ஏசாயா 14:1-32

14  யாக்கோபுக்கு யெகோவா இரக்கம் காட்டுவார்.+ இஸ்ரவேலை மறுபடியும் தேர்ந்தெடுத்து+ அவர்களுடைய தேசத்திலே குடிவைப்பார்.*+ மற்ற தேசத்து ஜனங்கள் யாக்கோபின் வம்சத்தாரோடு சேர்ந்துகொள்வார்கள்.+  பின்பு, அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அவர்கள் தேசத்திலேயே விடுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை யெகோவாவின் தேசத்தில் வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்வார்கள்.+ தங்களைச் சிறைபிடித்தவர்களைச் சிறைபிடிப்பார்கள், தங்களை வேலை வாங்கியவர்களை வேலை வாங்குவார்கள்.  வேதனைகளிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும், அடிமைகளாக நீங்கள் பட்ட பாடுகளிலிருந்தும் யெகோவா உங்களை விடுவிக்கும் நாளில்,+  பாபிலோன் ராஜாவைப் பற்றி இப்படிக் கேலியாகப் பேசுவீர்கள்: “மற்றவர்களை மிரட்டி வேலை வாங்கியவன் ஒழிந்துபோனானே! அடக்கி ஒடுக்கியவன் அழிந்துபோனானே!+   கொடுமைக்காரர்களின் கோலையும், கொடுங்கோலர்களின் தடியையும்யெகோவா முறித்துவிட்டார்.+   ஜனங்களை ஆத்திரத்தோடு தாக்கிக்கொண்டே இருந்தவனையும்+தேசங்களை ஆவேசத்தோடு கைப்பற்றி, ஓயாமல் துன்புறுத்தியவனையும்+ அவர் அழித்துவிட்டார்.   இப்போது முழு பூமியும் தொல்லை இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஜனங்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறார்கள்.+   ஆபால் மரங்களும் லீபனோனின் தேவதாரு மரங்களும்உன் கதியைப் பார்த்து சிரிக்கின்றன. ‘நீ ஒழிந்ததுதான் எங்களுக்குப் பெரிய நிம்மதி,எங்களை வெட்ட இப்போது யாரும் வருவதில்லை’ என்று சொல்கின்றன.   கல்லறைகூட பரபரப்பாக இருக்கிறது.உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது. உன்னைச் சந்திக்க செத்தவர்களைக்கூட* எழுப்புகிறது.உலகத்தை ஆண்டு செத்துப்போன கொடுங்கோலர்களைத் தட்டி எழுப்புகிறது. எல்லா தேசத்து ராஜாக்களையும் சிம்மாசனங்களிலிருந்து எழுந்திருக்கச் செய்கிறது. 10  அவர்கள் எல்லாரும் உன்னிடம்,‘நீயும் எங்களைப் போல ஆகிவிட்டாயா? பலத்தையெல்லாம் இழந்துவிட்டாயா? 11  உன் பெருமை கல்லறைக்குள் புதைந்துவிட்டது.உன் இசைக் கருவிகளின் சத்தம் சமாதியில் அடங்கிவிட்டது.+ புழுக்கள்தான் உன் படுக்கை.புழுக்கள்தான் உன் போர்வை’ என்று சொல்கிறார்கள். 12  நட்சத்திரமாக மினுமினுத்தவனே, விடியலின் மகனே,நீ தேசங்களை வீழ்த்தினாயே.+ இப்போது நீயே வானத்திலிருந்து விழுந்துவிட்டாயே!கீழே பூமிக்குத் தள்ளப்பட்டாயே! 13  நீ உன் உள்ளத்தில், ‘நான் பரலோகத்துக்கு ஏறிப்போவேன்.+ கடவுளுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிம்மாசனத்தை உயர்த்துவேன்.+வடகோடியில் எல்லாரும் கூடிவருகிற மலையில் உட்காருவேன்.+ 14  நான் மேகங்களுக்கு மேல் ஏறுவேன்.உன்னதமான கடவுளைப் போல் ஆவேன்’ என்று சொல்லிக்கொண்டாய். 15  ஆனால், நீ கல்லறைக்குள் இறக்கப்படுவாய்.அதன் அடிமட்டத்துக்குத் தள்ளப்படுவாய். 16  உன்னைப் பார்க்கிறவர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.உன்னை உற்றுப் பார்த்து,‘இவன்தான் உலகத்தையே ஆட்டிப்படைத்தவனா?இவன்தான் எல்லா ராஜ்யங்களையும் நடுங்க வைத்தவனா?+ 17  ஊர்களையெல்லாம் அழித்து,உலகத்தை வனாந்தரம்போல் மாற்றியவன்+ இவன்தானா?கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்துக்கொண்டவன்+ இவன்தானா?’ என்று கேட்பார்கள். 18  மற்ற தேசத்து ராஜாக்கள் எல்லாரும்கௌரவமாக அடக்கம் செய்யப்பட்டார்கள்.எல்லாரும் அவரவர் கல்லறையில் வைக்கப்பட்டார்கள். 19  ஆனால், நீ அடக்கம் செய்யப்படாமல் தூக்கி எறியப்பட்டிருக்கிறாய்.அழுகிப்போன துளிர்போல்* வீசப்பட்டிருக்கிறாய்.வாளால் வெட்டப்பட்டவர்களோடு பிணமாகக் கிடக்கிறாய்.கால்களின் கீழே மிதிபடுகிறாய்.கற்கள் நிறைந்த குழிக்குள்ளே வீசப்படுகிறாய். 20  நீ மற்ற ராஜாக்களைப் போல் அடக்கம் செய்யப்பட மாட்டாய்.ஏனென்றால், நீயே உன் தேசத்தை அழித்துப்போட்டாய்.நீயே உன் ஜனங்களைக் கொன்றுபோட்டாய். கெட்டவர்களுடைய வம்சம் அடியோடு மறக்கப்படும். 21  முன்னோர்கள் செய்த பாவங்களுக்காகஅவர்களுடைய மகன்களைக் கொன்றுபோடத் தயாராகுங்கள்.அப்போதுதான் அவர்கள் எழும்பி உலகத்தைக் கைப்பற்ற மாட்டார்கள்.பூமியைத் தங்களுடைய நகரங்களால் நிரப்ப மாட்டார்கள்.” 22  “நான் அவர்களுக்கு எதிராக எழும்புவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். “நான் பாபிலோனின் பெயரையும், அங்கே மீதியாக இருப்பவர்களையும், அவர்களுடைய வம்சத்தையும், வாரிசையும் அழித்துவிடுவேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 23  “அதை அடியோடு அழித்துவிடுவேன்.* சேறும் சகதியும் நிறைந்த இடமாகவும், முள்ளம்பன்றிகளின் குடியிருப்பாகவும் மாற்றிவிடுவேன்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 24  பரலோகப் படைகளின் யெகோவா, “நான் நினைத்தபடியே நடக்கும்.நான் முடிவுசெய்தது நிறைவேறியே தீரும். 25  அசீரியனை என் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன்.அவனை என் மலையில் மிதித்துப்போடுவேன்.+ என் ஜனங்கள்மேல் அவன் சுமத்திய நுகத்தடியை எடுத்துப்போடுவேன்.அவர்கள்மேல் அவன் வைத்த சுமையை இறக்கிவிடுவேன்”+ என்று ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார். 26  முழு உலகத்துக்கும் முடிவு செய்யப்பட்டிருப்பது இதுதான்.எல்லா தேசங்களுக்கும் எதிராக ஓங்கியிருக்கும் கை இதுதான். 27  இது பரலோகப் படைகளின் யெகோவா எடுத்திருக்கும் முடிவு.யாரால் அதை மாற்ற முடியும்?+ அவர் கையை ஓங்கியிருக்கிறார்.யாரால் அதைத் தடுக்க முடியும்?+ 28  ஆகாஸ் ராஜா இறந்த+ வருஷத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு இதுதான்: 29  “பெலிஸ்திய ஜனங்களே,உங்களை அடித்தவனின் தடி முறிந்துவிட்டதற்காகச் சந்தோஷப்படாதீர்கள். ஏனென்றால், அவனுடைய வாரிசு+ விஷப்பாம்புக்குப் பிறந்த குட்டிபோல் இருப்பான்.+அவன் மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் கொடிய பாம்பாக* இருப்பான். 30  எளியவர்களின் பிள்ளைகள் நன்றாகச் சாப்பிடுவார்கள்.ஏழைகள் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவார்கள்.ஆனால், உங்கள் குடும்பங்களைப் பஞ்சத்தால் சாகடிப்பேன்.உங்களில் மீதியாக இருப்பவர்களைக் கொன்றுபோடுவேன்.+ 31  நகரவாசலே, புலம்பி அழு! நகரமே, கதறி அழு! பெலிஸ்திய ஜனங்களே, நீங்கள் எல்லாரும் பயந்து நடுங்குவீர்கள். ஏனென்றால், வடக்கிலிருந்து ஒரு படை புகைபோல் கிளம்பி வருகிறது.வீரர்கள் யாரும் அணியைவிட்டு விலகாமல் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள்.” 32  தேசத்தின் தூதுவர்களுக்கு அவர்கள் என்ன பதில் சொல்ல வேண்டும்? யெகோவா சீயோனுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார்+ என்றும்,ஒடுக்கப்படுகிற அவருடைய ஜனங்கள் அங்கே பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் சொல்ல வேண்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஓய்வு தருவார்.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களைக்கூட.”
வே.வா., “கிளைபோல்.”
நே.மொ., “அதை அழிவு என்ற துடைப்பத்தால் பெருக்கிவிடுவேன்.”
வே.வா., “அனல் கக்குகிற பறக்கும் பாம்பாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா