நியாயாதிபதிகள் 1:1-36
1 யோசுவா இறந்த பின்பு+ இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “எங்களில் யார் கானானியர்களோடு முதலில் போர் செய்ய வேண்டும்?” என்று விசாரித்தார்கள்.+
2 அதற்கு யெகோவா, “யூதா கோத்திரத்தார் போர் செய்ய வேண்டும்.+ இதோ! அந்தத் தேசத்தை நான் அவர்கள் கையில் கொடுக்கிறேன்”* என்று சொன்னார்.
3 அப்போது யூதா கோத்திரத்தார் தங்கள் சகோதரர்களான சிமியோன் கோத்திரத்தாரிடம், “எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிக்குப்+ போய் கானானியர்களைத் துரத்தியடிக்கலாம், வாருங்கள். பின்பு நாங்களும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிக்கு வருவோம்” என்று சொன்னார்கள். அதன்படியே, சிமியோன் கோத்திரத்தார் அவர்களோடு போனார்கள்.
4 யூதா கோத்திரத்தார் போர் செய்தபோது, யெகோவா கானானியர்களையும் பெரிசியர்களையும் அவர்கள் கையில் கொடுத்தார்.+ பேசேக் என்ற இடத்தில் அவர்கள் 10,000 வீரர்களைத் தோற்கடித்தார்கள்.
5 கானானியர்களையும்+ பெரிசியர்களையும்+ தோற்கடித்தபோது, பேசேக்கில் அதோனிபேசேக்கைக் கண்டு அவனோடு போர் செய்தார்கள்.
6 அதோனிபேசேக் தப்பித்து ஓடியபோது, அவனைத் துரத்திப் பிடித்து, அவனுடைய கைகால் பெருவிரல்களைத் துண்டித்தார்கள்.
7 அப்போது அதோனிபேசேக், “70 ராஜாக்களுடைய கைகால் பெருவிரல்களை நான் துண்டித்தேன், அவர்கள் என் மேஜையிலிருந்து கீழே சிந்துவதைப் பொறுக்கித் தின்றார்கள். நான் செய்த பாவத்துக்குக் கடவுள் எனக்குச் சரியான கூலி கொடுத்துவிட்டார்” என்று சொன்னான். அதன்பின் அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்,+ அங்கே அவன் செத்துப்போனான்.
8 யூதா கோத்திரத்தார் எருசலேமுக்கு எதிராகப் போர் செய்து+ அதையும் கைப்பற்றினார்கள். அங்கிருந்த ஜனங்களை வாளால் வெட்டி, அந்த நகரத்தைச் சுட்டெரித்தார்கள்.
9 அதன்பின், மலைப்பகுதியிலும் நெகேபிலும் சேப்பெல்லாவிலும் வாழ்ந்த கானானியர்களோடு போர் செய்தார்கள்.+
10 யூதா கோத்திரத்தார் எப்ரோனுக்குப் போய் (எப்ரோன் முற்காலத்தில் கீரியாத்-அர்பா என்று அழைக்கப்பட்டது) அங்கே குடியிருந்த கானானியர்களோடு போர் செய்தார்கள். சேசாய், அகீமான், தல்மாய் ஆகியவர்களை வெட்டிக் கொன்றார்கள்.+
11 பின்பு, அவர்கள் தெபீருக்குப் போய் அங்கிருந்த ஜனங்களைத் தாக்கினார்கள்.+ (தெபீர் முற்காலத்தில் கீரியாத்-செப்பேர் என்று அழைக்கப்பட்டது.)+
12 அதன்பின் காலேப்,+ “கீரியாத்-செப்பேரைக் கைப்பற்றுகிறவனுக்கு என் மகள் அக்சாளைக் கல்யாணம் செய்து கொடுப்பேன்”+ என்று சொன்னார்.
13 காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன்+ ஒத்னியேல்+ அதைக் கைப்பற்றினார். அதனால், அவருக்குத் தன் மகள் அக்சாளை காலேப் கல்யாணம் செய்து கொடுத்தார்.
14 அவள் தன் கணவனுடைய வீட்டுக்குப் போகும்போது, தன் அப்பாவிடம் ஒரு நிலத்தைக் கேட்டு வாங்கச் சொல்லி தன் கணவனைத் தூண்டினாள். கழுதையிலிருந்து அவள் கீழே இறங்கியபோது* காலேப் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
15 அதற்கு அவள், “தயவுசெய்து எனக்கு ஒரு அன்பளிப்பு கொடுங்கள். தெற்கில்* நீங்கள் எனக்குக் கொடுத்த நிலம் வறண்ட நிலமாக இருக்கிறது. அதனால் நிறைய தண்ணீர் இருக்கிற நிலத்தையும்* கொடுங்கள்” என்று கேட்டாள். அவள் கேட்டபடியே, மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் இருந்த நீர்வளமுள்ள நிலத்தை அவர் கொடுத்தார்.
16 மோசேயின் மாமனாராகிய+ கேனியனின் வம்சத்தார்,+ பேரீச்ச மரங்கள் நிறைந்த நகரத்திலிருந்து+ ஆராத்துக்கு+ தெற்கே இருக்கிற யூதா வனாந்தரத்துக்கு யூதா கோத்திரத்தாருடன் வந்து, அங்கே அவர்களோடு தங்கினார்கள்.+
17 ஆனால், யூதா கோத்திரத்தார் தங்கள் சகோதரர்களான சிமியோன் கோத்திரத்தாருடன் போய், சேப்பாத்தில் வாழ்ந்த கானானியர்களைத் தாக்கி அந்த நகரத்தை அழித்தார்கள்.+ அதனால், ஓர்மா*+ என்று அதற்குப் பெயர் வைத்தார்கள்.
18 அதன்பின், யூதா கோத்திரத்தார் காசாவையும்+ அதன் பிரதேசத்தையும் அஸ்கலோனையும்+ அதன் பிரதேசத்தையும் எக்ரோனையும்+ அதன் பிரதேசத்தையும் கைப்பற்றினார்கள்.
19 யெகோவா யூதா கோத்திரத்தாரோடு இருந்தார். அவர்கள் மலைப்பகுதிகளைச் சொந்தமாக்கினார்கள். ஆனால், சமவெளியில் வாழ்ந்த ஜனங்களிடம் இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்கள்+ இருந்ததால் அவர்களைத் துரத்தியடிக்க முடியவில்லை.
20 மோசே வாக்குறுதி தந்தபடியே,+ காலேபுக்கு எப்ரோன் நகரம் கொடுக்கப்பட்டது. ஏனாக்கின் மூன்று மகன்களை+ காலேப் அங்கிருந்து துரத்தியடித்தார்.
21 ஆனால், பென்யமீன் கோத்திரத்தார் எருசலேமில் குடியிருந்த எபூசியர்களைத் துரத்தியடிக்கவில்லை. அதனால், எபூசியர்கள் இன்றுவரை பென்யமீன் கோத்திரத்தாருடன் எருசலேமில் வாழ்ந்துவருகிறார்கள்.+
22 இதற்கிடையில், யோசேப்பின் வம்சத்தார்+ பெத்தேலோடு போர் செய்யப் போனார்கள். யெகோவா அவர்களோடு இருந்தார்.+
23 யோசேப்பின் வம்சத்தார் பெத்தேலை (அந்த நகரம் முற்காலத்தில் லஸ் என்று அழைக்கப்பட்டது)+ உளவு பார்க்கப் போனபோது,
24 அந்த நகரத்தைவிட்டு வெளியே போய்க்கொண்டிருந்த ஓர் ஆளைப் பார்த்தார்கள். அவனிடம், “தயவுசெய்து நகரத்துக்குள் போகிற வழியைக் காட்டு, நாங்கள் உனக்குக் கைமாறு செய்வோம்” என்று சொன்னார்கள்.
25 அவனும் நகரத்துக்குள் போகிற வழியைக் காட்டினான். அந்த நகரத்தில் இருந்தவர்களை அவர்கள் வெட்டிக் கொன்றார்கள். ஆனால், அந்த ஆளையும் அவன் குடும்பத்தாரையும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.+
26 அவன் ஏத்தியர்களின் தேசத்துக்குப் போய், அங்கே ஒரு நகரத்தைக் கட்டி, அதற்கு லஸ் என்று பெயர் வைத்தான். இதுதான் இன்றுவரை அந்த நகரத்தின் பெயர்.
27 பெத்-செயானையும் அதன் சிற்றூர்களையும்,* தானாக்கையும்+ அதன் சிற்றூர்களையும், தோரையும் அதன் சிற்றூர்களையும், இப்லெயாமையும் அதன் சிற்றூர்களையும், மெகிதோவையும் அதன் சிற்றூர்களையும் மனாசே கோத்திரத்தார் சொந்தமாக்கவில்லை.+ கானானியர்கள் அந்தத் தேசத்தைவிட்டுப் போகாமல் அங்கேயே பிடிவாதமாகக் குடியிருந்தார்கள்.
28 இஸ்ரவேல் தேசம் பலம்படைத்த தேசமாக ஆனபோது, இஸ்ரவேலர்கள் கானானியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.+ ஆனாலும், அவர்களை முழுமையாகத் துரத்தியடிக்கவில்லை.+
29 கேசேரில் குடியிருந்த கானானியர்களை எப்பிராயீமியர்கள் துரத்தியடிக்கவில்லை. கானானியர்கள் கேசேரில் அவர்களோடு தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள்.+
30 கித்ரோன் ஜனங்களையும் நாகலோல்+ ஜனங்களையும் செபுலோன் கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை. கானானியர்கள் அவர்களோடு தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள், ஆனால் கானானியர்களை அவர்கள் அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.+
31 அக்கோவின் ஜனங்களையும், சீதோன்,+ அக்லாப், அக்சீப்,+ எல்பா, ஆப்பீக்+ மற்றும் ரேகோபின்+ ஜனங்களையும் ஆசேர் கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை.
32 அதனால், கானானியர்களோடு ஆசேர் கோத்திரத்தார் தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் கானானியர்களைத் துரத்தியடிக்கவில்லை.
33 பெத்-ஷிமேஸ் ஜனங்களையும் பெத்-ஆனாத்+ ஜனங்களையும் நப்தலி கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை. அந்தத் தேசத்தில் குடியிருந்த கானானியர்களோடு அவர்கள் தொடர்ந்து வாழ்ந்துவந்தார்கள்.+ பெத்-ஷிமேஸ் ஜனங்களையும் பெத்-ஆனாத் ஜனங்களையும் அவர்கள் அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.
34 எமோரியர்கள் தாண் கோத்திரத்தாரை சமவெளிக்கு வரவிடாமல் தடுத்ததால், அவர்கள் மலைப்பகுதியிலேயே வாழ வேண்டியதாகிவிட்டது.+
35 அதனால் ஏரேஸ் மலையிலும், ஆயலோனிலும்+ சால்பீமிலும்+ எமோரியர்கள் தொடர்ந்து குடியிருந்தார்கள். ஆனால், யோசேப்பின் வம்சத்தார் பலம் அடைந்தபோது, எமோரியர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கினார்கள்.
36 எமோரியர்களின் எல்லை அக்கராபீம் மேட்டிலிருந்தும்+ சாலாவிலிருந்தும் தொடங்கி, மேலே மலைப்பகுதிக்குப் போனது.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கொடுத்திருக்கிறேன்.”
^ அல்லது, “கழுதையின் மேல் இருந்தபடி தன் கைகளைத் தட்டியபோது.”
^ வே.வா., “நெகேபில்.”
^ நே.மொ., “குல்லோத்-மாயிமையும்.” இந்தப் பெயரின் அர்த்தம், “தண்ணீர்க் குளங்கள்.”
^ அர்த்தம், “அழித்தல்.”
^ வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களையும்.”