யோபு 1:1-22

1  யோபு*+ என்பவர் ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்துவந்தார். அவர் கடவுளுக்குப் பயந்து நடந்தார், நேர்மையானவராகவும் உத்தமராகவும்* இருந்தார்,+ கெட்டதை வெறுத்து ஒதுக்கினார்.+  அவருக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தார்கள்.  அவர் 7,000 ஆடுகளையும் 3,000 ஒட்டகங்களையும் 1,000 மாடுகளையும் 500 கழுதைகளையும்* ஏராளமான வேலைக்காரர்களையும் வைத்திருந்தார். அதனால், கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த எல்லாரையும்விட அவர் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார்.  அவருடைய மகன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் தங்களுடைய வீட்டில் விருந்து வைப்பார்கள். அப்போது, தங்களுடன் சேர்ந்து சாப்பிடவும் குடிக்கவும் தங்களுடைய மூன்று சகோதரிகளையும் கூப்பிடுவார்கள்.  அந்த விருந்து நாட்கள் முடிந்த பின்பு, அவர்களைப் புனிதப்படுத்துவதற்காக யோபு அவர்களை வரச் சொல்வார். அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தகன பலிகள் செலுத்துவார்.+ “ஒருவேளை என் மகன்கள் பாவம் செய்திருக்கலாம், மனதுக்குள்* கடவுளைக் குறை சொல்லியிருக்கலாம்” என்று நினைத்து அந்தப் பலிகளை வழக்கமாகச் செலுத்திவந்தார்.+  ஒருநாள், தேவதூதர்கள்*+ யெகோவாவின் முன்னால் வந்து நின்றார்கள்.+ சாத்தானும்+ அவர்களோடு வந்து நின்றான்.+  அப்போது யெகோவா சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அவன் யெகோவாவிடம், “பூமியெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு வருகிறேன்”+ என்று சொன்னான்.  அப்போது யெகோவா அவனிடம், “என் ஊழியன் யோபுவைக் கவனித்தாயா? பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன்.*+ எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான்” என்று சொன்னார்.  சாத்தான் யெகோவாவிடம், “யோபு சும்மாவா உங்களுக்குப் பயந்து நடக்கிறான்?+ 10  நீங்கள்தான் அவனையும் அவன் வீட்டையும் அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டு அவனைப் பாதுகாக்கிறீர்களே.+ அவன் செய்வதையெல்லாம் ஆசீர்வதிக்கிறீர்களே.+ அவனுடைய மந்தைகள் தேசத்தில் பெருகியிருக்கின்றனவே. 11  நீங்கள் மட்டும் உங்கள் கையை நீட்டி அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் தொட்டுப் பாருங்கள்.* கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே அவன் உங்களைத் திட்டித் தீர்ப்பான்” என்று சொன்னான். 12  அப்போது யெகோவா சாத்தானைப் பார்த்து, “யோபுவிடம் இருக்கிற எல்லாவற்றையும் உன் கையில் விட்டுவிடுகிறேன். ஆனால், அவன்மேல் மட்டும் கை வைக்காதே!” என்றார். உடனே, சாத்தான் யெகோவாவின் முன்னிலையிலிருந்து புறப்பட்டுப் போனான்.+ 13  ஒருநாள், யோபுவின் மகன்களும் மகள்களும் அவருடைய மூத்த மகனின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டும் திராட்சமது குடித்துக்கொண்டும் இருந்தார்கள்.+ 14  அந்தச் சமயத்தில், வேலைக்காரன் ஒருவன் யோபுவிடம் வந்து, “உங்களுடைய மாடுகள் உழுதுகொண்டிருந்தன, பக்கத்தில் கழுதைகளும் மேய்ந்துகொண்டிருந்தன. 15  அப்போது திடீரென்று சபேயர்கள் வந்து அவற்றைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். வேலைக்காரர்களை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான். 16  அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இன்னொருவன் வந்து, “கடவுள் வானத்திலிருந்து நெருப்பை* அனுப்பி, உங்கள் ஆடுகளையும் வேலைக்காரர்களையும் எரித்து சாம்பலாக்கிவிட்டார்! நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான். 17  அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இன்னொருவன் வந்து, “கல்தேயர்கள்+ மூன்று கும்பல்களாகத் திடீரென்று வந்து, உங்கள் ஒட்டகங்களைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். உங்களுடைய வேலைக்காரர்களை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான். 18  அவன் பேசிக்கொண்டிருந்தபோதே இன்னொருவனும் வந்து, “உங்கள் மகன்களும் மகள்களும் உங்களுடைய மூத்த மகனின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டும் திராட்சமது குடித்துக்கொண்டும் இருந்தார்கள். 19  அப்போது, திடீரென்று வனாந்தரத்திலிருந்து சூறாவளிக் காற்று அடித்தது. அது அந்த வீட்டின் நான்கு மூலைகளிலும் அடித்ததால் அந்த வீடு உங்கள் பிள்ளைகள்மேல் இடிந்து விழுந்தது. அவர்கள் எல்லாரும் இறந்துவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் உயிர்தப்பி இதை உங்களுக்குச் சொல்ல வந்திருக்கிறேன்” என்றான். 20  அதைக் கேட்டதும் யோபு எழுந்து, தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார், தலைமுடியை வெட்டிக்கொண்டார். 21  பிறகு, சாஷ்டாங்கமாக விழுந்து, “என் தாயின் வயிற்றிலிருந்து வெறுங்கையோடு* வந்தேன்.வெறுங்கையோடு மண்ணுக்குப் போவேன்.+ யெகோவா கொடுத்தார்,+ யெகோவா எடுத்துக்கொண்டார். யெகோவாவின் பெயருக்கு என்றும் புகழ் சேரட்டும்” என்று சொன்னார். 22  இவ்வளவு நடந்தும் யோபு பாவம் செய்யவில்லை, கடவுள்மேல் எந்தக் குறையும் சொல்லவில்லை.*

அடிக்குறிப்புகள்

ஒருவேளை இதன் அர்த்தம், “பகைக்கப்படுகிறவர்.”
வே.வா., “குற்றமற்றவராகவும்.”
நே.மொ., “பெட்டைக் கழுதைகளையும்.”
நே.மொ., “இதயத்தில்.”
நே.மொ., “உண்மைக் கடவுளின் மகன்கள்.”
வே.வா., “குற்றமற்றவன்.”
வே.வா., “தாக்கிப் பாருங்கள்.”
அல்லது, “மின்னலை.”
நே.மொ., “நிர்வாணமாக.”
வே.வா., “கடவுளைப் பற்றி எதுவுமே தப்பாகப் பேசவில்லை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா