யாக்கோபு எழுதிய கடிதம் 5:1-20

5  பணக்காரர்களே, கேளுங்கள், உங்களுக்கு வரப்போகிற கஷ்டங்களை நினைத்துக் கதறி அழுங்கள்.+  உங்களுடைய செல்வங்கள் மக்கிப்போய்விட்டன. உங்களுடைய உடைகள் பூச்சிகளால்* அரிக்கப்பட்டுவிட்டன.+  உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும், அது உங்கள் சதையைத் தின்றுவிடும். நீங்கள் குவித்து வைத்திருப்பது கடைசி நாட்களில் ஒரு நெருப்பைப் போல் இருக்கும்.+  உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+  இந்தப் பூமியில் நீங்கள் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறீர்கள், ஆசைகளைத் திருப்தி செய்வதிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். வெட்டப்படும் நாளுக்காகக் கொழுக்க வைக்கப்பட்டிருக்கிற மிருகங்களைப் போல் உங்களுடைய இதயம் கொழுத்துப்போய் இருக்கிறது.+  நீதிமானைக் கண்டனம் செய்திருக்கிறீர்கள், கொலையும் செய்திருக்கிறீர்கள். அதனால்தானே அவர் உங்களை எதிர்க்கிறார்?  சகோதரர்களே, நம் எஜமானுடைய பிரசன்னம்வரை+ பொறுமையோடு இருங்கள். இதோ! நிலத்தில் நல்ல விளைச்சல் கிடைப்பதற்காக முதல் பருவ மழையும் கடைசி பருவ மழையும் வரும்வரை+ ஒரு விவசாயி பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறான்.  அதேபோல், நீங்களும் பொறுமையோடு இருங்கள்;+ உங்கள் இதயத்தை உறுதிப்படுத்துங்கள்; ஏனென்றால், நம் எஜமானுடைய பிரசன்னம் நெருங்கிவிட்டது.+  சகோதரர்களே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி, ஒருவருக்கு விரோதமாக ஒருவர் முணுமுணுக்காதீர்கள்;*+ இதோ! நீதிபதி கதவுக்குப் பக்கத்தில் நிற்கிறார். 10  சகோதரர்களே, கஷ்டத்தைத் தாங்கிக்கொள்வதிலும் பொறுமையைக் காட்டுவதிலும்,+ யெகோவாவின்* பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளை+ உங்கள் முன்மாதிரிகளாக வைத்துக்கொள்ளுங்கள்.+ 11  சகிப்புத்தன்மை காட்டியவர்களைச் சந்தோஷமானவர்கள்* என்று கருதுகிறோம்.+ யோபுவின் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்,+ முடிவில் யெகோவா* அவரை ஆசீர்வதித்ததைப் பற்றியும் தெரிந்திருக்கிறீர்கள்;+ யெகோவா* கனிவான பாசமும்* இரக்கமும் நிறைந்தவர்,+ இல்லையா? 12  எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதரர்களே, சத்தியம் செய்வதை நிறுத்திவிடுங்கள்; பரலோகத்தின் மீதோ பூமியின் மீதோ வேறெதன் மீதோ சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் “ஆம்” என்று சொல்வது ஆம் என்றும், “இல்லை” என்று சொல்வது இல்லை என்றும் இருக்கட்டும்.+ இப்படிச் செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக மாட்டீர்கள். 13  உங்களில் எவனாவது கஷ்டப்படுகிறானா? அப்படியானால், அவன் தொடர்ந்து ஜெபம் செய்யட்டும்.+ எவனாவது சந்தோஷமாக இருக்கிறானா? அவன் சங்கீதம் பாடட்டும்.+ 14  உங்களில் எவனாவது வியாதியாக இருக்கிறானா? அப்படியானால், சபையில் இருக்கிற மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும்.+ அவர்கள் யெகோவாவின்* பெயரில் அவனுக்கு எண்ணெய் பூசி+ அவனுக்காக ஜெபம் செய்யட்டும். 15  விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் வியாதியாக* இருப்பவனைக் குணமாக்கும், யெகோவா* அவனை எழுந்திருக்க வைப்பார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார். 16  அதனால், உங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுங்கள்.+ ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள், அப்போது குணமாவீர்கள். நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது.+ 17  எலியா நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன. ஆனாலும், மழை பெய்யக் கூடாதென்று அவர் ஊக்கமாக ஜெபம் செய்தபோது, பூமியில் மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யவில்லை.+ 18  அவர் மறுபடியும் ஜெபம் செய்தபோது வானத்திலிருந்து மழை பெய்தது, பூமி அதன் பலனைத் தந்தது.+ 19  என் சகோதரர்களே, யாராவது உங்களில் ஒருவனைச் சத்தியத்தைவிட்டு வழிவிலகச் செய்யும்போது மற்றொருவன் அவனைத் திரும்பிவர வைத்தால், 20  தவறான வழியிலிருந்து அந்தப் பாவியைத் திரும்பிவர வைக்கிறவன்+ அவனுடைய உயிரைக் காப்பாற்றி, அவன் செய்த ஏராளமான பாவங்களை மூடுவான்+ என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அந்துப்பூச்சிகளால்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “குமுறாதீர்கள்; குறை சொல்லாதீர்கள்.” நே.மொ., “பெருமூச்சு விடாதீர்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “மிகுந்த கரிசனையும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அல்லது, “சோர்வாக.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா