எரேமியா 35:1-19

35  யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த காலத்தில்+ எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது; அவர்,  “நீ போய் ரேகாபியர்களிடம்+ பேசி அவர்களை யெகோவாவின் ஆலயத்தில் இருக்கிற ஒரு சாப்பாட்டு அறைக்குக் கூட்டிக்கொண்டு வா. அவர்களுக்குத் திராட்சமதுவைக் குடிக்கக் கொடு” என்று சொன்னார்.  அதனால் நான் அபசினியாவின் மகனாகிய எரேமியாவின் மகன் யசினியாவையும், அவனுடைய சகோதரர்களையும், அவனுடைய எல்லா மகன்களையும், மற்ற எல்லா ரேகாபியர்களையும்  யெகோவாவின் ஆலயத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன். அவர்களை உண்மைக் கடவுளின் ஊழியராகிய இக்தாலியாவின் மகன் ஆனானின் மகன்களுடைய சாப்பாட்டு அறைக்குக் கூட்டிக்கொண்டு வந்தேன். அது அதிகாரிகளின் சாப்பாட்டு அறைக்குப் பக்கத்திலும், வாயிற்காவலரான சல்லூமின் மகன் மாசெயாவின் சாப்பாட்டு அறைக்கு மேலேயும் இருந்தது.  பின்பு, நான் திராட்சமது நிறைந்த கோப்பைகளையும் கிண்ணங்களையும் ரேகாபிய ஆண்களுக்கு முன்பாக வைத்து, “திராட்சமது குடியுங்கள்” என்று சொன்னேன்.  ஆனால் அவர்கள், “நாங்கள் திராட்சமது குடிக்க மாட்டோம். ஏனென்றால், எங்கள் மூதாதையான ரேகாபின் மகன் யோனதாப்+ எங்களிடம், ‘நீங்களும் உங்கள் பிள்ளைகளும் திராட்சமது குடிக்கவே கூடாது.  வீடுகளைக் கட்டக் கூடாது, விதை விதைக்கக் கூடாது, திராட்சைத் தோட்டம் அமைக்கக் கூடாது, அதை வாங்கவும் கூடாது. எப்போதும் கூடாரங்களில்தான் தங்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் குடியேறிய வேறு தேசத்தில் நீண்ட காலம் வாழ்வீர்கள்’ என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.  எங்கள் மூதாதையான ரேகாபின் மகன் யோனதாப் கொடுத்த கட்டளைக்கு நாங்கள் எப்போதும் கீழ்ப்படிகிறோம். அவர் சொன்னபடியே நாங்களும் எங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் திராட்சமது குடிப்பதில்லை.  குடியிருப்பதற்காக நாங்கள் வீடுகளைக் கட்டுவதில்லை. எங்களுக்குத் திராட்சைத் தோட்டங்களோ வயல்களோ விதைகளோ இல்லை. 10  நாங்கள் கூடாரங்களில் வாழ்ந்துவருகிறோம். எங்கள் மூதாதையான யோனதாப் கொடுத்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்துவருகிறோம். 11  பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவுக்கு எதிராக வந்தபோது+ நாங்கள், ‘கல்தேயர்களிடமிருந்தும் சீரியர்களிடமிருந்தும் தப்பிக்க எருசலேமுக்குப் போய்விடலாம்’ என்று பேசிக்கொண்டோம். அதன்படியே, இப்போது எருசலேமில் வாழ்ந்துவருகிறோம்” என்று சொன்னார்கள். 12  அப்போது யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 13  “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம் போய் இப்படிச் சொல்: “நீங்கள் என் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று நான் திரும்பத் திரும்பச் சொன்னேன், இல்லையா?”+ என்று யெகோவா கேட்கிறார். 14  “திராட்சமது குடிக்கக் கூடாதென்று ரேகாபின் மகன் யோனதாப் தன்னுடைய வம்சத்தாருக்குக் கட்டளை கொடுத்திருந்தார். அவர்களும் இன்றுவரை அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து திராட்சமது குடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுடைய மூதாதையின் பேச்சுக்கு எப்போதும் மதிப்புக் கொடுக்கிறார்கள்.+ ஆனால், நீங்கள் என் பேச்சை மதிப்பதே இல்லை. நான் திரும்பத் திரும்பச் சொன்னாலும் நீங்கள் கேட்பதே இல்லை.+ 15  என் ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் நான் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி,+ ‘தயவுசெய்து நீங்கள் எல்லாரும் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்துங்கள்.+ நல்ல வழியில் நடங்கள். மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்காதீர்கள். அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் தொடர்ந்து வாழ்வீர்கள்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. 16  ரேகாபின் மகனாகிய யோனதாபின் வம்சத்தார் அவர்களுடைய மூதாதையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.+ ஆனால், இந்த ஜனங்கள் என் பேச்சைக் கேட்பதே இல்லை.”’” 17  “அதனால், ‘நான் எச்சரித்தபடியே யூதாவுக்கும் எருசலேமுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன்.+ ஏனென்றால், நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. நான் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் அவர்கள் பதில் பேசவே இல்லை’ என்று பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமாகிய யெகோவா சொல்கிறார்.”+ 18  பின்பு எரேமியா ரேகாபியர்களிடம், “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் உங்களுடைய மூதாதையான யோனதாப் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறீர்கள். அவர் சொன்னதையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்படியே செய்துவருகிறீர்கள். 19  அதனால், “என் சன்னிதியில் சேவை செய்வதற்கு ரேகாபின் மகனாகிய யோனதாபின் வம்சம் எப்போதுமே இருக்கும்” என்று இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்கிறார்’” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா