எரேமியா 33:1-26
33 எரேமியா ‘காவலர் முற்றத்திலே’+ வைக்கப்பட்டிருந்தபோது யெகோவா இரண்டாவது தடவையாக அவரிடம் பேசினார். அவர் எரேமியாவிடம்,
2 “பூமியைப் படைத்து, அதை வடிவமைத்து, உறுதியாக நிலைநிறுத்திய யெகோவா நான்தான். யெகோவா என்பது என் பெயர். யெகோவாவாகிய நான் சொல்வது இதுதான்:
3 ‘என்னைக் கூப்பிடு. நான் உனக்குப் பதில் சொல்வேன். உனக்கு இதுவரை தெரியாததும் புரியாததுமான முக்கியமான விஷயங்களைச் சொல்வேன்’”+ என்றார்.
4 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சில செய்திகளைச் சொல்கிறார். மண்மேடுகளை எழுப்பி வாளால் தாக்குகிற எதிரிகளிடமிருந்து+ இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக இடிக்கப்பட்டிருக்கிற வீடுகளைப் பற்றியும், யூதாவின் ராஜாவுடைய அரண்மனைகளைப் பற்றியும்,
5 கல்தேயர்களை எதிர்த்துப் போர் செய்ய வருகிற ஜனங்களைப் பற்றியும், தன்னுடைய கடும் கோபத்துக்குப் பலியானவர்களின் பிணங்கள் கிடக்கிற இடங்களைப் பற்றியும், அவர்கள் செய்த அக்கிரமங்களால் தான் வெறுத்து ஒதுக்கிய நகரத்தைப் பற்றியும் இப்போது இப்படிச் சொல்கிறார்:
6 ‘இந்த நகரத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவேன். இந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன்.+ இவர்களுக்கு ஆரோக்கியம் தருவேன். மிகுந்த சமாதானத்தையும் பாதுகாப்பையும்* அருளுவேன்.+
7 யூதாவிலிருந்தும் இஸ்ரவேலிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+ ஆரம்பத்தில் அவர்களை ஆசீர்வதித்தது போலவே மறுபடியும் ஆசீர்வதிப்பேன்.+
8 எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.+
9 எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவர்களுடைய நகரம் எனக்குப் புகழும் பெருமையும் சந்தோஷமும் மகிமையும் சேர்க்கிற நகரமாக ஆகும்.+ நான் அந்த நகரத்துக்குச் சமாதானத்தையும் மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும்*+ தருவதைக் கேள்விப்பட்டு எல்லா ஜனங்களும் பயந்து நடுங்குவார்கள்.’”+
10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘மனுஷர்களோ மிருகங்களோ நடமாட முடியாதளவுக்குப் பாழாகிவிட்டதாக நீங்கள் சொல்கிற யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும்
11 ஜனங்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுகிற சத்தம்+ மறுபடியும் கேட்கும். மணமகனுடைய குரலும் மணமகளுடைய குரலும் கேட்கும். அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், யெகோவா நல்லவர்,+ அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்!”+ என்று எல்லாரும் சொல்கிற சத்தம் கேட்கும்.’
“யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் யெகோவாவின் ஆலயத்துக்கு நன்றிப் பலிகளைக் கொண்டுவருவார்கள்.+ ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் இங்கே கூட்டிக்கொண்டு வந்து பழையபடி நன்றாக வாழ வைப்பேன்.’”
12 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘மனுஷர்களோ மிருகங்களோ நடமாட முடியாதளவுக்குப் பாழாகிப்போன இந்தத் தேசத்திலும் இதன் எல்லா நகரங்களிலும் மறுபடியும் மேய்ச்சல் நிலங்கள் உண்டாகும். மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளை அங்கே மேய்ப்பார்கள்.’+
13 யெகோவா சொல்வது இதுதான்: ‘மலைப்பகுதியின் நகரங்களிலும், தாழ்வான பிரதேசத்தின் நகரங்களிலும், தெற்கே உள்ள நகரங்களிலும், பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுவட்டாரத்திலும்,+ யூதாவின் நகரங்களிலும்+ மேய்ப்பர்கள் மறுபடியும் தங்களுடைய ஆடுகளை எண்ணுவார்கள்.’”
14 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது. அப்போது, இஸ்ரவேல் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் நான் கொடுக்கப்போவதாகச் சொன்ன எல்லா ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன்.+
15 அந்தச் சமயத்தில், தாவீதின் வம்சத்தில் ஒரு நீதியான தளிரை* துளிர்க்க வைப்பேன்.+ அவர் நியாயத்தோடும் நீதியோடும் ஜனங்களை ஆட்சி செய்வார்.+
16 அந்தச் சமயத்தில், யூதா காப்பாற்றப்படும்,+ எருசலேம் பாதுகாப்பாக இருக்கும்.+ ‘யெகோவா நம் நீதிக்குக் காரணமானவர்’+ என்ற பெயரால் அது அழைக்கப்படும்.”
17 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலை ஆட்சி செய்வதற்கு தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.+
18 எனக்குத் தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் மற்ற பலிகளையும் செலுத்துவதற்கு லேவியின் வம்சத்தில் குருமார்கள் யாரும் இல்லாமல் போக மாட்டார்கள்.’”
19 மறுபடியும் யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்:
20 “யெகோவா சொல்வது இதுதான்: ‘ராத்திரியும் பகலும் அதனதன் நேரத்தில் வருவதற்காக நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்களை எப்படி மாற்ற முடியாதோ,+
21 அப்படியே தாவீதின் வாரிசை ராஜாவாக்குவதற்கு+ நான் செய்த ஒப்பந்தத்தையும், என் குருமார்களாகிய லேவியர்களோடு+ நான் செய்த ஒப்பந்தத்தையும் மாற்ற முடியாது.+
22 வானத்தின் நட்சத்திரங்களை எப்படி எண்ண முடியாதோ, கடற்கரை மணலை எப்படி அளக்க முடியாதோ, அப்படியே என் ஊழியனாகிய தாவீதின் வம்சத்தையும் எனக்குச் சேவை செய்கிற லேவியர்களின் வம்சத்தையும் எண்ண முடியாதளவுக்குப் பெருகப் பண்ணுவேன்.’”
23 மறுபடியும் யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்:
24 “‘யெகோவா தான் தேர்ந்தெடுத்த இரண்டு குடும்பங்களையும் ஒதுக்கித்தள்ளிவிடுவார்’ என்று சிலர் சொல்கிறார்களே, நீ கவனிக்கவில்லையா? அவர்கள் என்னுடைய ஜனங்களை மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள், ஒரு தேசமாகவே மதிப்பதில்லை.
25 யெகோவா சொல்வது இதுதான்: ‘பகலுக்கும் ராத்திரிக்கும்,+ வானத்துக்கும் பூமிக்கும் நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்கள் ஒருபோதும் மாறாதது போலவே,+
26 யாக்கோபின் வம்சத்தையும் என் ஊழியனாகிய தாவீதின் வம்சத்தையும் ஒதுக்கித்தள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியும் ஒருபோதும் மாறாது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களின் வம்சத்தை ஆட்சி செய்ய தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் இல்லாமல் போக மாட்டார்கள். ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்,+ அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன்.’”+