லேவியராகமம் 6:1-30

6  பின்பு யெகோவா மோசேயிடம்,  “ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொருளோ, கொடுத்து வைக்கப்பட்டிருந்த பொருளோ தன்னிடம் இல்லையென்று மறுத்திருக்கலாம்,+ அல்லது அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கலாம், அல்லது மற்றவனுக்குச் சொந்தமானதைத் திருடியிருக்கலாம், அல்லது மோசடி செய்திருக்கலாம்,  அல்லது யாரோ தொலைத்த பொருளைத் திருட்டுத்தனமாக எடுத்து வைத்திருக்கலாம். அவன் இதுபோன்ற ஒரு பாவத்தை மறைத்து பொய் சத்தியம் செய்து,+ யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டால்,+ இந்தச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்:  திருடியதை, அபகரித்ததை, மோசடி செய்ததை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை, அல்லது தான் கண்டெடுத்ததை அவன் திருப்பித் தர வேண்டும்.  அல்லது, எதைக் குறித்துப் பொய் சத்தியம் செய்தானோ அதைத் திருப்பித் தர வேண்டும் அல்லது அதற்கு முழு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.+ அதுமட்டுமல்ல, அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்துத் தர வேண்டும். தன்னுடைய குற்றம் நிரூபிக்கப்படும் நாளில் அதன் சொந்தக்காரருக்கு அதைக் கொடுக்க வேண்டும்.  எந்தக் குறையுமில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவை மந்தையிலிருந்து கொண்டுவந்து தன்னுடைய குற்ற நிவாரண பலியாகக் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். தன் குற்றத்துக்காக யெகோவாவுக்கு அவன் செலுத்தும் இந்தப் பலி, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி இருக்க வேண்டும்.+  குருவானவர் யெகோவாவின் முன்னிலையில் அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்வார். இப்படிப்பட்ட எந்தக் குற்றத்தை அவன் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படும்”+ என்றார்.  அதன்பின் யெகோவா மோசேயிடம்,  “இந்த எல்லா கட்டளைகளையும் ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டும்: ‘தகன பலிக்கான+ சட்டம் என்னவென்றால், ராத்திரி முழுவதும் அது பலிபீடத்தின் மேல் இருக்க வேண்டும். காலை வரைக்கும் அது அங்கேயே இருக்க வேண்டும். பலிபீடத்தில் நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும். 10  குருவானவர் தன்னுடைய நாரிழை* அங்கியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.+ நாரிழை அரைக் கால்சட்டையை+ உள்ளாடையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். பலிபீடத்தில் எரிக்கப்பட்ட தகன பலியின் சாம்பலை+ எடுத்து பலிபீடத்துக்குப் பக்கத்தில் கொட்ட வேண்டும். 11  பின்பு, அவர் தன்னுடைய உடைகளைக் கழற்றிவிட்டு+ வேறு உடைகளைப் போட்டுக்கொண்டு, அந்தச் சாம்பலை முகாமுக்கு வெளியிலுள்ள சுத்தமான இடத்துக்குக் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.+ 12  பலிபீடத்தின் நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும், அது அணைந்துவிடக் கூடாது. குருவானவர் தினமும் காலையில் அதன்மேல் விறகுகளை வைத்து,+ தகன பலியை அடுக்கிவைக்க வேண்டும். சமாதான பலியின் கொழுப்பை அதன்மேல் எரிக்க வேண்டும்.+ 13  பலிபீடத்திலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும், அது அணைந்துவிடக் கூடாது. 14  உணவுக் காணிக்கைக்கான சட்டம் இதுதான்:+ உணவுக் காணிக்கையைப் பலிபீடத்தின் முன்பு யெகோவாவின் முன்னிலையில் ஆரோனின் மகன்கள் படைக்க வேண்டும். 15  அவர்களில் ஒருவன் அதிலிருந்து ஒரு கைப்பிடி நைசான மாவையும், கொஞ்சம் எண்ணெயையும், சாம்பிராணி முழுவதையும் எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 16  மீதியிருக்கும் மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சுட்டு ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதாவது, சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் சாப்பிட வேண்டும்.+ 17  புளித்த எதையும் அந்த மாவுடன் கலந்து சுடக் கூடாது.+ எனக்குச் செலுத்தப்படும் தகன பலிகளிலிருந்து நான் அவர்களுக்குக் கொடுக்கும் பங்கு அது.+ பாவப் பரிகார பலியையும் குற்ற நிவாரண பலியையும் போல அது மிகவும் பரிசுத்தமானது.+ 18  ஆரோனின் வம்சத்தில் வரும் ஆண்கள் எல்லாரும் அதைச் சாப்பிட வேண்டும்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகளில் தலைமுறை தலைமுறைக்கும் அது அவர்களுடைய பங்காக இருக்கும்.+ பலிகள்மேல் படுகிற எல்லாமே பரிசுத்தமாகும்’” என்றார். 19  அதோடு யெகோவா மோசேயிடம், 20  “ஆரோனும் அவனுக்குப்பின் அவனுடைய மகன்களும் அபிஷேகம்+ செய்யப்படும் நாளில், தவறாமல் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகள் இவைதான்: ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு*+ நைசான மாவை எடுத்து பாதியைக் காலையிலும் மீதியைச் சாயங்காலத்திலும் உணவுக் காணிக்கையாகப்+ படைக்க வேண்டும். 21  அதில் எண்ணெய் கலந்து வட்டக் கல்லில் ரொட்டியாகச் சுட வேண்டும்.+ பின்பு அதைத் துண்டுகளாக்கி, அவற்றின் மேல் நிறைய எண்ணெய் ஊற்றி உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். 22  ஆரோனுக்குப் பின்பு குருவாக அபிஷேகம் செய்யப்படுகிற அவனுடைய மகன்+ அதைச் செய்ய வேண்டும். அதை யெகோவாவுக்கென்று முழுவதுமாக எரிக்க வேண்டும். இது நிரந்தரக் கட்டளை. 23  குருவானவருக்காகச் செலுத்தப்படும் உணவுக் காணிக்கையை முழுவதுமாக எரித்துவிட வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது” என்றார். 24  பின்பு யெகோவா மோசேயிடம் இப்படிச் சொன்னார்: 25  “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘பாவப் பரிகார பலியின் சட்டம் இதுதான்:+ வழக்கமாகத் தகன பலி வெட்டப்படுகிற இடத்தில்+ பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. 26  பாவப் பரிகார பலியைச் செலுத்துகிற குருவானவர் அதைச் சாப்பிட வேண்டும்.+ பரிசுத்த இடத்தில், அதாவது சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில், அதைச் சாப்பிட வேண்டும்.+ 27  அதன் இறைச்சிமேல் படுகிற எல்லாமே பரிசுத்தமாகும். அதன் இரத்தம் ஒருவனுடைய அங்கியில் தெறித்தால், அதைப் பரிசுத்த இடத்தில் துவைக்க வேண்டும். 28  அந்த இறைச்சியை மண்பாத்திரத்தில் வேக வைத்திருந்தால், அந்தப் பாத்திரத்தை உடைத்துவிட வேண்டும். செம்புப் பாத்திரத்தில் வேக வைத்திருந்தால், அதை நன்றாகத் தேய்த்துத் தண்ணீரில் கழுவ வேண்டும். 29  குருமார்களாகச் சேவை செய்யும் ஆண்கள் அந்த இறைச்சியைச் சாப்பிட வேண்டும்.+ அது மிகவும் பரிசுத்தமானது.+ 30  ஆனால், பாவப் பரிகார பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தைப் பாவப் பரிகாரத்துக்காகப் பரிசுத்த இடமாகிய சந்திப்புக் கூடாரத்துக்கு உள்ளே கொண்டுவந்திருந்தால், அதன் இறைச்சியைச் சாப்பிடக் கூடாது.+ அதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.’”

அடிக்குறிப்புகள்

அதாவது, “லினன்.”
அதாவது, “சுமார் ஒரு கிலோ.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா