சங்கீதம் 132:1-18
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.
132 யெகோவாவே, தாவீதை நினைத்துப் பாருங்கள்.அவர் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.+
2 யெகோவாவே, அவர் உங்களுக்குச் செய்த சத்தியத்தை நினைத்துப் பாருங்கள்.யாக்கோபின் வல்லமையுள்ள கடவுளே, அவர் உங்களிடம் நேர்ந்துகொண்டதை நினைத்துப் பாருங்கள்.+
3 அவர், “யெகோவாவுக்காக ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும்வரை,
யாக்கோபின் வல்லமையுள்ள கடவுள் குடிகொள்வதற்காகஒரு அருமையான இடத்தை* கண்டுபிடிக்கும்வரை,+
4 என் வீட்டுக்குள்+ போக மாட்டேன்,என் படுக்கையில் படுக்க மாட்டேன்,
5 கண்மூடித் தூங்க மாட்டேன்,கண் இமைகளை மூட மாட்டேன்” என்று சொன்னாரே.
6 எப்பிராத்தாவில்+ நாங்கள் அதை* பற்றிக் கேள்விப்பட்டோம்.அதைக் காட்டுப்பகுதியில் கண்டுபிடித்தோம்.+
7 வாருங்கள், அவருடைய வீட்டுக்கு* போகலாம்.+அவருடைய கால்மணைக்கு முன்னால் மண்டிபோடலாம்.+
8 யெகோவாவே, நீங்கள் குடிகொள்ளும் இடத்துக்கு எழுந்து வாருங்கள்.+உங்கள் பலத்துக்கு அடையாளமாக இருக்கிற ஒப்பந்தப் பெட்டியுடன் வாருங்கள்.+
9 உங்களுடைய குருமார்கள் நீதியை உடையாக உடுத்திக்கொள்ளட்டும்.உங்களுக்கு உண்மையாக* இருக்கிறவர்கள் சந்தோஷ ஆரவாரம் செய்யட்டும்.
10 உங்களுடைய ஊழியரான தாவீதுக்கு நீங்கள் வாக்குக் கொடுத்திருப்பதால்,நீங்கள் தேர்ந்தெடுத்தவரை* ஒதுக்கிவிடாதீர்கள்.+
11 தாவீதுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா கண்டிப்பாக மீற மாட்டார்.அவர் தாவீதிடம், “உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை
உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்.+
12 உன்னுடைய மகன்கள் என் ஒப்பந்தத்தின்படி நடந்தால்,நான் கொடுக்கிற நினைப்பூட்டுதல்களின்படி செய்தால்,+அவர்களுடைய மகன்களும்உன் சிம்மாசனத்தில் என்றென்றும் உட்காருவார்கள்” என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்.+
13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
14 “இதுவே நான் என்றென்றும் குடிகொள்ளும் இடம்.நான் இங்கேயே தங்கியிருப்பேன்,+ இதுதான் என்னுடைய விருப்பம்.
15 நான் இந்த நகரத்தை ஆசீர்வதித்து, ஏராளமான உணவு கிடைக்கும்படி செய்வேன்.இங்கிருக்கிற ஏழைகளின் பசியைத் தீர்ப்பேன்.+
16 இங்குள்ள குருமார்களுக்கு மீட்பின் உடையை உடுத்துவேன்.+எனக்கு உண்மையாக* இருக்கிறவர்கள் இங்கே சந்தோஷ ஆரவாரம் செய்வார்கள்.+
17 இங்கே தாவீதின் பலம் கூடும்படி* செய்வேன்.
நான் தேர்ந்தெடுத்தவருக்காக ஒரு விளக்கை ஏற்பாடு செய்தேன்.+
18 அவருடைய எதிரிகளை அவமானத்தால் மூடுவேன்.ஆனால், அவருடைய தலையில் இருக்கிற கிரீடத்தை ஒளிவீசச் செய்வேன்”+ என்று சொல்லியிருக்கிறார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “மகத்தான கூடாரத்தை.”
^ அநேகமாக, “ஒப்பந்தப் பெட்டியை.”
^ வே.வா., “மகத்தான கூடாரத்துக்கு.”
^ வே.வா., “பற்றுமாறாமல்.”
^ வே.வா., “அபிஷேகம் செய்தவரை.”
^ வே.வா., “பற்றுமாறாமல்.”
^ நே.மொ., “கொம்பு உயர்த்தப்படும்படி.”