எரேமியா 29:1-32

29  நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த பெரியோர்களுக்கும்* குருமார்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் எரேமியா தீர்க்கதரிசி எருசலேமிலிருந்து ஒரு கடிதம் எழுதினார்.  எகொனியா ராஜாவும்,+ அவருடைய தாயும்,*+ அரண்மனை அதிகாரிகளும், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களும், கைத்தொழிலாளிகளும், கொல்லர்களும்* சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு+  எரேமியா அந்தக் கடிதத்தை சாப்பானின் மகன்+ எலாசாவிடமும் இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் கொடுத்தனுப்பினார். ஏனென்றால், சிதேக்கியா ராஜா+ இவர்கள் இரண்டு பேரையும் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடம் போகச் சொல்லியிருந்தார். அந்தக் கடிதத்தில் எரேமியா எழுதியது இதுதான்:  “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கைதிகளாக அனுப்பிய எல்லா ஜனங்களுக்கும் இப்படிச் சொல்கிறார்:  ‘வீடுகளைக் கட்டி அதில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதன் விளைச்சலைச் சாப்பிடுங்கள்.  கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து வையுங்கள். அவர்களும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளட்டும். அங்கே ஏராளமாகப் பெருகுங்கள், எண்ணிக்கையில் குறைந்துவிடாதீர்கள்.  நான் உங்களை அனுப்பியிருக்கிற நகரத்தில் சமாதானமாக இருங்கள்.* அந்த நகரத்துக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், நகரம் சமாதானமாக இருந்தால் நீங்களும் சமாதானமாக இருப்பீர்கள்.+  இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “உங்களோடு இருக்கிற தீர்க்கதரிசிகளையும் குறிசொல்கிறவர்களையும் நம்பி ஏமாந்துபோகாதீர்கள்.+ கனவு கண்டதாக அவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்காதீர்கள்.  யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் என் பெயரில் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை.’”’”+ 10  “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் பாபிலோனில் 70 வருஷம் இருந்த பின்பு, நான் வாக்குக் கொடுத்தபடியே மறுபடியும் உங்களுடைய தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+ 11  யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.+ உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.+ 12  நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன்.’+ 13  ‘நீங்கள் என்னை முழு இதயத்தோடு+ நாடித் தேடுவீர்கள்; அதனால், என்னைக் கண்டடைவீர்கள்.+ 14  என்னைக் கண்டடைய நான் உங்களுக்கு உதவுவேன்’+ என்று யெகோவா சொல்கிறார். ‘சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ உங்களைத் துரத்தியடித்த எல்லா தேசங்களிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ மறுபடியும் உங்கள் தேசத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்’ என்று யெகோவா சொல்கிறார். 15  ஆனால் நீங்கள், ‘யெகோவா எங்களுக்காக பாபிலோனில் தீர்க்கதரிசிகளைத் தந்திருக்கிறார்’ என்று சொல்கிறீர்கள். 16  தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவுக்கும்,+ இந்த நகரத்தில் வாழ்கிற எல்லா ஜனங்களுக்கும், அதாவது உங்களோடுகூட சிறைபிடிக்கப்படாத உங்கள் சகோதரர்களுக்கும், யெகோவா சொல்வது இதுதான்: 17  ‘பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் அவர்களுக்கு எதிராக வாளையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் அனுப்புகிறேன்.+ சாப்பிடவே முடியாதளவுக்கு அழுகிப்போன* அத்திப் பழங்களைப் போல அவர்களை ஆக்குவேன்.”’