சங்கீதம் 66:1-20
இசைக் குழுவின் தலைவனுக்கு; ஒரு பாடல். சங்கீதம்.
66 பூமியெங்கும் குடியிருக்கிறவர்களே, கடவுளுக்குமுன் வெற்றி முழக்கம் செய்யுங்கள்.+
2 அவருடைய மகிமையான பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*
அவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்துங்கள்.+
3 கடவுளிடம் இப்படிச் சொல்லுங்கள்:
“உங்களுடைய செயல்கள் எவ்வளவு பிரமிப்பானவை!+உங்களுடைய மகா வல்லமையைக் கண்டுஎதிரிகள் உங்கள்முன் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+
4 பூமியிலுள்ள எல்லாரும் உங்கள்முன் தலைவணங்குவார்கள்.+உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.உங்கள் பெயரைப் புகழ்ந்து பாடுவார்கள்.”+ (சேலா)
5 கடவுளுடைய செயல்களை வந்து பாருங்கள்.
மனிதர்களுக்காக அவர் செய்யும் செயல்கள் பிரமிப்பானவை.+
6 அவர் ஆழ்கடலை உலர்ந்த தரையாக்கினார்.+ஆற்றைக் கால்நடையாக அவர்கள் கடந்துபோனார்கள்.+
அங்கே அவரை நினைத்து நாம் சந்தோஷப்பட்டோம்.+
7 அவர் தன்னுடைய வல்லமையால் என்றென்றும் ஆட்சி செய்கிறார்.+
அவருடைய கண்கள் தேசங்களை எப்போதும் கவனிக்கின்றன.+
வறட்டுப் பிடிவாதமுள்ளவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ளக் கூடாது.+ (சேலா)
8 மக்களே, நம்முடைய கடவுளைப் புகழுங்கள்.+அவரைப் புகழ்கிற சத்தம் எங்கும் கேட்கட்டும்.
9 அவர் நம்மை உயிரோடு பாதுகாக்கிறார்.+நம் கால்கள் தடுமாறாதபடி பார்த்துக்கொள்கிறார்.+
10 கடவுளே, எங்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள்.+வெள்ளியைப் புடமிடுவது போல எங்களைப் புடமிட்டிருக்கிறீர்கள்.
11 வேடனுடைய வலையில் எங்களைச் சிக்க வைத்தீர்கள்.பயங்கரமான பாரத்தை எங்கள்மேல் சுமத்தினீர்கள்.
12 அற்ப மனுஷன் எங்களை ஏறி மிதிக்க* விட்டுவிட்டீர்கள்.நாங்கள் தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்.பின்பு, நிம்மதியான இடத்துக்கு எங்களைக் கொண்டுவந்தீர்கள்.
13 உங்களுடைய ஆலயத்துக்குத் தகன பலிகளோடு நான் வருவேன்.+என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்.+
14 இக்கட்டில் தவித்தபோது என் உதடுகளால் சொன்னதையும்,என் வாயினால் வாக்குக் கொடுத்ததையும் நிறைவேற்றுவேன்.+
15 கொழுத்த மிருகங்களை உங்களுக்குத் தகன பலியாகக் கொடுப்பேன்.செம்மறியாட்டுக் கடாக்களை நெருப்பில் பலி செலுத்துவேன்.
காளைகளையும் வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுப்பேன். (சேலா)
16 கடவுளுக்குப் பயப்படுகிறவர்களே, எல்லாரும் வந்து கேளுங்கள்.அவர் எனக்குச் செய்ததையெல்லாம் சொல்கிறேன்.+
17 என் வாயினால் அவரைக் கூப்பிட்டேன்.என் நாவினால் அவரை மகிமைப்படுத்தினேன்.
18 என் உள்ளத்தில் ஏதாவது கெட்ட எண்ணம் இருந்திருந்தால்,என் ஜெபத்தை யெகோவா கேட்டிருக்க மாட்டார்.+
19 ஆனால், கடவுள் என் ஜெபத்தைக் கேட்டார்.+என் வேண்டுதலைக் கவனித்துக் கேட்டார்.+
20 என் ஜெபத்தைப் புறக்கணிக்காத கடவுளைப் புகழ்கிறேன்.எனக்கு மாறாத அன்பு காட்டிய* கடவுளைப் புகழ்கிறேன்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
^ வே.வா., “எங்கள் தலைமேல் ஏறிப்போக.”
^ வே.வா., “காட்டுவதை விட்டுவிடாத.”