1 சாமுவேல் 15:1-35

15  பின்பு சாமுவேல் சவுலிடம், “யெகோவா என்னை அனுப்பி உன்னை இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்தார்,+ இல்லையா? இப்போது, யெகோவா சொல்வதைக் கேள்.+  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களோடு போர் செய்த அமலேக்கியர்களை நான் பழிவாங்கப்போகிறேன்.+  இப்போது நீ போய் அமலேக்கியர்களை வெட்டித்தள்ளு.+ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் என எல்லாரையும் கொன்றுபோடு.*+ அவர்களுக்குச் சொந்தமான ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், மற்ற எல்லாவற்றையும் அழித்துவிடு’”+ என்று சொன்னார்.  சவுல் தன்னுடைய போர்வீரர்களை தெலாயிமுக்கு வரவழைத்து அவர்களைக் கணக்கெடுத்தார். யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களில் 10,000 வீரர்களும் மற்ற கோத்திரங்களைச் சேர்ந்தவர்களில் 2,00,000 காலாட்படையினரும் இருந்தார்கள்.+  அமலேக்கின் நகரம்வரை சவுல் போனார். அங்கிருந்த பள்ளத்தாக்கின்* பக்கத்தில் வீரர்களைப் பதுங்கியிருக்க வைத்தார்.  அவர் கேனியர்களிடம்,+ “இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களுக்கு நீங்கள் பெரிய உதவி செய்தீர்கள்.*+ அதனால், அமலேக்கியர்களோடு சேர்த்து உங்களையும் அழிக்க நான் விரும்பவில்லை.+ தயவுசெய்து அவர்களைவிட்டு விலகிப் போங்கள்” என்று சொன்னார். அதனால், கேனியர்கள் அமலேக்கியர்களைவிட்டு விலகிப் போனார்கள்.  அதன்பின் சவுல், ஆவிலா+ தொடங்கி எகிப்துக்குப் பக்கத்திலுள்ள ஷூர்வரை+ போய் அமலேக்கியர்களை வெட்டிப்போட்டார்.+  அமலேக்கிய ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தார்,+ ஆனால் ஜனங்கள் எல்லாரையும் வாளால் வெட்டிப்போட்டார்.+  சவுலும் அவருடைய வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டுவைத்ததோடு,* மந்தையிலிருந்த முதல் தரமான கொழுத்த ஆடுமாடுகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் நல்ல நல்ல பொருள்களையும் விட்டுவைத்தார்கள்.+ அவற்றை அழிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆனால், வீணானவற்றையும் வேண்டாதவற்றையும் அழித்தார்கள். 10  பின்பு, யெகோவா சாமுவேலிடம், 11  “சவுல் என் பேச்சைக் கேட்டு நடக்காமல் என்னிடமிருந்து விலகிவிட்டான்.+ அவனை ராஜாவாக்கியதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று சொன்னார். அதைக் கேட்டு சாமுவேல் மிகவும் வேதனைப்பட்டார். ராத்திரி முழுவதும் யெகோவாவிடம் கதறிக்கொண்டே இருந்தார்.+ 12  சவுலைப் போய்ப் பார்க்க சாமுவேல் விடியற்காலையிலேயே எழுந்தார். அப்போது, சவுல் கர்மேலுக்குப்+ போயிருந்ததாகவும், அங்கே தனக்காக ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டியதாகவும்,+ பின்பு அங்கிருந்து திரும்பி கில்காலுக்குப் போய்விட்டதாகவும் கேள்விப்பட்டார். 13  கடைசியில், சாமுவேல் சவுலிடம் வந்துசேர்ந்தார். அப்போது சவுல் அவரிடம், “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும். யெகோவா சொன்னபடியே நான் செய்துவிட்டேன்” என்றார். 14  அப்போது சாமுவேல், “அப்புறம் எப்படி ஆடுமாடுகளின் சத்தம் கேட்கிறது?”+ என்று கேட்டார். 15  அதற்கு சவுல், “அவற்றை அமலேக்கியர்களிடமிருந்து கொண்டுவந்தோம். உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்துவதற்காகக் கொழுத்த ஆடுமாடுகளை என் வீரர்கள் கொல்லாமல் விட்டுவைத்திருக்கிறார்கள். ஆனால், மற்ற எல்லாவற்றையும் நாங்கள் அழித்துவிட்டோம்” என்று சொன்னார். 16  அப்போது சாமுவேல் சவுலிடம், “போதும் நிறுத்து! நேற்று ராத்திரி யெகோவா என்னிடம் சொன்னதை+ இப்போது உன்னிடம் சொல்கிறேன்” என்றார். அதற்கு சவுல், “சொல்லுங்கள்!” என்றார். 17  அப்போது சாமுவேல், “இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவனாகவும் ராஜாவாகவும் யெகோவா உன்னைத் தேர்ந்தெடுத்தபோது*+ நீ அதற்குக் கொஞ்சமும் தகுதி இல்லாதவன்+ என்றுதானே நினைத்தாய்? 18  பிற்பாடு, யெகோவா உனக்கு ஒரு வேலை கொடுத்து, ‘நீ போய் இந்தப் பொல்லாத அமலேக்கியர்களை அழித்துப்போடு.+ அவர்களோடு போர் செய்து அவர்களை அடியோடு ஒழித்துக்கட்டு’+ என்று சொன்னார், இல்லையா? 19  நீ ஏன் யெகோவா சொன்னபடி செய்யவில்லை? கைப்பற்றிய பொருள்களைப் பேராசையோடு எடுத்துவந்து,+ யெகோவா வெறுக்கிறதைச் செய்துவிட்டாயே!” என்று சொன்னார். 20  ஆனால் சவுல் சாமுவேலிடம், “இல்லை, நான் யெகோவா சொன்னபடிதான் செய்தேன்! யெகோவா எந்த வேலைக்காக என்னை அனுப்பினாரோ அதைச் செய்து முடித்தேன். அமலேக்கிய ராஜாவான ஆகாகைப் பிடித்துக்கொண்டு வந்தேன், ஜனங்களை அடியோடு அழித்துவிட்டேன்.+ 21  ஆனால், அழிக்க வேண்டிய மிருகங்களை வீரர்கள்தான் எடுத்துக்கொண்டார்கள். அதுவும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு கில்காலில் பலி செலுத்துவதற்காகத்தான், தாங்கள் கைப்பற்றிய ஆடுமாடுகளில் முதல் தரமானவற்றைக் கொண்டுவந்தார்கள்”+ என்று சொன்னார். 22  அதற்கு சாமுவேல், “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தகன பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருக்குமா?+ பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பைச்+ செலுத்துவதைவிட அவர் பேச்சைக் கேட்பதுதான் முக்கியம். 23  கீழ்ப்படியாமல் போவது+ பில்லிசூனியத்தில் ஈடுபடும் பாவத்துக்குச்+ சமம். அகங்காரத்தோடு* நடந்துகொள்வது மாயமந்திரம் செய்வதற்கும் சிலைகளை* வணங்குவதற்கும் சமம். யெகோவாவின் கட்டளையை+ நீ ஒதுக்கித்தள்ளிவிட்டாய், அதனால் ராஜாவாக இல்லாதபடி அவர் உன்னை ஒதுக்கித்தள்ளிவிட்டார்”+ என்று சொன்னார். 24  அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன், யெகோவாவின் கட்டளையையும் உங்களுடைய வார்த்தையையும் மீறிவிட்டேன். ஜனங்களுக்குப் பயந்து அவர்கள் சொன்னபடி செய்துவிட்டேன். 25  தயவுசெய்து என் பாவத்தை மன்னித்துவிட்டு என்னோடு வாருங்கள், நான் யெகோவாவை வணங்க வேண்டும்”+ என்றார். 26  ஆனால் சாமுவேல் சவுலிடம், “நான் உன்னோடு வர மாட்டேன், நீ யெகோவாவின் வார்த்தையை ஒதுக்கித்தள்ளிவிட்டாய். அதனால், இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக இல்லாதபடி உன்னை யெகோவா ஒதுக்கித்தள்ளிவிட்டார்”+ என்றார். 27  சாமுவேல் அங்கிருந்து புறப்பட்டுப் போகத் திரும்பியபோது, அவர் போட்டிருந்த கையில்லாத மேலங்கியின் ஓரத்தை சவுல் பிடித்தார், அது கிழிந்துவிட்டது. 28  அப்போது சாமுவேல் சவுலிடம், “இன்றைக்கு யெகோவா உன்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி,* உன்னைவிட தகுதியான ஒருவருக்குக் கொடுப்பார்.+ 29  இஸ்ரவேலின் மகா உன்னதமான கடவுள்+ பொய் சொல்ல மாட்டார்,+ மனம் மாறவும் மாட்டார். மனம் மாற அவர் மனிதன் இல்லையே”+ என்றார். 30  அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். ஆனால், இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு* முன்பும் வீரர்களுக்கு முன்பும் தயவுசெய்து என்னைக் கௌரவப்படுத்துங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவாவை நான் வணங்க வேண்டும், என்னோடு வாருங்கள்”+ என்றார். 31  அதனால், சாமுவேல் சவுலோடு போனார், சவுல் யெகோவாவை வணங்கினார். 32  அப்போது சாமுவேல், “அமலேக்கிய ராஜா ஆகாகை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அப்போது, ஆகாக் அவரிடம் தயங்கித் தயங்கிப் போனான்.* ஏனென்றால், இனி தன்னுடைய உயிருக்கு ஆபத்தில்லை என்று அவன் நினைத்திருந்தான். 33  ஆனால் சாமுவேல் அவனிடம், “உன் வாளினால் எத்தனையோ தாய்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பறிகொடுத்துத் தவித்தது போல உன் தாயும் உன்னைப் பறிகொடுத்துத் தவியாய்த் தவிப்பாள்” என்று சொல்லி, கில்காலில் யெகோவாவுக்கு முன்னால் அவனைத் துண்டு துண்டாக வெட்டிப்போட்டார்.+ 34  பின்பு, சாமுவேல் ராமாவுக்குப் போனார். சவுல் கிபியாவிலுள்ள தன்னுடைய வீட்டுக்குப் போனார். 35  அதன்பின், சாமுவேல் தான் சாகும்வரை சவுலைப் பார்க்கவே இல்லை. சவுலை நினைத்து அவர் துக்கப்பட்டுக்கொண்டே இருந்தார்.+ சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக்கியதற்காக யெகோவா வருத்தப்பட்டார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “என யாருக்கும் கருணை காட்டாதே.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
வே.வா., “மாறாத அன்பு காட்டினீர்கள்.”
வே.வா., “ஆகாகுக்குக் கருணை காட்டியதோடு.”
வே.வா., “அபிஷேகம் செய்தபோது.”
வே.வா., “குலதெய்வச் சிலைகளை.”
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
நே.மொ., “கிழித்து.”
வே.வா., “மூப்பர்களுக்கு.”
அல்லது, “நம்பிக்கையோடு போனான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா