யோபு 29:1-25
29 பின்பு யோபு தன் பேச்சைத் தொடர்ந்தார். அவர் அவர்களிடம்,
2 “நான் முன்புபோல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!அப்போதெல்லாம் கடவுள் என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார்.
3 அவருடைய வெளிச்சம் என்மேல் பிரகாசித்தது.அதனால், இருட்டிலும் என்னால் நடக்க முடிந்தது.+
4 நான் இளமைத்துடிப்போடு வாழ்ந்தேன்.கடவுளோடு எனக்கிருந்த நட்பினால் என் கூடாரம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது.+
5 சர்வவல்லமையுள்ளவர் எனக்குத் துணையாக இருந்தார்.என் பிள்ளைகள்* என்னைச் சுற்றி இருந்தார்கள்.
6 நான் நடந்துபோன பாதைகளில் நெய் ஓடியது.எனக்காகப் பாறைகளிலிருந்து எண்ணெய் ஆறாகப் பாய்ந்து வந்தது.+
7 நான் நகரவாசலுக்குப்+ போய்,பொது சதுக்கத்தில் உட்கார்ந்தபோது,+
8 வயதில் சிறியவர்கள் மரியாதையோடு ஒதுங்கி நின்றார்கள்.வயதில் பெரியவர்களும் எழுந்து நின்றார்கள்.+
9 அதிகாரிகள் என் முன்னால் பேசக்கூடத் தயங்கினார்கள்.கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொண்டார்கள்.
10 பெரிய மனுஷர்களுடைய குரல் அடங்கிப்போனது.அவர்களுடைய நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது.
11 நான் பேசியதைக் கேட்டவர்கள் என்னைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.என்னைப் பார்த்தவர்கள் எனக்கு ஆதரவாகப் பேசினார்கள்.
12 ஏனென்றால், உதவிக்காகக் கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்.+அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும் ஆதரவற்ற ஜனங்களுக்கும் உதவினேன்.+
13 சாகக் கிடந்தவர்கள் நன்றியோடு என்னை வாழ்த்தினார்கள்.+விதவைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தேன்.+
14 நீதியை உடைபோல் உடுத்தியிருந்தேன்.என் நியாயம் மேலாடை போலவும் தலைப்பாகை போலவும் இருந்தது.
15 கண் இல்லாதவர்களுக்குக் கண்ணாக இருந்தேன்.கால் இல்லாதவர்களுக்குக் காலாக இருந்தேன்.
16 ஏழைகளுக்குத் தகப்பனாக இருந்தேன்.+முன்பின் தெரியாதவர்களின் வழக்குகளை விசாரித்தேன்.+
17 தப்பு செய்தவர்களின் அட்டகாசத்தை அடக்கினேன்.*+அவர்களிடம்* சிக்கியவர்களைக் காப்பாற்றினேன்.
18 உயிருள்ள வரைக்கும் என் வீட்டிலேயே இருப்பேன் என்று நினைத்தேன்.+எண்ண முடியாத மணலைப் போல என்னுடைய ஆயுசு நாள் இருக்கும் என்று நினைத்தேன்.
19 அதுமட்டுமல்ல, ‘என் வேர்கள் தண்ணீர் பக்கமாகப் பரவியிருக்கும்.என் கிளைகள் ராத்திரியெல்லாம் பனியில் நனைந்திருக்கும்.
20 என் மதிப்புக் கூடிக்கொண்டே போகும்.என் வில்லிலிருந்து அம்புகள் பாய்ந்துகொண்டே இருக்கும்’ என்றெல்லாம் நினைத்தேன்.
21 நான் பேசியதையெல்லாம் ஜனங்கள் ஆர்வமாகக் கேட்டார்கள்.என் அறிவுரைகளுக்காக அமைதியாகக் காத்திருந்தார்கள்.+
22 அவர்கள் என் பேச்சுக்கு மறுபேச்சு பேசவில்லை.நான் சொன்னதெல்லாம் அவர்களுடைய காதுக்கு இனிமையாக இருந்தது.
23 மழைக்காகக் காத்திருப்பது போல அவர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள்.மழைநீரைப் பயிர் உறிஞ்சுவது போல என் வார்த்தைகளை உறிஞ்சிக்கொண்டார்கள்.+
24 நான் அன்பாகச் சிரித்ததைப் பார்த்து அவர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள்.என்னுடைய பிரகாசமான முகத்தைப் பார்த்ததும் அவர்களுக்குள் நம்பிக்கை பிறந்தது.*
25 தலைவனாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டினேன்.படைபலம் உள்ள ராஜாவைப் போல இருந்தேன்.+அழுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்”+ என்றார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “வேலைக்காரர்கள்.”
^ நே.மொ., “தாடைகளை உடைத்தேன்.”
^ நே.மொ., “அவர்களுடைய பற்களில்.”
^ அல்லது, “அவர்கள் என் முகத்தின் பிரகாசத்தை மங்கச் செய்யவில்லை.”