ஏசாயா 53:1-12
53 நாங்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதில்* விசுவாசம் வைத்தது யார்?+
யெகோவா யாருக்குத் தன்னுடைய பலத்தை*+ காட்டியிருக்கிறார்?+
2 அவர் துளிர்போல்+ அவருக்குமுன்* துளிர்ப்பார்; வறண்ட நிலத்திலுள்ள வேர்போல் இருப்பார்.
அவருடைய தோற்றத்தில் கம்பீரமோ ஆடம்பரமோ இல்லை,+நம்மைக் கவரும் அளவுக்கு எந்த விசேஷமும் இல்லை.*
3 வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+
ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.*
நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+
4 உண்மையில், அவர் நம்முடைய வியாதிகளைச் சுமந்தார்.+நம் வலிகளைத் தாங்கினார்.+
நாமோ கடவுள்தான் அவருக்குத் தண்டனையையும்,* அடியையும், வேதனையையும் கொடுத்ததாக நினைத்தோம்.
5 ஆனால், நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார்.+நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.+
நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைப்பதற்காகத்தான் அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.+அவருடைய காயங்களால்தான் நாம் குணமானோம்.+
6 நாம் எல்லாரும் ஆடுகளைப் போல அலைந்து திரிந்தோம்.+நமக்கு இஷ்டமான வழியில் போனோம்.ஆனால், நம் எல்லாருடைய பாவங்களையும் அவர் சுமக்கும்படி யெகோவா செய்தார்.+
7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை.
வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+
8 அவர் அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.*அவருடைய வம்சத்தின்* விவரங்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?
அவர்தான் இந்த உலகத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டாரே.+என் ஜனங்களுடைய குற்றத்துக்காக அடிக்கப்பட்டாரே.*+
9 அவருடைய பேச்சில் சூதுவாதே இல்லை.அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை.*+ஆனாலும், பொல்லாதவர்கள் நடுவே அவருக்குக் கல்லறை கொடுக்கப்பட்டது.+அவர் இறந்தபோது பணக்காரரோடு இருந்தார்.+
10 அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார்.*
அதனால், அவர் பாடுகள் படுவதற்கு விட்டுவிட்டார்.கடவுளே, நீங்கள் அவருடைய உயிரைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தால்,+அவர் தன்னுடைய வம்சத்தைப் பார்ப்பார்; காலம்காலமாக வாழ்வார்.+
அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்.+
11 தான் பட்ட பாடுகளுக்கான பலனைப் பார்த்து அவர் மனநிறைவு அடைவார்.
நீதியுள்ளவராகிய என் ஊழியர்+ தன்னுடைய அறிவினால்,நிறைய பேர் நீதிமான்களாவதற்கு உதவுவார்.+அவர்களுடைய குற்றங்களை அவரே சுமப்பார்.+
12 அவர் தன்னுடைய உயிரையே கொடுப்பார்.+குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்படுவார்.+பலருடைய பாவங்களைச் சுமப்பார்.+குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.+அதனால், பலரோடுகூட அவருக்கும் நான் ஒரு பங்கைக் கொடுப்பேன்.கைப்பற்றப்பட்டதை அவர் மற்ற வீரர்களோடு பங்குபோடுவார்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “கையை.”
^ அல்லது, “நாங்கள் கேட்ட விஷயத்தில்.”
^ இங்கே ‘அவருக்கு’ என்பது துளிர்ப்பதைப் பார்க்கும் ஒருவரையோ கடவுளையோ குறிக்கலாம்.
^ வே.வா., “நாம் எதிர்பார்க்கிற விசேஷ தோற்றம் அவருக்கு இல்லை.”
^ அல்லது, “மக்கள் தங்களுடைய முகத்தை அவரிடமிருந்து திருப்பிக்கொண்டார்கள்.”
^ வே.வா., “வியாதியையும்.”
^ நே.மொ., “ஒடுக்கப்பட்டதாலும் தீர்ப்பு பெற்றதாலும் அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்.”
^ வே.வா., “வாழ்க்கையின்.”
^ வே.வா., “அடித்துக் கொல்லப்பட்டாரே.”
^ வே.வா., “வன்முறையில் இறங்கவில்லை.”
^ வே.வா., “அவரை வேதனைகளால் நொறுக்குவது யெகோவாவின் சித்தமாக இருந்தது.”