கொரிந்தியருக்கு முதலாம் கடிதம் 12:1-31

12  சகோதரர்களே, கடவுளுடைய சக்தி தருகிற வரங்களைப்+ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.  நீங்கள் உலக மக்களை* போல் இருந்த காலத்தில், ஊமைச் சிலைகளை வணங்கி,+ அவற்றின் வழியில் போய்க்கொண்டிருந்தீர்கள்; இது உங்களுக்கே தெரியும்.  அதனால், இப்போது நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்: கடவுளுடைய சக்தியால் பேசுகிற யாரும், “இயேசு சபிக்கப்பட்டவர்!” என்று சொல்ல மாட்டார்; கடவுளுடைய சக்தியால் பேசுகிறவரைத் தவிர வேறு யாராலும், “இயேசுவே எஜமான்!” என்று சொல்ல முடியாது.+  வித்தியாசமான வரங்கள் இருக்கின்றன; ஆனால் கடவுளுடைய சக்தி ஒன்றுதான்.+  வித்தியாசமான ஊழியங்கள் இருக்கின்றன,+ ஆனால் எஜமான் ஒருவர்தான்.  வித்தியாசமான செயல்கள் இருக்கின்றன, ஆனால் கடவுள் ஒருவர்தான், அவர்தான் இவை எல்லாவற்றையும் எல்லாருக்குள்ளும் செயல்படுத்துகிறார்.+  ஏதோவொரு நன்மைக்காகத்தான் ஒவ்வொரு மனிதரிலும் கடவுளுடைய சக்தியின் செயல்கள் தெளிவாகக் காட்டப்படுகின்றன.+  உதாரணமாக, கடவுளுடைய சக்தியால் ஒருவருக்கு ஞானத்தோடு பேசுகிற வரமும், அதே சக்தியால் வேறொருவருக்கு அறிவோடு பேசுகிற வரமும்,  அதே சக்தியால் வேறொருவருக்கு விசுவாசம் வைக்கிற வரமும்,+ அந்த ஒரே சக்தியால் வேறொருவருக்குக் குணப்படுத்துகிற வரமும் கொடுக்கப்படுகிறது.+ 10  வேறொருவருக்கு அற்புதச் செயல்களைச் செய்கிற வரமும்,+ வேறொருவருக்குத் தீர்க்கதரிசனம் சொல்கிற வரமும், வேறொருவருக்கு ஒரு செய்தி கடவுளிடமிருந்து வந்ததா என்பதைப் பகுத்தறிகிற வரமும்,+ வேறொருவருக்கு வெவ்வேறு மொழிகளில் பேசுகிற வரமும்,+ வேறொருவருக்கு அதை மொழிபெயர்க்கிற வரமும் கொடுக்கப்படுகிறது.+ 11  ஆனால், ஒரே சக்திதான் இவை எல்லாவற்றையும் செய்கிறது, அதன் விருப்பத்தின்படி ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்து கொடுக்கிறது. 12  உடல் ஒன்று, ஆனால் அதற்குப் பல உறுப்புகள் இருக்கின்றன. இப்படி, உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் அவை எல்லாமே ஒரே உடலாக இருக்கின்றன;+ அதுபோலத்தான் கிறிஸ்துவின் உடலும் இருக்கிறது. 13  நாம் யூதர்களாக இருந்தாலும், கிரேக்கர்களாக இருந்தாலும், அடிமைகளாக இருந்தாலும், சுதந்திரமானவர்களாக இருந்தாலும், எல்லாரும் ஒரே உடலாவதற்காக ஒரே சக்தியால் ஞானஸ்நானம் பெற்றோம்; நம் எல்லாருக்கும் ஒரே சக்திதான் கொடுக்கப்பட்டது. 14  உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல, பல உறுப்புகளால் ஆனது.+ 15  கால், “நான் கை அல்ல, அதனால் நான் உடலின் பாகமல்ல” என்று சொன்னால், அது உடலின் பாகமல்ல என்றாகிவிடுமா? 16  காது, “நான் கண் அல்ல, அதனால் நான் உடலின் பாகமல்ல” என்று சொன்னால், அது உடலின் பாகமல்ல என்றாகிவிடுமா? 17  முழு உடலும் கண்ணாக இருந்தால், கேட்பது எப்படி? முழு உடலும் காதாக இருந்தால், முகர்வது எப்படி? 18  ஆனால், கடவுள் தனக்குப் பிரியமானபடியே ஒவ்வொரு உறுப்பையும் உடலில் வைத்திருக்கிறார். 19  எல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், உடல் என ஒன்று இருக்குமா? 20  உறுப்புகள் நிறைய இருக்கின்றன, ஆனால் உடல் ஒன்றுதான். 21  கண் கையைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்றோ, தலை காலைப் பார்த்து, “நீ எனக்குத் தேவையில்லை” என்றோ சொல்ல முடியாது. 22  அதற்குப் பதிலாக, உடல் உறுப்புகளில் பலவீனமாகத் தோன்றுகிற உறுப்புகளே மிகவும் அவசியமாக இருக்கின்றன. 23  அதோடு, உடல் உறுப்புகளில் நமக்கு மதிப்பில்லாதவையாகத் தோன்றுகிற உறுப்புகளுக்கே நாம் அதிக மதிப்புக் கொடுக்கிறோம்.+ அதனால், நமக்குக் கண்ணியமற்றதாகத் தோன்றுகிற உறுப்புகளுக்கு அதிக மதிப்புக் கிடைக்கிறது. 24  நம்முடைய கண்ணியமான உறுப்புகளுக்கோ எதுவும் தேவையில்லை. இருந்தாலும், மதிப்புக் கொடுக்கப்படாத உறுப்புக்கு அதிக மதிப்புக் கொடுக்கும் விதத்தில் உடல் உறுப்புகளைக் கடவுள் ஒருங்கிணைத்தார். 25  உடலில் எந்தப் பிரிவினையும் இல்லாமல் அதன் உறுப்புகள் ஒன்றுக்கொன்று அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.+ 26  ஓர் உறுப்பு வேதனைப்பட்டால் மற்ற எல்லா உறுப்புகளும் அதனோடு சேர்ந்து வேதனைப்படும்;+ ஓர் உறுப்புக்கு மதிப்புக் கிடைத்தால் மற்ற எல்லா உறுப்புகளும் அதனோடு சேர்ந்து சந்தோஷப்படும்.+ 27  நீங்கள் கிறிஸ்துவின் உடலாக இருக்கிறீர்கள்,+ ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகளாக இருக்கிறீர்கள்.+ 28  சபையில் முதலாவது அப்போஸ்தலர்களையும்,+ இரண்டாவது, தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களையும்,+ மூன்றாவது, போதகர்களையும்+ கடவுள் ஏற்படுத்தியிருக்கிறார். பின்பு, அற்புதச் செயல்கள் செய்கிறவர்களையும்,+ குணப்படுத்துகிற வரம் பெற்றவர்களையும்,+ மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறவர்களையும், வழிநடத்துகிற திறமை பெற்றவர்களையும்,+ வெவ்வேறு மொழிகளில் பேசுகிறவர்களையும்+ ஏற்படுத்தியிருக்கிறார். 29  எல்லாருமே அப்போஸ்தலர்களா? எல்லாருமே தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே அற்புதச் செயல்களைச் செய்கிறவர்களா? 30  எல்லாருமே குணப்படுத்துகிற வரம் பெற்றவர்களா? எல்லாருமே வெவ்வேறு மொழிகளில் பேசுகிறவர்களா?+ எல்லாருமே மொழிபெயர்க்கிறவர்களா? இல்லையே.+ 31  ஆனால், நீங்கள் முக்கியமான வரங்களைப் பெற்றுக்கொள்ள கடினமாக* முயற்சி செய்யுங்கள்.+ இருந்தாலும், இவை எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த வழி ஒன்றை உங்களுக்குக் காட்டுகிறேன்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “உண்மைக் கடவுளை நம்பாத ஆட்களை.”
வே.வா., “பக்திவைராக்கியத்தோடு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா