எரேமியா 37:1-21

37  யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+  ஆனால், சிதேக்கியாவும் அவருடைய ஊழியர்களும் அவருடைய ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகளைக் கேட்கவில்லை.  சிதேக்கியா ராஜா, செலேமியாவின் மகன் யெகூகாலையும்+ குருவாகிய மாசெயாவின் மகன் செப்பனியாவையும்+ எரேமியா தீர்க்கதரிசியிடம் அனுப்பி, “தயவுசெய்து எங்களுக்காக யெகோவா தேவனிடம் ஜெபம் செய்யுங்கள்” என்று சொல்லச் சொன்னார்.  அந்தச் சமயத்தில் எரேமியா சிறையில் அடைக்கப்படவில்லை.+ அதனால், ஜனங்கள் மத்தியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருந்தார்.  எருசலேமைச் சுற்றிவளைத்திருந்த கல்தேயர்கள் திடீரென்று பின்வாங்கிப் போனார்கள்.+ ஏனென்றால், பார்வோனின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு+ வந்துகொண்டிருந்ததைக் கேள்விப்பட்டார்கள்.  அப்போது, எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா இப்படிச் சொன்னார்:  “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னிடம் விசாரித்து வரும்படி உன்னை அனுப்பிய யூதாவின் ராஜாவிடம் நீ இதைத்தான் சொல்ல வேண்டும்: “இதோ, உனக்கு உதவி செய்வதற்காக வந்துகொண்டிருக்கிற பார்வோனின் படை அதன் தேசமாகிய எகிப்துக்கே திரும்பிப் போக வேண்டியிருக்கும்.+  ஆனால், கல்தேயர்கள் மறுபடியும் வந்து இந்த நகரத்தைக் கைப்பற்றி இதைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.”+  யெகோவா சொல்வது இதுதான்: “கல்தேயர்கள் மறுபடியும் இந்தப் பக்கம் வரவே மாட்டார்கள் என்று நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் கண்டிப்பாக வருவார்கள். 10  உங்களோடு போர் செய்கிற கல்தேயர்களின் படையை நீங்கள் ஒட்டுமொத்தமாக வெட்டிப்போட்டால்கூட, சிலர் வெட்டுக்காயத்தோடு தப்பிப்பார்கள். அவர்கள் தங்களுடைய கூடாரங்களிலிருந்து எழுந்துவந்து இந்த நகரத்தைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.”’”+ 11  பார்வோனின் படை வருவதைக் கேள்விப்பட்டு கல்தேயர்களின் படை பின்வாங்கிப்போன+ பின்பு, 12  எரேமியா தன்னுடைய ஜனங்களிடமிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய சொத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எருசலேமிலிருந்து பென்யமீன் தேசத்துக்குப்+ புறப்பட்டுப் போனார். 13  ஆனால் அவர் ‘பென்யமீன் நுழைவாசலை’ அடைந்ததும், அனனியாவின் மகனாகிய செலேமியாவின் மகனும் காவலர்களின் அதிகாரியுமான யெரியா என்பவன் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைப் பிடித்து, “நீ கல்தேயர்களோடு சேர்ந்துகொள்ளப் பார்க்கிறாய்!” என்றான். 14  ஆனால் எரேமியா, “இல்லவே இல்லை! நான் கல்தேயர்களோடு சேர்ந்துகொள்ளப் போவதில்லை!” என்றார். ஆனாலும் அவன் அதை நம்பாமல் எரேமியாவைக் கைது செய்து அதிகாரிகளிடம் கொண்டுபோனான். 15  அந்த அதிகாரிகள் பயங்கர கோபத்தோடு எரேமியாவை+ அடித்து, செயலாளரான யெகோனத்தானின் வீட்டில் அடைத்து வைத்தார்கள்.+ ஏனென்றால், அந்த வீடு ஒரு சிறையாக மாற்றப்பட்டிருந்தது. 16  அங்கிருந்த நிலத்தடி இருட்டறை ஒன்றில் எரேமியா பல நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டார். 17  அப்போது, சிதேக்கியா ராஜா ஆட்களை அனுப்பி எரேமியாவைத் தன்னுடைய அரண்மனைக்கு வர வைத்து, ரகசியமாக விசாரித்தார்.+ அவர் எரேமியாவிடம், “யெகோவா ஏதாவது செய்தி சொல்லியிருக்கிறாரா?” என்று கேட்டார். அதற்கு எரேமியா, “சொல்லியிருக்கிறார்! நீங்கள் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவீர்கள்”+ என்றார். 18  பின்பு சிதேக்கியா ராஜாவிடம் எரேமியா, “நான் உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் இந்த ஜனங்களுக்கும் எதிராக அப்படியென்ன பாவம் செய்துவிட்டேன்? ஏன் என்னைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? 19  ‘பாபிலோன் ராஜா உங்களுக்கு எதிராகவும் இந்தத் தேசத்துக்கு எதிராகவும் வர மாட்டார்’ என்று உங்களிடம் சொன்ன தீர்க்கதரிசிகள் இப்போது எங்கே போனார்கள்?+ 20  ராஜாவே, என் எஜமானே, தயவுசெய்து கேளுங்கள். தயவுசெய்து எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். செயலாளராகிய யெகோனத்தானின் வீட்டுக்கு+ மறுபடியும் என்னை அனுப்பிவிடாதீர்கள்; அங்கு போனால் நான் செத்தே போய்விடுவேன்”+ என்று சொன்னார். 21  அதனால், எரேமியாவை ‘காவலர் முற்றத்தில்’+ அடைத்து வைக்கும்படி சிதேக்கியா ராஜா கட்டளை கொடுத்தார். நகரத்தில் ரொட்டி கிடைக்கும்வரை+ ரொட்டி சுடுகிறவர்களின் தெருவிலிருந்து+ தினமும் எரேமியாவுக்கு ஒரு வட்டமான ரொட்டி கொடுக்கப்பட்டது. அவர் ‘காவலர் முற்றத்திலேயே’ வைக்கப்பட்டிருந்தார்.

அடிக்குறிப்புகள்

யோயாக்கீன் என்றும் எகொனியா என்றும்கூட அழைக்கப்படுகிறார்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா