எரேமியா 28:1-17
28 அதே வருஷத்தில், அதாவது சிதேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷம் ஐந்தாம் மாதத்தில், கிபியோனைச்+ சேர்ந்த ஆசூரின் மகனாகிய அனனியா தீர்க்கதரிசி யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தான். அங்கே குருமார்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்னால் என்னிடம் இப்படிச் சொன்னான்:
2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை நான் உடைத்துப்போடுவேன்.+
3 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்து கொண்டுபோன எல்லா பாத்திரங்களையும் இரண்டே வருஷத்தில் மறுபடியும் இங்கே கொண்டுவருவேன்.’”+
4 “யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்+ யூதாவிலிருந்து பாபிலோனுக்குச்+ சிறைபிடிக்கப்பட்டுப் போன மற்ற எல்லா ஜனங்களையும் நான் மறுபடியும் இங்கே கொண்டுவருவேன். பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை உடைத்துப்போடுவேன்.’”
5 அப்போது எரேமியா தீர்க்கதரிசி, யெகோவாவின் ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த குருமார்களுக்கும் ஜனங்களுக்கும் முன்னால் அனனியா தீர்க்கதரிசியிடம்,
6 “ஆமென்!* யெகோவா இதைச் செய்யட்டும்! யெகோவா நீ சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றட்டும்! யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட பாத்திரங்களையும் அங்கே சிறைபிடிக்கப்பட்டுப் போன ஜனங்களையும் அவர் மறுபடியும் இங்கே கொண்டுவரட்டும்!
7 ஆனால், இப்போது நான் உனக்கும் இந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் சொல்லப்போகிற செய்தியைத் தயவுசெய்து கேள்.
8 எனக்கும் உனக்கும் முன்னால் வாழ்ந்த தீர்க்கதரிசிகள், பல தேசங்களையும் பெரிய ராஜ்யங்களையும் பற்றித் தீர்க்கதரிசனம் சொன்னபோது, போரும் பேராபத்தும் கொள்ளைநோயும் வருமென்றுதான் சொன்னார்கள்.
9 அப்படியிருக்கும்போது, சமாதானம் வருமென்று ஒரு தீர்க்கதரிசி சொன்னால், அவர் சொன்னபடி நடக்க வேண்டும். அப்போதுதான், அவர் உண்மையிலேயே யெகோவாவினால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பது தெரியவரும்” என்றார்.
10 அதைக் கேட்டதும் அனனியா தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப்போட்டான்.+
11 பின்பு எல்லா ஜனங்களுக்கும் முன்பாக, “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதேபோல், இரண்டே வருஷத்தில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியை எல்லா தேசத்தாருடைய கழுத்திலிருந்தும் நான் எடுத்து உடைத்துப்போடுவேன்’”+ என்று சொன்னான். அப்போது, எரேமியா தீர்க்கதரிசி அங்கிருந்து கிளம்பிப் போனார்.
12 அனனியா தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப்போட்ட சம்பவத்துக்குப் பின்பு யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்:
13 “நீ அனனியாவிடம் போய், ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீ மர நுகத்தடிகளை உடைத்தாய்.+ ஆனால், அவற்றுக்குப் பதிலாக இரும்பு நுகத்தடிகளை உண்டாக்குவாய்.”
14 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு அடிபணியும்படி இந்த எல்லா தேசத்தார்மேலும் நான் இரும்பு நுகத்தடியை வைப்பேன். அவர்கள் அவனுக்கு அடிபணிய வேண்டும்.+ காட்டு மிருகங்களைக்கூட நான் அவனுக்கு அடிபணிய வைப்பேன்”’+ என்று சொல்ல வேண்டும்.”
15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம்,+ “அனனியாவே, தயவுசெய்து கேள்! யெகோவா உன்னை அனுப்பவில்லை. நீ பொய் பேசி இந்த ஜனங்களை ஏமாற்றியிருக்கிறாய்.+
16 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உன்னை இந்த உலகத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவேன். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக நீ ஜனங்களைத் தூண்டியதால் இந்த வருஷமே செத்துப்போவாய்’”+ என்று சொன்னார்.
17 அதன்படியே, அனனியா தீர்க்கதரிசி அந்த வருஷம் ஏழாம் மாதம் இறந்துபோனான்.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “அப்படியே ஆகட்டும்!”