கு முன்னால் ஒளிவுமறைவில்லாமல் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அவருக்குத்தான் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும்.+
14 அதனால், பரலோகத்துக்குள் போயிருக்கிற கடவுளுடைய மகனாகிய இயேசு+ நமக்கு மாபெரும் தலைமைக் குருவாக இருப்பதால், அவரைப் பற்றி அறிவிப்பதை நாம் விட்டுவிடக் கூடாது.+
15 நம்முடைய தலைமைக் குரு நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட முடியாதவர் அல்ல,+ ஆனால் நம்மைப் போல் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டவர்; என்றாலும், பாவமே இல்லாதவர்.+
16 அதனால், அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை நாம் தயக்கமில்லாமல் அணுகுவோமாக.+ அப்படிச் செய்தால், நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெறுவோம்.