+ 18  ‘நான் அவர்களை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தாக்குவேன். அவர்களுக்கு வரும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே அதிர்ச்சி அடையும்,+ கதிகலங்கிப்போகும். நான் அவர்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிறவர்கள் அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ அவர்களைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+ 19  இதற்கெல்லாம் காரணம், நான் என் ஊழியர்களான தீர்க்கதரிசிகளைத் திரும்பத் திரும்ப அனுப்பியும் அவர்கள் என் பேச்சைக் கேட்காததுதான்’+ என்று யெகோவா சொல்கிறார். ‘நீங்களும் என் பேச்சைக் கேட்கவில்லை’+ என்று யெகோவா சொல்கிறார். 20  எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கைதிகளாக யெகோவா அனுப்பிய ஜனங்களே, அவருடைய செய்தியைக் கேளுங்கள். 21  அவருடைய பெயரில் பொய்த் தீர்க்கதரிசனங்கள் சொல்கிற கொலாயாவின் மகன் ஆகாபைப் பற்றியும் மாசெயாவின் மகன் சிதேக்கியாவைப் பற்றியும் இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:+ ‘நான் அவர்களை பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகவே கொலை செய்வான். 22  பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதா ஜனங்கள் எல்லாரும் அவர்களுக்கு நடந்ததைச் சொல்லி மற்றவர்களைச் சபிப்பார்கள். அதாவது, “பாபிலோன் ராஜாவினால் சுட்டெரிக்கப்பட்ட சிதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் யெகோவா உன்னை அழிக்கட்டும்!” என்று சொல்லி சபிப்பார்கள். 23  அவர்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலில் மிகவும் கேவலமாக நடந்துகொண்டார்கள்.+ மற்றவர்களுடைய மனைவிகளோடு முறைகேடான உறவு வைத்துக்கொண்டு, நான் சொல்லாத விஷயங்களை என் பெயரில் பொய்யாகச் சொன்னார்கள்.+ “அது எனக்கு நன்றாகத் தெரியும், அதற்கு நானே சாட்சி”+ என்று யெகோவா சொல்கிறார்.’” 24  “நெகெலாமைச் சேர்ந்த செமாயாவிடம்+ நீ இப்படிச் சொல்: 25  ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும், குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவுக்கும்,+ மற்ற எல்லா குருமார்களுக்கும் உன் பெயரில் நீ இப்படிக் கடிதம் எழுதி அனுப்பினாய்: 26  ‘யோய்தாவுக்குப் பதிலாக செப்பனியாவாகிய உங்களைக் குருவாக யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். யெகோவாவின் ஆலயத்தை மேற்பார்வை செய்வதற்கும் தீர்க்கதரிசியைப் போலப் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்கிறவர்களைப் பிடித்து தொழுமரங்களில் மாட்டி+ வைப்பதற்கும் அவர் உங்களை நியமித்திருக்கிறார். 27  அப்படியிருக்கும்போது, தீர்க்கதரிசி போல+ ஜனங்களிடம் நடந்துகொள்கிற ஆனதோத்+ ஊர்க்காரனாகிய எரேமியாவை ஏன் கண்டிக்காமல் விட்டிருக்கிறீர்கள்? 28  அவன் பாபிலோனிலிருந்த எங்களுக்கே கடிதம் எழுதி, “நீங்கள் விடுதலையாவதற்கு இன்னும் ரொம்பக் காலம் எடுக்கும். அதனால் வீடுகளைக் கட்டி அதில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதன் விளைச்சலைச் சாப்பிடுங்கள்,+—” என்று சொன்னான்.’”’” 29  தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்குமுன் குருவாகிய செப்பனியா+ அந்தக் கடிதத்தைப் படித்தபோது, 30  யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 31  “சிறைபிடிக்கப்பட்ட எல்லா ஜனங்களுக்கும் இந்தச் செய்தியை அனுப்பு: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “செமாயாவை நான் அனுப்பவில்லை. அவனாகவே உங்களிடம் தீர்க்கதரிசனம் சொன்னான். பொய்கள் சொல்லி உங்களை ஏமாற்ற நினைத்தான்.+ 32  அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவையும் அவன் சந்ததியையும் நான் தண்டிப்பேன். அவர்களில் ஒருவன்கூட என்னுடைய ஜனங்களோடு சேர்ந்து தப்பிக்க மாட்டான். என் ஜனங்களுக்கு நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை அவன் பார்க்க மாட்டான். ஏனென்றால், யெகோவாவாகிய எனக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி அவன் ஜனங்களைத் தூண்டியிருக்கிறான்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களுக்கும்.”
வே.வா., “ராஜமாதாவும்.”
அல்லது, “கோட்டைக் கொத்தளங்கள் கட்டுகிறவர்களும்.”
வே.வா., “சமாதானத்தை நாடுங்கள்.”
அல்லது, “வெடித்துப்போன.”
நே.மொ., “விசில் அடிப்பார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா