லூக்கா எழுதியது 23:1-56

23  பின்பு, கூட்டத்தார் எல்லாரும் கும்பலாக எழுந்து அவரை பிலாத்துவிடம் கொண்டுபோனார்கள்.+  “இந்த மனுஷன் எங்களுடைய மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான். ரோம அரசனுக்கு* வரி கட்டக் கூடாது+ என்றும், தான்தான் கிறிஸ்துவாகிய ராஜா என்றும் சொல்லிக்கொள்கிறான்”+ என அவர்மேல் குற்றம்சாட்ட ஆரம்பித்தார்கள்.+  அப்போது பிலாத்து அவரிடம், “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று கேட்டார். அதற்கு அவர், “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்”+ என்றார்.  பின்பு, பிலாத்து முதன்மை குருமார்களையும் கூட்டத்தாரையும் பார்த்து, “இந்த மனுஷன் எந்தக் குற்றமும் செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை”+ என்று சொன்னார்.  அப்போது அவர்கள், “இவன் யூதேயா முழுவதிலும், கலிலேயா தொடங்கி இந்த இடம் வரையிலும், மக்களுக்குக் கற்பித்து, அவர்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான்” என்று அடித்துச் சொன்னார்கள்.  பிலாத்து இதைக் கேட்டதும், அவர் கலிலேயாவைச் சேர்ந்தவரா என்று விசாரித்தார்.  அவர் ஏரோதுவின் ஆட்சி எல்லைக்கு+ உட்பட்டவர் என்பதை உறுதிப்படுத்தியதும் ஏரோதுவிடமே அவரை அனுப்பினார்; அந்த நாட்களில் ஏரோது எருசலேமில் இருந்தான்.  இயேசுவைப் பற்றி ஏரோது கேள்விப்பட்டிருந்தான்,+ அவர் செய்கிற அற்புதங்களில் ஒன்றைப் பார்க்க விரும்பினான். அதனால், பல நாட்களாக அவரைச் சந்திக்க ஆவலோடு இருந்தான். அவரைச் சந்தித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டு,  அவரிடம் நிறைய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். ஆனால், அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.+ 10  இருந்தாலும், முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் திரும்பத் திரும்ப எழுந்து நின்று அவர்மேல் கடுமையாகக் குற்றம்சாட்டினார்கள். 11  அப்போது, ஏரோது தன் படைவீரர்களோடு சேர்ந்து அவரை அவமதித்தான்.+ அவருக்கு ஆடம்பரமான உடையை உடுத்தி கேலி செய்தான்.+ பின்பு, பிலாத்துவிடமே திருப்பி அனுப்பினான். 12  அதுவரை எதிரிகளாக இருந்த ஏரோதுவும் பிலாத்துவும் அன்றைக்கு நண்பர்களாக ஆனார்கள். 13  பின்பு முதன்மை குருமார்களையும் தலைவர்களையும் மக்களையும் பிலாத்து ஒன்றுகூட்டி, 14  “இந்த மனுஷன் மக்களைக் கலகம் செய்யத் தூண்டுவதாகச் சொல்லி என்னிடம் கொண்டுவந்தீர்கள். இதோ! இவனை உங்கள் முன்னால் விசாரித்தேன். ஆனால், இவனுக்கு எதிராக நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.+ 15  சொல்லப்போனால், ஏரோதுவுக்கும் தெரியவில்லை; அதனால்தான், அவரும் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பிவிட்டார். மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு எந்தக் குற்றத்தையும் இவன் செய்யவில்லை. 16  அதனால், இவனைத் தண்டித்து+ விடுதலை செய்வேன்” என்று சொன்னார். 17  *—— 18  ஆனால், கூட்டத்தார் எல்லாரும், “இவனை ஒழித்துக்கட்டுங்கள், பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யுங்கள்!”+ என்று கத்தினார்கள். 19  நகரத்தில் நடந்த தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டதற்காகவும் கொலை செய்ததற்காகவும் இந்த பரபாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். 20  இயேசுவை விடுதலை செய்ய பிலாத்து விரும்பியதால் மறுபடியும் அவர்களோடு பேசினார்.+ 21  அப்போது அவர்கள், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கூச்சல்போட ஆரம்பித்தார்கள்.+ 22  மூன்றாவது தடவை அவர்களைப் பார்த்து, “ஏன்? இவன் என்ன குற்றம் செய்தான்? மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு இவன் எந்தக் குற்றமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. அதனால், இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்று சொன்னார். 23  ஆனால், அவரை மரக் கம்பத்தில் அறைந்து கொல்ல வேண்டுமென்று அந்தக் கூட்டத்தார் திரும்பத் திரும்பக் கூச்சல் போட்டார்கள். கடைசியில், அவர்களுடைய குரல்தான் ஜெயித்தது.+ 24  அதனால், அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு வழங்கினார். 25  அவர்கள் வற்புறுத்திக் கேட்டதால், தேசத் துரோகமும் கொலையும் செய்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவனை விடுதலை செய்தார். ஆனால், இயேசுவை அவர்களுடைய விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார். 26  அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போனபோது, சிரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் நாட்டுப்புறத்திலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து, சித்திரவதைக் கம்பத்தை* அவர்மேல் வைத்து, இயேசுவுக்குப் பின்னால் சுமந்துகொண்டுபோக வைத்தார்கள்.+ 27  ஏராளமான மக்கள் அவருக்குப் பின்னால் போனார்கள், அந்தக் கூட்டத்திலிருந்த பெண்களும் அவருக்காக நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்பிக்கொண்டே போனார்கள். 28  இயேசு அந்தப் பெண்களைத் திரும்பிப் பார்த்து, “எருசலேம் மகள்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.+ 29  ஏனென்றால், ‘கருத்தரிக்க முடியாத பெண்களும் பிள்ளை பெறாத பெண்களும் பாலூட்டாத பெண்களும் சந்தோஷமானவர்கள்!’+ என்று சொல்லப்படும் நாட்கள் வரும். 30  அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்!’ என்றும், குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!’+ என்றும் சொல்வார்கள். 31  மரம் பச்சையாக இருக்கும்போதே இப்படிச் செய்கிறார்கள் என்றால், மரம் பட்டுப்போன பின்பு என்ன நடக்கும்?” என்று கேட்டார். 32  குற்றவாளிகளான வேறு இரண்டு பேரும் மரண தண்டனைக்காக அவரோடு கொண்டுபோகப்பட்டார்கள்.+ 33  மண்டையோடு என்றழைக்கப்பட்ட இடத்துக்கு+ வந்ததும் அங்கே அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+ 34  அப்போது இயேசு, “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை” என்று சொன்னார். அவர்கள் அவருடைய அங்கிகளைப் பங்குபோடுவதற்காகக் குலுக்கல் போட்டுப் பார்த்தார்கள்.+ 35  மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தார்கள். அதிகாரிகளோ அவரை ஏளனம் செய்து, “மற்றவர்களைக் காப்பாற்றினானே, இவன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவாக இருந்தால், இப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்”+ என்று சொன்னார்கள். 36  படைவீரர்கள் அவர் பக்கத்தில் போய் அவருக்குப் புளிப்பான திராட்சமதுவைக் கொடுத்து,+ 37  “நீ யூதர்களுடைய ராஜாவாக இருந்தால், உன்னை நீயே காப்பாற்றிக்கொள்” என்று கேலி செய்தார்கள். 38  “இவர் யூதர்களுடைய ராஜா” என்று எழுதப்பட்டு, அவருக்கு மேல் வைக்கப்பட்டது.+ 39  மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் அவரைப் பார்த்து, “நீ கிறிஸ்துதானே? அப்படியானால், உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று பழித்துப் பேச ஆரம்பித்தான்.+ 40  அப்போது மற்றவன் அவனை அதட்டி, “கடவுளுக்குப் பயப்பட மாட்டாயா? உனக்கும் இதே தீர்ப்புதானே கிடைத்திருக்கிறது? 41  நாம் தண்டிக்கப்படுவது நியாயம். நம்முடைய செயல்களுக்கு ஏற்ற தண்டனைதான் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையே” என்று சொன்னான். 42  பின்பு, “இயேசுவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னான். 43  அதற்கு அவர், “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில்* இருப்பாய்”+ என்று சொன்னார். 44  அப்போது, சுமார் ஆறாம் மணிநேரமாக* இருந்தது. ஆனாலும், ஒன்பதாம் மணிநேரம்வரை* பூமி முழுவதும் இருள் சூழ்ந்தது.+ 45  ஏனென்றால், சூரியன் ஒளி கொடுக்கவில்லை. பின்பு, ஆலயத்தின் திரைச்சீலை*+ நடுவில் இரண்டாகக் கிழிந்தது.+ 46  இயேசு உரத்த குரலில், “தகப்பனே, என் உயிரை உங்களுடைய கைகளில் ஒப்படைக்கிறேன்”+ என்று சொல்லி இறந்துபோனார்.*+ 47  நடந்ததையெல்லாம் பார்த்த படை அதிகாரி, “நிஜமாகவே இந்த மனுஷர் ஒரு நீதிமான்”+ என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார். 48  இயேசு கொலை செய்யப்படுவதைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மக்கள் எல்லாரும் நடந்த சம்பவங்களைக் கண்டு, நெஞ்சில் அடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள். 49  அவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும் தூரத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்களும் அங்கே நின்று நடந்ததையெல்லாம் பார்த்தார்கள்.+ 50  யோசேப்பு என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். இவர் நல்லவர், நீதிமான். நியாயசங்க உறுப்பினர்களில் ஒருவர்.+ 51  மற்ற உறுப்பினர்களின் சதித்திட்டத்தையும் செயலையும் ஆதரிக்காதவர், யூதேயர்களின் நகரமான அரிமத்தியாவைச் சேர்ந்தவர், கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் காத்திருந்தவர். 52  இவர் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைக் கேட்டார். 53  பின்பு அவருடைய உடலைக் கீழே இறக்கி,+ உயர்தரமான நாரிழை* துணியால் சுற்றி, பாறையில் வெட்டப்பட்ட ஒரு கல்லறையில்* வைத்தார்;+ அதற்கு முன்பு அதில் யாருமே அடக்கம் செய்யப்படவில்லை. 54  அது ஆயத்த நாளாக இருந்தது,+ ஓய்வுநாளும்+ ஆரம்பிக்கவிருந்தது. 55  கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் அங்கே போய், அந்தக் கல்லறையையும் அதில் அவருடைய உடல் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்தார்கள்.+ 56  பின்பு, நறுமணப் பொருள்களையும் வாசனை எண்ணெய்களையும் தயார் செய்வதற்காகத் திரும்பிப் போனார்கள். ஆனால், திருச்சட்டத்தின்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சீஸருக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
அதாவது, “மதியம் சுமார் 12 மணியாக.”
அதாவது, “பிற்பகல் சுமார் 3 மணிவரை.”
இது பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் இருந்தது.
வே.வா., “இறுதி மூச்சை விட்டார்.”
அதாவது, “லினன்.”
வே.வா., “நினைவுக் கல்லறையில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு
ஆணி துளைக்கப்பட்ட குதிங்கால் எலும்பு

4.5 அங். (11.5 செ.மீ.) நீளமுள்ள இரும்பு ஆணியால் துளைக்கப்பட்ட ஒரு மனித குதிங்கால் எலும்பு, 1968-ல் வட எருசலேமில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டது. பிற்பாடு, அதேபோல் செய்யப்பட்ட ஒரு செயற்கை குதிங்கால் எலும்பைத்தான் இந்தப் படத்தில் பார்க்கிறோம். 1968-ல் கண்டெடுக்கப்பட்ட குதிங்கால் எலும்பு ரோமர்களின் காலத்தைச் சேர்ந்தது. ஆட்களை மரக் கம்பத்தில் அறைந்து கொல்ல ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு அந்தப் புதைபொருள் கண்டுபிடிப்பு ஒரு அத்தாட்சி. ஒருவேளை, இயேசு கிறிஸ்துவை மரக் கம்பத்தில் அறைவதற்காக ரோம வீரர்கள் அதுபோன்ற ஆணிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அந்தக் குதிங்கால் எலும்பு, ஆஸ்யூரி என்ற ஒரு கல் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது; அழுகிப்போன சடலத்தில் இருந்த உலர்ந்த எலும்புகள் இந்தப் பெட்டியில் வைக்கப்பட்டன. மரக் கம்பத்தில் கொல்லப்பட்டவர்கள் அடக்கமும் செய்யப்பட்டிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

கல்லறை
கல்லறை

யூதர்கள் பொதுவாக இறந்தவர்களைக் குகைகளிலோ, பாறைகளில் வெட்டப்பட்ட அறைகளிலோ அடக்கம் செய்தார்கள். ராஜாக்களின் கல்லறைகளைத் தவிர மற்றவை நகரங்களுக்கு வெளியில் இருந்தன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள யூதர்களின் கல்லறைகளை வைத்துப் பார்க்கும்போது, அவை மிக எளிமையாக இருந்தன என்று தெரிகிறது. யூதர்கள் இறந்தவர்களை வழிபடாததாலும், மரணத்துக்குப் பிறகு ஒருவர் எங்கோ வாழ்கிறார் என்று நம்பாததாலும் அவர்களுடைய கல்லறைகள் அப்படி எளிமையாக இருந்திருக்கலாம்.